SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, July 30, 2013

உணர்வுகள்...

நினைவுகளின் சிறகடிப்பில் மட்டும்
வாழ்க்கைப்பயணங்கள் தொடர்ந்து விடுவதுமில்லை;
கனவுகளின் மனக்களிப்பில் மட்டும்
வெற்றிச்சிகரங்களை தொட்டு விடுவதுமில்லை;

ஒவ்வொரு கனவுக்குள்ளும்
பல ஏக்கங்கள் உண்டு,
ஒவ்வொரு ஏக்கத்திலும்
பல கனவுகளும் உண்டு;

நிஜங்களின் கண்ணசைவினிலேயே
கனவுகள் கலைக்கப்படுகின்றன;

நிஜங்களின் நினைவுகளின்
இரு பக்க சிறகடிப்பினில்
வாழ்க்கைப்பயணம் வகையின்றி
பறக்கத்தான் செய்யும்;

நட்புகளும் காதலும்
கடந்து வந்த பாதைகளும்
ஒவ்வொருவரின் உள்மனதிலும்
ஒன்றுமறியாற்போல் உறங்கிக்கொண்டிருக்கும்;

ஒவ்வொரு நாள் தூக்கத்தின் போதும்
பலமுறை திடுக்கிட்டு விழித்திருக்கிறேன்
தூளியில் சத்தமின்றி முழித்திருக்கும்
குழந்தையின் முகம் மட்டுமே உணர்த்திடும்
நல்லவேளையாய்

வாழ்க்கை இன்னும் என் காலடியிலிருந்து நழுவி விடவில்லை!


Monday, July 29, 2013

கவிதை மாலை - பதிவுலகம் 21 to 27-07-2013

பதிவுலகில் சென்ற வாரத்தில் நான் படித்ததில் என்னைக்கவர்ந்த சில கவிதைகளை போன வாரம் அறிமுகப்படுத்தினேன்.

அதன் அடுத்த பதிப்பாய் 2013 ஜீலை 21 முதல் 27 தேதி வரையிலான பதிவுலக கவிதைகளில் எனது ரசனையின் அடிப்படையிலான தொகுப்பு இங்கே...

நான் படித்தவைகளில் சிறந்தவைகளை மட்டுமே இதில் வரிசைப்படுத்துகிறேனேயொழிய நான் தவறவிட்ட நல்ல கவிதைகளும் நிச்சயம் இருக்கலாம்...(நான் அளித்திருக்கும் தரவரிசை கவிதைகளுக்கு மட்டுமேயொழிய அதன் படைப்பாளிகளுக்கு அல்ல... அதுமட்டுமின்றி இந்த தரவரிசை எனது ரசனையின் அடிப்படையிலானது மட்டுமே...)

இந்த வாரம் என்னைக்கவர்ந்ததில் முதலிடம் பிடிப்பது மூன்று கவிதைகள்...
 
சி.கருணாகரசு என்பவர் எழுதிய புல்லாங்குழல் எனும் கவிதையும், கோவை மு சரளா எழுதிய வலி சுமக்கும் தேவதைகள் எனும் கவிதையும், படைப்பாளி என்பவர் எழுதிய விபசாரியின் உபசரிப்பு என்ற கவிதையுமாய் மூன்று கவிதைகளும் முதலிடத்தை பகிர்ந்து கொள்கின்றன...

புல்லாங்குழல்
ஒரு நல்ல புதுக்கவிதைக்கான இலக்கணம் என்று நான் நினைப்பது அது படிக்கும்போதே படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதுதான்... சமூகத்தில் ஒரு சாமான்யனாய் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளைக்கூட வார்த்தைகளை அழகாய்க்கோர்த்து வாசிப்பவர்களின் உள்ளத்தை உருக்குமாறு கவிதை அமைத்தால் அதைவிட சிறப்பான புதுக்கவிதை வேறொன்றிருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து...

அப்படிப்பட்ட எல்லா அம்சமும் கொண்ட ஒரு புதுக்கவிதைதான் சி.கருணாகரசு என்பவர் எழுதியிருக்கும் இந்த புல்லாங்குழல் எனும் கவிதை...

வயோதிகத்தில் ஒரு சாமான்ய மனிதன் தன் வயிற்றுப்பிழைப்புக்கு படும் பாட்டை பாட்டாக எழுதி கவர்ந்திருக்கிறார்...

உண்மையிலேயே தொங்கிக்கொண்டு நிற்காமல் நிறைவாக முடிந்த கவிதையிது...

நகர்ந்துகொண்டே இருப்பது
காலம் மட்டுமல்ல அவர்
கால்களும்தான்.
என்று ஆரவாரமில்லாமல் மிக வலிமையான வார்த்தைக்கோர்ப்பில் தன் கவிதையை ஆரம்பித்திருக்கிறார்...
ஒரு மரக்கழியிலேயே
தொங்குகின்றன அவரின்
மொத்த மூலதனமும்.
அவை...
ஊசலாடியபடியே இருக்கும்.
ஆனால்...
அறுந்து விழுவதே இல்லை
அவர் தன்மானத்தை போல.
 என்னவொரு வரிகள்...என்று என்னை மிகவும் ஆச்சர்யப்படவைத்த சிந்தனை வரிகள்... கவிதையை கடைசியாய் முடித்தவிதம் ஆயிரம் பாராட்டுக்களுக்கு சொந்தமானது என்பதில் ஐயமில்லை...

