SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, October 29, 2013

அறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்!

ஏற்கனவே உங்களுக்கு வெள்ளை காக்கா, வெள்ளை யானை மற்றும் சில அறியாத நீர்வாழ் உயிரினங்களையும் அறிமுகப்படுத்தியிருந்தேன். இப்போது அதன் தொடர்ச்சியாக இதுவரையிலும் நீங்கள் அறிந்திராத இன்னும் பல உயிரினங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்போகிறேன்.

நண்பர்கள் பலரும் எனது பதிவுகள் நீளம் அதிகமாகயிருப்பதாக சுட்டிக்காட்டியதாலும், இந்த அறிவியல் அற்புதங்களை வெறுமனே ஒரே பதிவுக்குள் முடக்க எனக்கு மனமில்லாத காரணத்தினாலும், இதை சுவாரசியமான பகுதிகளாக பிரித்துத் தரலாம் என்றிருக்கிறேன்... தொடர்ந்து படித்து உங்கள் ஆதரவினையும், ஊக்கத்தினையும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்...!

முதல் பாகத்தில் ஏற்கனவே யானையின் தும்பிக்கையைப்போன்ற அமைப்புடைய யானைச்சுறாவின் படத்தை பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதும் நாம் முதலில் பார்க்கப்போவது யானையைப் போன்ற தோற்றம் கொண்ட... அதாவது யானையின் தும்பிக்கையைப் போன்ற அமைப்புடைய சிலவகை உயிரினங்களைப்பற்றித்தான்...!

இதையெல்லாம் பார்த்தபிறகு யானையை விநாயகராக எண்ணி வழிபடுவதுபோல இவற்றையெல்லாம்கூட வழிபட்டால்தான் என்ன என்று உங்களுக்குத்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

யானை ஷ்ரூவ்...
விநாயகர் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் யானையைப்போலவே, அவருடைய வாகனமான மூஞ்சுறுவையும் மறக்கமுடியாது.


யானை ஷ்ரூவ் என்றழைக்கப்படும் இவை எலிகள் மற்றும் அணில்கள் போன்றவை அடங்கும் ‘’ரோடன்ட்’’ வகையில் அடங்காது என்றாலும், இதை ஷ்ரூவ் மவுஸ் என்றும் அழைக்கிறார்கள் . மற்றொரு பாலூட்டி இனமான மோல் என்ற வகைக்கும் இவை மிக நெருக்கமானதுதான் என்கிறது அறிவியல்.


இதன் மூக்கு அமைப்பால் இதற்கு யானை ஷ்ரூவ் என்று பெயர் இருந்தாலும், இதன் வேகமான குதித்தோடும் திறனால் இதற்கு ஜம்ப்பிங் ஷ்ரூவ் என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை கர்ப்பகாலம் கொண்ட இந்த வகை யானை ஷ்ரூவ்வின் முக்கிய வசிப்பிடம் ஆப்பிரிக்காதான். ஜோடியாக வாழும் குணம்கொண்ட இந்தவகை ஷ்ரூவ் 10முதல் 30 செ.மீ வரை நீளமும், 50 முதல் 500கிராம் வரை எடையும் வளரக்கூடியது.


எது எப்படியோ... முதலிலேயே நாமும் பிள்ளையாருக்கு இந்த யானை ஷ்ரூவ்வையே வாகனமாய் வைத்திருந்தால் இன்னும் சுவாரசியமாய் இருந்திருக்கும என்பதில் சந்தேகமில்லைதானே?...!


டாபிர்...

தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியக்காடுகளில் வாழும், பார்ப்பதற்கு பன்றிகள் போன்ற தோற்றம் கொண்ட இவைகளில் பிரேசிலியன், மலேயன், பெய்ர்டுஸ் மற்றும் மவுண்டைன் என மொத்தம் நான்கு வகைகள் இருக்கிறது. இவைகள் காண்டாமிருகம் மற்றும் குதிரையின் நெருங்கிய சொந்தக்காரவகை என்பது குறிப்பிடத்தக்கது
ஆசியன்/மலேயன் டாபிர்...

