SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, July 4, 2013

நான்... - இது நானல்ல!!!

காலையில எழுந்திச்சு கதவைத்திறந்ததும் பெரும்பாலும் அப்பாவோட மூஞ்சிலதான் முழிக்கவேண்டியிருக்கும். அம்மா எப்பவுமே லேட்டாத்தான் எழுந்துப்பாங்கன்றதால ஒருசில நாள்தான் அம்மாவோட முகத்தில முழிப்பேன். எங்க வீட்ல நான்தான் மூணாவது புள்ளை. மூத்தது அக்கா, ரெண்டாவது அண்ணன், மூணாவது நானும் பொண்ணு. காலையில நான்தான் முதல்ல எழுந்துக்கனும்ன்றது எங்க வீட்டு ரூல்ஸ்.!

அப்பா எழுந்து வந்ததும் அவருக்கு முதல்ல நியூஸ் பேப்பரை எடுத்துக்கொடுத்திரனும்... இல்லேன்னா காலையிலேயே அவருகிட்ட அநாவசியமா வாங்கிக்கட்டிக்க வேண்டியது வரும்.

நியூஸ் பேப்பரை கையில வாங்கின அப்பா  ‘வெரிகுட்... டெய்லி இப்படித்தான் இருக்கனும். நான் கேக்காமலேயே பேப்பரை எடுத்துட்டு வந்து குடுக்கனும். காலையிலேயே அநாவசியமா என்ன கத்த வைக்கக்கூடாது... குட் கேர்ள்’... என்று தலையை செல்லமாக தட்டினார்.

சரி... நான் பேப்பர் படிக்கனும். நீ போய் உன் வேலையப்பாரு’’, என்றார்.
இதுக்கு மேல அவர்கிட்ட நின்னோம்னா தேவையில்லாம அவருக்கு டென்ஷன் ஏறும்ன்றதால அங்கயிருந்து இடத்தைக்காலி பண்ணினேன்.

ராத்திரியெல்லாம் சரியான தூக்கமே இல்லை. உடம்பெல்லாம் அடிச்சிப்போட்ட மாதிரி இருந்திச்சு. கொஞ்சநேரம் அப்படியே கண் அசரலாம்னு படுத்தாக்க... அதுக்குள்ள அம்மா எழுந்து வந்திட்டாங்க. காயப்போட்டு மடிச்சி வச்சிருந்த துணியெல்லாம் கலைஞ்சு கெடக்கிறதப்பாத்துட்டு ‘’ ஏய்... இங்க வாடி’’ன்னு கத்துனாங்க.

பயந்துகிட்டே அவங்க முன்னாடி போய் நின்னேன்.

இது யாரு வேலை?... ன்னு டென்ஷனா கேட்டாங்க.

‘’சத்தியமா நான் இழுத்துப்போடலம்மா... அக்காவும் அண்ணனும்தான் நைட்டு படுக்கிறதுக்கு முன்னாடி அதையெல்லாம் கலைச்சுப்போட்டு விளையாண்டுட்டு இருந்தாங்க’’ன்னு கத்தனும்போல இருந்தாலும், அம்மாவுக்கு அவங்க ஏதாவது கேக்கும் போது எதிரே பேசுறது பிடிக்காதின்றதால அவங்க முன்னாடி பேசாம வாய மூடிக்கிட்டு பயந்துகிட்டே நின்னேன்.

ஏற்கனவே அம்மாவுக்கு என்னைய அவ்வளவா பிடிக்காது. அக்கா மேலேயும், அண்ணன் மேலேயும் வச்சிருக்கிற பாசத்துல பாதிகூட அவங்களுக்கு என்மேல கெடையாது. வீட்டுல அக்காவுக்கும் அண்ணனுக்கும் தனிரூம். எனக்கு தனிரூம். சிலநேரத்துல அக்காவும் அண்ணனும் அவங்களா பிரியப்பட்டு என்னையும் அவங்க ரூம்ல படுக்க வைச்சிக்கிட்டாகூட அம்மா வந்து பாத்தாங்கன்னா அவங்களையும் திட்டி, என்னையும் திட்டி, என்னைய என் ரூமுக்கு போய் படுக்கச்சொல்லிருவாங்க. சாப்பாடுகூட அவங்களுக்கு வேற... எனக்கு வேறதான்... அவங்க சாப்பிடும்போது அந்தப்பக்கம் நான் போயிட்டேன் அவ்வளவுதான்... ‘’இங்கே ஏன்டி வந்தே?’’ன்னு அம்மா என்னைக்கொல்லாத குறையா அங்கேயிருந்து துரத்துவாங்க...

இன்னைக்கு காலையிலேயே எனக்கு நேரம் சரியில்லைன்னுதான் சொல்லனும். துணி கலைஞ்சுகிடந்ததால அம்மாவோட கோவம், எனக்கு அவங்ககிட்ட ரெண்டு அடியைத்தான் வாங்கிக்கொடுத்திச்சு. கையாலதான் அடிச்சாங்க... பரவாயில்லை. சிலநேரத்துல அம்மா ரொம்ப கோவமா இருந்தாங்கன்னா பிரம்ப எடுத்து விளாசிருவாங்க. அக்காவும், அண்ணனும் தப்பு பண்ணாக்கூட அவுங்களுக்கும் அதேதான் கதி.

அம்மா என்னைய அடிச்சதப்பாத்த அப்பாவுக்கு கொஞ்சம் கோவம். அம்மாவிடம் முறைத்தார்.

‘’ஏண்டி, உனக்கு காலையிலேயே அவளை அடிக்கலைன்னா பொழுது விடியாதாடி?...அவளும் நம்ம பொண்ணு மாதிரிதானடி?...’’

எல்லாம் எனக்குத்தெரியும். உங்க வேலையப்பாருங்க...” இதுக்குமேல அப்பா பேசமாட்டார்ன்றது பலநாள் அனுபவத்தில நானே பார்த்திருக்கேன். அடிக்கடி அப்பா என்னைப்பற்றி அம்மாவிடம் பேசும்போது ‘’அவளும் நம்ம பொண்ணு மாதிரிதானடி?...’’ என்பார். என்னுள் ஏகப்பட்ட கேள்விகளை எழச்செய்யும் வார்த்தைகள் அவை. எனது சின்ன வயதுக்கு அது அவ்வளவாய் புரியவில்லை. இருந்தாலும் இந்த வீட்டில் அக்காவுக்கும் அண்ணனுக்கும் இருக்கும் மதிப்பும் பாசமும் எனக்கு இருப்பதில்லை, என்பது பலநாளாக என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயம்தான்.
அக்காவும் அண்ணனும் எழுந்து குளித்து ரெடியாகி ஸ்கூலுக்குப்புறப்பட்டனர்.

காலையிலிருந்து என்னைக்கண்டுக்காமலே இருந்தவங்க ஸ்கூல் பஸ்ல ஏறப்போகும்போது மட்டும் என்னைப்பார்த்து ‘’பை...பை…’’ என்று டாட்டா காட்டினர். என் வயித்தெரிச்சலை கொட்டிக்கனும் என்பதாலா என்னவோ தெரியவில்லை...!

பெரும்பாலும் அக்காவும் அண்ணனும் ஸ்கூலுக்குப்போனபிறகுதான் அம்மா எனக்கு காலை உணவே தருவார். சில நாள் காலையில பட்டினிதான். ஸ்ட்ரைட்டா மத்தியான சாப்பாடுதான்.

அக்காவும், அண்ணனும் ஸ்கூலுக்குப்போனதும், பின்னாடியே அப்பாவும் வேலைக்கு கெளம்பிப்போனதும், அம்மா அவங்க வேலையில பிஸியாயிடுவாங்க. அப்போ ஒரு ரெண்டு மணிநேரத்துக்கும் மேல எனக்கு நல்லா ரெஸ்ட் கிடைக்கும். சரி... இதுக்கு மேல அம்மா கண்ணுல படக்கூடாதுன்னு நைசா என் ரூமுக்கு போய் படுத்துக்கிட்டேன். ராத்திரி சரியா தூக்கமே வராததுனால, போய் படுத்ததும் அசந்து தூங்கிட்டேன்.
காலிங் பெல் ரொம்ப நேரமா அடிச்சிட்டு இருக்கிற சத்தம் கேட்டு முழிச்சேன். மணி கிட்டத்தட்ட மதியம் ஒன்னு இருக்கும்னு நெனக்கிறேன்.

‘’ஏய்... யாரு வந்திருக்காங்கன்னு பாருடி... நான் இதோ வர்றேன்...’’ அம்மாவின் சத்தம் கிச்சனிலிருந்து கேட்டது.

இதுக்கும் மேல படுத்துக்கிடந்தேன்னா அம்மாகிட்ட வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும் என்பதால் யார் வந்திருக்கிறதுன்னு பாக்கிறதுக்காக அவசரமா மெயின் கேட்டுகிட்ட ஓடினேன்.

வாசல்ல கேட்டுக்கு வெளியில கீதா ஆண்ட்டி நின்னுகிட்டு இருந்தாங்க. அம்மாவோட சின்ன வயசு ஸ்கூல் ஃபிரெண்டு. எப்பவாவது ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை வருவாங்க. அம்மாவும் அவங்களும் மணிக்கணக்கா உக்காந்து அவங்க சின்னவயசு கதையெல்லாம் பேசிக்கிட்டேயிருப்பாங்க. நான் யோசிச்சிட்டு இருக்கும்போதே அம்மா வந்திட்டாங்க.

‘’ஏய் வாடி... எப்படிடீ இருக்கே?... நான் கிச்சன்ல இருந்தேன்டி’’...என்றபடியே கேட்டைத்திறந்து விட்டார்.

கீதா ஆண்ட்டி உள்ளே வந்ததும் என்ன கிட்டவரச்சொல்லி கூப்பிட்டாங்க. அவளை ஏண்டி கூப்பிடுறே?... வா நாம கிச்சனுக்கு போயிறலாம்... என்ற அம்மாவின் பேச்சை பொருட்படுத்தாமல் ஆண்ட்டி மறுபடியும் என்னைய கூப்பிட்டாங்க. அவங்ககிட்டப்போயி பேசாம நின்னேன். என் தலையைக்கோதியபடியே ‘’நல்லா வளந்திட்டாள்ல?...’’ அப்பிடின்னு அம்மாகிட்ட கேட்டாங்க ஆண்ட்டி. அம்மாவுக்கு அவுங்க ஃபிரெண்டுங்க முன்னாடி மட்டும் என்மேல கொஞ்சமாவது பாசம் வரும்.

‘’ஏய்... ஆண்ட்டி உன் மேல எவ்வளவு பாசாமாயிருக்காங்க?... நீ என்னடான்னா கம்முன்னு நிக்கிறே?... ஆண்ட்டிக்கு கை கொடுத்து விஷ் பண்ணு...’’ அம்மாவின் முறைப்புக்கு பயந்து ஆண்ட்டிக்கு கை கொடுத்தேன்.

‘’குட் கேர்ள்...’’ அம்மாவிடமிருந்து இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டும்தான் பாராட்டு வாங்கமுடியும். மதியம் எனக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு அம்மாவும் அவங்க ஃபிரெண்டும் சாப்பிட்டிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் கம்முன்னு போயி வராண்டாவுல உக்காந்துக்கிட்டேன்.

சாயந்திரமாச்சு... வாசல்ல ஸ்கூல் பஸ் ஹார்ன் சத்தம் கேட்டதும் அம்மா வந்து கேட்டைத்திறந்து பஸ்கிட்ட போனாங்க. அக்காவும், அண்ணனும் பஸ்சிலேர்ந்து இறங்கினதும் அவங்களோட லன்ச் பேக்கை நான் வாங்கிக்கிட்டேன். எல்லாரும் நடந்து வீட்டுக்குள்ள போனோம். லன்ச் பேக்கை சோபாவுக்கு அருகில் இருந்த சின்ன மேஜையில் வைத்து விட்டு நான் தள்ளி நின்று கொண்டேன்.

கீதா ஆண்ட்டிதான் அம்மாவிடம்ஏய் பாவம்டீ...அவளை ஏண்டி லன்ஞ்ச் பேக் சுமக்கவைக்கிறே?...’ என்றார்கள்.

''ஏன்?... சுமந்தா என்ன தப்பு... தெண்டமாத்தான இருக்கா இந்த வீட்டுல... இதக்கூடச்செய்யக்கூடாதா என்ன?...’’ அம்மாவின் குரலே கீதா ஆண்ட்டிக்கு என்னவோ போலாயிற்று. பாவம் எனக்காக பரிந்துபேசி அவங்களுக்குச்சங்கடம். ஆனா இந்த லன்ஞ்ச் பேக்கை நான் தூக்கிட்டு வரலைன்னா எத்தனை நாள் அம்மாகிட்ட அடி வாங்கியிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்...

அக்காவும், அண்ணனும் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிமுடிச்சிட்டு கொஞ்சநேரம் விளையாண்டாங்க. அம்மா டெய்லி டி.வி.சீரியல் எல்லாம் பாக்கும்போது மட்டும் அக்காவையும் அண்ணனையும் வெளையாடச்சொல்லி தோட்டத்துக்கு அனுப்பிருவாங்க. அப்போ மட்டும் அக்காவும் அண்ணனும் அவங்ககூட என்னையும் விளையாட சேத்துப்பாங்க. அதுமட்டும்தான் எனக்கும் வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிமிடங்கள்னு சொல்லலாம். விளையாடி முடிச்சிட்டு அக்காவும் அண்ணனும் டி.வி.பாக்க போயிட்டாங்க. எனக்கு டி.வி.பாக்க பெர்மிஷன் கிடையாதுன்றதால நான் தனியா வராண்டாவுலேயே உக்காந்துகிட்டேன்.

அப்பா வேலையிலிருந்து வந்திட்டார். எவ்வளோ டயர்டா வந்தாலும் வீட்டுக்கு வந்ததும் என்னையக்கொஞ்சாம அடுத்த வேலையச்செய்யமாட்டார். அப்பாவுக்கு மட்டும்தான் என்மேல பாசம் அதிகம்.

அப்பா வாசல்லேயே என்னையக்கொஞ்சிட்டு இருந்ததைப்பார்த்ததும் அம்மாவுக்கு கோவம் ஜாஸ்தியாயிடுச்சு... கன்னாபின்னான்னு கத்துனாங்க. அப்பாவும் என்கிட்டஅவ அப்படித்தான்... சும்மா கத்திக்கிட்டே இருப்பா... நீ எதையும் மனசுல வச்சிக்காத, மத்தியானம் சாப்பிட்டியா இல்லையா?... என்று என்னிடம் வாஞ்சையாக விசாரித்தார்.
பலநாட்கள் இது நம்ம வீடு இல்லை...இவங்க நமக்கு அப்பா அம்மா இல்லை... இங்கேயிருந்து போயிரலாமா?... ன்னு நான் யோசிக்கும் போதெல்லாம் அப்பாவின் பாசம்தான் என் கண்ணுக்குள் வந்து நின்று என்னைத்தடுக்கும்.

டெய்லி நைட் டின்னரெல்லாம் முடிஞ்சி, அக்காவும் அண்ணனும் தூங்குனதுக்கப்புறம், அப்பாவும் அம்மாவும் மட்டும் வராண்டாவுல உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பாங்க. நானும் அப்போ கொஞ்ச தூரத்துல அவங்களைப்பாத்துக்கிட்டே உக்காந்துகிட்டு இருப்பேன். இன்னைக்கும் அப்பிடித்தான்... அப்பாதான் முதல்ல பேச்சைத்தொடங்கினார்.

ஏன்ப்பா... இவ சாப்பிட்டாளா?...

ஏன்ங்க... நம்ம பசங்க சாப்பிட்டாங்களான்னு ஒரு நாளுகூட கேக்க மாட்டேங்குறீங்க?... ஆனா இவள மட்டும் அக்கறையா கேக்குறீங்க?... எனக்கு ரொம்ப கோவம்தான் வருது. நான் வேண்டாம்... வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் எங்கேயோயிருந்து இழுத்துட்டு வந்து இந்த சனியன என் தலையில கட்டுனீங்க. இப்போ இதுக்கும் சேத்து நான் வடிச்சிக்கொட்ட வேண்டியிருக்குது. பேசாம இவள எங்கயாவது கொண்டு போய் விட்டுட்டு வந்திட்டீங்கன்னா நிம்மதிங்க...

அப்படியெல்லாம் பேசாதப்பா... அவளும் நம்ம குழந்தைதான்... வளர்ந்திட்டான்னா எல்லாம் சரியாயிரும்அவதான் வளர்ந்தவுடனே இந்த வீட்டையும், உன்னையும் என்னையும் காப்பாத்தப்போறா

அதுக்கப்புறம் அவுங்க ரெண்டு பேரும் என்னெல்லாமோ பேசிட்டு இருந்தாலும், அது என்னன்னு கேக்கிறதுக்கு எனக்கு புடிக்கலை. கம்முன்னு எழுந்து போய் கேட்டுகிட்ட நின்னுகிட்டு கம்பி வழியா தெருவையே வெறிச்சுப்பாத்துக்கிட்டு நின்னேன்.

அப்பாவும் அம்மாவும் பேசி முடிச்சதும், லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிட்டு கதவை பூட்டிட்டு வீட்டுக்குள்ளே போயிட்டாங்க. நான் ரொம்ப நேராம தெருவிளக்கோட வெளிச்சத்தையே பாத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ தெரியல வாய் விட்டு அழனும்போல இருந்திச்சு... அப்போதான் திடீர்னு தெருவுல நெறயபேரு கத்துற சத்தம் கேட்டிச்சு... என்னை கண்ட்ரோலே பண்ணிக்க முடியாம நானும் அடிவயித்துல இருந்து கத்த ஆரம்பிச்சேன்...

வௌவ்... வௌவ்... வௌவ்...

எனக்கு மெல்ல வெளங்குச்சு... என்னைக்குமே என் ரூம் வீட்டுக்கு வெளியிலதான்... நானும் இந்த வீட்டுல ஒருத்தர் மாதிரி தெரிஞ்சாலும் அது வேற ஒருவிதமான பாசமேயொழிய நான் இந்த வீட்டுல ஒருத்தி இல்லை...!!!

விடியற வரைக்கும் தூங்காம நன்றியோட காவலிருக்கனும்னு வீட்டையே சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சேன்...


பின்குறிப்பு :- அடுத்து என்ன எழுதலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ திடீர்னு ஒரு ஐடியா... நம்ம வீட்டுலேயும் ஒரு ஜீவன் இருக்குதே. ‘’ஒருநாள்’’ அதோட பார்வையில எப்படியிருக்கும்னு எழுதுனா என்னான்னு தோணுச்சு... அதான் மேலே நீங்க படிச்சது. படங்களை மேலே போட்டிருந்தால் உங்களுக்கு சுவராஸ்யம் குறைந்திருக்கும் என்பதால் எங்கள் வீட்டு செல்லத்தின் படங்களை கீழே தருகிறேன்...


இவள் பெயர் ஜெனிஃபர் ”... செல்லமாகஜெனி என்றுதான் கூப்பிடுவோம்!!!

ஜெனி எங்கள் வீட்டுக்கு 50நாள் குழந்தையாய் வந்தபோது...

ஜெனி இப்போது பதினோரு மாதக்குழந்தையாய்...

உங்களுடன் கைகுலுக்கத்தயார் எனும் ஜெனி...


(கடைசியில நானும் இப்படியெல்லாம் பதிவெழுத ஆரம்பிச்சிட்டேனே?...!!!)


5 comments:

 1. (கடைசியில நானும் இப்படியெல்லாம் பதிவெழுத ஆரம்பிச்சிட்டேனே?...!!!)
  >>
  வாழ்த்துக்கள் சகோ! நீங்க பிரபல பதிவராகிட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. அட போங்கக்கா... வெக்கம் வெக்கமா வருது...!!!!

   Delete
 2. நல்ல எழுத்து நடை கலக்கறீங்க...

  ReplyDelete
 3. உங்களுடன் கைகுலுக்கத்தயார் எனும் ஜெனி.

  அருமையான நடை..!

  ReplyDelete
 4. கதை அருமை....

  ReplyDelete