SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, August 19, 2013

தூத்தேறி... எப்போதான்டா திருந்துவீங்க?...


சமீபகால இந்திய அரசியலையும், ஆட்சிகளையும், ஊழல்களின் பலமுகங்களையும் பார்த்து பார்த்து வெறுப்படைந்துபோன ஒரு சாமான்ய மனதின் வெளிப்பாடு மட்டுமேயிது...

கிரிக்கெட்டா?...
இந்தியா கோப்பையை வெல்லவேண்டும்...

ஹாக்கியா?...
இந்தியா கோப்பையை வெல்லவேண்டும்...

ஒலிம்பிக்கா?...
இந்தியாவுக்கு நிறைய பதக்கங்கள் கிடைக்கவேண்டும்...

முன்னேறிய நாடுகளின் பட்டியலா?...
இந்தியாவும் அதில் இடம்பெயரவேண்டும்...

அரசியலா?...
ஊழல்களற்ற தலைவர்கள் மீண்டும் பிறந்து ஆளவேண்டும்...

எல்லைப்பாதுகாப்பா?...
சீனாவோ, பாகிஸ்தானோ, பங்களாதேஷோ... வாலாட்டுவது எவனாகயிருந்தாலும் அவன் வாலை ஒட்ட நறுக்கி இந்தியா ஒரு சிம்ம சொப்பனமாக திகழவேண்டும்...

சாலைகளும், கட்டிடங்களும், பாலங்களும்...
அமெரிக்கா போல, சிங்கப்பூர் போல, இங்கிலாந்து போல... இந்தியாவும் ஒளிர வேண்டும்...

இப்படி ஒவ்வொரு இந்தியனின் மனதுக்குள்ளும் தாய்நாடு மீதான ஆசைகள் அளவற்று நீண்டுகொண்டேயிருக்கும்...

 ஆனால் உண்மையில் நடப்பதென்ன?... எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டிய நாடு இன்னமும் விதவிதமான ஊழல்களில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்த்து மனதுக்குள்ளேயே வெம்பி வாழ்வதுதான் தலைவிதி என்று பழகிக்கொண்டோமா?...


இலவசங்களையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு தாய்நாட்டை சுரண்டும் அதிகாரத்தை நாம்தான் தாரை வார்த்துக்கொடுக்கிறோமா?...

நாட்டின் மீதான உண்மையான அக்கறையின்றி வெறுமனே தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக மட்டுமே பரபரப்பான செய்திகளைக்கொடுத்து மறந்துபோகிறதா மீடியாக்கள்?...

சுப்ரீம் கோர்ட்டின் கைகளும் நாடாளும் மன்றத்தினரால் கட்டப்பட்டுவிட்டால் இந்த நாட்டில் கேள்வி கேட்க ஆளேயில்லாமல் போகுமா?...

உண்மையிலேயே மக்களின் மீது... தாய் நாட்டின் மீது...அக்கறைகொண்ட அரசியல்வாதிகளோ... அரசியல் கட்சிகளோ... இன்னமும் ஏதாவது இந்த நாட்டில் மிச்சமிருக்கிறார்களா?...

கேரளாவில் சூரிய சக்தி ஊழல்...

பீகாரில் மணல் கொள்ளை..எஸ் அதிகாரி இடைநீக்கம்...

கர்நாடகாவில் சுரங்க ஊழல்...

தமிழகத்தில் கிரானைட் மற்றும் தாதுமணல் கொள்ளை..எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...

இன்னும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ஊழல்கள்...

சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நடந்த மெகா ஊழல்களை பட்டியலிடும் மிக முக்கிய லிஸ்ட் இந்தப்படம்... ஒருமுறை கிளிக்கி பெரிய சைஸில் பாருங்கள்... 2010வரை நடந்தவை மட்டுமே இது!

ஊத்தி மூடப்பட்டுவிட்ட பெரிய பெரிய மெகா ஊழல்கள்...
போபால் விஷவாயுக்கசிவு, போஃபர்ஸ் பீரங்கி ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக்குடியிருப்பு ஊழல், பங்குச்சந்தை ஊழல், பத்திரப்பேப்பர் ஊழல், காமன் வெல்த் ஊழல், ஓட்டுக்கு பணம் வாங்கிய மற்றும் கொடுத்த எம்.பிக்களின் ஊழல், ரெயில்வே உயர் பதவிக்கு லஞ்ச விவகார ஊழல், கருப்புப்பண பதுக்கல் விவகாரம், மாட்டுத்தீவன ஊழல், மருத்துவக்கல்லூரி அங்கீகார ஊழல், மும்பை தாக்குதலில் தெரியவந்த புல்லட் புரூஃப் ஜாக்கெட் ஊழல், இத்தாலியிலிருந்து ஹெலிகாப்டர் கொள்முதல் செய்யப்பட்ட ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், S-Band ஊழல், மதுகோடா  ஊழல், இத்யாதி, இத்யாதி ஊழல்கள்...

