SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, October 7, 2013

கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்!


கருவறை... இந்தப்பெயர் இரண்டு இடங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒன்று அம்மாவின் வயிற்றில் கரு உருவாகி வளர்ந்து உயிராய் ஜனிக்கும் இடம்...

மற்றொன்று கோயில்களில் கடவுள்கள் இருக்கும் இடம்...

அதனால்தானோ என்னவோ ‘’தாயிற்ச்சிறந்த கோவிலும் இல்லை...’’ என்று பாடியிருப்பார்கள்போல...!

அப்படிப்பட்ட தாய் உயிரின் வயிற்றிலிருக்கும் கரு உயிர்களை பார்க்கும சந்தர்ப்பம் தரும் அறிய புகைப்படங்கள்தான் இங்கு நாம் காணப்போவது.

பெரும்பாலும் கருவுக்குள் இருக்கும் ஜீவராசிகளை பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் படங்கள் கிளியரான புகைப்படம் போல இல்லாமல் கருப்பு வெள்ளையில் மங்கலாகத்தான் இருக்கும்.

ஆனால் வளர்ந்து வரும் டெக்னாலஜியின் அடிப்படையில் நேஷனல் ஜியோகிராபிக் சேனலைச்சேர்ந்த ஒரு குழுவினர் பல்வேறு உயிர்களின் கருவறைத்தோற்றத்தையும் அழகான புகைப்படம் போல படம் பிடித்து இயற்கையின் அற்புதத்தை அழகூட்டிக் காட்டியிருக்கிறார்கள்...

4டி அல்ட்ரா ஸ்கேன் என்று சிலர் கூறும் இந்த முறையில் கருவுக்குள் இருக்கும் உயிரின் அற்புதத்தோற்றத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் + டின்னி கேமரா + கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலைகள் உபயோகித்து அசத்தியிருக்கிறார்கள்.

உலகத்தை பார்க்க வரவிருக்கும் இந்தப்புது உயிர்கள் சாந்தமான அல்லது கொடிய என்று எந்த ரகமாக இருந்தாலும் சரி... கருவில் அவைகளின் அழகு அளப்பரியதானதாக ரசிக்கும்படிதான் இருக்கிறது.

டால்பின்...
டால்பின்கள் என்றால் சும்மாவே கொள்ளை அழகுதான்... அதிலும் சிரித்தாற்போல் இருக்கும் அதன் சாந்தமான முகமும், அவை மனிதர்களிடம் நெருங்கிப்பழகும் விதமும் கூடுதல் ஈர்ப்பு.

4 அடி நீளம் முதல் 30அடி நீளம் வரையிலும், 40கிலோ எடை முதல் 10டன் எடை வரையிலும் கிட்டத்தட்ட 17 வகையான டால்பின்கள் இருக்கின்றன. டால்பின்கள் மனிதர்களைத் தாக்காது என்பது தவறான தகவல் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும் வெவ்வேறு வகையான தாக்குதல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். டால்பின்களின் சில தாக்குதல்கள் மனிதர்களின் மரணத்தில் கூட முடிந்திருப்பது அதிர்ச்சியான விஷயம்தான்...

டால்பின்களின் கர்ப்பகாலம் அதன் வகையைப் பொருத்து 11 முதல் 18 மாதங்கள் வரை வேறுபாடு உடையது. கர்ப்பத்திலேயே சிரிக்கும் இந்த குட்டி டால்பினின் அழகை ரசிக்காமல் இருக்கமுடியுமா என்ன?...

பெங்குயின்...
பனிக்குளிரில் கூட்டமாக வாழும் இந்த ஜீவராசிகள் பறவை இனம்தான் என்றாலும் மனிதர்கள் போல நடக்கும் இதன் நடை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத அற்புத விஷயம்தான்...

