SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, November 4, 2013

வண்ண வண்ண உயிர்களும் வியக்க வைக்கும் அறிவியலும்!

அறியாத உயிர்களில் ஏற்கனவே பலவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அடுத்து இதை எப்படி வகைப்படுத்தலாம் என்று யோசித்தபோது கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தொகுத்து வைத்திருந்த எனது தகவல் பெட்டகத்தில் எனது கண்ணில் பளிச்சென்று பட்டது இந்த வண்ண வண்ண உயிரினங்கள்தான்...

சரியான விகிதத்தில் தொகுக்கப்படும் வண்ணங்கள் எப்போதுமே மனிதர்களால் ரசிக்கப்படக்கூடிய விஷயமாகத்தான் இருக்கும். அதிலும் இயற்கையாகவே உயிரினங்களில் இதுபோன்ற கவர்ச்சிகரமான வண்ணங்கள் அமைந்திருந்தால்...

நிச்சயமாக அவை செம க்யூட்டாகத்தானே இருக்கும்?...

அதுதான் நாம் இப்போது பார்க்கப்போவது...

ஏற்கனவே நாம் வெள்ளை காக்கா பற்றிய செய்திகளை பார்த்திருக்கிறோம். இந்த காக்காக்களிலேயே இன்னும் கலர்ஃபுல்லாக ஏதாவது இருக்கிறதா?...

ஏன் இல்லை?...தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் ஶ்ரீலங்காவில் இருக்கும் இந்த கலர்ஃபுல் காக்கா வகையைப் பாருங்கள்...


ஶ்ரீலங்கா மேக்பை அல்லது சிலோன் மேக்பை என்பதுதான் இலங்கையின் பசுமையான மழைக்காடுகளில் வசிக்கும் இந்த காக்கா குடும்பத்து பறவையின் பெயர்...! 


இவைகள் பூச்சிகள், தவளைகள் மற்றும் பல்லிகளோடு சேர்த்து பழங்களையும் உண்ணக்கூடிய ரகம்தான். யுரேசியன்()யூரோப்பியன் மேக்பை எனப்படும் இதே குடும்பத்தைச்சேர்ந்த மற்றொரு பறவையைப் போலவே இதுவும் 42 முதல் 47செ.மீ வரை வளரக்கூடியவை.


இந்தியாவில் வசிக்கும் ரூஃபஸ் ட்ரீ பை எனப்படும் மற்றொரு வகை காக்காவைப் பாருங்கள்... இந்தப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது...

இதேபோல ஆஸ்திரேலியன் மேக்பை என்றொரு காக்கா இனமும் இருக்கிறது
இது கலர்புல்லாக இல்லாவிட்டாலும், 3அடி வரையிலும் சிறகு விரிக்கும் நீளம் கொண்ட இந்த கருப்பு வெள்ளை காக்காவும்கூட நிச்சயம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான்.


ஆரன்ஞ்ச் பேக்டு டிராபியல்...

பார்ப்பதற்கு ஆரன்ஞ்ச் கலர் காக்கா போல இருந்தாலும் இது காக்கா இல்லை. சிறிய, மீடியம் மற்றும் பெரிய சைஸ் பாடும் பறவைகளைக்கொண்ட Icteridae எனும் குடும்பத்தைச்சேர்ந்ததுதான் இந்தக்கலர்ஃபுல் பறவை.


கயானா, பிரேசில், பராகுவே, பொலிவியா, பெரு, ஈகுவடார் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன இப்பறவைகள்...!
புல்லாக்ஸ் ஓரியல் என்பதுகூட இதே Icteridae குடும்பத்தைச்சேர்ந்த பறவைதான் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


யெல்லோ கிரௌன் கோனோலெக்...
கலர்புல்லான காக்காபோல தோற்றமளிக்கும் இந்தப்பறவை, உண்மையில் புஷ் ஷ்ரைக் குடும்பத்தைச்சேர்ந்த பாடும் பறவை வகையாகும்.


முக்கால் அடி நீளம் வளரக்கூடிய இந்தப்பறவை ஆப்பிரிக்க பகுதிகளில் மனிதர்கள் வசிக்கும் இடங்களில்கூட சுற்றித்திரிபவைதான்...! 
புதர்களிலும், நிலத்திலும் இருக்கும் பூச்சிகளை உணவாகக்கொள்ளும் இந்தப்பறவை சில நேரங்களில் கூவுவதும், சிலநேரங்களில் கா...க்கா... என்று கத்துவதும் உண்டாம்...!


