SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, September 16, 2013

மனைவி – முப்பரிமாணம்...!


இரவுக்கவிதைக்காக எனது பழைய டைரியை தேடிக்கண்டுபிடித்தபோது எப்போதோ நான் எழுதிய இன்னும் சில பல கவிதைகளும் என் கண்ணில் பட்டன...

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... இதை நான் எழுதியது எனது கல்லூரிப்பருவத்தின் மூன்றாமாண்டில்... கோவை அரசு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தபோது எழுதிய கவிதை இது...

பெரும்பாலும் நான் எழுதும் கவிதைகளில் அதன் கரு நபராக என்னை நான் உருவகப்படுத்திக்கொண்டு எழுதுவது சிறுவயது முதலே எனக்கு பழக்கமாகிப்போன விஷயம்... (பெரும்பாலும் கவிதை எழுதுபவர்கள் அப்படித்தான் என்று நினைக்கிறேன்...).

இந்தக் கவிதைகூட கல்லூரிப்பருவத்திலேயே கல்யாணத்திற்கு பிறகு பிரசவத்திற்காக மனைவி தாய் வீட்டுக்கு பிரிந்து போகும்போது நமது உணர்வுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று என்னை நானே எதிர்கால வாழ்க்கையை உருவகப்படுத்தி எழுதியதுதான்...

மனைவிமுதல் பரிமாணம்...!


அதிகாலையில் எழுப்பிட
அன்பு முகம் இல்லை;
தோட்டத்தின் ஒற்றைப் பன்னீர் மரத்தில்
கூவிடும் குயிலையும் காணவில்லை;

கொய்யாமரத்தின் பழம் சுவைக்கும்
அணில் பிள்ளையையும் காணவில்லை;
விட்டத்தில் கூடுகட்டி வாழ்ந்த
பெண் குருவியையும் காணவில்லை;

மாடியில் வைக்கும் முதல் உணவுக்கு வரும்
காக்கைகளையும் காணவில்லை;
மிஞ்சிய இரவு உணவுக்கு வரும்
தெரு நாயையும் காணவில்லை;

தூக்கத்தை தொலைக்க கத்தும்
தவளைகளையும் காணவில்லை
தோட்டத்தில் தேன் உறிஞ்சும்
வண்ணத்துப்பூச்சிகளும் வருவதில்லை;

மனைவி மட்டுமே
பிரிந்து போனாள் என்றிருந்தேன்...
அவைகளுமா போயின
பிரசவத்திற்கு பிறந்த வீட்டுக்கு?...!

இப்போது திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது... வாலிப வயது வாழ்க்கை அனுபவங்களையெல்லாம் மனதுக்குள் சேமித்துக்கொண்ட மத்திய வயது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தச்சூழலில் அந்தக்கவிதையின் அடுத்த பரிமாணம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று மீண்டும் ஒரு பேச்சிலர் வாழ்க்கையை வாழ நினைக்கும் வித்தியாச எண்ணங்களின் வடிவாய் எழுத முயன்ற கவிதைதான் இது... 


(இது இப்படியும் சிலருக்கு தோன்றலாம் எனுமொரு வித்தியாசமான இரண்டாம் பரிமாணம் மட்டுமேயொழிய மற்றபடி மனைவி குழந்தைகளுடன் வாழ்வது சுதந்திரமற்ற வாழ்க்கை என்ற எண்ணத்தை விதைப்பதற்காக அல்ல என்பது மூன்றாம் பரிமாணத்தில் புரியும்...!)

மனைவிஇரண்டாம் பரிமாணம்...!!


அதிகாலையில் தூக்கத்தைக் கலைக்கும்
தொந்தரவுகள் ஏதுமில்லை;
குளிக்க வைக்கச்சொல்லி அடம்பிடிக்கும்
குழந்தைகளும் ஊரிலில்லை;

அலுவலகம் செல்லும் வழியில்
இறக்கிவிட யாருமில்லை;
காலை உணவுக்கும் கட்டுச்சோற்றுக்கும்
கட்டுப்பாடுகள் ஏதுமில்லை;

மணியடித்தால் வீடு திரும்பும்
நேரமென்று எதுவுமில்லை;
நட்புகளுடன் சுற்றித்திரிய
தடைபோட யாருமில்லை;


தொலைக்காட்சியில் சேனல் மாற்ற
சண்டையிடுவோர் யாருமில்லை;
தொல்லையென்று நான் நினைத்த
குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் விடுதலை;

ஹைய்... ஹிட்லர் மட்டுமே
வெளியூர் போனாள் என்றிருந்தேன்;
என்னை நானாக வாழவிடாத
வார்த்தைகளுமா கூடவே போயின?...!!

