SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, September 4, 2013

தலைவரும், தொலைக்காட்சியும் பின்னே கொஞ்சம் தமிழினமும்...

காட்சி -1
நேரம் – நாளின் ஆரம்பம்
தலிவர் போபாலபுரத்தில் உள்ள வீட்டின் கூடத்தில் அமர்ந்து தனக்காக தனியாக அனுப்பப்பட்டிருந்த ‘’மாடாட மந்தையாட’’ நடன நிகழ்ச்சியின் பிரத்யேக பிரதியை வைத்த கண் வாங்காமல் ரசித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்...

அப்போது வாக்கிங் முடித்து அங்கு வந்த லெனின் அவரிடம்
‘’அய்யா... எலெக்சன் நெருங்கிக்கிட்டிருக்குது... உங்க அரசியல் (‘’கோமாளித்தனத்தால’’ என்று மனதுக்குள் நினைத்ததை மறைத்துக்கொண்டு) சாணக்கியத்தனத்தால கவுந்துபோன நம்ம கட்சி இமேஜ் இன்னும் எந்திரிச்சு நிக்கிற மாதிரி தெரியல... நீங்க என்னடான்னா டெய்லி விதவிதமா அறிக்கைய வுட்டுப்புட்டு டி.வி.பாத்துட்டு இருக்கீக... உங்க அறிக்கைகளை பாத்துட்டு அடுத்து யாருகூட கூட்டணி வைக்கப்போறோம்னுகூட தெரியாம பயபுள்ளைக தாறுமாறா குழம்பிக்கெடக்குதுங்க... எதாவது செய்யனுமுங்கய்யா...

லெனின் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல தலிவர் கரகர குரலில் ‘’ஏம்ப்பா... நம்ம சேனல்ல புதுசா ஆரம்பிக்கிற நிகழ்ச்சிக்கு பேரு வைக்கனும்னு கேட்டிருந்தாங்க... சேனல்ல இருந்து ஆளுங்கள வரச்சொல்லியிருந்தேன். வந்துருக்காங்களான்னு பாரு... இல்லேன்னா... நீயே போன் பண்ணி வரச்சொல்லு...’’ என்கிறார்.

டென்ஷனாகிப்போன லெனின் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘’அய்யா... நான் சொல்ல வந்தது...’’ என்று இழுக்கிறார்.

‘’அதெல்லாம் எப்போ, எதை, எப்படிச்செய்யனும்னு எனக்குத்தெரியும்... நீ போயி நான் சொன்னத மட்டும் செய்யிப்பா...’’ என்று கூலாகச்சொல்கிறார் தலிவர்.

‘’ம்ம்ம்ம்... தானும் படுக்க மாட்டாய்ங்க... தள்ளியும் படுக்க மாட்டாய்ங்க...’’ என்று முணுமுணுத்துக்கொண்டே உள்ளே போகிறார் லெனின்.

காட்சி -2
நேரம் – லெனின் உள்ளேபோன சிறிது நேரத்திற்குப்பின்...
 
சேனல்காரர்கள் தலிவரைப்பார்க்க வந்து வணங்குகிறார்கள்...

‘’குட்மார்னிங் அய்யா...’’

‘’ஏன்ய்யா... தாய்த்தமிழ்ல வணக்கம்னு சொல்லலாம்ல?... தமிழ் என் மூச்சு... தமிழ் என் பேச்சு... தமிழுக்காக சிறைக்குப்போனவன்யா நான்... அந்தக்காலத்துல பாளையங்கோட்டை சிறையில...’’ என்று ஆரம்பித்த தலிவரை இடைமறித்து (‘’சேனல்ல நிறைய வேலை இருக்கு... பெரிசுகிட்ட மாட்டுனோம்... டெய்லி வுடுற அறிக்கை மாதிரியே நம்மகிட்டேயும் பழங்கதையெதாவது பேசி சோலிய முடிச்சிரும்...’’ என்று டர்ராகிப்போயி) மன்னிச்சிக்கோங்கய்யா... இனிமே தமிழ்லேயே வணக்கம் சொல்றோம்... என்கிறார்கள்.

சேனல்காரர்கள் உஷாராகிப்போனதைப்பார்த்த தலிவர் ‘’சரிசரி... சொல்லுங்கய்யா... புதுசா ஏதோ நிகழ்ச்சி பண்ணப்போறதா சொன்னீங்களே... அதப்பத்தி கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்க... அப்போதான் பேரு வைக்கமுடியும்...’’ என்கிறார்.

