SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, August 6, 2013

பேர்ள் ஹார்பரும், பெரியண்ணா அமெரிக்காவும்...

இன்று ஆகஸ்ட் மாதம் 6ம் நாள்... பெரும்பாலும் நம் எல்லோருக்கும் இது சாதாரண நாள்தான்... ஆனால் ஜப்பான் நாட்டு மக்களுக்கு?...

புரியவில்லையா?... உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட நாள் இதுதான்...

நமக்கெல்லாம் ஆஃப்கானிஸ்தானில் ஒசாமாவை தேடுவதாகவும், தீவிரவாதிகளைக் கொல்வதாகவும் கூறிக்கொண்டு ஒரு நாட்டையே சிதைத்துப்போட்ட அமெரிக்காவையும், ஈராக்கில் அணு ஆயுதமும், பயோ ஆயுதங்களும் இருப்பதாகக்கூறிக்கொண்டு சதாம் உசேனை தூக்கில் ஏற்றியதோடு, வலிமையான எண்ணைய் வளம் மிகுந்த ஈராக்கை இன்று தன் கைப்பாவையாக வைத்துக்கொண்ட அமெரிக்காவையும்தான் தெரியும்... (சதாம் உசேன் சர்வாதிகாரி என்றாலும்கூட அப்பாவி மக்கள் சாவதும், அன்றாடம் குண்டுவெடிப்புமாய் இப்படியொரு சிதைந்துபோன நிர்வாகத்தைத்தராமல் ஈராக்கின் இரும்புத்தலைவனாகவே இருந்தவர்... தனக்கு பெட்ரோலிய எண்ணைய் பொருட்கள் சப்ளை ஈராக்கிடமிருந்து கிடைக்கவில்லை என்றதும் ஏதேதோ சப்பைக்கட்டு கட்டி ஒருவழியாய் ஈராக்கை நாசப்படுத்திவிட்டது அமெரிக்கா... இப்போது ஈரான் மீதும் கொஞ்ச நாட்களாய் பார்வையை பதித்திருக்கிறது. அது அமெரிக்காவின் தேவையைப்பொருத்து எப்போது வேண்டுமானாலும் தீவிரமாகலாம்...)

இப்படி அங்கங்கே நாட்டாமை செய்தாலும்கூட இன்னமும் அமெரிக்காவின் பருப்பு வேகாத நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. முதல் உதாரணமாய் கியூபாவைச்சொல்லலாம்... அமெரிக்கா தனக்கு எதிரான நாடுகளை அரசியல் ரீதியாக அடக்கமுடியாத தருணங்களில் அந்நாடுகளின் தலைவர்களை தனது உளவுப்படை மூலம் தீர்த்துக்கட்டும் மூன்றாம்தர வேலைகளையும் அவ்வப்போது செய்திருக்கிறது. இதில் இன்னமும் தப்பித்தவர் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ!!!

இதேபோல இப்போது அமெரிக்காவை துச்சமாக மதிக்கும் மற்றொரு நாடு வடகொரியா... ஜப்பானின் வசமிருந்த கொரியா இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர் வடகொரியா, தென் கொரியா என்று இரண்டு நாடுகளாக சுதந்திரம் பெற்றிருக்கிறது. இதில் அமெரிக்காவின் ஆதரவு இன்று வரையிலும் தென் கொரியாவுக்குத்தான் என்றபோதிலும் வடகொரியா யாருக்கும் அஞ்சாமல் தேவைப்பட்டால் அமெரிக்காவின் மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்று மிரட்டிக்கொண்டிருப்பது அமெரிக்காவுக்குத்தலைவலிதான்...

சரி... இது கட்டுரையை வேறு பாதைக்கு பயணிக்கவைத்துவிடும் என்பதால் தலைப்புக்கு வருவோம்...

இன்று வரையிலும் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்கு ஆதிமூலமாக கருதப்படுவது அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய விமானத்தாக்குதல்தான்...

1920ம் ஆண்டு முதலே அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவு புகைந்துகொண்டேயிருந்த போதிலும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நல்லிணக்கம் பேணப்பட்டு வந்திருக்கிறது. எனினும் 1931ம் ஆண்டு ஜப்பான் மஞ்சூர்யா(சீனாவின் வடகிழக்குப்பகுதி) மீது நடத்திய ஆக்கிரமிப்புதான் எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. தொடர்ந்து ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்காமல் இருக்க அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து சீனாவுக்கு ஆயுதம் முதல் எல்லா அத்தியாவசிய சப்ளைகளையும் செய்யத்தொடங்கியிருக்கிறது. (உலகின் வல்லரசாக ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யா இருந்த காலங்களில் அந்தப்போட்டியில் பனிப்போர் பூண்டிருந்ததில் முக்கிய நாடு அமெரிக்காதான் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்...)

