SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, October 11, 2013

லியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு!


“The noblest pleasure is the joy of understanding.” – Leonardo

எச்சரிக்கைஇதுவொரு வரலாற்றுத்தகவல் பதிவு. விருப்பமில்லாதவர்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம்!

லியோனார்டோ டாவின்சி... இன்றைய உலகத்துக்கு இந்தப்பெயர் அறிமுகப்பட்டிருப்பது உலகின் தலைசிறந்த ஓவியர் மற்றும் மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் என்ற அளவில் மட்டும்தான் இருக்கக்கூடும்.

ஆனால் அதையும் தாண்டி லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை உண்மைகளையும், மோனலிசா மர்மப்புன்னகை மற்றும் அதையும் தாண்டி நிறைந்து கிடக்கும் அவரது மற்ற திறமைகளையும் அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் இந்தப்பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

உண்மையிலேயே லியோனார்டோவின் திறமைகள் அவர் வாழ்ந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு, தனது வாழ்நாளில் அவர் சோற்றுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்து, அவர் இறந்தபிறகுதான் அவரது படைப்புகள் இவ்வுலகத்தினரால் கொண்டாடப்பட்டதா?...

லியோனார்டோ ஒரு ஓரினச்சேர்க்கைவாதியா?...

லியோனார்டோ வரைந்த மோனலிசா ஓவியத்தில் இருப்பது யார்?... ஏன் அந்த ஓவியம் இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்றது?... அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் சிறப்பு?...

மோனலிசா ஓவியத்தைத்தவிர லியோனார்டோவின் மற்ற ஓவியங்கள், கண்டுபிடிப்புகள் என்னென்ன?...

இப்படி எண்ணற்ற தகவல்களுக்கான பதில்தான் இந்த வரலாற்றுக்கட்டுரை...

லியோனார்டோ டாவின்சிஃபுளோரன்ஸ் ராஜ்யத்தின்(இன்றைய இத்தாலி) வின்ஸி என்ற இடத்தில், கேத்தரினா என்ற ஏழை கூலிவேலை செய்யும் பெண்ணுக்கும், செல்வந்தரும் லீகல் நோட்டரியுமான மெஸ்ஸர் பியாரோ டா வின்சி என்பவருக்கும் திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உருவாகி 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் பிறந்த குழந்தைதான் ஓவியர், சிற்பி, இசைமேதை, கணிதமேதை, ஆர்க்கிடெக்ட், பொறியாளர், ஜியாலஜிஸ்ட், எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர், பாட்டனிஸ்ட், உடற்கூறு ஆய்வாளர் என்று சகலகலாவல்லவனாக மாறிய இந்த மாபெரும் மேதை.

லியோனார்டோவின் முழு இயற்பெயர் லியோனார்டோ டி சர் பியாரோ டா வின்சி என்பதுதான். அதாவது "Leonardo, (son) of (Mes)ser Piero from Vinci" என்று அர்த்தமாம். அதுதான் இன்றைய காலத்தில் டாவின்சி என்று சுருக்கமாக அழைக்கும் வகையில் மாறியிருக்கிறது.

Anchiano-ல் லியோனார்டோ வாழ்ந்த இளமைப்பருவ வீடு...

தனது ஐந்தாவது வயது வரையிலும் தனது தாயுடன் Anchiano என்ற இடத்தில் வசித்து வந்த லியோனார்டோ, 1457ல் இருந்து தனது தந்தைக்கு சொந்தமான வீட்டில், வின்சி என்ற இடத்தில் வசித்திருக்கிறார். அவரது தந்தை திருமணம் முடித்து கூட்டி வந்த பதினாறு வயது பெண்ணான அல்பியீரா என்பவர் லியோனார்டோ மீது அளவு கடந்த பாசம் காட்டியபோதும் அவரும் இளவயதிலேயே இறந்து போயிருக்கிறார். அதன் பின் லியோனார்டோவுக்கு பதினாறு வயதிருக்கும்போது அவரது தந்தை மீண்டும் பிரான்செஸ்கா என்ற இருபது வயது பெண்ணொருத்தியை திருமணம் செய்திருக்கிறார். இப்படி மூன்றாவது, நான்காவது என்ற எல்லையோடு நிறுத்திவிடாமல் அதற்கு மேலும் வாரிசுகளை உருவாக்கும் பணியை அவரது தந்தை தொடர்ந்ததாய் வரலாறு கூறுகிறது.

