SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, July 22, 2013

கவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை


பதிவுலகில் சென்ற வாரத்தில் நான் படித்ததில் என்னைக்கவர்ந்த சில கவிதைகளை போன வாரம் அறிமுகப்படுத்தினேன். அதன் அடுத்த பதிப்பாய் 2013 ஜீலை 14 முதல் 20 தேதி வரையிலான பதிவுலக கவிதைகளில் எனது ரசனையின் அடிப்படையிலான தொகுப்பு இங்கே...

நான் படித்தவைகளில் சிறந்தவைகளை மட்டுமே இதில் வரிசைப்படுத்துகிறேனேயொழிய நான் தவறவிட்ட நல்ல கவிதைகளும் நிச்சயம் இருக்கலாம்...(நான் அளித்திருக்கும் தரவரிசை கவிதைகளுக்கு மட்டுமேயொழிய அதன் படைப்பாளிகளுக்கு அல்ல... அதுமட்டுமின்றி இந்த தரவரிசை எனது ரசனையின் அடிப்படையிலானது மட்டுமே...)

இந்த வாரம் என்னைக்கவர்ந்ததில் முதலிடம் பிடிப்பது இரண்டு கவிதைகள்...


நெற்கொழுதாசன் என்பவர் எழுதிய உருவம் இழந்த வீடு எனும் கவிதையும், தென்றல் சசிகலா எழுதிய நோக்கு வர்மம் எனும் கவிதையும் முதலிடத்தை பகிர்ந்து கொள்கின்றன...

உருவம் இழந்த வீடு...
எப்படி அழைக்கப்படும்
நானில்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்........

என்று ஆரம்பித்து தான் பிரிந்து சென்ற தனது வீடு இன்று யாருமில்லாமல் போனாலும் அதன் நினைவுத்தாக்கம் எப்படியிருக்கும் என்பதைப்பற்றிய கவிதையாய் மிக எளிமையான வார்த்தைகளில் சாதாரணமாய் படிக்கும் எவரும் கவிதையின் உணர்வுகளையும், கருவையும் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளுமாறு எழுதி ஒரு முற்றுப்பெற்ற கவிதையைக்கொடுத்து மிக அழகாய் நிறைவு செய்திருக்கிறார்...

கவிதையின் சில வரிகள்...

பூனைகளும் நாய்களும்
என்றாவது இரைதேடியோ
அன்றிலொரு
மறைவிடம் தேடியோ வந்து போகலாம்.

இதுதான்
அவனின் வீடு என்று
ஏதாவது பழைய நினைவுகளுடன்
யாரவது நண்பர்கள் கடந்து போகலாம்.

தாகம் தீர்க்கவோ
குறைந்தது,
முகவரி தேடியோ யாரவது கதவை தட்டி
ஏமாந்திருக்கலாம்......

யாருமில்லாத எனது வீடு
உருவத்தால் இன்னும்
வீட்டைப்போலதான் இருக்கிறது.
உணர்வுகளை இழந்த
ஒரு தேகத்தைப்போலத்தான் கிடக்கிறது

இங்கே கிளிக் செய்து கவிதை முழுவதையும் ஒரு தடவை படித்துத்தான் பாருங்களேன்...

அடுத்து முதலிடத்தை பகிர்ந்து கொண்ட அடுத்த கவிதையை பார்க்கலாம்...

நோக்கு வர்மம் என்ற தலைப்பில் வீட்டிற்குள் வந்து போகும் பூனையைப்பற்றி தென்றல் சசிகலா எழுதியிருக்கிறார்
திறந்திருக்கும் கதவினை
பார்த்தபிறகாவது...
தெரிந்திருக்க வேண்டும்
திருடுவதற்கு ஏதுமில்லையென...

