SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, September 14, 2013

(கள்ளக்)காதலில் சொதப்புவது எப்படி?...!!!


இந்த கள்ளக்காதல் விஷயம் ஏற்கனவே நான் அலசியிருப்பதுதான்... இதன் பரிமாணங்கள் மற்றும் இதன் மீதான கருத்துக்கள் நபருக்கு நபர் மாறுபடக்கூடும்...

உடற்பசியையும் தாண்டியதொரு விஷயம் இதில் இருப்பதாய் வாதிப்பவர்களும் உண்டு... இது வெறும் கேடு கெட்ட காமப்பசியின் மற்றொரு முகமே என்று வாதிப்பவர்களும் உண்டு...

எனது அலசல் கட்டுரையை இதுவரை படிக்காதவர்கள் ஒருமுறை படித்துவாருங்கள்... தொடர்ந்து பேசலாம்...


கள்ளக்காதலை கொச்சைப்படுத்தும் இதே சமூகத்தில் அதை இரண்டாம் காதல் என்று பெயரிட்டு வேறொரு பார்வையில் பார்த்திருக்கும் இந்த எழுத்தையும் நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும்...


சரி... அதையெல்லாம் படித்தாகிவிட்டது... இப்போ இந்தக்கட்டுரைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?... விஷயத்துக்கு வருகிறேன்...

இன்றைய சூழல்கள் கள்ளக்காதல் விஷயத்தைச் சுமக்காத செய்தித்தாள்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதில்லை எனுமளவுக்கு தினமொரு செய்தியாவது வந்துவிடுகிறது. நாலைந்து நாளுக்கு முன்னர் நான் படித்த ஒரு செய்தி இது...

சென்னை – மதுரவாயல் அருகே மனைவியுடன் உல்லாசமாய் இருந்ந கள்ளக்காதலனை வெட்டிக்கொலை செய்த கணவன்...

இந்தச்செய்தியின் சுருக்கம் இதுதான்... மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த பெயிண்டர் சக்திவேல் – வயது 33. அவருடைய மனைவி புவனேஷ்வரி – வயது 30.

இவர்களது திருமண வாழ்வின் விளைவாக இவர்களை நம்பி... இவர்கள் வாயிலாக இந்தப்பூமிக்கு இவர்களுக்கு குழந்தைகளாக இரண்டு மகள்களும், ஒரு மகனும் வந்திருக்கிறார்கள்.

சக்திவேல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தாராம். இதனால் வாழ்வில் விரக்தியடைந்திருந்த சக்திவேலின் மனைவி புவனேஷ்வரி தன்னைவிட ஆறு வயது இளையவரான அதே பகுதியைச்சேர்ந்த சதீஷ் என்பவரிடம் தன் மனதை பறிகொடுத்து பின் உடலையும் கொடுத்திருக்கிறார்...

செய்தித்தாள்களின் பாணியில் சொன்னால் புவனேஷ்வரியும் சதீஷும் பழகியது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்திருக்கின்றனர்...!


கள்ளக்காதலில் சம்மந்தப்படுவோர் எல்லாருக்குமே இது எப்படியும் நிச்சயம் ஒரு நாள் வெளியில் தெரிந்துவிடும் என்பது தெரியுமா தெரியாதா?... இல்லை... தெரிந்தாலும் பரவாயில்லை... இந்த உறவுதான் முக்கியம் எனும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்காத மனநிலைக்கு தள்ளப்படுவார்களா என்பது புரியவில்லை...

வழக்கம்போலவே புவனேஷ்வரியின் கணவர் (!) சக்திவேலுக்கு விஷயம் தெரிந்து மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனாலும் ருசி கண்ட பூனை பாலை திருடிக்குடிக்காமல் இருக்குமா?... புவனேஷ்வரியும், சதீஷூம் தொடர்ந்து டூயட் பாடிக்கொண்டேயிருந்திருக்கின்றனர்...

ஒருநாள் இது விஷயமான சண்டை மீண்டும் தலை தூக்கியதில் மனைவியிடம் கோபித்துக்கொண்டு சக்திவேல் வீட்டை விட்டுப் போய்விட்டாராம் (!!!). புவனேஷ்வரிக்கு கொண்டாட்டமாய் போயிருக்கிறது. தனது பிள்ளைகளை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு தனது (கள்ளக்)காதலன் சதீஷை தன் வீட்டுக்கே வரவழைத்து விளையாடியிருக்கிறார்...

