SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, September 17, 2013

யோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை?...!


தலைவரின் லேட்டஸ்ட் அதிரடி, ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய முழு விவரத்தையும், அது கடந்து வந்திருக்கும் பாதையையும் துண்டுப்பிரசுரம் போட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது. அதை செவ்வனே ஆரம்பித்து வைத்திருக்கிறார் தலைவரின் வாரிசும்...

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை அந்த காலகட்டத்தில் விபரமறிந்த வயதிலிருந்த யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள்... இந்தியாவையே வாய் பிளக்க செய்யுமளவுக்கு ஆயிரக்கணக்கான நகைகள், துணிகள், காலணிகள் என ஜெவும் அவரது உடன்பிறவா தோழியும் அடித்த கூத்துக்கள் 1996ல் ஜெவின் ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சியேறியதும் படங்களுடன் வெளிவந்து வாய் பிளக்க வைத்தது.


(சொத்துக்களாக பங்களாக்கள், திராட்சைத்தோட்டம், டீ எஸ்டேட், பல்வேறு நிலங்கள் என சசிகலா தரப்பினரால் வளைத்துப்போடப்பட்டவைகளும், வளர்ப்பு மகனுக்கு நடந்த பிரமாண்ட திருமணமும் தனிக்கதை...!) அந்தப்படங்களின் வெளியீட்டுக்குப் பின்னர்தான் ஜெவும் நகைகளைத் துறந்து எளிமையான அரசியல் அவதாரம் எடுத்தார்...

புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு ரத்தத்தின் ரத்தமாய் வளர்க்கப்பட்ட கழகம் அவரது மறைவுக்குப்பின்னர் அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த ஜெவின் கைகளுக்கு ஜானகி ராமச்சந்திரனுடன் மோதிய சிலபல அரசியல் விளையாட்டுக்களுக்குப்பின் வந்து சேர்ந்தது. (புரட்சித்தலைவரால் அரசியலுக்கு வந்திருந்தாலும்கூட ஆட்சிக்கு வருமளவுக்கு வளர்ந்த பின்னர் கொஞ்ச கொஞ்சமாய் எம்.ஜி.ஆரின் படங்களை இருட்டடிப்பு செய்தது என்ன வகை கோபம் என்பது ஜெவின் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என நினைக்கிறேன்...)

 1991ம் ஆண்டு தேர்தல் வந்தபோது ஜெயலலிதா, ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரசுடன் கூட்டு வைத்திருந்தார். அப்போது நிகழ்ந்த ராஜீவ் காந்தியின் படுகொலை அனுதாப அலைகளில் அமோகமாக கரை சேர்ந்து ஆட்சியைப்பிடித்தது அம்மா தலைமையிலான கழகம்.

அதற்குப்பிறகு நடந்த ஐந்தாண்டுகால ஆட்சியை அந்தக்காலகட்டத்தில் இருந்தவர்கள் இப்போது நினைத்தாலும் வாய்பிளப்பார்கள்...

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம் என்ற பழமொழி நமக்கெல்லாம் தெரிந்திருக்கும்...!

1991 முதல் 1996 வரை அந்த ஐந்தாண்டுகளில் சசிகலாவும் அவரது கூட்டமும் அடித்த கூத்துக்கள்தான் அளவிடமுடியா ரகம். அப்போது ஜெவும் அவர்களை கண்டுகொள்ளாமல் ஆடவிட்டது மக்கள் மீது இல்லாத பயத்தையும், ஜெவின் அந்த காலகட்டத்து அரசியல் அனுபவமின்மையையும் தெள்ளத்தெளிவாக உணர்த்தக்கூடியவையாகும்.


எம்.எல்.ஏக்கள், மந்திரிக்கள் கண்டிப்பாய் காலில் விழவேண்டும் என்பதும், எஸ்.டி.எஸ் வேட்டி அவிழ்ந்து வேனில் தொங்கியதும், கணக்கு வழக்கில்லாமல் தமிழ்நாடு முழுக்க நிலங்களை வளைத்துப்போட்டதும், யாருமே எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது எனும் சர்வாதிகாரமும், வழக்கறிஞரையே செருப்பால் அடித்ததாய் கூறப்பட்ட விவகாரமும், கும்பகோணம் மகாமகக்குளியல் மரணங்களும், எல்லாவற்றுக்கும் மேலாக சசிகலாவின் உறவு வழியிலிருந்து ஒருவரை ஜெ தத்து எடுத்ததும், அந்த வளர்ப்பு மகனுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி அரசு விழா போல பிரமாண்ட திருமணத்தை நடத்தி வைத்ததும் என அடித்த கொட்டங்கள், இப்போது அம்மாவே நினைத்தாலும் வருத்தப்படவைக்கும் ரகமாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