லியோனார்டோவின் குழந்தைப்பருவ வாழ்க்கை குறித்து போதிய வரலாற்றுச்சான்றுகள் எதுவும் இல்லையென்ற போதிலும், முறை தவறிய வழியில் பிறந்து, தாய்ப்பாசம் இல்லாமலும், முறையான தந்தைப்பாசம் இல்லாமலும் வளர்ந்த அவரது வாழ்க்கைதான் அவரை ஓவியங்களுடனும், புதுப்புது விஞ்ஞான சிந்தைகளுடனும் பேசவைத்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

1466ம் ஆண்டு, அதாவது லியோனார்டோவின் பதினான்காவது வயதில் ஃப்ளோரன்ஸ் மாகாணத்தின் முக்கியமானதில் ஒன்றாக விளங்கிய வெராச்சியோ என்ற கலைஞரின் பட்டறையில் அவர் அப்பரண்டீசாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஒருவகையில் பார்த்தால் இந்த வெராச்சியோதான் லியோனார்டோவின் குரு என்றும் சொல்லலாம். வெராச்சியோவின் பட்டறையில்தான் லியோனார்டோ கெமிஸ்ட்ரி, மெட்டலார்ஜி, பிளாஸ்ட்டர் காஸ்டிங், மரவேலை, தோல்வேலைகள் மற்றும் மெக்கானிக்ஸ் போன்றவைகளை முறையான தியெரிட்டிகல் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கற்றிருக்கக்கூடும் என்பது வரலாற்றில் நிலவும் கருத்து. அத்தோடு வரைதல், சிற்பம் உருவாக்குதல், மாடலிங் போன்றவற்றின் தொழில்நுட்பமும்கூட லியோனார்டோவுக்கு அந்தப்பட்டறையில்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதுவும் ஒரு முக்கிய கருத்து. லியோனார்டோவின் காலத்தில் அங்கு வாழ்ந்த இன்னும் பல முக்கிய கலைஞர்களும் இதேப்பட்டறையில்தான்  உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பார்த்தலோமியோ கலோனி சிற்பம்...

வெராச்சியோவின் பட்டறையில் உருவான பெரும்பாலான ஓவியங்கள் அவரது பட்டறையில் பயின்றவர்களின் பங்களிப்பாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் வெராச்சியோவின் கடைசிப்படைப்பான பார்த்தலோமியோ கலோனியின் சிற்பம் உலகளவில் ஒரு மாஸ்டர் பீசாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. வெராச்சியோவின் மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பு டால்பினுடன் இருக்கும் சிறகு முளைத்த பையன் சிற்பம்.


வெராச்சியோ வரைந்த The Baptism of Christ என்ற ஓவியத்தில் அவருக்கு துணையாக பங்காற்றிய லியோனார்டோவின் கைவண்ணத்தை கண்டு, குருவையே மிஞ்சும் சிஷ்யனாக அவரது திறமையைக் கண்டு வியந்த வெராச்சியோ அதற்கு பிறகு ஓவியம் வரைவதையே நிறுத்திவிட்டதாகவும் அபூர்வ வரலாற்றுத்தகவல் ஒன்றும் நிலவுகிறது.
The Baptism of Christ...

வெராச்சியோவின் கைவண்ணத்தில் உருவான டேவிட் என்பவரின் பித்தளை சிற்பத்துக்கும், Tobias and the Angel என்ற ஓவியத்திலிருக்கும் ஆர்க்ஏஞ்சல் ரேபேல் என்ற உருவத்திற்கும் மாடலாக இருந்தது லியோனார்டோதான் என்பதுவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கணிப்புதான்.
Tobias and the Angel...

1472ம் ஆண்டு, அதாவது லியோனார்டோவின் இருபதாவது வயதில் அவர் மாஸ்டராக தேர்ச்சி பெற்றதும் அவரது தந்தையால் அவருக்கென சொந்தமாக ஒரு பட்டறை வைத்துக் கொடுக்கப்பட்டபிறகும்கூட, வெராச்சியோ மற்றும் அவரது பட்டறையுடன் தனக்கிருந்த நெருக்கத்தை குறைக்காமலேயே தொடர்ந்திருக்கிறார் லியோனார்டோ. லியோனார்டோவின் ஆரம்பகால மற்றும் முதல் படைப்பாக வரலாற்றில் பதியப்பட்டிருப்பது ஆகஸ்ட்-5ம் நாள் 1473ம் ஆண்டு வெறும் பேனாவாலும், மையாலும் அவர் வரைந்த ஆர்னோ பள்ளத்தாக்கு என்ற ஓவியம்தான்.
Arno Valley by Leonardo...