புதுக்கவிதை எழுத ஆசைப்படுவோரெல்லாம் நிச்சயம் பலமுறை இந்தக்கவிதையை வாசித்துப்பழகிக்கொள்ளலாம்...

அடுத்து முதலிடத்தை பகிர்ந்து கொண்ட அடுத்த இரு கவிதைகளைப் பார்க்கலாம்...

வலி சுமக்கும் தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு விபச்சாரியின் வேதனையைப்பற்றி கோவை மு சரளா அவர்கள் எழுதியதும், விபசாரியின் உபசரிப்பு என்ற தலைப்பில் படைப்பாளி என்பவர் எழுதியதும்...

வெறுமனே காதல் மட்டுமின்றி பல்சுவை கவி எழுதும் கவிஞர்கள் யாராகயிருந்தாலும் பெரும்பாலும் விபச்சாரியின் வேதனையை ஒரு கவிதையாவது வடித்திருப்பார்கள்... இருந்தாலும் இந்தக்கவிதைகளில் அதன் உணர்வுகளை வார்த்தைகளில் கொட்டிய இதன் தனிச்சிறப்புதான் இதை ரசித்து முதலிடம் தரவைத்தது என்னை...

(பெரும்பாலும் புதிதாய் புதுக்கவிதை எழுத ஆரம்பிப்போர் எல்லாம் இந்த வார்த்தைகளை சேர்ப்பதில்தான் கோட்டை விட்டு சில நேரங்களில் வெறும் டயலாக் போல கவிதை அமைந்துவிடும்... அதை சரிப்படுத்திக்கொள்ள பலவிதமான நல்ல வார்த்தை கோர்ப்புள்ள கவிதைகளை படித்து அவற்றில் வார்த்தைகளை கையாண்டிருக்கும் திறனை கவனித்துக்கொண்டாலே போதுமானது)

இந்த இரு கவிதைகளிலுமே வார்த்தைகள் மிகச்சரியாய் கையாளப்பட்டு சொல்ல வந்த உணர்வுகளை மிக தெளிவாய் வெளிக்கொணர்ந்திருப்பது மிகச்சிறப்பு...

வலி சுமக்கும் தேவதைகள்
மயான பொழுதொன்றில்
பிணமாக்கப்பட்டிருக்கிறேன்
மாலையும் நறுமணமுமாக
என்னைப் போர்த்தி என் மீது
ஆலிங்கனம் செய்கிறது
சில துடிப்புடன் அடங்கப்போகும்
பிணமொன்று
என்று ஒரு விபச்சாரி தன்னிடம் வரும் வாடிக்கையாளரைப்பற்றிய கருத்தைக்கூறுவதாய் ஆரம்பிக்கிறது கவிதை...
முகமூடிகள் வேறாயினும்
உள்ளிருக்கும் முகங்கள்
ஒருமித்த காம நிறம் பூசிய
கயமை முகங்கள்தான்
என்று சாடியிருப்பதும், கடைசியில் மிக அழகாய் கவிதையை முடித்திருப்பதும் மிகச்சிறப்பு...

விபசாரியின் உபசரிப்பு
சேவல் அடையும்
நேரத்தில்
இவளுக்கான
பொழுது புலர்கிறது
என்று ஆரம்பித்திருப்பதில் சேவல் என்று குறிப்பிட்டிருப்பது ஆண்களைத்தானோ என்று சொல்லாமல் சொல்கிறது... இரவு ஆரம்பிப்பதை சொல்ல எத்தனையோ வழிகள் இருந்தும் சேவல் அடையும் நேரம் என்று தொடங்கியிருப்பது கவிதையின் கருப்பொருளுக்கான சரியான உவமை...
வசை பாடுவோரும்
இசை மீட்ப்போரும்
இறுக்கி அணைப்பவரும்
இம்சைக் கொடுப்பவரும்
அவரவர் பசிக்கேற்ப
சூட்டின் தகிப்பில்
ருசிப்பார்த்தவண்ணம்.
என்று இடையிடையே நிதர்சணத்தை மிகச்சாதாரணமாய் எடுத்துரைத்து இறுதியாய் உன்னை உபசரித்த உபச்சாரியைப்போய் விபச்சாரி என்கிறாயே... என்று வித்தியாசமான கோணத்தில் ஆண்களைப்பார்த்து வினவியிருப்பது கவிதையின் கூடுதல் சிறப்பு...


                                                 ------------ X -------------

இந்த வாரம் நான் ரசித்த கவிதைகளில் இரண்டாமிடத்தைப்பிடித்தது மொத்தம் ஐந்து கவிதைகள்... (இந்த வாரம் பதிவுலகில் வழக்கத்தைவிட அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் வெளியிடப்பட்டிருப்பது என்னை முழிபிதுங்க வைத்த விஷயம்!!!)என் கதைமாந்தர்கள் என்ற தலைப்பில் கீதமஞ்சரி என்பவர் எழுதிய கவிதை எல்லோரையும் நிச்சயம் கவரும்...