ரீஜென்ட் போவ்வர் பறவை...
கருப்பு மஞ்சள் காக்கா போல தோற்றமளிக்கும் இது ஆஸ்திரேலியப் பகுதிகளில் வாழும் ஆண் போவ்வர் பறவை. ஆண், பெண் இரண்டுமே கிட்டத்தட்ட 25செ.மீ வரை வளரக்கூடியவைதான் என்றாலும் போவ்வர் பறவைகளில் பெண் இனத்துக்கு கவர்ச்சியான நிறங்கள் இல்லை என்பதுவும், ஆண் பறவையின் நிறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிறத்தைக்கொண்டது என்பதுவும் குறிப்பிடத்தக்க ஆச்சர்யம்.
Satin Bower Bird - Male & Female...
இதில் ஆண் இனம்தான் கவர்ச்சியான நிறங்களைக் கொண்டிருப்பதோடு, பெண் பறவையைக் கவர்வதற்காக இவை கட்டும் போவ்வர்களில், இவற்றின் வாயிலிருந்து சுரக்கும் ஒருவகை நீலநிற எச்சில்பெயிண்ட்டைக் கொண்டு அலங்கரித்து வைக்குமாம்...!


வில்லேஜ் வீவர்...

அட... நம்ம ஊரு துக்கணாங்குருவி வகை மாதிரிதாங்க இதுவும். தலைகீழாகத் தொங்கும் கூட்டைக் கட்டுவதுதான் இதன் தனித்தன்மை.
ஆப்பிரிக்காவின் சஹாராப் பகுதிகளுக்கு அருகில் காணப்படும் இந்த வகைப்பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய தன்மையைக் கொண்டது என்பதால் ஒரே ஒரு பனை மரத்தில்கூட ஐம்பதுக்கும் மேற்பட்ட கூடுகளைக் கட்டக்கூடியது.

இதில் பிரீடிங்(இனப்பெருக்கம் பண்ணக்கூடிய) ஆண் பறவை மற்றும் நான் பிரீடிங் ஆண் பறவை என இரண்டுவகை ஆண் பறவைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


பேஸ்ஸரினி டானேஜர்...
கரீபியன் பகுதிகளில் வீடுகளில் கூடுகட்டி வாழும் இந்தப்பறவை பாடும் பறவை வகையைச் சேர்ந்தது
கார்லோ பேஸ்ஸரினி என்றும் இதற்கு ஒரு பெயரிடப்பட்டிருக்கிறது.
அரை அடி நீளம் வரை வளரக்கூடிய இந்தப்பறவைகளில் ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்குமான நிற வித்தியாசம் ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத ஆச்சர்யம் என்பது குறிப்பிடத்தக்கது...!


குலா பறவை...
ஃபீஜி தீவை பிறப்பிடமாகக்கொண்ட கிளி வகையைச் சேர்ந்த இந்தப்பறவை 20செ.மீ வரை வளரக்கூடியவை

இவைகளின் அழகான நிறத்தின் காரணமாக இவை மேற்கத்திய நாடுகளில் சிறந்த பரிசுப்பொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் அறிவியல் பெயர் காலரெட் லோரி. இதில் ஆண் மற்றும் பெண் பறவைகளின் நிறத்தில் அதிக வேறுபாடுகள் இல்லையெனினும், பாலியல் வேறுபாடுகளைக்காட்டும் சிலவகை அமைப்புகளும் ஆண் பறவைக்கு இருக்கின்றன.


ஸ்கார்லெட் இபிஸ்...
(நல்லவேளையாக இன்னும் யாரும் இதை மேல்மருவத்தூர் சக்தி அம்மாவாக மாற்றவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி...!!!)


தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வசிக்கும் இந்த வகைப்பறவை இபிஸ் வகையில் இருக்கும் மற்ற 27வகையான பறவைகளைப் போன்றே உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் இதன் ஸ்கார்லெட் நிறம்தான் இதை மற்றவற்றிலிருந்து தனித்துக்காட்டும் அற்புத விஷயமாகும்... இது இபிஸ் மற்றும் ஸ்பூன்பில்ஸ் என்ற இரண்டு பிரிவைக்கொண்ட மிகப்பெரிய கொக்கு வகையைச் சேர்ந்த பறவைதான்...


கிட்டத்தட்ட இரண்டு அடி நீளமும், ஒன்றரை கிலோ எடை வரையிலும் வளரும் இந்தப்பறவையில் ஆண் பறவையின் அலகு, பெண் பறவையைவிட 22% அதிக நீளம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது...