1930 காலகட்டங்களிலும் வல்லரசாக தன்னை பிரகடணப்படுத்திக்கொள்ளும் உந்துதலில் உலகம் முழுக்க கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலையை அமெரிக்கா மிகவும் விரும்பி ஏற்றிருந்தது...

ஜப்பான் எவ்வித இயற்கை வளமும் இல்லாத நாடு... அப்போதைய காலகட்டத்தில் அதன் ஆயில் தேவைகள் முழுவதும் அமெரிக்காவின் இறக்குமதியை நம்பியே இருந்திருக்கிறது.  இந்நிலையில் அமெரிக்கா சீனாவுக்கு சப்ளை செய்யவிருந்த ஒருசில லோடுகளை ஜப்பான் மறித்து தடுத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது பொருளாதாரத்தடை விதித்திருக்கிறது. இதனால் ஜப்பானின் பார்வை தனது எண்ணைய் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எண்ணைய் வளம் மிகுந்த கிழக்காசிய நாடுகளின் மேல் விழுந்திருக்கிறது. அந்த நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவேண்டுமானால் முதலில் உலகின் பெரியண்ணா போல் தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவுக்கு ஒரு அடி கொடுத்துதான் தொடங்கவேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதுதான் ஹவாய் தீவில் இருக்கும் அமெரிக்காவின் கப்பற்படைத்தளமான பேர்ள் ஹார்பரை சின்னாபின்னப்படுத்திய தாக்குதல்...

ஜப்பானின் அப்போதைய பிரதமர் “அமெரிக்காவை எதிர்த்து போரிடுவது உலகையே எதிர்த்து போரிடுவதற்குச்சமம் என்று நன்கு தெரிந்திருந்த போதிலும் நமது நாட்டின் எதிர்காலத்திற்காக இதைச்செய்தே ஆகவேண்டிய கட்டாயம்” என்று அறிக்கையிட்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே போர்மேகங்கள் சூழ்ந்ததுமே, அமெரிக்கா முழுவதும் ஜப்பான் எந்நேரத்திலும் தாக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அமெரிக்காவின் கவனம் முழுவதும் ஜப்பான் முதன்முதலில் தங்களது புதிதாய் அமைக்கப்பட்ட படைத்தளமிருக்கும் பிலிப்பைன்சை தாக்கலாம் என்று கணித்து கோட்டை விட்டிருக்கிறது.

தாக்குதலுக்கு தயாராகும் ஜப்பானிய விமானங்கள்...

ஜப்பானின் தாக்குதல் திட்டமிடும் அதிகாரிகள் 1940ம் ஆண்டு இத்தாலி மீது பிரிட்டன் நடத்திய வான்வழித்தாக்குதலை ஆராய்ந்து அதனடிப்படையில் ஏற்படுத்திய நுண்ணிய திட்டமிடலும், ஜப்பானின் ஆறு விமானம் தாங்கி கப்பல்களில் சென்ற 408 போர்விமானங்களும் 1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி நடத்திய திடீர் தாக்குதல், அமெரிக்காவின் கப்பற்படைத்தளமான பேர்ள் ஹார்பரை சின்னாபின்னப்படுத்தியதோடு அமெரிக்காவுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி உலக நாடுகளின் முன் தன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற அமெரிக்காவின் இமேஜை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஜப்பான் பக்கம் மூளையாக செயல்பட்ட இருவர் அட்மிரல் யமாமோட்டோ மற்றும் நகுமோ...


இதனால் கொதிப்படைந்துபோன அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஃபிரான்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஜப்பான் மீது போர்ப்பிரகடணம் செய்தார். ஜப்பானின் அப்போதைய அரசர் ஹிராஹிடோ.

பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடந்த நான்காம் நாளில் அதாவது 1941ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஜெர்மனியும்(ஹிட்லர்) இத்தாலியும்(முசோலினி) அமெரிக்காவின் மீது போர்ப்பிரகடன அறிவிப்பை வெளியிட்டன. 1939லேயே தொடங்கியிருந்த இரண்டாம் உலகப்போர் இந்த நிகழ்வுக்குப்பிறகு அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என உலக நாடுகள் இரு அணிகளாகப்பிரிந்து இரண்டாம் உலகப்போர் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறது.


