SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, October 19, 2013

அறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்!

ஏற்கனவே போன பதிவில் சில அறிவியல் அற்புதங்களைப் பார்த்திருந்தோம்... அந்தப் பதிவுக்கான தேடலில் இன்னும் பல சுவாரசிய மற்றும் இதுவரையிலும் அறியாத புதுப்புது அற்புத ஜீவராசிகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அந்தப்பதிவின் நீளம் கருதி இவைகளை அதில் தவிர்த்து இப்போது தனிப்பதிவாக வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்...

கடல்...

மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையில் முக்கிய இடம் வகிக்கும் விஷயம் இந்த கடல். இதுவரையிலும் மனிதர்களால் கண்டறியப்பட்டிருக்கும் கடல் சார்ந்த அற்புதங்கள் வெறும் ஐந்து சதவிகிதம்கூட இருக்காது என்றாலும், இந்த ஐந்து சதவிகிதத்தைக்கூட நாம் முழுதாக தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பது கொட்டிக்கிடக்கும் தகவல்கள் மற்றும் இதுவரையிலான கடல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் நமக்கு உணர்த்தும் செய்தி...!

இதில் நாம் பார்க்கப்போகும் விஷயம் இதுவரையிலும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராத கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சில நன்னீர் வாழ் உயிரினங்கள்...!

வாருங்கள்... பயணத்தைத் துவங்கலாம்...

வம்பயர் மீன்கள்...
பயாரா...


இது நாம் ஏற்கனவே பார்த்த நரக மீன் போல இருந்தாலும், 6இன்ச் நீளம் வளரக்கூடிய இதன் கீழ்த்தாடை பற்களாலேயே இந்தப்பெயர் பெற்றிருக்கிறது. இவை பொதுவாக நான்கு அடி நீளம் வளரக்கூடியவை என்பதுவும், இதன் முக்கிய உணவு பிரான்கா மீன்கள்தான் என்பதுவும் அச்சுறுத்தும் தகவல். 


இதன் கீழ்த்தாடை பற்கள் இதன் வாயிலேயே குத்தாமல் இருக்க வாயின் மேற்புறத்தில் சிறப்பு ஓட்டைகளுடன் அமைந்திருப்பது இயற்கையின் அற்புதப் படைப்புதான்...!

லேம்ப்ரே...
லேம்ப்ரே எனப்படும் இந்த மீன்கள் பிற மீன்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி அதையே முக்கிய உணவாகக்கொண்டு வாழ்வதால் இதுவும் வம்பயர் மீன் என்ற பெயரை பெற்றிருக்கிறதுமற்றொரு மீனிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சும் இரண்டு லேம்ப்ரேக்கள்...

கிட்டத்தட்ட அட்டைப்பூச்சியைப் போன்ற குணநலன்கள் எனலாம் என்றாலும் இதன் உடற்பகுதி சாதாரண மீன்கள் போல இருந்தாலும் இதன் ரத்தம் உறிஞ்சும் வாய்ப்பகுதி பார்க்கும்போதே மனிதர்களை அச்சுறுத்தும் ரகமாகத்தான் இருக்கிறது.

பாக்கூ...


பாக்கூ என்பது சிலவகை மீன்களுக்கான பொதுப்பெயர் என்றாலும் இது பெரும்பாலும் பிரான்கா வகையிலேயே சைவம் சாப்பிடும் வகையான இந்த வகை மீன்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது


மனிதர்கள் போன்றே பற்களைக்கொண்ட இந்த மீன்களின் முக்கிய உணவு பழங்கள் மற்றும் மரங்களிலிருந்து உதிரும் கொட்டைகள்தான் என்றாலும் சில நேரங்களில் நீந்திக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் பழங்களிலிருந்து உதிர்ந்தது என்று நினைத்து இவை கடித்துச்சென்ற விஷயம் மனிதர்களால் பீதியான சமாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. இதனுடைய இந்த செய்கையால் அதை சிலர் "Ball Cutter Fish" என்றும் அழைக்கிறார்கள்...!

சதர்ன் ரைட் வேல் டால்பின்...

