SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, September 27, 2013

நடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது?...


இந்திய சினிமாவின் 100வது ஆண்டு நிறைவுவிழா மிகச்சமீபத்தில் முடிந்திருக்கிறது. இதில் விஜய் அங்கு உட்காரவைக்கப்பட்டார்... கமல் இங்கு உட்கார வைக்கப்பட்டார்... ரஜினி அங்கு காக்க வைக்கப்பட்டார்... கலைஞருக்கு மரியாதை செய்யவில்லை... பெரும்பாலான முக்கியப்புள்ளிகளை புறக்கணித்து வேண்டப்பட்டவர்களை மட்டும் வைத்து விழா நடந்திருக்கிறது... என்றெல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்...

அட கருமம்... யார் எங்கு உட்கார்ந்தால் என்னய்யா வந்தது நமக்கு?... உங்களுக்கு வேண்டப்பட்ட நாயகர்களை முன்வரிசையில் அமர்த்தாததால் உங்கள் வீட்டில் அடுப்பெரியாமல் போகுமா இன்று?... இல்லை... அவர்களை முன்வரிசையில் அமர்த்தி, தங்கத்தட்டில் மரியாதை செலுத்தியிருந்தால் மட்டும் உங்கள் வீட்டில் தேனாறும், பாலாறும் ஓடியிருக்குமா என்ன?... நாம் உழைத்தால்தானய்யா நமக்கு ஒரு வேளை கஞ்சியும், அவர்கள் நடிக்கும் சினிமாவை பார்ப்பதற்கு காசும்...!

போன ஆட்சியில் ‘’பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’’ என்பதுவும், இந்த ஆட்சியில் ‘’தைரியலெட்சுமிக்கு தலைவணங்கும் விழா’’ என்பதுவும்தான் கனவுலகில் பல ஹீரோக்களை அளித்த இந்த சினிமா உலகத்தின் நிஜமுகம்...

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு... அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்களாகிய நமக்கு வரவே வராதா என்ன?... படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடுகளையெல்லாம் மீறி ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான ரசிகர் படைகள்... சினிமாவை ரசிப்பது தவறே இல்லை... ஆனால் அந்த கனவுத்தொழிற்சாலையின் நாயகர்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்... சினிமாவில் காட்டப்படும் அவர்களின் ஹீரோயிஸ கேரக்டர்களின் மீதான ஈர்ப்புகளின் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை நிஜவாழ்க்கைத் தலைவர்களாகவும், தங்களின் எதிர்கால விடிவெள்ளியாகவும் உருவகப்படுத்திக்கொள்வது என்ன வகை நம்பிக்கை என்பதுதான் புரியவில்லை...


சினிமா எனும் கனவுத்தொழிற்சாலையில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள் வெற்றிபெறுவதோடு நில்லாமல் அதைச்சார்ந்த நடிகர்களும் தூக்கி நிறுத்தப்படுவது இந்த சமூகத்தில் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டு, பதிவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருப்பதால் அதைக்கடந்து வரும் காலங்களோ, காரணிகளோ வருவது கஷ்டம்தான்... இதில் படிப்பறிவையும் தாண்டி ரத்தத்தில் கலந்துவிட்ட உணர்வுச்சமாச்சாரங்கள் நிறைய இருப்பதாலேயே  இந்த நிலைமை என்று தோன்றுகிறது...


நடிகைக்கு கோயில் கட்டுமளவுக்கு போகும் ரசனையின் தீவிரத்தை எதன் கீழ் வகைப்படுத்துவது என்பதே விளங்கவில்லை...

தங்களது கனவு நாயகனுக்கு பிரச்சனை என்றால் சொத்துப்பத்திரம், பணம் என்று கண்மூடித்தனமாக உதவி அனுப்பும் மனநிலைக்கு சினிமாவின் மீதான மோகம் வளர்ந்தது எப்படியென்றே புரியவில்லை...


நாயகர்களின் கட்-அவுட்களுக்குக்கூட பசித்திருக்கும் எத்தனையோ உயிர்களைப்பற்றி கொஞ்சம்கூட யோசிக்காமல் தங்களது சொந்தப்பணத்தில் பாலாபிஷேகம் செய்வதைப்போன்ற கேடுகெட்ட செயல் இந்தக்கனவுலகின் ரசனையில் வேறேதும் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது...