லியோனார்டோ ஒரு ஓரினச்சேர்க்கைவாதி என்ற ஒரு தகவலும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. ஃப்ளோரண்டைன் கோர்ட் ரெக்கார்டுகளின் பதிவுகள் 1476ம் ஆண்டு லியோனார்டோவும் இன்னும் மூன்று இளைஞர்களும் இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்திருந்தாக (ஆண் விபச்சாரம்) குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதையும், பின் குற்றத்தில் சிக்கிய ஒரு இளைஞன் பெரிய செல்வந்தர்களில் ஒருவரின் உறவினர் என்பதால் அவர்களது குறுக்கீட்டின் பேரில் வழக்கு பலமிழந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாய் வரலாறும் கூறுகிறது. பல இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆய்வாளர்களும்கூட லியோனார்டோ நிச்சயம் ஓரினச்சேர்க்கையாளராகத்தான் இருந்திருக்கவேண்டும் என்றும், அதற்கு சிறந்த சாட்சியாக அவரது ஒரு சில ஆண் நிர்வாண ஓவியங்களையும் (குறிப்பாக John the Baptist மற்றும் Bacchus ஓவியங்கள்),  அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு மனைவியோ, காதலியோ இல்லாத வரலாற்றையும்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்
John The Baptist...

Bacchus...

இருந்தாலும் வெறுமனே இந்த ஓவியங்களை வேறு கோணத்தில் கற்பனைப்படுத்தி லியோனார்டோவை குற்றம் சுமத்துவது தவறு என்றும், இந்த ஓவியங்களின் உணர்த்த விரும்பும் சேதி வேறு வகையில்கூட இருக்கலாம் என்றும் பலரும் விவாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.

லியோனார்டோவின் வாழ்வில் அவருக்கு எந்தவித பெண்களுடனும் தொடர்பில்லை என்ற போதிலும், அவருக்கு சிறந்த நண்பர்களாக சிசிலியா என்ற பெண்ணும், எஸ்தே சகோதரிகளான பீட்ரைஸ் மற்றும் இசபெல்லா ஆகியோரும் இருந்திருக்கின்றனர். இதில் இசபெல்லா என்பவரின் ஓவியத்தை தனது ஒரு பயணத்தின்போதே வரைந்திருக்கிறார் லியோனார்டோ என்பது குறிப்பிடத்தக்கது. இதே இசபெல்லாதான் மோனலிசா ஓவியத்திலும் இருப்பது என்றும் ஒரு வாதம் இருக்கிறது.
Isabella d'este...

1476ம் ஆண்டின் அந்த நீதிமன்ற நிகழ்வுக்குப்பின் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 1478ம் ஆண்டு வரையிலும் லியோனார்டோ எங்கு இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்று எவ்விதத்தகவலும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. 1478ம் ஆண்டு வெராச்சியோவின் பட்டறையுடனான தொடர்பிலிருந்தும், தனது தந்தையின் வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்தும் முற்றிலுமாக விலகியிருக்கிறார். ஜனவரி, 1478ம் ஆண்டு லியோனார்டோ தனது முதல் தனிப்பட்ட வேலையை பெற்றிருக்கிறார். 1481ம் ஆண்டு அவரது இரண்டாவது படைப்பான The Adoration of the Magi என்ற ஓவியம் லியோனார்டோவின் மிலனுக்கு சென்ற பயணத்தால் தடைபட்டிருக்கிறது.
The Adoration of the Magi...

1482ம் ஆண்டு லியோனார்டோவால் வெள்ளியில் குதிரையின் தலை வடிவில் செய்யப்பட்ட Lyre என்ற இசைக்கருவியை மிலனை ஆண்டு கொண்டிருந்த லுடோவிகோ எஸ்ஃபோர்ஸா என்பவரை சமாதானப்படுத்தும் பரிசுப்பொருளாக வழங்குவதற்காக மெர்சி என்பவரால் மிலனுக்கு அனுப்பப்பட்டார் லியோனார்டோ. இந்த நேரத்தில் லியோனார்டோ லுடோவிகோவுக்கு ஏற்கனவே தனது திறமைகள் மற்றும் ஓவியம் வரையும் திறன் குறித்து பல கடிதங்களை எழுதியிருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1482 லிருந்து 1499ம் ஆண்டு வரையிலும் லியோனார்டோவின் வாழ்க்கை மிலனில்தான் கழிந்திருக்கிறது. இந்தக்காலக்கட்டத்தில்தான் The Virgin of the Rocks மற்றும் The Last Supper ஆகிய இரண்டு தலைசிறந்த ஓவியங்களும் லியோனார்டோவால் வரையப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த காலக்கட்டத்தில் லுடோவிகோவின் பலவித புராஜெக்ட்டுகளுக்கும் லியோனார்டோ பணியமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The Virgin of the Rocks...

Preparation drawing for "The Last Supper"...

The Last Supper...

1499ம் ஆண்டு... இரண்டாம் இத்தாலியப்போரின் ஆரம்பகாலம்... லுடோவிகோ அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதும், லியோனார்டோ தனது உதவியாளரான சாலை மற்றும் தனது நண்பரும் கணிதமேதையுமான லூகா ஆகியோருடன் மிலனிலிருந்து வெளியேறி வெனீஸ் சென்றிருக்கிறார். அங்கு லியோனார்டோவுக்கு கிடைத்த வேலை மிலிட்டரி ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர்.