ரைட் வேல் டால்பின் என்ற பாலூட்டி இனத்தில் சதர்ன் மற்றும் நார்த் ரைட் வேல் டால்பின் என்று இரு வகைகள் இருந்தாலும், இதில் வெள்ளையும் கருப்பும் கலந்த சதர்ன் ரைட் வேல் டால்பின்தான் கண்கவர் அம்சமாகும்.

லூஸியானா பேன் கேக் வவ்வால் மீன்...
வவ்வால் மீன் குடும்ப வகையைச்சேர்ந்த இந்த மீன் மெக்ஸிகோ வளைகுடாவில் 2010ஆம் ஆண்டு கண்டறியப்பட்டிருக்கிறது. பிரபலமான பேன் கேக் வடிவில் இந்த மீன் இருந்ததால் இதற்கு இந்தப்பெயரிடப்பட்டிருக்கிறது.

அரபைமா மீன்...

பிரேசிலின் அமேசான் ஆற்றில் வாழும் இந்த வகை மீன்கள்தான் நன்னீர் வாழ் மீன்களில் பெரிய வகையாகும். மிகப்பெரிய அச்சுறுத்தும் உருவத்தைக்கொண்டிருந்தாலும் இவை மனிதர்களை தாக்கும் வகையில்லை என்பதுவும், மனிதர்களுக்கு சுவையான உணவாகவே பயன்படுகிறது என்பதுவும் கூடுதல் தகவல்தான்...!


வோர் மீன்... (Oar Fish)


கடல்வாழ் உயிரினமான இந்த மீன் கிட்டத்தட்ட 50அடி நீளம் வரையிலும் வளரக்கூடியது என்றாலும், இது பெரும்பாலும் 3000அடி ஆழத்தில் வாழக்கூடியது என்பதால் மனிதனுடன் குறுக்கிடும் நிகழ்வு மிக அபூர்வம்தான். இதன் உடலமைப்பின் அடிப்படையில் இதற்கு ரிப்பன் மீன் என்றும் ஒரு பெயர் இருக்கிறது...!


யெட்டி நண்டு...

பழங்காலக்கதையிலிருக்கும் யெட்டி போன்ற உறுப்பைக்கொண்டிருப்பதால் யெட்டி நண்டு என்று பெயரிடப்பட்ட இது பசிபிக் கடலில் நடந்த ஒரு ஆராய்ச்சியின்போது 2005ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஹைட்ரோ தெர்மல் ஓட்டைகளில் வாழும் இவைகளின் முக்கிய உணவுகூட அந்த ஓட்டைகளில் இருக்கும் ஒருவகை கெமிக்கல்தான் என்றும், அல்பினோ நோய் கண்கள் போல இருக்கும் இதன் கண்களுக்கு பார்வை கிடையாது என்றும் கண்டறியப்பட்டிருந்தாலும் இதன் மீதான ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.


ஜியான்ட் ஐசோபாட்...

ஒட்டுண்ணி ரகத்தைச் சேர்ந்த இந்தக் கடல்வாழ் உயிரினம் பெரும்பாலும் இறந்துபோன திமிங்கலங்கள், மீன்கள் போன்றவற்றை உண்டு உயிர் வாழ்வன என்றாலும் கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் வரையிலும் எவ்வித உணவும் இன்றி இவைகளால் உயிர் வாழ முடியும் என்பதுவும், 130 மில்லியன் வருடங்களுக்கும் மேலாக இதன் உடலமைப்பில் எவ்வித பரிணாம மாற்றமுமின்றி இவைகள் அப்படியே தொடர்ந்து வாழ்வதுவும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்தான்


சாதாரண ஐசோபாட்களின் அளவையும், இந்த ஜியாண்ட் ஜசோபாடின் அளவையும் காட்டும் இந்தப் படங்களைப் பார்க்கும்போது இதை ஏன் நான் இந்த அறிவியல் அற்புதத்தில் பகிர்ந்தேன் என்பது உங்களுக்கே புரியும்...!


கிரினேடியர் மீன்...


வடக்கு பசிபிக் பகுதியிலிருந்து அலாஸ்கா வளைகுடாவின் கிழக்குப்பகுதி வரையிலும் கிட்டத்தட்ட 140மீட்டர் முதல் 3500 மீட்டர் வரை ஆழத்தில் வாழக்கூடியனதான் ஏழு அடி நீளம் வரையிலும் வளரக்கூடிய இந்த மீன் வகையாகும். இதன் வம்பயர் பற்களும் நீண்ட இதன் வால் பகுதியும் இதையும் ஒரு விநோதமான படைப்பாக மனிதர்களிடையே பிரபலப்படுத்தியிருக்கிறது.