அய்யா... ஏற்கனவே நீங்க வைச்ச மாடாட மந்தையாட, அழுதுகிட்டே இருங்க, படவரிசை குத்து, நாளைமறுநாள் இயக்குனர், நல்லாப்பேசுங்க நாறுனதையே பேசுங்க, எச்சகட்டம், பன்னும் பாலும்... இப்படி பலவித பேருங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டா இருக்குதுங்கய்யா... இந்த புரோகிராமுக்கும்...(ஒரு நிமிடம் மனதுக்குள் பயந்து) இந்த நிகழ்ச்சிக்கும் நீங்க ஒரு நல்ல பேரா வைக்கனுங்கய்யா...

யோவ்... நான் வைச்ச பேருங்க எல்லாமே நல்லாத்தான் இருக்கும்ன்றது எனக்குத்தெரியும்யா... நீ முதல்ல நிகழ்ச்சியைப்பத்தி சொல்லுய்யா...

அய்யா... இது வந்து கேமராவையெல்லாம் ஒளிச்சு வைச்சு எடுக்கிற ஒரு நிகழ்ச்சிங்கய்யா...

ஜெர்க்காகிப்போன தலிவர் ‘’ஏன்ய்யா... இந்த வித்தியானந்தா வீடியோ மாதிரியா?...’’ என்கிறார்.

அய்யய்யோ... அப்படியில்லைங்கய்யா... இது வந்து தமிழ்நாட்டுல பொது இடங்கள்ல அங்கங்கே கேமராவை ஒளிச்சு வச்சுட்டு மக்கள் கிட்ட அவங்க பொறுமைய சோதிக்கிற மாதிரி அவங்களை ஏமாத்தி முட்டாளாக்கிற மாதிரி விதவிதமா விளையாடுற சிரிப்பு நிகழ்ச்சிங்கய்யா...

‘’யோவ்... கேண்டிட் கேமரான்னு பட்டுன்னு சொல்ல வேண்டியதுதானய்யா?... இதுக்குப்போயி காதைச்சுத்தி மூக்கைத்தொட்டுக்கிட்டிருக்கே?...’’ என்று கேட்ட தலிவரின் ஞானத்தை சேனல்காரர்கள் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தலிவர் பேரு வைக்கத்தொடங்குகிறார்...

தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தி, முட்டாளாக்கி வெளையாடுற வெளையாட்டுன்னு சொல்றே... அதுவும் அவங்க பொறுமைய சோதிக்கிற மாதிரி வெளையாடப்போறீங்கன்னு வேற சொல்றே... என்று யோசித்த தலிவரின் முகம் திடீரென்று ஆயிரம் வோல்ட் பல்பு போல பிரகாசமாகிறது...

‘’யோவ்... இந்த நிகழ்ச்சிக்கு சரியான பேரு கெடச்சிடுச்சிய்யா...’’ என்ற தலிவரை சேனல்காரர்கள் ஆர்வமாய்ப்பார்க்க... தலிவர் பட்டென்று
‘’தமிழர்களே... தமிழர்களே’’ இதுதான்யா இதுக்கு சரியான பேரு’’ என்கிறார்...

ஒரு நிமிடம் முகம் மாறிய சேனல்காரர்கள் அதை மறைத்துக்கொண்டு ‘’பேரு ரொம்ப நல்லா இருக்குங்கய்யா... இதையே வச்சிரலாம்ங்கய்யா’… என்று கிளம்பத்தயாராகிறார்கள்.

கிளம்பும் முன் தலிவரிடம் சேனல்காரர்கள் ‘’அய்யா... விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளின்னு வரிசையா வரப்போவுது... எல்லா சேனலும் சிறப்பு நிகழ்ச்சிகளை அறிவிக்க ஆரம்பிப்பாங்க... தமிழ் வருஷப்பொறப்ப நீங்க மாத்தியிருந்தாலும்கூட சித்திரைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சின்னு பேரு வச்சுக்குடுத்தீங்க... அதே மாதிரி இதுல எதெதுக்கு எப்படி சொல்லனும்னு முடிவு பண்ணிக்குடுத்திருங்க அய்யா...’’ என்கிறார்கள்.

‘’சரி சரி... இதெல்லாம் ஒரு பிரச்சினையாய்யா?... எதுவுமே இல்லேன்னா... இருக்கவே இருக்கு ஐடியா... ‘’விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி’’ன்னு சொல்லிட்டு போறோம்...’’ என்கிறார் தலிவர்.

கிளம்பும் முன் அவர்களிடம் கடைசியாய் தலிவர் ‘’ யோவ்... இப்பெல்லாம் அந்த தமிழர்களே... தமிழர்களே... கடல், கட்டுமரம்னு வர்ற வசனத்தை அடிக்கடி போடுறதில்லையே ஏன்ய்யா?... இனிமே அத அடிக்கடி ஒளிபரப்புங்கய்யா...எலெக்சன் வேற வரப்போவுதுன்னு தம்பி சொல்லுச்சு’’ என்கிறார்.