மக்களை மதிக்காத மனப்போக்குக்கு எப்போதுமே சைலண்ட் பாடம் புகட்டுப்படும் என்பதுபோல அந்த ஐந்தாண்டு ஆட்சி முடிந்ததும் வந்த அடுத்த தேர்தலில் படுதோல்வியை தழுவியது அம்மாவின் கழகம். (அப்போதெல்லாம் இப்போதிருப்பதுபோல் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் – வாங்கும் ஓப்பன் சிஸ்டம் கண்டுபிடிக்கப்படவில்லை...!!!). அம்மாவே கூட தான் நின்ற பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனார் என்றால் மக்களின் மனவருத்தம், கோபம் எல்லாம் எந்தளவுக்கு இருந்திருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து தி.மு.க. ஆட்சி... வேறென்ன நடக்கும்... நடந்த சுருட்டல்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரத்தொடங்கியது. அதில் ஒன்றுதான் இந்த வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா 66.60 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாய் பதிவான வழக்கு... (எதிர்க்கூடாரம் எப்போதுமே மாட்டிக்கொள்ளாத அளவுக்கு ஊழல்கள் செய்வதிலும், சொத்து சேர்ப்பதிலும் கில்லாடிகள், அவர்கள் செய்வதெல்லாம் மாட்டிக்கொள்ளாத சயின்ட்டிஃபிக் ஊழல்கள்... ஆனால் அம்மாதான் ஒரு முறை முதல்வரானதும் தமிழ்நாடே நமக்குத்தான் சொந்தம்... நம்மை யார் கேட்க முடியும் என்பதுபோல எடுத்தோம், கவிழ்த்தோம் என வெளிப்படையாய் தெரியுமளவுக்கு ஆட்டம் போட்டு விட்டார்...’’ என்பதுதான் அப்போதைய பெரும்பான்மை சாமான்யரின் அரசியல் கருத்தாகயிருந்தது...)


சரி... போனது போகட்டும் என அதன் பிறகும் தமிழக மக்கள் ஜெவை மீண்டும் 2001ல் ஆட்சியில் அமர்த்தினர். அப்போது பழைய அளவுக்கு ஆட்டமில்லை என்றாலும், சசிகலா குடும்பத்தினரின் ஆட்டம் மீண்டும் இருக்கத்தான் செய்தது. அத்தோடு மட்டுமில்லாமல் எதிரணியினரை பழிக்குப்பழியாக கைது செய்து அய்யய்யோ... கொல பன்றாங்க... கொல பன்றாங்க... என்று கதறவைத்தும் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்...

2006ல் மீண்டும் தி.மு.க ஆட்சி... அப்போது நடந்தவையெல்லாம் 1991-1996ல் நடந்த ஜெவின் ஆட்சியைவிட பன்மடங்கு அதிகம் என்பது எல்லாருக்குமே தெரியும் என்பதால் நான் விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை.

2011ல் மீண்டும் அம்மாவின் கையில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். எனக்குத்தெரிந்த அளவு இந்த மூன்றாம் முறை ஜெவின் ஆட்சி ஒரு சில குறைகளைத்தவிர மிக நேர்த்தியாக நடப்பதாகவே கருதுகிறேன். அம்மா மெஸ் நல்ல திட்டம்தான்... நிறைய ஏழை மக்கள் பயனடைவதை கண்கூடாக பார்க்கிறேன். பல இடங்களில் நீர் மேலாண்மைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது ஆரோக்கியமான விஷயம்தான்... புதிதாய் 14 அரசு கல்லூரிகள் சமீபத்தில் திறந்திருப்பது நல்ல விஷயம்தான்... சென்னையின் புறநகர்ப்பகுதி சாலைகள் எல்லாம் சந்து பொந்து விடாமல் புதிதாய் பளபளப்பது நான் மிகவும் ரசித்த விஷயம்...

நதிகளை காப்பதை விட்டுவிட்டு, சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் ஆட்சி செய்வதை விட்டுவிட்டு... அரசே அம்மா குடிநீர் என்று வியாபாரம் செய்வது ஆட்சியின் இயலாமையை காட்டுகிறது என்ற வாதமும்கூட ஒரு தரப்பில் பார்த்தால் நியாயமாய் தெரிந்தாலும், இன்னொரு தரப்பில் பார்க்கும்போது மாறி வரும் சமூக சூழல்களில் அம்மா குடிநீரையே இன்னும் மிகக்குறைவான விலைக்கு விற்றால் அது நிச்சயமாய் வரவேற்கப்படவேண்டிய விஷயம்தான் என்பேன்...