திடீரென்று இரண்டாம் நாள் நள்ளிரவில் (அதாவது 7ம் தேதி) வீடு திரும்பிய சக்திவேல், தனது வீட்டுப்படுக்கையறையில் தனது மனைவியும் அவளது (கள்ளக்)காதலனும் லயித்திருந்த கோலத்தைப்பார்த்து டென்ஷனாகிப்போய் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து (கள்ளக்)காதலன் சதீஷை குத்திக்கொலை செய்திருக்கிறார். தனது மனைவியையும் தீர்த்துக்கட்ட துரத்தியும் புவனேஷ்வரி அங்கிருந்து உஷாரய் எஸ்கேப்...

மதுரவாயல் போலீசாரும் வழக்கம்போல சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தாகிவிட்டது.

இதன் அடுத்த கட்டமாய் இன்று நான் படித்த செய்திதான் இந்தக்கட்டுரையை எழுத வைத்த விஷயம்...

கள்ளக்காதலனும் இறந்து விட்டான். கணவனும் ஜெயிலுக்குப்போய்விட்டான் என்பதால் புவனேஷ்வரி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். கள்ளக்காதலன் இறந்த நாள் முதல் மனவேதனையில்(!!!) இருந்த புவனேஷ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்...

இதையும் இப்போது போலீசார் கள்ளக்காதலன் இறந்த துக்கத்தில் புவனேஷ்வரி தற்கொலை செய்துகொண்டாரா?... இல்லை வேறு ஏதாவது காரணமா என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்...

இதை ஒரு சாதாரண செய்தியாக கடந்துபோக எனக்கு மனமேயில்லை... 
இவை என்னுள் எழுப்பிய சில கேள்விகள் இதுதான்...


சக்திவேலின் குடிப்பழக்கம்தான் புவனேஷ்வரியை தவறான பாதையில் திருப்பியது மற்றும் இவ்வளவு சம்பவங்களுக்குமான அடிப்படை காரணமா?...

தனது மனைவியின் மனம் அல்லது உடல் சார்ந்த திருப்தியை கொடுக்கமுடியாமல் போனதா சக்திவேலால்?...

இல்லை... தனது குடும்பம், குழந்தைகள், சமூகம் என எல்லாவித சிந்தனைகளையும் மீறுமளவுக்கு இருந்ததா புவனேஷ்வரியின் மனம் அல்லது உடல் சார்ந்த தேவை?...

புவனேஷ்வரி இறந்ததன் மூலம் இந்த சமூகத்துக்கு அவர் சொல்ல நினைத்த செய்தி தன் மீதே தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு அவமானமா?... இல்லை தனது (கள்ளக்)காதல் உணர்வு உண்மையானது என்பதையும், தனது (கள்ளக்)காதலனின் மரணத்தை தன்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்பதையும் நிரூபிக்கவா?...

சக்திவேலின் குடிப்பழக்கமாகட்டும், இல்லை... புவனேஷ்வரியின் காதல் பழக்கமாகட்டும்... இவைகள் ஒருபோதும் இவர்களை நம்பி வந்த அப்பாவி ஜீவன்களான குழந்தைகளின் நினைப்பை இவர்களுக்குள் உண்டு பண்ணவே இல்லையா?...

நம்மை நம்பி இப்புவியில் பிறந்த நம் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது இங்கே தவறான பாதையில் செல்லும் முன்னரும், தற்கொலை செய்துகொள்ளும்போதும்கூட புவனேஷ்வரிக்கு தோன்றியிருக்கவே இருக்காதா?...

சக்திவேல் மற்றும் புவனேஷ்வரியின் தவறுகளில் எதிர்காலம் நிர்க்கதியாகியிருக்கும் குழந்தைகள் செய்த தவறு என்ன?, அவர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?... வளரும்போதும், வளர்ந்த பிறகும் அந்தக்குழந்தைகளின் மனதும், உணர்வும், வாழ்வும் எப்படிப்பட்ட ரணமாயிருக்கும் என்பதை இதுபோன்ற உறவுகளில் லயித்திருப்பவர்கள் உணர்வார்களா?...

