SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, November 23, 2013

இரண்டாம் உலகம் - A Selva Ragavan Film...!!!


ஒரு காலத்தில் ரிலீஸ் ஆன அன்றே எல்லா படங்களையும் பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு காலகட்டத்துக்குப்பிறகு சினிமா பார்ப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டவன். இணையதளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பல காலகட்டங்களில் பல படங்களுக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்தும், யாரோ பல கோடிகள் கொட்டி எடுக்கும் படத்தை நாம் ஏன் நிறை குறைகளை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரைவிமர்சனம் மட்டும் எழுதாமலேயே இருந்தேன்.

குறிப்பாக சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ‘’பாக் மில்கா பாக்’’ மற்றும் ‘’ராஜா ராணி’’ ஆகிய படங்களுக்குக்கூட, விமர்சனம் எழுதவேண்டும் என்று எழுந்த ஆவலையும் எனக்குள்ளேயே கட்டுப்படுத்திக்கொண்டேன்.

எல்லாவற்றையும் மீறி இன்று நான் பார்த்த ‘’இரண்டாம் உலகம்’’ படம் என்னை விமர்சனம் எழுதவேண்டிய கட்டாய மனநிலைக்கு தள்ளியது ஏன் என்று தெரியவில்லை.

இரண்டாம் உலகம் படம் நவம்பர்-22ல் ரிலீஸ் என்று தெரிந்ததிலிருந்து இரண்டு வாரங்களாகவே இதை பார்க்கவேண்டும் என்று ஒரு ஆவல். செல்வராகவனின் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் இதே போன்றதொரு ஆவலை ஏற்படுத்தி என்னை ஏமாற்றிய படம். அதுவாவது இடைவேளை வரை மிக மிக அருமையாக கொடுக்கப்பட்டிருந்த படம். அதில் இடைவேளைக்கு முன் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியாவை பைத்தியம் போல சிரிக்கவிட்டு ஓடவிட்டு நமக்கு ஒரு ஹின்ட் கொடுத்திருந்தார் செல்வா. இடைவேளைக்குப்பிறகு ஏனாதானோவென்று சொதப்பி, இறுதியில் ஒரு நிறைவில்லாத... அழுத்தமில்லாததொரு முடிவைக்கொடுத்து முதல்பாதியின் அங்கீகாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கியிருந்தார் செல்வராகவன்.

இவருடைய பல படங்களிலும் ஹீரோக்களை இவருடைய சாயலில் சோடாபுட்டி கண்ணாடியுடனோ... இல்லை அரை பைத்திய நிலையிலோ காட்டியிருப்பார். இருந்தாலும் யாரடி நீ மோகினி படத்தை முதன் முதலில் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் திரிஷாவை வைத்து செல்வராகவன் இயக்கியிருந்ததை பார்த்து படத்தில் அவருடைய டச் இல்லாமல் முழுப்படமுமே ரசிக்கும்படியாக இருந்ததைக்கண்டு வியந்துபோய் நின்றேன்.

மயக்கம் என்ன படம் பார்த்தபோது எதற்கு தனுஷின் கேரக்டரை இடையில் ஒரு சைக்கோ போல சித்தரித்திருக்கிறார் என்பது புரியாமலேயே... ஓகே... இது வழக்கமான செல்வராகவன் டச்தானே என்று டைஜஸ்ட் பண்ணிக்கொண்டேன்.

தமிழின் பிரம்மாண்டமான பேண்டஸி திரைப்படம் என்ற முன்னோட்டம் இரண்டாம் உலகம் மீதான எனது ஈர்ப்பை அதிகரித்து, செல்வராகவன் டச் மீது எனக்கிருந்த எரிச்சலையும் தாண்டி என்னை தியேட்டருக்கு இழுத்துச்சென்றது. சரி... எப்படியும் முதல் பாதி மட்டுமாவது உருப்படியாய் இருக்கும். அண்ணாத்தை எப்படியும் இரண்டாம் பாதியில்தானே அவருடைய டச்சை காமிப்பார் என்ற எண்ணத்தில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு தியேட்டருக்குச்சென்றேன்.


ஒரேயொரு ஆறுதல்... நான் இப்போதிருப்பது தென் தமிழகத்தில் என்பதால் முதல் நாள் காட்சியில்கூட அரங்கம் நிறையவில்லை. பிளாக்கில் டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியமில்லை.