ஊத்தி மூடப்படவிருக்கும் 2ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல், இத்யாதி, இத்யாதி ஊழல்கள்...

ராபர்ட் வதேரா நில விவகார ஊழல் போல மாதாமாதம் புதிது புதிதாக புற்றீசல் போல தவறாமல் முளைத்துக்கொண்டேயிருக்கும் ஊழல்கள்...

வெறுமனே லிஸ்ட் போடப்படும் மெகா ஊழல்கள் மட்டும்தான் இவையே தவிர பத்து ரூபாயிலிருந்து லட்சம் கோடிகள் வரை இங்கே அந்தந்த மட்டத்திற்கு ஏற்ப நடந்து கொண்டேயிருக்கும் ஊழல்களும், ஊத்தி மூடப்பட்ட ஊழல்களும் லிஸ்ட் போடவே முடியாதளவு நீளக்கூடியவை...

இது மட்டுமின்றி எல்லையோர மாநிலங்களில் சொந்த மக்களின் மீதே அடக்குமுறை ஆட்சி...

எல்லா மாநிலங்களிலுமே ஏதோவொரு ரூபத்தில் ஜாதி அல்லது மத உணர்வைத்தூண்டி சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வசனங்களில் குளிர்காயும் ஓட்டு வங்கி அரசியல் கட்சிகள்...

போதாக்குறைக்கு ஏசி வாழ்க்கையிலேயே மூழ்கிக்கிடக்கும் மூடர்களெல்லாம் ஒரு நாள் வாழ்க்கைக்கு 35 ரூபாய் போதும், ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஒரு ரூபாய் போதும், ஐந்து ரூபாய் போதும்... என்று விதவிதமாக விளக்கமளித்து விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்... (அப்புறம் என்ன ...க்குடா கோடி கோடியா பணத்த சுருட்டுறீங்கன்னு இவங்க சட்டைய புடிச்சு கேக்கும் நாள் வரவே வராதா?... இவனுங்க ஆட்டைய போடுற பணத்தோட அளவையெல்லாம் கேள்விப்படும்போது இன்னும் நூறு தலைமுறைக்கு இவய்ங்க பரம்பரை பரம்பரையா உக்காந்து சாப்பிட்டு சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாக்கூட காலியாகாதளவு பணத்தைச்சேர்த்தும் இன்னமும் ஆட்டைய போட அலைஞ்சிட்டே இருக்கிறது எதுக்குன்னு வர்ற டவுட்டுக்கு இவங்ககிட்ட மட்டும்தான் விடை இருக்கமுடியும்னு நினைக்கிறேன்...)


வேலையின் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு லஞ்சம் பெற்ற காலங்கள் மறைந்து... வேலையைச் செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் சிறு துரும்புகூட அசையும் என்ற நிலையில் மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் லஞ்ச லாவண்யத்தில் நாறிக்கிடக்கிறது. பொதுமக்கள் நாமும் லஞ்சம் ஒரு குற்றம் என்ற விஷயத்தையே மறந்து, வேலை நடந்தால் போதும் என்று, சர்வசாதாரணமாக எல்லா விஷயங்களிலும் ‘’சார்... உங்க ஃபார்மாலிட்டி என்னவோ... அதைச்செய்ஞ்சிரலாம் சார்...’’ என்று கூறும் நிலைக்கு வந்தாகிவிட்டோம்...


அரசியல் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.
ஆன்மீகம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.
மருத்துவம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.
கல்வி சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.
குடிதண்ணீர்கூட சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

இன்னும் என்னவெல்லாம் மாறப்போகிறதோ?... மாற்றப்போகிறார்களோ?... மாற்றப்போகிறோமோ?... தெரியவில்லை...


