SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, August 16, 2013

முதல் காதல் முற்றிலும் கோணலா?...

முன்குறிப்பு :- டைம் பாஸ் காதல்கள், முக்கோணக்காதல்கள், நாடகக்காதல்கள், அறியாமைக்காதல்கள், கள்ளக்காதல்கள், பப்பி லவ், etc., etc. காதல்களுக்கும், விவாதத்திற்கும் இந்தக்கட்டுரை இடமல்ல... இது மனதும் மனதும் சந்திக்கும்போது பூ பூக்கும் இயற்கையான காதல் உணர்ச்சி பற்றிய கட்டுரைதான்...


மனிதராகப்பிறந்த ஒவ்வொருவர் மனதிலுமிருந்து பிரிக்கவே முடியாத உணர்வுதான் இந்தக்காதல்... ஹார்மோன் சுரப்பு, வயசுக்கோளாறு, காம உணர்வு, லொட்டு, லொசுக்கு என்று அறிவியல், அவியல், அந்தாதி, இத்யாதியெல்லாம் விதவிதமாக காரணங்களை அடுக்கினாலும் இந்த காதல் தரும் சுகம் இருக்கிறதே... அதை அனுபவிக்காதவர்கள் நிச்சயம் யாருமே இருக்கமுடியாது...

கோபக்காரர்கள், சிடுமூஞ்சிகள், கரடுமுரடர்கள், கல்நெஞ்சக்காரர்கள், பயந்தாங்கோழிகள், அழகானவர்கள், அழகில்லாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்தவொரு விதிவிலக்குமில்லாமல் எல்லோருமே தங்கள் வாழ்வில் ஏதோவொரு கணத்திலாவது இந்தக்காதலின் வெண்சாமரத்தென்றலை நிச்சயமாய் ஸ்பரிசித்துத்தான் கடந்து வந்திருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த, அவரவர் மனதுக்குள் ஒளிந்திருக்கும் பொக்கிஷ ரகசியம்தான்...

காதலை காறித்துப்புபவர்களும்கூட தங்களது இதயத்தில் கைவைத்து கடந்து வந்த வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால், அவர்களது வாழ்க்கையின் ஏதோ ஒரு நொடிப்பொழுதிலாவது  காதல் அவர்களையும் உரசிச்சென்றிருப்பது தெரியும்...


எங்கெல்லாமோ சுற்றுவோம்... எத்தனை எத்தனை முகங்களையெல்லாமோ கடந்து வாழ்வோம்... விதவிதமான மனிதர்கள், சிநேகங்கள், உறவுகள் என வாழ்க்கை நகர்ந்துகொண்டேயிருக்கும்போது திடீரென எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்திருப்போம் நமக்கானதொரு காதலை... பெரும்பாலும் முதல் பார்வையிலேயே ‘’அட இதுதான் நம் இத்தனை நாள் தேடல்... இதுதான் நமக்கான காதல்...’’ என்று மனம் சிறகடித்துச்சொல்லும்...


சிலர் நீண்டநாள் பழகியபின்தான் காதல் வந்தது என்று சொன்னாலும் அதுவும் முதல் சந்திப்பிலேயே அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுக்குள்ளாக உறுதிபடுத்தப்பட்ட காதலாய்த்தான் இருக்கும்... அதன் வெளிப்பாடும், வீரியமும் வேண்டுமானால் நாட்கள் கடந்து வெளிப்பட்டிருக்கலாம்... அவ்வளவே!.

பல காதல்கள் முதல் சந்திப்பிலேயே சிறகடித்திருந்தாலும் அது சம்மந்தபட்டவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள்ளாகவே புதைந்து பாதி வாழ்க்கையை கடந்த பின்னர்தான், போகாத ஊருக்கு வழி தேடுவதைப்போல ‘’அட... நமக்கு அப்போதிருந்த உணர்வு காதல்தானா?... அந்தக்காதலை நாம்தான் வாழ்க்கையில் மிஸ் பண்ணிட்டோமா?...’’ என்று வேளையற்ற வேளைகளில் வந்து சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாத உணர்வுகள் நெஞ்சைப்பிசையும்...!