தங்கள் நாயகர்களின் புதுப்பட ரிலீசுக்கு போஸ்டருக்கு கற்பூரம் காட்டுவதும், தேங்காய் உடைப்பதும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் பிரமாண்ட மாலை அணிவிப்பதும், படம் வெற்றிபெற அலகு குத்துவதும், காவடி தூக்குவதும் என படித்த இளைஞர்கூட்டமே வெறிகொண்டலையுமளவுக்கு என்னவித ஈர்ப்புசக்தியோ இந்த நாயகர்களிடம் தெரியவில்லை...

படம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதில் சாதாரண ரசிகனின் சம்மந்தம் என்ன என்பதும் புரிந்துகொள்ளவே முடியாத சமாச்சாரம்தான்...!

சினிமா நாயகர்கள் தங்களது பெயர்களுக்குப்பின்னால் புயல், சூறாவளி, சூப்பர், டூப்பர், உலகம், அண்டம் என்று என்ன கருமத்தையாவது அடைமொழியாக வைத்துக்கொள்ளட்டும்... ஆனால் அவர்களின் ரசிகன் என்று பெற்றோர்கள் வைத்த பெயருக்கு முன்னால் தங்கள் நாயகர்களின் சினிமாப்பெயர்களை இணைத்துக்கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமே இருக்காதா இவர்களிடம்?...


ரசிகர் மன்றங்களின் பெயரில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்கூட கோடிகோடியாய் சம்பாதிக்கும் தங்களது கனவு நாயகனின் காசில் வழங்கப்படாமல்... அடிமட்டத்தொண்டன் தனது கோமணத்தை தானே உருவி செலவு செய்யும் காசாகத்தான் பெரும்பாலுமிருக்கிறது...

பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் எந்தளவுக்கு சமூக மாற்றத்தின் மீதும், சமூக விழிப்புணர்விலும், இன்றைய இளைய சமுதாயத்தின் ஈடுபாடும் அக்கறையும் தெரிகிறதோ... அதற்கு சற்றும் குறைவில்லாமல் தங்களது நாயகர்களை தூக்கிப்பிடிக்கும் அவர்களின் சினிமா மோகமும் அப்பட்டமாகத்தெரியத்தான் செய்கிறது...

இப்போது இவர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லை... அது தியாகராய பாகவதர் காலத்திலேயே வெள்ளி விழா கொண்டாட வைக்குமளவுக்கு சினிமாவை, சினிமா நாயகர்களை ரசிக்கத்தொடங்கிய நமது தாத்தாக்களின் ஜீன்களிலிருந்து பரம்பரை பரம்பரையாக நமக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது...

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், etc., என்று அந்தந்த தலைமுறைக்கு ஏற்ப சினிமா நாயகர்களை தலையில் வைத்துக்கொண்டாடுவதை தவறாமல் செய்து வந்திருக்கும் சமூகம் இது... நமது பக்கத்து மாநிலமான கர்நாடகா, ஆந்திரா போன்றவையும் இதில் விதிவிலக்கல்ல... தண்ணீர் தருவதில் மட்டும்தான் தகராறேயொழிய சினிமா தலைவர்களை ரசிப்பதிலும், உருவாக்குதிலும், உயர்த்துவதிலும் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதான் நிரூபித்திருக்கிறோம்...

எம்.ஜி.ஆர். நடிகராகயிருந்து முதலமைச்சர் ஆகலாம். ஜெயலலிதா நடிகையாக இருந்து முதலமைச்சர் ஆகலாம். என்.டி.ஆர். நடிகராகயிருந்து முதலமைச்சர் ஆகலாம்... ஆனால் எங்கள் தலைவர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா?... எங்கள் தலைவர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா?... முதல்வர் ஆகக்கூடாதா?... என்றெல்லாம் அவரவர்களுடைய ரசிகர்கள் எழுப்பும் கேள்வி தவறேயில்லைதான்... ஏனென்றால் பியூன் வேலைக்குக்கூட எட்டாம் கிளாசோ, பத்தாம் கிளாசோ படித்திருக்கவேண்டும் எனும் நம்நாட்டில் கல்வி, திறமை, தகுதி, அனுபவம் என எதுவுமே இல்லாவிட்டாலும்கூட ஒருவர் ஜெயித்து கல்லா கட்டுவது அரசியல் வியாபாரத்தில் மட்டும்தானே...