பிரேசிலியன் டாபிர்...

சராசரியாக 2மீட்டர் நீளமும், 1மீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த டாபிர்கள் பிரௌன், கிரே மற்றும் கருப்பு நிறங்களில் 150 முதல் 300கிலோ எடை வரையிலும் வளரக்கூடியது. இதில் மலேயன் டாபிர் எனப்படும் ஆசியன் டாபிர் மட்டும் கழுத்திலிருந்து பின்புறம் வரையிலும் வெள்ளை நிறத்தைக்கொண்டும், அதிகபட்சமாக 540கிலோ எடைவரையிலும் வளரக்கூடியது...!
மவுண்ட்டைன் டாபிர்...

25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள்காலம் கொண்ட இந்த டாபிர்களின் கர்ப்பகாலம் 13 மாதங்கள். அம்மாவோடு கழிக்கும் குழந்தைப்பருவத்தைத்தவிர மீதி வாழ்நாட்களை தனியாக கழிக்கும் குணம் கொண்டவை இந்த டாபிர்கள்...!


சாய்கா ஆண்ட்டிலோப்...
மான்கள் என்றாலே புள்ளிமான்கள்தான் சட்டென்று நம் நினைவுக்கு வருவது. அதைத்தவிர சில வகை கொம்பு மான்களும், புள்ளியில்லாத மான்களும்கூட நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த மான் வகைகளிலும்கூட யானை மூக்கு மான்கள் இருந்தால்?...

இருந்தால் என்ன இருந்தால்... இதோ இருக்கிறது பாருங்கள்...


ஆண்ட்டிலோப் என்பது மாடு, காட்டெருமை ஆகியவற்றில் சேர்த்தியில்லாத, ஆடு வகைகளிலும் சேர்த்தியில்லாத ஒருவகை விலங்கினம்... நாம் இதன் தோற்றத்தைக்கொண்டு இதை மான் என்றே எடுத்துக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று நம்புகிறேன்...

ஆண்ட்டிலோப் விலங்கினத்தில் பலவகை இருந்தாலும் யானையின் தும்பிக்கை போன்ற மூக்கை உடைய இந்த ஆண்ட்டிலோப்பின் பெயர் சாய்கா...


இந்த சாய்கோ ஆண்ட்டிலோப் ஒரு காலத்தில் மங்கோலியாவிலும், வட அமெரிக்காவிலும் வாழ்ந்திருந்தாலும் இப்போது இந்த இனம் இருப்பது ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது...

இந்த சாய்கா ஆண்ட்டிலோப் 2,50,000 வருடங்களுக்கு முன்பே, சேபர் டூத் புலி மற்றும் மம்மூத் யானைகளுடன் வாழ்ந்த மிகப்பழமையான உயிரினம் என்றும் ஒரு அறிவியல் கூற்று நிலவுகிறது.


தோள் வரையிலான உயரம் 2அடி முதல் 3அடி வரை வளரக்கூடியதும், 36 முதல் 63கிலோ எடை வரையில் வளரக்கூடியதும், 6முதல் 10ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியதுமான இந்த வகை ஆண்ட்டிலோப்கள் இப்போது மிக வேகமாக அழிந்து வரும் இனத்தில் பட்டியலிடப்பட்டிருப்பது காலத்தின் சோகம்தான்...!


ப்ரோபிசிஸ் குரங்கு...

தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் போர்னியோ என்ற தீவில் வாழ்பவைதான் மூக்கு நீண்ட இந்த ப்ரோபிசிஸ் குரங்குகள்...


ஆசியாவில் இருக்கும் பெரிய குரங்கு வகைகளில் இதுவும் ஒன்று. இதில் ஆண் குரங்குகள் இரண்டரை அடி உயரமும், முப்பது கிலோ எடைவரையிலும் வளரக்கூடியவை. பெண் குரங்குகள் இரண்டு அடி உயரமும் 15கிலோ எடை வரையிலும் வளரக்கூடியவை.