இதில் பெண் இனம் இடும் முட்டைகளை தன் கால்களுக்கு நடுவில் வைத்து 63 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொறிப்பது ஆண் பெங்குயின்தான் என்பது அதிசயக்க வைக்கும் தகவல்...
முட்டைக்குள் உருவாகும் பெங்குயின்...யானை...
சிறுவயது முதலே யானை என்றாலே ரசிக்காதவர் எவரும் இருக்கமுடியாது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டு பழக்கப்படுத்தப்படும் யானைகள் பலவித வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

13 அடி உயரம் வரையிலும், 7000கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய யானைகள் கூட்டமாக வாழும் குணம் கொண்டவை. யானைகளில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள்தான் முக்கியமான இரண்டு வகைகள். (பழங்காலத்தில் இருந்த பனி யானைகளான பிரம்மாண்ட மம்மூத்துகள் இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்) ஒரு யானை சராசரியாக 70 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது.

யானைகள் தங்கள் தனித்துவமான அடையாளமான தும்பிக்கையால் 350 கிலோ எடை வரையிலும் தூக்கக்கூடியவை. யானை ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரமும் தூங்கக்கூடியதும், சராசரியாக 10 முதல் 20 கி.மீ வரை நடக்கக்கூடியது என்பதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்தான்.


யானைகள்தான் உயிரினங்களிலேயே நீண்ட கர்ப்பகாலம் கொண்டது. இதன் கர்ப்பகாலம் 24 மாதங்கள்... அதாவது கருத்தரிக்கும் நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு வாரிசை வயிற்றில் சுமக்கின்றன யானைகள். கர்ப்பம் உருவான முதல் சில மாதங்களுக்குள்ளாகவே குட்டிகள் முழுயானையின் மினியேச்சர் போன்றதொரு உருவம் பெற்று மீதியிருக்கும் பெரும்பான்மை மாதங்களில் வளரமட்டுமே செய்வது ஆச்சர்யமான விஷயம்...
நாய்...
மனிதனின் நம்பர் ஒன் பெட் அனிமல் என்று சொன்னால் அது நாய்தான். Pet என்ற வார்த்தையை கேட்டாலே பலபேருக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நாய்தான். இதற்கு மனிதனில் நண்பன் என்றொரு வழக்குப்பெயரும் உண்டு.

மனித இனத்தால் பழக்கப்பட்ட விலங்கு எனும் வரலாற்றில் முதலிடம் நாய்க்குத்தான் கிடைத்திருக்கிறது. பரிணாம மாற்றக்கொள்கையின் அடிப்படையில் சாம்பல் நிற ஓநாய்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் / 33000 / 15000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து உருவான இனம்தான் நாய் என்று விதவிதமான அறிவியல் ஆய்வுகள் கூறுகிறது.

நாய்கள் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளாக மாற்றப்பட்டது 13000 முதல் 37000 வருடங்களுக்கு முன்புதான் என்றும் விதவிதமான ஆய்வுகள் கூறியிருக்கிறது. கடந்த சில நூறாண்டுகளில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் நாய்களின் பல்வேறு வகை என்றாலும், நிலத்தில் வாழும் விலங்குகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது நாய்க்கு மட்டும்தான் என்பது கூடுதல் தகவல்.

பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டைப்பாதுகாத்தல், காவல் துறை மற்றும் ராணுவத்தில் உதவுதல், வேட்டைக்கு உதவுதல் என்று நாய்களின் உபயோகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். நாய் வகைகளிலேயே மிகவும் சிறியது Yorkshire Terrier. இதன் உயரம் வெறும் 2.5 இன்ச்சும், நீளம் 3.7 இன்ச்சும், எடை வெறும் 113கிராமும்தான் (ஒரு சிறிய செல்போனின் எடையளவு) இருக்கும்.


நாய்களில் உயரமான வகை என்றால் அது Great Dane. சராசரியாக 48இன்ச் வரையிலும் உயரம் வளரக்கூடியது இது.


நாய் வகைகளிலேயே பெரியது என்றால் அது English Mastiff எனப்படும் வகை. இதன் எடை 155 கிலோ வரையிலும், வாலுடன் சேர்ந்த நீளம் 98 இன்ச் வரையிலும் வளரக்கூடியது

நாய்களின் கர்ப்பகாலம் 63 நாட்கள். குட்டிகளை ஈனும்போது குறையுடன் பிறக்கும் குட்டியையும், தேறாது எனத்தெரியும் குட்டியையும், தாய் நாயே பிரசவ கால மருந்து போல தின்று விடுவதும் உண்மைதான்.  
39நாள் கருவில்...