ஜப்பானீஸ் ஸ்பைடர் நண்டு...


ஜப்பானியக்கடல் பகுதியில் வாழும் இவை, கடல் நண்டுகள் வகையைச் சேர்ந்தது என்றாலும் இதன் நீளமான ஸ்பைடர் போன்ற கால்கள்தான் இதற்கு ஸ்பைடர் நண்டு என்ற பெயரை பெற்றுத்தந்திருக்கிறது. இதன் கால்கள் கிட்டத்தட்ட 12 அடி நீளம் வரையிலும், உடல் ஒன்றரை அடி வரையிலும், எடை 19 கிலோ வரையிலும் வளரக்கூடியவை என்றாலும், பெரும்பாலும் ஜப்பானிய மீனவர்களிடம் மாட்டுவது நான்கு அடி நீளம் வரையிலும் கால்களை உடைய ஸ்பைடர் நண்டுகள்தான்...


நீல கிளி மீன்...

90 வகையான மீன்களைக்கொண்ட கிளி மீன்களின் வகையைச் சேர்ந்ததுதான் இந்த நீல கிளி மீனும்...கிளி போன்ற வாயமைப்பை உடைய இதன் தோற்றம்தான் இதற்கு இந்தப்பெயரை பெற்றுத்தந்திருந்தாலும் இதன் முழுவதுமான நீல நிறம் அற்புதமான விஷயம்தான். சராசரியாக 30 முதல் 75 செ.மீ வரை வளரும் இந்த மீன்களில் சில ஆண் மீன்கள் 120செ.மீ வரையிலும்கூட வளருமாம். அட்லாண்டிக் பெருங்கடல், பிரேசில், பகாமா, பெர்முடா மற்றும் மேற்கிந்தியத்தீவு பகுதிகளில் காணப்படும் இந்த வகை மீன்கள் பெரும்பாலும் தங்களது நேரத்தில் 80 சதவீதத்தை உணவைத்தேடுவதிலேயே செலவழிக்கின்றதாம்...!


கடல் ஸ்லக்ஸ்... (Sea Slugs)

நத்தை குடும்பத்தைச்சேர்ந்த இந்த உப்புத்தண்ணி ஜீவராசிகளில் இதுவரையிலும் கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட வகைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. நியூடிபிரான்ச் என்பதன் கீழ் அடங்கும் வகைகளும்கூட கடல் ஸ்லக்தான் என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு என்றும் அறிவியல் கூறுகிறது


இதில் சில கடல் ஸ்லக்குகள் தன்னுள்ளே ஆண், பெண் இரண்டு இனப்பெருக்க உறுப்புகளையும் கொண்டது என்பதுவும், கலவியில் ஈடுபடும் இரண்டு கடல் ஸ்லக்குகள் ஒன்றையொன்று கர்ப்பமாக்கும் என்பதுவும் சுவாரசியமான கூடுதல் தகவல்...!

இதில் பேய் ஸ்லக் எனப்படும் கீழ்க்கண்ட வகையைப் போன்ற இரத்தம் உறிஞ்சும் ஸ்லக்குகள்கூட உண்டு...


மற்றபடி இதன் அறிவியல் பெயர்களையும், ஒவ்வொன்றின் குணாதிசயங்களையும் அலசி ஆராய்வதைவிடவும் வெறுமனே இவைகளில் சிலவற்றின் அழகை மட்டும் ரசித்து இயற்கையை வியக்கலாம் என்பது என் எண்ணம்...!சிவப்பு உதடு வவ்வால் மீன்...


இதன் படத்தை பார்த்ததுமே இதன் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்... கிட்டத்தட்ட 30மீட்டர் ஆழத்தில் கடலில் வாழும் இந்த ஜீவராசிகள் நீந்த முடியாததால் பெரும்பாலும் கடலின் ஆழத்தின் தரைப்பரப்பில் நடப்பதுதான் வாடிக்கை...


ஸ்டார்ரி ஈல்...