இந்த இரண்டாம் உலகப்போரில் இண்டியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கிய நமது நேதாஜி, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலியுடன் இணைந்து நேச நாடுகள் எனப்பட்ட அமெரிக்க கூட்டணிக்கு எதிராக போரிட்டிருக்கிறார் என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய இன்னுமொரு முக்கிய தகவல்...

இந்த இரண்டாம் உலகப்போர் 1945ம் ஆண்டு வரையிலும் முடிவுறாது நீண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 1944 ஜீன் மாதம் முதல் 1945 ஜீன் மாதம் வரையிலான 12மாதங்கள் போர் மிகவும் உக்கிரமடைந்திருக்கிறது. அதிலும் 1944 டிசம்பர் மாதத்தில் மட்டும் அதிக பட்சமாக அமெரிக்க தரப்பில் 88ஆயிரம் வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்...

1945ம் ஆண்டு மே 8ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அப்போது நேச நாடுகளின் சார்பில் 1945 ஜீலை 26ம் தேதி ஜப்பானுக்கு உடனடியாக சரணடையாவிட்டால் முழு அழிவுக்கு தயாராக இருக்குமாறு இறுதி எச்சரிக்கை விடப்பட்டும் அதை ஜீலை 28ம் தேதி ஜப்பான் நிராகரித்தது.

1939ம் ஆண்டே அணு ஆராய்ச்சிகளை ஜெர்மனி செய்து வருவதாய் கேள்விப்பட்ட அமெரிக்கா தானும் அதைத்தொடங்கியிருந்தது... இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர இதைத்தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்காவின் 33வது ஜனாதிபதி ஹேரி எஸ் ட்ரூமென் என்பவர் நாசக்கார அணுகுண்டுகளை ஜப்பான் மீது வீசுமாறு உத்தரவிட்டிருக்கிறார். அதாவது தான் தயாரித்திருந்த அணுகுண்டுகளின் வலிமையை சோதனை செய்ய ஜப்பானை உபயோகப்படுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறது அமெரிக்கா... ஒரு போரில் உண்மையிலேயே திறம்பட செயல்பட்டு வெற்றியடைவது பாராட்டத்தக்கது. ஆனால் பொதுமக்களை கூண்டோடு பேரழிவுக்கு உண்டாக்கும் ஒரு நாசக்கார அணுகுண்டை எவ்வித குற்ற உணர்வுமின்றி ஜப்பான் மீது வீச முடிவெடுத்திருக்கிறது அமெரிக்கா...


ஒரு சிலர் இன்னமும்கூட அமெரிக்காவின் இந்தச்செயலை நியாயப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்... போரையே மனித குலத்திற்கு எதிரான அழிவுக்கருவியாக பார்க்கும்போது இப்படிப்பட்ட அணுகுண்டுகள் நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல... எவ்வித நியாயம் கற்பித்தாலும் சரி... ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசிய அமெரிக்காவின் செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல... என்பதுதான் இந்த விஷயத்தில் என் தனிப்பட்ட கருத்து...

1945 ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி லிட்டில் பாய்(சின்னப்பையன்) என்று பெயரிடப்பட்ட 64கிலோகிராம் யுரேனியம்-235 கொண்ட முதல் அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது வீசப்பட்டிருக்கிறது. 9470மீட்டர் உயரத்திலிருந்து எனோலா கே என்ற விமானத்தின் மூலம் வீசப்பட்ட லிட்டில் பாய் ஹிரோஷிமாவின் தரைப்பகுதியிலிருந்து 600மீட்டர் உயரத்தை வெறும் 43செகண்டுகளில் அடைந்திருக்கிறது. எனோலா கே விமானம் அணுகுண்டு வெடிப்பின் அதிர்ச்சியை உணரும்போது கிட்டத்தட்ட குண்டு வீசிய இடத்திலிருந்து 18.5கி.மீ தூரத்தைக்கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசியபோது அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3,50,000பேர் மற்றும் கிட்டத்தட்ட 43,000 ஜப்பான் ராணுவ வீரர்கள் என்று புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கணக்குப்படி லிட்டில் பாய் அழித்த ஏரியாவின் அளவு கிட்டத்தட்ட 12சதுர கிலோமீட்டர்...  ஜப்பான் கணக்குப்படி ஹிரோஷிமாவின் 70% கட்டிடங்கள் அழிந்திருக்கின்றன. 30%க்கும் அதிகமான மக்கள் இறந்ததோடு பெரும்பான்மை மக்கள் கதிர்வீச்சு மற்றும் தீக்காயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஹிரோஷிமாவில் இருந்த டாக்டர்களில் 90%பேரும், நர்சுகளில் 93% பேரும் இந்த குண்டுவெடிப்பிலேயே இறந்திருக்கிறார்கள்...