அங்குமிங்கும் பார்த்தபடி
மெல்லென அடி வைத்து
எத்தனை எத்தனை ..
புலனாய்வு செய்த பின்னும்
ஏதுமில்லையென்றானபின்

என்று ஆரம்பிக்கிறது கவிதை...
சாதாரணதொரு நிகழ்வைக்கூட கவிதை மொழியில் பேசியிருப்பது இந்தக்கவிதையின் சிறப்பு... புதுக்கவிதைக்கே உரித்தான அத்தனை தகுதியும் நிறைந்த கவிதை... புதிதாய் கவிதை எழுதுபவர்கள் இதைப்படித்து இதன் நடையையும், சாதாரண விஷயங்களைக்கூட எப்படி சிறப்பானதொரு கவிதையாக்குவது என்பதையும் கற்றுக்கொள்ளலாம்...
கவிதையில் பெரிதானதொரு கருப்பொருள் இல்லாவிட்டாலும்கூட படிக்கும் போதே என்னையுமறியாமல் எனைக்கவர்ந்த கவிதையிது...
உங்களையும் கவர்கிறதா என்று படித்துத்தான் பாருங்களேன்...
                                                 ------------ X -------------

இந்த வாரம் நான் ரசித்த கவிதைகளில் இரண்டாமிடத்தைப்பிடித்தது நிறைய நிறைய குட்டிக்கவிதைகள்...

பத்துப்பாட்டு என்ற தலைப்பில் தேனம்மை லெட்சுமணன் எழுதிய குட்டிக்கவிதைகள் அத்தனையும் மிக அருமை...

எளிமையான வார்த்தைகளில் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளை மிகக்குட்டியாய், அழகானதொரு கவிதையாய் மாற்றுவது எப்படி என்பதை இந்தக்கவிதைகளிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்பது நிச்சயம்...

ஒவ்வொரு கவிதையுமே படிக்கும்போதே ரசிக்க வைக்கும் ரகமாய் தோன்றுவது கவிதைகளின் இயல்பான வார்த்தைக்கோர்ப்பின் சிறப்பு...

குழந்தை
அடுத்த வீட்டின் குழந்தைகள்
தோளணைத்துக்கிடந்தன
அவளுக்கான குழந்தை
உருவாகும் வரை...
என்றொரு குட்டிக்கவிதை...

அசைபோடுவது
கவ்விச்செல்வது
குடல் குதறுவது
சுற்றிலைய

கால்மடக்கி
வயிறெக்கி
இறகு படபடக்க
புதுத்தேனை உறிஞ்சும்
தேன்சிட்டை பூ விரும்பும்...
என்று மற்றுமொரு கவிதை...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்... இங்கே நான் இரண்டு சோறு கொடுத்தாகிவிட்டது... முழு உணவையும் ருசிக்க நேராக பந்திக்கே சென்றுவிடுங்கள்...
அடுத்து இரண்டாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் குட்டிக்கவிதைகள் தொகுப்பு சிதறல்-3 என்ற தலைப்பில் பிரியா என்பவர் எழுதியிருப்பது...

குட்டிக்கவிதைகள் எழுதுவதற்கே தனித்திறமை வேண்டும்... இவர் குட்டிக்கவிதைகளில் உணர்வுகளை அசாத்தியமாய் கையாண்டிருப்பதோடு அதற்கான படங்களையும் மிக நேர்த்தியாய் தேர்வு செய்து பதிவேற்றியிருப்பது அதைவிடச்சிறப்பு...

மௌனம்
தொடமுடியா தூரமாய்
நீண்டு கொண்டே இருக்கிறது
அவளின் மௌனம்
என்று முதல் கவிதையை ஆரம்பிக்கிறார்...

அழகழகான கவிதைகள் அதற்கேற்ற படங்களுடன்அடுத்தடுத்து ஆக்கிரமித்து இறுதியாய் இந்தக்கவிதையில் முடிக்கிறார்...

உலகம் எப்பொழுதும்
பரபரப்பாகவே இருக்கிறது
சில நேரங்களில்
கற்கள் எறிவதில்...
சில நேரங்களில்
சிலுவைகள் செய்வதில்...