தொழில் நுட்ப விஷயங்களில் மிகுந்த சிரத்தை எடுத்திருந்து பிரமிப்பை உண்டாக்கியிருப்பதும், வைரமுத்துவின் பாடல் வரிகளும், அனுஷ்காவின் தோழியாக வருபவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மட்டுமே படத்தில் கொஞ்சம் ஆறுதல். இவ்வளவு உழைத்திருக்கும் தொழில்நுட்பம், செல்வராகவன் டச்சில் தொலைந்துபோய் தியேட்டரிலிருந்து வெளியே வரும்போது எரிச்சலடைந்த மனநிலையுடன்தான் வரவைக்கிறது.

அனுஷ்காவை முதன் முதலில் வேற்று கிரகத்தில் (இரண்டாம் உலகம்) காட்டும்போது அவதார் படத்தில் வருவது போன்ற ஒரு நாயுடன் அவர் மோதும் காட்சி அட குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி படம்போல இருக்கும்போல என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் கடைசியில் படத்தை அந்த ரகத்திலும் சேர்க்கமுடியவில்லை. ஆரம்ப நிமிடங்களில் பூமியில் நடக்கும் காதலையும், இரண்டாம் உலக விஷயங்களையும் மாற்றி மாற்றி காட்டும்போதே செல்வராகவன் வேலையை காமிக்கிறாரோ என்ற டவுட் லேசாக எட்டிப்பார்த்தது.

ஆரம்பத்தில் சரியான பழம் கேரக்டரில் ஆர்யாவை காட்டிவிட்டு பின்னர் ஒரு சில காட்சிகளுக்குள்ளாகவே லவ்வர் பாய் கேரக்டருக்கு அவரை மாற்றியிருப்பது கொஞ்சம் உறுத்தல்தான் என்றாலும் ஆர்யாவின் இயல்பான நடிப்பாய் அந்த கேரக்டர் திரைஉலகத்தில் இப்போது மாறிப்போயிருப்பதால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரகம்தான். டாக்டர் படிக்கும் காதலிக்காக அவர் செல்லும் மெடிக்கல் கேம்புக்கு ஆர்யாவும் செல்வதும், அங்கே லேடி புரோஃபசரை காதலிப்பதாய் மயக்குவதும் என்று பழைய சமாச்சாரங்கள் நிறைய நிறைந்து கிடக்கின்றன.

இரண்டாம் உலகத்தின் கதை முழுவதும் கொஞ்சம்கூட அழுத்தம் இல்லாமல் ஏனாதானோவென்று நிரம்பிக்கிடக்கிறது. காதலே இல்லாத கிரகமாம் அது. அங்கே பெண்கள் அடிமைகளாக... வெறும் போகப்பொருளாக மட்டுமே நடத்தப்படுகிறார்களாம். அங்கு ஒரு உருப்படாத பெண் பித்தர் ராஜா. அங்கு அம்மா என்று பெண் தெய்வமாய் ஒரு வெளிநாட்டு பெண் முகம். அந்த தெய்வம் அந்த கிரகத்தில் காதல் மலர்ந்தால்தான் பெண்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடக்கிறது. பெண் தெய்வம் என்று ஒரு கேரக்டரை சித்தரிக்கும்போது அதன் முகத்தில் எப்படியொரு தேஜஸ் இருக்கவேண்டும் என்ற சிந்தனை ஏதுமில்லாமல் ஏதோ பிச்சைக்காரி போன்றதொரு முகத்தை தேர்ந்தெடுத்திருப்பது பின்னடைவு.

இரண்டாம் உலகத்திலும் ஒரு ஆர்யா, அனுஷ்கா ஜோடி. ஆனால் அங்கு அனுஷ்காவுக்கு ஆர்யாவை பிடிக்கவில்லை. ஒருகட்டத்தில் ராஜாவிடம் சிறைப்படும் அனுஷ்காவை காப்பாற்ற ராஜாவிடம் பேசும் ஆர்யாவிடம், நீ சிங்கத்தை வேட்டையாடி ரத்தம் சொட்டச்சொட்ட அதன் தோலை எடுத்துவா... அந்தப்பெண்ணை விட்டுவிடுகிறேன் என்கிறார் ராஜா. ஆர்யாவும் மனித முகத்துடன்கூடிய இரண்டாம் உலக சிங்கமும் மோதும் காட்சி தமிழ் சினிமாவை தரம் உயர்த்தியிருந்தாலும் அந்தக்காட்சியில் பின்னணி இசை படு சொதப்பல். (அவ்வளவு சீரியஸான சண்டைக்காட்சிக்கும் படம் முழுக்க காதலுக்கு கொடுத்திருக்கும் அதே பின்னணி இசை போன்ற இசையை கொடுத்தது யாருடைய செலக்சன் என்று தெரியவில்லை).