1500ம் ஆண்டு லியோனார்டோ மீண்டும் ஃப்ளோரன்ஸ் திரும்பியபோது அங்கு அவரும் அவரது கூட்டாளிகளும் சர்வைட் எனப்படும் மதத்துறவிகளால் விருந்தினராக தங்க வைக்கப்பட்டு, அவருக்கு அங்கேயே ஒரு பட்டறையும் வைத்துத்தரப்பட்டிருக்கிறது. அந்தக்காலக்கட்டத்தில் லியோனார்டோவால் படைக்கப்பட்ட கார்ட்டூன்தான் The Virgin and Child with St.Anne and St.John the Baptist...
Preparation drawing note by Leonardo...


Drawing by Leonardo...

1502ம் ஆண்டு செஸினா நகரத்தில் 6ம் போப் அலெக்ஸாண்டரின் மகனான சீஸர் பார்ஜியா என்பவரிடம் மிலிட்டரி ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியராக வேலைக்குச் சேர்ந்து இத்தாலி முழுவதும் சுற்றி வந்திருக்கிறார் லியோனார்டோ. அப்போது அவர் வரைந்த இமோலா நகரின் வரைபடத்தைக்கண்டு வியந்த சீஸர் பார்ஜியா உடனடியாக லியோனார்டோவை மிலிட்டரி தலைமை ஆர்க்கிடெக்ட்டாக பதவி உயர்த்தியிருக்கிறார்வரைபடம் பற்றிய போதிய அறிவில்லாத அந்தக் காலகட்டத்திலேயே இன்றைய கூகுளின் சேட்டிலைட் இமேஜூக்கு சவால் விடும் வகையில் லியோனார்டோ வரைந்த துல்லியமான அந்த இமோலா வரைபடம் ஆச்சர்யமான அறிவியல் ரகசியம்தான்...


மீண்டும் ஃபுளோரன்ஸ்க்கு திரும்பிய லியோனார்டோ 1503ம் ஆண்டு தான் மாஸ்டர் பட்டம் பெற்ற Guild of St.Lukeல் இணைந்திருக்கிறார். அங்கு அவர் உருவாக்கியதுதான் The Battle of Anghiari ஓவியம்... பெரும்பாலும் முதலில் preparation ஓவியத்தை வரைந்தபின் முழு ஓவியத்தையும் வரைவதுதான் லியோனார்டோவின் வழக்கமாய் இருந்திருக்கிறது. இந்த ஓவியத்தில் அவரின் Preparation ஓவியம் மட்டும்தான் அவரது குறிப்பு நோட்டிலிருந்து கிடைத்திருக்கிறது. ஒரிஜினல் ஓவியம் மிஸ்ஸிங் என்று கருதப்படுகிறது.இருந்தாலும் லியோனார்டோவின் குறிப்புகளின் அடிப்படையில் அந்த ஓவியம் 1603ம் ஆண்டு பீட்டர் பால் ரூபன் என்ற வேறு ஒரு ஓவியரால் முழுமை செய்யப்பட்டிருப்பது இதுதான்...1506ல் மீண்டும் மிலன் திரும்பியதும், 1507ல் மீண்டும் ஃபுளோரன்ஸ் திரும்பியதும், 1508ல் மீண்டும் மிலன் திரும்பி வசித்ததும், லியோனார்டோவின் நிலையற்ற வாழ்க்கைக்கான சாட்சியங்கள்.

1513 முதல் 1516 வரையிலும் ரோமின் வாடிகனில் பத்தாம் போப் லியோவின் கீழ் பணிபுரிந்து தனது காலத்தை கழித்திருக்கிறார் லியோனார்டோ. டிசம்பர் 19, 1515ம் ஆண்டு பத்தாம் போப் லியோவுக்கும் பிரான்சின் பிரான்சிஸ்-1 க்கும் நடந்த ஒரு சந்திப்பில் லியோனார்டோவும் கலந்து கொண்டார். அந்தச்சந்திப்பில் பிரான்சிஸ்-1 லியோனார்டோவிடம் தனக்காக ஒரு மெக்கானிக்கல் சிங்கத்தை உருவாக்கித்தரவேண்டும் என்றும், அந்த சிங்கம் நடந்து வந்து தனது நெஞ்சைத்திறந்து உள்ளிருந்து லில்லி மலர்க்கொத்து ஒன்றை எடுத்துத்தருவதுபோல வடிவமைக்கப்படவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து 1516ம் ஆண்டு பிரான்காயிஸ் பணிக்குச்சென்ற லியோனார்டோவுக்கு பிரான்சிஸ்-1 தனது அரண்மனையின் அருகிலேயே Clos Luce என்றொரு வீட்டைத்தந்து தங்க வைத்திருக்கிறார்.