பல விஷயங்களில் சரியான தகவல்கள் ஜெவின் கவனத்துக்குப் போகாமல் மறைக்கப்படுவதும், அவருடைய எண்ண ஓட்டத்தை பூர்த்தி செய்யுமளவுக்கு சரியான அமைச்சர் மற்றும் அதிகாரிகள் படை இல்லாமல் அவர் ஒருவரே தனி ஆளாக வாள் சுற்றுவதும் சிலபல பின்னடைவுகளை அவருக்குக் கொடுத்திருப்பதும் உண்மைதான். அதேபோல திரைத்துறையில் ஜெவின் சில மூக்கை நுழைத்த நடவடிக்கைகள் இந்த முறை மக்களை முகம் சுழிக்க வைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமே...

டாஸ்மாக்கை ஒழித்துவிட்டு, தாது மணல், ஆற்று மணல், கிரானைட் போன்ற எண்ணற்ற வருமான வழிகளை தனியார் முதலைகளிடமிருந்து கைப்பற்றி அரசே ஏற்று நடத்தும் பட்சத்தில் அரசு கஜானாவை டாஸ்மாக் இல்லாமலேயே தாராளமாய் நிரப்பலாம். இலவசங்களை ஒழித்து விட்டு அந்தப்பணத்தில் வேலை வாய்ப்பை பெருக்கும் எண்ணற்ற வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தலாம். முக்கியமாக இன்னமும் காவல்துறை பழைய தலைமையையே நம்பிக்கொண்டிராமல் உடனடியாக தகுதியான ஒருவரை அந்த இடத்துக்கு மாற்றி, அதிரடி நடவடிக்கைகளின் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்கட்டினால் அதுவே மக்கள் கொண்டாடும் மிகப்பெரிய விஷயமாய் மாறிப்போகும்...

சரி... அது வேறு விஷயம்... கட்டுரைக்கு வருவோம்... கச்சத்தீவுக்கு ஒரு நாள், மணிமேகலைக்கு ஒரு நாள் என மாற்றி மாற்றி அரசியல் லாப அவதாரம் எடுக்கும் எதிர்க்கூடாரம், இப்போது ஜெவுக்கு எதிராக சோனியாவின் உதவியுடன் கையில் எடுத்திருக்கும் விஷயம்தான் 1996ல் ஆரம்பித்த சொத்து குவிப்பு வழக்கு.

ஜெவின் சொத்து குவிப்பு வழக்கு மட்டுமல்ல... மக்களின் பணத்தை சுரண்டித்தின்ற எந்த வழக்கானாலும் சரி... நிச்சயம் கால தாமதம் ஏதுமின்றி சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை. ஆனால் அதை முடிவாக்கும் முன்னர் சிலபல கேள்விகளுக்கு விடை தேட வேண்டித்தானிருக்கிறது...

ஜெவின் வழக்கை ஊதிப்பெரிதாக்கி அவரை அரசியலில் இருந்து ஓரம்கட்டி செக் வைக்க நினைப்போரெல்லாம் மக்களின் பணத்திற்கு ஆசைப்படாத, மக்கள் பணத்தில் கை வைக்காத, ஏழையாய் அரசியலுக்கு வந்தும் இன்றளவும் வருமானத்திற்கு அதிகமாய் சொத்து சேர்க்காமலே இருக்கும் உத்தம காந்திகள்தானா?...

ஜெவை விட பன்மடங்கு அதிக சொத்துக்களும், சுவிஸ் வங்கி பணமும் கொட்டிக்கிடப்பதாய் பல தமிழக அரசியல் புள்ளிகளின் பெயர்களே ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பதும், விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இடம் பெற்றிருக்கும் இந்திய அரசியல் தலைகளின் விபரங்களும் சும்மா உல்ல்லூல்ல்லாய்தானா?...!!!

தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்த ஊழல்களிலேயே இந்த 66.60 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்ததுதான் மற்ற எல்லாவற்றையும்விட முதலில் தண்டிக்கப்படவேண்டிய தலையாய வழக்கா?...

ஒரு திருத்தப்பட்ட ஆட்சியை திருந்தி வழங்க நினைக்கும் ஒரு அரசியல்வாதியின்  பழையகால தவற்றை தனது செல்வாக்கை பயன்படுத்தி ஊதிப்பெரிதாக்கி அவரை அரசியலை விட்டே விரட்டிவிடலாம் என ராஜதந்திர கனவு காண்பதும் காய் நகர்த்துவதும் சரிதானா?...