அமெரிக்கன் வெள்ளை இபிஸ்ம் இதுவும் ஒரே மாதிரியான உடலமைப்பை உடையவை என்பது இந்த படத்தைப்பார்த்தால் உங்களுக்கும் புரியும்...! 
இருந்தாலும் இவை இரண்டிலும் நேச்சுரல் கிராஸ் பிரீடிங் நடப்பதில்லை என்பது அறிவியல் தரும் ஆராய்ச்சி செய்தி...!


பிளெமிங்கோஸ்...

நாம் காலம் காலமாக அறிந்த "ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் கொக்கு"... என்ற வார்த்தைக்கு இவைதான் சிறந்த உதாரணம். இதன் ஒற்றைக்காலில் நிற்கும் குணத்துக்கு காரணம் என்ன என்பதை இன்னமும் அறிவியலால் தெளிவுபடுத்த இயலவில்லை...!

கரைப்பறவை எனப்படும் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்ட இந்தப் பறவை அமெரிக்காவில் நான்கு வகையான இனமாக வாழக்கூடியவை. நாம் ஏற்கனவே பார்த்த இபிஸ் மற்றும் ஸ்பூன் பில்ஸ் பறவைகள்கூட இவற்றின் நெருங்கிய சொந்தமாகவே கருதப்படுகிறது.


இதனுடைய உணவு வகையிலிருந்து பெறப்படும் பீட்டா கரோட்டின் சத்தினால்தான் இவை பெரும்பாலும் பின்க் முதல் டார்க் ரெட் வரையிலான நிறத்தைக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பீட்டா கரோட்டின் குறைபாட்டினால்தான் பல பறவைகள் டார்க் ரெட்டாக மாறாமல் பின்க் நிறத்தில் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

இதன் சில வகைகளைப் பாருங்கள்...

கிரேட்டர் ஃபிளெமிங்கோ...

ஜேம்ஸ் ஃபிளெமிங்கோ...

கரீபியன் ஃபிளெமிங்கோ...

ஆன்டியன் ஃபிளெமிங்கோ...


கோல்டன் பெசன்ட்...


சைனீஸ் பெசன்ட் என்றும் அழைக்கப்படும் இந்த வகைப்பறவைகள் நாம் அறிந்த கோழிகள்கூட அடங்கிய Phasianidae என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை மேற்கு சைனாவின் மலைப்பிரதேச காடுகளில் வசிப்பவை என்றாலும் யு.கே மற்றும் உலகின் இன்னும் சில பகுதிகளிலும்கூட அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.


மூன்று முதல் மூன்றரை அடி நீளம் வரை வளரக்கூடிய இதன் ஆண் பறவைகளின் வால் நீளம் மட்டுமே மொத்த நீளத்தில் மூன்றில் இரண்டு பங்குவரை இருக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 


பெண் பறவைகளுக்கு ஆண் பறவை போன்று கவர்ச்சியான நிறங்கள் இல்லை என்றாலும் கால்களும், அலகும் இரண்டுக்குமே மஞ்சள் நிறம்தான்...!
ஜப்பானீஸ் கிரீன் பெசன்ட்...

8 முதல் 12 முட்டைகள் வரை இடும் இந்தப்பறவையின் அடைகாக்கும் காலம் 22 முதல் 24 நாட்கள்வரை...


பழ புறா...

புறா மற்றும் பீஜியான் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகைப்புறாக்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் வெவ்வேறு நிறங்களுடன் இருப்பது கண்கொள்ளா அழகுதான்...! இதன் பெயரிலேயே இதன் முக்கிய உணவு என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்...


தென்கிழக்கு ஆசியாவின் காடுகள்தான் இதன் முக்கிய உறைவிடம்... இதில் பலவிதமான வகைகள் நிறைந்து கிடந்தாலும் பெரும்பாலானவை பற்றிய முழு ஆராய்ச்சி இன்னமும் முடிவடையவில்லை என்றாலும் நமக்குத்தேவை இதன் சிலவகை அழகை ரசிப்பது மட்டும்தானே?...!!!
வயலெட் கிரௌன் வுட்நிம்ப்...

இவை கவுதமாலா முதல் வடக்கு கொலம்பியா மற்றும் மேற்கு வெனிசுலா வரை காணப்படும் சிறியவகை ஹம்மிங் பறவை இனத்தைச் சேர்ந்தவை. இதில் ஆண்பறவை 10.2 செ.மீ நீளமும், 4.5 கிராம்(!) எடையும் வளரக்கூடியவை...


