SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, September 13, 2013

சனியன்...


கருவிலிருந்தே கேள்விப்பட்ட
கடவுள்தான் என்றாலும்
இன்னமும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்
விடை தெரியா ஒற்றைக்கேள்விக்காக...

அம்மாவின் வயிற்றுக்குள்
அறிமுகமில்லா குரலில்
நான் கேட்ட வார்த்தைகள் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
‘’சனியன்’’ பொண்ணா பொறந்து தொலைக்கப்போவுது?...முதன் முதலில் 
லட்சுமி பிறந்ததாய்
கொண்டாடப்பட்டதாய் கூறும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் மழலைக்காதுகளின் முதல் மொழி
‘’சனியன்’’ மறுபடியும் பொண்ணு...கிரண் பேடிகளாகவும்
கல்பனா சாவ்லாக்களாகவும்
பள்ளிகளுக்குச் சென்ற என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் படிக்கும் ஆசைகளுக்குப் பின்னால்
‘’சனியன்’’ இதெல்லாம் படிக்கலேன்னு யாரு அழுதா?...


ஊர் கூட்டி
விழா நடத்தி
மஞ்சள் குளித்த என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் பூப்பெய்திய இயற்கை நிகழ்விலும்
‘’சனியன்’’ இது வேற செலவா?...ராஜகுமாரன்களும்
வசீகராக்களும்
கனவில் வரும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் வரன் பார்க்கும் படலங்களிலெல்லாம்
‘’சனியன்’’ பொறந்தப்பவே போய்ச்சேந்திருக்க கூடாதா?...


கருவிலிருந்தே கேள்விப்பட்ட
கடவுள்தான் என்றாலும்
இன்னமும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்
விடை தெரியா ஒற்றைக்கேள்விக்காக...

உள்ளங்கை தாங்கல்களும்
முந்தானைக் கொஞ்சல்களும்
மணவாழ்வில் நிலைத்ததாய்க் கூறும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் கைபிடித்தவனின் ஒவ்வொரு நாள் கோபத்திலும்
‘’சனியன்’’ எனக்குன்னு வந்து வாய்ச்சது பாரு?...


மகன்களுடனும்
மகள்களுடனும்
மகிழ்ச்சியாய் வயோதிகம் கழிக்கும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் வாரிசுகளின் நாகரீக நினைவுகளில்
‘’சனியன்’’ வயசானா ஒரு ஓரமா கெடக்கிறதுதான?...


சொந்த கார்களிலும்
சொகுசு வாகனங்களிலும்
வயோதிகத்தில் பயணிக்கும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் நிலைதடுமாறிய தனிமைப் பயணங்களில்
‘’சனியன்’’ நம்ம உயிர எடுக்கிறதுக்கின்னே வருதுங்க...


உயிர்பந்த உறவுகளுடனும்
ஊரறிந்த சொந்தங்களுடனும்
உணர்வைக் கழிக்கும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் வயோதிகத்தனிமையில் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்
‘’சனியன்’’ சீக்கிரம் போய்ச்சேர மாட்டோமா?!!!...


கருவிலிருந்தே கேள்விப்பட்ட
கடவுள்தான் என்றாலும்
இன்னமும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்
விடை தெரியா ஒற்றைக்கேள்விக்காக...


சனியன் எனும்
சனி பகவான் தெய்வம்நீ
உண்மையிலேயே
ஆணா?.... இல்லை பெண்ணா?...

16 comments:

 1. இந்தக் கொடுமை இப்போது குறைந்திருக்கிறது... முற்றிலும் மாறும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்... முற்றிலும் மாறவேண்டும்தான்... முன்பு போல இல்லாவிட்டாலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது...
   பெண்ணையும் தன்னைப்போலவே ஊனும் உணர்வும் நிறைந்த ஒரு உயிராய் பார்க்கும் காலம் வருமானால் நிலைமை மாறலாம்...

   Delete
 2. /// பொண்ணா பொறந்து தொலைக்கப்போவுது...?

  மறுபடியும் பொண்ணு...

  இதெல்லாம் படிக்கலேன்னு யாரு அழுதா...?

  இது வேற செலவா...?

  பொறந்தப்பவே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா...?

  எனக்குன்னு வந்து வாய்ச்சது பாரு...?

  வயசானா ஒரு ஓரமா கெடக்கிறதுதானே...?

  நம்ம உயிர எடுக்கிறதுக்கின்னே வருதுங்க... ///

  இவையெல்லாம் சொல்லும் சனியன்களுக்கு அம்மா கிடையாதா...?

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்விதான் தலைவா... உறைக்காத ஜென்மங்கள் இருக்கத்தானே செய்கின்றன?...

   Delete
 3. வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும்
  பெண்கள் கேட்டுத் தொலக்கிற அந்தச் "சனியனை "
  பதிவு செய்த விதம் மனம் அறுத்தது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. படிக்கும்போதே மனசு கணத்து கண்ணு கலங்குச்சு. இன்னிக்கும் இதுப்போன்ற சனியன்கள் இருக்கத்தான் செய்யுது!!

  ReplyDelete
  Replies
  1. என்ன பண்றதுக்கா?... மருமகளாக வரப்போகிற மற்றும் வந்த பெண்ணுக்கு மாமியாரும், வயதான மாமியாருக்கு மருமகளும் என பல இடங்களில்ல பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரி!!!...
   யாரைக்குறை சொல்லி என்ன செய்ய?... சமூகம் எப்போதுதான் மொத்தமாய் திருந்துமோ தெரியவில்லை...

   Delete
 5. இந்த நிலை தற்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்பதே சற்று ஆறுதல்..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் குமார்... இன்னும் முற்றிலுமாக மாறவேண்டும் என்பதே நம் ஆசை...

   Delete
 6. பெண் பிள்ளைகளை இன்றைக்கு யாரும் பாரமாகக் நினைக்க வில்லை .பத்து வருடங்களுக்கு முன்பு சரி !இருபாலருக்கும் முதுமை ,தனிமை இரண்டும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும் .

  ReplyDelete
  Replies
  1. பாரமாக நினைக்கவில்லை என்று நீங்கள் சொல்லுவது முதலாவதாக பிறக்கும் பெண குழந்தையை மட்டும்தான்.... இரண்டாவதாகவும் பெண் குழந்தையே பிறந்தால் நகரங்களில்கூட மனவருத்தம் இருக்கத்தான் செய்கிறது... கிராமங்களில் கேட்கவே வேண்டாம்... இரண்டாவதோ... இல்லை மூன்றாவதுமாகவோ பெண் குழந்தையே பிறந்தால்?...
   சமூகம் சிலபல நாகரீக வளர்ச்சிகளை அடைந்திருக்கிறதேயொழிய அடிப்படை உணர்வுகள் இன்னும் முற்றிலுமாக திருந்திவிடவில்லை..
   உங்கள் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றி நண்பரே...

   Delete
 7. சமூகத்திடம் சரியான கேள்வி....

  தலைகுனிவை மட்டுமே பதிலளிக்கும் சமூகம்...


  நல்லதொரு சிந்தனைக்கவிதை

  ReplyDelete