கிட்டத்தட்ட ஹிரோஷிமா ஒரு சுடுகாடாகவே மாறியிருக்கிறது. தகவல் தொடர்பு வளர்ந்திராத அந்தக்காலக்கட்டத்தில் நடந்து முடிந்த பேரழின் தாக்கத்தை ஜப்பானால் உடனடியாக தெரிந்து கொள்ள இயலாமல் இருந்திருக்கிறது.


ஹிரோஷிமாவில் நடந்த கொடுமையின் தாக்கத்தை ஜப்பான் முழுதுமாய் தெரிந்து கொள்ளும் முன்னரே அமெரிக்கா தனது அடுத்த தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது...

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, அதாவது ஹிரோஷிமா மீது குண்டு வீசப்பட்ட மூன்றாவது நாளில் ஜப்பானின் மற்றொரு நகரமான கோகூரா மீது ஃபேட் மேன்(Fat Man) என்றழைக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டை வீசச்சென்ற அமெரிக்காவின் பாக்ஸ்கர் எனும் விமானம் அந்த நகரம் 70% மேகத்தால் சூழப்பட்டிருந்ததால் இரண்டாவது இலக்கான நாகாசாகி நகரத்தின் பக்கம் திரும்பியது. சரியாக காலை 11.00 மணிக்கு நாகாசாகி நகரத்தின் மீது அமெரிக்காவின் இரண்டாவது எமன் வெடித்துச்சிதறியது. இதிலும் லட்சக்கணக்கான உயிரிழப்பு, பெரும் பொருட்சேதம் என கற்பனை செய்யமுடியாத பேரிழப்பு... நாகாசாகி மீது அணுகுண்டு வெடித்தபோது உருவான வெப்பத்தின் அளவு என்ன தெரியுமா?... 3,900 °C (7,050 °F)... அப்போது வீசிய காற்றின் அளவு என்ன தெரியுமா?... 1,005 km/h (624 mph).
நாகாசாகி மீது இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்ட பிறகு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி என்ன சொல்லியிருக்கிறார் என்று ஒரு முறை படித்துப்பாருங்கள்...

I realize the tragic significance of the atomic bomb... It is an awful responsibility which has come to us... We thank God that it has come to us, instead of to our enemies; and we pray that He may guide us to use it in His ways and for His purposes.
—President Harry S Truman, August 9, 1945

உடனடியாக ஜப்பான் சரணடையும் முடிவுக்கு வந்தது... ஜப்பான் பேரரசர் ஹிராஹிடோ தான் சரணடையும் முடிவுக்கு வந்தது ஏன் என்று விளக்கிய அறிக்கையின் ஒரு சில பகுதிகளை கொஞ்சம் படியுங்கள்...
Moreover, the enemy now possesses a new and terrible weapon with the power to destroy many innocent lives and do incalculable damage. Should we continue to fight, not only would it result in an ultimate collapse and obliteration of the Japanese nation, but also it would lead to the total extinction of human civilization. Such being the case, how are We to save the millions of Our subjects, or to atone Ourselves before the hallowed spirits of Our Imperial Ancestors? This is the reason why We have ordered the acceptance of the provisions of the Joint Declaration of the Powers.

ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்திருக்காவிட்டால் மேலும் இரண்டு குண்டுகளை செப்டம்பரிலும், அக்டோபரிலும் வீச அமெரிக்கா முடிவெடுத்திருந்ததாக ஒரு தகவலும் உண்டு...

ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி ஆகிய இரு நகரங்களிலும் வீசப்பட்ட அணு எமன்கள் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்ததோடு, அணுக்கதிர்வீச்சின் காரணமாக இன்றளவும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதும், கேன்சர் போன்ற பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் நடந்து வருகிறது. அணுகுண்டு என்பது ஒரு இடத்தை புல் பூண்டுகூட இல்லாமல் துடைத்தெடுப்பதோடு நில்லாமல் நூறாண்டுகளுக்கும் மேலாக அதன் சந்ததிகள் வரை கதிர்வீச்சு தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் தீராத சோகம்தான்...
ஜப்பான் சரணடைந்தவுடன் ஹிரோஷிமாவும், நாகாசாகியும் அமெரிக்கப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு புகைப்படமும், வீடியோவும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதால் பல கோரங்கள் சாட்சியின்றி மறைந்திருக்கிறது...