60 நாட்களுக்கு மேல் பிரசவத்திற்கு தயாராய்...


ஓநாய் குட்டி கருவில்...சிறுத்தை...
சிறுத்தை என்றதுமே பெரும்பாலும் நம் நினைவுக்கு வருவது மஞ்சளில் கரும் புள்ளிகளுடன் கூடிய அதன் நிறமும், அதன் வேகமான ஓட்டமும்தான்...

இதுவும் பூனைகள் (Cat) இனத்தின் ஓர் அங்கம்தான் என்பது அறிவியல் கூற்று (புலி, பூனை, சிறுத்தை, லியோ பேர்டு, பிளாக் பேன்த்தர், ஜாக்குவார் போன்றவை எல்லாமே Cat Family என்பதன் கீழ்தான் வரையறுக்கப்பட்டிருக்கின்றன).


யானைகளைப்போன்றே சிறுத்தைகளிலும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய என்ற இரண்டு வகை பூர்வீகம்தான் குறிப்பிடத்தக்கது. முதலில் ஆராய்ச்சிகளில் 7.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவைதான் ஆசிய சிறுத்தைகள் என்று அறிவித்திருந்தாலும், சமீபத்திய ஆராய்ச்சிகள் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சிறுத்தைகள் ஆசியாவில் இருந்ததாக கண்டறிந்திருக்கின்றன.

சிறுத்தைகள் கூட்டமாக வாழாமல் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கமுடையவை. வேட்டையாடி உண்ணும் இனமான சிறுத்தை அதிகபட்சமாக மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகம் வரை ஓடக்கூடியது. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே இதுதான் அதிக வேகத்தில் ஓடக்கூடியதாய் கண்டறியப்பட்டிருக்கிறது. இதை விட சுவாரசியமான தகவல் 0 to 100கி.மீ வேகத்தை சிறுத்தை வெறும் மூன்றே விநாடிகளில் எட்டிவிடுகிறது.

சிறிய தலையையும் கூறிய பார்வையையும் உடைய சிறுத்தை மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்றாலும் அதனால் தொடர்ந்து நீண்ட தூரம் ஓடமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறுத்தை சராசரியாக 72கிலோ எடை வரையிலும், 93 இன்ச் நீளம் மற்றும் 37 இன்ச் உயரம் வரையிலும் வளரக்கூடியது. நகங்களும் கூறிய பற்களும்தான் சிறுத்தையின் முக்கிய ஆயுதங்கள்.


சிறுத்தையில் ராஜ சிறுத்தை என்று ஒரு ரகம் அதன் நிறத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்தியாவின் முகலாய அரசர்களில் ஒருவரான ஜகாங்கீர் நீலநிறப்புள்ளிகளுடன் கூடிய வெள்ளை சிறுத்தை வைத்திருந்ததாக உறுதி செய்யப்படாத வரலாற்றுத்தகவலும் உண்டு.

சுவாசிக்கும் சத்தம்தான் கொஞ்சம் அதிகமானதாய் தெரியுமே தவிர புலியைப்போல சிறுத்தை உறுமாது என்பதும் கூடுதல் தகவல்.

சிறுத்தையின் கர்ப்பகாலம் 90 முதல் 98 நாட்கள். ஒரு பெண் சிறுத்தை ஒரே பிரசவத்தில் 150 முதல் 300கிராம் எடையில் 9 குட்டிகள் வரை பிரசவிக்கக் கூடியது. சிறுத்தைக்குட்டிகள் பிறக்கும் போதே தனது அடையாளமான கரும் புள்ளிகளுடன் பிறப்பது தனிச்சிறப்பு...
பாம்பு...
145 முதல் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பான Cretaceous எனப்படும் காலத்தில் தோன்றிய உயிரினமான பாம்புகள், ஊர்வன இனத்தை சார்ந்தவை என்றாலும் அவை காலில்லா பல்லிகள் வகையிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன. பாம்புகளின் கண்களில் இமைகள் கிடையாது என்பதுவும், பாம்புகளுக்கு வெளிப்புற காதுகள் கிடையாது என்பதுவும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.