லியோனார்டோ கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்த அரண்மனை போன்ற வீடு...

மே 2ம் நாள், 1519ம் ஆண்டு லியோனார்டோவின் உயிர் அந்த வீட்டிலேயே பிரிந்திருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் லியோனார்டோ பிரான்சிஸ்-1க்கு எவ்வளவு நெருக்கமான நண்பராகயிருந்தார் என்பதை அவர் இறந்ததும் அவரது தலையை தனது கைகளில் தாங்கிக்கதறிய பிரான்சிஸ்-1ன் செய்கையின் மூலமே உணரலாம். லியோனார்டோவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது கடைசி ஆசைப்படியே 60 பிச்சைக்காரர்கள் தொடர்ந்து வர வைக்கப்பட்டிருக்கிறார்கள். பிரான்சில் இருக்கும் செயின்ட்.கூபர்ட் சேப்பலில் புதைக்கப்பட்டிருக்கிறது லியோனார்டோவின் உடல்.

லியோனார்டோவின் ஓவியங்களில் இதுவரையிலும் கண்டறியப்பட்டிருப்பது பதினைந்துதான் என்றாலும் அவரது பெரும்பாலான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகள் குறித்த படங்களும் தனித்தனி தாள்களில் அவரால் பதியப்பட்டிருந்தவைகள்தான். அவர் தனது எந்த கண்டுபிடிப்புகளையும் அதிகாரப்பூர்வமாக பப்ளிஷ் செய்யவில்லை என்பதால் இன்றைய அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளின் முன்னோடியாக அவரை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கமுடியாத நிலைதான் மிஞ்சியிருக்கிறது.

மோனலிசா ஓவியமும், மர்மப்புன்னகையும்...

லியோனார்டோவின் ஓவியங்களிலேயே விலைமதிப்பில்லாததாக, இன்றைய உலகின் தலைசிறந்த ஓவியங்களில் முதலிடம் வகிப்பதாக மாறியிருப்பது அவரது மோனலிசா ஓவியம்தான்...


1503 – 1505/1507 காலகட்டத்தில் வரையப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டிருக்கும் இந்த மோனலிசா ஓவியத்தின் மற்றொரு பெயர் லா ஜியோகொண்டா. இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாக ஆராய்ச்சியாளர்கள் கருதுவது என்ன ரகம் என்றே கண்டறியமுடியாத இதன் புன்னகை. ஓவியத்தில் வரைந்திருக்கும் உதடு மற்றும் கண்களின் ஓரத்தில் கருப்பு ஷேடு செய்திருப்பது இந்தப்புன்னகையின் காரணத்தை அறியமுடியாமல் செய்த முக்கிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் லியோனார்டோ ஃபுளோரன்ஸின் வசித்தபோது வரையப்பட்டதுதான் மோனலிசா ஓவியம் என்று ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும், வேறு சில ஆய்வாளர்கள் லியோனார்டோ தனது காலகட்டத்தில் ஒரே ஒரு ஓவியத்தைக்கூட முழுதாக வரைந்து முடிக்காமல் எல்லாவற்றையுமே அறைகுறையாகவே விட்டவர்தான் லியோனார்டோ என்றும் வாதிக்கிறார்கள். மோனலிசா ஓவியமும் 1503-1507 காலகட்டத்தில் வரையப்பட்டிருந்தாலும், லியோனார்டோ 1516ல் பிரான்சுக்கு சென்றபோது மோனலிசா ஓவியத்தையும் தன்னுடனே எடுத்துச்சென்று 1517 காலகட்டத்தில்தான் இறுதி டச்-அப் வேலைகள் செய்து முடித்திருப்பார் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

லியோனார்டோவின் இறப்புக்கு பிறகு அவரது உதவியாளரிடமிருந்து பல்வேறு கைமாறிய மோனலிசா ஓவியம் ஆகஸ்ட் 21ம் தேதி 1911ம் ஆண்டு பிரான்சின் மியூசியத்தில் இருந்து திருட்டுபோனதும்தான் அதன் மதிப்பு உலகளவில் எகிறியிருக்கிறது. மீட்டெடுக்கப்பட்ட மோனலிசா ஓவியம் அதன்பிறகும் பார்வையாளர்களால் நிகழ்த்தப்பட்ட சிறுசிறு தாக்குதலின் காரணமாக இன்று அடங்கியிருப்பது குண்டு துளைக்காத கண்ணாடிகளுக்குப்பின்னால் என்பது அதன் மதிப்பை அறியச்செய்யும் சுவாரசியம்.

