SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, August 13, 2014

முகமூடி...!


வாழ்க்கைப்பாதையின் பயணங்களில்
கடந்து வந்த மனிதர்கள்
கணக்கிலடங்கா எண்ணிக்கையெனினும்
ஒரு முறைகூட பார்க்க நேர்ந்ததில்லை
உண்மையான மனித முகங்களை!

காலைநேர கசங்கிய
பேருந்து பயணத்திலும்
சாலையோர இரைச்சலான
நடைப்பயணங்களிலும்
தொலைதூர அமைதியான
ரயில் பயணங்களிலும்
கடற்கரையில் வானம் வெறிக்கும்
நேரக்கடத்தல்களிலும்
மனிதர்கள் பல கடந்து வந்தும்
ஒரு முறைகூட பார்க்க நேர்ந்ததில்லை
உண்மையான மனித முகங்களை!

அலுவலகங்களிலும் உத்தியோகத்திலும்
உயரதிகாரி, உதவியாளர்
கணக்காளர், காசாளர்
என்று விதவிதமான பெயர்களில்
உதட்டு சிரிப்பு, கண்டிப்பு,
கர்வம், ஆணவம், அடிமைத்தனம் என
ஒவ்வொருவருக்கும் மாட்டப்பட்டிருக்கிறது
பலவிதமான முகமூடிகள்...!

உறவுகள் எனும் பந்தங்களிலும்
பணக்காரன், படித்தவன்,
பட்டிக்காட்டான்,
என்று விதவிதமான பெயர்களில்
நாகரீகம், அலங்காரம், அவமானம், செருக்கு என
ஒவ்வொருவருக்கும் மாட்டப்பட்டிருக்கிறது
பலவிதமான முகமூடிகள்...!

பொழுதுபோக்கும் கனவுத்தொழிற்சாலையிலும்கூட
நடிகன், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர்
என்று விதவிதமான பெயர்களில்
அந்தரங்கம், ஆட்சி ஆசை
பப்ளிசிட்டி, பொய்யான வாழ்க்கை என
ஒவ்வொருவருக்கும் மாட்டப்பட்டிருக்கிறது
பலவிதமான முகமூடிகள்...!

ஒவ்வொரு நாட்டின் தலையெழுத்திலும்கூட
அதிகாரி, அரசியல்வாதி, அமைச்சர் என
விதவிதமான பெயர்களில்
சர்வாதிகாரம், ஊழல்,
மக்கள் விரோதம், லஞ்சம் என
மனசாட்சியின்றி மாட்டப்பட்டிருக்கிறது
பலவிதமான முகமூடிகள்...!

கணவன் மனைவி
உறவுக்குள்ளும்கூட
மாட்டப்பட்டிருக்கிறது
வெளியில் பகிர்ந்துகொள்ளமுடியா
பல கடந்தகால மற்றும்
சில நிகழ்கால முகமூடிகள்...!

ஆழமான நட்புகளாய்
அன்பாய் அறியப்பட்டிருந்த
பலவித உறவுகளுக்குள்கூட
சிலவருட பிரிவுகளுக்குப் பின்னமே
புரிகிறது...
கடந்தகாலங்களில் மாட்டப்பட்டிருந்த
பலவிதமான முகமூடிகள்...!

தள்ளுவண்டி கடைக்காரர், பேருந்து நடத்துனர்
போக்குவரத்து காவல்காரர், சாலையோர வியாபாரி
வீட்டு உதவியாளர், பிச்சைக்காரர்
கோயில் பூசாரி, பூக்காரர்
ஆட்டோக்காரர், மருத்துவர்
டீக்கடைக்காரர், பெட்டிக்கடைக்காரர்
பெருமுதலாளி, சலவைக்காரர் என
அன்றாட வாழ்வில்
சந்திக்க நேரிடும்
சகமனிதர்கள் ஒவ்வொருவருக்கும்
மாட்டப்பட்டிருக்கிறது
பலவிதமான முகமூடிகள்...!


