SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, August 22, 2013

வினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...


2012, நவம்பர் மாதம் காரைக்காலில் வீசப்பட்ட ஆசிட் பலபேரது பரிதாபத்தையும்சமூக கோபத்தையும் தூண்டிய விஷயமானதுடெல்லி கற்பழிப்பு நாட்டையே உலுக்கிக்கொண்டிருந்த வேளையில் என்ன நடந்தாலும் சரி... பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவே குறையாது என்ற சாபக்கேடுக்கிணங்க இந்த ஆசிட் சம்பவமும் சர்வ சாதாரணமாக நடந்தேறியது...

வினோதினி... எண்ணற்ற கனவுகளுடன் வாழ்ந்த ஒரு சாதாரண ஏழைப்பெண்... தன்னை வாட்ச்மேன் வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்த தந்தையையும் தன் குடும்பத்தையும் வறுமையின் நிறம்போக்கி வாழவைக்கவேண்டும் என்ற இலட்சியக்கனவில் வாழ்ந்த ஒரு சாமன்ய சமூக அங்கம்... எல்லாக்கனவுகளும் ஒரு அலட்சிய வெறியினால் ஒரே நொடியில் தந்தையின் கண்முன்னேயே சிதைக்கப்பட்டது...


வினோதினி... இன்ஜினியரிங் முடித்து சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். 2012, நவம்பர் 14ம்நாள் தீபாவளி விடுமுறை முடிந்து வேலை பார்க்கும் சென்னைக்கு காரைக்காலில் இருந்து புறப்பட பேருந்து நிலையத்துக்கு தந்தை மற்றும் குடும்ப நண்பர் ஒருவருடன் நடந்து வந்துகொண்டிருந்த வினோதினியின் மீது திடீரென வீசப்பட்ட ஆசிட்... அவரது முகம், கண்கள் மற்றும் உடலோடு எதிர்காலத்தையும் சேர்த்தே சிதைத்துவிட்டது.

இதில் இன்னமும் கொடுமை என்னவென்றால் ஆசிட் வீசிய குற்றவாளியை “பொறுப்புமிக்க” காவல்துறை கைது செய்யவே... பொதுமக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டிய அவலம் நடந்ததுதான்... ஏன் இவ்வளவு அலட்சியப்போக்கு... ஒருவேளை தங்களது சொந்தங்கள் ஏதாவது ஒன்று இப்படி பாதிக்கப்பட்டாலும்கூட குற்றவாளியிடம் ஏதாவது தேற்றிக்கொண்டு இப்படித்தான் அலட்சியமாய் இருப்பார்களா?... ஒரு சமூக அக்கறை இவர்களுக்கெல்லாம் பயிற்றுவிக்கப்படவே இல்லையா?...

எவ்வளவோ தடங்கல்களுக்கும், தாமதத்திற்கும் பின்னால்தான் குற்றவாளி என்று 27 வயது அப்பு என்ற சுரேஷ்குமாரை காவல்துறை கைது செய்திருக்கிறது. அப்போதும்கூட வினோதினி தரப்பில் குற்றத்திற்கு காரணமான இன்னும் மூன்று பேரை பணம் வாங்கிக்கொண்டு காவல்துறை வெறும் சாட்சியாக மட்டுமே வழக்கில் சேர்த்திருப்பதாக மீடியாக்கள் முன்னிலையிலேயே குற்றம் சாட்டப்பட்டது.


ஆசிட் வீச்சில் சிதைந்துபோன வினோதினி கண்பார்வையும் பறிபோய் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காயங்களுடன் தவியாய் தவித்து சாவுடன் போராடி இறுதியாய் 12/2/013அன்று தனது நிறைவேறாத கனவுகளோடு சேர்ந்து தானும் இறந்தே போனார். கொலை முயற்சி வழக்காய் 31/1/2013ல்(?!!!) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அதன் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளி சுரேஷ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை... தான் ரொம்ப ரொம்ப உத்தமன்... எந்தக்குற்றமும் செய்யாதவன் என்றுதான் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறான் (அல்லது) கூற பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான்... இது எல்லாவற்றையும்விட கொடுமை அவனுக்கு 2013, மே மாதம் 23ம் தேதி நமது மாண்புமிகு சட்டத்தினால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறான்...(!!!)  
(பாதிப்புக்குள்ளான வினோதினியின் வீடியோப்பேச்சு ஆதாரம் இருந்தும்கூட வழக்குக்கு இந்தக்கதி!...ஒருவேளை வினோதினி சம்பவத்தின்போதே இறந்திருந்தால், சுரேஷ் குமார் எப்போதோ குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டு இந்நேரம் அடுத்த வினோதினியை தேடிப்பறந்திருப்பார்!!!...)

