SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, July 15, 2013

மன்மோகன்ஜி இது நியாயமா?...!!!டியர் மன்மோகன்ஜி...

இந்திய அரசியலின் பாரம்பரிய வரலாறு, மக்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளுக்கு தலையாட்டாமல் தனது பிரதம பதவியையே துறந்த பிரதமரையெல்லாம் பார்த்திருக்கிறது. எதைப்பற்றியும் சிந்திக்காமல், எந்த நாட்டைப்பற்றியும் அஞ்சாமல் சொந்த நாட்டின் நன்மையை மட்டும் சிந்தித்து பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்த இரும்புக்கர பிரதமர்களைக்கூட பார்த்திருக்கிறது. ஆனால் இந்த வரலாற்றில் உங்களது பத்தாண்டுகால கதாபாத்திரம் எப்படி நிலைக்கப்போகிறது என்பதைபற்றி என்றைக்காவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?...

ஆரம்பகாலத்தில் உங்களை எல்லோரும் பொருளாதாரப்புலி, நேர்மையின் உறைவிடம், தடாலடி முடிவெடுக்காத மிதவாதி என்றுதான் பார்த்து மகிழ்ந்தோம். ஆனால் இந்த பத்தாண்டுகளில் நீங்களும், பிரதமர் நாற்காலியை கெட்டியாகப்பற்றிக்கொண்ட உங்களின் அரசியல் முறைகளும் இந்திய வரலாற்றின் சில பக்கங்களில் தங்கத்தில் பொறிக்கப்பட்டதாய் மின்னப்போகிறதை நினைத்து புளகாங்கிதம் அடையும் கோடானுகோடி பொதுஜனத்தில் நானும் ஒருவன்...!!!

பொருளாதாரப்புலியாய் உங்களை கொண்டாடிக்கொண்டிருந்த கோமாளிக்கூட்டத்திற்கு இந்த பத்தாண்டுகால ஆட்சியின் மூலம் பலவிதமான பொருளாதார சாதனைகளை நிகழ்த்தி உங்கள் வரலாற்றை எழுதிவிட்டீர்கள்!!!.

இந்தியாவின் மிகச்சிறந்த நிதியமைச்சர்களில் மன்மோகன்ஜியும் ஒருவர் என்றிருந்த நற்பெயரோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். எப்படியும் அடுத்தமுறையும் நீங்கள் பிரதமராக வாய்ப்பில்லை. இனி நீங்கள் நிதியமைச்சராகவோ இதர அமைச்சராகவோ பணியாற்றினாலும் மரியாதையில்லை. இந்த பத்தாண்டுகால சாதனைகளோடு நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றே ஆகவேண்டிய கட்டாயச்சூழல் உருவாக்கப்பட்டாகிவிட்டது. போகும்போது இப்படிப்பட்ட பெயரோடா போவது?...

முதல் ஐந்தாண்டு காலம் சோனிமாதாவின் உத்தரவுகளுக்கேற்ப தலையாட்டும் பொம்மையாய் வலம் வந்த பிறகாவது நீங்கள் விழித்துக்கொண்டு இரண்டாவது முறை பிரதமர் நாற்காலியை உதறியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை ஜீ?... ஒருவேளை எல்லா அரசியல்வாதியையும் பிடித்து ஆட்டும் நாற்காலி கனவு உங்களையும் விட்டுவைக்கவில்லையா?... இரண்டாம் முறையும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து மன்மோகன்ஜியாக இருந்த நீங்கள்மண்மோகன்ஜியாகவே மாறிவிட்டதில் உங்களுக்கு வருத்தமேதும் இல்லையா?... யார் கண்டது... ஒருவேளை மூன்றாம் முறையும் அந்தப்பதவி கிடைக்காதா என்ற நப்பாசையில்தான் வாய்மூடி மௌனசாதனை செய்து கொண்டிருக்கிறீர்களோ என்னவோ?...!!!

உங்களது பத்தாண்டுகளில் நீங்கள் சாதித்த சாதனைகள்தான் எவ்வளவு?... நாடு பார்க்காத, கேட்டிராத சாதனை ஊழல்களெல்லாம் உங்களுக்குகீழ் அரங்கேறியும், எதுவுமே நடவாதது போல அலட்டிக்கொள்ளாத உங்களது திறமைதான் என்ன?... 

காமன் வெல்த் ஊழல் ஊத்தி மூடியாகிவிட்டது. ஆதர்ஷ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஊழல் ஊத்தி மூடியாகிவிட்டது. 2ஜி ஊழலும் கிட்டத்தட்ட அதே கதிதான். ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழலையும் நாடு மறந்து நாளாகிவிட்டது. இன்னும்... இன்னும்... எத்தனையோ ஊழல்கள் நாங்களும் மறந்தாகிவிட்டது. நீங்களும் நிச்சயம் மறந்திருப்பீர்கள்...!!!

நிலக்கரிச்சுரங்க ஊழல்... அடேங்கப்பா... சுப்ரீம் கோர்ட்டே காரிமொழிந்து கடைவிரித்தும்கூட கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாத உங்களது திறமையைக்கண்டு நாட்டு மக்கள் நாங்களெல்லாம் வியந்துபோய் நிற்கிறோம் ஜீ...

ரெயில்வே பணி நியமன ஊழல்... அதைப்பற்றியும் எந்தவித அலட்டலோ, கவலையோ உங்கள் அமைச்சரவைக்கு இல்லாமல்... யாரோ ஒரு உறவினர் லஞ்சம் பெற்றதற்கு பாவம் ரெயில்வே அமைச்சர் என்ன செய்வார் என்று கூச்சமில்லாமல் கூவியது உங்கள் நிர்வாகம்...

கருப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து அரசியல்வாதிகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் மீட்டுக்கொண்டுவரமாட்டீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் கருப்புப்பணமுதலைகளின் பெயர் பட்டியலைக்கூட வெளியே தெரியாமல் காப்பாற்றுவதில் நீங்கள் காட்டிய முனைப்புதான் என்ன?...

உலக நாடுகள் இந்தியா என்ற தேசம் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கே தகுதியற்ற நாடு என்று நமது கலாச்சார முகமூடியைக்கிழித்து காற்றில் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறது. நீங்களோ எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் உங்கள் கட்சியின் கலாச்சாரப்பாதுகாவலன் கேரளத்து குரியனையே பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த வெளிநாட்டு மாநாட்டுக்கு இந்தியப்பிரதிநிதியாக அனுப்பி சாதனை படைத்திருக்கிறீர்கள்...!!!

உங்களது கட்சி ஆட்சி நடத்தும் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் உங்களது சாதனைப்பட்டியலை உயர்த்தும் வண்ணம் இந்த ஊழல், அந்த ஊழல் என்று தங்கள் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருப்பதைப் பற்றி ஒருநாளும் உங்களுக்கு கவலை இருந்ததில்லையா?... ஒருவேளை அதெல்லாம் சோனிமாதாவின் செக்சன் என்று ஒதுங்கிக்கொண்டீர்களா?...

ராஜதந்திரம் என்ற பெயரில் குட்டிநாடான இலங்கையின் ராஜபக்சேவிடம் மண்டியிட்டாகிவிட்டது. பாகிஸ்தான் என்ன அக்கிரமம் செய்தாலும் அது வேறெதோ நாட்டில் நடப்பதுபோல கண்டும் காணாமலும் இருந்து பழகியாகிவிட்டது. இப்போது உங்களது அதிவீராவித்தன ஆட்சியைப்பற்றி தெரிந்துகொண்டு சீனாவும் எல்லையில் விளையாட ஆரம்பித்தாகிவிட்டது. தூங்கு மூஞ்சி பிரதமர் என்று வர்ணிக்கப்பட்ட நரசிம்மராவைவிட மௌனச்சாமியார் என்று வர்ணிக்கப்படும் உங்கள் நிர்வாகத்திறன் நாறிக்கிடப்பது உங்களுக்கு புரியவில்லையா?... நீங்கள் செய்யும் வேலைகளையெல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு மௌனச்சாமியார் என்பதைவிட கல்லுளிமங்கன் என்ற பெயர்தான் பொருத்தமாய் இருப்பதைப்போல தோன்றுகிறது

விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக்கொண்டிருப்பதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பெட்ரோல், டீசல் விலைநிர்ணயக் கொள்கையில் அதிரடி மாற்றங்களை அமல்படுத்தினீர்களே... அடேங்கப்பா...சூப்பர் ஜீ...

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் உங்களது சாதனை வரலாற்றில் தனிச்சாதனை படைத்திருக்கிறது!!!

ஏற்கனவே மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் உங்களது பொருளாதார சீர்திருத்த சாதனைகளில் இப்போது என்.எல்.சி பங்கு விற்பனை முடிவு வேறு... ஏன் ஜீ... 466கோடியோ இல்லை 1000கோடியோ... எதுவாகயிருந்தாலும் இந்தக்காசில்தானா உங்கள் கஜானா நிரம்பப்போகிறது?... ஏற்கனவே முன்னொருகாலத்தில் உலகிலேயே தலைசிறந்த லாபத்துடன் விளங்கும் பொதுத்துறை நிறுவனமான LICயின் பணத்தை எடுத்து வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்போவதாக பகீர் கிளப்பினீர்கள்... அந்த சாதனைத்திட்டம் என்ன நிலையில் இருக்கிறதோ தெரியவில்லை... இப்போது 93.26சதவிகிதம் அரசிடம் இருக்கும் பங்குகளில் வெறும் 5சதவிகிதத்தை விற்பதால் என்.எல்.சி ஒன்றும் தனியார்மயமாகிவிடாது. 51சதவிகிதப்பங்குகள் அரசிடம் இருக்கும் வரையில் அது பொதுத்துறை நிறுவனம்தான் என்று உங்கள் புத்திசாலித்தனத்தை தமிழக முதல்வருக்கு மடல் மூலம் அனுப்பியிருக்கிறீர்கள்... அப்படியானால் மொத்த 49சதவிகிதத்தையும் தனியாருக்கு விற்று விடலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா என்ன?...

என்ன ஜீ நீங்கள்?... ஏற்கனவே நிலக்கரிச்சுரங்க ஊழலில் உங்கள் பெயர் நாறிக்கிடக்கும் வேளையில் இப்போது இந்த 5% பங்குகளை விற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உங்களைத்தள்ளியது எது?...

போதும்ஜீ உங்களது மக்கள் சேவை... எஞ்சியிருக்கும் நாட்களிலாவது புதிதாக ஏதேனும்சாதனைபடைத்து எங்களை மயக்கத்தில் ஆழ்த்தாமல் உங்களது சாதனை ஆட்சியை நீங்கள் நல்லபடியாய் முடித்து, அடுத்த நாடாளுமன்றத்தேர்தல் வந்ததும் அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்றுக்கொண்டு ஏதாவது ஒரு மலைவாசஸ்தலத்திலோ... இல்லை உங்கள் சொந்த ஊரிலோ... உங்களது மனைவியுடன் தங்கி எஞ்சிய காலத்தை கழித்துக்கொள்ளுங்கள் ஜீ...


இந்திய வரலாறு உங்களை எப்போதும் மறக்காது என்பது மட்டும் நிச்சயம்... சோனி மாதாக்கீ ஜே... கலக்குங்க மன்மோகன் ஜீ...!!!3 comments:

 1. எல்லா வேதனை... சே... சாதனைகளையும் விட 'ரப்பர் ஸ்டாம்ப்' என்பதை உறுதி செய்த 'ஜீ'-க்கு வாழ்த்துக்கள்...! ஹிஹி...

  ReplyDelete
 2. .. இந்திய வரலாறு உங்களை எப்போதும் மறக்காது என்பது மட்டும் நிச்சயம்... சோனி மாதாக்கீ ஜே... கலக்குங்க மன்மோகன் ஜீ...!!! ...

  :))))))

  ReplyDelete
 3. மன்மோகன் ஜீ அது ஒரு மண்ணு மூட்டை ஜீ

  ReplyDelete