SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, July 8, 2013

பேரணி, மாநாடு, மண்ணாங்கட்டியெல்லாம் எதுக்கு?...

ஒவ்வொருத்தருக்கும் தனது புஜபல படைபலத்தை காண்பிக்க கிடைத்தது தலைநகரம் சென்னைதான் போல...

சாதிச்சங்கமாகட்டும், மதக்கூட்டங்களாகட்டும், அரசியல் கட்சிகளாகட்டும்...  இவைகள் ஆளும் கட்சிக்கும், மீடியாக்களுக்கும் தங்களது செல்வாக்கை காட்டவும், அடுத்த தேர்தல்களில் தங்களது மார்க்கெட் வேல்யூவை கூட்டிக்கொள்ளவும், கூட்டத்தை கூட்டி சென்னையை ஸ்தம்பிக்க வைத்தாக வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை...

இந்தக்குற்றச்சாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, இந்த மதம், அந்த மதம், இந்த சாதி, அந்த சாதி, இந்த சங்கம், அந்த சங்கம் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லை... இது காலம் காலமாக அனைத்து கூட்டங்களுமே செய்து வரும் வேலைதான் என்பதால் இது தனிப்பட்ட எவரையும் குற்றஞ்சாட்டாமல் பொதுமக்களின் பார்வையிலான குமுறல் மட்டுமே...

அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்புவதாக எண்ணி, பேரணி, மாநாடு என்று பொதுமக்களின் பொன்னான நேரத்தை, போக்குவரத்தை முடக்கி வீணாக்குவது சரிதானா?... இவர்களது புஜபல புண்ணாக்குத்தனங்களை காட்ட வேறு வழியேதுமில்லையா?...

உங்களது ஆள்பலத்தை நீங்கள் தாராளமாய் கூட்டம் கூட்டி காட்டுங்கள்... அதை கூடாது என்று சொல்ல எந்த சாமான்யனுக்கும் உரிமையில்லைதான்... ஆனால் அதை சென்னைக்குள் வந்து உயிரை எடுக்காமல், செங்கல்பட்டுக்கு முன்னாலேயே எங்காவது மாநாடு போட்டு, பிரம்மாண்ட பந்தல் போட்டு கூட்டத்தை கூட்டி காண்பியுங்கள்... அங்கு கூடும் கூட்டம் நிச்சயம் நீங்கள் யாருக்கெல்லாம் தெரியவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கெல்லாம் தெரியும்.

உங்களது கோரிக்கைகளை வலியுறுத்த பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருங்கள்...

கூட்டமில்லாமல் முக்கியமானவர்கள் மட்டும் வந்து மனு கொடுக்க வேண்டிய இடங்களில் எல்லாம் மனுவைக்கொடுங்கள்...

உங்களது கோரிக்கைகளை ஊடகங்களில் செய்தியாய் பரப்புங்கள்...

உங்களது கோரிக்கைகளை சட்ட ரீதியாக வெற்றி பெறச்செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள்...

இப்படி இன்னுமின்னும் ஆயிரம் வழிமுறைகள் இருக்கும்போது அரசின் கவனத்தை ஈர்ப்பதாய்க்கூறிக்கொண்டு, உங்களது பலத்தைக்காட்ட கண்டணப்பேரணி, அது, இது என்று மாநகரங்களுக்குள் மக்களின் நேரத்தையும், பொறுமையையும் சோதிக்காதீர்கள்...

போன கல்வியாண்டில் பொதுச்சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் விளைவிக்காமல், பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் செய்யாமல், மத்திய மாநில அரசுகளையும், அனைத்துவித அரசியல் கட்சிகளையும்  திரும்பிப்பார்க்கச்செய்த மாணவர் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றதே அது போராட்டம்... அந்த போராட்டத்தின் வீரியவெற்றிக்கும் அவர்கள் கடைபிடித்த, பொதுமக்களை முகத்தை சுழிக்கச்செய்யாத போராட்ட வழிமுறைதான் மிகப்பெரிய காரணம் என்பது நிதர்சனம்...

ஆனால் உங்களுக்கு அது போன்ற போராட்ட வழிமுறைகள் ஒருபோதும் பிடிக்காது... உங்களது உண்மை தேவை நீங்கள் சார்ந்த, உங்களைச்சார்ந்த மக்களின் கோரிக்கையின் மீதான வெற்றியல்ல... உங்களது தேவை... கிடைக்கும் காரணங்களை வைத்துக்கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது மட்டும்தான்...

முதல் மாங்காய்:- நீங்கள்தான் அவர்களது கோரிக்கையை வென்றெடுக்கவும், அவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களின் பின்னால் ஆதரவாய் நிற்கப்போகிறவரென்றும்... உங்களைச் சார்ந்த, உங்களை நம்பி உங்கள் பின்னால் கூடும் கூட்டத்தின் ஓட்டு வங்கியை தக்கவைத்து கொள்ளலாம்...

இரண்டாவது மாங்காய்:- பொது ஜன ஊடகங்களுக்கும், இன்னபிற அரசியல் கட்சிகளுக்கும் உங்களிடம் இருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கையை, ஓட்டு வங்கியாய் காட்டி உங்களது அரசியல் மார்க்கெட் வேல்யூவை உயர்த்திக்கொள்ளலாம்...

யாரும் தங்களது கோரிக்கைகளுக்காக போராடக்கூடாது என்பதல்ல...

யாரும் அரசுக்கு தங்களது கோரிக்கைகள் உரைக்கும் வண்ணம் கண்டனப்பேரணிகள் நடத்தக்கூடாது என்பதல்ல...

யாரும் தங்கள் பலத்தை சுயபரிசோதனை செய்து கொள்ளவும், பிறர் அறியச்செய்யவும் மாநாடுகள் நடத்தக்கூடாது என்பதல்ல...

இதையெல்லாம் தாராளமாய் செய்யுங்கள்... ஆனால் அவற்றின் உண்மை நோக்கம் மாறாமல், உங்களைச்சார்ந்த மக்களுடைய கோரிக்கையின் உண்மையான வெற்றிக்கான வழியில்... உங்களது ஆள்பலத்தை பிறருக்கு காட்டும் சுயநலமில்லாமல், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சரியான வழிமுறைகளில் செய்யுங்கள்...

இவர்களை ஆபத்பாந்தவனாக நினைத்து பல்வேறு இடங்களிலிருந்தும் பொழைப்பை கெடுத்து, இவர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் வரும் இவர்களைச்சார்ந்த சாமான்யர்களும் கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும்... உங்கள் சாதிப்பற்றை, மதப்பற்றை, அரசியல் பற்றை உங்களது தலைவர்களுக்கு தயவு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வழிகளில் நிரூபியுங்கள்...

பேரணிக்கும், மாநாடுக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் ஆளும் அரசாங்கம் அனுமதி மறுத்தால் அதற்கும் ஆயிரம் அரசியல் காரணங்கள் கற்பிக்கப்படும். பேசாமல் நீதிமன்றங்களே இது போன்ற விஷயங்களை நகரங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று நிரந்தர தீர்ப்பளித்தால் அது பாகுபாடில்லாமல், கூட்டத்தை கூட்டும் அனைவருக்குமான கடிவாளமாக இருக்கும்...

வேலைக்கு போகிறவன், வீட்டுக்கு போகிறவன், படிக்கப்போகிறவன், ஆஸ்பத்திரிக்கு போகிறவன் என்று அவனவனுக்கு ஆயிரம் வேலைகள்... ஏற்கனவே நகரத்தின் வாகன நெரிசலில் சிக்கித்திணறி, முழி பிதுங்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம்...


இனியும் தயவுசெய்து பேரணி, மாநாடு, மண்ணாங்கட்டின்னு ஏன்தான் நம்ம உயிரை எடுக்கிறாங்களோ?... என்று எங்களை முனுமுனுக்கச்செய்து வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளாதீர்கள்...6 comments:

 1. குமுறல்கள் உண்மை தான்... பொதுமக்களைப் பற்றி இவர்களுக்கு நினைப்பு இருக்கிறதா என்ன...? ..ம்...

  ReplyDelete
 2. நல்ல யோசனைதான். ஆனா, சம்பந்தப்பட்டவங்கலாம் யோசிப்பாங்களா?!

  ReplyDelete
 3. உண்மை... நம்ம ஊரு அப்படித்தான் நாம் தான் இதைஎல்லாம் ஏத்துக்கும் பக்குவத்துக்கு வரனுங்க..

  ReplyDelete
 4. போக்குவரத்தை செயலிழக்கச் செய்வதுதனே அவர்கள் நோக்கம்!

  ReplyDelete
 5. தவறான பார்வை... போராட வைப்பதே அட்சியாளர்கள் தானே அவர்கள் முதலில் யோசிக்கட்டும்

  ReplyDelete
 6. இதில் மானம் கெட்டதுகள் நமது பொது ஜனம்தானே. அந்தக் கூட்டத்தில் கட்சி தலைவர்கள் தவிர மற்றவர்கள் யார்? இவர்களுக்கு வேலைவெட்டி என்றிருந்தால் இந்த எந்த வேலைவெட்டியும் இல்லாத தலைவர்கள் கூப்பிட்டால் நமது பொது ஜன நாய்கள் ஓடுமா? எல்லாம் அங்கே கிடைக்கும் எச்சில் பிரியாணிக்கும் குவாட்டருக்கும்தானே? இது தெரிந்துதானே நமது ஊதாரித் தலைவனுங்க அவனுங்களை தைரியமாக கூப்பிடுகிறார்கள்?

  ReplyDelete