ஈல் என்றாலே ஹை வோல்டேஜ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மீன் என்று நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் வெறும் 2அடி நீளம் மட்டுமே வளரக்கூடிய இந்த ஸ்டார்ரி ஈல்கள் அவ்வளவு ஆபத்தானவை இல்லை என்பதால் பெரும்பாலான அகுவேரியம்களில்கூட இவைகள் வளர்க்கப்படுகின்றன. கடலில் 7முதல் 100 அடி ஆழத்தில் வாழக்கூடிய இந்திய பசிபிக் பெருங்கடலில் கண்டறியப்பட்ட இந்த வகை ஈல்கள் பெரும்பாலும் குகை போன்ற பொந்துகளில் பதுங்கியிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டியபடி இரைக்காக காத்திருந்து வேட்டையாடுமாம்...!


பாப்பிட் வார்ம்...


கிராவல், களிமண், கோரல் போன்ற கடலின் தரைப்பகுதியில் வாழும் இந்த வார்ம் 3 அடி நீளத்திலிருந்து 10 அடி நீளம் வரையிலும் வளரக்கூடியவை என்பது பயப்பட வைக்கும் தகவல். அத்தோடு இது வெறும் புழுவாக இல்லாமல் விஷத்தன்மையும், கொடிய கூரிய பற்களையும் உடையது என்பதுவும் கூடுதல் தகவல்...  கடலுக்கடியில் தரைப்பகுதியில் தலையை மட்டும் நீட்டி இரை வந்ததும் அதிவேகமாக தாக்கும்போது பல நேரங்களில் இரை இரண்டு துண்டாகிப்போவதிலிருந்து இதனுடைய வேகத்தையும், பற்களின் கூர்மையையும் தெரிந்து கொள்ளலாம் என்றாலும் இதன் பார்வை மங்கலானதுதான் என்பது ஆறுதல் தரும் விஷயம்.


மார்ச் 2009ம் ஆண்டுதான் முதன் முதலில் இது இங்கிலாந்தின் கார்ன்வால் என்ற மாகாணத்திலிருந்த ஒரு அக்குவேரியம்ல் கண்டறியப்பட்டது. அடிக்கடி பல மீன்கள் காணாமல் போவதையும், சில நேரங்களில் இரண்டு துண்டுகளாக மிதப்பதையும் பார்த்த அக்குவேரியம் ஊழியர்கள் அதை சுத்தப்படுத்தும்போதுதான் தானே உருவாகி ஒளிந்திருந்த இந்த பாப்பிட் வார்ம் முதன் முதலில் உலகுக்கு அறிமுகமாகியிருக்கிறது.


கடல் தக்காளி...


பியூரா சிலென்சிஸ் என்பதுதான் இதன் அறிவியல் பெயர் என்றாலும் இதன் உருவத்தின் மூலம் இது சீ டொமெட்டோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. பெரு மற்றும் சிலியின் கரைப்பகுதி கடலில் காணப்படும் இவை வெளிப்புறத்தோற்றத்தில் பாறை போல இருந்தாலும் உள்ளே செக்கச்சேவேல் என சதைப்பகுதிகளை கொண்டிருக்கிறது.


இது தனித்திருக்கும்போது தனக்குத்தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. இதை கடல் உணவாக உண்பவர்கள் பச்சையாகவும், வேகவைத்தும் உண்ணுகிறார்கள். 2007ம் ஆண்டு நிலவரப்படி இது ஜப்பானுக்கு 24.2 சதவீதமும், ஸ்வீடனுக்கு 32.5 சதவீதமும் ஏற்றுமதி ஆகும் கடல் உணவாகும்.


கடல் வெள்ளரிக்காய்...
என்னடா இது?... கடல் தக்காளி, கடல் வெள்ளரிக்காய்னு இப்படியெல்லாமா பேரு இருக்கும்னு நீங்க யோசிக்கலாம். ஆனா இந்தப்படத்தை பாருங்கள்... இப்போ இந்தப்பெயர் ஓகேதானே?...ஆசிய பசிபிக் கடலில் வாழும் இந்த நீர்வாழ் உயிரினத்தில் கிட்டத்தட்ட 1250 வகைகள் இதுவரையிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. கடல் வெள்ளரிக்காய் என்றழைக்கப்படும் இந்த உயிரினங்கள் தண்ணீரில் ஹார்மோன் சிக்னலை அனுப்புவதன் மூலம் ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவை. 
அத்தோடு இல்லாமல் இதன் உடலமைப்பு மிகச்சிறிய இடைவெளியில்கூட இவைகள் நுழையும் நேரத்தில் ஃப்ளெக்சிபிளாகவும், பின்னர் கடினமானதாகவும் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டது. ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை நீளமும் சராசரியாக 2இன்ச் வரை விட்டமும் வளரக்கூடியன இந்த கடல் வெள்ளரிக்காய்கள்...!


