SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, August 2, 2013

பல்சுவை கதம்பம் - 1...


வீட்டில் பழைய புத்தகமொன்றை பரணில் ஏறி தேடிக்கொண்டிருந்தபோது 12 வருஷத்துக்கு முந்திய எனது டைரி ஒன்று கிடைத்தது... அதை ஒரு முறை புரட்டியபோது தினமும் நான்வாழ்க்கையில் இன்று புதிதாய் அறிந்து கொண்டது என்று நான் கேட்ட, படித்த, பார்த்த விஷயங்களையெல்லாம் எழுதியிருந்தேன்...

அட இதில் பல நல்ல விஷயங்கள் உள்ளதே... இதைப்போலவே நம் தளத்திலும் ஒரு தொகுப்பு அவ்வப்பொழுது எழுதினால் என்ன என்று ஒரு எண்ணம் உதயமானது...

என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது ஏற்கனவே மெட்ராஸ் பவன் சிவக்குமார் அவர்கள் ஸ்பெஷல் மீல்ஸ் என்ற பெயரிலும், சங்கவி அவர்கள் அஞ்சறைப்பெட்டி என்ற பெயரிலும், ராஜி அக்கா ஐஞ்சுவை அவியல் என்ற பெயரிலும் இன்னும் பற்பல பதிவர்கள் பற்பல பெயர்களிலும் எழுதி வருவது ஞாபகத்துக்கு வந்தது...

சரி... நமக்கு இருக்கவே இருக்கிறது நமது தளத்தின் பெயர் என்ற யோசனையில் இது போன்ற தொகுப்புக்கு “பல்சுவை கதம்பம்என்று பெயர் சூட்டியிருக்கிறேன்...

இன்று முதல் ஆரம்பம்... “பல்சுவை கதம்பம்”...

கதம்பத்தின் முதல் பூ : ஒரு குட்டிக்கவிதை / ஹைக்கூ...


எத்தனை முறை அடித்தாலும்
கோபப்படுவதேயில்லை...
அலையிடம் கரை

கதம்பத்தின் இரண்டாம் பூ : அப்படியா?...

ENT ஸ்பெஷலிஸ்ட்டாக்டருக்கு மட்டுமே பொருத்தமானதல்ல இந்தப்பெயர்...

பல சின்ன விஷயங்களையும் கண், காது, மூக்கு வைத்துப்பேசும் குணம் கொண்ட மனிதர்களுக்கும் இந்தப்பெயர் மிகச்சரியான பொருத்தமே...

கதம்பத்தின் அடுத்த பூ : தத்துவம் நம்பர்-5001...!!!உன் நிழலை நீகண்ணே... மணியே...’ என்று துரத்திச்சென்றால் அது உனக்கு போக்கு காட்டிக்கொண்டு போய்க்கொண்டேதானிருக்கும். ‘ச்சீ... போ...’ என்று திரும்பி நடந்தால் உன் பின்னாலேயே வரும்!!!

கதம்பத்தின் அடுத்த பூ : நான் ரசித்த பாடல்...

ஒரு திருக்குறள்...

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு  வாழ்வார்க்கு உரை

இதன் அர்த்தம் ஒரு காதலி தன்னைப்பிரிவதாகச்சொல்ல வந்த காதலனிடம் சொல்வதாக அமைந்தது...

நீ என்னைப்பிரிந்து செல்லாதிருப்பாயானால் எனக்குச்சொல்... பிரிந்து சென்று விரைவில் வருவாய் என்று சொல்ல விரும்பினால் அதுவரை உயிர் வைத்துக்கொண்டிருப்பவர்க்குச்சொல்என்று அர்த்தம்... (என்னே அருமை... திருக்குறளின் சிறப்பே தனிதான்... உலகப்பொதுமறை என்று சும்மாவா சொல்லியிருப்பார்கள்!!!)

கதம்பத்தின் அடுத்த பூ : அறிந்து கொள்ளுங்கள்...

இந்த சமுதாயத்தில் எல்லோருமே கோபம், பொறாமை, பெருமை, ஆசை என்று விதவிதமான முகமூடிகளை அணிந்துகொண்டுதான் வாழ்கிறார்களே தவிர யாருமே தங்கள் இயல்பான முகத்தோடு, குணத்தோடு வாழ்வதாகத்தெரியவில்லை...


முடிந்தவரை இது போன்ற முகமூடிகளை கழற்றிவிட்டு நாம் நாமாகவே வாழப்பழகிக்கொள்ளவேண்டும்... மனம் மிகவும் எளிமையாகும் பொழுது, ஒருவித அழகு மற்றும் கருணை உங்கள் இருப்புநிலையில் எழும்பி, எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப்போல ஆச்சர்யத்துடன் பார்க்கத்தொடங்குவீர்கள்... தொடர்ந்து ஒரு பேரமைதி, பேரானந்தம் மனதில் குடிகொள்ளுமாம்...!!!

நம் வாழ்க்கையில் நாம் பார்க்கும் எல்லா மனிதர்களும் அறிமுகமில்லாதவர்களேயொழிய அந்நியர்களில்லை”... என்பதை மனதில் நிறுத்திக்கொண்டால் அனைவரிடமும் சகஜமாகப்பழகி நட்பாகி வாழுமொரு சூழ்நிலையைப்பெறலாம்...