இங்கே
முகமூடிகள் இல்லாத மனிதவாழ்க்கை
சாத்தியமற்றதா?...
இல்லை...
முகமூடிகள் இல்லாமல் மனிதர்கள் வாழ்வது
விருப்பமற்றதா?...

நொடிக்கு நொடி
பாடம் கற்பிக்கும்
புரியாத பள்ளிதான்
வாழ்க்கையா?...

இல்லை...
ஒவ்வொரு அனுபவமும்
ஒவ்வொன்றை உணர்த்தும்
புரியாத பாடம்தான்
வாழ்க்கையா?...

கடந்து வந்த வாழ்க்கைப்பாதையை
ஒருமுறை திரும்பிப்பார்க்கும்போதுதான் புரிகிறது...
பல சந்தர்ப்பங்களில்
பல முறைகள்
எனக்கும் மாட்டப்பட்டிருக்கிறது
இன்னமும் கழற்றவே முடியாத

பலவிதமான முகமூடிகள்...!


Saturday, July 5, 2014

வலையில் சிக்காத மீன்கள்...


திருட்டு ரெயிலில் வந்தாலும்
எழுச்சி உரையில் சிக்கின மீன்கள்...
இனவுணர்வு மூகமூடியில்
மொழிப்போரிலும் சிக்கின மீன்கள்...

புரட்சித்தலைவரை எதிர்த்துகூட
அரசியல் புரட்சி பண்ணிய சாணக்கியத்தனம்
இன்னமும் மாறாமல்
அப்படியே இருப்பினும்கூட
மீன்கள் இப்போதெல்லாம்
முன்னம்போல் இல்லையென்பது
இன்னமும்கூட இங்கே
விளங்கவேயில்லைபோல...!

இருநூறு ரூபாய்க்கு
சிக்கின மீன்களென
இருமி கனைக்கும் போதெல்லாம்
திருமங்கலம் பிள்ளையார்சுழி
நினைவில் வருவதேயில்லையா?...

மீன்கள் சிக்காமல்
வெறும்கையில் வீடு திரும்பியதன்
காரண காரியங்களை
கூட்டம் போட்டு கும்மியடித்து
உணரப்பட்டதொரு உண்மையை
உணராததுபோல மறைத்து
ஆராயும் நாடகங்கள்
இன்னமுமிங்கே யாருக்காக?...!

சொந்த இனம்
நாதியின்றி தவித்தாலும்
நாற்காலியை பற்றிக்கொண்ட
நாராச நாடகங்களும்...

தள்ளாத வயதிலும்
டெல்லிக்கு பறந்த
பதவி வேகத்தை
இனத்துக்கு காட்டாத
இரட்டை முகமும்...

   கையிலிருந்த கடிவாளத்தை
   கையாள மறுத்து நின்று
   கையாலாகா நிலையென
   ‘’கை’’க்குள் சிக்கிக்கொண்டு
   இருக்கையை மட்டும்
   இறுக பற்றிக்கொண்ட
   இனவுணர்வுத்தனமும்...

செம்மொழி மாநாட்டையும்
சினிமாத்துறையையும்
குடும்பத்துக்கு அர்ப்பணித்து
பாராட்டுவிழா பல நடத்தி
குதூகலித்த மயக்கமும்...

பேரரசராய் முடிசூட்டியிருப்பினும்
சிற்றரசர்கள் கோடிகள் உருவாகி
கோவணத்தைக்கூட உருவித்திரிந்த
அவலத்தையெல்லாம் அழிக்காமல்விட்டதும்...

தமிழின ரத்தக்கறை படிந்த
கையுடன் தொடர்ந்து
கைப்பற்றி நடந்த
மிடுக்குத்தனமும்...

அரியணை இழந்ததும்
தூக்கமின்றி சிந்தித்து
தூசு தட்டி தூக்கிய
இனவுணர்வு நாடகங்களும்...

துரோகிகளைகூட மன்னிக்கும் மீன்கள்
நம்பிக்கை துரோகிகளை மட்டும்
ஒருபோதும் மன்னிப்பதில்லையென்பது
ஒருநாளும் விளங்காமல்போனதும்...