இங்கே நடிகர்களுக்குள் நடக்கும் அரசியலும், அரசியலில் நடிக்கும் தலைவர்களும் இருக்கும்வரையிலும் எதுவும், யாருக்கும் சாத்தியமே...

ரஜினியும் முதல்வர் ஆகலாம்... விஜய்யும் முதல்வர் ஆகலாம்... அஜித்தும் முதல்வர் ஆகலாம்... திரிஷாவும் முதல்வர் ஆகலாம்... குஷ்பூவும் முதல்வர் ஆகலாம்... மக்களின் அதிக பட்ச ஓட்டுக்கள் யாருக்கு விழுகிறதோ அவர்கள் எல்லாம் முதல்வர் ஆவது ஜனநாயக அமைப்பில் தவறே இல்லைதான்...  ஆனால் அதற்காக எம்.ஜி.ஆரோடு மற்றவர்களை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும், மாநிற எம்.ஜி.ஆர் என்றும் ஒப்பிடும் காலம் இன்னும் வரவில்லை என்பதுதான் நிஜம்...


எம்.ஜி.ஆருக்கு ஏற்றிவிடவும், இறக்கிவிடவும் எந்த எஸ்.ஏ.சந்திரசேகரனும் இல்லை... எம்.ஜி.ஆர். ஹீரோவானதும் ஸ்டைர்ட்டா முதலமைச்சர்தான் என்று வந்துவிடவில்லை... தி.மு.க எனும் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றி, அரசியல் கற்றுக்கொண்டு, அரசியல் அனுபவங்களை பெற்றுக்கொண்டு, காலஓட்டத்தின் அடிப்படையில் தனிக்கட்சி தொடங்கி, தோல்விகள், வெற்றிகள் என எல்லாவற்றையும் சந்தித்து மக்கள் பணியாற்றிய நிஜ பொன்மனச்செம்மல்தான் அவர்...

ஜெயலலிதாவையும்கூட நடிகை என்ற ஒற்றைத்தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஆகிவிட்டார் என்று சொல்வது மாபெரும் தவறுதான்... குஷ்பூவுக்கு கோயில் கட்டிய பாரம்பரியத்தைக்கொண்ட நமது சமூகம் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டும் அளவுக்கெல்லாம் சினிமாவில் ரசித்திருக்கவில்லை... தன்னை எம்.ஜி.யாரின் அ.தி.மு.க. கட்சியில் இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக எம்.ஜி.யாரால் கைதூக்கிவிடப்பட்டு, அவரின் மறைவுக்குப்பின்னர் தனது தனித்திறமையால் வளர்ந்து முதல்வர் ஆனவர்தான் ஜெயலலிதா... மற்றபடி அவர் நடிகை என்ற திறமையை மட்டுமே வைத்துக்கொண்டு முதல்வர் ஆகிவிடவில்லை...

அதே போலத்தான் கலைஞரின் அரசியல் வரலாறும்... அவர் கடந்து வந்த கடினப்பயணங்கள் அவ்வளவு எளிதானதல்ல... வெறுமனே திரைப்படத்திற்கு வசனம் எழுதியதால் மட்டுமே முதல்வர் ஆகிவிடவில்லை கலைஞர்... அதனையும் தாண்டிய அரசியல் அரப்பணிப்பு, ஈடுபாடு, முழுநேர அரசியல் பங்களிப்பு என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன வெற்றிக்கான காரணிகளாய்...

இந்த பழைய வரலாறெல்லாம் சொல்வதால் ரஜினியோ, கமலோ, அஜித்தோ, விஜய்யோ... உங்கள் தலைவர் யாராக இருந்தாலும் சரி... அவர் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் பயின்றுதான் முதலமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்பதல்ல அர்த்தம்... உங்களுடைய தீவிர சப்போர்ட் இருக்கும்வரை அவர் தாராளமாய் உடனடியாய் தனிக்கட்சி ஆரம்பித்துகூட முதலமைச்சர் ஆகலாம்... அதில் நிச்சயமாய் தவறேதும் இல்லை...


