SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, March 17, 2015

நம் வாழ்க்கை நம் கையிலா?...


சலனமற்று பயணிக்க நினைக்கும் - என்
நீரோடை வாழ்க்கை
அவ்வப்போது சலசலக்கிறது...
இடைப்படும் கூழாங்கற்களின் மீது மோதி!

தெளிந்த நீரோடை என்று
எனக்குள் நானே
சொல்லிக்கொண்ட போதிலும்
கல்லெறிபட்டு கலங்கத்தான் செய்கிறது
சீரானதொரு இடைவெளிகளில்!

எல்லையற்ற பயணமென்று
எண்ணிக்கொண்டே பயணித்தாலும்
எங்கேயோ அடங்கும் முடிவுக்குள்
முற்றுப்பெறும் முடிவொன்று
முடிவின்றி நகர்கிறது
முன்னேறி பயணிக்கும்
ஒவ்வொரு துளிகளோடும்!

வேர்களை உரசும் போதெல்லாம்
பற்றிக்கொள்ள நினைத்தும்கூட
நிற்க முடியா தருணத்தோடு
முன்னேறிச்செல்கிறது வாழ்க்கை!

மேல் விழும் மலர்களைக்கூட
முகரும் ஆசை மறந்து துறந்து
அடித்துத்திசை மாற்றுகிறது
ஆர்ப்பரித்து ஓடும் வாழ்க்கை!

எனக்காக காத்திருக்கும்
பழைய வழித்தடங்களும்
என்னுடனே வாழும்
எனதன்பு உயிர்களும்
ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை
எனது வேகத்தையும்
எதிர்கால பயணத்தையும்...!

கட்டுப்பாடற்ற பயணித்தினூடே
கட்டுப்பாடுகள் பலவும்
எனது பயணித்தின் திசை மாற்றாமல்
எனை கட்டியிழுத்து
செல்லத்தான் செய்கிறது!

கானல் நீரல்ல இது...
கடல் நீரில் கலப்பதுதானென்றாலும்
சமுத்திரத்தின் எல்லையென்பது
எங்கேயிருக்கக்கூடும் என்றொரு கேள்வி
என்னையும் முந்திக்கொண்டு
ஆர்ப்பரித்து பயணிக்கிறது
எப்போதும் என்னோடுமிங்கே...!



3 comments:

  1. ஆர்ப்பரித்து பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ரொம்ப நாளா பதிவுகளை காணாம்...?

    ReplyDelete
  2. வணக்கம்
    பயணம் தொடர வாழ்த்துக்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. //கானல் நீரல்ல இது...
    கடல் நீரில் கலப்பதுதானென்றாலும்
    சமுத்திரத்தின் எல்லையென்பது
    எங்கேயிருக்கக்கூடும் என்றொரு கேள்வி
    என்னையும் முந்திக்கொண்டு
    ஆர்ப்பரித்து பயணிக்கிறது
    எப்போதும் என்னோடுமிங்கே...!//

    ReplyDelete