SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, August 15, 2016

சுதந்திரதேசம்...!


வீதி தோறும் கொடி பிடித்து
மணித்துளியோ நாள்கணக்கோ…
மறந்துவிட்டு பறந்து விடுவோம்…

செய்தியின்றி சில நாட்கள்
குரைத்து கிடக்கும் நாய்களும்
அடுத்த ரொட்டித்துண்டு
அலேக்காய் மாட்டியதும்
மறக்கடித்து நம்மை மழுங்கடித்து
வாலாட்டி ம(ற)றைந்துவிடும்…

சீருடை வீரர்களும்
வெள்ளுடை வேந்தர்களின்
வேட்டைக்கு சிரம் தாழ்த்தி
தன்னிலை தரம் தாழ்த்தி
சுழல் விசைக்கு இயங்கும்
சிறப்பான பொம்மையாய்
செம்மையாய் பணி செய்து
தன்கடன் தீர்த்திருப்பர்…

காகிதப்புலிகளும்கூட
கணைத்து இறுமி இறுமி
புலித்தோல் போர்வைக்குள்
அடுத்த எழுத்துக்கு
எப்போது எது சிக்குமென
யோசித்து ஏங்கிப்போய்
எப்போதும்போல் உறங்கிப்போகும்…

அரசியலும் சாதியும்
பசி தீர ஆதாயம் உண்டு
கொழுத்து பருத்துப்போய்
அடுத்த காவுக்கு
கண்கள் உருட்டி காத்திருக்கும்…

சட்டையில் சீறும்
சேகுவாராக்கள்கூட
புதுப்பட கட்அவுட்களின்
பாலாபிசேகத்தில்
கரைந்து காணாமல் போய்
கண்கள் மூடி சிலிர்த்திருக்கும்…

அப்பாவியும் நடுநிலையும்
எப்போ தீரும்
என் நாட்டின் சாபமென
அரேபியச்சட்டங்களை
பேசி அலுத்துப்போய்
குடும்ப பொதி சுமக்க
வழக்கம்போல் கிளம்பிப்போகும்…

சாட்சிக்கும் வாய்தாக்கும்
வழக்கம்போல வாய்பிளந்து
துருப்பிடித்த புத்தகங்களை
இன்னமும் தூசி தட்டி
வயதான கிழவி ஒருத்தி
தராசுடன் காத்திருப்பாள்…

இங்கே யாருக்கும் புரியாது…
இன்னமும் புரியாதது
இனி எப்போதும் புரியாது…

அமிலத்தில் சிதையும்
முகச்சதையின் எரிச்சலும்
பிறப்புறுப்பை சிதைக்கும்
ஆதிக்கத்தின் வெறியும்…
சாதியில் மதத்தில்
சிக்கிச்சிதையும் உயிரும்…
ஊழலில் வாய்ப்பிழந்த
திறமைகளின் வேதனையும்…
இழப்புற்ற குடும்பத்தின்
பலகீன இதய முனகலும்…

இங்கே யாருக்கும் புரியாது…
இன்னமும் புரியாதது
இனி எப்போதும் புரியாது…

தலைநகர் மட்டுமின்றி
தலைமுதல் கால்வரை
வயது வரம்பென்ற
வித்தியாசம் ஏதுமின்றி
நித்தம் நித்தம் பல நிர்பயாக்களை
காவு கொடுக்கும் என் நாட்டில்…

சாதிக்கும் மதத்துக்கும்
சண்டயிட்டுச்செத்து
மனிதம் என்ற சொல்லை மறந்து
மறத்து கிடக்கும் என் நாட்டில்…

தேசத்தின் சாதனைகளை
உலகத்தில் பதியாமல்
ஊழலில் சாதனை புரியும்
அரசியல் மாறா என் நாட்டில்…

இன்னமும்
நீதி நிலைக்கும்…
நாடு திருந்தும்…
என் நாடும் ஒரு நாள்
சிங்கப்பூராகும்…
என ஏக்கப்பெருமூச்சுடன்
அண்ணாந்து காத்திருக்கும்
பெரும்பான்மை ஏமாளிக்கூட்டத்தின்
ஏகாந்த நடுமத்தியில்
நன்றாக உற்று நோக்கின்
நான்…
நீங்கள்…
நம் எல்லோர் முகமும்
நிச்சயம் அங்கிருக்கும்!!!