பலவகைப்பூக்களில் இருக்கும் நெக்டர் எனப்படும் சர்க்கரைத்தன்மை மிகுந்த திரவம்தான் (பூக்களில் இருக்கும் தேன்) இதன் முக்கிய உணவு என்றாலும், பல நேரங்களில் புரதச்சத்து தேவைக்காக சிலவகைப்பூச்சிகளையும் இவை உண்பதுண்டு.


இதில் கூடுகட்டுதல் மற்றும் அடைகாத்தல் இரண்டுமே பெண்பறவையின் வேலைதான். ஒன்று அல்லது இரண்டு முட்டைகளையிடும் இவை 15 முதல் 19 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றன.

இதன் சைஸ் என்னவென்று தெரிந்துகொள்ள இந்த படத்தைப் பாருங்கள்...!


கலர்ஃபுல் என்ற கான்செப்ட்டை எடுத்துக்கொண்டால் அதில் பறவை இனமே இன்ஃபினிட்டி ரேஞ்சுக்கு நீண்டு கொண்டேயிருக்குமளவு பலவகைகளைக் கொண்டிருப்பதால் முடிந்தவரை எனக்குத்தெரிந்த... நான் ரசித்த... சிலவகை பறவைகளோடு இதை நிறுத்திக்கொள்கிறேன்...

எப்படி பறவைகள் என்றால் வண்ணத்துக்கு பஞ்சமில்லையோ, அதேபோலத்தான் வண்ணத்துப்பூச்சிகளிலும் என்றாலும், இதில் நான் ரசித்த... இதுவரையிலும் நீங்கள் பார்த்திராத... மிகச்சிலவகையை மட்டும்தான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்...

கடைசியாக நாம் பார்த்த பறவையின் வண்ணத்துக்கு கொஞ்சமும் சளைக்காத இந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணத்தைப் பாருங்கள்...


உலகிலேயே மிக அழகான வண்ணத்துப்பூச்சியாக இதுதான் பெரும்பாலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்...!


கிரீன் மேண்ட்டில் பட்டர்ஃபிளை என்பதுதான் இதன் பொருத்தமான பெயர் என்றாலும் இதன் அறிவியல் பெயர் கேரியா மேன்ட்டினியா என்பதுதான்...!


மழைக்காடுகள்தான் இதன் முக்கிய வசிப்பிடம் என்பதால் இதனை பிறபகுதிகளில் காண்பது அறிதான விஷயம்தான்...

ஆர்கஸ் டுகாலிஸ்...

இதுவும் மேலே பார்த்தது போன்றே மிக கலர்ஃபுல்லான ஒரு வண்ணத்துப்பூச்சிதான்...
பிரேசிலை இருப்பிடமாகக்கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சிகள் இதன் ஷைனிங் நிறத்தால்தான் நம்மை கவர்ந்திழுக்கிறது...மேலதிக தகவல்களை என்னால் திரட்டமுடியவில்லை என்றாலும் இதன் படங்கள் நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும் என்றே நம்புகிறேன்...


லீஃப் மைனர் மோத்...
நான் ஏற்கனவே போன பதிவிலேயே வண்ணத்துப்பூச்சிக்கும், மோத்துக்குமான வித்தியாசத்தை தெரிவித்திருந்தேன்...
இதில் நாம் பார்ப்பது அழகான மினுமினுக்கும் கோல்டன் நிறத்தைக்கொண்ட மோத்...

10 முதல் 13மி.மீ வரை இறக்கை நீளம் உடைய இந்த மோத்கள் பிப்ரவரி கடைசி முதல் மே கடைசி வரையிலான காலகட்டத்தில், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உற்பத்தியாகி பறக்கக்கூடிய வகையாகும்...


உலக வரைபட மோத்...
Eucyclodes semialba என்ற அறிவியல் பெயர்கொண்ட இந்த மோத்கள் உலகத்தையே தனது முதுகில் சுமக்கும் வல்லமை கொண்டது என்பதை நம்புவீர்களா?...


1861ம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த மோத்கள், உலக வரைபடம் போன்ற பின்புறத்தோற்றத்தை கொண்டிருந்தது இதை பரவலாக பலரும் அறியும்படி ஃபேமஸாக்கியிருக்கிறது...!

பெயிண்ட்டடு வவ்வால்...

Kerivoula Picta என்பதுதான் இந்த ஆரன்ஞ்ச் நிற வவ்வாலின் அறிவியல் பெயர்... இதன் உடலும் வாலும் 5.5செ.மீ வரை சம நீளத்தில் வளரக்கூடியது. இதன் சிறகு விரிக்கும் நீளம் கிட்டதட்ட ஒரு அடி...!