எளிமையான வார்த்தைகளில் ஒரு பொம்மலாட்ட கலைஞனின் பார்வையில் நீள்கிறது கவிதை...

ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!
அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!

விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்
இன்னாருடன் இன்னாருக்கு
இணக்கமாக பிணக்கா என்பதை
இடைக்கிடை நிர்ணயிப்பதும்
நிர்ணயித்ததை நிராகரிப்பதும்...
என்று இயல்பான வார்த்தைக்கோர்ப்பு மிகச்சிறப்பாய் அமைந்து புதுக்கவிதைக்குரிய அத்தனை சிறப்பம்சங்களுடன் மிகச்சிறப்பாய் முடிந்திருக்கிறது...

அடுத்து இரண்டாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் காதல் ஆயிரம் எனும் தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட பகுதி-106,107,108 ஆகியவை...

காதல் ஆயிரம் என்று காதலைப்பற்றி ஆயிரம் பாடல்கள் இயற்றும் முயற்சிதான் இது என்ற எனது கணிப்பு சரியா தவறா என்பது தெரியவில்லை... ஆனாலும் நான்கே வரிகளுடன் முடியும் ஒவ்வொரு பாடலும் காதலின் ஆயிரமாயிரம் சுவைகளைத்தருவது மிக மிகச்சிறப்பு...

பாடல்கள் கொஞ்சம் நிதானமாய் ஒன்றுக்கு இரண்டு முறையாய் நிறுத்தி படிக்கும்போது  அர்த்தம் உணர்ந்து காதலின் சுவையோடு தமிழின் சுவையும் தித்திக்கிறது... ஒவ்வொன்றும் காலத்தால் காக்கப்படவேண்டிய பொக்கிஷம்தான்...

பகுதி-106ல் ஒரு பாடல்...
915.
அங்கே இருந்தெனைக் கொல்லும் அருங்கலையை
எங்கே இருந்து..நீ கற்றாயோ? - தங்கமே!
வேர்வையில் நின்றாலும் வேல்விழியே உன்காந்தப்
பார்வையில் கண்டேன் பருந்து

பகுதி-107ல் ஒரு பாடல்...
917.
மூத்தாடும் ஆசையினால் முன்னூறு முத்தங்கள்
கூத்தாடும் நெஞ்சுள்! குழலிசையே! - பூத்தாடும்
காட்டுக்குள் நாமிணைந்த காட்சி! குருவிகள்
கூட்டுக்குள் கூடும் குளிர்ந்து

பகுதி-108ல் ஒரு பாடல்...
923.
இருமாட்டு வண்டியை நானோட்ட, பின்னே
அரும்பாட்டு பாடி அணைத்தாள்! - வரும்காட்டுப்
பாதை உரைத்தாள்! பருவமொளிர் பார்வையிலே
போதை கொடுத்தாள் புணர்ந்து

இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்வதில் இடம் பிடித்திருக்கும் அடுத்த படைப்பு வாட பிறந்தவள் என்ற தலைப்பில் ராஜி அக்கா எழுதியிருப்பது...
என்னை பற்ற வைப்பது எளிது
தீக்குச்சி தேவையில்லை
உன்னுடைய முடியாது..., என்ற
ஒரு வார்த்தை போதும்...
என்று ஆரம்பத்திலேயே படிப்பரை கவர்ந்திழுக்கும் விறுவிறுப்புடன் ஆரம்பித்திருப்பது மிகச்சிறப்பு...

பிரிவைப்பற்றி பல கவிதைகள் இருக்கலாம்... காதல் கவிதைகள் எழுதும் ஒவ்வொருவரும் நிச்சயம் பிரிவுக்கவிதைகளும் எழுதியிருப்பார்கள்... ஆனாலும் இந்தக்கவிதை முழுக்க முழுக்க வார்த்தைகளில் சுண்டியிழுப்பது மிக அருமை...

கனவிலும் என் கன்னத்தில் தைத்தன,
முட்களாய் உன் முத்தங்கள்??...

பிரிவின் சோகத்தைக்கூட சுகமாய் மாற்றியிருப்பது கவிதையின் கூடுதல் பலம்...

என் நினைவுகளை, உன் தோட்டத்தில்
செடிகளோடு சேர்த்தே புதைத்துவிடு,
பூக்களில் என் வாசமும் இருக்கும்!

இறுதியாய் வாழப்பிறந்தவளை வாடப்பிறந்தவளாக்கி விட்டாயே என்று பிரிவின் சோகத்தை வினவியிருப்பது ஹைலைட்தான்...

ராஜி அக்கா... மனதாரப்பாராட்டுகிறேன்... மிகச்சிறப்பான கவிதையிது...

இரண்டாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் இன்னொரு கவிதை ஹேமா அவர்கள் எழுதியிருக்கும் காதல் சேமிப்பு எனும் கவிதை...