பாம்புகளின் தோற்றம் பற்றி இருவேறு ஆராய்ச்சி முடிவுகள் நிலவுகின்றன. Varanids எனப்படும் குடும்பத்தைச்சேர்ந்த பல்லி வகையிலிருந்து தோன்றியதாக ஒரு கருத்தும், Mosasaurs எனப்படும் நீர்வாழ் குடும்பத்தைச்சேர்ந்த உயிரினங்களிலிருந்து தோன்றியதாக ஒரு கருத்தும் இருக்கின்றன

உலகில் அண்டார்ட்டிக்காவைத்தவிர எல்லா கண்டங்களிலும் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றன.  


இதுவரையிலும் ஆராய்ச்சியாளர்களால் Leptotyphlops carlae எனப்படும் 4 இன்ச் நீளமுள்ள சிறிய பாம்புகளிலிருந்து 25 அடி நீளம் இருக்கும் Anaconda மற்றும் 30 அடி நீளமிருக்கும் Reticulated Python வரை 3400 வகை பாம்புகள் கண்டறியப்பட்டிருந்தாலும் இதன் எண்ணிக்கை நிச்சயம் இன்னமும் கூடலாம். பாம்புகளில் விஷமற்றது, விஷமுடையது, கொடிய விஷயமுடையது என்று பல வகைகள் இருந்தாலும் தற்காப்புக்காக இல்லாமல் பெரும்பாலும் இரையைத் தாக்கவே அந்த விஷம் பாம்புகளால் பயன்படுத்தப்படுகின்றன.

பாம்புகள் அதன் வெளிநீட்டும் இரட்டை நாக்கு போன்ற உறுப்பின் மூலம்தான் வாசத்தைக்கண்டறியும். பாம்புகளின் கண்கள் தெளிவற்ற மங்கலான பார்வையை உடையதேத்தவிர பாம்புகளுக்கு கண்ணே தெரியாது என்பது கட்டுக்கதைதான். சில பாம்புகளுக்கு, அதிலும் குறிப்பாக ஆசியன் வைய்ன் சினேக் எனப்படும் Ahaetulla வகைப்பாம்புகளுக்கு பைனாகுலர் விஷன் எனப்படும் ஒரு குறிப்பிட்ட பொருளை ஃபோகஸ் செய்து பார்க்கும் திறன் இருப்பது ஆச்சர்யமான தகவல்.
Ahaetulla snake...

சில வகைப்பாம்புகள் கண்பார்வை சரியில்லாதபோதும் infrared எனப்படும் முறையிலும், வைப்ரேஷன் மூலமும் கண்டறிந்து இரைகளைத் தாக்கிப்பிடிக்கும் திறமை உடையது. எல்லாப்பாம்புகளுமே தரையுடன் தொடக்கூடிய உடல் பகுதியில் அதிர்வலைகளை உணர்ந்து கொண்டு அருகில் வருவனவற்றைத்தெரிந்து கொள்ளுமளவுக்கு மிகவும் சென்சிட்டிவான தோல்அமைப்பை உடையவைதான். பாம்புகளுக்கு இரண்டு கிட்னிகள் இருந்தாலும் அவை மற்ற உயிரினங்களுக்கு இருப்பதுபோல பக்கவாட்டில் இல்லாமல் அதன் நீளமான உடலமைப்பு காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருப்பது இயற்கையின் படைப்பு.

மேற்கத்திய நாடுகளில் Ball python மற்றும் Corn Snake ஆகிய இரு வகைப்பாம்புகளும் Petஆக வளர்க்கப்படுவதால் அதன் இனப்பெருக்கம்கூட மனிதர்களால் பல்வேறு வகைகளில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது
Corn Snake...

