SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, March 19, 2015

மோடிஜி Vs சோனியாஜி – மொத்தத்துல நமக்கு நாமம்தான்ஜி...!


நரேந்திரமோடி... ஊழலில் சாதனை படைத்த காங்கிரசை மீண்டும் அரியணை ஏறவிடாமல் தடுப்பதற்கான ஒரே மந்திரச்சாவியாய்... ஆபாத்பாந்தவனாய்... என்னைப்போல ஏராளமானோரால் தூக்கிப்பிடிக்கப்பட்டு அரியணையில் அமர்த்தி வைக்கப்பட்டவர். குஜராத்தில் பாய்ந்த பாலும் தேனும் இந்தியா மொத்தமும் பாயாவிட்டாலும்கூட பல விஷயங்களில் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன்.

இன்று நடப்பதோ... அத்தனையும் உல்டாதான். எதிர்க்கட்சியாய் இருந்தபோது சோனியாஜியின் பல திட்டங்களையும், மசோதாக்களையும் எதிர்த்தவர்கள் அரியணையில் அமர்ந்ததும் அதை அப்படியே அச்சரம் பிசகாமல் அமல்படுத்துவதுதான் மோடிஜியின் மேல் எண்ணற்ற எதிர்பார்ப்புகளை கொண்டவர்களுக்கு வைக்கப்பட்ட முதல் ஆப்பு என்று நினைக்கிறேன்.

கருப்புப்பண விவகாரத்தில் கலர்கலராய் வாக்குறுதிகளை அள்ளி விட்டுவிட்டு இன்று காங்கிரசுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்தாகிவிட்டது. கையிலிருக்கும் கருப்புப்பண முதலைகளின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கே உச்சநீதிமன்றம் கழுவி கழுவி ஊத்தவேண்டியதாயிருக்கிறது. இவர்களாவது... கருப்புப்பணத்தை மீட்பதாவது...!(கருப்புப்பணத்தை மீட்க வேண்டுமானால் அதற்கு முதலில் கருப்புப்பணம் வைத்துக்கொள்ளாத ஆட்சியாளர்களும் கட்சிகளும் வேண்டும் என்ற சின்ன விவரம்கூட தெரிந்துகொள்ளாதவர்கள் இன்னமும் அப்பாவிதான்...!!!)

நேரடி மானியத்திட்டம் என்ற பெயரில் சாமான்யர்களின் வயிற்றிலறைய பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. இன்னமும் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் வீடுகள் கோடான கோடி என்பது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியுமோ தெரியவில்லை. அதனால்தான் மண்ணெண்ணெய் ரத்தை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சமையல் எரிவாயு... என்ன திட்டம் என்பதே விளங்காமல் நம்மிடம் வாங்கிய காசை நமக்கே திருப்பித்தருவதாய் ஆதார் எண், வங்கிக்கணக்கு என்று கால்கடுக்க வரிசையில் நிற்கவைத்து சமர்ப்பிக்க வைத்துவிட்டார்கள்.

நேரடி மானியத்திட்டம் என்ற பெயரில் சிலிண்டர் புக் பண்ணிவிட்டால் வீட்டுக்கு சிலிண்டர் வரும் நேரத்தில் ஆயிரம் சொச்சத்தை ரெடியாக வைத்திருக்கவேண்டும் என்ற வழக்கத்தை மக்களிடம் பழக்கப்படுத்துவதுதான் இந்தத்திட்டத்தின் முதல் படி. அடுத்தடுத்த படிகள் என்னவாகயிருக்கும் என்பது எனது அனுமானத்திலிருந்து...

வங்கிக்கணக்குடன் எரிவாயு இணைப்பு விவரம் இணைக்கப்பட்டிருப்பதால் ஏதாவது ஒரு தொகையை உச்ச வரம்பாக நிர்ணயித்து அதற்கு மேல் வரவு செலவு கணக்குள்ள வங்கிக்கணக்குக்கு இனி மானியம் இல்லை என்று நிறுத்தப்படுவது திட்டத்தின் இரண்டாம் படியாக இருக்கலாம்.

நிர்ணயித்த விலையை கொடுத்து சிலிண்டரை வாங்கிப்பழகிய பிறகு சைக்காலஜிக்கலாய் அந்தத்தொகைக்கு பழக்கப்பட்டுப்போகும் மக்களிடம் திடீரென மானியம் முழுவதுமாய் ரத்து செய்யப்பட்டாலும் அதன் விளைவு பெரிதாகயிருக்காது என்பதுதான் இந்தத்திட்டத்தின் முக்கிய மூலாம்சம்.

மொத்தத்தில் மானியம் முழுவதுமாய் ரத்து செய்யப்படப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இப்போதே நாம் புரிந்துகொண்டால் எதிர்காலத்தில் வயிற்றெரிச்சலாவது குறையும்!

காங்கிரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை முழுவீச்சுடன் எதிர்த்தவர்கள் இன்று தனி மெஜாரிட்டியுடன் அதே திட்டத்தை நிறைவேற்றி ஆப்படிக்க தயாராகிவிட்டார்கள். (இது எந்த முதலாளியை திருப்திப்படுத்தவோ தெரியவில்லை...!)

தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் மோடிஜி வந்தவுடன் தலைகீழாய் தூக்கி நிறுத்தப்படும் என்ற எண்ணங்கள் சோனியாஜிக்கும் மோடிஜிக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் சிதைக்கப்பட்டாகிவிட்டது.