கதம்பத்தின் கடைசிப்பூ : நாட்டு நடப்பும்... முணுமுணுப்பும்!

நாட்டு நடப்பு - சில தினங்களுக்கு முன் சென்னை வந்திருந்த அகில இந்திய மோட்டார் காங்கிரசின் அதிமேதாவித்தலைவர் சென்னை நகருக்குள் 24மணிநேரமும் லாரிகளை அனுமதிக்கவேண்டும். இல்லாவிட்டால் வெகுவிரைவில் லாரிகள் அனைத்தையும் நிறுத்தி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்...

முணுமுணுப்பு – ஏற்கனவே நாங்கெல்லாம் டிராபிக்ல சிக்கி சின்னாபின்னமாகி உடம்புல BP  எகிறிப்போய் கிடக்குறோம்... இப்பவே அங்கங்கே தண்ணீ லாரிக்காரங்களும், மணல் லாரிக்காரங்களும் ஜனங்களை நசுக்கிக்கிட்டு இருக்காங்க... இதுல நீங்க வேறயா?... பேசாம மக்கள் தொகை கட்டுப்பாட்டு இன்சென்டிவ் ஏதாவது இருந்திச்சின்னா அதை லாரிக்காரங்களுக்கு கொடுக்கலாமோ?...!!!
                 ------------------------------------------------------
நாட்டு நடப்பு – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளால் பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரம் பறிக்கப்படுவதாக அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி ஒருமித்த கண்டனம்...

முணுமுணுப்பு – பின்னே இருக்காதா என்ன?... ஓட்டு போட்டவங்களே ஓரமா உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கும்போது சுப்ரீம் கோர்ட்டு மட்டும் அப்பப்போ செக் வச்சா எப்படி?... நாம ஆயிரம்தான் அடிச்சிக்கிட்டாலும், முறைச்சிக்கிட்டாலும்... நாம எல்லாம் ஒரே சாக்கடையில ஊறுன மட்டைங்கதானே?...!!!
                ----------------------------------------------------------
நாட்டு நடப்பு – பயங்கரவாதத்தை பாரதீய ஜனதா சகித்துக்கொள்ளாது- அத்வானிஜீ...

முணுமுணுப்பு – பின்னே வழக்கமாக நாங்கதான் அதெல்லாம் பண்ணுவோம்... இப்போ எங்கே மேலயே அதெல்லாம் திரும்புனா எப்படி சகிச்சிக்கமுடியும்?...!!!
                ---------------------------------------------------------------
நாட்டு நடப்பு – தனித்தெலுங்கானா அறிவிப்புக்கு காங்கிரசில் எதிர்ப்பு வலுக்கிறது... மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும் ராஜினாமா முடிவு!

முணுமுணுப்பு – முன்ன போனா கடிக்குது... பின்ன போனா உதைக்குது... பாவம்தான் சோனியாஜீ... (அவரோட ஆல் இன் ஆல் அரசியல் ஆலோசகர் இதுக்கு என்ன ஐடியா குடுப்பாரு?...!!!)
                   ------------------------------------------------------
நாட்டு நடப்பு – தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு... சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

முணுமுணுப்பு – நாமளே கேள்வி கேக்கவேண்டிய பல இடத்துல தூங்கிட்டும், பலான படம் பாத்துக்கிட்டும் கம்முனு டைம் பாஸ் பண்ணிட்டு வர்றோம்... நம்மள அடுத்தவங்க கேள்வி கேக்கிறதா?... என்னவொரு ஆணவம்... யாரங்கே... மாத்துங்கடா சட்டத்தை!!!
                    -------------------------------------------------------
நாட்டு நடப்பு – இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்.

முணுமுணுப்பு -  ஆமாமாம்... அவரு எழுதுறதுக்கு முன்னாடி நாம எழுதிரனும் இல்லையா?... இல்லேன்னா யாரால நடந்திச்சுன்னு பின்னால குழப்பம் வருமே... வரலாறு முக்கியம் அமைச்சரே!!!
                    --------------------------------------------------------------

என்ன மக்களே... நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை நீங்களும் தெரிந்துகொண்டதோடு பல்சுவையையும் சுவைத்தீர்களா?... 

என்ஜாய்... மீண்டும் சந்திப்போம்...!!!


7 comments:

 1. மொத்தமும் ரசித்தேன்.
  அந்த குட்டிக்கவிதையும் குறளும் இன்னும் அழகு.

  ReplyDelete
 2. இப்பதாங்க நீங்க முழுப்பதிவர் ஆகி இருக்கீங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வித்தியாசமான கதம்பம்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. கதம்பம் சிறப்படைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. என்னாது பாராளுமன்ற அதிகாரமா ?

  கொய்யால அங்கே இருக்குற நீங்க எல்லாமே களவானி பயலுகன்னு எங்களுக்கு தெரியாதா என்ன ?

  கதம்பம் கமகம.....

  ReplyDelete
 6. நாட்டு நடப்பு - முணுமுணுப்பு அருமை....

  கதம்பம் சிறக்கட்டும்...

  ReplyDelete