மழை வெறித்து வெயில் காய்ந்தபின் நம் வீட்டின் உதிர்ந்த சருகுகள் எதையாவது எடுத்துப்பார்த்தால் அதனடியில் மட்டும் ஈரம் இருக்கும்... இந்தவொரு சாதாரண நிகழ்வை மனதிற்குள் இருக்கும் பசுமையான நினைவுகளோடு ஒப்பிட்டிருப்பது உண்மையிலேயே கவிதைக்கே உரித்தான மிக மிகச்சிறப்பான விஷயம்...
அடித்து ஓய்ந்த
கனத்த மழை
களைத்துவிட்ட
மூன்றாம் நாளில்
குப்புறக்கிடக்கும்
ஒற்றைச்சருகொன்று
ஒளித்து வைத்திருக்கிறது
உன் பெயரை
மென்னீரம் தடவி
உனக்குள் கிடக்கும்
என் நினைவுபோல்!!

படிக்கும் ஆவலைத்தூண்டுகிறதா?...

இரண்டாம் இடத்தைப்பகிர்ந்து கொண்ட இறுதிக்கவிதை படைப்பாளி என்பவர் எழுதியிருக்கும் கிறுக்கன்கள் எனும் படைப்பு...

மனிதராய்ப்பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் மன வேதனைகள், புலம்பல்கள் நிச்சயம் இருக்கும்... ஆனால் அதன் அளவு வேறுபாட்டில்தான் பைத்தியமும் சாதாரணமும் ஒளிந்து கிடக்கும் என்பதை
புலம்பல்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
உண்டு..
என்று ஆரம்பித்து ஒவ்வொருவருக்குள்ளும் கிறுக்கன் இருப்பான் என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பது சிறப்பு...

                                        ------------- X -------------

எனது ரசனையில் இந்த வாரம் மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பது நான்கு கவிதைகள்...
முதலில் அகிலா என்பவர் எழுதிய காரணிகளை சுமக்கும் இதயங்கள் எனும் கவிதை...

படைப்பாளி எழுதிய கிறுக்கன்கள் எனும் கவிதையின் கருவைப்போலவே இதுவும் தோன்றினாலும் இதன் வார்த்தை கோர்ப்பு இன்னும் கொஞ்சம் ஆழம்தான்... மிக அழகாய் ஆரம்பித்து மிக நேர்த்தியாய் முடிக்கப்பட்டிருக்கும் கவிதை...

சாமன்ய ரசிகன் ஒன்றுக்கு இரண்டு முறை படித்தால்தான் புரியும் புதுக்கவிதை நடை என்றாலும்கூட கவிதையின் கருப்பொருளும், சொல்லியவிதமும் தனிச்சிறப்புதான்...

சில வரிகள்...
சில இதயங்களின்
உள்ளே பூட்டப்படும் சில காரணங்கள்
இன்னதென்று இல்லாமல் நாளாய் அதற்குள்ளேயே வதைப்படும்
சொல்லமுடியா வாதனைக்கு பின்
அவை வடிக்காலற்றுப் போகும்...

நிரம்பி வழியும் நீரின் பொங்கும் பிரவாகமாய்
அவை அமையக்கூடும்..

முழுதும் படிக்க http://www.ahilas.com/2013/07/blog-post_22.html
                   ------------------ X ------------------ 

சுரேஷ் சுப்ரமணியன் என்பவர் ரிஷ்வன் எனும் பெயரில் எழுதியிருக்கும் வாலிக்கு ஒரு லாலி...!-கவிதை எனும் கவிதையும் இந்த வாரம் மூன்றாமிடத்தை அலங்கரிக்கிறது...

 புதுக்கவிதையில் வார்த்தைகளை இவ்வளவு அழகாய் எதுகை மோனையுடன் கையாள முடியுமா என்று என்னை ஆச்சர்யப்படவைத்த கவிதை...

கவிதையின் கருப்பொருள் வாலியின் பெருமைகளை உரைத்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதானாலும், கவிதையின் வார்த்தை நடை என்னை மிகவும் கவர்ந்திழுத்தது...

சில வரிகள் உங்கள் ரசனைக்கு...
தரை மேல் பிறக்கவைத்து
நரை வரை எழுதவைத்து
திரை இசைப் பாடலை
திசை நான்கும் ஒளிரவைத்த – உனை
இரை ஆக்கிக் கொண்டதோ 
இத்தரை...

தீ இன்றி புகை இன்றி 
ஒரு வேள்வி செய்வாய் எழுத்திலே
நூல் இன்றி திரி இன்றி
ஒரு பாடல் நெய்வாய் கணத்திலே..

தொடர்ந்து படித்து கவிதையின் வார்த்தை நடையை முழுமையாக ரசிக்க http://www.rishvan.com/2013/07/blog-post_22.html

             --------------------- X --------------------

சே.குமார் எழுதிய மறக்க முடியா மழைநாள் எனும் மழைக்கவிதை எனை மிகவும் கவர்ந்து அதற்கும் மூன்றாமிடத்தை வழங்கியிருக்கிறேன்...
 கிராமத்தின் மழை வாசனையில் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்களது பால்யத்தை நினைவுபடுத்தும் விதமாக வரிக்கு வரி அமைந்திருப்பதும், கவிதைக்கான இரு படங்களும்... மூன்றாமிடத்தை பெற்றதில் முக்கிய காரணிகள் என்றால் மிகையில்லை...
கருமேகம் கண்டு பயந்தோடி
இருப்பிடம் விரையும் பறவைகள்...
காற்றோடு காதல் கொண்டு
சந்தோஷமாய் தலையாட்டும் நெல்மணிகள்...
லேசான தூறலுக்கே வீடு நோக்கிப்
பாய்ச்சலெடுக்கும் பசுக்கள்...
கனமழை வந்தாலும் மேய்ச்சலை
விடமாட்டோமென மேயும் எருமைகள்..
என்று சூழலை எழுத்துக்களின் மூலமே கண்முன் விரியச்செய்திருப்பது கவிதையின் மிகச்சிறப்பானதொரு அம்சம்...

என்ன இதைப்படிக்கும்போது உங்களுக்கும் பழைய பால்ய பருவத்து மழை அனுபவமெல்லாம் ஞாபகம் வருதா?... தொடர்ந்து படிக்க...

                                      -------------------- X -------------------

மூன்றாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் மற்றொரு கவிதை அம்பாளடியாள் எழுதிய முருகனை வேண்டிப்பாடும் பாடல் ஒன்று...

இந்த வாரம் பதிவுலகில் விநாயகர், முருகர், அம்மன், அல்லா என்று நிறைய கவிதைகள் பக்திப்பிரவாகமெடுத்திருந்தாலும் ஏழையின் வேண்டுதலாக அமைந்திருக்கும் இந்தக்கவிதை மத உணர்வுகளையும் தாண்டி உண்மையிலேயே மனதைக்கவர்ந்தது...

தாயுள்ளம் நிறைந்த தந்தையின் மனம்
நாளெல்லாம் உழைத்துக் களைத்து
நாம் சிந்தும் வியர்வைத் துளியால்
பூமித் தாய் சிரித்தாளொழிய
பூச் சூடும் வழியைக் காணோம் !....

ஏனிந்தப் பொல்லாப்பிங்கே
எவர் கண்டார் எங்கள் துயரை
வான் சிந்தும் மழைத் துளியோ சொல்
நாம் சிந்தும் கண்ணீர் தெரிய ?...!!

முழுதும் படித்து ரசிக்க  
 
முதல் மூன்று இடங்களைப்பிடித்த கவிதைகளை பார்த்தாகிவிட்டது... அதன் படைப்பாளிகள் தொடர்ந்து இதைவிடவும் பல அருமையான படைப்புகளை படைத்திட நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
              ------------------ X -------------------

இனி முதல் மூன்று இடங்களைப்பிடிக்காவிட்டாலும் எனைக்கவர்ந்து டாப் லிஸ்ட்டின் எஞ்சிய இடங்களை அலங்கரிக்கும் கவிதைகளைப்பார்க்கலாம்...

அடுத்த இடம் தேனம்மை லெட்சுமணன் எழுதிய கீழ்க்கண்ட நான்கு கவிதைகளுக்குத்தான்...

http://thenusdiary.blogspot.in/2013/07/blog-post_24.htmlஇறந்த நம்பிக்கைகள்

மிக அருமையான வார்த்தை ஜாலத்துடன் எழுதப்பட்ட கவிதையிது...
தப்பி வரலாம் படகு
யாரும் சுடாமலே
இறந்த நம்பிக்கைகளோடு...
என்று முடித்திருப்பது முத்தாய்ப்பு...

http://honeylaksh.blogspot.in/2013/07/blog-post_23.htmlயாரோ இருவருக்குள்...
ஆண்டாண்டு காலமாக எங்கேயோயாரோ சண்டை போட்டுக்கொண்டேயிருப்பதை புதுக்கவிதைக்கே உரித்தான பாங்கில் சொல்லியிருந்தது ரசிக்க வைத்தது...

http://thenusdiary.blogspot.in/2013/07/blog-post_26.html - ஹீம், ஹாஸ்டலுக்குப் போகவேண்டும்
கல்லூரியில் விடுதியில் தங்கிப்படித்தவர்களுக்கு இந்தக்கவிதை பசுமையான பழைய நினைவுகளை நிச்சயம் கிளறும்... எனக்கும் அப்படித்தான்... அதனாலோ என்னவோ மிகவும் ரசித்தேன்...
               ------------------ X --------------------- 

அடுத்த கவிதை கவிக்காயத்ரி எழுதியது
http://thoorikaisitharal.blogspot.in/2013/07/blog-post_19.htmlமுரண்பட்ட சிந்தனைகள்

வார்த்தைகளில் விளையாடுவதில் உண்மையிலேயே தனித்திறமை பெற்றவர் இவர் என்பது இவருடைய பல கவிதைகளை பார்த்தால் புரியும்...

அதிலும் இந்தக்கவிதை மிகச்சிறப்பு...
பற்றியதை விடாது
பற்றிக்கொண்டு
பற்று கொள்ளும் மனம்...

பற்றியதை
விட்டுவிட்டு
பற்றற்றிருக்க
பற்றுகொள்ளும் மனம்...!
முழுதும் படித்து ரசியுங்கள்...
              ---------------- X -----------------

அடுத்த இடம் தென்றல் சசிகலா அவர்கள் எழுதிய நேரத்தைப்பற்றிய குட்டிக்கவிதை தொகுப்புக்கு...
 http://veesuthendral.blogspot.in/2013/07/blog-post_25.htmlஎல்லாம் என் நேரம்

என்னை மட்டும்
அருகில் நிறுத்திவிட்டு
நிமிடங்களை ஏன்
ஓடவிட்டிருக்கிறாய்
--------------------------
சீக்கிரம் சீக்கிரம் என
நேரத்தை மட்டும் 
எத்தனை முறை தான் 
அழைத்து மடியில் 
அமர்த்துவாய்...
எனை புறந்தள்ளியபடி.