ஒரு வழியாக நீதி(!) விசாரணை முடிவடைந்து 20/8/2013ல் சுரேஷ்க்கு ஆயுள் தண்டனை வழங்கி காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தீர்ப்பை படிக்கும் முன்னர் குற்றவாளி சுரேஷிடம் நீதிபதி ‘’உன் மீதான குற்றச்சாட்டுக்கள் முழுவதுமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?...’’ என்று கேட்டதற்கு ‘’இங்கு நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை... நான் சொல்ல வேண்டியதை ஹைகோர்ட்டில் சொல்லிக்கொள்கிறேன்...’’ என்று பதிலளித்திருக்கிறார்...

அப்படியென்றால் தான் செய்த குற்றத்தை பற்றியோ, காரைக்கால் கோர்ட்டு வழங்கிய தண்டனை பற்றியோ குற்றவாளிக்கு எந்தவிதக் கவலையும் இல்லை... அவரது மனதில் இருப்பதெல்லாம் ஹை கோர்ட்டு... அதுவும் போனால் சுப்ரீம் கோர்ட்டு என்ற அசால்ட் மட்டும்தான்...

காரைக்கால் கோர்ட்டு குற்றவாளி சுரேஷுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து இ.பி.கோ.357ன் கீழ் அந்தப்பணத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை வினோதினியின் குடும்பத்திற்கு வழங்கவேண்டும் என்றும் அப்படி சுரேஷ் அந்தப்பணத்தை கட்டத்தவறினால் மூன்று ஆண்டுகள் கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் மிகப்பெரிய நீதியை வழங்கியிருக்கிறது.

வினோதினியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டிருக்கும் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் எல்லா இழப்புகளையும் சரிகட்டிவிடுமா?... 

வாழவேண்டிய ஒரு பெண்ணை தனது ஆதிக்கத்துக்கு கட்டுப்படவில்லை என்பதற்காக கொடூரமாக சிதைத்த ஒரு குற்றத்திற்கு இந்தத்தண்டனை போதுமானதுதானா?... 

இந்த நீதியோ...இல்லை அடுத்து ஹை கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படவிருக்கும் நீதியோ எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட நினைப்போரின் மனதில் ஒரு நொடியேனும் தோன்றி, தண்டனை பயம் ஏற்படுத்தி குற்றம் செய்ய விடாமல் தடுக்குமா?... 
(ஒருவேளை  ஹை கோர்ட்டிலோ... இல்லை சுப்ரீம் கோர்ட்டிலோ... சுரேஷ் குமார் எந்தக்குற்றமும் செய்யவில்லை என்று குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படலாம்... அப்படியாகும் பட்சத்தில் ‘’அப்போ... வினோதினி தன் மீது தானே ஆசிட் ஊற்றிக்கொண்டாரா?...’’ என்று யாரும் இங்கே கேள்வி கேட்டுவிட முடியாது…)

பெரும்பாலான கொலை வழக்குகளிலும், குற்றச்சம்பவங்களிலும் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் பலர் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது வெட்ட வெளிச்சம்தான்... அப்படியென்றால் அப்படிப்பட்ட குற்றவாளிக்கு மறுபடியும், மறுபடியும் சட்டம் ஜாமீன் வழங்குவது ஏன்?... இது அவர்களை ஊக்குவிக்கும், சட்டத்தின் மேலிருக்கும் பயத்தைப்போக்கும் செயலாகாதா?...

வினோதினியின் வழக்கில் சிதைப்பட்ட நரகவேதனையிலும் வீடியோப்பதிவில் பேசிய அந்தப்பெண் ‘’என்னை மாதிரி யாருக்குமே நடக்கக்கூடாது’’ என்று கதறியதும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை இதெல்லாமே வேஸ்ட்... அவனுக்கும் இதே மாதிரி மூஞ்சில ஆசிட் ஊத்தனும்... அப்போதான் அந்த வலி, வேதனை எல்லாம் என்னான்னு புரியும்...’’ என்று புலம்பியதும் சட்டத்தின் காதுகளில் கடைசிவரையிலும் விழவே விழாதா?...‘’தண்டனை என்பது குற்றம் செய்தவரை திருத்துவதற்குத்தானேயொழிய அவரை அழிப்பதற்கு அல்ல’’ என்று மனிதநேயம் பேசுவோர்க்கு, ‘’தண்டனை என்பது அதே போன்றதொரு குற்றச்செயலில் ஈடுபட நினைக்கும் வேறு நபர்களின் மனதில் பயத்தை உண்டாக்கி குற்றமே செய்யாமல் தடுக்கும் காரணியாக இருக்கவேண்டும்’’ என்ற எண்ணங்கள் தோன்றாதா?...

குழந்தைகளை கற்பழித்துக்கொண்டேயிருப்பார்கள்... பெண்களை கற்பழித்துக்கொண்டேயிருப்பார்கள்... காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆசிட் ஊற்றிக்கொண்டேயிருப்பார்கள்... கொலை மேல் கொலையாக செய்து கொண்டேயிருப்பார்கள்... அவர்களைத் திருத்த மட்டுமே சட்டங்கள் தண்டனை வழங்குமா?... ஒருவேளை ஆயுள் தண்டனையே விதிக்கப்பட்டாலும்கூட அவரவர் வசதிக்கேற்ப சிறைச்சாலையிலேயே எவ்வித குற்ற உணர்வுமின்றி சொகுசாய் வாழ்வைக் கழிக்கலாம் என்பது இங்கே யாருக்குமே தெரியாதா?!!!...

இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடந்து கொண்டேயிருக்கும் இந்தக்கொடிய நிகழ்வுகள் சரியான தண்டனையின்றி... தண்டனையின் மீதான பயமின்றி வினோதினிக்கு முன்னாலும், வினோதினிக்குப் பின்னாலும்கூட தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இங்கே வினோதினிகள் மட்டும்தான் இறந்துகொண்டேயிருக்கிறார்களேயொழிய எந்த சுரேஷ் குமார்களும் திருந்தியதாய் தெரியவில்லை... பெண்களை ஒரு சக உயிராக மதிக்காமல் அவளை தங்களுக்கானதொரு பொருளாகவும், காமத்தின் வடிகாலாகவும், தன்னிடம் பணிந்து போகாத மற்றும் ஆசைக்கு இணங்காத தருணங்களில் அவளை அழிக்கும்வரை செல்லும் ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட எண்ணங்கள் வளர என்ன காரணங்கள்?... யார் காரணம்?...

தனிமனித ஒழுக்கமின்மையா?...

பெண்களை இன்னமும் போதைப்பொருளாகவே பார்க்கும் சமூக அறிவின்மையா?...

பலவித தகவல்களையும் இளைய சமூகத்திடம் எளிதாகக்கொண்டு சேர்க்கும் தகவல் தொடர்பு மற்றும் ஊடக வளர்ச்சியா?...

காவல் துறையின் அலட்சியமா?...

நீதித்துறையின் பயனற்ற துருப்பிடித்த பழைய சட்டங்களா?...

யாருடைய தவறாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால் அது மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஒரே வழி... ‘’மிகக்கடுமையான, மிகக்கொடுமையான தண்டனைகள் மட்டும்தான்...’’

ஒரு நிரபராதி தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக வகுக்கப்பட்ட ஜாமீன், அப்பீல் போன்ற சட்டத்தின் பக்கங்கள், குற்றவாளிகளை தப்பிக்கவிடும் ஓட்டைகளாக மாறி வெகு காலமாகிவிட்டது...

நேர்மையின் சின்னமாக வாழ நினைக்கும் வக்கீல்களும் நீதிபதிகளும், சட்டத்தை திருத்தும் / இயற்றும் அதிகாரத்தை அவர்களின் கைகளிலேயே ஒப்படைக்கும் ஆட்சியாளர்களும் உண்டாகும் நாள்வரையில் இங்கே வினோதினிகள் பொசுக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்... ‘’ஒருதலைக்காதலில் பெண்ணின் மீது வாலிபர் திராவக வீச்சு’’… என்ற ஒரு வரிச்செய்திகளோடு வரலாறு மாறாமல் நகர்ந்துகொண்டேதான் இருக்கும்...

கடைசியாய் இந்த நாட்டு மக்கள் நம்பியிருப்பது நீதிமன்றங்களைத்தான் என்றாலும் அவைகள் குற்றவாளிகளையும், அப்பாவிகளையும் சரியாக தரம் பிரித்து தண்டனையைத் திருத்தும் நாள் வருமா?...

கேள்விகள் ஒரு போதும் ஓயாது...

மீண்டும் சந்திப்போம்...!

9 comments:

 1. இவனுங்களுக்குலாம் கண்ணையும், பேச்சையும் பிடுங்கிகிட்டு , நெத்தில பச்சை குத்தி வெளில விட்டுடனும். அப்போதான் திருந்துவாங்க.

  ReplyDelete
  Replies
  1. இதுகூட சரியானத்தண்டனையாத்தான் தெரியுது...

   Delete
 2. இந்தமாதிரி ஆட்களுக்கெல்லாம் உடனே "கட்" செய்து அனுப்ப வேண்டும்...

  ReplyDelete
 3. nobody knows what really happenend?
  1) y vinothinis parents allowed him to go along with her?
  2)y they collected his earnings?

  ReplyDelete
 4. i am from karaikal: only when u understand the real happening,u can justify the issue
  pathiplans@sify.com

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம் காரணங்களும், நியாயங்களும் குற்றவாளியின் பக்கம் இருக்கலாம்... ஆனால் ஆசிட் வீசி ஒரு பெண்ணை... ஒரு உயிரை சிதைத்தது நியாயம்தான் என்கிறீர்களா?...

   Delete
 5. ஒரு ஆறுதலான விஷயம் ,,,அந்த கொடூரக் காரனுக்கு மரணத்தண்டனை வழங்கப் பட வேண்டுமென்று அப்பீல்செய்யப் பட்டுள்ளதுதான் !

  ReplyDelete
 6. அவனுக்கு இந்தத் தண்டனையெல்லாம் சரியானதல்ல... அவனுக்கும் ஆசிட் ஊற்றி அனுபவிக்க வைக்க வேண்டும்.

  ReplyDelete