SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, September 27, 2013

ஊழலுக்கு எதிராய் ராகுல்காந்தி ஆவேசம்... காங்கிரசின் புதிய தேர்தல் வியூகம்!


சட்டம் எங்கள் கைகளில்... என்பது ஆட்சியாளர்களால் ஆண்டாண்டு காலமாக நமக்கு உணர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் வரலாறு என்பதற்கு சாட்சியாக, தண்டனையின்றி அமுங்கிப்போன கணக்கிலடங்கா ஊழல் வழக்குகள் கதையிருக்கிறது. உச்சநீதிமன்றம் நினைத்தாலும்கூட எங்களை ஒன்றும் கிழிக்கமுடியாது என்பதற்கு சாட்சி போல ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டதுதான் சமீபத்திய அவசரச்சட்டம்.

சிலநாட்களுக்கு முன்பு குற்றவழக்கில் தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவியிழப்பார்கள் என்று ஒரு அதிரடித்தீர்ப்பை வழங்கி நாட்டு மக்களுக்கு ஒரு தற்காலிக சந்தோஷத்தை வழங்கியது உச்சநீதிமன்றம்.  அப்போதே அதை எதிர்த்து நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கூட்டம் இதற்கு மட்டும் உடனடியாக கூட்டம் கூட்டி தங்கள் நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.

குற்றவழக்கில் தண்டனை பெற்றால் பதவியிழப்பதா?... ஹீம்... எங்களோட அரசியல் வாழ்க்கையோட ஆரம்பமே அதுதானேய்யா... அதை எப்படி ஏத்துக்கமுடியும் நாங்க?... என்று பொங்கியெழுந்த கூட்டம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலேயே மோதிப்பார்த்தும் முடியாமல் போகவே தங்கள் கூட்டத்தை கூட்டி அவசரச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். நாடாளுமன்றத்தின் விவாதம், ஒப்புதல் என எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்காமல் அமைச்சரவைக்கூட்டத்தை மட்டும் கூட்டி அவசரச்சட்டம் என்ற பெயரில் குற்றவழக்கில் தண்டனை பெற்றாலும் பதவியிழக்காதவாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தார்கள்.

அப்படியென்றால் ஆளுவோர் நினைத்தால் ஒரு நாட்டில் எதுவேண்டுமானாலும் செய்யலாம். அவர்களைக் கட்டுப்படுத்துதற்கான வழிகள் என்று உச்சநீதிமன்றம் முதற்கொண்டு எதுவுமே இல்லையா எனும் எண்ணற்ற கேள்விகளும், விவாதங்களும் இதில் எழலாம். நமது கட்டுரையின் சாராம்சம் அதுவல்ல என்பதால் இப்போது அதைப்பற்றி  விவாதிக்கத்தேவையில்லை.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்போன அவசரச்சட்டத்தை பா.ஜ.க உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளும், காங்கிரசிலேயே சிலரும் எதிர்த்து வந்த நிலையில் இன்று காங்கிரசின் எதிர்காலமாக மாறியிருக்கும் இளம் தலைவர் ராகுல்காந்தியும் திடீரென பொங்கியிருக்கிறார்.

‘’இந்த அவசரச்சட்டம் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாகும். குற்றவழக்கில் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் பதிவியிழக்கக்கூடாது எனும் இந்த அவசரச்சட்டம் முட்டாள்தனமானது. இந்த அவசரச்சட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களும் கிழித்து எறியப்படவேண்டும்...’’ என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் ராகுல்காந்தி.


ஒருபக்கம் பார்த்தால் அவரின் ஆவேசம் பாராட்டத்தக்க வகையில் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் இது காங்கிரசின் திட்டமிட்ட அரசியல் காய் நகர்த்தலாகவும் இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. தனது தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அரசாங்கம் ஊழலுக்கு ஆதரவானதுபோல ஒரு அவசரச்சட்டத்தை இயற்றுவதும், அந்த அரசு சார்ந்த கட்சியின் எதிர்காலத்தலைவராக வர்ணிக்கப்படும் மகன் ஊழலுக்கு எதிரான அவதாரம்போல அந்த அவசரச்சட்டத்துக்கு எதிராக பொங்கியெழுவதுபோல குரல் கொடுப்பதுவும் வித்தியாசமானதாகத்தான் தோன்றுகிறது.

யார் கண்டார்கள்?... இது அரசியல்... இங்கே எது வேண்டுமானாலும் நடக்கும்!

காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கு எதிராக நாட்டு மக்களிடம் எழுந்திருக்கும் எதிர் மனப்பான்மையை மாற்ற, அரசியல் ஆலோசகர்கள் எனும் கூட்டத்தின் ஆலோசனைப்படி, காங்கிரஸ் கூடாரத்தின் அடுத்த பிரதமராக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ராகுல்காந்தியை ஊழலுக்கு எதிரான வெள்ளுடை வேந்தனாக சித்திரித்து, அதன் மூலம் நடந்து முடிந்த மெகா ஊழல்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, ராகுல்காந்தி மூலம் ஓட்டு வங்கியை நிரப்பலாம் என்று அம்மாவும், மகனும், கட்சியும் சேர்ந்து நடத்தும் அரசியல் சாணக்கிய நாடகமாகக்கூட இருக்கலாம் இது...!!!

‘’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...’’ என்று கவுண்டர் சும்மாவா சொன்னார்?...!