எதிரிகள் மீதான ஆதரவைவிட
தங்கள் மீதான வெறுப்பிலேயே
மீன்களெல்லாம் எதிரணியை
ஆட்சிக்கப்பலில் ஏற்றியிருப்பதை
இன்னமும் உணராத இருமாப்பிலிருப்பதும்...

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட
ஒருபோதும் முனையாமல்
கழகஆட்சி மீண்டும் மலருமென
தொடர்ந்து முழங்கும் நம்பிக்கையை
இணங்கி வாழப்பழகிக்கொண்ட
இனமானத்தலைவரும்
இன்னமும் கழகத்தை நம்பும்
கட்சித்தொண்டனும் மட்டும்தான்
கைதட்டி ரசிக்கலாம்...

எளிதாக தூண்டிலில் சிக்கிய மீன்கள்
இன்று வலையில் சிக்குவதே கடினம்தான் தலைவரே...!

இனத்துக்காக ஆட்சிக்கட்டிலை
துச்சமென தூர வீசிய
உங்களின் கடந்தகால ரத்தவுணர்வு
சமீபத்திய செய்கைகளின் வினையில்
மீன்களின் காலில் நசுங்கிக்கிடக்கிறது...!

களப்போராளியாய் கலக்கிய நீங்கள்
இன்று தினமொரு அறிக்கையில்
காகிதப்போராளியாய் 
சுருண்டு போன மர்மமென்ன?...

சாணக்கியத்தனமென்ற பெயரில்
இன்னமும் பல நாடகங்களை
தொடர்ந்து நடத்திக்கொண்டிராமல்
மனமார சில தவறுகளுக்கு
பரிகாரம் தேடும் முயற்சியை ஆரம்பித்தால்
ஒருவேளை மீன்கள்
மீண்டும் உங்கள் வலையைத்தேடி வரக்கூடும்...!

களையெடுக்கும் பணியை
நீங்கள் கையிலெடுக்க நினைத்தால்
அதை தொடங்கவேண்டியது
முதலில் மனதிலும்
இரண்டாவது உங்கள் வீட்டிலும்
மூன்றாவது உங்களைச் சுற்றிக்கிடக்கும்
ஜால்ரா கூட்டங்களிடமும்தான்...!

ஒருவேளை முடியாதெனில்
வலையில் சிக்காத மீன்களும்
வெறுங்கையும் மட்டுமே
உங்களின் எதிர்கால வரலாறாகிப்போகக்கூடும்...!

வணக்கங்களுடன்
-உங்கள் பழைய தொண்டன்.
Thursday, May 29, 2014

தொட்டால் சுருளும்...!!! – இது அறிவியல் உண்மை.


பதிவுலகத்திற்கும் எனக்குமான உறவில் ஒரு நீண்ட இடைவெளி...! பரபரப்பான இந்திய தேர்தல் நேரத்தில்கூட ஒரு பதிவராக எனது கருத்துக்களை எழுத நேரம் ஒதுக்கமுடியாமல் ஒதுங்கியே நின்றாகிவிட்ட சூழ்நிலை. பெரும்பாலான பதிவர்கள் சந்திக்கும் பிரச்சினைதான் இந்த அவ்வப்போதான இடைவெளி என்று நினைக்கிறேன். எல்லா வேலைப்பளுவையும் மீறி முடிந்தவரை இடைவெளியின்றி தொடர்ந்து எழுதும் பதிவர்களுக்கு இங்கே எனது ஆச்சர்யங்களையும், வாழ்த்துக்களையும் கண்டிப்பாக தெரிவித்தாகவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

கிடைத்த ஒரு சிறு இடைவெளி நேரத்தில் எனது சொந்தப்படைப்பான சில புகைப்படங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த குட்டி அறிவியல் பதிவுதான் எழுத முடிந்திருக்கிறது.