பாம்பின் விஷத்தால் உருவாகும் Cyto-Toxic எஃபெக்ட் மூலம் கேன்சர் நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் உள்ளதா என ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பாம்புகளின் முட்டையிலிருந்து குஞ்சு பொறிப்பதற்கு அதன் வகையைப்பொருத்து வெவ்வேறு கால அளவுகள் உள்ளன. இந்தப்படத்தில் இருக்கும் கார்ன் சினேக்கின் முட்டை, குஞ்சு பொறிப்பதற்கு சராசரியாக 45 முதல் 65 நாட்கள் வரை ஆகுமாம்.போஸ்ஸம்...
எலி போன்ற தோற்றத்தில் அழகான நிறத்திலிருக்கும் இந்த போஸ்ஸமின் அட்டகாசங்கள் ஐஸ் ஏஜ் என்ற ஆங்கிலப்படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இதில் 103 வகைகள் உள்ளன. தனித்துமற்ற இதன் பயாலஜியும், உணவுமுறையும், எளிதான இனப்பெருக்க திறனும் இவைகளுக்கு எவ்வித இடத்திலும், எவ்வித கன்டிஷனிலும் வாழும் திறனை கொடுத்திருக்கின்றன.

Acting Dead...!

மரக்கிளைகளில் வாலை சுற்றிக்கொண்டு தலைகீழாக தொங்குவதும், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள செத்தது போல் நடிக்கும் இதன் தனித்திறனும் ரசிக்க வைக்கக்கூடியது. இந்த போஸ்ஸம்கள் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரை மட்டுமே உயிர்வாழக்கூடியன. பூச்சிகள், தவளை, பறவை, பாம்பு, மண்புழு போன்றவை இதன் முக்கிய உணவுகள் என்றாலும் இவை பழங்களில் ஆப்பிள் போன்றவற்றையும் விரும்பி உண்ணும்.

கரு உருவான நாளிலிருந்து 12 முதல் 14 நாட்களில் தாயின் வயிற்றை விட்டு குட்டிகள் வெளிவந்துவிடும். அப்படி வெளிவரும் குட்டிகள் தானாகவே நகர்ந்து தாயின் வெளிப்புறப்பையில் சென்று தங்கி வளரும். கிட்டத்தட்ட 70 முதல் 125 நாட்கள் வரை இப்படித்தாயின் வெளிப்புறப்பையில்தான் வளரும் இந்தக்குட்டிகள். ஒரே நேரத்தில் 13 குட்டிகள் வரை ஈன்று, அந்த பதிமூன்றையும் தனது வெளிப்புறப்பையில் வைத்து வளர்க்கும் திறன் கொண்டவை இந்தப் போஸ்ஸம்கள்...கங்காரு...
கங்காரு என்றாலே நமக்கெல்லாம் உடனடியாக நினைவுக்கு வருவது ஆஸ்திரேலியாதான் என்றாலும் நான்கு முக்கிய வகையான கங்காருகளில் சிவப்பு கங்காரு எனும் வகை மட்டும் உலகம் முழுவதும் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறது. கங்காருகள் சராசரியாக மணிக்கு 20 முதல் 25 கி.மீ வேகம் வரையிலும் ஓடக்கூடியது என்றாலும், குறைந்த தூரமென்றால் மணிக்கு 70கி.மீ வேகம் வரையிலும் கூட ஓடுமாம்.

கங்காரு என்ற பெயர் வந்ததன் காரணம் நம்மில் பலர் அறியாத சுவாரசியத் தகவல். கங்காரு என்ற பெயர் முதன் முதலில் சர் ஜோசப் பேங்க்ஸ் என்பவரால் அவரது டயரியில் 1770ம் ஆண்டு ஜீலை 7ம் நாள் எழுதப்பட்டிருக்கிறது. ஹெச்.எம்.எஸ் என்டீவர் என்ற கப்பல் 7 வாரத்திற்கும் மேலாக பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கரையோரத்தில் அதன் கேப்டன் ஜேம்ஸ் குக்கும், சர் ஜோசப் பேங்க்சும் லோக்கல் விசிட்டில் பார்த்த கங்காருவை, அந்த விலங்கின் பெயர் என்ன என்று அங்கிருந்த Guugu Yimithirr இன மக்களிடம் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்கள். இவர்களின் பாஷை புரியாத அந்த இன மக்கள் ‘’I don’t understand you’’ என்பதை குறிக்கும் அவர்கள் மொழிச்சொல்லான ‘’கங்காரு’’ என்பதை கூறியிருக்கிறார்கள். அதை அந்த விலங்கின் பெயராக நினைத்துக்கொண்டு இந்த இருவரும் அதையே வரலாற்றில் நிலை நிறுத்தியிருப்பது சுவாரசியமான தகவல்.

கங்காருகளும் ஆடு மற்றும் மாடு போன்றே உணவை ஒரு முறை தின்றதும் பின் இரண்டாம் முறை அதே உணவை சாவகாசமாக அசை போட்டு செரிக்க வைக்கும் ரகமாம். ஆனால் மாடுகளின் சாணத்தில் உருவாவது போல கங்காருகளின் சாணத்தில் மீத்தேன் வாயு உருவாகாத வகையில் அதன் செரிமாணம் அமைந்திருப்பதால் அதே முறையை மாடுகளிலும் முயற்சி செய்து மீத்தேன் வாயுவின் கிரீன் ஹவுஸ் கேஸ் விளைவை குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
கங்காரு கிக்பாக்ஸிங்...!

கங்காருக்களில் ஆண், பெண் இரு வகைகளுமே சண்டையிட்டுக்கொண்டாலும், அந்தரத்தில் பறந்து பின்னங்கால்களை தூக்கி எதிரியின் நெஞ்சில் தாக்கும் ஆண் கங்காருகளின் கிக் பாக்ஸிங் சண்டை மிகப்பிரபலம்.

கங்காருகளும் போஸ்ஸம் போலவே குட்டிகளை ஈன்றதும் வயிற்றிலிருக்கும் வெளிப்புறப்பையில் வளர்க்கக் கூடியவை. கர்ப்பத்தில் உருவாகும் கரு 31 முதல் 36 நாட்களில் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும்போது சிறிய சுண்டுவிரல் அளவில் வளர்ச்சியடையாத சதைப்பிண்டம் போலத்தான் இருக்கும். வெளியே வந்ததும் தாயின் வயிற்றிலிருக்கும் வெளிப்புறப்பையில் நுழைந்து தங்கி கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு அங்கேயே தாயிடம் பால் குடித்து வளர்கின்றன. அதன் பிறகு பையை விட்டு வெளியேறினாலும் கிட்டத்தட்ட 18வது மாதம் வரையிலும் தாய் கங்காரு குட்டிக்கு அவ்வப்போது பாலூட்டுவதும் கூடுதல் தகவல்...
லெமன் சுறா...
உடலின் நிறத்தால் லெமன் சுறா என்று பெயர் பெற்ற இந்த சுறா மீன் சராசரியாக 3 மீட்டர் நீளமும் 90கிலோ எடையும் வளரக்கூடியவை என்றாலும் இதுவரையிலும் கண்டறியப்பட்டதில் அதிகமான நீளமானதாக 4 மீட்டரும், அதிகமான எடையில் 183 கிலோவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டிராபிகல் மற்றும் சப்-டிராபிகல் தண்ணீரில் மாடரேட் ஆழத்தில் வசிக்கும் இந்தச்சுறாமீன்கள் பெரும்பாலும் ரெமோராஸ் எனப்படும் உறிஞ்சும் மீன்கள் புடைசூழ வசிக்கின்றன. 


சுறாக்களில் 70% குட்டியை ஈனும் வகையும், 30% முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வகைகளும் உள்ளன. இதில் இந்த லெமன் சுறா குட்டியை ஈனும் வகையைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லெமன் சுறா குட்டி பிறக்கும்போது...

பிறந்தவுடனே தனியாக வாழும் திறன் கொண்ட ஒன்றரை முதல் இரண்டு அடி நீளமிருக்கும் சுறா குட்டிகள் அதன் வகையைப்பொறுத்து கர்ப்பத்தில் இருக்கும் காலம் 6 முதல் 22 மாதங்கள் வரை வேறுபடுமாம்.
லெமன் சுறா - தாயின் வயிற்றில்...மனிதன்...
எப்போதுமே இந்த உலகில் மிகவும் அபாயகரமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது மனிதன்தான் என்று சில கருத்துக்கள் உண்டு. நாமெல்லோருமே அந்த இனம்தான் என்பதால் இதைப்பற்றி தனியாக விளக்கிக்கூற எதுவுமில்லை.

