SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, August 21, 2013

நான் பைத்தியமா?...

“நான்”... இது நான்தானா?...


பல நேரங்களில்
இரட்டைக்குதிரைகளில்
பயணிக்க நினைக்கிறேன்...
சில நேரங்களில்
நேரம் கடந்தும்
உறங்க மறுக்கிறேன்...

படித்த படிப்புகளும் பட்டங்களும்
இளவயது ஆட்டங்களும்
என்னையுமறியாமல்
அவ்வப்போது வந்து போகும்...
கடந்து வந்த மனிதர்களும்
காணாமல் தொலைந்த முகங்களும்
கனவுகளில் மீண்டு(ம்) வந்து
இரவுகளில் எனை எழுப்பும்...

வண்ண வண்ணமாய்
எண்ணத்தில் வரும் நிறங்கள்
உலகில் எங்குமே
ஒருநாளும் பார்த்ததில்லை...
வாழ்க்கை முடிவதாய்
சமயத்தில் வரும் கனவுகள்
சங்கடப்படுத்தி என்னை
சஞ்சலத்தில் ஆழ்த்துபவை...

என் மகிழ்ச்சிக்கூப்பாடுகளும்
அழுகையின் விசும்பல்களும்
எவர் காதிலும்
என்றுமே விழுவதில்லை...
சந்தோஷமோதுக்கமோ
எனக்கானதொரு உணர்வை
ஒருபோதும் நானும்
ஒருவருடனும் பகிர்வதில்லை...


காதல் கைவிட்ட
வேதனைகளின் நினைவுகளில்
அம்மாவின் கருப்பைக்குள்
மறுபடியும் சுருண்டு படுப்பேன்...
கவளம் சோறது
கடிவாளமிடா பசிதன்னில்
அம்மாவின் நிலாச்சோறுக்கு
வானத்தை வெறித்துக்கிடப்பேன்...

எதிர் தோன்றும் வெள்ளைச்சுவர்
வானவெளியாய் மாறி என்னை
மனதினில் தோன்றியதை எல்லாம்
மறைக்காமல் எழுத வைக்கும்...
எழுதுகோல்கள் ஏதுமின்றி
ஒரு கையது தாடி கோதி
இன்னுமொரு கையது
காற்றிலேயே கவியெழுதும்...

புரியாத பாஷையில் நான்
புதிராய் பேசுவதாய்
புரியாமல் சொல்வோர்க்கெல்லாம்
எப்படி விளக்கமுடியும்?...
புதிதாய் ஒரு மொழியொன்று
எனக்கு மட்டுமே புரியுமென்று...

எல்லாம் தெரிந்தும்
ஏகமும் அறிந்தும்
எனக்கானதொரு வாழ்வை
நான் மட்டுமே வாழ்ந்தும்...

இந்த பச்சைநிற ஆடையும்
பைத்தியக்கார ஆஸ்பத்திரியும்
எனக்குள் என்னையே
பலமுறை கேட்கச்செய்கிறது...

நான்”... இது நான்தானா?...



9 comments:

  1. இப்போது எங்கே உள்ளீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... போனவாரம்தான் டிஸ்சார்ஜ் ஆகி வூட்டுக்கு வந்தேன்...
      ரொம்பத்தான் நக்கல் தலைவா உங்களுக்கு...!!! ;-)

      Delete
  2. நான்”... இது நான்தானா
    ??
    >>
    வாழ்த்துகள்/ இப்படி கேட்டதாலதான் பிரபல பதிவரா இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குப்பேருதான் வஞ்சப்புகழ்ச்சி அணியா அக்கா?...

      Delete
  3. கவிதையைப் படித்த பிறகு என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.....

    “நான்”...இது நான்தானா?...

    உள் மனதைத் தொட்டுவிட்ட உன்னதக் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ரசனைக்கும், மேலான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

      Delete
  4. கவிதை மிகவும் அருமை... நல்ல கேள்வி

    ReplyDelete
  5. நான்... நான் தானா?

    கவிதையில் கலக்கிவிட்டீர்கள்...

    நீங்கள் நீங்கதான்... போங்க...

    ReplyDelete