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிதாக குட்டிக்கவிதையாக சொல்லியிருக்கிறார் என்பதைப்படிக்கும்போது நிச்சயமாய் ஒரு பிரமிப்பு உண்டாகிறது... குட்டிக்கவிதைகளில் கவிதைகளை வரிசைப்படுத்துவது மிகச்சிரமமான வேலை. அதையும் மிக நேர்த்தியாய் செய்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்வதில் இடம் பிடித்திருக்கும் மற்றொரு படைப்பு ஒரேயொரு குட்டிக்கவிதையை மட்டுமே கொண்ட MF நிரோஷன் என்பவர் எழுதியிருக்கும் படைப்பு...
இளவரசனின் மரணத்தைத்தொடர்ந்து சாதி ஒழிப்பின் அவசியத்தையும், சாதி வெறியின் அவலத்தையும் நம்மில் எத்தனையோ பதிவர்கள் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் எழுதித்தள்ளியிருந்தோம்...
ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச்சாப்பிடும் விதமாக கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனுமளவுக்கு இந்தக்கவிதை வைத்திருக்கும் முற்றுப்புள்ளி சமூக அவல நிதர்சனம்...
சாதி ஒழிப்பின் முக்காலம்
நிலவை நோக்கிய
பயணம்...
பேருந்தில்...!!!

இரண்டாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் இன்னொரு குட்டிக்கவிதைகள் கொஞ்சம் ஹைக்கூ ஸ்டைல் கலப்பில் சுந்தரி என்பவர் எழுதியிருக்கும் சாரல்கள்-1 எனும் தொகுப்பு...

சில கவிதைகள் ஹைக்கூ போல இருந்தாலும் அத்தனையும் புதுமையான சிந்தனைகள்... எளிமையான எதார்த்தமான விஷயங்களையெல்லாம் வார்த்தைகளை அழகாகக்கோர்த்ததன் மூலம் குட்டிக்குட்டி கவிதைகளாய் ஆக்கியிருப்பது மிகச்சிறப்பு...

என் உறவுகளை எல்லாம்
மென்மையாக தீண்டும் நீ!
ஏன்,
என்னை மட்டும்
இவ்வளவு ஆக்ரோசமாய் தாக்குகிறாய்!
நீ கட்டளை
இடுவதை எல்லாம்
செய்து முடிப்பதனாலா!!!!

- Enter Key


                                                    ------------- X -------------

எனது ரசனையில் இந்த வாரம் மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பது நான்கு கவிதைகள்...

முதலில் ஹேமா என்பவர் எழுதிய சொல்லாடை எனும் கவிதை...

மிக அழகாய் ஆரம்பித்து மிக நேர்த்தியாய் முடிக்கப்பட்டிருக்கும் ஆழமான கருவைக்கொண்ட கவிதை...

சாமன்ய ரசிகன் இரண்டு மூன்று முறை படித்தால்தான் புரியும் புதுக்கவிதை நடை என்றாலும்கூட கவிதை மனதுக்குள் ஒரு இனம்புரியா உணர்வலைகளை உண்டாக்குவது தனிச்சிறப்புதான்...

சில வரிகள்...
சொல்லாடை...
தேடி விடியும்
நாளொன்றின் கதவுகள் திறந்து
சாத்தான்களோடு
கூடிவரும்
அந்நாளில்
அந்த வார்த்தைகள்!!!

முழுதும் படிக்க http://kuzhanthainila.blogspot.in/2013/07/blog-post_19.html

                   ------------------ X ------------------
கோவை மு.சரளா அவர்கள் எழுதியிருக்கும் நிறைவேறாத வாக்குறுதிகள் எனும் கவிதையும் இந்த வாரம் மூன்றாமிடத்தை அலங்கரிக்கிறது...

 காதலில் ஒருவர் மற்றவரிடம் அறிவின்மையால் ஏமாறுவது இல்லை... அது அன்பு என்பதை இதைவிட அருமையாக கூறுவதற்கில்லை... காதல் கவிதையில்கூட வாக்காளனைப்போல வாய் பார்த்து நிற்கிறேன் என்றிருப்பது மிக அருமையான எழுத்து நடை...

நிறைவேறாத வாக்குறுதிகள்
எனக்கு தருவதாக கொடுத்த
வாக்குகளை நீ நிறைவேற்ற
தவறிய அந்த அனாசயமான
அலைக்கழிக்கப்பட்ட
பொழுதுகளில்கூட

உன்னை நிரப்பும் கணங்களை
நேர்த்தியாக செய்ய நான்
தவறியதில்லை...

தொடர்ந்து படித்து கவிதையை அருமையாக முடித்த விதத்தை தெரிந்து கொள்ள http://www.saraladevi.com/2013/07/blog-post_16.html

                  --------------------- X --------------------

கவிதை வீதி சௌந்தர் எழுதிய ஒரு காதல் கவிதை எனை மிகவும் கவர்ந்து அதற்கும் மூன்றாமிடத்தை வழங்கியிருக்கிறேன்...

காதலித்த ஒவ்வொருவருக்கும் இந்தக்கவிதையின் வார்த்தைகள் புரியும்... சாதாரண வார்த்தைகளைக்கொண்டு அதிமேதாவித்தனமின்றி அனைவருக்கும் புரியும் வகையில் காதலித்த அனைத்து ஆண்மகனும் சந்தித்த ஒரு மனநிலையை மிக அழகாய் எடுத்துக்கூறியிருப்பது காதலின் ஸாரி... கவிதையின் சிறப்பு!!!

இப்படித்தான் ஆகிவிடுகிறது சிலநேரங்களில்...!!!
தூரத்தில் தெரிகிற சுடிதார்களைப் பார்த்து
என்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர
நீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்...

உடலில்... உயரத்தில்...
குரலில்... நடையில்...
உன்னை ஞாபகப்படுத்தி
நொடிக்கொருத்தி என்னை ஏமாற்றுவாள்...

என்பன போன்ற அழகான விஷயங்களைக்கொடுத்து இறுதியில் கவிதையை முடித்த விதம்தான் இக்கவிதைக்கு மூன்றாமிடம் வழங்கியதில் முக்கியப்பங்கானது...

என்ன இதைப்படிக்கும்போது உங்களுக்கும் பழைய காதலிச்ச அனுபவமெல்லாம் ஞாபகம் வருதா?... தொடர்ந்து படிக்க...

                                      -------------------- X -------------------

மூன்றாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் மற்றொரு காதல் கவிதை சே.குமார் எழுதியது...

இதுவும் காதலின், காதலர்களின் உணர்வை யதார்த்தத்தோடு ஒன்றிச்சொன்னதுதான் மிக அதிகமாய் என்னைக் கவர்ந்தது...

உணர்வுகளை பிரதிபலிக்கும் எளிமையான வார்த்தை நடை மிகச்சிறப்பு...

காதலோடு காதலாக...
எதைச் சொன்னாலும்
சிரிக்கிறேன்
சிரிக்கிறாய்
சிரிக்கிறோம்...

கோபப்படுத்தும்
போதெல்லாம்
'சாரி' நம்மிடையே

மாட்டிக் கொண்டு
விழிக்கிறது..

முழுதும் படித்து ரசிக்க  http://vayalaan.blogspot.in/2013/07/blog-post_154.html

முதல் மூன்று இடங்களைப்பிடித்த கவிதைகளை பார்த்தாகிவிட்டது... அதன் படைப்பாளிகள் தொடர்ந்து இதைவிடவும் பல அருமையான படைப்புகளை படைத்திட நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
                      ------------------ X -------------------

இனி முதல் மூன்று இடங்களைப்பிடிக்காவிட்டாலும் எனைக்கவர்ந்து டாப் லிஸ்ட்டின் எஞ்சிய இடங்களை அலங்கரிக்கும் கவிதைகளைப்பார்க்கலாம்...

அடுத்த இடம் தேனம்மை லெட்சுமணன் எழுதிய காடும் பிராணிகளும் எனும் குறுங்கவிதைக்குத்தான்...

கவிதையின் தலைப்புதான் ஏதோ குழந்தைகள் கதை போல இருக்கிறதேயொழிய கவிதையின் வீரியம் மிக அதிகம் என்பதை படிக்கும் போது நீங்களே உணரலாம்...

ஒன்றை ஒன்று தொலைத்து
இன்னொரு பரிமாணத்தில்
ஒன்றின் எதிரேயே இன்னொன்று
அலைந்தும் கண்டுபிடிக்க முடியாமல்.

என்று சாதாரணமாய் முடிப்பது போல கவிதையை முடித்திருந்தாலும் வெறுமனே கவிதையின் கருப்பொருளுக்கு மட்டும் பொருந்தாமல் படிப்பவர் ஒவ்வொருவரின் மனநிலை மற்றும் கற்பனைகளுக்கேற்ப விரிந்து கொள்ளும் கவிதை இது என்பது கூடுதல் சிறப்பு...
முழுதும் படிக்க http://thenusdiary.blogspot.in/2013/07/blog-post_17.html
                    ---------------- X -----------------

அடுத்த இடம் நம்ம கவிதைவீதி சௌந்தரின் 
காதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...? எனும் கவிதைக்குத்தான்...

அழகழகான குட்டிக்குட்டி காதல் கவிதைகளுடன் அதற்கான படங்களை தேர்வு செய்து பிரசுரித்திருப்பது மிக மிக அருமை...

வைத்திருப்பரையே தாக்கும்
அதிசய ஆயுதம்
இந்த காதல்...

தொடர்ந்து படிக்க http://kavithaiveedhi.blogspot.com/2013/07/blog-post_15.html
                                               ---------------- X -----------------

அடுத்த இடமும் தேனம்மை லெட்சுமணன் எழுதிய கவிதைக்குத்தான்...

கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கவிதை இது என்பது கூடுதல் தகவல்...

பெரும்பாலான பெற்றோர்கள் இன்று அக்கம் பக்கத்து வீட்டார்களால் அவர்களது குழந்தைகளின் பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தத்தை தழுவி எளிமையான வார்த்தை நடையில் அருமையான சொற்கோர்ப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் கவிதை இது...

புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா
புஜ்ஜுவின் அம்மா
புஜ்ஜுவின் அப்பா
என்றே அழைக்கப்படுகிறோம்
அக்கம் பக்கத்தவர்களால்
அவரவர்க்கெனப் பெயரிருந்தும்

புஜ்ஜுவின் தோழி
புஜ்ஜுவின் பூனை
எல்லாம் அவள் சார்ந்தே
குறிப்பிடுகிறோம்
நாமும் பெயரற்று.
 என்று ஆரம்பித்து அழகாய் நீளும் கவிதையை படிக்க http://honeylaksh.blogspot.in/2013/07/blog-post_15.html

                                               ------------------------ X -----------------------

அடுத்த இடம் கவிஞர் கி.பாரதிதாசன் என்பவர் எழுதிய காதல் ஆயிரம் பகுதி-105 க்குத்தான்...

தமிழின் சுவை இவ்வளவு உயர்ந்ததா என்று மலைக்க வைக்கும் கவிதைகள் இவை... முதலில் படிக்கும்போது மரபுக்கவிதை போல தோன்றினாலும் பிரித்து பிரித்து படித்து அர்த்தம் புரிந்துகொண்டபோது புதுக்கவிதை போலத்தான் எனக்குத்தெரிந்தது... காதலை கையாண்டிருக்கும் ஒவ்வொரு பாடலும் அருமை...

903.
முத்தம் கொடுத்தால்!என் சித்தம் மயக்கமுறும்!
புத்தம் புதுஅமுதை உண்டுருளும்! - சத்தம்
இலாத இடம்தேடி! இன்கதை பாடி
நிலாவை அழைப்போம் நிலம்

முழுதும் படிக்க http://bharathidasanfrance.blogspot.in/2013/07/105.html

                                           ------------------------ X -------------------------

அடுத்த இடம் அக்கா ராஜி அவர்கள் எழுதிய (அக்கா நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா?...!!!) கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது என்ற கவிதைக்குத்தான்... (முதலில் தலைப்பைப்பார்த்து விட்டு ஏதோ அவ்வையார் பாடல் என்றுதான் பயந்துவிட்டேன்!)

ஆனால் முதுமையில் தனிமை எவ்வளவு கொடியது... அதுவும் இளமையில் தனிமையை விரும்பி அதற்காக தனக்கு வேண்டியவர்களைக்கூட சீண்டி உதறியவரின் முதுமைத்தனிமை பழைய நியாபகங்களை கிளறி எவ்வளவு கொடிய மனவலிகளைத்தரும் என்பதை அழகாய் விளக்கியிருந்த கவிதையிது...

தனித்திருப்பது சுகம்! இறைவன் தந்த வரம்! என்றும்
பந்த பாசங்கள்லாம் சிறை!!
வழித்துணையாய் வாழ்க்கை முழுதும்..,
வருபவளும் துன்பம்..., என்று
காலமதை வீணே கழித்தேனே!!

வாக்குகளும், வாதங்களும் வசந்தகால பருவத்திலே..,
வசந்தத்தை வலுவிழக்க செய்தனவே!!
இன்று, வாதம் செய்யகூட, நீ இல்லாமல்..,
வாய் மூடி கிடக்கின்றேனே!!

என்று சில நிதர்சனங்களை எளிதான வார்த்தைகளில் கோடிட்டிருப்பது கவிதையின் பலம். (அக்கா... இந்தப்புள்ளி... கமா... ஆச்சர்யக்குறி... இதையெல்லாம் கொஞ்சம் பாத்து யூஸ் பண்ணா இன்னும் நல்லாயிருக்கும்)

முழுவதும் படிக்க http://rajiyinkanavugal.blogspot.in/2013/07/blog-post_749.html
                     --------------------- X ---------------------

அடுத்து சுரேந்திரகுமார் என்பவர் எழுதிய உனது வீடு செல் என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்தது...

உனது வீடு செல்
மௌனத்தால் கிழித்துவிடு
உனது
வார்த்தைகளின்
முகத்திரையை,

அடிக்கடி உன்னைவிட்டுத்
தப்பித்து ஓடாதே
என்று ஆரம்பித்து அழகாய் முடித்திருக்கிறார்... படிப்பதற்கு http://moongilvanam.blogspot.in/2013/07/blog-post_17.html

                                             -------------------------- X -------------------------
அடுத்த இடம் ஒரு குட்டிக்கவிதைக்குத்தான்...
ராஜா சந்திரசேகர் என்பவர் எழுதிய இவ்வளவு தூரம் என்ற கவிதைதான் அது...

சுவடின்றி 
வெளியேறுகிறாய் 
இதற்கு நீ 
இவ்வளவு தூரம் 
வந்திருக்க வேண்டாம்
என்று கவிதை ரசிக்கும்படி மிக நன்றாக இருந்தது... வெறும் நாலே வரியில் ஒரே கவிதையோடு முடித்தது கொஞ்சம் ஏமாற்றம்தான்...
                                         ----------------------- X ------------------------

அடுத்த இடம் எனது குறுங்கவிதைகளில் சில... பாகம்-22 என்ற தலைப்பில் அகல் என்பவர் எழுதியிருந்த குட்டிக்கவிதைகள்...

அந்த ஜன்னலோரச் சாரலில்
உனது விழிகளும் எனது விழிகளும்
உரக்கப் பேசிக்கொண்டிருக்கையில்
மௌனித்துப் போனது மழை.

முழுவதும் படிக்க.... http://kakkaisirakinile.blogspot.in/2013/07/22.html
                                             -------------------- X -------------------

இறுதி இடத்தைப்பிடிப்பது கவிஞர் வாலிக்கு இறுதி மரியாதை செய்யும் விதமாய் நாகேந்திரபாரதி என்பவர் எழுதிய வாலிக்கு சாவில்லை எனும் கவிதை...