செல்வராகவனுக்கு பெர்சனல் லைஃபில் அவருடைய காதலி பட்டென்று இறந்திருப்பார் போல...! அந்தத்தாக்கம் இன்னும் குறையவில்லையா என்னவென்று தெரியவில்லை... இந்தப்படத்திலும் பல இடங்களில் 7G படம் ஞாபகம் வருவது தவிர்க்கமுடியவில்லை. பிட்டு படம்போல கட்டியணைத்து புரளும் பூமியின் அனுஷ்கா, ஆர்யா காதல் ஜோடியில், அந்தக்காட்சியின் இறுதியிலேயே அனுஷ்கா வெட்கப்பட்டு ஓடும்போது தவறி விழுந்து தலை கல்லில் மோதி பட்டென்று உயிர்விடுவது செல்வராகவன் டச். அதைத்தொடர்ந்து ஆர்யாவின் தந்தை அவருடன் ஆவியாய் வந்து பேசுவதும், காதலர்களுக்கு இறப்பே இல்லை...உனது காதலியைத்தேடு... அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதுவும், தொடர்ந்து ஆர்யா தாடி வைத்துக்கொண்டு சோடாபுட்டி கண்ணாடியோடு அலைவதும் இடைவேளையோடு எழுந்துபோய்விடலாமா என்ற எண்ணத்தை கொடுத்தும் இரண்டாம் பாதியிலாவது இரண்டாம் உலகத்தில் ஏதாவது இருக்குமா என்று தொடர்ந்து பார்த்தேன்.

பூமியில் தனது இறந்த காதலியைத்தேடும் ஆர்யாவும், இரண்டாம் உலக ஆர்யா அவரை தனது உலகத்துக்கு கூட்டிச்செல்வதும் அதற்காக இரண்டாம் உலக பெண் தெய்வம் வானத்தை நோக்கி பூஜை செய்வதுமான காட்சிகள் அனைத்துமே தலைசுற்றும் ரகம். போதாக்குறைக்கு இரண்டாம் உலகத்தை காட்டும் காட்சிகள் எல்லாவற்றிலும் தூரத்தில் பல கிரகங்கள் தெரிவது போல காட்டுவதும், வானத்தில் எப்போதுமே அவதார் பறவைகள் பறந்து கொண்டிருப்பதும் சலிப்பூட்டும் காட்சிகள்தான்...! அதற்கு கொஞ்சம் அளவுகோல் வைத்திருக்கலாம். படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா தவிர மீதியனைத்துமே புதுமுகங்களையும் வெள்ளைக்கார முகங்களையும் வைத்து எடுத்தும் அதுவும் வீண் முயற்சியாய்த்தான் தோன்றுகிறது.

உப்பு சப்பில்லாத வில்லன்கள் கூட்டம் எல்லாவற்றையும்விட சொதப்பல். பெண் தெய்வத்தை கடத்திச்செல்ல வரும் வில்லன்கள் கூட்டத்தை இரண்டாம் உலக ஆர்யா பந்தாடுவதும், அந்தச்சண்டைக்காட்சியில் அனுஷ்காவும், ஆர்யாவும் பேசிக்கொண்டே சண்டை போடுவது போல காட்சியமைத்திருப்பதும் ஆங்கில படங்களை காப்பியடிக்க முயன்று தோற்றுப்போன தோற்றத்தைத்தான் உண்டு பண்ணுகிறது.

பூமியின் ஆர்யாவுக்கும், இரண்டாம் உலக ஆர்யாவுக்கும் இடையிலான அனுஷ்கா சம்பந்தமான காட்சிகள் படத்தை சீரியஸ் ரகத்தில் சேர்ப்பதா?... இல்லை காமெடி ரகத்தில் சேர்ப்பதா என்று குழப்பத்தைத்தான் உண்டு பண்ணுகிறது. போதாக்குறைக்கு இரண்டாம் உலகத்தின் மதுபாரும் அங்கும் ஒரு காதல் தோல்வி பார் டான்சும் ஹாலிவுட் படைப்பாளிகள்கூட யோசிக்காத புதுரகம்(!!!). 

இரண்டாம் உலகத்தில் காதல் மலர வேண்டும். பூக்கள் மலர்வதை நான் பார்க்கவேண்டும். இரண்டாம் உலகத்தை காப்பாற்ற ஒரு மாவீரன் வரவேண்டும் என்றெல்லாம் அந்தப்பெண்தெய்வம் பில்டப் கிளப்புவது எல்லாம் எதற்கென்றே தெரியாமல் சப்பென்று முடிந்திருக்கிறது.