நேரத்தை வைத்து உண்மையிலேயே இவ்வளவு அற்புதமாய் குட்டி குட்டிக்கவிதைகள் எழுத முடியுமா என்று வியந்துதான் போனேன்...

                                ---------------- X -----------------

அடுத்த இடம் ரிஷபன் அவர்கள் எழுதிய இரண்டு கவிதைகளுக்கும்தான்...
சற்றுமுன்புதான்
கண்டுபிடித்தேன்
கூடவே வந்து கொண்டிருந்த
என் நிழலைக் காணவில்லையென்று..
வழக்கமாய் நான்
போய்வருகிற பாதையெல்லாம்
தேடிவிட்டேன்..
படுக்கையைக் கூட
புரட்டிப் பார்த்துவிட்டேன்...
நம்மை பின்தொடர்ந்து வரும் நிழலை திடீரென்று காணவில்லை எனும்படியான ஒரு சாதாரண கற்பனைதான்... ஆனாலும் அதையே மிக அற்புதமான சாதாரண வார்த்தை கோர்ப்புகளில் எளிமையாக நிழலை ஒரு மனிதனுடைய இன்னொரு முகம்போல உவகைப்படுத்தி கவரும் விதமாக எழுதியிருப்பது அற்புதம்...

அதே போலத்தான் அவருடைய மற்றொரு கவிதையும்...
குழந்தைகளை
மிரட்டிக் கொண்டு
செல்கிறாய் நீ.
உன் அதட்டல்
கேட்காத அலட்சியத்தில்
பிள்ளைகள்.
'
மிஸ்.. மிஸ்' என்று
உன்னைச் சுற்றி வரும்
பட்டாம்பூச்சிகளாய்..
என் பால்யம் திரும்புகிறது
அந்த நிமிடம்...
தனது காதலி ஆசிரியையாய் குழந்தைகளுடன் இருப்பதைப்பார்த்து நானும் மீண்டும் குழந்தையாக முடியவில்லையே என்று ஏங்கும் வித்தியாசமான சிந்தனை தொணியில் எழுதப்பட்ட எளிமையான கவிதையிது... நல்ல ரசனை
                                 ------------------------ X -----------------------

அடுத்த இடம் MF நிரோஷன் என்பவர் எழுதிய இரு குட்டிக்கவிதைகளுக்கும்...

நான்கே வரிகளில் நருக் கவிதைகள் எழுதுவது எப்படி என்பதை இவரது கவிதைகள் கற்பிக்கின்றன... சமூக அவல சீர்கேடுகளை குட்டியாய் கவிதை சொல்லியிருப்பது மிகச்சிறப்பு...

நீங்களே படித்து ரசியுங்கள்...

                                           ------------------------ X -------------------------

அடுத்த இடம் இ.பு.ஞானப்பிரகாசன் என்பவர் வாலியின் மறைவுக்கு எழுதியிருக்கும் ஒரு அஞ்சலிக்கவிதைக்கு...

http://agasivapputhamizh.blogspot.com/2013/07/tribute-to-vaali.htmlதமிழ்த்தாயின் தூவல் உடைந்துவிட்டதுகவிஞர் வாலிக்கு ஒரு கண்ணீர்க்கவிதாஞ்சலி

இந்த வாரம் ஏற்கனவே வாலிக்கு அஞ்சலி செலுத்திய ஒரு கவிதைக்கு மூன்றாமிடம் கொடுத்திருந்தாலும் இந்தக்கவிதையும் அதற்கு போட்டி போடும் விதமாக எழுதப்பட்டிருப்பதுதான்...
உனக்கு இரங்கல் பா எழுதவா 
வலைப்பூ தொடங்கினேன் 
என்று 
எனக்குள்ளாக அழுது - மன 
மூலையில் முடங்கினேன்! 
ஆனால் 
நடமாடிய தமிழே! 
உனக்கே இரங்கல் பா 
எழுதாததற்கு 
நான் கற்ற தமிழ் 
எனக்கெதற்கு
என்பதுவும்
இப்படித் 
திட்டமிட்டுத் திட்டமிட்டு
இலக்கிய ரசனை வளர்த்தது 
வாலி பாணி! 
உனக்குப் பின்னே 
இந்தச் 
சேவை செய்ய 
யாரும் 
பிறக்கும் முன்னே 
போகலாமா 
வாலிபா நீ?

தீர்ந்து விட்டதா 
இதற்குள் 
உன் மை
சொல்லியிருந்தால் 
எங்கள் உதிரத்தைக் கொடுத்திருப்போம்! 
இது உண்மை
என்றும் எதுகை மோனையில் வித்தை காட்டியிருக்கும் வார்த்தை கோர்ப்புடைய கவிதையிது...
               --------------------- X ---------------------

அடுத்து பூங்கோதை செல்வன் என்பவர் எழுதிய எனக்குள் விசேசித்தவன் என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்தது...

http://poonka.blogspot.in/2013/06/blog-post_6259.htmlஎனக்குள் விசேசித்தவன்
காதலனுக்கான ஒரு பரிசுப்பொருளை தேடும்போது அது மிகச்சிறப்பானதாக இருக்கவேண்டும் என்று தேடித்தேடி கிடைக்காமல் அவன் எனக்குள் விசேசித்தவன் என்பது எனது மனதுக்கு மட்டும்தான் தெரியும் என்று முடித்திருப்பது காதல் அழகு...