மிகச்சிறந்த உணவாக மட்டுமின்றி இது மிகச்சிறந்த மருந்தாகவும் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது கூடுதல் தகவல்...!


பாம்புத்தலை மீன்...


25 செ.மீ முதல் 1மீட்டர் வரையிலும் நீளம் வளரக்கூடிய இவை நன்னீர் மீன்களாகும். இதன் கூறிய பற்களுடன் கூடிய வாய் மற்றும் பாம்பு போன்ற உடலமைப்பு ஆகியன அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், இதன் உணவுகள் சில வகை நீர்ப்பூச்சிகள், தவளைகள், சிறிய வகை மீன்கள் மற்றும் சில சமயத்தில் எலிகள். மற்றபடி இதற்கு பாம்பு போல விஷத்தன்மை எதுவும் இல்லை. இதில் பெண் மீன்கள் ஒருமுறைக்கு 15,000 முட்டைகள் வீதம் இரண்டு வருடத்திற்கு 1,50,000 முட்டைகள் இடும் என்பது ஆச்சர்யமான தகவல்...!


பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு சிலவகை நீர் வாழ் உயிரினங்களிலிருந்துதான் பாம்புகள் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாய் இந்த வகை மீன்களை உதாரணம் காட்டுபவர்களும் உண்டு. கிட்டத்தட்ட முக்கால் கி.மீ வரையிலும் நீரில்லாத ஈரமான நிலப்பரப்பில் தவழ்ந்து வேறு நீர்நிலைகளை சென்றடையும் திறன் படைத்தவை இவை என்பது கூடுதல் தகவல்...


பேய் பைப் மீன்...

கடலில் வாழும் பல வண்ண தாவரங்கள் மற்றும் பாசிகள் போன்றே தோற்றம் கொண்ட இந்த வகை மீன்கள் நகரும்போதுதான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இவைகள் பைப் மீன்கள் இனத்தைச் சேர்ந்தவை இல்ல என்றபோதிலும் இதன் படங்களைப் பார்க்கும்போது இதன் பெயர்க்காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும். 10 முதல் 15செ.மீ வரை நீளமுள்ள இவ்வகை மீன்களில் பலவகையும், பல வண்ணமும் இருப்பது கண்கவர் அம்சம்தான்...
கடல் டிராகன்...
டிராகன் போல தோற்றம் கொண்ட இந்த சிறிய வகை கடல் ஜீவராசிகள் தெற்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய டிராபிகல் கரைப்பகுதி கடலில் காணப்படுபவை. கடல் குதிரைகள் வகைப்படுத்தப்பட்டிருக்கும் அதே குடும்பத்தைச்சேர்ந்தவைதான் 20 முதல் 25 செ.மீ வரை வளரும் இந்த கடல் டிராகன்...


இதில் லீஃபி கடல் டிராகன், வீடி கடல் டிராகன் என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் லீஃபி கடல் டிராகன் தன்னை கடல் செடிபோல தற்காத்துக்கொள்வதில் அதன் உடலமைப்பு பெரிதும் கைகொடுக்கிறது. இவ்விரண்டு வகையிலும் பல வண்ணத்தில் கண்கவர் டிராகன் மீன்களை கண்டு மகிழுங்கள்...


ஒருமுறை 250 முட்டைவரை இடும் பெண் இனம் அதை ஆண் இனத்திடம் கைமாற்றிவிடுவதால், ஆண் இனம்தான் கிட்டத்தட்ட 9வாரங்களுக்கு அதை அடைகாத்து குஞ்சு பொறிக்க வைக்கின்றன என்பது கூடுதல் தகவல்...