மீண்டும் சந்திப்போம்...!


நடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது?...


இந்திய சினிமாவின் 100வது ஆண்டு நிறைவுவிழா மிகச்சமீபத்தில் முடிந்திருக்கிறது. இதில் விஜய் அங்கு உட்காரவைக்கப்பட்டார்... கமல் இங்கு உட்கார வைக்கப்பட்டார்... ரஜினி அங்கு காக்க வைக்கப்பட்டார்... கலைஞருக்கு மரியாதை செய்யவில்லை... பெரும்பாலான முக்கியப்புள்ளிகளை புறக்கணித்து வேண்டப்பட்டவர்களை மட்டும் வைத்து விழா நடந்திருக்கிறது... என்றெல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்...

அட கருமம்... யார் எங்கு உட்கார்ந்தால் என்னய்யா வந்தது நமக்கு?... உங்களுக்கு வேண்டப்பட்ட நாயகர்களை முன்வரிசையில் அமர்த்தாததால் உங்கள் வீட்டில் அடுப்பெரியாமல் போகுமா இன்று?... இல்லை... அவர்களை முன்வரிசையில் அமர்த்தி, தங்கத்தட்டில் மரியாதை செலுத்தியிருந்தால் மட்டும் உங்கள் வீட்டில் தேனாறும், பாலாறும் ஓடியிருக்குமா என்ன?... நாம் உழைத்தால்தானய்யா நமக்கு ஒரு வேளை கஞ்சியும், அவர்கள் நடிக்கும் சினிமாவை பார்ப்பதற்கு காசும்...!

போன ஆட்சியில் ‘’பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’’ என்பதுவும், இந்த ஆட்சியில் ‘’தைரியலெட்சுமிக்கு தலைவணங்கும் விழா’’ என்பதுவும்தான் கனவுலகில் பல ஹீரோக்களை அளித்த இந்த சினிமா உலகத்தின் நிஜமுகம்...

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு... அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்களாகிய நமக்கு வரவே வராதா என்ன?... படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடுகளையெல்லாம் மீறி ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான ரசிகர் படைகள்... சினிமாவை ரசிப்பது தவறே இல்லை... ஆனால் அந்த கனவுத்தொழிற்சாலையின் நாயகர்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்... சினிமாவில் காட்டப்படும் அவர்களின் ஹீரோயிஸ கேரக்டர்களின் மீதான ஈர்ப்புகளின் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை நிஜவாழ்க்கைத் தலைவர்களாகவும், தங்களின் எதிர்கால விடிவெள்ளியாகவும் உருவகப்படுத்திக்கொள்வது என்ன வகை நம்பிக்கை என்பதுதான் புரியவில்லை...


சினிமா எனும் கனவுத்தொழிற்சாலையில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள் வெற்றிபெறுவதோடு நில்லாமல் அதைச்சார்ந்த நடிகர்களும் தூக்கி நிறுத்தப்படுவது இந்த சமூகத்தில் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டு, பதிவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருப்பதால் அதைக்கடந்து வரும் காலங்களோ, காரணிகளோ வருவது கஷ்டம்தான்... இதில் படிப்பறிவையும் தாண்டி ரத்தத்தில் கலந்துவிட்ட உணர்வுச்சமாச்சாரங்கள் நிறைய இருப்பதாலேயே  இந்த நிலைமை என்று தோன்றுகிறது...


நடிகைக்கு கோயில் கட்டுமளவுக்கு போகும் ரசனையின் தீவிரத்தை எதன் கீழ் வகைப்படுத்துவது என்பதே விளங்கவில்லை...

தங்களது கனவு நாயகனுக்கு பிரச்சனை என்றால் சொத்துப்பத்திரம், பணம் என்று கண்மூடித்தனமாக உதவி அனுப்பும் மனநிலைக்கு சினிமாவின் மீதான மோகம் வளர்ந்தது எப்படியென்றே புரியவில்லை...


நாயகர்களின் கட்-அவுட்களுக்குக்கூட பசித்திருக்கும் எத்தனையோ உயிர்களைப்பற்றி கொஞ்சம்கூட யோசிக்காமல் தங்களது சொந்தப்பணத்தில் பாலாபிஷேகம் செய்வதைப்போன்ற கேடுகெட்ட செயல் இந்தக்கனவுலகின் ரசனையில் வேறேதும் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது...

தங்கள் நாயகர்களின் புதுப்பட ரிலீசுக்கு போஸ்டருக்கு கற்பூரம் காட்டுவதும், தேங்காய் உடைப்பதும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் பிரமாண்ட மாலை அணிவிப்பதும், படம் வெற்றிபெற அலகு குத்துவதும், காவடி தூக்குவதும் என படித்த இளைஞர்கூட்டமே வெறிகொண்டலையுமளவுக்கு என்னவித ஈர்ப்புசக்தியோ இந்த நாயகர்களிடம் தெரியவில்லை...

படம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதில் சாதாரண ரசிகனின் சம்மந்தம் என்ன என்பதும் புரிந்துகொள்ளவே முடியாத சமாச்சாரம்தான்...!

சினிமா நாயகர்கள் தங்களது பெயர்களுக்குப்பின்னால் புயல், சூறாவளி, சூப்பர், டூப்பர், உலகம், அண்டம் என்று என்ன கருமத்தையாவது அடைமொழியாக வைத்துக்கொள்ளட்டும்... ஆனால் அவர்களின் ரசிகன் என்று பெற்றோர்கள் வைத்த பெயருக்கு முன்னால் தங்கள் நாயகர்களின் சினிமாப்பெயர்களை இணைத்துக்கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமே இருக்காதா இவர்களிடம்?...


ரசிகர் மன்றங்களின் பெயரில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்கூட கோடிகோடியாய் சம்பாதிக்கும் தங்களது கனவு நாயகனின் காசில் வழங்கப்படாமல்... அடிமட்டத்தொண்டன் தனது கோமணத்தை தானே உருவி செலவு செய்யும் காசாகத்தான் பெரும்பாலுமிருக்கிறது...

பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் எந்தளவுக்கு சமூக மாற்றத்தின் மீதும், சமூக விழிப்புணர்விலும், இன்றைய இளைய சமுதாயத்தின் ஈடுபாடும் அக்கறையும் தெரிகிறதோ... அதற்கு சற்றும் குறைவில்லாமல் தங்களது நாயகர்களை தூக்கிப்பிடிக்கும் அவர்களின் சினிமா மோகமும் அப்பட்டமாகத்தெரியத்தான் செய்கிறது...

இப்போது இவர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லை... அது தியாகராய பாகவதர் காலத்திலேயே வெள்ளி விழா கொண்டாட வைக்குமளவுக்கு சினிமாவை, சினிமா நாயகர்களை ரசிக்கத்தொடங்கிய நமது தாத்தாக்களின் ஜீன்களிலிருந்து பரம்பரை பரம்பரையாக நமக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது...

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், etc., என்று அந்தந்த தலைமுறைக்கு ஏற்ப சினிமா நாயகர்களை தலையில் வைத்துக்கொண்டாடுவதை தவறாமல் செய்து வந்திருக்கும் சமூகம் இது... நமது பக்கத்து மாநிலமான கர்நாடகா, ஆந்திரா போன்றவையும் இதில் விதிவிலக்கல்ல... தண்ணீர் தருவதில் மட்டும்தான் தகராறேயொழிய சினிமா தலைவர்களை ரசிப்பதிலும், உருவாக்குதிலும், உயர்த்துவதிலும் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதான் நிரூபித்திருக்கிறோம்...

எம்.ஜி.ஆர். நடிகராகயிருந்து முதலமைச்சர் ஆகலாம். ஜெயலலிதா நடிகையாக இருந்து முதலமைச்சர் ஆகலாம். என்.டி.ஆர். நடிகராகயிருந்து முதலமைச்சர் ஆகலாம்... ஆனால் எங்கள் தலைவர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா?... எங்கள் தலைவர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா?... முதல்வர் ஆகக்கூடாதா?... என்றெல்லாம் அவரவர்களுடைய ரசிகர்கள் எழுப்பும் கேள்வி தவறேயில்லைதான்... ஏனென்றால் பியூன் வேலைக்குக்கூட எட்டாம் கிளாசோ, பத்தாம் கிளாசோ படித்திருக்கவேண்டும் எனும் நம்நாட்டில் கல்வி, திறமை, தகுதி, அனுபவம் என எதுவுமே இல்லாவிட்டாலும்கூட ஒருவர் ஜெயித்து கல்லா கட்டுவது அரசியல் வியாபாரத்தில் மட்டும்தானே...

இங்கே நடிகர்களுக்குள் நடக்கும் அரசியலும், அரசியலில் நடிக்கும் தலைவர்களும் இருக்கும்வரையிலும் எதுவும், யாருக்கும் சாத்தியமே...

ரஜினியும் முதல்வர் ஆகலாம்... விஜய்யும் முதல்வர் ஆகலாம்... அஜித்தும் முதல்வர் ஆகலாம்... திரிஷாவும் முதல்வர் ஆகலாம்... குஷ்பூவும் முதல்வர் ஆகலாம்... மக்களின் அதிக பட்ச ஓட்டுக்கள் யாருக்கு விழுகிறதோ அவர்கள் எல்லாம் முதல்வர் ஆவது ஜனநாயக அமைப்பில் தவறே இல்லைதான்...  ஆனால் அதற்காக எம்.ஜி.ஆரோடு மற்றவர்களை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும், மாநிற எம்.ஜி.ஆர் என்றும் ஒப்பிடும் காலம் இன்னும் வரவில்லை என்பதுதான் நிஜம்...


எம்.ஜி.ஆருக்கு ஏற்றிவிடவும், இறக்கிவிடவும் எந்த எஸ்.ஏ.சந்திரசேகரனும் இல்லை... எம்.ஜி.ஆர். ஹீரோவானதும் ஸ்டைர்ட்டா முதலமைச்சர்தான் என்று வந்துவிடவில்லை... தி.மு.க எனும் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றி, அரசியல் கற்றுக்கொண்டு, அரசியல் அனுபவங்களை பெற்றுக்கொண்டு, காலஓட்டத்தின் அடிப்படையில் தனிக்கட்சி தொடங்கி, தோல்விகள், வெற்றிகள் என எல்லாவற்றையும் சந்தித்து மக்கள் பணியாற்றிய நிஜ பொன்மனச்செம்மல்தான் அவர்...

ஜெயலலிதாவையும்கூட நடிகை என்ற ஒற்றைத்தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஆகிவிட்டார் என்று சொல்வது மாபெரும் தவறுதான்... குஷ்பூவுக்கு கோயில் கட்டிய பாரம்பரியத்தைக்கொண்ட நமது சமூகம் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டும் அளவுக்கெல்லாம் சினிமாவில் ரசித்திருக்கவில்லை... தன்னை எம்.ஜி.யாரின் அ.தி.மு.க. கட்சியில் இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக எம்.ஜி.யாரால் கைதூக்கிவிடப்பட்டு, அவரின் மறைவுக்குப்பின்னர் தனது தனித்திறமையால் வளர்ந்து முதல்வர் ஆனவர்தான் ஜெயலலிதா... மற்றபடி அவர் நடிகை என்ற திறமையை மட்டுமே வைத்துக்கொண்டு முதல்வர் ஆகிவிடவில்லை...

அதே போலத்தான் கலைஞரின் அரசியல் வரலாறும்... அவர் கடந்து வந்த கடினப்பயணங்கள் அவ்வளவு எளிதானதல்ல... வெறுமனே திரைப்படத்திற்கு வசனம் எழுதியதால் மட்டுமே முதல்வர் ஆகிவிடவில்லை கலைஞர்... அதனையும் தாண்டிய அரசியல் அரப்பணிப்பு, ஈடுபாடு, முழுநேர அரசியல் பங்களிப்பு என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன வெற்றிக்கான காரணிகளாய்...

இந்த பழைய வரலாறெல்லாம் சொல்வதால் ரஜினியோ, கமலோ, அஜித்தோ, விஜய்யோ... உங்கள் தலைவர் யாராக இருந்தாலும் சரி... அவர் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் பயின்றுதான் முதலமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்பதல்ல அர்த்தம்... உங்களுடைய தீவிர சப்போர்ட் இருக்கும்வரை அவர் தாராளமாய் உடனடியாய் தனிக்கட்சி ஆரம்பித்துகூட முதலமைச்சர் ஆகலாம்... அதில் நிச்சயமாய் தவறேதும் இல்லை...


ஆனால் நீங்கள் ரசிக்கும் கனவு நாயகனை சினிமாவையும் தாண்டி உருவகப்படுத்த முயலும்போது, ஒரேயொருமுறை கீழ்க்கண்ட கேள்விகளை சிந்தியுங்கள்...

சினிமாவைத்தாண்டி நீங்கள் சார்ந்த சமூகத்துக்கோ, உங்களுக்கோ, உங்களது கனவு நாயகர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? இல்லை... என்னென்ன சாதித்திருக்கிறார்கள்?...

தங்களது கனவுலக பப்ளிசிட்டியை வைத்து மக்கள் பிரச்சினையில் எதெற்கெல்லாம் சமூக அக்கறையுடன் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்?...

சமூக விழிப்புணர்வில் அவர்களது பங்களிப்பு என்ன?...

அவர்கள் அரசியல் ஆர்வம் உண்மையிலேயே மக்கள் சேவையை நோக்கியதுதானா?...

அரசியலுக்கான அனுபவமும், பக்குவமும் உங்களது நாயகர்களுக்கு வந்துவிட்டதா?...

கோபம் கொள்ளாமல் இப்படிப்பட்ட கேள்விகளை கனவு நாயகர்களின் ரசிகர்கள் தங்களுக்குத்தாங்களே ஒருமுறையேனும் கேட்டுக்கொள்ளலாம்...

மற்றபடி கர்நாடகாவில் குத்து ரம்யாவே எம்.பி ஆகியிருக்கும் நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகட்டும் தவறேயில்லை...

இன்னார் வந்தால் நாடு நன்றாக இருக்கும்... இன்னார் வந்தால் நாடு உருப்படாமல் போகும் எனும் அரசியல் விழிப்புணர்வு இருக்கலாம்... ஆனால் கனவுலக நாயகர்களை நிஜவாழ்க்கையில் நாளைய தமிழகமே... நாளைய பாரதமே என்று நீங்களே இழுத்து வந்து தகுதி வராத காலத்திலேயே தலைக்கு மேலே தூக்கி வைக்காதீர்கள்...

சினிமாவை சினிமாவாக மட்டுமே ரசிக்க முயலுங்கள்...

நாம் உழைத்தால்தான் நமக்கு வாழ்க்கை...

தலைப்பில் இழுத்த நரேந்திரமோடியை உள்ளே காணவில்லையே என்று தேடினால் அது தலைப்போடவே முடிந்த விஷயம்தான்...

இது எனது தளம்... எனக்குத்தோன்றுவதை எழுதும் உரிமை எனக்கிருக்கிறது... நானும் சிறுவயதிலிருந்தே சினிமாவையும், விதவிதமான நாயகர்களையும் ரசித்தவனும், இன்னமும் ரசித்துக்கொண்டிருப்பவனும்தான்... ஆனால் ரசனையின் எல்லையறிந்து சினிமாவை சினிமாவாக மட்டுமே ரசித்திருப்பதால் இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கிருப்பதாகவே உணர்கிறேன்...

மற்றபடி இவன் யாருடா கருத்து சொல்றதுக்கு?... வந்துட்டான் பெரிய ______ஆட்டம் என்று எடுத்துக்கொள்வது அவரவர் உரிமை...!

மீண்டும் சந்திப்போம்...!

Thursday, September 26, 2013

சிறுநீராகும் ஒரு கண்ணீர்...!


எங்களுக்கு நீ பிறந்தநாளின்
எல்லையற்ற சந்தோஷங்களை
இப்போதும்கூட வார்த்தைகளில்
எளிதாக விவரித்தல் முடியாது;

அர்த்தமற்ற பயணங்களாய்
நீண்டு கொண்டிருந்த வாழ்க்கையில்...
போகுமிடம் தெரிந்ததாய்
பூரிக்க வைத்தது உன் வரவு;


உன் பிஞ்சுக்கால்கள் உதைத்ததும்,
உன் பிஞ்சுக்கைகள் அடித்ததும்
வலிக்காத வசந்தங்களாய்
வாழ்வினின் வரமாய் தோன்றியது;

எங்கள் உடைகளை நனைத்த
உன் சிறுநீர் அபிஷேகமும்...
எங்கள் மடியினில் கழித்த
உன் மழலைக்கால மலமும்...
அருவெறுப்பாய் உணரமுடியாத
ஆச்சர்யங்கள் புரிந்ததேயில்லை;


தத்தித்தவழ்ந்து
நடை பயின்ற உனக்கு
கைத்தாங்கி துணையிருக்க
ஒருநாளும் சலித்ததில்லை நான்;

ஒரே கேள்வியையே நீ
மறுமுறையும் கேட்கும்போதும்
எரிச்சலோ, கோபமோ
எப்போதும் வந்ததில்லை எனக்கு;


வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும்
உனை ஏற்றிவிட்ட கடமையை மட்டுமே
என் ஜனனத்தின் குறிக்கோளாய்
சுவாசித்து வாழ்ந்த நாட்களில்
வயோதிகம் வந்ததுகூட
தெரியாமலே நகர்ந்துவிட்டது;

வயதோடு சாவு வராமல்
வயோதிகப்படுக்கையில் விழுந்தது
என் தலைவிதி மட்டுமேயொழிய
என் தவறென்று ஏதுமில்லை;


முடியாத என் வயோதிகப்படுக்கை மலமும்
உன்னைக் கொஞ்சி வளர்த்த என் முகமும்
ஒரே மாதிரியான உணர்வுகளை - இன்று
உன்னுள் ஏற்படுத்தும் கல்நெஞ்சமெப்படி?...

இருமலோடு கலந்த என் கேள்விகள்
உனக்கு எரிச்சலை மட்டுமே தருகின்றபோதும்
காதில் விழும் வார்த்தைகளைக்கூட
கண்டுகொள்ளாமலே போவதெப்படி?...


எஞ்சிய உயிரையும் பாரமாய் நினைத்து
எந்தன் இறக்கும் நொடியை நீ
எதிர்நோக்கி நித்தமிருப்பினும்...
கடைசி மூச்சு நின்று
கண் மூடும் வரையிலும்...
உன் கை கொள்ளியில் வெந்து
சாம்பலாகும் வரையிலும்...
எப்போதும் எங்கள் பிள்ளை நீ
நலமாய் வாழவே தவமிருப்பேன்...;

என் உயிர் பிரிந்த தருணத்தில் விழும்
உன் ஒரு சொட்டு கண்ணீர் போதும்...
உன் அத்தனை பாவங்களையும் அது
அடியோடு அலசிப்போகும்...


என் மடியிலும், தோளிலும் தவழ்ந்த
உன் மழலை நனைத்த சிறுநீருக்கும்...
உயிரற்ற என் உடலில் விழும்
உன் ஒரு சொட்டு கண்ணீருக்கும்
வேறுபாடுகள் நிறைய உண்டு
ஒருநொடியேனும் உணர்வாயா மகனே?...

Wednesday, September 25, 2013

தோழியா?... நீ காதலியா?...


தினமொரு முகம் பார்த்தலுக்கு
ஒரே தெருவில் வாழ்ந்ததுமில்லை;
முகம் பார்க்கும் ஆவல்கூட
ஒருநாளும் இருந்ததுமில்லை;

பால்ய பருவத்தில் ஒரு நாளும்
ன்றாக விளையாடியதுமில்லை;
பள்ளிக்கூடத்தில் ஒன்றா
பேசிப்பழகி படித்ததுமில்லை;

இரட்டை ஜடை தாவணி நினைவுகள்
இன்றும்கூட என்னிலில்லை;
இளவயது இரவுகளிலும்
நினைவுகளில் வந்ததுமில்லை;

கல்லூரிப்படிப்பின் வசந்தநாட்களில்
சந்தித்துக்கொள்ள முயன்றதுமில்லை;
ண் ஜாடையில் பேசிக்கொள்ளவும்
ஒருநாளும் காத்திருந்ததில்லை;

சினிமாக்கொட்டகையில் அருகாமையில்
ஸ்பரிசித்த அனுபவங்கள் ஏதுமில்லை;
கனவுகளுக்குள் ஒருநாளும்
கை கோர்த்து நடந்ததுமில்லை;


விழிகள் ரெண்டும் சந்தித்தபோது
வண்ணத்துப்பூச்சிகள் பறந்ததுமில்லை;
புன்னகையில் மின்சாரமெல்லாம்
உற்பத்தியான உணர்வுகளுமில்லை;

இதயத்தில் மின்னல்கள்
ஒருநாளும் வெட்டியதில்லை;
கவிதைகளில் எழுதுவதற்கும்
எதுவுமே இருந்ததுமில்லை;

இயற்கையையும், மழையையும்
மலர்களையும் ரசித்ததில்லை;
இதயத்தில் காதல் வந்த
அறிகுறிகளும் இருந்ததில்லை;

கடிதங்கள், தொலைபேசி என
சொற்கள் எதுவும் பரிமாறவில்லை;
கடைசியாய் கண்டநாளும்கூட
நினைவுகளில் நிலைக்கவில்லை;


அனுபவங்களென்று ஏதுமில்லை என்றாலும்
கடந்து வந்த இளவயது நாட்களில்
எதிர்ப்பட்ட தருணத்தில் எல்லாம்
மறக்காமல் புன்னகைத்துச் சென்றவளை
இன்னமும் தேடத்தான் செய்கிறேன்
இறக்கும் முன் மீண்டுமொருமுறை
என்றாவது சந்திக்க நேரிடுமா
என்னை நான் மறந்து நிற்கும்
ஏதோவொரு நொடியிலேனும்?...

Tuesday, September 24, 2013

இந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...


இந்தப் பதிவை நீங்க படிக்கிறீங்கன்னா கண்டிப்பா இது நீங்க, நானு, நம்மளப்பத்தின பதிவுதான்னு முதல்ல தெரிஞ்சிக்கனும்...

திருவாளர் பதிவர்... யார் இவரு?...

டெய்லி என்னத்த எழுதறது?... என்ன தலைப்பு வைக்கிறது?... எப்படி எழுதுனதை நாலு பேர படிக்க வைக்கிறது?... எப்படி நாலு பேருக்கு தெரியிற மாதிரி முன்னணியில வர்றது?ன்னு யோசிச்சி யோசிச்சி ஒன்னொன்னும் செய்யிறதுக்குள்ள... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா... அது மட்டுமா?... என்னத்தையாவது எழுதி பப்ளிஷ் பண்ணிப்புட்டு அதுக்கு எதாவது கமெண்ட் வந்திருக்கா?... ஹிட் ஆகியிருக்கான்னு?... வூட்டுல, அலுவலகத்திலனு ஒரு இடம்கூட விடாம யாருக்கும் தெரியாம அப்பப்போ ப்ளாக்கர் அக்கவுண்ட்ல நுழைஞ்சி எட்டிப்பாக்கிறது இருக்கே... நாறப்பொழப்புடா இதுன்னு தலைச்சுத்திப்போற ஆளுதான் இவரு...!


இந்தத் திருவாளர் பதிவர் படுற அவஸ்தை இருக்கே... முதல்வன் படத்தில ரகுவரன் சொல்வார் பாருங்க... ‘’முதலமைச்சர் பதவின்னா என்னான்னு தெரியுமா உனக்கு?... ஒரு நாளைக்கு எத்தனை மாலைகள், எத்தனை மரியாதைகள், எத்தனை கண்ணீர்கள்...’’ அப்பிடின்னு நீளும் பாருங்க... ''இந்தப்பதவி ஒரு முள் கிரீடம் மாதிரி''ன்னுவாரே...

அதேதான்ங்க... ரகுவரன் சொல்ற அந்த முதல்வர் பதவி அவஸ்தையை விடவும் பெரும் அவஸ்தை நம்ம திருவாளர் பதிவரோடதுதாங்க...

வுட்டாக்க ரகுவரன் மாதிரியே ‘’பதிவர்னா என்னான்னு தெரியுமா உனக்கு?... ஒரு நாளைக்கு எத்தனை பேஜ் வியூஸ், எத்தனை கமெண்ட்ஸ், எத்தனை ஃபாலோயர்ஸ், எத்தனை ஓட்டுக்கள், எவன் எப்போ எதிர் கமெண்ட் போடுவான்னு தெரியாது... எவன் எப்போ எவனை கிண்டல் பண்ணுவான்னு தெரியாது... அட பாதிபேரு உண்மையிலேயே பதிவைப்படிச்சிட்டுதான் கமெண்ட் போடுறானான்னுகூட தெரியாதுய்யா... அடுத்தவனுக்கு நீ கமெண்ட் போட்டாத்தான்... உனக்கு அவன் பதிலுக்கு கமெண்ட் போடுவான்... அடுத்தவனுக்கு நீ ஓட்டு போட்டாத்தான்...உனக்கு அவன் பதில் ஓட்டு போடுவான்...


திருவாளர் பதிவர்னு உக்காந்திருக்கிற இந்த நாற்காலியோட நாலு காலும் என்னென்னு தெரியுமா?...

ஒரு காலு விதவிதமா யோசிச்சு சொந்தமா எழுதாட்டியும்கூட பல பேப்பர்ல வர்ற விஷயத்தையோ... இல்லை பல வேற்றுமொழி வலைத்தளங்களோட விஷயத்தையோ காப்பியடிச்சி வித்தியாசமா தலைப்பு வைச்சி சொந்தமா யோசிச்சு எழுதுனமாதிரியே பில்டப் கெளப்புறது...

இரண்டாவது காலு... சினிமா விமர்சனமோ.. கில்மா சமாச்சாரமோ... ஏதோ ஒரு கவர்ச்சி சமாச்சாரத்தை வித்தியாசமா, விவகாரமா தலைப்பு வச்சி எழுதுறது...

மூனாவது காலு... மதம், சாதி, மாமு, மச்சின்னு ஒரு கும்பல் சேத்துக்கிட்டோ, இல்லை கள்ள ஓட்டு போட்டோவாவது பிரபலமா இருக்க வழி பண்ணிக்கிறது...