சேனல்காரர்கள் தலிவர் ஏன் அந்த நிகழ்ச்சிக்கு அந்தப்பேரு வச்சார்னு புரிஞ்சிபோயி ‘’சரிங்கய்யா’’ என்று மட்டும் பணிந்துவிட்டு பவ்யமாய் தப்பித்தோம் பிழைத்தோம் என இடத்தை காலி செய்கிறார்கள்.

காட்சி -3
நேரம் – சேனல்காரர்கள் போனபின் தலிவர் காலை சிற்றுண்டியையும், மாடாட மந்தையாட பிரத்யேக காட்சியையும் முடித்தபிறகு...
ரொம்ப சீரியஸாக உதவியாளரிடம் ஏதோ டிக்டேட் செய்து கொண்டிருக்கும் தலிவரிடம் வருகிறார் லெனின்...

அய்யா... நான் கட்சிக்காரங்களை பார்க்கிறதுக்கு அறிவுக்கோயிலுக்குப்போறேன்... நீங்க இன்னைக்கி அந்தப்பக்கம் வர்றீங்களா?...

இல்லேப்பா... நான் மாடாட மந்தையாட நிகழ்ச்சி பத்தி பேசுறதுக்கு மாஸ்டர் லதாவை வரச்சொல்லியிருக்கேன். அதுக்கப்புறம் வரப்போற எலெக்சன்ல எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணலாம்னு பேசுறதுக்காக கிஷ்பூவை வரச்சொல்லியிருக்கேன். அந்தம்மாவை டென்ஷன் பண்ற மாதிரியோ... இல்லே மக்களை குழப்புற மாதிரியோ தினமும் ஒரு அறிக்கையை வேற வெளியிட்டாகனும்... அதுக்குத்தான் இப்போ டிக்டேட் பண்ணிக்கிட்டிருக்கேன். ஒரு நாள் சாங்கிரசுக்கு எதிரா தமிழனம், சொச்சத்தீவு, வெசோ அது இதுன்னு சொல்லனும்... அடுத்த நாளே உணவைப்பாதுகாத்த வோனிகா அம்மையாருக்கு மனமார்ந்த நன்றின்னு அறிக்கை உடனும்... இந்த மாதிரி சாணக்கியத்தனத்தையெல்லாம் நீ எப்போதான் கத்துக்கப்போறீயோ தெரியல?...

இதெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் சாயந்திரமா சி.பி.ஐ.காலணி வீட்டுக்குப்போகனும். அதனால நான் இன்னைக்கி அறிவுக்கோயிலுக்கு வர முடியாதுப்பா... அதான் நீ போறீயே... எல்லாத்தையும் பாத்துக்கோப்பா... ஆனா ஒன்னு... நீ பேருக்குத்தான் அடுத்த தலைவர் மாதிரி... ஆனா நான் தான் கழகத்தோட நிரந்தரத்தலைவர்ன்றதால எதாவது முடிவெடுக்கனும்னா மட்டும் என்னைக்கேக்காம எடுக்கக்கூடாது... மறந்திராத... சொல்லிப்புட்டேன் ஆமா...

மனசுக்குள்ளேயே தலையிலடித்துக்கொண்ட லெனின்...’’அய்யா... அந்த கிஷ்பூ விஷயமா...’’ என்று இழுக்கிறார்.

அதுல என்னப்பா இருக்கு?... என்று கண்களை குறுக்கி லெனினை பார்க்கிறார் தலிவர்.

‘’இல்லைங்கய்யா... பத்திரிக்கைங்கயெல்லாம் என்னெல்லாமோ எழுதுறாங்க. கட்சித்தொண்டர்கள்கூட ரொம்ப கவலைப்படுறாங்க. அதுவுமில்லாம நம்ம குடும்பத்திலகூட யாருக்கும் இது புடிக்கலை...’’ என்று மெல்ல குரலைத்தாழ்த்தி சொல்கிறார் லெனின்.