மனைவி என்பவள் வாழ்வில் தோழி, தாய், தலைவி, நிர்வாகி, மாமியார், பாட்டி என பலப்பல பரிமாணங்களை எடுப்பவளாக இருந்தாலும் இந்த மூன்று கவிதைகளும் மனைவி குறித்த ஒரு கணவனின் மூன்று வெவ்வேறு காலகட்டத்தின் பார்வையாய் பதியப்பட்டிருப்பது முக்காலக்கவிதை போல இருந்தாலும் இதை முப்பரிமாண கவிதையாகவே நான் நினைக்கிறேன்...

இரண்டு பரிமாணங்கள் படித்தாகிவிட்டது... அடுத்தது?...

ஒரு மனிதன் வாழ்ந்து முடிந்த தருவாயில் வாரிசுகள் எல்லாம் வேலை, குடும்பம் என தனித்தனியாக செட்டில் ஆகிப்போய்விட, கட்டிய மனைவியும் தீர்க்க சுமங்கலியாய் விடைபெற்றுக்கொள்ள, வயோதிக வாழ்க்கையின் தனிமையில் அவனது மனநிலை எப்படியிருக்கும்?...

மனைவிமூன்றாம் பரிமாணம்...!!!


அதிகாலையில் எழுப்பிட யாருமில்லை என்றாலும்
இரவெல்லாம் தூக்கம் தொலைப்பது ஏனென்று புரிவதேயில்லை;
பல்துலக்க, குளிக்க, உடைமாற்ற என
நிரந்தர உறவினர் போல் உபசரிக்க ஒரு நாதியுமில்லை;

தோட்டத்தின் ஒற்றைப்பன்னீர் மரத்தில் கூவிடும் குயில்களும்
கொய்யா மரத்தின் பழம் சுவைக்கும் அணில் பிள்ளைகளும்
விட்டத்தில் கூடுகட்டி வாழும் பெண் குருவியும்
ஒருபோதும் என்னை கவனிப்பதேயில்லை;

வைத்தது வைத்தபடியும், கிறுக்கல்கள் இல்லா சுவர்களும்
இப்போது மனதுக்குள் நிம்மதியைத் தருவதேயில்லை;
ஆயிரம் கேள்விகளும், ஓவென்ற இரைச்சலுமாய்
சத்தமிட்டு விளையாட குழந்தைகள் யாருமேயில்லை;


பேசுவதற்கும், திட்டுவதற்கும், முகம் புதைத்து அழுவதற்கும்
தொலைக்காட்சிப்பெட்டியைத் தவிர துணையென்று எவருமேயில்லை;
போகுமிடமும் வரும் நேரமும் கட்டுப்பாடுகள் களைந்தபோதும்
வாழ்வின் நினைவுகளில் நிரம்பியிருக்கும் இந்த
வீட்டைவிட சொர்க்கமென்று இடமொன்றிருப்பதாய் தெரியவில்லை;

மனைவி மட்டுமே
இறந்து போனாள் என்றிருந்தேன்...
என் வாழ்க்கையுமல்லவா
முடிந்து போயிருக்கிறது?...!!!என்ன நட்புகளே... முப்பரிமாணம் சரிதானா?...

பின்குறிப்பு – தெரிந்தோ தெரியாமலோ எனது பத்தாவது திருமண நாளான இன்று, இந்த முப்பரிமாண கவிதை இங்கே பதிவில் ஏறியிருக்கிறது... J


14 comments:

 1. உண்மை பேசுகிறது கவிதை...

  ரசித்தேன்....

  ReplyDelete
 2. ///////
  எனது பத்தாவது திருமண நாளான இன்று,
  ////////

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பா...

   Delete
 3. திருமண நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பா...

   Delete
 4. ,இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

  முப்பரிமாணமும் மிக அழகாகவே.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

   Delete
 5. அந்த அந்த காலத்திற்குரிய சிந்தனையோடு
  மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்ட
  முப்பரிமானக் கவிதை மனதை மிகவும் கவர்ந்தது
  குறிப்பாக இரண்டுக்கும் மூன்றுக்குமிடையில்
  பயணித்துக் கொண்டிருக்கும் என்னை இந்த்ப் படைப்பு
  பாதிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. இனிய மண நாள் நல் வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்தே எனக்கு ஆசீர்வாதம்...மிக்க நன்றி ஐயா...

   Delete
 7. கோதோட்டத்தில் தேன் உறிஞ்சும்
  வண்ணத்துப்பூச்சிகளும் வருவதில்லை.....

  ReplyDelete
 8. திருமணநாள் வாழ்த்துக்கள்....
  கவிதைகள் அருமை...

  ReplyDelete
 9. வாழ்க்கையின் எதார்த்தத்தை எதார்த்தமாக சொன்னதற்கு நன்றி. எப்படியோ பெண் எப்போதும் தேவைப்படுகிறாள்

  ReplyDelete
 10. இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete