SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, July 1, 2013

ஃப்ளாஷ்பேக்... – இது உங்களுடையதும்!

இன்று பல்வேறு நகர வாழ்க்கையில் வேறூன்றியிருக்கும் நம்மைப்போன்ற பலரின் குழந்தைப்பருவமும், அந்தக்காலகட்டத்து நண்பர்களும், நமது தெருக்களில் சத்தத்தோடு நாம் விளையாடிய விளையாட்டுகளும் என்றும் மறையாமல் நம் ஆழ்மனதில் அழுத்தமானதொரு உணர்வாய் பதிந்துகிடக்கும். ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவ நினைவுகளை மீண்டும் அசைபோடுவது போன்றதொரு இனிமையான தருணம் வாழ்க்கையில் வேறேதும் இருக்கமுடியுமா?... குழந்தைப்பருவ விளையாட்டுகள் நமக்கு தந்த மகிழ்ச்சிகளும், இப்போதும் அந்த நினைவுகளை ரீவைண்டு பண்ணிப்பார்க்கும்போது கிடைக்கும் இனம்புரியாதொரு நிம்மதியும், ஆனந்தமும் அளப்பரியதுதான்!.

நமது குழந்தைகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ கேம்ஸ்களிலும், கிரிக்கெட், டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுக்களில் லயித்துக்கிடப்பதும், நமது குழந்தைப்பருவத்துக்கும் அவர்களதுமானுக்கான மிகப்பெரிய இடைவெளிதான்.

சரி... தொலைக்காட்சிப்பெட்டிகளும், செல்போன்களும், கம்ப்யூட்டரும் நுழையாத, “வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...” என்று வெறும் கால்சட்டையோடு தெருவில் விளையாடிய நமது குழந்தைப்பருவத்துக்குள் ஒரு ரவுண்டு வரலாமா?...

வருடம் முழுவதும் ஒரே விளையாட்டை நாம் விளையாடியதே இல்லை... சீசன் மாறிக்கொண்டே இருக்கும். நாம் ஆடிய விதவிதமான விளையாட்டுக்கள்தான் எத்தனை?...

கோலி :- பெரும்பாலான ஆண்பிள்ளைகளின் முக்கிய விளையாட்டு இதுதான். டவுசர் பை நிறைய கலர்கலரான கோலிகளை நிரப்பிக்கொண்டு அந்த சிலுசிலு சத்தத்துடனேயே எதிராளியின் கோலிகளையும் ஜெயித்து நமது டவுசர் பாக்கெட்டுக்குள் நிரப்புவதற்காக குறிபார்த்து அடிக்கும் லாவகம்தான் என்னே அழகு?...

வட்டத்துக்குள் கோலிக்குண்டுகளை நிரப்பி குறிப்பிட்ட நிறத்தை அடிப்பது, கண்போன்ற கோட்டுக்குள் கோலிகளை வரிசையில் அடுக்கி குறிபார்த்து அடிப்பது, விரலால் கோலியை சுண்டி அடித்து விளையாடுவது, அடி கோலிக்காய், டாமன் கோலிக்காய், தண்ணி கோலிக்காய் என்று ரகரகமாய் பெயர் சூட்டி விளையாடுவது...

பம்பரம் :- பெரும்பாலும் கோலிக்குண்டு விளையாட்டு சீசன் முடியும்போது தொடங்கும் அடுத்த விளையாட்டு இதுவாகத்தானிருக்கும்.
வீட்டில் தரும் நாலணா, எட்டணாக்களை எடுத்துக்கொண்டு வாங்கிய பம்பரத்திலிருக்கும் ஆணியை எடுத்துவிட்டு இரும்புப்பட்டறைக்குச்சென்று கூரான புது ஆணியை அடிப்பதில் இருக்கும் ஆர்வம்தான் என்ன?...

பம்பரத்தின் கயிறு வாங்க காசில்லையென்றால், வீட்டில் மளிகை சாமான்கள் வாங்கியதில் வரும் நீளமான சணல்கயிறையே பம்பரக்கயிறாக மாற்றும் லாவகம்தான் என்ன?...

ஆக்கர் விளையாட்டு என்ற பெயரில் வட்டத்திலிருக்கும் எதிராளியின் பம்பரத்தை ஒரே குத்தில் இரண்டாய் பிளந்தது எத்தனையிருக்கும். கயிறை லாவகமாய் சுண்டி காற்றில் வீசி கையிலேயே பம்பரத்தை பிடித்து சுற்றச்செய்த லாவகம்தான் என்ன?...

கில்லி:- இன்று ஆடும் கிரிக்கெட்டுக்கு முன்னோடியாக கருதப்படும் நமது கில்லி விளையாட்டு மறக்கமுடியுமா?... பெரும்பாலும் கருவேல மரத்திலிருந்து கம்புகளை வெட்டித்தான் செய்திருப்போம்.


கில்லியை கெந்தி வெகுதூரத்துக்கு தள்ளுவதும், மல்ட்டி ஷாட்களை சர்வசாதாரணமாய் கில்லியில் அடிப்பதும், சிக்ஸ் மற்றும் ஃபோர் போல நீண்டதூர ஷாட் அடிப்பதும், தெருவில் போவோர் வருவோரின் மேல்பட்டு வாங்கிய திட்டுக்களும் மறக்குமா என்ன?...


டயர் விளையாட்டு :- பழைய சைக்கிள் டயர்களை நாலணா கொடுத்து சைக்கிள் கடைகளிலிருந்து வாங்கி வந்துவிட்டால் போதும்... ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அந்த டயரை வேகமாய் ஓட்டிக்கொண்டு ஓடுவதும், நாலைந்துபேர் வரிசையாய் நின்றுகொண்டு ‘’ரெடி, ஒன்... டூ... த்ரீ...’’ சொல்லி தெருவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ரேஸ் ஓட்டுவதும்... (அதிலும் டயருக்கு பதில் ரிம் வைத்திருப்பவன் ஹீரோதான்!) 


அடடா... இன்னைக்கு பல விலையுயர்ந்த காரையும் பைக்கையும் ஓட்டும் நமக்கு அந்த டயர் ஓட்டிய விளையாட்டு ஞாபகம் நிச்சயமாய் சொர்க்கம்தான்!.

பட்டம் (அ) காத்தாடி விடுதல்:- பெரும்பாலும் காற்று காலங்களிலும், பரீட்சை விடுமுறைக்காலங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டு இருக்கும். 
கலர் கலராய் பட்டங்களை கடைகளில் வாங்குவது ஒருபுறம், நாமே வீட்டிலேயே நியூஸ் பேப்பர் மற்றும் இன்னபிற பேப்பர்களில் பசையைப்போட்டு ஒட்டி தயாரிக்கும் பட்டங்கள் ஒருபுறம், அதற்கான நூலுக்காக வீட்டின் பழைய டப்பாக்களையெல்லாம் தேடுவது ஒருபுறம், மொட்டைமாடி, ஆற்றங்கரை, மைதானங்கள் என்று நமது பட்டங்கள் பறந்த இடமெல்லாம் இப்போதும் நம்மைத்தேடிக்கொண்டுதான் இருக்கும்!!!...

பச்சக்குதிரை தாண்டுதல் :- இது ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் இருவருமே விளையாடும் விளையாட்டுதான். 
கொஞ்சம் கொஞ்சமாக உயரம் கூடுவதும், அவுட் ஆகுபவர்தான் குனிந்து நிற்க வேண்டி வரும் என்பதால் கவனமாகத் தாண்டுவதும்... ஹைஜம்ப் எல்லாம் தோத்தது போங்க!...

கண்ணாமூச்சி :- ஒருவர் சுவர்ப்புறமாய் திரும்பி கண்ணை மூடிக்கொண்டு நம்பர்களை எண்ணுவதும், எண்ணிமுடிப்பதற்குள் மற்றவர்களெல்லாம் ஒவ்வொரு இடத்தில் ஒளிந்து கொள்வதும், அவர்களைத்தேடிக்கண்டுபிடித்து ஒவ்வொருவராய் அவுட் ஆக்குவதும், நெஜமாவே செம திரில்லான விளையாட்டுங்க இது... 

இதே மாதிரிதான் திருடன் போலீஸ் விளையாட்டுகூட... அதுவும் செம ஆக்சன்தான்!

காகிதக்கப்பல் :- மழைக்காலங்களில் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது... 
வீட்டிலிருக்கும் காகிதத்திலேயே விதவிதமான கப்பல்கள் செய்து வீட்டு வாசலில் மழைநீரால் நிரம்பி ஓடும் சாக்கடையிலும், ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீரிலும் அவரவர் கப்பல்களை விட்டு நீரோட்டத்தின் வேகத்திலும், காற்றிலும் யார் கப்பல் மூழ்காமல் முந்திச்செல்கிறது என பின்னாலேயே ஓடும் குதூகலமும், இறுதியாய் கப்பலோடு சேர்த்து மழைநீரையும் ஒருவர் முகத்தில் ஒருவருமாய் வாரியிறைத்து விளையாடுவதும்... மறக்கமுடியுமா என்ன?...


சோடாபாட்டில் :- செம ஆக்சன் கேம் இது... இரண்டு பேர் எதிரெதிரே கையைக்கோர்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு, நடுவுல ஒருத்தரை அந்தக்கைகள்ல உக்கார வச்சு, சோடா கம்பெனியில சோடா பாட்டிலை கேஸ் நிரப்புறமாதிரி தலைகீழா சுத்தித்திருப்பனும்... பலபேர் பயந்து ஒதுங்கினாலும், சிலபேர் தைரியமா விளையாடியதை மறக்க மாட்டோம்...

எறிபந்து :- இதுகூட ஆக்சன் கேம்தான்... வரிசையா மண்ணுல சின்னச்சின்ன பள்ளம் தோண்டி, அதைச்சுற்றி விளையாடுறவங்கெல்லாம் நின்னுக்கிட்டு, ரப்பர் பந்தை உருட்டிவிடறதும், அது யார் குழியில விழுந்ததோ அவங்க மட்டும் பந்தை எடுத்துக்கிட்டு மத்தவங்க முதுகுல எறியிறதுக்கு துரத்துறதும், மத்தவங்கெல்லாம் எங்கே தங்களோட முதுகு பழுத்துறப்போவுதுன்னு தெருமுழுக்க தெரிச்சி ஓடறதும், அப்பப்பா... கொஞ்சம் வலி இருந்தாலும் செமரகளையான விளையாட்டுதான் இது!!!

பனங்காய் வண்டி :- நொங்கை வெட்டித்தின்னப்புறம் அந்தப்பனங்காயை வேஸ்ட் பண்ணாம, அதை ஒரு சின்ன கம்புல ரெண்டு பீசை ஜாயிண்ட் பண்ணி ஒரு பெரிய குச்சியால அதை வண்டி மாதிரி தள்ளிக்கிட்டு ஓடுற சொகம் இருக்கே... நாமே செய்ஞ்சி விளையாடுறதால சூப்பர் திருப்தி தரும் விளையாட்டுதாங்க இது...

பாண்டியாட்டம் :- பெண்பிள்ளைகளுக்கான பழைய பாரம்பரிய விளையாட்டுக்கள்ல நம்பர் ஒன் கேம் இதுதான்ற போதிலும், இத ஆடாம குழந்தைப்பருவத்தை கடந்த ஆண்கள்கூட இருக்க மாட்டாங்கன்னுதான் நெனக்கிறேன்...

பெரும்பாலும் பெண்கள் வயசுக்கு வர்ற பருவத்துக்கு முன்னாடி ஆடுற கேம்தான் இது. ஒரு சில்லுக்கல்லை வச்சுக்கிட்டு கட்டத்துக்குள்ள வீசுறதும், பாவாடைய மடிச்சிக்கட்டிக்கிட்டு ஒத்தக்கால்ல நொண்டியடிச்சிக்கிட்டே கட்டத்துக்கு கட்டம் தாவுறதும், ரைட்டா ராங்கான்னு கண்ணை மூடிக்கிட்டே குதிக்கிறதும்... மறக்க முடியாத பழைய விளையாட்டுக்கள்ல ரொம்ப முக்கியமானது இது...

அஞ்சுகல் விளையாட்டு :- பொம்பளைப்புள்ளைங்களோட பேவரிட் விளையாட்டு இது. 
5கல்லை எடுத்துக்கிட்டு அதை தூக்கி தூக்கிப்போட்டு புடிக்கிறதும், ஒரு கல்லு அந்தரத்துல இருக்கும்போதே இன்னொரு கல்லை கைக்குள்ள அடக்குறதும்... மேலே தூக்கி போடுற கல்லை புறங்கையில நிறுத்திப்புடிக்கிறதும்... என்னா லாவகமான விளையாட்டு இது?...

தாயக்கட்டம் :- பெரும்பாலான வீடுகள்ல சமையலை எல்லாம் முடிச்சிட்டு நாலைஞ்சு பொம்பளைங்க சேந்து விளையாடுவாங்க. 
அவங்கவங்க அம்மாவோட அவங்கவங்க பசங்க உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம்... நம்ம அம்மாதான் ஜெயிக்கனும்னு ஒவ்வொருத்தரும் வேண்டிக்கிறதும், தாயம் விழுமா, பனிரெண்டு விழுமான்னு உத்து உத்துப்பாக்குறதும்... நம்ம அம்மா வாசத்தை மறக்கமுடியாத விளையாட்டுங்க இது!...

பல்லாங்குழி :- பெண் பிள்ளைகளோட வாழ்க்கையில மறக்கமுடியாத விளையாட்டா இருக்கும் இது. 
ஏன்னா அப்போல்லாம் வயசுக்கு வந்ததும் வீட்டோட உக்காத்தி வைக்கிற ஒவ்வொரு பொட்டப்புள்ளைக்கும் இந்த விளையாட்டுதான் மிகப்பெரிய டைம் பாஸா இருந்திருக்கும்...


பரமபதம், ரெயில் ஓட்டுறது, ஸ்கிப்பிங் விளையாட்டு, வண்ணத்துப்பூச்சி புடிக்கிறது, உண்டிகோலோட திரிஞ்சி ஓணான் அடிக்கிறது, திருட்டு மாங்கா பறிக்கிறது... இப்படி நீண்டுகிட்டேபோற நம்ம குழந்தைப்பருவ விளையாட்டுக்களையெல்லாம் நம்ம காலத்துக்கு அப்புறம் நெனக்கிறதுக்குகூட ஆளில்லாமப்போயிருமோன்னுதான் கவலைப்படவேண்டியிருக்கு.

என்ன செய்ய?... காலமாற்றத்துல எல்லாமே மாறித்தான் போச்சு. விளையாட்டிலேயே உடலுக்கு உறுதியும் வந்தமாதிரி விளையாடிய காலங்கள் போய், உக்காந்த இடத்திலேயே திரையில என்னவேணா விளையாடுறமாதிரி ஆயிடுச்சு.

எது எப்படியோ?... நம்ம சின்னவயசு விளையாட்டு ஞாபகமும், அதை எப்பவாவது நெனச்சிப்பாக்குறதும், ஏதோவொரு சந்தர்ப்பத்துல அது நமக்கு ஞாபகம் வர்றதும்... உண்மையிலேயே மனசுக்கு சந்தோஷமானதுதான்றதுல உங்களுக்கு மாத்துக்கருத்து எதுவுமிருக்காதுன்னு நம்புறேன்.

நன்றி :- படங்கள்- Google
5 comments:

 1. சின்னவயசு விளையாட்டு ஞாபகம்,சஉண்மையிலேயே மனசுக்கு சந்தோஷமானதுதான்..

  ReplyDelete
 2. இனிய நினைவுகள் மீட்டியதென்பதோ உண்மை... நன்றி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. yes i also experienced in half of the games you published here

  ReplyDelete
 4. ​நான் எனது கிராமத்தில் நீங்கள் சொன்ன அந்தனை விளையாட்டும் விளையாடி விட்டேன் .இன்னும் இருக்கு..........

  திருடன் போலீஸ்
  கண்டக்கா
  பே ..பே
  யானை திரி ...பூனை திரி ​
  தீப்பெட்டி அட்டை
  சோடா மூடி
  புளிய கொட்டை
  நுட்ற்று குச்சி .

  ReplyDelete