இந்தக்கட்டுரைக்கு எதிர்வாதம் புரிய நினைப்போரும், இதை அ.தி.மு.க ஆதரவு கட்டுரையாய் நினைப்போரும் ஒரு நிமிடம் நெஞ்சில் கை வைத்துச்சொல்லுங்கள் – இன்று சொத்துக்குவிப்பு வழக்கை ஜெ இழுத்தடிப்பதாகவும், அதில் தாங்களும் தலையிடுவோம் என்றும், அதில் நிச்சயம் நீதி வெல்லும் என்றும் முழங்குவோரெல்லாம் வருமானத்துக்கு அதிகமாய் சொத்தே சேர்க்காத யோக்கியர்கள்தானா?...

சொத்துக்குவிப்பு வழக்கை வாய்தா, அது இதுவென இத்தனை ஆண்டுகள் இழுத்தடிப்பது மிகப்பெரும் தவறுதான். சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு அரசியல்வாதிக்காவது கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் மற்றவர்களுக்கு ஒரு பயமாவது இருக்கும் என்பதும் சரிதான்... சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் தாராளமாய் வழங்கப்படட்டும்... அது எனது கவலையுமில்லை...!

ஆனால் அதெற்கெல்லாம் முன்னர், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தையெல்லாம் மீட்டெடுத்து இந்தியாவுக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட்டு... அந்த லிஸ்ட்டில் இருப்போருக்கெல்லாம் தகுந்த தண்டனையை வழங்கிவிட்டு அதன் பிறகு ஜெவுக்கும் தண்டனை வழங்குங்கள்...

வெறும் 66.60 கோடியோடு தண்டனை நின்று விடாமல், வார்டு மெம்பர்களே கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கும் இந்தக்காலத்தில், ஒட்டு மொத்த அரசியல் கூட்டத்தின் சொத்துக்களையும் நியாயமான வழியில் சோதித்து அவையெல்லாம் சரியான வருமானத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்கள்தானா என ஆராய்ந்து தண்டனை வழங்குங்கள்…

ஆயிரம் கோடி, லட்சம் கோடி ஊழல் வழக்குகள் ஏராளமிருக்கிறதே... அதிலெல்லாம் ஊழலே நடக்கவில்லை என்று எங்கள் தலையில் மசாலா அரைக்காமல், அதிலும் உங்களையெல்லாம் சேர்த்துக் கொள்ளச்சொல்லி வாதாடி நீதியை வென்று தாருங்கள்...

இப்படி அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்தால் நீண்டுகொண்டே போகும் காரணிகள் ஆயிரமிருக்க ‘’நான் யோக்கியன்...நான் யோக்கியன்... என்னையும் வழக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று வடிவேலுவின் ‘’நானும் ரௌடி’’ பாணியில் கூவிக்கொண்டிருப்பது அரசியல் அழகாய் தெரியவில்லை...


‘’ஏன்டா?... உன்னைய திருடன்னு சொன்னதோடயில்லாம என்னையும் ஏன்டா திருடன்றே?... நான் யோக்கியன்டா...’’ என்பதுவும்,

‘’யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?... வாங்க பாஸ்... விடியறதுக்குள்ளே ஆளுக்கொரு பக்கமா போயி அகப்பட்டதையெல்லாம் சுருட்டிக்கிட்டு ஓடிருவோம்...’’ என்பதுவும்...

சினிமாவுக்கு மட்டுமல்ல... அரசியலில் விளையாண்டு கொண்டிருக்கும் எல்லாக்கட்சிகளுக்கும்கூட கனக்கச்சிதமாய் பொருந்தும் கைப்புள்ள காமெடிதான் என்பது ஏற்கனவே சாமன்யர்கள் நாங்கள் அறிந்து கொண்ட செய்திதான் என்பதால்...புதிதாய் துண்டுப்பிரசுரம் படித்து நாங்கள் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன்...!

தொடர்ந்து பேசலாம்...


5 comments:

 1. அம்மாவும், அவர்கள் தோழியின் படமும், நினைவுபடுத்தி சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்,,,

  ReplyDelete
 2. பாகுபாடற்ற சரியான அரசியல் அலசல்
  விரிவான அருமையான பகிர்வுக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வணக்கம்
  அரசியல் ஆய்வு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அருமையான அலசல். நல்ல கருத்துக்கள். உங்கள் பதிவை படிப்பதில் பெருமை.

  ReplyDelete