நாலாவது காலு கவிதைன்ற பேருல கடிச்சித்துப்புறதும், கட்டுரைன்ற பேருல என்ன எழுதுறோம்னே தெரியாம எழுதுறதும், ஒன்னுமே இல்லாத விஷயத்தையெல்லாம் ஊதிப்பெரிசாக்கி மொக்கையை கெளப்புறதும், எப்படியாவது எதிர்மறையா எதையாவது எழுதியும் ஹிட்ஸ் நோக்கியே எய்ம் பண்றதுதான்...

இதுல எதாவது ஒரு காலு உடைஞ்சிட்டாகூட அப்புறம் பதிவர்னு பதிவெழுதி ஒன்னுமே பண்ணமுடியாதுய்யா...’’ அப்பிடின்னு மூச்சு வுடாம டயலாக் பேசுனாலும் பேசுவார் நம்ம திருவாளர் பதிவர்!!!

இந்தத் திருவாளர் பதிவரை ஒரே ரகத்துக்குள்ள அடக்கிற முடியாதுங்க...


சீரியஸா சிலபேரு அரசியல், சமூகம், அது இதுன்னு நல்ல நல்ல கருத்து எழுதிட்டிருப்பாக... நல்லதா அழகா ரசிக்கிற மாதிரி சிலபேரு கவிதை எழுதிட்டிருப்பாக... தங்களோட அன்றாட வாழ்க்கை அனுபவங்களைகூட சிலபேரு அழகான வார்த்தைகள்ல பதிவா போடுவாங்க... வரலாறு, அறிவியல், சட்டம், அறியாத தகவல்கள் இப்படி ஒவ்வொன்னையும் அழகா ரசிக்கிற மாதிரி சிலபேரு எழுதுவாங்க... எவ்வளவோ உருப்படியான விஷயத்தை எழுதி யாருமே படிக்காம கடுப்பாகிப்போகும் திருவாளர் பதிவர் சமூகங்களுக்கு தெரியாது...
இங்கே என்னதான் சீரியஸா டீ ஆத்துனாலும் கூட்டமே இல்லாம போற உங்க கடையை மட்டுமே பார்க்காம... கூட்டம் மொய்க்கிற டீக்கடையையும் கொஞ்சம் எட்டிப்பாத்து கத்துக்கனும்னு...!


பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... அப்பிடின்னு விதவிதமா இருக்குறாக பாருங்க... அய்ய்ய்யய்ய்யய்ய்ய்யியோ... படிக்கிறவுகளையும், மத்த பதிவர்களையும் மண்டைகாய வுடுறதில ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்ங்க...!!!

வூட்டுல வெண்டைக்கா வெட்டுனது, தக்காளி வதக்குனதுன்னு எதையாவது கொஞ்சம் எதுகை மோனையோட எழுதனும்...!

உங்க வூட்டுல சுடுதண்ணி வச்சாலும் சரி, தெருமுனையில இருக்கிற தெருவோர பிள்ளையாரை கும்பிடப்போனாலும் சரி... நாலு போட்டாவ கிளிக்கி எதையாச்சும் கிறுக்கத்தெரிஞ்சிருக்கனும்...

ஏடாகூட ரகத்துல அடுத்த படம் ஏதாச்சும் வந்தாக்க, இதுக்கெல்லாமா விமர்சனம் எழுதுவாகன்னு யோசிச்சிட்டு இருக்காம... முந்திக்கிட்டு மொத ஆளா விமர்சனத்தை எழுதி கூட்டத்தை கூட்டிப்புடனும்...!

புடிச்சிருக்குதோ... இல்லையோ... ரெகுலரா, விடா முயற்சியோட நாலு பேரு பதிவுக்கு போயி... ஆஹா, ஓஹோன்னு பாராட்டி கருத்து போட்டு, கூடவே ஓட்டும் போட்டுட்டு வந்துரனும்..!

புரட்சிகரமா எழுதுறேன் பேர்வழின்னு... கிருஷ்ணன் ஒரு காமக்கொடூரனா?... முருகன் ஒரு பொம்பளைப்பொறுக்கியா?... விநாயகர் ஒரு விரசக்கடவுளா?... கோயில்கள் காமக்கூடங்களா?... பாரதத்தை அழிக்கும் பார்ப்பான்கள்... அப்பிடி இப்பிடின்னு ஏடாகூடமா எதையாவது எழுத ட்ரை பண்ணனும்...!

சுயமரியாதையே இல்லாம யாருக்காவது ஜால்ரா தட்டிக்கிட்டே... சுயமரியாதை, பெரியார், தமிழினம், அப்படி, இப்பிடின்னு முழங்கனும்...

மொத்த ஊரே ஒருத்தரையே குறிவெச்சு கழுவி கழுவி ஊத்தினாலும் நீங்க ஒத்த ஆளா நின்னு பாயிண்ட் பை பாயிண்ட்டா எழுதி அவரை எப்படியாவது தூக்கி நிறுத்த முயற்சி பண்ணனும்...

இந்துத்வா ஆதரவு, இந்துத்வா எதிர்ப்பு என இரண்டில் எதில் கை வைத்தாலும் நல்ல அறுவடைதான்...! மோடி ஒரு கேடி... மோடிக்கு கோடித்துணி... மோடிக்கு வெடி... என்றெல்லாம் டைமிங் பார்த்து அடிப்பதும் திறமைதான்...!