மனித இனத்தின் கர்ப்பகாலம் 38 வாரங்கள் அதாவது 9 மாதங்கள்...

கரு உருவாகும் முதல் சில வாரத்திலிருந்து அதன் படிப்படியான வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதை இந்தக்கருவறை அற்புதத்தோற்றங்களில் கண்டு மகிழுங்கள்...


இந்தப்பதிவு நீங்கள் அறியாத சில தகவல்களையும், பார்க்காத சில அற்புதப்படங்களையும் உங்களுக்கு நிச்சயம் தந்திருக்கும் என்று நம்புகிறேன்...

மற்றொரு அபூர்வத்துடன் வெகு விரைவிலேயே மீண்டும் சந்திப்போம்...!

நன்றி - இக்கட்டுரையில் இருக்கும் படங்களுக்காகவும், தகவல்களுக்காகவும் நான் நுழைந்த எல்லா தளங்களுக்கும்...!


24 comments:

 1. எத்தனை எத்தனை தகவல்கள்...!

  தேடலுக்கு பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தலைவா.... பதிவு நிஜமாகவே கொஞ்சம் பெண்டு கழட்டிவிட்டதுதான்...!!!

   Delete
 2. ஆச்சர்யமான, அதிசயத்தக்க படங்களை பதிவிட்டிருக்கீங்க. உழைப்புக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்...,

  ReplyDelete
  Replies
  1. உழைப்பை புரிந்து பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா...

   Delete
 3. தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை.அவற்றை திரட்டியளித்தமைக்கு நன்றி.கடினமான முயற்சி.அதற்காக மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது.பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுஜி... தங்களை என் தளத்தின் பக்கம் பார்த்து வெகு நாட்களாகிறது...

   Delete
 4. சிறந்த புகைப்படங்கள்...அட்டகாசமான முன்னுரைகள்...கருவறைக்கு உள்ளேயே சென்று பார்த்தது போனற உண்ர்வு... நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது மனமார்ந்த பாராட்டுக்கு என் நன்றிகள்...

   Delete
 5. இவற்றில் பலவற்றை விபரணச் சித்திரங்களில் பார்த்த போதும், தங்கள் தமிழ்த் தொகுப்புரை மிக அருமை!

  ReplyDelete
 6. மிகுந்த பயனுள்ள தகவல்கள் . இந்த பதிவின் பின்னே உள்ள கடின உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

  ReplyDelete
  Replies
  1. உழைப்பைப்புரிந்து பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

   Delete
 7. வணக்கம்

  அனைவரும் அறிய வேண்டிய தகவல் பதிவு அருமை தேடலுக்கு பாராட்டுக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. அருமை! அணு அணுவாக ரசிக்க வைத்த பதிவு.

  பகிர்வுக்கு நன்றீஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனைக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

   Delete
 9. நல்லாயிருந்தது எனவே நான் எடுத்துக்கிட்டேன் மன்னிச்சிருங்க

  ReplyDelete
  Replies
  1. எதற்கு மன்னிப்பெல்லாம்?... தாராளமாய் எடுத்துக்கொள்ளுங்கள்...
   தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி...

   Delete
 10. செமையா இருக்கு ..... நாம கொடுக்கற விஷயம் நாலு பேருக்கு நல்லதா இருக்கணும்னு நினைக்கிற உங்க மனச பாராட்டுகிறேன்

  ReplyDelete
 11. நல்ல பதிவு!
  ஆனால், கொஞ்சம் பெரிய பதிவு. பிரித்து போடலாம்!
  தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1

  ReplyDelete
 12. ஐய்ய்ய்ய்ய்யோ.. ரசித்தேன்

  ReplyDelete
 13. அற்புதம்..... பாராட்டுக்கள்...!!

  ReplyDelete
 14. பயனுள்ள தகவல் .. . . . நன்றி

  ReplyDelete
 15. தகவல்களை கொடுத்ததற்கு நன்றிகள்.

  ReplyDelete