ஹேச்சட் மீன்...
வித்தியாசமான உடலமைப்பும், கண்களும் கொண்ட இந்தவகை மீன்கள் வாழ்வது அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப்பெருங்கடல் பகுதிகளில்தான்...1 இன்ச் முதல் 5 இன்ச் நீளம் வரையிலும் வளரக்கூடிய இந்த மீன்கள், 50 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான ஆழத்தில் வாழ்கின்றன. மின்மினிப்பூச்சியைப்போன்றே இவைகளுக்கும் கடலுக்குள் ஒளிரும் தன்மை இருப்பது கூடுதல் சுவாரசியம்...!

கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல நம்மால் கரையேறவே முடியாத அளவுக்கு தகவல்களும், நாம் இதுவரையிலும் கண்டிராத அற்புத உயிரினங்களும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. ஏற்கனவே ஃபில்டர் செய்து பதிவேற்றியிருந்தாலும்கூட இன்னமும் பல அற்புதங்களை மனதேயில்லாமல் ரிஜெக்ட் செய்து எனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு பதிவை முடிக்கிறேன். (முடிந்தால் சில காலங்களுக்குப்பின் மீண்டும் ஒரு பதிவில் இன்னும் பல அற்புத கடல்வாழ் ஜீவன்களைப் பார்க்கலாம்...!)

கடைசிப்பரிசு உங்களுக்காக...

யானைச்சுறா...


மெகா மவுத் சுறா...

நீள மூக்கு ச்சிமேரா...

Rat Fish...

பல அற்புதங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தாலும் இது கடல் சார்ந்த பதிவு போல முடிந்து போனதால் வெகு விரைவிலேயே கடல் தவிர்த்த இன்னமும் பல அற்புத உயிரினங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்...

மீண்டும் சந்திப்போம்...!

நன்றி – இந்த தகவல்களுக்காகவும், படங்களுக்காகவும் நான் நுழைந்த பல்வேறு இணையதளங்கள்...!

21 comments:

 1. பிரமாண்டம் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் தோணவில்லை... பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. முதல் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தலைவா...

   Delete
 2. நல்லதொரு அறிவியல் பகிர்வு.
  படங்களும் அழகு...
  தகவல்களை படங்களுடன் திரட்டி எங்களுக்கு அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அதிசயம் அற்புதம்
  மீண்டும் மீண்டும் பார்த்துப்
  பரவசம் கொண்டோம்
  விரிவான அருமையான சுவாரஸ்யமான
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. Wonderful hard work, and really useful information. Thanks!

  ReplyDelete
 5. மிகவும் அற்புதம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சுவாரசியமான கடல் உயிரனங்கள் பற்றிய பதிவு மூச்சு முட்ட நிறைய தகவல்களை கொடுத்திருக்கீங்க. உங்கள் ஆர்வமும் உழைப்பும் வியப்பை தருகிறது. நன்றி சாய்ரோஸ்

  ReplyDelete
 7. அற்புதம்! தொடருங்கள்.

  ReplyDelete
 8. We see it easily in one minutes.But Behind this terrific compilation we are all know your Hard work.Really Appreciate it.Keep it up.We expect more from you.

  ReplyDelete
 9. பாப்புலாரிட்டி, திறமை, தகுதி என பல அம்ச அடிப்படையில் பாரதப்பிரதமராக உங்க அடுத்த சாய்ஸ் யாராக இருக்கக்கூடும்?

  இப்படி கேட்டிருந்தா நன்றாக இருந்திருக்கும், மக்கள் சைஸ் அப்படின்னு கேட்டிருக்கீங்க, ஒட்டு போடுபவர்கள்
  பாப்புலாரிட்டி, திறமை, தகுதி

  இதையெல்லாம் வச்சுதான் போடுறாங்கன்னு நீங்க நம்புறீங்க,
  பாப்புலாரிட்டி

  யை வேடுமானால் பார்க்கலாம், ஆனால் மற்ற தகுதிகள் எல்லாம் மக்கள் பார்க்கிறாங்கன்னு நான் நினைக்கவில்லை, அப்படி ஓட்டு போட்டிருந்த இன்னைக்கு நாம் இவ்வளவு கேவலமாக இருந்திருக்க மாட்டோம்.

  ReplyDelete
 10. சுவாரசியமான கடல் உயிரனங்கள் (அற்புதம்! )

  ReplyDelete