சிலர் கூறுவதைப்போல காதலிக்க வயது வரம்பு நிர்ணயிக்க அதுவொரு சட்டமில்லை... வேலை இருக்கிறதா?... என்ன படித்தவர்?... என்ன ஜாதி?... என்ன மதம்?... இத்யாதி... இத்யாதி... எல்லாம் பார்த்து காதலிக்க அது வேலைக்கு ஆளெடுக்கும் நேர்முகத்தேர்வோ, வரன் பார்த்து நடத்திவைக்கும் திருமணமோ இல்லை... அதுவொரு உணர்வு... அது இன்னாருக்கு இன்னாருடன்தான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மனிதர்கள் நிர்ணயிக்க நினைத்தாலும், காதல் ஒருபோதும் அதற்குள் கட்டுப்படாமல் அரங்கேற்றங்களை நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கும்... காதல் என்பது பருவம் வந்த மனித வாழ்வின் ஒரு இயற்கையான அங்கம் மட்டுமே... அதற்கு தெய்வீக சாயம் பூசுவதும், அறிவியல் வாதம் புரிவதும், காமச்சித்தரிப்பு செய்வதும் அவரவர் மனக்கருத்துக்களைச்சார்ந்ததே...


காதலை எதிர்ப்பதும், கேலி செய்வதும், தரக்குறைவானதாய் விமர்சிப்பதும் ஒவ்வொருவர் வளர்ந்த, அனுபவப்பட்ட அவரவருடைய மனநிலையைப்பொருத்ததுதான்... அஞ்சு விரலும் ஒன்னாவா இருக்கு?... என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்?...


பெரும்பாலும் இந்த காதலைத் தொடாத கவிஞர்களும் இல்லை... சினிமாக்களும் இல்லை... (ஆக்சன் படங்களில்கூட ஹீரோவுக்கு ஒரு ஜோடி தந்தாக வேண்டிய கட்டாயத்தை நமது சமூகங்கள் உருவாக்கி வைத்திருப்பது காதலின் சிறப்புதான்...)

காதல் மனித குலத்தின் இனப்பெருக்கத்திற்காக இயற்கையால் படைக்கப்பட்ட விஷயமாக இருந்தாலும்கூட, மனித வாழ்வில் அது நிகழ்த்தும் அற்புதங்களும், சந்தோஷங்களும், வேதனைகளும் ஏராளம்...

தனக்கானதொரு காதல் மலரும் புள்ளியில்தான் மனிதர்கள் தங்களைத்தாங்களே நேசிக்கத்தொடங்குவார்கள்... உடல், உடை என்று ஒவ்வொன்றிலும் கவனம் கூடும். எப்போதுமே மனதுக்குள் ஒரு இனம்புரியா சந்தோஷமும், யாரோ நம்மை கவனிக்கிறார்களோ என்ற பயமும், ஏதொவொரு எதிர்பார்ப்பும் இருந்துகோண்டேயிருக்கும்... கண்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையுமே மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் என்பது காதல்வாய்ப்பட்ட ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்... தாய் மொழியின் வார்த்தை கோர்ப்புகளைக்கூட அப்போதுதான் முயன்று பார்க்கத்தோன்றும்... (கவிஞர் வைரமுத்துவின் காதலித்துப்பார் என்ற கவிதையைவிட சிறப்பாக காதலின் உணர்வுகளை சொல்லிவிடமுடியாது...) முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், முதல் பரிசு, முதல் அவுட்டிங் என்று எப்போதும் தித்திக்கும் நிகழ்வுகள் அடங்கிய அது நிஜமாகவே வாழ்வின் மறக்கமுடியாதொரு வசந்தகாலம்தான்...


காதலில் சந்திக்காத நாட்களும், அவ்வப்போது எழும் கருத்து வேறுபாடுகளும், ஊடல்களும் ஏற்படுத்தும் வலியும் கொஞ்ச நஞ்சமல்ல... ஒருவருக்காக ஒருவரை காக்க வைப்பதும், தனக்கு மட்டுமே சொந்தமானதாய் ஒருவரையொருவர் உருவகப்படுத்தி உரிமை கொள்வதும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றாலும் இன்னொருவருக்கு மனது சரியில்லாமல் போவதுமாய்... இந்த காதல் படுத்தும் பாடிருக்கிறதே... அப்பப்பா!!!

