SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, October 28, 2013

சிங்கம் இளைச்சுதுன்னா, எலியெல்லாம் ஏறி ஏறி...

இந்தப்பதிவுக்கு படங்கள் எதையும்போட எனக்கு மனதேயில்லை...!

சமீபகால அரசியல் நிகழ்வுகளை எழுதி நாளாகிவிட்டது. கடந்த இரண்டு மூன்று நாட்களாய் தமீழ் மீடியாக்களுக்கு பரபரப்பு செய்தி இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது...

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழக மக்கள் பலரிடமும் உள்ளூர ஒரு கோபமும் வருத்தமும் நிலைத்திருந்தது... பிறகு வழக்கம்போலவே தினம் ஒரு செய்தியாக தொடர ஆரம்பித்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் எவ்வித எதிர்வினையையும் ஏற்படுத்தாத பெட்டிச்செய்தியாய் மாறி, அரசியல் நடத்துபவர்களுக்கு மட்டும் அவ்வப்போது கைது செய்யப்படும் மீனவர்களை மீட்பதற்கு கடிதம் எழுதி பெயர்வாங்கும் வழிமுறையாக ஆகிப்போனது. ஒருவேளை இன்னும் கொஞ்சநாட்கள் போனால் மீடியாக்கள்கூட இந்தச்செய்திகளை தினம் தினம் வெளியிடுவதை போரடிக்கும் விஷயமாக நினைத்து தவிர்க்க ஆரம்பிக்கலாம்.

தான் பதவியிலும், அதிகாரத்திலும் இருந்த காலத்தில் கச்சத்தீவுக்கும், இலங்கைத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட விரும்பாத சில அரசியல் தலைவர்கள் இப்போது கச்சத்தீவுக்காக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்பதுவும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்பதுவும் அரசியல் சாணக்கியத்தனம் என்பதைவிட தமிழர்களின் முகத்தில் சாணிபூசும்தனம் என்றுதான் தோன்றுகிறது. இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்த இலங்கை இன ஒழிப்புப்போரின்போதும், தமிழக மீனவர்களின் மீதான தொடர் தாக்குதலின்போதும் சட்டமன்றத்தில் எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

போதாதகுறைக்கு காங்கிரசு கூட்டணியிலிருந்து முன்வாசல் வழியாக வெளியேறி பின்வாசலில் போய் காத்திருந்துகொண்டே, அட்சயப்பாத்திரம், மணிமேகலை என்றெல்லாம் ஒருபக்கம் கதை சொல்லி ஏமாற்றுவது போதாமல், காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என்று வலியுறுத்திய தியாகு உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துவதும், பிரதமரே தியாகுவை உண்ணாவிரதத்தை கைவிடச்செய்யுங்கள் என்று இவர்களுக்கு கடிதம் எழுதுவதும் போதாமல்... இப்போது காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று பிரதமர் உடனடியாக அறிவிக்கவேண்டும் என்று பொங்கிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை இந்தியா பங்கேற்றால்... தமிழர்களுக்கு துரோகமிழைக்கும், தமிழர்களின் உணர்வை தொடர்ந்து மதிக்காமல் எடுத்தெறியும் அவர்களுடன் கூட்டணியே வேண்டாம் என்று இவர்கள் கைகழுவுவார்களா என்ன?...

காங்கிரஸ் கூடாரத்தில் ஏற்கனவே நிரம்பிக்கிடக்கும் கோமாளிகளின் எண்ணிக்கைக்கு பஞ்சமேயில்லை. போதாக்குறைக்கு சமீபகாலமாக அவர்களின் எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிலைப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ராகுலும் அந்த எண்ணிக்கையில் சேர்ந்துவிட மிக்க சிரமப்பட்டு முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார். இது எல்லாவற்றையும்விட தமிழகத்தைசேர்ந்த காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் ‘’காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதுதான் தமிழர்களுக்கு நன்மை... ஆகவே தமிழர்கள் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்கவேண்டாம், (வழக்கம்போலவே களிமண்ணாய் இருங்கள்)’’... என்று ஒருபடி வேகமாய் முன்னேறி நான் மேலே சொன்ன எண்ணிக்கையில் இடம்பிடிக்க முயலுகிறார்.

ஒருகாலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவராய் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவரும், தன்னை தமிழினத்தலைவராக அடையாளப்படுத்திக்கொள்ள முயலாதவருமான ஜெயலலிதாவின் இந்த ஆட்சிகால தமிழின நடவடிக்கைகள் மற்றவர்களோடு ஒப்பிடும்போது எவ்வளவோ தேவலைதான். நன்மை கிடைக்கிறதோ இல்லையோ... அட்லீஸ்ட் தமிழர்களுக்காக பல தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றியதற்காக ஒரு தமிழின உணர்வாளன் என்ற முறையில் நிச்சயமாய் இவரை ஒருமுறை கையெடுத்து வணங்கலாம். மற்றபடி இவரது எதிர்கால நடவடிக்கைகளை காலம்தான் நமக்கு காட்டவேண்டும்.

இந்திராகாந்தி காலத்தில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கிறார்களோ இல்லையோ... தமிழின உணர்வை வைத்து அரசியல் நடத்தும் கூட்டங்களுக்கு கச்சத்தீவு என்பது மேடை முழக்கத்திற்கான சிறந்ததொரு விஷயம்தான்...

தமிழ் மாநில காங்கிரசை காங்கிரசின் காலில் அடகு வைத்துவிட்டு, இப்போது தமிழின உணர்வாளராய் முழங்கத்துடிக்கும் ஜி.கே.வாசன் என்ன செய்யப்போகிறார் என்பதுவும் நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கும்வரையிலும் நீட்டிக்கப்போகும் மர்மம்தான்...

யார் என்ன செய்தாலும் சரி... எனக்குத் தெரிந்தவரை இனி தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் என்பது கனவில் மட்டுமே... என்றுதான் தோன்றுகிறது.

ஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான பனிப்போரில் கிடைத்த முன்னிலையினால் இலங்கையில் கால்பதித்து இந்தியாவுக்கு பலமானதொரு செக் வைத்திருக்கிறது சீனா என்பது எதிர்கால சந்ததியினர் சந்திக்கப்போகும் வரலாறு. இந்த லட்சணத்தில் ராஜதந்திரம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு அளித்துவரும் ஆதரவு நகைச்சுவைத்தனமானதே என்பதுதான் நிதர்சனம்.

தனது கணவனின் மரணத்துக்கு பழிவாங்க நினைத்தது குறிப்பிட்ட இயக்கத்தை மட்டுமா?... இல்லை அந்த இனத்தையேவா?... என்பது அவரவர்க்குத்தான் வெளிச்சம்...!

அகதிகளாய் நம் நாட்டிற்கு வரும் இலங்கைத்தமிழர்களுக்கே சரியான வாழ்க்கைப்பாதை அளிக்க வக்கில்லாத நாம், இலங்கையில் வாழும் தமிழர்கள் குறித்து அக்கறைப்பட்டு ஒன்றும் ஆவப்போவதில்லை என்பதால் அதை விட்டுத்தள்ளுவோம்...!

ஆனால் நம் சொந்த மண்ணின் மீனவர்கள் நாள்தோறும் சந்திக்கும் நரகவேதனையைக்கூட வெறும் பெட்டிச்செய்தியாக, அரசியல் காய் நகர்த்தலாக நாட்களை நகர்த்த கற்றுக்கொண்ட நம்மை வரலாறு மன்னிக்குமா என்பது கேள்விக்குறிதான்...!

எத்தனை எத்தனை செய்திகள்... அறிக்கைகள்... தீர்மானங்கள்... போராட்டங்கள்... என்ன நடந்தாலும் சரி... கண்டுகொள்ளாதது போலவே தமிழினத்தை ஒதுக்கிவைக்கும் மத்திய அரசுக்கு எங்கிருந்து வந்திருக்கும் இவ்வளவு உதாசீனம்?... ஒருவேளை இலங்கை போருக்குப்பின்னும்கூட தமிழக மக்கள் காங்கிரசுக்கு அளித்த ஒரு சில எம்.பி சீட்டுகளும், வழக்கமான நம் தேசிய வியாதியான மறதியும்தான்... அவர்கள் நம்மீது காட்டும் இவ்வளவு எகத்தாளத்துக்கும், உதாசீனத்துக்கும் காரணம் என்றால், அதைப்பற்றி இனி சிந்திக்கவேண்டியது நாம்தான்...!

