SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, July 24, 2013

நான் ஒரு திருநங்கை...


ஆணுமாகி பெண்ணுமாகி
உணர்வோடு கூடிய ஊனுமாகி
அரவாணி என்ற பெயருமாகி
அல்லல் படுமோர் அனாதையாகி
எமக்கு நாமே ஓர் ஆதரவுமாகி
எங்கள் வாழ்வு எப்போதும் கேள்வியாகி
வாழும் எங்கள் உள்ளத்தினில்
உங்களுக்குணர்த்த ஒரு சேதியுண்டு!;

எங்களைப் பெற்றதால் மட்டுமே
வேதனைப்பட்டதாய் வாழ்வோரெல்லாம்
எங்கள் உருவாக்கத்திற்கு பயன்பட்ட
வெறும் உணர்வற்ற கருவிகளே;
என்றுமே நாங்கள் இங்கு
கடவுளரின் குழந்தைகளே!

உறுப்பையே அறுத்தெறியும்
உள்ளத்திடம் அமையக் கொண்டதால்
உங்கள் அவமரியாதைக் கேலிகள் எல்லாம்
எங்களை ஒருநாளும் அசைப்பதில்லை;

ஆணாய்ப் பிறந்திருந்தால்
பெண்ணை அடிமைப் படுத்துதலையும்,
பெண்ணாய்ப் பிறந்திருந்தால்
அவன் பிள்ளையை சுமப்பதையும் - தவிர
வெறென்ன நடந்திருக்கக்கூடும்?...
நிச்சயமாய் ஒன்றுமில்லை;

பிள்ளைகளைத் தத்தெடுக்கும்
பிரிவுத்துயர உலகமிதில்
தாயையே தத்தெடுக்கும்
தனித்துவ அடையாளமது
எங்களுக்கு மட்டுமின்றி
எவரிடம் இருக்கக்கூடும்?

உங்களைப் போன்ற மனிதருக்கெல்லாம்
ஒரு பிறப்பே இருக்கக் கூடும்;
எங்களைப் போன்ற தெய்வப் பிறவிகள்
எத்தனை முறை பிறக்கிறோம் இங்கே...
உங்களைப் போன்றே எங்களுக்கும்
ஒன்றாய் உண்டு முதல் பிறப்பு;
உள்ளுக்குள் வளர்ந்த உணர்வு மலர்வது
அதுவே எங்கள் இரண்டாம் பிறப்பு;
உறுப்பை அறுத்து ஒன்றாய் மாறுவது
அதுதான் எங்கள் மூன்றாம் பிறப்பு;
தாயாய் ஒருவரை தத்தெடுக்கும் நிகழ்வு
அரிதாய் நிகழும் நான்காம் பிறப்பு;
எத்தனை பிறப்புகள் நாங்கள் எடுத்தாலும்
எப்போதும் இங்கில்லை வாழ்வினில் சிறப்பு;

இந்துக்கள் தீபாவளியும்
கிருத்துவர்கள் கிருஸ்துமசும்
முஸ்லிம்கள் ரம்ஜானையும்
முக்கியமாய்க் கொண்டாடினாலும்,
சாதி மத உணர்வற்றுப்போன
எங்களுக்குப் பண்டிகையெல்லாம்
கூத்தாண்டவர் குடியிருக்கும்
கூவாகத் திருவிழாதான்!

கடவுள் இரண்டாய்
கலந்து தோன்றினால்
கையெடுத்து அதனை
வணங்கும் நீங்கள்,
ஆணும் பெண்ணுமாய்
அரிதாய் தோன்றிய
எங்களை மட்டுமேன்
அசிங்கப்படுத்துவது?

உறுப்பை வெட்டிய வலிகளதை
ஒருகணமும் உணர்ந்ததில்லை-உங்கள்
வெறுப்பைக் கண்ட உள்ள வலிக்கே
மருந்தென்றிங்கு எதுவுமில்லை;
அரிதாரங்கள் பூசி எங்கள்
அடையாளத்தை மறைத்தாலும்
அவலமானதொரு குரலை மாற்ற
எளிதானதொரு வழியுமில்லை;

கண்களால் கற்பழிக்கும்
காமுக கூட்டங்களுக்கு
பெண்களென்றும் நாங்களென்றும்
பேதங்களென்று எதுவுமில்லை;
உணர்வும் சதையும் கொண்ட
உயிராய் நாங்கள் இங்கு
ஒருவர் கண்களுக்கும்
ஒரு நாளும் தெரிவதில்லை;

எட்டுக்கும் பத்துக்கும்
இடைப்பட்ட எண்ணிலிருந்து
திருநங்கை என்ற
பெயர் பெற்றதைத் தவிர
அஞ்சுக்கும் பத்துக்கும்
அடகு வைக்கும் வாழ்க்கையது
அப்படியே மாறாமல்
அசிங்கமாய்த்தான் நகர்கிறது;

திருநங்கை என்றதுமே-வெறும்
தெருநங்கையாய் எண்ணுகின்ற
எண்ணப்போக்கது
மாறித்தான் போகுமா?...
எல்லோரும் போல் நாங்களும் 
வாழத்தான் கூடுமா?
வேடிக்கைப் பொருளல்ல நாங்கள்
விந்தையாய் திரும்பிப்பார்க்க;
வருவானா அர்ஜூனன் மீண்டும்
எங்கள் வாழ்வுக்கோர் ஒளியுமேற்ற?...
                 


6 comments:

 1. இது ஒரு மறுபதிப்பு - http://jeevanathigal.blogspot.com/2011/05/blog-post_8345.html

  ReplyDelete
 2. திருநங்கையின் வாழ்வு பிரதிபலிக்கிறது உங்கள் வரிகளில்...

  ReplyDelete
 3. இன்றைய நிலை மாறியுள்ளது... இன்னும் மாற வேண்டும் என்பதும் உண்மை...

  ReplyDelete
 4. முன்பைவிட இப்பொழுது திருநங்கைகள் வாழ்க்கை நிறைய மாற்றங்களைப் பெற்றுள்ளது. இன்னும் மாற்றங்கள் வரவேண்டும்...
  கவிதை அருமை.

  ReplyDelete
 5. திரு நங்கைகளிடம் இப்போது நல்ல முன்னேற்றமும் விழிப்புணர்வும், அரசியலில் [[உத்திரபிரதேசம்]] ஜெயித்தும் உள்ளார்கள், ஆனாலும் இன்னும் இவர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

  ReplyDelete
 6. கூடு விட்டு கூடு பாய்ந்து வாங்கி கொண்ட வலிகளா ..?

  ReplyDelete