இரண்டாம் முறையும் பெண் தெய்வத்தை கடத்திச்செல்லும் வில்லன்கள் கூட்டம் அவரை ஒரு இடத்தில் கட்டி வைத்திருக்க, அந்தப்பெண் தெய்வம் புகையாய் எல்லா இடத்திலும் பரவவிட்டு வில்லன் கூட்டத்தின் காவலாளிகளை செயலிழக்கச் செய்வது போன்ற காட்சியில் வசனங்கள் மெட்ராஸ் பாஷை போன்று படு சொதப்பல்...!

இறுதியில் எப்படியெல்லாமோ குட்டையை குழப்பி பூமியைச் சேர்ந்த ஆர்யாவை மூன்றாம் உலகத்துக்கு அனுப்பி அங்கு ஒரு அனுஷ்காவை சந்திக்க வைத்து நம்மை வெறுப்பேற்றி முடித்திருக்கிறார் செல்வராகவன்...!

அடுத்து செல்வராகவன் படத்துக்கு கால்ஷீட் கொடுக்கும் நடிகர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக்கொள்வது நல்லது...!

தைரியமிருப்பவர்கள் தியேட்டருக்குச்சென்று முழுப்படத்தையும் பாருங்கள். மற்றபடி என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தானும் தெளிவில்லாமல், பார்ப்பவர்களையும் தெளிவடையவிடாமல், அரைகுறை மனநிலையிலேயே காட்சிகளை அமைக்கும் செல்வராகவன் டச்தான் இந்தப்படம். செல்வராகவன் படங்கள் சிறந்த அறிவாளிகளுக்கு மட்டுமே புரியும் என்று யாராவது சொன்னால் அவர்களிடம் நான் ஒரு சாமான்ய ரசிகன் மட்டுமே என்பதைத்தான் எனது பதிலாகக்கூறமுடியும்.

படத்தின் இடைவேளையின்போது ''செல்வராகவன் வேலைய காமிச்சிட்டான்யா'' என்று முனுமுனுக்கும் ரசிகர் குரலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது அடுத்த ஷோவுக்காக காத்திருப்பவர்களிடம் ''அய்யோ... உள்ள போய் மாட்டீக்காதீங்க... கொத்து கொத்துன்னு கொத்தியிருக்காய்ங்க'... என்ற குரலும்தான் என் காதில் விழுந்த ரிசல்ட்...!!!

சுருங்கச்சொன்னால் இது உண்மையிலேயே “A Selva Ragavan Film”…!!!

5 comments:

 1. படத்தின் இடைவேளையின்போது ''செல்வராகவன் வேலைய காமிச்சிட்டான்யா'' என்று முனுமுனுக்கும் ரசிகர் குரலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது அடுத்த ஷோவுக்காக காத்திருப்பவர்களிடம் ''அய்யோ... உள்ள போய் மாட்டீக்காதீங்க... கொத்து கொத்துன்னு கொத்தியிருக்காய்ங்க'... என்ற குரலும்தான் என் காதில் விழுந்த ரிசல்ட்...!!!

  அந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம்
  நண்பன் ஒருவன் இருக்கிறான்
  அவனைக் கூட இந்தப் படத்தைத் தூக்கியவுடன்
  பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. லேசாக எட்டிப்பார்த்த டவுட் உறுதியாகி விட்டதா...?

  விரைவில் சின்னத்திரையில்... (?)

  ReplyDelete
 3. இந்தாளு ஒரு ஒலகத்துல எடுக்குற படமே சகிக்க முடியல ..இதுல ரெண்டாவது ஒலகமாம். தலைப்பை பார்த்தாவது கொஞ்சம் சூதானமா இருந்துருக்கலாமே ... போங்க நீங்க ...

  ReplyDelete
 4. படத்தின் இடைவேளையின்போது ''செல்வராகவன் வேலைய காமிச்சிட்டான்யா'' என்று முனுமுனுக்கும் ரசிகர் குரலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது அடுத்த ஷோவுக்காக காத்திருப்பவர்களிடம் ''அய்யோ... உள்ள போய் மாட்டீக்காதீங்க... கொத்து கொத்துன்னு கொத்தியிருக்காய்ங்க'... என்ற குரலும்தான் என் காதில் விழுந்த ரிசல்ட்...!!!//

  இப்பிடி சொன்னதுனாலதான் நான் பக்கத்து சந்துல விழுந்து ஓடி வந்து தப்பிச்சேன்.

  ReplyDelete
 5. இது செல்வராகவன் படம்.. இப்படித்தான் இருக்கும்...
  ஒருத்தர் கூட நல்லாயிருக்குன்னு சொல்லாத விமர்சனம் இந்தப் படத்துக்கு மட்டும்தான்...

  ReplyDelete