SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, December 20, 2013

வேற்றுக்கிரகவாசிகளும் இயற்கையின் வில்லங்கமும்...!

முன்குறிப்பு – பதிவின் சுவாரசியத்தை அனுபவிக்க படங்களை க்ளிக்கி முழுத்திரையில் பாருங்கள்...!

அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் எல்லாருக்குமே வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய தகவல்களும், சினிமாக்களும், நாவல்களும், வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா எனும் ஆராய்ச்சிகளும், பறக்கும் தட்டுகள் பற்றி விரிந்து கிடக்கும் கதைகளும், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து கிடைத்ததாக அறிவியல் தகவல்களில் இருக்கும் ஒலி சமிக்ஞைகளும் என வேற்றுக்கிரக தகவல்கள் எல்லாமே எப்போதுமே சுவாரசியம் தருபவைதான்...!

ஆனால் இங்கே நான் போகப்போவது வேற்றுக்கிரக ஆராய்ச்சிகளுக்கு அல்ல...! வேற்றுக்கிரகங்களில் நிஜமாகவே உயிர்கள் இருக்கிறதோ... இல்லையோ?... ஆனால் ஆண்டாண்டு காலமாக மனிதர்களின் பல படைப்புகளில் வேற்றுக்கிரகவாசிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என சில கற்பனைத்தோற்றங்களை உருவாக்கி அதையே நம் மனதில் பதியவும் வைத்துவிட்டார்கள்.

கடந்த சில பதிவுகளில் தொடர்ந்து எனது கேமராவில் சிக்கிய சொந்தப்படைப்புகளைப் பற்றியே எழுதி வருவதால் இதிலும் அதன் தொடர்ச்சிதான்...! என்னவொன்று... இங்கே நாம் பார்க்கப்போவதெல்லாம் எனது கேமராவில் சிக்கிய சில வித்தியாசமான தோற்றம் கொண்ட உயிரினங்களின் படங்களைத்தான்...!

முதன் முதலில் நாம் பார்க்கவேண்டியது கண்டிப்பாக இந்தப்படத்தைத்தான்...! ஏனென்றால் கட்டுரையின் தலைப்பு அப்படி...!

வெறும் இரண்டு படங்களில் மட்டுமே எனது கேமராவில் சிக்கிய இந்த உயிர், ஒருவகை வெட்டுக்கிளி போன்றதுதான் என்றாலும், ஒன்றரை செ.மீ.க்கும் குறைவான நீளமுடைய இந்தப்பூச்சி லேப்டாப்பில் பார்த்தபோது மிக அதிகமான வியப்பை உண்டாக்கியது. நீங்களும் பாருங்கள்... நிச்சயம் வியந்து போவதோடு, பதிவுக்கான தலைப்புகூட சரிதான் என்பீர்கள்...! இயற்கையின் எல்லையற்ற அற்புதம் நிச்சயம் எல்லையில்லாதது என்பது சந்தேகமற்ற விஷயம்தான்...!
இதேபோல இயற்கையின் மற்றொரு வில்லங்கம் அடுத்து நீங்கள் காணப்போவது. ஒன்றரை செ.மீ நீளமுள்ள இந்த பூச்சியினத்தின் முதுகை கொஞ்சம் உற்றுப்பார்த்து நீங்கள் பார்த்த ஏலியன்ஸ் படங்களையெல்லாம் ஒருமுறை நினைவு கூறுங்கள்...!அடுத்து ஒரு செ.மீட்டருக்கும் குறைவான நீளத்திலிருந்த இந்த ஸ்பைடரைப்பாருங்கள்... இதில் வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றம் ஏதாவது தெரிகிறதா என்று செக்கப் செய்து கொள்ள வேண்டியது உங்கள் கண்கள்தான்...!

அடுத்து மூன்று கொம்புகளை உடைய இந்த சிறிய வகை வண்டினத்தைப்பாருங்கள்... வெறும் 5மி.மீ அளவுகூட இல்லாத இந்த சிறிய வகைப்பூச்சியின் தோற்றம் குளோசப் ஷாட்டில் என்னே அற்புதம்?... இரண்டு கொம்புகள் வழக்கமான தோற்றத்துடனும், மூன்றாவது ஒரு கொம்பு உடலின் முழு நீளத்திற்கு ஏற்ப முதுகுப்பக்கம் நீண்டிருப்பதுவும் தலைப்புக்கு சுவாரசியம் கொடுக்கும் விஷயம்தான்...!
கேட்டர் பில்லர்... உலகம் முழுவதும் நிரம்பிக்கிடக்கும் இதன் வித்தியாசமான தோற்றங்கள் அழகு, ஆச்சர்யம், அருவெறுப்பு, பயம் என்று பலவித உணர்வுகளையும் உண்டாக்கக்கூடியது என்றாலும் எனது கேமராவில் சிக்கிய இந்த இரண்டு கேட்டர் பில்லரையும் இந்தத்தலைப்பில் சேர்ப்பதுதான் பொருத்தம் என்று எனக்குப்பட்டது.


எந்த வகையைச்சார்ந்தது இந்தப்பூச்சி என்றே தெரியாவிட்டாலும் இதன் தோற்றம் சுவாரசியமான ஏலியன்ஸ் விஷயங்களுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்று நம்பலாம்தானே?...!வெறும் பூச்சிகளில் மட்டுமல்ல இயற்கை நடத்தும் வில்லங்க விளையாட்டு... ஒரு சாதாரண புல்லில் 4 மி.மீட்டருக்கும் குறைவான அளவில் பூத்திருந்த இந்தப்பூவை பாருங்களேன்...


வேற்றுக்கிரகவாசிகளும் இயற்கையின் வில்லங்கமும்தானே இது?...

இன்னும் நிறைய நிறைய சொந்தப்படங்களோடு மீண்டும் சந்திப்போம்...

பின்குறிப்பு – படங்கள் அனைத்தும் சொந்தப்படைப்பு...