மேலைநாடுகளில் இதேபோன்றதொரு நிலையில் கணவனும் மனைவியும் பரஸ்பரம் நல்ல நண்பர்களைப்போல பிரிந்து தனது புது ஜோடியுடன் ஐக்கியமாகிப்போவதோடு, அவர்களது குழந்தைகளுக்கான எதிர்காலத்தையும் செவ்வனே செய்து கொடுக்கும்போது, அப்படியொரு மனநிலை இங்கில்லாமல் போனது தொன்றுதொட்டு புகுத்தப்பட்ட சமூகக்காரணங்களினால்தானா?...

மேலை நாடுகளைப்போன்ற அப்படிப்பட்டதொரு நிலை நமது நாட்டிலும் தோன்றினால் அது சமூக, கலாச்சார கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து தனி மனித வாழ்க்கையின் சுதந்திரத்தை சுவாசிக்கச்செய்யுமா?... இல்லை சமூக சீர்கேட்டின் ஆழத்தை மட்டுமே இன்னும் அதிகரிக்குமா?...

எது எப்படியோ... இன்னமும் நம் நாட்டில் கலாச்சாரங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் இன்னமும் இங்கே குடும்ப வாழ்க்கை முழுமையாக சீரழிந்து போகாமல் இருப்பதற்கான காரணமாய் கூறப்படுவதால், இப்படியொரு உறவு இங்கே நிச்சயமாய் தவறுதான்...

இங்கே இறுதியாய் என்னதான் நடந்திருக்கிறது?...

சதீஷ் பிறர் மனை நோக்கிய குற்றத்திற்காக தன் உயிரையே இழந்திருக்கிறான்...

சக்திவேல் தனது குடிப்பழக்கத்தாலும், தனது மனைவியின் நடத்தையாலும் தனது எதிர்காலத்தை இழந்திருக்கிறார்...

புவனேஷ்வரி தனது கட்டுப்பாடற்ற உணர்வுகளால் தனது நற்பெயரையும் இழந்து உயிரையும் இழந்திருக்கிறார்...

இவர்களின் குழந்தைகள் இவர்களுக்குப் பிள்ளைகளாய் வந்து பிறந்ததைத்தவிர வெறெந்த குற்றமும் செய்யாமலேயே மொத்தமாய் எதிர்காலத்தையே இழந்திருக்கிறார்கள்...

சமூகம் வழக்கம்போல செய்திகளை படித்துவிட்டு அடுத்த நாள் சுவாரசிய செய்திக்காக காத்திருக்கும் வேலையைச் செவ்வனே செய்யும்...

யோசிக்க வேண்டியதெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்கிக்கொண்டு, தான் வாழுமிடத்தின் வகுக்கப்பட்ட நாகரீக கட்டுப்பாடுகளை மீறி எதிர்காலத்தை பற்றியும், எவரைப்பற்றியும் கவலையில்லாமல் தங்களுக்கான (கள்ளக்)காதலை தூண்டிலிட்டுக் கொண்டிருப்பவர்களும், லயித்துக் கொண்டிருப்பவர்களும்தான்...

தொடர்ந்து பேசலாம்...

12 comments:

 1. இன்றை செய்திதாள்களை அதிகம் ஆக்கிறமிப்பது இந்த விஷயம்தான்...

  ReplyDelete
 2. மிக நேர்மையான அலசல்!

  ReplyDelete
 3. மாற்றுக் கோணம்
  சரியாகத்தான் இருக்கிறது
  விரிவான ஆழமான அருமையான
  பதிவுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. என்ன செய்வது சிந்தனை தவறிய மனிதர்கள்

  ReplyDelete
 5. நல்ல ஒரு அலசல், சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்...சிந்திப்பார்களா ?

  ReplyDelete
 6. சம்பந்த பட்ட இருவருமே(கணவன் - மனைவி) ஏன் விவாகரத்தை பற்றி சிந்திக்கவில்லை?.கொலைக்கும்,தற்கொலைக்கும் துணிந்த அவர்களால் ஏன் விவாகரத்தை தேர்ந்தெடுக்க முடியவில்லை?.(மண வாழ்வின்) தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண் கொலைகாரன் பட்டம் சுமக்க முடிகிறது.(கள்ளக்காதல்) தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத பெண் தற்கொலை செய்ய முடிகிறது.ஆனால் இருவராலும் சமரசமாய் விவாகரத்து செய்து கொள்ள முடிந்திருக்கவில்லை?

  ReplyDelete
 7. தேவையான அலசல். பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 8. சிந்திக்க வேண்டிய அலசல்...

  ReplyDelete
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete