SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, July 5, 2014

வலையில் சிக்காத மீன்கள்...


திருட்டு ரெயிலில் வந்தாலும்
எழுச்சி உரையில் சிக்கின மீன்கள்...
இனவுணர்வு மூகமூடியில்
மொழிப்போரிலும் சிக்கின மீன்கள்...

புரட்சித்தலைவரை எதிர்த்துகூட
அரசியல் புரட்சி பண்ணிய சாணக்கியத்தனம்
இன்னமும் மாறாமல்
அப்படியே இருப்பினும்கூட
மீன்கள் இப்போதெல்லாம்
முன்னம்போல் இல்லையென்பது
இன்னமும்கூட இங்கே
விளங்கவேயில்லைபோல...!

இருநூறு ரூபாய்க்கு
சிக்கின மீன்களென
இருமி கனைக்கும் போதெல்லாம்
திருமங்கலம் பிள்ளையார்சுழி
நினைவில் வருவதேயில்லையா?...

மீன்கள் சிக்காமல்
வெறும்கையில் வீடு திரும்பியதன்
காரண காரியங்களை
கூட்டம் போட்டு கும்மியடித்து
உணரப்பட்டதொரு உண்மையை
உணராததுபோல மறைத்து
ஆராயும் நாடகங்கள்
இன்னமுமிங்கே யாருக்காக?...!

சொந்த இனம்
நாதியின்றி தவித்தாலும்
நாற்காலியை பற்றிக்கொண்ட
நாராச நாடகங்களும்...

தள்ளாத வயதிலும்
டெல்லிக்கு பறந்த
பதவி வேகத்தை
இனத்துக்கு காட்டாத
இரட்டை முகமும்...

   கையிலிருந்த கடிவாளத்தை
   கையாள மறுத்து நின்று
   கையாலாகா நிலையென
   ‘’கை’’க்குள் சிக்கிக்கொண்டு
   இருக்கையை மட்டும்
   இறுக பற்றிக்கொண்ட
   இனவுணர்வுத்தனமும்...

செம்மொழி மாநாட்டையும்
சினிமாத்துறையையும்
குடும்பத்துக்கு அர்ப்பணித்து
பாராட்டுவிழா பல நடத்தி
குதூகலித்த மயக்கமும்...

பேரரசராய் முடிசூட்டியிருப்பினும்
சிற்றரசர்கள் கோடிகள் உருவாகி
கோவணத்தைக்கூட உருவித்திரிந்த
அவலத்தையெல்லாம் அழிக்காமல்விட்டதும்...

தமிழின ரத்தக்கறை படிந்த
கையுடன் தொடர்ந்து
கைப்பற்றி நடந்த
மிடுக்குத்தனமும்...

அரியணை இழந்ததும்
தூக்கமின்றி சிந்தித்து
தூசு தட்டி தூக்கிய
இனவுணர்வு நாடகங்களும்...

துரோகிகளைகூட மன்னிக்கும் மீன்கள்
நம்பிக்கை துரோகிகளை மட்டும்
ஒருபோதும் மன்னிப்பதில்லையென்பது
ஒருநாளும் விளங்காமல்போனதும்...

எதிரிகள் மீதான ஆதரவைவிட
தங்கள் மீதான வெறுப்பிலேயே
மீன்களெல்லாம் எதிரணியை
ஆட்சிக்கப்பலில் ஏற்றியிருப்பதை
இன்னமும் உணராத இருமாப்பிலிருப்பதும்...

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட
ஒருபோதும் முனையாமல்
கழகஆட்சி மீண்டும் மலருமென
தொடர்ந்து முழங்கும் நம்பிக்கையை
இணங்கி வாழப்பழகிக்கொண்ட
இனமானத்தலைவரும்
இன்னமும் கழகத்தை நம்பும்
கட்சித்தொண்டனும் மட்டும்தான்
கைதட்டி ரசிக்கலாம்...

எளிதாக தூண்டிலில் சிக்கிய மீன்கள்
இன்று வலையில் சிக்குவதே கடினம்தான் தலைவரே...!

இனத்துக்காக ஆட்சிக்கட்டிலை
துச்சமென தூர வீசிய
உங்களின் கடந்தகால ரத்தவுணர்வு
சமீபத்திய செய்கைகளின் வினையில்
மீன்களின் காலில் நசுங்கிக்கிடக்கிறது...!

களப்போராளியாய் கலக்கிய நீங்கள்
இன்று தினமொரு அறிக்கையில்
காகிதப்போராளியாய் 
சுருண்டு போன மர்மமென்ன?...

சாணக்கியத்தனமென்ற பெயரில்
இன்னமும் பல நாடகங்களை
தொடர்ந்து நடத்திக்கொண்டிராமல்
மனமார சில தவறுகளுக்கு
பரிகாரம் தேடும் முயற்சியை ஆரம்பித்தால்
ஒருவேளை மீன்கள்
மீண்டும் உங்கள் வலையைத்தேடி வரக்கூடும்...!

களையெடுக்கும் பணியை
நீங்கள் கையிலெடுக்க நினைத்தால்
அதை தொடங்கவேண்டியது
முதலில் மனதிலும்
இரண்டாவது உங்கள் வீட்டிலும்
மூன்றாவது உங்களைச் சுற்றிக்கிடக்கும்
ஜால்ரா கூட்டங்களிடமும்தான்...!

ஒருவேளை முடியாதெனில்
வலையில் சிக்காத மீன்களும்
வெறுங்கையும் மட்டுமே
உங்களின் எதிர்கால வரலாறாகிப்போகக்கூடும்...!

வணக்கங்களுடன்
-உங்கள் பழைய தொண்டன்.