இந்த அழகான கலர்ஃபுல் வவ்வால் உலகில் எங்கிருக்கிறது தெரியுமா?...
இந்தியா, ஶ்ரீலங்கா, புருனே, இந்தோனேஷியா, மலேசியா, சைனா, நேபாள், வியட்நாம்... (கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி இருக்குல்ல?...)

38 கூர்மையான பற்களை உடைய இந்த வவ்வால்கள் அம்மா, அப்பா, பிள்ளைகள் என தனித்தனி குடும்பங்களாக வாழக்கூடியவை...!


அக்கல் டேகே...
(ஏய்... ஏய்... குதிரைய மட்டும்தான் பாக்கனும்...!!!)
இது ரஷ்யாவின் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த சிறப்பு பிரீடு வகைக்குதிரை... இதன் ஷைனிங் நிறமும் தோற்றமும் இதற்கு தங்கக்குதிரை என்று பெயர் பெற்றுத்தந்திருக்கிறது.

பெரும்பாலும் துர்க்மெனிஸ்தானில் வாழ்ந்தாலும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும் இது வளர்க்கப்படுகிறது. உலகம் முழுக்க தற்போது 6600 அக்கல் டேகே குதிரைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.குதிரையை (மட்டும்!) ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...!

இறுதியாக நீங்கள் அறிந்திராத ஒரு எறும்பையும், வண்டையும் மட்டும் அறிமுகப்படுத்தி பதிவினை முடிக்கிறேன்...

பாண்டா எறும்பு...
பாண்டா கரடி நமக்கெல்லாம் தெரியும்... அதன் கருப்பு வெள்ளை நிறமும், புசுபுசு முடியும் நம் கண்முன்னே நிற்கும்.

ஆனால் பாண்டா எறும்பு?...

அதேதான்... பாண்டா கரடி போன்றே நிறமும், முடியும் கொண்டதால்தான் இதையும் பாண்டா எறும்பு என்றழைக்கவேண்டிய நிர்ப்பந்தம்...!


முதன்முதலில் 1938ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த எறும்பு சிலி மற்றும் அர்ஜென்டினாவில் வசிப்பவை. இதன் பெருவலி ஏற்படுத்தும் கடியால் சில நேரங்களில் பசுமாடுகள் இறக்கும் நிலையும் ஏற்படுவதால் இதற்கு ‘’கௌ கில்லர்’’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

கருப்பு வெள்ளையில் பார்ப்பதற்கு பொம்மை போல அழகாகயிருந்தாலும் இதன் ஒரு கடி உங்களை மரணம்வரை அழைத்துச்செல்லக்கூடியது என்பதால் கொஞ்ச நினைக்காமல் தள்ளியே நில்லுங்கள்...!


பாண்டா வண்டு...
Calligrapha amator என்றழைக்கப்படும் இந்த இலை வண்டுகளை பாண்டா வண்டு என்றே அழைக்கலாம் என்பதை இதன் படத்தைப்பார்த்து நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்...!


கனடாவை பிறப்பிடமாகக் கொண்டதோடு மட்டுமில்லாமல் இவைகள் வசிப்பதும் கனடாவில்தான். இதன் முதுகில் இருக்கும் டிசைன் ஒரு கைதேர்ந்த காலிகிராஃபரால் வரையப்பட்டிருப்பது போல இருப்பதுதான் இதன் அறிவியல் பெயருக்கான காரணம்.

இதன் வகையில் இருக்கும் இன்னும் சில வண்டுகளின் அமைப்பையும் நிறங்களையும் பாருங்கள்...!


பதிவின் நீளம் நான் நினைத்ததைவிட அதிகமாய் நீண்டு கொண்டிருப்பதால், இந்த வண்ண வண்ண உயிரினங்களையே தொடர்ந்து பல பாகமாக வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்...

இன்னும் பல சுவாரசியங்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...

மீண்டும் சந்திப்போம்...!

7 comments:

 1. அழகோடும்,சிலது ஆபத்துன்னும் சொல்லிட்டதால ஒதுங்கி நின்னு பார்த்து ரசிச்சேன். இறைவன் படைப்பில் எத்தனை நேர்த்தி!?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்... தங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி...

   Delete
 2. அட்டகாசம்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம்
  அனைவரும் அறியவேண்டி பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. வாவ்.... அசத்தல்..அற்புதமான பகிர்வுகள்...:) தங்கள் ரசனையும், பொறுமையாக எடுத்துக்கூறும் விதமும் பிரமிப்பூட்டுகிறது..தொடருங்கள்..:)

  ReplyDelete