முஸ்லீம்களுக்கு இந்தக்கொடுமை... முஸ்லீம்களுக்கு அந்தக்கொடுமை... இஸ்லாம் என்றால் இளக்காரமா?... அப்பிடின்னு தொடர்ந்து எழுதி ஒரு குறிப்பிட்ட வட்டத்தை கவர ட்ரை பண்ணனும்...

ஸ்டேட், சென்ட்ரல் என்று பாகுபாடில்லாமல் அனைத்து அரசியல் திட்டங்களையும் குறைகளின் பார்வையில் மட்டுமே விமர்சிக்கத்தெரியனும்... தப்பித்தவறிகூட எந்தவொரு திட்டத்தையும் நிறையைச்சொல்லி எழுதிரக்கூடாது...!

அந்த, அதுக்கு, செக்ஸ், முத்தம் அப்பிடீன்லாம் தலைப்புல மிக்ஸ் பண்ணி வைக்க முடியுமான்னு ட்ரை பண்ணனும்...!

முடிஞ்சாக்க கொஞ்சம்கூட வெக்கமேயில்லாம ''எறும்பு செக்ஸ் வைத்துக்கொள்வது, கரப்பான் பூச்சி hug பண்ணிக்கொள்வது... பல்லி சுள்ளி பொறுக்குவது...'' என இருக்கும் ஜீவராசிகளையெல்லாம் தேடிப்பிடித்து... ''வீடியோ இணைப்புடன்...'' அப்பிடீன்னு வித்தியாச(!) பதிவு போட்டாலும் ஹிட்டோ ஹிட்தான்...!

எவ்வளவு சீரியஸான விஷயத்தை எழுதினாலும் சரி... இல்லை குப்பை விஷயத்தை கொட்டினாலும் சரி... தலைப்புல மட்டும் ‘’இது தெரியுமா உங்களுக்கு?... அது வருமா உங்களுக்கு?... இப்படி எங்கேயாவது பாத்திருக்கீங்களா?...’’ அப்பிடின்லாம் சம்மந்தம் சம்மந்தமேயில்லாம பேரு வைச்சி ஜனங்களைக்கவர கத்துக்கனும்...! (உதாரணத்துக்கு இந்தப்பதிவோட தலைப்பையே பாருங்களேன்!!!...)

அந்தந்த சமயத்தில எது பரபரப்பு நியூசோ அதுக்கு கண்டிப்பா காரணமே இல்லேன்னாலும் எதிர்மறையா எழுத, ரூம் போட்டு யோசிச்சு சில காரணத்தை உருவாக்கி வரிசையாய் அடுக்கி சும்மா அசரடிக்கனும்...!

அப்பப்போ திருவாளர் பதிவர்களுக்குள்ளாகவே ஒருத்தர் மூஞ்சியில ஒருத்தர் காறித்துப்பி கூட்டம் சேர்க்கவும், கொஞ்ச நாள் கழிச்சு எதுவுமே நடக்காதது போல கை கோர்த்துக்கொள்ளவும் தெரிஞ்சிருக்கனும்...

முக்கியமா... நான் ஹிட்ஸ்க்கோ, பிரபலத்துக்கோ அலையுற ஆள் இல்லை அப்படின்னு அப்பப்போ புரூடா விடத்தெரியனும்...!

கள்ள ஓட்டு போடுறது எப்படின்னு?...எப்படியாவது கத்துக்கிட்டு கூச்ச நாச்சம், கொள்கை, குப்பையையெல்லாம் தூக்கி வீசிட்டு நமக்கு நாமே பல ஓட்டுக்களை குத்திக்கனும்...!

அப்பாலிக்கா ஒரு முக்கியமான மேட்டர் என்னனாக்க... அப்பப்போ இந்த மாதிரி ஒரு பதிவை மறக்காம போடத்தெரிஞ்சிருக்கனும்...!!!

அட... ஒருவேளை இதப்படிக்கிற நீங்களும் பதிவெழுதுற ஆளா இருந்து ‘’இதெல்லாம் ஒரு பொழப்பா?... இந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...’’ அப்பிடீன்னு கோவப்பட்டீகன்னா...
‘’ஹேய்...ஹேய்... நோ பேட் வேர்டுஸ்...’’ அப்பிடின்னு உங்களுக்கு நான் பொறுமையா சொல்லிக்கிறது ஒன்னே ஒன்னுதான்...

நீங்க ‘’திருவாளர் பதிவர்’’ ஆகுறதுக்கு லாயக்கே இல்லேங்க...!

மீண்டும் சந்திப்போம்...!!!

பின்குறிப்பு – நான் ''திருவாளர் பதிவர்'' ஆகும் முயற்சியில் அதற்கான ஆராய்ச்சிப்படிப்பில்(!) ஈடுபட்டுக்கொண்டிருப்பதால்தான் எதிர்கால சந்ததியினர்க்கு இந்த சிறிய வழிகாட்டல்...!!! மற்றபடி இந்த ஆராய்ச்சிக்காக எனக்கு நீங்க ''டாக்டர்'' பட்டம் கொடுக்கிறதும், கொடுக்காததும் உங்க இஷ்டம்தான்...! (வெளங்கிரும்னு உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேக்குது!...)

தொடர்புடைய இடுகைகள்...