ரூபாயின் மதிப்பு நாள்தோறும் அதளபாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருப்பதைப்பற்றி கவலைப்பட இங்கே பொருளாதார மேதைகள் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. ‘’பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள்... அப்போதுதான் பொருளாதாரம் உயரும்’’ என்று கூறும் நிதியமைச்சர் ‘’சாப்பிடுவதை நிறுத்துங்கள், துணி வாங்குவதை நிறுத்துங்கள்...’’ என்று பொருளாதாரத்தை சீர்திருத்த இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறாரோ தெரியவில்லை...!!! பத்தாக்குறைக்கு யாருமே இல்லாத டீக்கடையில இன்னும் யாருக்குடா டீ ஆத்துறேன்ற மாதிரி 2000... 4000... 10,000... 15,000... என்று வங்கிக்கிளைகளை திறந்து வக்கத்தபய நாட்டில் சாதனை ஆற்றிக்கொண்டிருக்கிறார்...!!!

பொருளாதாரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழியென்று மரபணு மாற்று பயிர் அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் அனுமதி, ஆறு மற்றும் நதி நீர் குத்தகை, வெளிநாட்டு நேரடி முதலீடு, தனியார் மயம் என்று விதவிதமாக சொந்த மண்ணை இன்னும் எத்தனை அந்நிய நிறுவனங்களுக்கு கூறுபோட திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை...!!!


பாகிஸ்தான் தலையைக்கொய்தாலும், சீனா உள்ளே புகுந்து ஆடினாலும், பங்களாதேஷ் பார்டர் தாண்டினாலும் தங்களைப்போலவே பொதுமக்களும் சூடு, சொரணை, மான உணர்வற்ற தேசிய ஜடங்களாக மாறி மௌனமாக இருக்கவேண்டும் என்றுதான் இவர்கள் எதிர்பார்க்கிறார்களா?... நாம் ஒரு தனிநாடு... யாருக்கும் பயந்துகிடக்க தேவையில்லை எனும் தைரியம் குட்டி குட்டி நாடுகளுக்கெல்லாம் இருக்கும்போது... திடமான முடிவெடுக்க முதுகெலும்பில்லாமல் பம்மிக்கிடப்பதுதான் ராஜதந்திரமா?...

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல மாநிலத்துக்கு மாநிலம் காவல்துறையின், அரசுத்துறையின் அலட்சியங்கள் சொந்த மக்களுக்கு இந்த நாட்டிலிருக்கும் பாதுகாப்பையும், மரியாதையையும் தோலுரித்துக்கொண்டேதானிருக்கிறது...


கொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும், கற்பழித்தாலும், ஆசிட் வீசினாலும், லஞ்சம் வாங்கினாலும், ஊழலில் திளைத்தாலும் ''இங்கே தண்டனை கிடைக்குமோ என்று பயப்படவே தேவையில்லை'' எனுமளவுக்கு சீரழிந்து கிடக்கும் துருப்பிடித்த சட்டங்களை சீர்திருத்த இங்கே யாருக்கும் அக்கறையிருப்பதாய் தெரியவில்லை...

மதத்தின் பெயரில், சாதியின் பெயரில் ஓட்டு வேட்டைக்கு எதை வேண்டுமானாலும் செய்யும் அரசியல் கட்சிகள் பாரபட்சமின்றி நாடு முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. மக்கள் பணத்தை எதிலெல்லாம் எவ்வளவெல்லாம் சுருட்டமுடியுமோ... அதிலெல்லாம், அவ்வளவெல்லாம் சுருட்டும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தெரு, வார்டு, வட்டம், மாவட்டம், மாநிலம் என்று நாடு முழுவதும் புழுத்துப்போய் கைகோர்த்துக்கிடக்கிறார்கள்...

ஆட்சி அதிகாரமும் அரசு ஊழியர்களும் கைகோர்த்தால் மட்டுமே இவர்கள் நினைக்கும் வழிகளில் எல்லாம் சம்பாதிக்க முடியும். அரசியல்வாதிக்கு துணைபோகாத அதிகாரிகளும், அதிகாரிகளை நேர்வழி செலுத்தும் ஆட்சியாளர்களும் இனி இந்த நாட்டுக்கு கிடைப்பார்களா என்பது எதிர்காலத்துக்குத்தான் வெளிச்சம்...