தமிழர்களுக்கு ஆப்படிக்க சோனியாஜிக்கு ஒரு சிவசங்கர்மேனன் என்றால் மோடிஜிக்கு சுப்பிரமணியன் சுவாமி போல பல சிவசங்கர்மேனன்கள்...!

மோடிஜி வந்தவுடன் வாலாட்டும் அண்டை நாடுகளுக்கு சரியான எச்சரிக்கையுடன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தால்... மோடிஜிக்கு எம்.ஜி.ஆரின் சினிமாவை யாராவது போட்டுக்காட்டிவிட்டார்களா என்னவோ தெரியவில்லை... விதவிதமாக வடிவமைத்த உடைகளுடன் உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரத்தொடங்கிவிட்டார். ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கிறதுக்கே தெம்பில்லையாம்... அவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்... என்ற சந்திரமுகி வசனத்தைப்போல நமக்கே கோவணத்து வழியில்லையாம்... நாம ஊருக்கெல்லாம் பட்டு வேஷ்டி எடுத்துத்தர்றோம்னு கெளம்புனா நல்லாவாயா இருக்கு?...!

தூய்மை இந்தியா என்ற புது முழக்கத்தை வேறு கையிலெடுத்துக்கொண்டு இவர்கள் பெண்ணும் அக்கப்போர்களும்... விளம்பர ஸ்டண்ட்களும்... அப்பப்பா...

தனிமனித ஒழுக்கத்தை வளர்க்காதவரை இங்கே இது போன்ற எந்தத்திட்டங்களும் வெற்றியடைய வாய்ப்பேயில்லை என்பது நிஜமாகவே இவர்களுக்கு புரியாதா?... அந்தத்தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு நமது நாட்டின் இன்றைய நிலையை பொறுத்தவரை விழிப்புணர்ச்சியைவிட கடுமையான சட்டங்களே முதல் தேவை என்பதை மோடிஜிக்கு யாராவது எடுத்துச்சொன்னால் தேவலை...!

ஸ்மார்ட் சிட்டி, ஆதார் கார்டு, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் மயம் என்று பகட்டான திட்டங்களை அறிவிப்பதால் மட்டுமே நாடு வளர்ந்துவிடாது. நமது முதுகெலும்பான விவசாயத்துக்கு தோள் கொடுக்கும் அரசியல்வாதிகள் வர இன்னும் எத்தனை காலம் காத்திருக்கவேண்டுமோ தெரியவில்லை... தொழில்மயத்தைவிட விவசாயமயமாக்கலிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பன்மடங்கு உயத்தும் வாய்ப்பு ஏராளம் இருந்தும் இங்கே அதைப்பற்றி சிந்திக்க யாருக்கும் நேரமில்லை.


தொழில்மயமாக்கலாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் அதுவுமில்லை. ஒரு பக்கம் நோக்கியா போல பல தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு தொழிலாளர்கள் நடுவீதியில் நின்றாலும் அதைப்பற்றி கவலைப்பட மத்திய மாநில அரசுகளுக்கு இங்கே நேரமில்லை.

டோல்கேட் கொள்ளை மோடிஜி ஆட்சியில் ரத்து செய்யப்படும் என்று நம்பியிருந்த காலத்தில் நாளுக்கு நாள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கும் டோல்கேட்களும், கட்டணத்தை மட்டும் வசூலித்துவிட்டு கவர்ண்மெண்ட் சாலைகளை விட கேவலமாய் மாறியிருக்கும் வழித்தடங்களும் நமக்கான ஒரு முக்கியமான ஆப்புதான். ஒருவேளை மோடிஜியின் ஆட்சி முற்றுப்பெறும் தருணத்தில் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு டோல்கேட் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லைதான்...!

 காங்கிரசுக்கு சவால் விடும் ஊழல்களும் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் வெளிப்படக்கூடும் என்பதையும் நாம் எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய கட்டாயத்தில்தான் இன்னமும் அரசியல் இருக்கிறது.

மோடிஜிக்கு இன்னமும் காலமிருக்கிறது. வெறுமனே வாய்ச்சொல்லாய் பகட்டுத்திட்டங்களாய் இல்லாமல் உருப்படியாய் ஏதாவது செய்வாரா என்று எதிர்பார்த்து காத்திருப்போம். இல்லை... ஒருவேளை ஐந்தாண்டுகால முடிவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் வழியாக ஏதாவது அரசியல் ஸ்டண்ட் அடிக்கும் படலங்கள் மட்டும் அரங்கேற்றப்பட்டு முற்றுப்பெற்றாலும் பெறலாம்.

மோடிஜியோ... சோனியாஜியோ... யார் வந்தாலும் சாமான்யனுக்கு நாமம்தான் என்பதுவும், மொத்தத்தில் நமது நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கான அரசியல் இங்கே இன்னமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவேயில்லை என்பதுவும்தான் நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய நிதர்சனமான நிஜம்...!

அரசியல் பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாம்தான்... தொடர்ந்து பேசுவோம்... (அடுத்த அரசியல் கட்டுரை.. நீண்ட இடைவேளைக்குப்பிறகு... தமிழக அரசியல்... ''2016 நமதே''...!!!)

1 comment:

  1. You are writing as if tamilnadu also voted for modi. He seems to be doing things to those who voted

    ReplyDelete