SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, September 26, 2013

சிறுநீராகும் ஒரு கண்ணீர்...!


எங்களுக்கு நீ பிறந்தநாளின்
எல்லையற்ற சந்தோஷங்களை
இப்போதும்கூட வார்த்தைகளில்
எளிதாக விவரித்தல் முடியாது;

அர்த்தமற்ற பயணங்களாய்
நீண்டு கொண்டிருந்த வாழ்க்கையில்...
போகுமிடம் தெரிந்ததாய்
பூரிக்க வைத்தது உன் வரவு;


உன் பிஞ்சுக்கால்கள் உதைத்ததும்,
உன் பிஞ்சுக்கைகள் அடித்ததும்
வலிக்காத வசந்தங்களாய்
வாழ்வினின் வரமாய் தோன்றியது;

எங்கள் உடைகளை நனைத்த
உன் சிறுநீர் அபிஷேகமும்...
எங்கள் மடியினில் கழித்த
உன் மழலைக்கால மலமும்...
அருவெறுப்பாய் உணரமுடியாத
ஆச்சர்யங்கள் புரிந்ததேயில்லை;


தத்தித்தவழ்ந்து
நடை பயின்ற உனக்கு
கைத்தாங்கி துணையிருக்க
ஒருநாளும் சலித்ததில்லை நான்;

ஒரே கேள்வியையே நீ
மறுமுறையும் கேட்கும்போதும்
எரிச்சலோ, கோபமோ
எப்போதும் வந்ததில்லை எனக்கு;


வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும்
உனை ஏற்றிவிட்ட கடமையை மட்டுமே
என் ஜனனத்தின் குறிக்கோளாய்
சுவாசித்து வாழ்ந்த நாட்களில்
வயோதிகம் வந்ததுகூட
தெரியாமலே நகர்ந்துவிட்டது;

வயதோடு சாவு வராமல்
வயோதிகப்படுக்கையில் விழுந்தது
என் தலைவிதி மட்டுமேயொழிய
என் தவறென்று ஏதுமில்லை;


முடியாத என் வயோதிகப்படுக்கை மலமும்
உன்னைக் கொஞ்சி வளர்த்த என் முகமும்
ஒரே மாதிரியான உணர்வுகளை - இன்று
உன்னுள் ஏற்படுத்தும் கல்நெஞ்சமெப்படி?...

இருமலோடு கலந்த என் கேள்விகள்
உனக்கு எரிச்சலை மட்டுமே தருகின்றபோதும்
காதில் விழும் வார்த்தைகளைக்கூட
கண்டுகொள்ளாமலே போவதெப்படி?...


எஞ்சிய உயிரையும் பாரமாய் நினைத்து
எந்தன் இறக்கும் நொடியை நீ
எதிர்நோக்கி நித்தமிருப்பினும்...
கடைசி மூச்சு நின்று
கண் மூடும் வரையிலும்...
உன் கை கொள்ளியில் வெந்து
சாம்பலாகும் வரையிலும்...
எப்போதும் எங்கள் பிள்ளை நீ
நலமாய் வாழவே தவமிருப்பேன்...;

என் உயிர் பிரிந்த தருணத்தில் விழும்
உன் ஒரு சொட்டு கண்ணீர் போதும்...
உன் அத்தனை பாவங்களையும் அது
அடியோடு அலசிப்போகும்...


என் மடியிலும், தோளிலும் தவழ்ந்த
உன் மழலை நனைத்த சிறுநீருக்கும்...
உயிரற்ற என் உடலில் விழும்
உன் ஒரு சொட்டு கண்ணீருக்கும்
வேறுபாடுகள் நிறைய உண்டு
ஒருநொடியேனும் உணர்வாயா மகனே?...

4 comments:

  1. பலரும் உணர்வதில்லை... விரைவில் விரைவில் அவர்களுக்கும் உணரும் காலம் உண்டு...

    ReplyDelete
  2. இன்றைய நடைமுறையின் பிரதிபலிப்பு ஒவ்வொரு வரிகளிலும். மழலை வளர்ப்பில் பெற்றோரின் பாசத்தை உணர்த்தும் வரிகள் மிக அருமை

    ReplyDelete