வெளிப்படுத்தாத பல காதல்கள் பலரது நெஞ்சுக்குள் கடைசி வரையிலும் ஒரு சுகமான சுமையாகவே புதைந்திருக்கும்... சொல்லியிருக்கலாமோ என்ற ஒரு தவிப்பு நம்மைப்போலவே எதிரிடத்திலும் இருந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றும்... எல்லாம் அமைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும்கூட அந்த சொல்லாமல் விட்ட காதல் கடைசி வரையிலும் வாழ்க்கையில் ஒரு பூர்த்தியற்ற உணர்வைத் தந்து கொண்டேயிருக்கும்...


 சரியான நேரத்தில் சொல்லியும்கூட ஒருதலைக்காதலாய் தோல்வியுற்ற காதலின் வலிகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை... பல காதல் திருமணங்களின் கருத்தொற்றுமையில்லா தோல்விகளிலும், காதலித்தபோதிருந்த அன்பு கல்யாணமானபின் இல்லாமல் போன வாழ்க்கையிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது பழைய வசந்த காலத்தை புரட்டிப்பார்ப்பது என்பது நிச்சயமாய் வேலை செய்யுமொரு காதல் மருந்து...! காதலில் ஜெயித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்கூட ஒருவேளை நமது காதல் தோல்வியடைந்திருந்தால் அன்று நமது மனநிலை என்னவாய் இருந்திருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தால் இன்றைய வெற்றியடைந்த காதல் வாழ்வில் சின்னச்சின்ன பிரச்சினைகள்கூட தோன்றாமல் மீண்டும் ரசித்துக்காதலித்து வாழலாம்...


காதல் ஒரு ரோஜாச்செடி மாதிரி என்று சினிமாக்காரர்கள் சொல்லுவது மிகச்சரியும்கூட... அதில் முட்களும் இருக்கும்... நறுமண வாசத்துடன் ரோஜாப்பூவும் மலரக்கூடும்... பூவின் அழகையும், மென்மையையும், நறுமணத்தையும் ரசிப்பதோ... இல்லை... செடியிலிருக்கும் முட்களில் காயப்பட்டு ரத்தம் வடிப்பதோ காதலிப்பவர்களின் மற்றும் காதலித்தவர்களின் கைகளில்தான் இருக்கிறது...

அதை விடுத்து சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, வாழ்க்கை திசை மாறிப்போனபின் ‘’அய்யோ முதல் காதல் என் மனதை பிசைந்துகொண்டேயிருக்கிறதே?... இதற்கு மருந்தேயில்லையா’’ என்பதுவும்...


இருவரும் ஒரே புள்ளியில் மனம் ஒன்றுபட்டு, காதலித்து, கல்யாணம் பண்ணி வாழும் வாழ்க்கையில் ‘’காதலிக்கும்போது அப்படியிருந்தது... இப்படியிருந்தது... ஆனால் கல்யாணம் ஆனபிறகு எல்லாம் மாறிப்போயிடுச்சே... இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அன்னைக்கே காதலிச்சிருக்கமாட்டேனே...’’ என்று புலம்புவதுவும்

உங்கள் வாழ்க்கையை முதல் காதலால் முற்றிலும் கோணலா என்ற கேள்விக்குரியதாக்கி கேலிக்குரியதாக்கிவிடும்...

ஆகவே மக்களே... ‘’காதல் என்பது மனித சமூகம் இருக்கும்வரை இருந்துகொண்டே இருக்கும் இயற்கையின் பரிசு’’ என்பதை உணர்ந்து, சாகும்வரை உங்கள் அன்புக்குரியவர்களை காதலித்து வாழப்பழகுங்கள்... நிச்சயம் வாழ்க்கை இனிக்கும்!!!


போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்... காதலும் அது தரும் சுகந்தமும் மனிதகுலம் இருக்கும் வரையிலும் மரிக்காமல் இருந்துகொண்டேதான் இருக்கும்...

நேரமிருந்தால் காதல் கல்யாணம் பற்றிய அலசலுக்கு இதையும் படியுங்கள்...

காதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா? இல்லையா?...

என்ஜாய் மக்களே... மீண்டும் சந்திப்போம்...!

நன்றி - படங்கள் Google


1 comment:

  1. காதல் கொள்ளா உயிரினம் ஏது?! காதல் என்ற ஓர் புள்ளியில்தான் உலகமே இயங்குது. என்ன, அதன் வடிவம்தான் அங்கங்க மாறுது.

    ReplyDelete