தும்பிக்கை போன்ற இதன் நீண்ட மூக்கு 10செ.மீ நீளம் வரையிலும், வாயை மறைக்கும் அளவிலும் வளரக்கூடியது.


கூட்டமாக வாழும் இந்த இனத்தில் பல பெண் குரங்குகளுக்கு ஒரு ஆண் என்று கூட்டமாகவும், பல இளம் ஆண் குரங்குகள் ஒன்று சேர்ந்து கூட்டமாகவும் வாழக்கூடியவை.

இதை தும்பிக்கை குரங்கு என்று அழைக்கலாமா... கூடாதா?... என்பதை நீங்கள்தான் முடிவு செய்துகொள்ளவேண்டும்...!


பினாச்சியோ தவளை அல்லது யானை மூக்கு தவளை...


தவளையிலுமா?... என்று வியப்பாய் இருக்கிறதல்லவா?... எனக்கும்கூட அப்படித்தான் இருந்தது...

2010ம் ஆண்டுதான் இந்தத்தவளை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவின் ரிமோட் பிரதேசமான ஃப்யூஜா மலைப்பகுதியில் ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டையின் மேல் அமர்ந்திருந்த இந்த தவளை அதன் பிறகு உலகின் வேறெந்த மூலையிலும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மரத்தவளை வகையைச் சேர்ந்த இதற்கு, இதனுடைய மூக்கின் அமைப்பைப் பொருத்தே இப்படியொரு பெயர் அமைந்திருக்கிறது.


பினாச்சியோ லிசார்டு...

அனோலிஸ் ப்ரோபோசிஸ் எனப்படும் இந்த நீண்டமூக்கு உயிரினம் சிறியவகை பல்லி இனத்தைச்சேர்ந்தது...


1953ம் வருடம் ஈகுவடார் பகுதிகளில் கண்டறியப்பட்ட இந்த பல்லி 1960க்கு பிறகு எவர் கண்ணிலும் படவில்லை என்றாலும் பலவருடங்களுக்குப்பிறகு 2005ம் ஆண்டு இவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பது சுவாரசியம்தான்...


2005லிருந்து 2013வரை இவை மூன்றுமுறைதான் கண்ணுக்கு தட்டுப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன...

இதன் பினாச்சியோ மூக்கின் காரணமாக இதுவும் கண்டிப்பாக நாம் இந்தப்பதிவில் படிக்கவேண்டிய ஒன்றுதான்...!


யானை வீவில்...

வீவில் என்பது செடிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தானியங்களில் இருந்துகொண்டு அவற்றை உண்ணும் ஒருவகைப்பூச்சி இனம்...


பெரும்பாலும் எல்லா வகை வீவிலும் யானை தும்பிக்கை போன்ற மூக்கு மற்றும் வாயமைப்பை உடையவைதான் என்றாலும், Orthorhinus cylindrirostris என்றழைக்கப்படும் இந்தவகை வீவில் மட்டும்தான் இதன் தோற்றத்தின் அடிப்படையில் யானை வீவில் என்றும் அறிவியலால் அழைக்கப்படுகிறது.ஆஸ்திரேலியாவில் ஒயின் கம்பெனிகளுக்கு சரியான சவாலாக விளங்கும் இந்த வீவில் சராசரியாக10mm முதல் 20mm வரை வளரக்கூடியது என்றாலும், இதில் பெண் வீவிலைவிட ஆண் வீவிலுக்கு தும்பிக்கை போன்ற முன்பாகமும், முன்னங்கால்களும் நீளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது...!


யானைத்தும்பிக்கை பாம்பு...


ஆறுகள் மற்றும் லாகூன்களில் வசிக்கும் அக்ரோசார்டஸ் ஜவானிகஸ் எனப்படும் இந்த நீர்வாழ் பாம்புகள் அதிக பட்சம் 2.40மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதன் பை போன்ற, தொள தொள தோல் அமைப்பு கிட்டத்தட்ட யானையின் தும்பிக்கையை நினைவுபடுத்துவதுபோல இருப்பதால் இதற்கு  யானைத்தும்பிக்கை பாம்பு என்றும் ஒரு பெயர் இருக்கிறது.