ஆனால் நீங்கள் ரசிக்கும் கனவு நாயகனை சினிமாவையும் தாண்டி உருவகப்படுத்த முயலும்போது, ஒரேயொருமுறை கீழ்க்கண்ட கேள்விகளை சிந்தியுங்கள்...

சினிமாவைத்தாண்டி நீங்கள் சார்ந்த சமூகத்துக்கோ, உங்களுக்கோ, உங்களது கனவு நாயகர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? இல்லை... என்னென்ன சாதித்திருக்கிறார்கள்?...

தங்களது கனவுலக பப்ளிசிட்டியை வைத்து மக்கள் பிரச்சினையில் எதெற்கெல்லாம் சமூக அக்கறையுடன் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்?...

சமூக விழிப்புணர்வில் அவர்களது பங்களிப்பு என்ன?...

அவர்கள் அரசியல் ஆர்வம் உண்மையிலேயே மக்கள் சேவையை நோக்கியதுதானா?...

அரசியலுக்கான அனுபவமும், பக்குவமும் உங்களது நாயகர்களுக்கு வந்துவிட்டதா?...

கோபம் கொள்ளாமல் இப்படிப்பட்ட கேள்விகளை கனவு நாயகர்களின் ரசிகர்கள் தங்களுக்குத்தாங்களே ஒருமுறையேனும் கேட்டுக்கொள்ளலாம்...

மற்றபடி கர்நாடகாவில் குத்து ரம்யாவே எம்.பி ஆகியிருக்கும் நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகட்டும் தவறேயில்லை...

இன்னார் வந்தால் நாடு நன்றாக இருக்கும்... இன்னார் வந்தால் நாடு உருப்படாமல் போகும் எனும் அரசியல் விழிப்புணர்வு இருக்கலாம்... ஆனால் கனவுலக நாயகர்களை நிஜவாழ்க்கையில் நாளைய தமிழகமே... நாளைய பாரதமே என்று நீங்களே இழுத்து வந்து தகுதி வராத காலத்திலேயே தலைக்கு மேலே தூக்கி வைக்காதீர்கள்...

சினிமாவை சினிமாவாக மட்டுமே ரசிக்க முயலுங்கள்...

நாம் உழைத்தால்தான் நமக்கு வாழ்க்கை...

தலைப்பில் இழுத்த நரேந்திரமோடியை உள்ளே காணவில்லையே என்று தேடினால் அது தலைப்போடவே முடிந்த விஷயம்தான்...

இது எனது தளம்... எனக்குத்தோன்றுவதை எழுதும் உரிமை எனக்கிருக்கிறது... நானும் சிறுவயதிலிருந்தே சினிமாவையும், விதவிதமான நாயகர்களையும் ரசித்தவனும், இன்னமும் ரசித்துக்கொண்டிருப்பவனும்தான்... ஆனால் ரசனையின் எல்லையறிந்து சினிமாவை சினிமாவாக மட்டுமே ரசித்திருப்பதால் இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கிருப்பதாகவே உணர்கிறேன்...

மற்றபடி இவன் யாருடா கருத்து சொல்றதுக்கு?... வந்துட்டான் பெரிய ______ஆட்டம் என்று எடுத்துக்கொள்வது அவரவர் உரிமை...!

மீண்டும் சந்திப்போம்...!

4 comments:

 1. ரசிப்பு வேறு... வெறித்தனம் வேறு... படிக்கும் படிப்பு அந்தளவிற்கு...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தலைவா... நொந்து கொள்வதைத்தவிர வேறென்ன செய்வது?...!

   Delete
 2. தமிழனுக்கு போய் புத்தி சொல்லமுடியுமா. விடுங்க பாஸ். இவர்கள் இப்படிதான். ஆனால் நன்றாகவே(உண்மையை) எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள் ...என் பங்குக்கு நேற்று நான் சொன்னது ....
  குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடும் ?
  பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் ...
  ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
  வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்திற்கு
  கொண்டுவர முடியவில்லை என்பதை உணர்ந்து ...
  தீர்வு தேடிய மக்கள் ...
  'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு அனுப்பி உள்ளார்கள் ...
  இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து
  குத்துப் பாட்டுக்கு ஆடியவர்தான் இப்போ MP!
  http://jokkaali.blogspot.com/2013/09/blog-post_27.html

  ReplyDelete