தொட்டால் சுருளும்...!!! தலைப்பைப்பார்த்ததும் சக பதிவர் நண்பர் எடுக்கும் திரைப்படமான ‘’தொட்டால் தொடரும்’’ உங்கள் நினைவுக்கு வந்திருந்தால் அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என விளக்க வேண்டியது இங்கே என் கடமையாகிறது!!!.

வழக்கம்போல இந்தப்பதிவிலும் படங்களின் அழகை ரசிக்க அதை தனியாக கிளிக்கி பார்க்க வேண்டுகிறேன்...!

சிறுவயதில் நம்மில் பெரும்பாலானோர் ரயில் பூச்சி என்று நாம் அழைக்கும் அதிகமான கால்களை உடைய ஒரு கருப்புவண்ண பூச்சியை பார்த்திருப்போம். மிக வேகமாக ஊர்ந்து செல்லும் அந்தப்பூச்சியை நாம் தொட்டதும் அது வட்டமாக சுருண்டு கொள்ளும். அந்தப்பூச்சியின் நீளம் அதிக பட்சமாய் 4 முதல் 5 செ.மீ வரை இருக்கக்கூடும். அதே போன்றதொரு பூச்சி... ஆனால் அதன் நீளம் கிட்டத்தட்ட 12 முதல் 15 செ.மீ வரை என்றால்?...


அவ்வளவு நீளமான உயிரினம்தான் எனது கேமராவில் சிக்கிய இந்தப்பூச்சி. அழகாக ஊர்ந்து செல்லும் இந்தப்பூச்சி அடுத்த படத்தில் நான் தொட்டதும் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக எப்படி சுருண்டு நடிக்கிறது பாருங்கள்...!


இதே பூச்சி... கருப்பு வண்ணத்தில் இல்லாமல் இன்னும் கலர்ஃபுல்லாக இருந்தால்?... இருந்தால் என்ன இருந்தால்?... இதோ இருக்கிறது பாருங்கள்...!!!இந்த ரயில்பூச்சி போலவே அடுத்து ஒரு வண்ணமயமான இலைப்புழு வகை பூச்சி ஒன்றை பார்த்தேன். அதன் படங்கள் உங்கள் ரசனைக்கு...!மேலே நீங்கள் பார்த்த பூச்சிகள் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கக்கூடும்...!

ஆனால் அடுத்து வரும் இந்தப்பூச்சி என்னை வியப்புக்குள்ளாக்கியது போலவே நிச்சயம் உங்களையும் வியந்து ரசிக்கவைக்கும் என நம்புகிறேன்.

இதன் நீளம் 4 முதல் 5 செ.மீ வரையும் அகலம் கிட்டத்தட்ட 2 செ.மீ வரையும் இருக்கக்கூடும். இந்தப்பூச்சியை முதன் முதலில் பார்த்தபோது சத்தியமாக இது தொட்டால் சுருளும் தன்மையுடையது என்பதை நம்பவில்லை.


ஆனால் இதை தொட்டபோது தனது தலைப்பகுதியை உடலில் வால்பகுதிக்குள் நுழைத்து ஒரு பந்து போல தன்னை மாற்றிக்கொள்ளும் இதன் லாவகத்தை பாருங்கள்...!
இது ஒரு பரபரப்பான, கவிதைத்துவமான, கவர்ச்சியான பதிவாக இல்லாவிட்டாலும்கூட இது முழுக்க முழுக்க எனது கேமராவில் சிக்கிய எனது சொந்தப்படைப்புகள் என்பதால் இதை உங்களுடன் பகிரத்தோன்றியது. பகிர்ந்துவிட்டேன். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை இந்தப்பதிவு வீணடித்திருந்தால் மன்னித்து மறந்துவிடுங்கள்.

மீண்டும் கிடைக்கும் நேரங்களில் முடிந்தவரை எனது பாணியில் அரசியல், அறிவியல், வரலாறு, கவிதைகள் என பன்முகப்பதிவுகளை தொடர்ந்து தர முயலுகிறேன்.

 உங்களின் ஆதரவுக்கு என் நன்றிகள்.


மீண்டும் வெகுவிரைவில் சந்திக்கும் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் விடைபெறுகிறேன்.