மாற்றம் ஒன்றுதான் மாற்றமே இல்லாதது என்பார்கள்... இங்கே ஊழலின் வழிமுறைகளும், அளவுகோலும்தான் மாறிக்கொண்டேயிருக்கிறதே ஒழிய ஊழல் மாறவே மாறாமல் மேல்சொன்ன கூற்றை பொய்யாக்கிகொண்டேதானிருக்கிறது...!

இவர்கள் அவர்களை குறை சொல்வதும், அவர்கள் இவர்களைக் குறை சொல்வதுமாய் நாடு முழுவதும் பாகுபாடின்றி கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்... மக்கள் சேவையெல்லாம் மலையேறி நாளாகிப்போய் ‘’அப்படின்னா என்ன?...’’ என்று கேட்கும் நிலை வந்தாகிவிட்டது...
குற்றம் புரியும் அரசியல்வாதிகள் பதவியிலிருக்க தடை போட நினைக்கும் உச்சநீதிமன்றத்தை எதிர்ப்பதிலும், எப்பேர்பட்ட குற்ற ஊழல்களையும் ஒரேயொரு விசாரணைக்கமிஷன் அமைப்பதன் மூலம் கல்லை கட்டி கடலில் போடுவதிலும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தங்களுக்கு விலக்கு அளிக்கவும், இலவசங்களை தடைசெய்யக்கூடாது என்று ஒற்றுமையாய் கர்ஜிப்பதிலும், பணம் சம்பாதிக்க மட்டுமே பதவி என்ற எண்ண ஓட்டத்திலும் கட்சி பேதமின்றி ஒரு சேர கடமையாற்றி ஜனநாயகத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன நமது அரசியல் கட்சிகள்...

ஒரு சாமான்யனாய் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...


நீங்கள் பணத்தையும் இலவசங்களையும் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டாலும் சரி... வாங்காமல் நேர்மையாக ஓட்டு போட்டாலும் சரி... உங்களை ஆள நினைக்கும் ஆட்சி அதிகாரத்துக்கு போட்டியிட தன்னலமற்ற தேசப்பற்றுமிக்க நேர்மைவாதிகள் உருவாகும்வரை... இங்கே கட்சிகள் வேண்டுமானால் மாறலாம்... ஆனால் காட்சிகள் ஒருபோதும் மாறவே மாறாது...


தூத்தேறி... எப்போதான்டா திருந்துவீய்ங்க?... என்று காறித்துப்பிவிட்டு வழக்கம்போலவே காத்திருப்போம்...

மீண்டும் சந்திப்போம்...!

நன்றி - படங்கள் Google

தொடர்புடைய இடுகைகள்...
10 comments:

 1. தூத்தேறி... எப்போதான்டா திருந்துவீய்ங்க?... என்று காறித்துப்பிவிட்டு வழக்கம்போலவே காத்திருப்போம்...

  ReplyDelete
 2. மிகப் பெரிய புரட்சி (பிரன்ச் புரட்சி ) வெடிக்காத வரை அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் மற்றும் திருவாளர் பொது ஜனம் திருந்த வாய்ப்பே இல்லை.

  ReplyDelete
 3. ம்ஹீம்... தேறுவது சிரமம் தான்...!!!

  ReplyDelete
 4. புலனாய்வு பத்திரிகை படிச்சமாதிரி இருந்தது1

  ReplyDelete
 5. இப்படியே கேள்வி கேட்டு நம்மளை நாமளே சமாதானம் பண்ணிக்கிட்டு போறாதாலதான் அவங்க இபடி இருக்காங்க!!

  ReplyDelete
 6. ethuthan kodanakodi appavi samaniya india makkalin athangam. Avargal solla ninaithu solla mudiyathathai neengal velipaduthi irukkireergal.nanum ungalil oruvan. Nandri-ganesan

  ReplyDelete
 7. உங்கள் கேள்வியில் இருக்கும் கோபம் புரிகிறது ! சாமானிய மக்களும் லஞ்சம் வாங்கி கொண்டுதான் ஒட்டு போடுவதற்கு கூட வருகிறார்கள் .என்ன செய்ய மக்கள் மனதில் நாட்டு பற்று இல்லை.வளர்ந்த நாடுகளை போல இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓராண்டு கட்டாய இராணுவ பயிற்சி இருந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 8. sathiyamaa namma naatai thiruthave mutiyaathu

  ReplyDelete
 9. ennai naane seruppala adichikitta mathiri irukku. anne! sollave vethanai.

  ReplyDelete