கோபத்தில் கண்கள் சிவந்த தலிவர்... ‘’ ஏன்ப்பா?... சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க... உங்களுக்குத்தெரியவேண்டாம்?... கர்நாடகாவுல பாரு... சின்னப்பொண்ணு அந்த குத்து ரம்யா... அதுவே எம்.பி. ஆயிடுச்சு... ஆனா இந்த கிஷ்பூவை என்னால இன்னும் பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியல... நான்தான் கழகத்தோட நிரந்தரத்தலைவர்... யாருக்கு, எப்போ, என்ன பதவி குடுத்து எங்க வைக்கனும்னு எனக்கு நல்லாவேத்தெரியும்... யாரும் எனக்கு புத்திமதி சொல்லத்தேவையில்லை... கிஷ்பூவுக்கு வர்ற தேர்தல்ல கண்டிப்பா ஒரு சீட் குடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பனும்னு சபதம் பண்ணியிருக்கேன். இதுக்கு மேல தேவையில்லாம யாராவது எதாவது பேசினீங்க... கிஷ்பூதான் கழகத்தோட அடுத்த வாரிசுன்னு சொல்லிப்புடுவேன் ’’ என்று கர்ஜிக்கிறார்...

என்னடா இது... இப்போதான் கஷ்டப்பட்டு அண்ணன் கிரிகிரியை ஓரம் கட்டி வைச்சிருக்கோம்... அதுக்குள்ளே இப்பிடியா?... முதலுக்கே மோசமாயிரப்போவுதுன்னு பயந்த லெனின்... சரி எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கி?... நேரம் வரும்போது இந்த விஷயத்தை டீல் பண்ணிக்கலாம்னு அமைதியாகி கழகக்கோயிலில் தனது அனுதாபிகளை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட இடத்தைக்காலி பண்ணுகிறார்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்த தலிவரிடம் அவரது உதவியாளர்...’’அய்யா இன்னைக்கி அனுப்பவேண்டிய அறிக்கையை சொன்னீங்கன்னா... சீக்கிரம் முடிச்சு அனுப்பிரலாம்’’ என்று மெதுவாய் பம்முகிறார்.

இயல்புநிலைக்கு வந்த தலிவர் அறிக்கையை டிக்டேட் செய்ய ஆரம்பிக்கிறார்...

‘’சொச்சத்தீவு நமக்கு சொந்தமில்லை என்று கூறும் சாங்கிரஸ் அரசை நான் ஆதரிப்பதாக அந்த அம்மையார் கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சாங்கிரஸ் சட்னியிலிருந்து தமிழின நன்மைக்காக நாங்கள் விலகியதை இங்கே நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்... வெசோவை நடத்துவது யார் என்பதை அந்த அம்மையார் நினைவுகூரவேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்காக என் உயிரையும் பொருட்படுத்தாது உண்ணாவிரதம் இருந்தவன் நான். தமிழினத்துக்காக ஆட்சியை இழந்தவன் நான்... அதேபோல அந்த அம்மையாரும் ஆட்சியை இழந்ததாக எப்போதாவது சுட்டிக்காட்டமுடியுமா?...  அந்த அம்மையார் பேசுவதை பார்க்கையில் ‘’ஓணான் ஓடும் போது பல்லியும் ஓடுமோ...’’ என்ற கூற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது...

மாரப்பனைக்கொன்றதை வேண்டுமானால் அந்தம்மா பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்... ஆனால் ஒசாமா பின்லேடனைக் கொன்றது யார் என்று சொல்லமுடியுமா அந்தம்மையாரால்?...  ஒபாமாவுக்கு பதவி கிடைத்ததே கரசொலியில் நான் எழுதிய கடிதத்தைப்பார்த்து அமெரிக்காவில் ஓட்டுப்போட்ட உடன் பிறப்புகளால்தான் என்பதை அந்த அம்மையாரால் மறுக்கமுடியுமா?... வருகிற மாதத்தில் ஒபாமாவை சந்தித்து வெசோவின் தீர்மான நகல்களை கொடுக்க இருக்கிறார் லெனின் என்பதை இந்த அறிக்கையின் மூலம் தமிழ் மக்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்......’’

தொடர்ந்து தலிவர் டிக்டேட் செய்துகொண்டேயிருக்க அதை குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் உதவியாளர் பொத்தென மயங்கிச்சரிகிறார்...

தொடரும்...

அடுத்தடுத்த காட்சிகள் அடுத்த பதிவில்...

என்ஜாய் மக்களே... மீண்டும் சந்திப்போம்...!

3 comments:

  1. கிஸ்பூ mpஆகும் போது நான் ஆகக்கூடாங்கிற ஆசையில் தான் கினிதாகளும் கட்சியில் சேருகிறார்கள் போலிருக்கே !
    அருமை !ரசிக்க வாய்த்த அ'ரசி'யல் நையாண்டி !

    ReplyDelete
  2. உதவியாளர் பொத்தென மயங்கிச்சரிகிறார்...//

    மொத்த தமிழ் நாடே அல்லவா மயங்கி கிடக்குறது.......சூப்பர்.....!

    ReplyDelete