இவ்வளவுக்கும் பிறகும் ஜப்பான் மீண்டும் உழைத்து போராடி அசுர வளர்ச்சியை பெற்றிருப்பதிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் பாடம் பயின்றால் இந்தியாவும் இன்னும் பலபடி முன்னேற வாய்ப்பிருப்பதாக நம்பலாம்...
அதேபோல ஜப்பானின் பேர்ள் ஹார்பர் அட்டாக்கும், அணுகுண்டுகளை போடும்வரை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் வெற்றிபெற முடியாதபடி போராடிய போர் வியூகமும், வீரமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் அமெரிக்காவுக்கான கரும்புள்ளிதான் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை...

ஜப்பான் செய்தது சரி என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன்... போர் தர்மத்தை மீறி எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜப்பான் பேர்ள் ஹார்பர் மீது நடத்திய தாக்குதலில் இறந்த அமெரிக்க வீரர்களும் மனித உயிர்கள்தான்... ஆனால் அதற்குப்பழிவாங்கும் விதமாக அணுகுண்டுகளை வீசி அமெரிக்கா செய்த கொடுமை மனிதகுலத்திற்கே எதிரானது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை...மற்றபடி போர் மற்றும் இனவாதம் என எத்தனையோ விதவிதமான வழிகளில் மனிதஉயிர்களை கொன்று குவிப்பது எந்த நாடாக இருந்தாலும் சரி... ஒரு மனிதனாக நமது கண்டனங்களை பதிவுசெய்வது நமது கடமைதான் என்பதே என் கருத்து...

எது எப்படியோ?... இவ்வளவு பெரிய கொடுமையை செய்த அமெரிக்கா, இன்னமும் தனது பெரியண்ணன் வேலைகளை நான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது...

என்ன ஒரேயொரு வித்தியாசம்... இன்று அமெரிக்காவுக்கே சவால் விடும் பல நாடுகளின் கைகளிலும் அணுகுண்டுகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன...

வினை வினைத்தவன் வினை அறுப்பான் என்றொரு பழமொழி நினைவுக்கு வந்தாலும்... மனித குலத்தை கொத்து கொத்தாய் சாம்பலாக்கும் இன்னுமொரு ஹிரோஷிமா-நாகாசாகி எங்குமே, எவருக்குமே வேண்டாம் என்பதுதான் மனிதாபிமானமுள்ள எந்த மனிதனுக்கும் எண்ணமாய் இருக்கும் என்று நம்புகிறேன்...

பேர்ள் ஹார்பர் அட்டாக்கில் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கும், அணுகுண்டு வீச்சில் உயிர்நீத்த ஜப்பான் மக்களுக்கும், இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த அனைத்து அப்பாவிகளுக்கும் மனமார்ந்த அஞ்சலி செலுத்தி விடைபெறுகிறேன்...

மீண்டும் சந்திப்போம்...

நன்றி - பல்வேறு இணையதளங்களில் படித்ததன் அடிப்படையில் சுருக்கமாய் தொகுத்து எழுதியது... படங்கள் - Google

6 comments:

 1. அருமையான கட்டுரை... இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா செய்த அநியாயங்களை தோலுரித்துக் காட்டும் பகிர்வு.... படங்கள் மனசை கனக்க வைக்கின்றன...

  நீளமான பகிர்வு... ஜப்பான் வீழ்ந்து எழுந்தது... நம்மை நம் அரசியல்வாதிகள் எழவிடாமல் அல்லவா மிதிக்கிறார்கள்...

  ReplyDelete
 2. // உலகின் முதல் அணுகுண்டு(நியூக்ளியர் பாம்ப்) //
  Nuclear bomb & Atom bomb are different

  ReplyDelete
  Replies
  1. நன்றி...திருத்தியாகிவிட்டது...

   Delete
 3. தெரியாத பல விஷயங்கள் அறிந்து தெளிந்தேன்.

  வாழத்தானே பிறந்தோம் அடுத்தவனை கொல்ல அல்லவே.

  சிறப்பான செய்தி தொகுப்பு....!

  ReplyDelete
 4. ஜெர்மனியின் படை மட்டும் ரஷ்யாவின் பக்கம் போகாமல் இருந்தால் உலக வரலாறு மாறி இருக்கும் .ஜப்பான் படைகள் தெற்கு ஆசியாவை தன் கட்டுக்குள் கொண்டு வர செய்த முறைகளும் , மரண முகாம்களும் தண்டைனைகளும் கொடுரனமானவை .அமெரிக்க செய்தது சரி என்று சொல்ல முடியாது.

  ReplyDelete