SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, September 27, 2013

ஊழலுக்கு எதிராய் ராகுல்காந்தி ஆவேசம்... காங்கிரசின் புதிய தேர்தல் வியூகம்!


சட்டம் எங்கள் கைகளில்... என்பது ஆட்சியாளர்களால் ஆண்டாண்டு காலமாக நமக்கு உணர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் வரலாறு என்பதற்கு சாட்சியாக, தண்டனையின்றி அமுங்கிப்போன கணக்கிலடங்கா ஊழல் வழக்குகள் கதையிருக்கிறது. உச்சநீதிமன்றம் நினைத்தாலும்கூட எங்களை ஒன்றும் கிழிக்கமுடியாது என்பதற்கு சாட்சி போல ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டதுதான் சமீபத்திய அவசரச்சட்டம்.

சிலநாட்களுக்கு முன்பு குற்றவழக்கில் தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவியிழப்பார்கள் என்று ஒரு அதிரடித்தீர்ப்பை வழங்கி நாட்டு மக்களுக்கு ஒரு தற்காலிக சந்தோஷத்தை வழங்கியது உச்சநீதிமன்றம்.  அப்போதே அதை எதிர்த்து நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கூட்டம் இதற்கு மட்டும் உடனடியாக கூட்டம் கூட்டி தங்கள் நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.

குற்றவழக்கில் தண்டனை பெற்றால் பதவியிழப்பதா?... ஹீம்... எங்களோட அரசியல் வாழ்க்கையோட ஆரம்பமே அதுதானேய்யா... அதை எப்படி ஏத்துக்கமுடியும் நாங்க?... என்று பொங்கியெழுந்த கூட்டம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலேயே மோதிப்பார்த்தும் முடியாமல் போகவே தங்கள் கூட்டத்தை கூட்டி அவசரச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். நாடாளுமன்றத்தின் விவாதம், ஒப்புதல் என எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்காமல் அமைச்சரவைக்கூட்டத்தை மட்டும் கூட்டி அவசரச்சட்டம் என்ற பெயரில் குற்றவழக்கில் தண்டனை பெற்றாலும் பதவியிழக்காதவாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தார்கள்.

அப்படியென்றால் ஆளுவோர் நினைத்தால் ஒரு நாட்டில் எதுவேண்டுமானாலும் செய்யலாம். அவர்களைக் கட்டுப்படுத்துதற்கான வழிகள் என்று உச்சநீதிமன்றம் முதற்கொண்டு எதுவுமே இல்லையா எனும் எண்ணற்ற கேள்விகளும், விவாதங்களும் இதில் எழலாம். நமது கட்டுரையின் சாராம்சம் அதுவல்ல என்பதால் இப்போது அதைப்பற்றி  விவாதிக்கத்தேவையில்லை.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்போன அவசரச்சட்டத்தை பா.ஜ.க உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளும், காங்கிரசிலேயே சிலரும் எதிர்த்து வந்த நிலையில் இன்று காங்கிரசின் எதிர்காலமாக மாறியிருக்கும் இளம் தலைவர் ராகுல்காந்தியும் திடீரென பொங்கியிருக்கிறார்.

‘’இந்த அவசரச்சட்டம் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாகும். குற்றவழக்கில் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் பதிவியிழக்கக்கூடாது எனும் இந்த அவசரச்சட்டம் முட்டாள்தனமானது. இந்த அவசரச்சட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களும் கிழித்து எறியப்படவேண்டும்...’’ என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் ராகுல்காந்தி.


ஒருபக்கம் பார்த்தால் அவரின் ஆவேசம் பாராட்டத்தக்க வகையில் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் இது காங்கிரசின் திட்டமிட்ட அரசியல் காய் நகர்த்தலாகவும் இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. தனது தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அரசாங்கம் ஊழலுக்கு ஆதரவானதுபோல ஒரு அவசரச்சட்டத்தை இயற்றுவதும், அந்த அரசு சார்ந்த கட்சியின் எதிர்காலத்தலைவராக வர்ணிக்கப்படும் மகன் ஊழலுக்கு எதிரான அவதாரம்போல அந்த அவசரச்சட்டத்துக்கு எதிராக பொங்கியெழுவதுபோல குரல் கொடுப்பதுவும் வித்தியாசமானதாகத்தான் தோன்றுகிறது.

யார் கண்டார்கள்?... இது அரசியல்... இங்கே எது வேண்டுமானாலும் நடக்கும்!

காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கு எதிராக நாட்டு மக்களிடம் எழுந்திருக்கும் எதிர் மனப்பான்மையை மாற்ற, அரசியல் ஆலோசகர்கள் எனும் கூட்டத்தின் ஆலோசனைப்படி, காங்கிரஸ் கூடாரத்தின் அடுத்த பிரதமராக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ராகுல்காந்தியை ஊழலுக்கு எதிரான வெள்ளுடை வேந்தனாக சித்திரித்து, அதன் மூலம் நடந்து முடிந்த மெகா ஊழல்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, ராகுல்காந்தி மூலம் ஓட்டு வங்கியை நிரப்பலாம் என்று அம்மாவும், மகனும், கட்சியும் சேர்ந்து நடத்தும் அரசியல் சாணக்கிய நாடகமாகக்கூட இருக்கலாம் இது...!!!

‘’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...’’ என்று கவுண்டர் சும்மாவா சொன்னார்?...!

மீண்டும் சந்திப்போம்...!


7 comments:

 1. எது வேண்டுமானாலும் நடக்கும்....

  அடப்போங்கப்பா...!

  ReplyDelete
 2. வெறும் ஆறு நாட்களுக்கு முன்னர்தான் இந்த சட்டம் சோனியாவின் ஒப்புதல் பெற்றது என்பது ibnlive இல் இருந்த தகவல். ஒன்று, இது பற்றி கூட தெரியாத அளவு ராகுல் அப்பாவியாக இருக்க வேண்டும். இல்லையேல் இதெல்லாமே நீங்கள் சொன்னபடி திட்டமாக இருக்க வேண்டும். !

  ReplyDelete
 3. இப்படி எல்லாம் சீன் பண்ணாதான் மோடி பக்கம் சாய்ந்திருக்கிற ஓட்டுக்களை கொஞ்சமாச்சும் தன் பக்கம் திருப்பலாம்னு நெனைக்கிறார். அவர் ஆசையை ஏன் கெடுக்கிறீங்க :))

  ReplyDelete
 4. ஊழல் செஞ்சிகிட்டே ஊழலுக்கு எதிராக பாய்வதின் நோக்கம் என்னவோ ?

  ReplyDelete
 5. ஊழலுக்கு எதிராய் ராகுல்காந்தி ஆவேசம்..///சிரிப்பு வருது .

  ReplyDelete
 6. காங்கிரசின் புதிய தேர்தல் வியூகம்!// ... சிரிப்பு சிரிப்பா வருது ...போங்கடா நீங்களும் உங்க சாக்கடைத்தனமான சாணக்கிய தந்திரமும் அப்புடின்னு சொல்ல தோணுது..

  ReplyDelete