                             -------------------------- X -------------------------

அடுத்து என்னைக்கவர்ந்த கவிதை கோவை மு சரளா அவர்கள் எழுதிய சொற்கள் அடுக்கப்பட்ட அலமாரி...
http://www.saraladevi.com/2013/07/blog-post_3601.htmlசொற்கள் அடுக்கப்பட்ட அலமாரி
படித்துப்பாருங்கள்... நீங்களும் ரசிப்பீர்கள்...

                            ----------------------- X ------------------------

அடுத்து கிரேஸ் என்பவர் எழுதியிருக்கும் தோட்டமும் தொட்டியில் என்றானபின் எனும் கவிதை...

http://thaenmaduratamil.blogspot.in/2013/07/thottamum-thottiyil-endraanapin.html - தோட்டமும் தொட்டியில் என்றானபின்

நகரமயமாதலின் மற்றொரு முகத்தை எளிமையான வார்த்தையில் விளக்கியிருக்கும் கவிதை...

தோட்டமும் தொட்டியில் என்றானபின் என்ற ஒற்றை வரியே கவிதையை மிகவும் ரசிக்கச்செய்தது என்றால் மிகையாகாது...

                               -------------------- X -------------------

அடுத்து மலிக்கா என்பவர் எழுதிய தோல்வி எனும் கவிதை...


வார்த்தை கோர்ப்புகளில் கொஞ்சம் முன்னேற்றம் தேவைதான் என்றாலும்கூட எடுத்துக்கொண்ட கருப்பொருள்தான் கவிதையை ரசிக்க வைத்தது...
வெற்றியை வென்றிட
தோல்வியிடம் தோற்றுபோ
இல்லையேல்
தோல்வியை தோற்கடி!...
என்று கவிதையை முடித்திருப்பது முத்தாய்ப்புதான்...

             -------------------------- X ---------------------------
அடுத்து சுந்தரி அவர்கள் எழுதிய சாரல்கள்-2 குட்டிக்கவிதை தொகுப்பு...
இவரது சாரல்கள்-1 தொகுப்பு நமது முந்தைய வாரத்தொகுப்பில் இரண்டாமிடம் பிடித்திருந்தாலும் இந்தமுறை வார்த்தைகளை கோர்த்த திறன் கொஞ்சம் குறைவுதான்... இருந்தாலும் கவிதைகளும் அதன் கருப்பொருளும் குட்டி குட்டியாய் அழகுதான்...
நீ பார்த்து பேசாமல்,
உன் மூலம் பார்த்து பேசும்
பல உள்ளங்களின்
சந்தோசத்தை கண்டு
ஏக்க பெருமூச்சி விட்டு,
துயரங்களை கண்டு
மனம் கனத்து,
அவ்வப்பொழுது,
தொடர்பினை துண்டித்து விடுகிறாயோ!

- SKYPE

ஏன் திணிக்கிறாய் என்னுள்,
என் அளவிற்கு மேல்!
நான் என்ன‌ உன் மனமா?
எல்லாவற்றையும், ஏற்று கொண்டு
நீ விரும்பும் நேரத்தில்,
தேடி எடுத்து தர!

- என் கைப்
பை
முழுதும் படிக்க http://sindhanasaral.blogspot.in/2013/07/2.html
               ----------------------------- X ------------------------------
இறுதி இடத்தைப்பிடிப்பது தமிழ நம்பி எழுதியிருக்கும் பேதைகளே எனும் கவிதை...
பிறமொழி மோகம் கொண்டு தமிழை மறக்க நினைப்போரை கொஞ்சம் காரமாகவே திட்டியிருந்தாலும் கவிதை சிறப்புதான்...


              ------------------------ X -----------------------

மேலே நான் தேர்வு செய்த கவிதைகள் மட்டும் இல்லாமல் சென்ற வாரம் நான் படித்த மொத்தக்கவிதைகளின் லிஸ்ட் கீழே தருகிறேன்... பெரும்பாலும் சென்ற வாரம் எந்தக்கவிதையையும் நான் மிஸ் பண்ணவில்லை என்று நம்புகிறேன்...

http://imsdsanth.blogspot.in/2013/07/blog-post.html - கண்ணதாசனும் தோற்றுவிட்டான்
http://veesuthendral.blogspot.in/2013/07/blog-post_27.html - காத்திருந்த கருத்த மச்சான்
http://npandian.blogspot.in/2013/07/blog-post.html - கபீஷ் கவிதைகள்-மழலை கவிதைகள்
http://rajiyinkanavugal.blogspot.in/2013/07/blog-post_5570.html திறக்காத காட்டுக்குள்ளே
http://tamilpaingili.blogspot.in/2013/07/blog-post_27.html - எக்காலம் ஆனாலும்
http://kaviyazhi.blogspot.in/2013/07/01092013.html  - பதிவர் கூட்டம் 1-09-2013
http://tnmurali.blogspot.com/2013/07/computer-digital-rajini.html - கணினி நீ ஒரு டிஜிட்டல் ரஜினி
http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_22.html - சிரிகவிதை, பேதை தரும் போதையினால் மிதப்பு
http://kaviyarankam.blogspot.in/2013/07/blog-post_21.html முத்த அறுவடை
http://piliral.blogspot.in/2013/07/blog-post.html - எந்தமிழ் மறமே
http://veesuthendral.blogspot.in/2013/07/blog-post_22.html உறவுகள் மேம்பட
http://mubeensadhika.blogspot.in/2013/07/blog-post_21.html பூணும் சதிர்
http://wordsofpriya.blogspot.com/2013/07/blog-post_22.html பட்டமரத்தின் இலை
http://parithimuthurasan.blogspot.in/2013/07/basho-4_23.html பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-4
http://www.padaipali.net/2011/02/blog-post_01.html கலியுக சீதைகள்
http://arouna-selvame.blogspot.com/2013/07/blog-post_23.html கணபதியும் கணினியும்
http://www.rishvan.com/2013/07/blog-post_24.html முகம் மாறும் மனிதர்கள்-ஹைக்கூ கவிதைகள்
http://www.rishvan.com/2013/07/500.html திருக்குறள் கவிதை வடிவில்-குறள் எண்-500
http://kaviyazhi.blogspot.in/2013/07/blog-post_944.html அடிக்கடி மழைத்துளி
http://iravinpunnagai.blogspot.com/2013/07/10.html உதிரும் நான்-10
http://www.padaipali.net/2013/07/blog-post_25.html பாட்டன் காலத்து பழைய மரம்
http://tnmurali.blogspot.com/2013/07/modern-thiruvilaiyadal.html மீண்டும் திருவிளையாடல்
http://karaiyorakaatru.blogspot.in/2013/07/blog-post_24.html பண்பாட்டுப்போர்வையில் சில பயங்கரவாதிகள்
http://bharathidasanfrance.blogspot.in/2013/07/blog-post_25.html  -பருவம் மின்னிடும் பாவை
http://madhumithaa.blogspot.in/2013/07/blog-post_24.html -அம்ரிதா ப்ரீதம் கவிதைகள்
http://kalaamkathir.blogspot.in/2013/07/blog-post_24.html -இறைவனை இறைஞ்சுகிறேன்
http://www.rishvan.com/2013/07/blog-post_26.html - நெற்றிநிறை குங்குமத்தை சுமந்தவளே-பாடல்
http://www.thanimaram.org/2013/07/15.html-கவிதை பாருங்கள்
http://www.rishvan.com/2013/07/501.html - திருக்குறள் கவிதை வடிவில்-குறள் எண்-501
http://arouna-selvame.blogspot.com/2013/07/blog-post_25.html  - இதுவும் கடந்து போகும்
http://kaviyazhi.blogspot.in/2013/07/blog-post_3139.html  - வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்
http://vayalaan.blogspot.in/2013/07/blog-post_22.html - ராசாவே என் ராசாவே
http://www.padaipali.net/2013/07/blog-post_27.html - பிச்சைக்கார நாடு
http://vimalann.blogspot.com/2013/07/blog-post_413.html - நானும் மற்றவர்களுமாய்
http://iravinpunnagai.blogspot.com/2013/07/11.html உதிரும் நான் -11
http://kaviyazhi.blogspot.in/2013/07/blog-post_1981.html வாலி நீ கடலாழி
http://www.sangkavi.com/2013/07/blog-post_27.html - இதழ்களின் வரிகள்...(அவளுக்காக)

எல்லாக்கவிதைகளையும் படிச்சு ரசிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... மீண்டும் அடுத்த வாரமும் இதே போன்றதொரு தொகுப்பை பார்க்கலாம்...

ஆல் தி பெஸ்ட்... என்ஜாய் மக்களே!!!

 இந்தப்பதிவை படித்த  அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்... நல்ல எழுத்துக்கள் பதிவுலகத்தில் அமுங்கிப்போகாமல் பலரையும் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே இப்படியொரு தொகுப்பு எழுதுகிறேன்... ஆனால் எனது ஏனைய பதிவுகள் எல்லாம் நான் என்ன எழுதினாலும் குறைந்தது 600 பேராவது படிக்கும்போது நான் நல்ல எழுத்துக்கள் எல்லோரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதும் இது போன்ற பதிவுகள் குறைந்தது 150பேர் படிப்பதோடு நின்று விடுகிறது... போனவாரமும் அதே நிலைதான்... இந்த வாரமும் அதே நிலைதான்... எனது வேண்டுகோள் ஒன்றுதான்.... இது போன்ற தொகுப்புகளுக்கு தயவு செய்து இதைப்படிப்பவர்கள் தமிழ்மணம் ஓட்டளியுங்கள்... அப்போதாவது இது பலரையும் சென்றடையட்டும்... (இது எனது ஆதங்கம்தானேயொழிய வேறெந்த உள்நோக்கமும் கற்பிக்கவேண்டாம்...) நன்றி, அன்புடன் - சாய்ரோஸ்