மோனலிசா ஓவியம்தான் பின்னணியில் உருவகப்படுத்தப்பட்ட செயற்கையான காட்சிகளுடன் வரையப்பட்ட முதல் படம் என்றொரு தகவல் இருக்கிறது. மோனலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணுக்கு கண் முடிகள் மற்றும் இமைகள் இல்லாதது இன்று அந்த ஓவியத்தின் மிகப்பெரிய ரசனையாக மாறியிருந்தாலும், அவைகள் லியோனார்டோவால் வரையப்பட்டு நாளாக நாளாக மறைந்திருக்கிறது என்பதை 2007ம் ஆண்டு பிரான்சைச்சேர்ந்த பாஸ்கல் காட்டே என்றொரு இன்ஜினியர் தனது ஹை ரிசோலுயூசன் ஸ்கேன் ஆய்வின் முடிவில் அறிவித்திருக்கிறார்.

2012ல் மோனலிசா ஓவியத்தின் மதிப்பு 760மில்லியன் யு.எஸ் டாலராக கணக்கிடப்பட்டிருப்பதன் மூலம் உலகின் விலையுயர்ந்த பெயிண்டாக முதலிடத்தைப்பிடித்திருப்பதும் இந்த மோனலிசா ஓவியம்தான்...

ஃபுளோரன்ஸைச் சேர்ந்த பட்டு வியாபாரியான ஃபிரான்சிஸ்கோ டெல் ஜியோகொண்டா என்பவரின் மனைவியைக் குறிக்கும் வகையில் இத்தாலியச் சொல்லான லா ஜியோகொண்டா என்பதுதான் மோனலிசா ஓவியத்துக்கு பெயராய் இடப்பட்டது என்றும் வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.

இதை மறுத்து மோனலிசா ஓவியத்தில் இருப்பது ஒரு சாதாரண ஏழைப்பெண்மணி என்றும், இந்த ஓவியத்துக்கு மாடலாய் இருக்கும்போது அந்தப்பெண் கர்ப்பமாய் இருந்திருக்கவேண்டும் என்றும், அதனால்தான் அந்த முகத்தில் இவ்வளவு தேஜஸ் இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தது லியோனார்டோவின் உதவியாளரான சாலைதான் (இவர்தான் John the Baptist ஓவியத்துக்கு மாடல்) என்றும், லியோனார்டோவே இதன் மாடல் என்றும், லியோனார்டோவின் நண்பர்களான இசபெல்லா அல்லது சிசிலியாதான் மோனலிசா ஓவியத்தின் மாடல் என்றும், கேதரினா எஸ் ஃபோர்ஸாதான் இதன் மாடல் என்றும் விதவிதமான கதைகள் நிலவினாலும் பெரும்பான்மை வரலாறு நிரூபிப்பது இது லேடி ஜியோகொண்டா என்பதைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.மோனலிசாவோடு முடிந்து போவதல்ல லியோனார்டோவின் அற்புதத்திறமை என்பதை கீழிருக்கும் அவரது இன்னும் சில படைப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்...
Portrait of a Musician by Leonardo...

Madonna Litta...

Madonna Benois...

Ginevra de'Benci...

La Belle Ferronniere...

Lady with an Ermine...

Annunciation...

இதுவும் லியோனார்டோவின் படைப்புதான் என மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் Salvator Mundi என்றழைக்கப்படும் இந்த இயேசுவின் படம்...

இந்த ஓவியங்கள் மட்டும் இல்லாமல் அறிவியல் மற்றும் மனித உடற்கூறுயியலிலும் லியோனார்டோவின் திறமையை உலகத்துக்கு நிரூபிக்கும் அவரது குறிப்புகளும், படங்களும் ஏராளம் என்பதை இங்கே பாருங்கள்.
Drawing of an Artillery...

Study of Dogs and Cats...

Design & Study of Folding Boat...

Design & Study of Hang Gliders and Flying Machines...Design & Study of Seige Machine...

Study of Convex & Concave...

Stretching device for a Barrel spring...

Study of Horse and Rider...

லியோனார்டோ எப்படி குதிரைகளின் மீதான ஆராய்ச்சியில் அதீத ஆர்வம் காட்டினாரோ அதைவிட அதிகமாகவே மனித உடற்கூறுகள் பற்றிய ஆய்வுகளிலும் காட்டியிருக்கிறார் என்பதை அவரது பலவிதமான குறிப்பு படங்கள் உணர்த்துகின்றன. பதிவின் நீளம் கருதி இதில் எல்லாவற்றுக்கும் விளக்கம் எழுதுவதை தவிர்த்து முக்கியமான ஒன்றாக நான் கருதும் The Vitruvius Man என்ற இந்தப்படத்தை மட்டும் அதன் குறிப்போடு பார்க்கலாம்.


இத்தாலியின் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்பட்டு மதிக்கப்படும் இந்தப்படம் லியோனார்டோவால் Vitruvius என்ற ஆர்க்கிடெக்ட்டின் ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக்கொண்ட குறிப்புகளோடு வரையப்பட்டிருக்கிறது. இதன் குறிப்புகள் சொல்லும் தகவல் இதுதான்...

