SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, September 11, 2013

இதுதான் இரவுக்கவிதையா?...

சென்றவாரம் தென்றல் சசிகலா அவர்களின் தளத்தில் இரவின் மடியில் என்ற தலைப்பில் ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது... (அதற்கு நான் எழுதிய விமர்சனம்கூட இதுதான்... கவிதை எழுதும் எல்லாருக்குமே இரவு என்பது மிக நீண்டது... அதன் நிசப்தம் கவிஞர்களின் மனதோடு பேசுவது... அதை வார்த்தையில் வடிப்பது அவ்வளவு எளிதல்ல... இருந்தும் அப்படியொரு உணர்வை அழகாய் கவிதையில் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்புதான்...
http://veesuthendral.blogspot.in/2013/09/blog-post_6.html  இரவின் மடியில் 

நானும் ஒரு இரவுக்கவிதையை எனது பதின்ம வயதிலேயே எழுதியது ஞாபகத்துக்கு வந்தது... எனது பழைய டைரியை தேடிப்பிடித்து கண்டுபிடித்தேன் அந்தக்கவிதையை...

தூக்கம் வராத ஒரு இரவுப்பொழுதில் இதை நான் எழுதியபோது எனக்கு வயது 15... 

பல வருடங்களாக எனது டைரியில் சிறைபட்டிருந்த இந்தக்கவிதைக்கு இந்தப்பதிவின் வாயிலாக விடுதலை கிடைத்திருக்கிறது...!!!


வானோடு இரவு பேசும்
பாஷைகள் புரிவதில்லை;
விண்மீனின் பளிச்சிடலும்
வெண்ணிலவின் பால்யமும்
நெருங்கினாற் போல் தோன்றினாலும்
நினைவலைகளில் நிலைத்ததில்லை;

தூக்கமில்லா இரவுகளில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
அலைக்கழிக்கும் சிந்தனைகள்
இருள்வானின் மின்னல்போல
இதயத்தில் வெட்டியடிப்பது
இன்று வரை புரிந்ததில்லை...

இரவோடு பேச நினைத்தால்
ஈசல்கள் தோன்றி மறையும்;
பாவமதன் ஒரு நாள் வாழ்வை
எண்ணியதில் இதயம் கரையும்;
தவளைகளின் சத்தத்தில்கூட
தன்னிரக்கமே தோன்றி மறையும்;


விண்மீனின் கண் சிமிட்டலில்
ஏதோ உணருவேன்;
வெண்ணிலவின் அமைதியிலும்
ஏதோ உணருவேன்;
இன்று வரை யோசித்ததில்லை
உணர்ந்தது எதுவென்பதை?...

இப்படியே நினைத்திருந்ததில்
விண்மீன்களை மறந்திருப்பேன்,
வெண்ணிலவையும் மறந்திருப்பேன்,
வேதனைகளை சுமந்து கொண்டு
விழிகளையும் மூடியிருப்பேன்;

விடிந்தவுடன் இரவை நினைத்தால்
இரு மடங்காய் இதயம் கனக்கும்;
இயந்திரத்தன வாழ்வையெண்ணி
அவசரகதியில் செயல்கள் நடக்கும்;


நித்தம் நித்தம் இரவு வரும்,
என்றாயினும்தான் கனவு வரும்;
என்றாலும் நிதமும் நான்
இரவையே தோழியாக்கி
இன்று வரையிலும்
வாழத் துடிக்கிறேன்...
இறக்கமுடியா சுமைகளாய்
இமைகளுக்குள் கனவுகளோடு...!

18 comments:

 1. இன்று வரை யோசித்ததில்லை –
  உணர்ந்தது எதுவென்பதை..

  யோசிக்காமலே அது நம்முள்ளே ரசாயன மாற்றம் நிகழ்த்தியிருக்கும்..

  ReplyDelete
 2. அருமையான கவிதை
  இக்கவிதை எழுதிய வயதுடன் ஒப்பிடுகையில்
  உண்மையில் ஒப்பில்லா கவிதைதான்
  உங்கள் படைப்புகள் முழுவதையும் படிக்கவேண்டும் எனும்
  ஆவலத் தூண்டிப்போகிறது இக்கவிதை
  நிச்சயம் இந்த வாரத்தில் படித்து முடித்துவிடுவேன்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா... தங்களின் காக்கை உறவு கவிதையோடு ஒப்பிடும்போது நானெல்லாம் ஒன்றுமேயில்லை ஐயா...

   Delete
 3. இமைகளுக்குள் கனவுகளோடு..
  >>
  கனவுகளை சேமித்து வையுங்கள். அப்ப தான் வாழ்க்கையில் உத்வேகமிருக்கும் கூடவே மிக ருசியாகவும் இருக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா... நீங்கள் சொல்வது மிகச்சரிதான்... ஆனாலும் அளவுக்கு மீறி சேமிக்கப்படும் கனவுகள் பாரமாக மாறுவதும் நடக்கிறதே?...

   Delete
 4. Replies
  1. அது பொய்யல்ல... நிஜம்... நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்துவிட்டேன்...!!!

   Delete
 5. கவிதை அருமை... வாழ்த்துக்கள் எனதன்பு நண்பருக்கு...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தலைவா...

   Delete
 6. அனைத்து சுமைகளையும் இறக்கிவைக்கப்படுவது இரவில் தான்...

  அழகிய கவிதை...

  ReplyDelete
 7. இரவுக் கவிதை...
  மிக நன்று.

  ReplyDelete
 8. மிக அற்புதமான இரவுக்கவிதை...அதுவும் தாங்கள் எழுதிய அந்தவயதில் அப்படியொரு சிந்தனை..மிகவும் பாராட்டுக்குறியது.. // தூக்கமில்லா இரவுகளில்
  இங்கொன்றும் அங்கொன்றுமாய்
  அலைக்கழிக்கும் சிந்தனைகள்
  இருள்வானின் மின்னல்போல
  இதயத்தில் வெட்டியடிப்பது
  இன்று வரை புரிந்ததில்லை...//ம்ம் உண்மைதான். அருமை..படத்தேர்வுகளும் சிறப்பு..:)

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி தோழி...

   Delete
 9. எப்போதாவது கனவுவருவதால்
  இரவையே தோழியாக்கிவிடுவது...ரசித்தேன்.
  சிறுவயது வரிகளை படிக்கும் போது எப்போதுமே
  பரவசம் உண்டாகிவிடும்.

  ReplyDelete