வாலியின் மறைவுக்கு பதிவுலகில் எத்தனையோபேர் கவிதை தீட்டியிருந்த போதிலும் இந்தக்கவிதை வெகு எளிமையானதாய் என்னை ரசிக்க வைத்தது...        
                                           
காதலோ பக்தியோ
கவிதையோ வசனமோ
எதுகையில் மோனையில்
எடுத்துவந்த இலக்கிய
வார்த்தைகள் இருக்கும்வரை
வாலிக்குச் சாவில்லை
என்று கவிதையை மிக அழகாய் முடித்திருந்தார்...

முழுதும் படிக்க http://bharathinagendra.blogspot.in/2013/07/blog-post_19.html

மேலே நான் தேர்வு செய்த கவிதைகள் மட்டும் இல்லாமல் சென்ற வாரம் நான் படித்த மொத்தக்கவிதைகளின் லிஸ்ட் கீழே தருகிறேன்... பெரும்பாலும் சென்ற வாரம் எந்தக்கவிதையையும் நான் மிஸ் பண்ணவில்லை என்று நம்புகிறேன்...

http://iravinpunnagai.blogspot.com/ - அவள் சென்றுவிட்ட பிறகு...
http://mubeensadhika.blogspot.in/2013/07/blog-post_14.html - உருப்பெற்ற நரி
http://www.ippadikkuelango.com/2013/07/blog-post_12.html - புல்வெளியில் ஒரு கல் –கவிஞர் தேவதேவன்
http://karaiseraaalai.blogspot.in/2013/06/blog-post_5447.html - படுக்கை அறையில்...
http://www.ippadikkuelango.com/2013/07/blog-post_17.html - குழந்தைகளுக்கு நேரமில்லை
http://www.parthichezhian.com/2013/07/9.html - கொலவெறிக்கவிதைகள்
http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_17.html  - பொத்திப்பொத்தி வளர்க்கும் தாயின் மனதை அறிவோமா
http://niroodai.blogspot.com/2013/07/blog-post_17.html - வாழ்க்கையும் குறிக்கோளும்
http://bharathinagendra.blogspot.in/2013/07/blog-post_17.html - பயணங்கள் முடிவதில்லை
http://kaviyazhi.blogspot.in/2013/07/blog-post_2275.html   - தாய்நாடு அழைக்கின்றது...

http://kaviyarankam.blogspot.in/2013/07/blog-post_19.html - மழலையாகிறேன்
http://vijaykavithaigal.blogspot.in/2013/07/3.html  - குட்டிக்கவிதைகள்-3

http://www.padaipali.net/2013/07/blog-post_20.html - என்ன மாதிரி சமூகத்தில் நாம் வாழ்கிறோம்
http://wordsofpriya.blogspot.com/2013/07/blog-post_20.html - பிரிவின் எச்சம்...
http://karaiyorakaatru.blogspot.in/2013/07/blog-post_19.html - தமிழ்தாய் எந்த சாதி?...

எல்லாக்கவிதைகளையும் படிச்சு ரசிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... மீண்டும் அடுத்த வாரமும் இதே போன்றதொரு தொகுப்பை பார்க்கலாம்...

ஆல் தி பெஸ்ட்... என்ஜாய் மக்களே!!!
14 comments:

 1. சகலகலாவல்லி தெரியுமோ...? அவங்க தான் சகோதரி ராஜி...!

  என்ன ஒரு தொகுப்பு...! உங்களின் ரசனைக்கு, தேடலுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... இரு தளங்கள் எனக்கு புதிய அறிமுகம்... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களைக் கவர்ந்த கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று என்பதை அறிந்து மகிழ்ச்சி. தாங்கள் தெரிவிக்கும் முன்னர் எனக்கு தகவல் தெரிவித்த தனபாலன் சார் அவர்களுக்கும் நன்றி.