யானை ஹாக் கேட்டர்பில்லர் / யானை ஹாக் மோத்...


மோத் என்பது வண்ணத்துப்பூச்சியைப்போன்றே கம்பளிப்பூச்சிகளிலிருந்து சிறகு முளைத்து பறக்கும் இனம் என்றாலும் இவைகளுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்குமான முக்கிய வேறுபாடு... வண்ணத்துப்பூச்சிகளுக்கு முன்பகுதியில் வளைந்து நீண்டிருக்கும் ஆண்டென்னா சென்சார்கள் மோத்துக்கு இருப்பதில்லை.

சரி... இந்த மோத்துக்கு ஏன் யானை பருந்து மோத் என்று பெயர் வந்திருக்கிறது தெரியுமா?...


இதன் 3இன்ச் நீளம் வரை இருக்கக்கூடிய கேட்டர் பில்லர் ஸ்டேஜில் முன்பகுதியில் நீட்டிக்கொண்டிருக்கும் யானையின் தும்பிக்கை போன்ற அமைப்பினாலும், இது மோத்தாக மாறிய பின்னர் இதற்கு இயற்கை அளித்திருக்கும் மிகக்கூரிய பார்வையினாலும்தான் இதற்கு யானை பருந்து மோத் என்று பெயர் வந்திருக்கிறது.


கேட்டர் பில்லர் ஸ்டேஜில் இதன் மொத்த உடலமைப்புகூட பார்ப்பதற்கு தும்பிக்கை போலத்தான் இருக்கிறது...!


இது மோத்தாக மாறிய பின்னர் இதன் இறக்கைகளின் நீளம் கிட்டத்தட்ட 3இன்ச் வரை இருக்கக்கூடியது... அதாவது விரிந்த நிலையிலிருக்கும் உங்கள் உள்ளங்கை அளவில்...!!!


Hispaniolan solenodon…


இது பார்ப்பதற்கு நாம் ஏற்கனவே பார்த்த யானை ஷ்ரூவ் போல இருந்தாலும் இதற்கும் ஷ்ரூவ் இனத்திற்கும் சம்மந்தமில்லை. இது solenodon வகையைச்சேர்ந்த அறியவகை உயிரினம்.


கெயித்தி மற்றும் டொமினிகன் ரிபப்ளிக்கை சேர்ந்த ஹிஸ்பானியோ தீவில் மட்டுமே இருப்பதால் இதற்கு இந்தப்பெயர் வந்திருக்கிறது. இதன் கூறிய பற்கள் விஷத்தன்மை உடையவை என்பது கூடுதல் மற்றும் ஷ்ரூவ்வுக்கும் இதற்குமான முக்கிய வேறுபாட்டை தெரிவிக்கும் தகவல்...!

இதன் மற்றொரு வகை Cuban Solenodon... அது முற்றிலும் அழிந்துவிட்ட இனமாகவே கருதப்படுகிறது...


யானை வண்டு...

யு.எஸ்.சின் ஃபுளோரிடா முதல் அரிஸோனா வரையிலான பகுதிகளில் காணப்படும் மிகப்பொதுவான பெரியவகை வண்டினம்தான் இந்த யானை வண்டு. ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

ஓக்ஸ் வண்டு, ரைனோசரஸ் வண்டு, ஹெர்குலஸ் வண்டு என்றும் இதற்கு பெயர்கள் உண்டு என்றாலும் யானை வண்டு என்பதுதான் பெரும்பாலும் முன்னணியில் நிலைத்திருக்கும் பெயர். இவைகள் பொதுவாக கருப்பு நிற உடலமைப்பைக்கொண்டிருந்தாலும் இதன் மேற்பகுதியில் வளரும் மஞ்சள்நிறத்தன்மைகொண்ட நுண்ணிய மயிர்களால் இவைகளின் நிறம் யெல்லோயிஷ் கிரே போலத்தான் தோற்றமளிக்கும்.


இதில் ஆண் வண்டுகளுக்கு மட்டும்தான் தும்பிக்கை போன்ற ஹார்ன் உண்டு என்பதுவும், ஆண் வண்டுகள் நாலரை இன்ச் வரையிலும் வளரக்கூடியவை என்பதுவும், பெண் வண்டுகள் ஆண் வண்டுகளில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும் என்பதுவும் குறிப்பிடத்தக்க தகவல்கள்...


இதில் ஆண் வண்டுகளின் முன்பகுதியில் இருக்கும் தும்பிக்கை போன்ற ஹார்ன்தான் அவைகள் மற்ற ஆண் வண்டுகளோடு இரைக்காகவும், ஜோடிக்காகவும் நடத்தும் யுத்தத்தில் உதவக்கூடியவை...!

யானை வண்டு என்ற பெயர் இதன் உருவத்தினாலா?... இல்லை தும்பிக்கை போன்ற ஹார்ன் இருப்பதாலா?... என்பது நீங்களாக முடிவு செய்துகொள்ள வேண்டிய விஷயம்தான்...!


லேன்டர்ன் பக்...

பிராப்ஸ் கேண்டிலேரியா எனப்படும் இந்த உயிரினம் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் வாழும் 60வகையைக்கொண்ட பிராப்ஸ் எனும் வெட்டுக்கிளி குடும்பத்தைச்சேர்ந்தது.

தும்பிக்கை போன்ற மேல்நோக்கி வளைந்த இதன் முன்பகுதித்தோற்றம் பிளிருகின்ற யானையைப்போல இருப்பதுவும், இதன் கலர் பேட்டர்னும்தான் இதன்  பப்ளிசிட்டிக்கான முக்கிய அம்சங்கள்...


இதன் மூக்குப்பகுதியில் மின்மினிப்பூச்சி போன்றே ஒளிரும் தன்மை இருப்பதாக மரியா சைபெல்லா மெரியன் என்ற இயற்கை ஆய்வாளர் இதை முதன் முதலில் பார்த்தபோது நம்பினாலும், தொடர்ந்து வந்த ஆராய்ச்சிகளில் அது நிரூபிக்கப்படவில்லை. 1955வரை லேட்மரியா என்று பெயரிடப்பட்டிருந்த இந்த வெட்டுக்கிளிக்கு அதற்கு மேல் பிராப்ஸ் கேண்டிலேரியா என்று அறிவியலாளர்களால் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.


எது எப்படியோ?... பிளிரும் தும்பிக்கை போன்ற இதன் மூக்கு நம்மை ரசிக்கவைக்கும் அற்புதம்தான்...!


லாங் வேட்டில்டு அம்பர்லா பறவை...

இதற்கு யாரும் யானை காக்கா என்றோ... யானை தும்பிக்கை பறவை என்றோ பெயர்வைக்கவில்லை என்றாலும், இந்தப்பதிவில் இதையும் சேர்க்கவேண்டும் என்று எனக்குத்தோன்றியது.

பார்ப்பதற்கு காக்கா போல இருக்கும் இந்தப்பறவை ஈகுவடார் மற்றும் கம்போடியப்பகுதிகளில் மட்டுமே மிஞ்சியிருப்பவை. தலைக்கு மேலே அழகான, தனித்துவமான முடியமைப்பும், கழுத்திலிருந்து தூண்போல தொங்கும் அமைப்பும் இந்தப்பறவையை பார்த்தவுடன் அடையாளம் காட்டும் முக்கிய விஷயங்கள்.


இதில் ஆண் பறவை தனது மூடைப்பொறுத்து தலைக்கு மேலே இருக்கும் முடியமைப்பை... அதாவது தனது ஹேர் ஸ்டைலை அவ்வப்போது மாற்றிக்கொள்ளுமாம்...!


தோலின் மேல் இறகுகளால் பின்னப்பட்டு கழுத்திலிருந்து தொங்கக்கூடிய அமைப்பின் நீளம் ஒன்றரை அடி என்பது ஆச்சர்யமானதொரு தகவல்தான்...!

கொசுறு...
ஏற்கனவே நாம் பலவகை மீன்களையும் முந்தைய பதிவில் பார்த்திருந்தாலும், இந்த பலூன் மீனை மட்டும் இந்தப்பதிவின் கொசுறுத்தகவலாக இணைத்து பதிவினை முடிக்கிறேன்...


pufferfish, puffers, balloonfish, blowfish, bubblefish, globefish, swellfish, toadfish, toadies, honey toads என்றெல்லாம் பலவகைப்பெயர்கள் உண்டு இந்த மீனுக்கு. உலகிலேயே தங்க விஷத்தவளைக்கு அடுத்தபடியாக மிக அதிக விஷத்தன்மை கொண்ட வெர்ட்டிபிரேட்சாக இந்த பஃபர் மீன் கருதப்படுகிறது.120வகையைக்கொண்ட இந்த பஃபர் மீன்கள் பெரும்பாலும் சிறியவகைதான் என்றாலும் இவற்றில் சில 100செ.மீ வரை வளரக்கூடியவை என்பதுவும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்தான்...இது எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்வதற்காக எலாஸ்டிக் தன்மையுள்ள இதன் வயிற்றில் தண்ணீர் அல்லது காற்றை நிரப்பி பந்துபோல மாறும் தன்மையுடையது. இதன் விஷம் இதை உண்ணும் சுறா போன்றவற்றுக்கு எந்தவித கெடுதலையும் ஏற்படுத்தாது என்றாலும் மனிதர்கள் இதை உண்டால் இறப்பு நிச்சயம் என்பது அறிவியல் தரும் செய்தி...!

என்ன நண்பர்களே?... இந்தப்பதிவு கண்டிப்பாக நீங்கள் அறிந்திராத சில உயிரினங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி சுவாரசியத்தை தந்திருந்திருக்கும் என நம்புகிறேன்...

வெகு விரைவிலேயே இதன் அடுத்த பாகத்தை வேறொரு கான்செப்ட்டோடு வெளியிடுகிறேன்...

மீண்டும் சந்திப்போம்...!

14 comments:

 1. வணக்கம்
  அறிய முடியாத பல அதிசய விலங்குகள் பற்றிய தொகுப்பு அருமை தேடலுக்கு பாராட்டுக்கள்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. முதன்முதற் கடவுள் எங்கேயும் முதலில் இருக்கிறார் எனபது தெரிகிறது... அறியாத பல உயிரினங்கள் பலதும் வியப்பாக இருந்தது... படங்களுடன் விளக்கங்களுக்கு நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 3. காணக் கிடைக்காத உயிரினங்களை கண்டு மகிழ்ந்தேன் !
  த.ம 2

  ReplyDelete
 4. தகவல் பெட்டகமல்ல
  தகவல் பொக்கிஷமாக தங்கள்
  பதிவுகள் அனைத்தும்
  தங்களைத் தொடர்வதில் மிக்க
  பெருமிதம் கொள்கிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இறைவனின் படைப்பில்தான் எத்தனை அதிசயம்!?

  ReplyDelete
 6. அறியாத தகவல்கள் நல்ல பகிர்வுங்க. எத்தனை சிரமத்ததுடன் தகவல்களை சேகரித்து இருப்ிங்க மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 7. எத்தனையோ விபரணச் சித்திரங்களில் இவற்றைப் பார்த்தபோதும் இவற்றை நம்ம பிள்ளையாருடன் தொடர்பு படுத்திச் சிந்திக்கவில்லை; அசத்தி விட்டீர்கள் வித்தியாசமான சிந்தனையில்...
  ஒரு வகைக் கணவாயும் கடலில் உண்டு. அசப்பில் யானை முகம் பிள்ளையார் போல் தான்.
  மிக ரசித்தேன்.

  ReplyDelete
 8. https://www.youtube.com/watch?v=In7n590GjxU
  இதில் அந்தக் கணவாய் உண்டு.

  ReplyDelete
 9. ஊக்கமும் ஆதரவும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 10. Excellent Collection.

  ReplyDelete

 11. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 12. அசத்தி விட்டீர்கள்

  ReplyDelete