நமோவோ... நிமோவோ... யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை ஆதரிப்பதிலும், எதிர்ப்பதிலும் நாம் காட்டும் மும்முரத்தில் கொஞ்சத்தையாவது, தமிழர்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதிலும் காட்டினால்... வெறும் பார்வையாளராக நாம் செய்த வரலாற்றுப்பிழைகளுக்கு ஒரு பாவமன்னிப்பாய் அமையக்கூடும்.

தமிழர்களின் உணர்வை மதிக்காதவர்களுக்கும், அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போகும் மத்திய அரசுக்கும்(யாராக இருப்பினும்)... எதிர்காலத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் மண்டையில் கொட்டி செய்தி சொல்ல, நம் கையில் இருக்கும் ஒரே மந்திரக்கோல்... வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குச்சீட்டுதான்...!

அதையும் மீறி கட்சி, சாதி, மதம் என்றெல்லாம் பார்த்து பார்த்து வழக்கம்போல ஓட்டளித்தும், வழக்கம்போலவே குறைகூறிக்கொண்டு ஓட்டுச்சாவடிக்கே போகாமல் புறக்கணித்தும் நமது ஜனநாயகக்கடமையை நாம் செவ்வனே ஆற்றும் பட்சத்தில்... நவநாகரீக வாழ்க்கைமுறைகளிலும், தனிமனித சந்தோஷங்களிலும், இனவுணர்வற்று இளைத்துபோன சிங்கங்களாகிய தமிழர்கள் நம் மேல் ஏற்கனவே கர்நாடக, கேரள, ஆந்திர, சிங்கள மற்றும் மத்திய அரசு எலிகள் ஏறி... ஏறி...

ஆங்... பயப்படாதீங்க... ஏறி... ஏறி... குதிச்சு விளையாடுறது போறாதுன்னு, எதிர்கால மத்திய அரசும் ஏறி கடிச்சுகூட விளையாடும் என்பதை ஒருமுறையாவது நினைத்துப்பார்த்துக்கொள்வதே நல்லது...!

சிங்கம் இளைச்சுதுன்னா, எலியெல்லாம் ஏறி... ஏறி...

மீண்டும் சந்திப்போம்...!

6 comments:

 1. நல்லாவே சொன்னீங்க...!

  படங்கள் எதையும் போடவில்லை என்றாலும் காட்சிகள் மனதில் வருகிறது... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 2. அகதிகளாய் நம் நாட்டிற்கு வரும் இலங்கைத்தமிழர்களுக்கே சரியான வாழ்க்கைப்பாதை அளிக்க வக்கில்லாத நாம், இலங்கையில் வாழும் தமிழர்கள் குறித்து அக்கறைப்பட்டு ஒன்றும் ஆவப்போவதில்லை என்பதால் அதை விட்டுத்தள்ளுவோம்////உண்மை!

  ReplyDelete
 3. அந்த லிஸ்ட்டுல ராகுல்தான் இப்போ டாப்பு. பாய்ஞ்சு நாள் நாராயண சாமியையே ஓவர்டேக் பண்ணிட்டருன்னா பாருங்களேன்...

  ReplyDelete
 4. தனது கணவனின் மரணத்துக்கு பழிவாங்க நினைத்தது குறிப்பிட்ட இயக்கத்தை மட்டுமா?... இல்லை அந்த இனத்தையேவா?... என்பது அவரவர்க்குத்தான் வெளிச்சம்...//இன்னுமா புரியல உங்களுக்கு ?? போங்க பாஸ் ...

  ReplyDelete
 5. அருமையாகச் சொல்லியிருக்கீங்க...
  படங்கள் இல்லை என்றாலும் பதிவு அருமை.

  ReplyDelete
 6. [[ஆனால் நம் சொந்த மண்ணின் மீனவர்கள் நாள்தோறும் சந்திக்கும் நரகவேதனையைக்கூட வெறும் பெட்டிச்செய்தியாக, அரசியல் காய் நகர்த்தலாக நாட்களை நகர்த்த கற்றுக்கொண்ட நம்மை வரலாறு மன்னிக்குமா என்பது கேள்விக்குறிதான்...!]]

  தமிழனுக்கு விடிவு வரவே வராது என்பது உண்மை!

  தமிழ்மணம் பிளஸ் வோட்டு 8

  ReplyDelete