  அருமையான பணி.... அழகான தொகுப்பு.... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. மிக அற்புதமான செயல் சகோ இது.. எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் பணியும ;கூட தங்கள் ரசனையில் என் எழுத்தும் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

  ReplyDelete
 4. சிதறி கிடக்கும் இத்தனை வலைப்பூக்களில் என் வலைப்பூவையும் கவிதையும் கண்டு அதற்க்கு இரண்டாம் இடமும் கொடுத்து இங்கே பகிர்ந்தமைக்கு எனது நன்றிகள்... தங்களது சிறப்பான தேடல் தொடரட்டும் :)... செய்தியை எனக்கு உரைத்த தனபாலன் சார் க்கும் என்னுடைய நன்றிகள்...

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. மேலிருக்கும் மூவரும் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன். எழுதிய அத்தனை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களை கவர்ந்ததை பகிர்ந்ததுக்கு நன்றி. அப்புறம் நமக்கும் திரு தனபாலன் அவர்கள்தான் தகவல்தந்தார் - நன்றி

  ReplyDelete
 7. பொழுது போகாமல் எழுத ஆரம்பித்த என் கவிதைகளுக்கு அங்கீகாரம் தந்து இரண்டாம் இடம் கொடுத்து என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றிகள்......

  தகவல் தந்த திரு. தனபாலன் அவர்களுக்கும் நன்றிகள்.....

  ReplyDelete
 8. நன்றி மிக்க நன்றி சாய்ரோஸ் உங்கள் ஆர்வமான தேடலுக்கு.உண்மையில் இது ஒரு உற்சாக மாத்திரைதான் !

  ReplyDelete
 9. எனது கவிதையை வாழ்த்திய ராஜிக்கு நன்றி. அறிமுகம் செய்த நண்பர் தனபாலனுக்கு நன்றி.

  ReplyDelete
 10. அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி சாய்ரோஸ்

  ReplyDelete
 11. அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்... நல்ல எழுத்துக்கள் பதிவுலகத்தில் அமுங்கிப்போகாமல் பலரையும் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே இப்படியொரு தொகுப்பு எழுதுகிறேன்... ஆனால் எனது ஏனைய பதிவுகள் எல்லாம் நான் என்ன எழுதினாலும் குறைந்தது 600 பேராவது படிக்கும்போது நான் நல்ல எழுத்துக்கள் எல்லோரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதும் இது போன்ற பதிவுகள் குறைந்தது 150பேர் படிப்பதோடு நின்று விடுகிறது... போனவாரமும் அதே நிலைதான்... இந்த வாரமும் அதே நிலைதான்... எனது வேண்டுகோள் ஒன்றுதான்.... இது போன்ற தொகுப்புகளுக்கு தயவு செய்து இதைப்படிப்பவர்கள் தமிழ்மணம் ஓட்டளியுங்கள்... அப்போதாவது இது பலரையும் சென்றடையட்டும்... (இது எனது ஆதங்கம்தானேயொழிய வேறெந்த உள்நோக்கமும் கற்பிக்கவேண்டாம்...) நன்றி - சாய்ரோஸ்

  ReplyDelete
 12. எனது கவிதைக்கும் ஓர் இடம் கொடுத்தமைக்கு நன்றிகள் சாய்ரோஸ்...! ஹேமா சொன்னது போல 'உண்மையில் இது ஒரு உற்சாக மாத்திரைதான் !'...
  தகவல் தந்த தனபாலன் அவர்களிற்கும் நன்றிகள்!

  ReplyDelete
 13. அனைத்தும் சிறப்பாக உள்ளன.நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுவது பாராட்டத் தக்கது. பெரும்பாலும் காதல் சார்ந்தே இருக்கிறது. காதலையும் சேர்த்து பிறவகை கவிதைகளையும் அறிமுகப் படுத்துங்கள். இது ஒரு ஆலோசனையே தவிர வேறில்லை.

  ReplyDelete