படத்திலிருக்கும் நிலைபோல ஒரு மனிதன் தனது கால்களை சமபக்க முக்கோணம் போல விரித்துக்கொள்வதும் கைகளை பக்கவாட்டில் படத்திலிருக்கும் ப்ரோபர்சனில் நீட்டும்போதும்...

·         the length of the outspread arms is equal to the height of a man
·         from the hairline to the bottom of the chin is one-tenth of the height of a man
·         from below the chin to the top of the head is one-eighth of the height of a man
·         from above the chest to the top of the head is one-sixth of the height of a man
·         from above the chest to the hairline is one-seventh of the height of a man.
·         the maximum width of the shoulders is a quarter of the height of a man.
·         from the breasts to the top of the head is a quarter of the height of a man.
·         the distance from the elbow to the tip of the hand is a quarter of the height of a man.
·         the distance from the elbow to the armpit is one-eighth of the height of a man.
·         the length of the hand is one-tenth of the height of a man.
·         the root of the penis is at half the height of a man.
·         the foot is one-seventh of the height of a man.
·         from below the foot to below the knee is a quarter of the height of a man.
·         from below the knee to the root of the penis is a quarter of the height of a man.
·         the distances from below the chin to the nose and the eyebrows and the hairline are equal to the ears and to one-third of the face.

படத்தின் வட்டம் மற்றும் சதுரம் சொல்லும் பல அற்புத சேதிகள் போலவே, இந்தப்படத்தில் மனிதனின் 16வகையான போஸ்கள் ஒளிந்திருப்பது நான் வியந்த மற்றும் இதுவரையிலும் அறிந்திராத ஒரு அற்புதத்தகவல்... (முடிந்தால் பதினாறு வகையான போஸ்கள் என்னென்ன என்பதை நீங்களும் கண்டறிய முயலுங்கள்...!)

இதுதவிர லியோனார்டோவின் இன்னும் பல அற்புதக்குறிப்பு படங்கள் உங்கள் பார்வைக்காக...
Study of Arms...


Study of a Female...


Study of Womb and Birth...


Study of Parts of the Human Body...Study of Proportion of Face and Eye...

Study of Proportion of Face...

தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக்காலத்திலும் நாம் இன்னமும் முழுமையடாத மூளை ஆராய்ச்சியை, லியோனார்டோ 500 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருப்பது மிக மிக ஆச்சர்யமான விஷயம்தான்...

Study of Brain Physiology...

Study of Brain...

Study of Skull...


Study of a Man...

கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு முந்தையதொரு வரலாற்றிலேயே இன்றைய உலகின் பல்வேறு விஷயங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்திருக்கும் ஒரு மனிதனின் பன்முகத்திறமை, நமக்கும் நமக்குப் பிறகுவரும் தலைமுறைக்கும் நிச்சயம் ஆச்சர்யமானதொரு வரலாறாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லைதான்...!!!

மீண்டும் சந்திப்போம்...!

19 comments:

 1. வியக்க வைக்கும் தொகுப்பு... நன்றி...

  ReplyDelete
 2. அற்புதமான பதிவு
  இத்தனை அபூர்வமான முழுமையான தகவல்களுடன்
  நான் படித்து ரசித்த முதல் பதிவு இதுவாகத்தான்
  இருக்கும் எனச் சொல்லிக் கொள்வதில்
  மகிழ்ச்சி கொள்கிறேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. லியோனார்டோ பற்றி விளக்கமான பதிவு. உழைப்புக்கு வாழ்த்துகளும், பாராட்டும்.

  ReplyDelete
 4. மிக மிக விளக்கமான பதிவு

  ReplyDelete
 5. மிக நன்று. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. அருமையான பதிவு!! ஒவ்வொரு வரியிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது.

  மோனலிசாவின் புன்னகை போல அவர் ஓவியத்திலும் பல மர்மங்கள் இருக்கின்றன. நீங்கள் சொல்லியது போல் சிலர் அந்த ஓவியத்தின் மாடல் சாலை என்கின்றனர். சிலர் அது டாவின்சியின் சுய ஓவியம் என்கின்றனர். டாவின்சியின் அறிவு முழுவதும் உலகுக்குத் தெரியாமல் போனதற்கு அவரின் ஒளிவு மறைவு தன்மை என்று ஒரு புத்தகத்தில் வாசித்தேன். அவர் தன் கண்டுபிடிப்புகளை சில கோட் வார்த்தை, வலமிருந்து எழுதுவது, குறிப்பாக வரைவது என்று பிறருக்குப் புரியக் கூடாது என்று மெனக்கிட்டு இருக்கிறார் என்றது அந்தப் புத்தகம்..

  அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. அருமையான பதிவு...
  அழகான படங்கள்...
  வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 8. Finally you got the pace of writing..
  Some of your older posts contained lots of info , but the length of post may make to read with little distractions, but here...

  //பதிவின் நீளம் கருதி இதில் எல்லாவற்றுக்கும் விளக்கம் எழுதுவதை தவிர்த்து முக்கியமான ஒன்றாக நான் கருதும் The Vitruvius Man என்ற இந்தப்படத்தை மட்டும் அதன் குறிப்போடு பார்க்கலாம். //

  this is where you rock..

  Congrats and thanks for sharing and great post...

  ReplyDelete
 9. உங்களுக்காக, தமிழ் மனம் வோட்டு + 1

  ReplyDelete
 10. உங்கள் நேரத்தை செலவிட்டு ஒரு அற்புதமான படைப்பை தந்திருக்கிறீர்கள். நன்றி. இதன் பகுதி இரண்டும் வந்தால் நன்றாக இருக்கும். அந்த பகுதி இரண்டை நீங்கள் இங்கே தொடங்கலாம்: இவரின் ஓவியங்களை தற்கால விஞ்ஞானிகள் ஆராட்சி செய்கிறார்கள். 1. அதை பார்க்கும் கோணம் - கோணத்தில் உருவங்கள் மாறுபடுகிறது 2. x கதிரில் மறைந்துபோகும் சில உருவங்கள் - அதற்க்கான பெயிண்ட் - அதன் காரணம் 3. அவர் காணாமல் போன வருடங்களில் என்ன நடந்திருக்கலாம் 4. மிரர் இமேஜ் : இவற்றில் சில கொஞ்சம் நம்பமுடியாததாகவும் இருக்கலாம். பாருங்கள். காணக்கூடிய ஒரு இடம் - ஹிஸ்டரி சானலில் வரும் என்சன்ட் ஏலியன்ஸ். யூ டியூபில் கிடைக்கும். அதை விட வேறு பல வீடியோக்களும் கிடைக்கின்றன.

  ReplyDelete
 11. பொக்கிஷமான பதிவு.. ரமணி சார் வலைப்பூவில் இருந்து பார்த்துவிட்டு வந்து படித்தேன். உண்மை.. உங்கள் உழைப்பு ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது... நிறைய விஷயங்கள் இப்போது உங்கள் பகிர்வில் இருந்து தான் அறியவும் முடிந்தது. நிதானமாக முழுமையாக வாசித்தேன். மோனாலிசா ஓவியத்தில் இத்தனை மர்மங்களா... ஆச்சர்யம்... டாவின்சி அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுக்க வாசித்த போது பூரணத்துவம் தெரிகிறது. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 12. கொஞ்சம் என்னை மெனக்கெட வைத்த பதிவுதான் இது... எங்கே இது ரசிக்கும்படியாக இருக்குமோ... இல்லை மொக்கையாகிவிடுமோ என்று ஒரு அச்சத்திலேயே எழுதினேன்...
  ஓரளவுக்கு ரசிக்கும்படிதான் இருந்திருக்கிறது என்பதை நண்பர்களின் கருத்துக்களில் இருந்து உணரமுடிகிறது...
  ரசித்த... உழைப்பை பாராட்டிய, வாக்களித்த... கருத்துரைத்த எல்லா இனிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 13. இந்த பதிவில் அநேக தகவல்களை கொடுத்திருக்கீங்க. இரண்டு மூன்று பகுதியாக போட்டிருக்கலாம். கைபேசி வழியாக தளத்தை பார்க்க வருபவர்களுக்கு கொஞ்சம் சிரமத்தை கொடுக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். என்னாலும் இதை முழுமையாக படிக்க முடியவில்லை.

  ReplyDelete
 14. thank you for this article about my guru and pithamagar leonardo da vinci. i like this article very much.
  i need more articles like this.

  ReplyDelete
 15. thank you i like this page da vinci

  ReplyDelete
 16. monalisa oviyam pakum pothu nama sricha srikura mathrium alutha algura mathrium therium.. atha pakum pothu etho oru manasu nirvana feel kidaikum....itha pathi melum therinjathkum rrrrrrrmmmmppppppaaaaaaaa thank u *

  ReplyDelete
 17. அருமை மிக மிக அருமை......

  ReplyDelete
 18. இன்னும் பல ஓவியர்களின் வரலாறுகளையும் வகைகள் மற்றும் அர்த்தங்களையும் எங்கள் இளம் ஓவியகளுக்காக பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 19. டாவின்சி பற்றியே அதிக தகவல்கள் உள்ளன.
  மோனலிசா ஓவியத்தின் மர்மங்கள் பற்றி நிறைய கூறியிருக்கலாம்.
  எனினும் பதிவிற்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete