SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, June 27, 2013

கள்ளக்காதல்ல என்னதான்யா இருக்கு?... சில உண்மைச்சம்பவங்களும், அலசலும்!!!


சமீபகாலமாக எனக்கு கிடைத்த ஓய்வு அதிகம் என்பதால் நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் என்னை தொற்றிக்கொண்டது. அப்போதுதான் இதை கவனிக்க நேர்ந்தது. பெரும்பாலும் தினமும் ஒரு கள்ளக்காதல் கொலையாவது இல்லாமல் செய்தித்தாள் வருவதேயில்லை. கொலையாகி வெளியே தெரிந்து செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல்கள் மட்டுமே இவ்வளவு என்றால் வெளியே தெரியாமல் நமது தெருவுக்கு தெரு தொடர்ந்து கொண்டிருக்கும் கள்ளக்காதல்கள் எத்தனையோ என்று மலைக்கத்தோன்றியது.

சமீபகால சில கள்ளக்காதல் செய்திகளை ஒருசுற்று பார்க்கலாம்...

 #  கடலூரைச்சேர்ந்த ஒரு பெண், தனது முதலாவது திருமண நாளன்றே தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கணவனை, கள்ளக்காதலனை வைத்தே தனது கண்முன்னேயே தீர்த்துக்கட்டியிருக்கிறாள்.

·       #   திருப்பூரில் வேலைபார்த்த கணவன், விடுமுறைக்கு தனது சொந்த ஊரான நெல்லைக்கு வந்தபோது, நடுராத்திரியில் மனைவி வேறோரு ஆணுடன் வீட்டிற்கு அருகிலிருந்த இருட்டான இடத்தில் சல்லாபத்தில் ஈடுபட்டதை நேரில் பார்த்து கோபம் தலைக்கேறி மனைவியை வெட்டிக்கொன்றிருக்கிறான்.

·        #  ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஓசூர் அருகே மனைவியைக்கொன்று காரில் வைத்துக்கொண்டு சாலையோரம் காரை நிறுத்தி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தபோது போலீசில் மாட்டிய கணவன் கொடுத்த ஸ்டேட்மெண்ட் ‘’ எனது மனைவி பல வாலிபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவளைக்கொன்றேன்’’ என்பதுதான்.

·         # இன்னுமொரு சம்பவத்தில் தனது சித்தப்பாவின் மனைவியுடன் உறவு வைத்திருந்த ஒரு வாலிபரை, அந்தப்பெண்ணே அவன் திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்ற தகறாரில் குத்திக்கொன்றிருக்கிறாள்.

·         # சமீபத்தில் பரபரப்பாக செய்திகளில் அடிபட்ட சென்னை முட்டை வியாபாரி கொலையில்கூட அவரது ஏடாகூட தொடர்புதான் காரணம் என்பதும் அதிர்ச்சியான செய்தியே.

·         # இது எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு அதிர்ச்சியளித்த செய்தி என்னைச்சுற்றியே நடந்த இதுபோன்றதொரு நிகழ்வுதான். எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் 22வயதுப்பையன் அவனை விட கிட்டத்தட்ட 10வயது அதிகமான ஒரு திருமணமான பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். எனது உறவினர தம்பதி சகிதம் வேலைக்குச்செல்லும் போது இந்தப்பையனுக்கு நல்ல உணவோ, அரவணைப்போ எதுவுமே கொடுக்காமல் ‘’ நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எங்கேயாவது போய் சம்பாதிச்சி டெய்லி நூறு ரூபாயோடதான் வீட்டுக்கு வரனும்னு’’ கன்டிஷன் போட்டிருக்காங்க. அவங்க வீட்டுக்கு எதிரிலேயே சொந்த வீட்டில் இருந்த திருமணமான அந்தப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்ப்பவர். அந்தப்பெண்ணுக்கு பத்து வயதுக்கும் மேற்பட்ட இரு குழந்தைகள். எனது உறவினர் தினமும் வேலைக்குச்சென்றதும் அவரது மகன் எதிர் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு அந்தப்பெண் தினந்தோறும் அவனுக்கு வகைவகையாய் சமைத்துப்போட்டும், ஓட்டலில் பிரியாணி வாங்கிக்கொடுத்தும் கவனித்திருக்கிறாள். காலப்போக்கில் அவர்களுக்குள்ளான ஒருவர் மீது ஒருவருக்கிருக்கும் ஈடுபாடு அதிகரித்து எல்லைமீறிய உறவு வரை சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப்பெண்ணின் கணவர் ஊரிலிருந்து வந்தவுடன் இந்தக்காதல் ஜோடி வீட்டைவிட்டு எஸ்கேப். கடைசியாக போலீஸ் உதவியுடன் அவர்களை தேடிக்கண்டுபிடித்து ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து போலீசும், பையன் வீட்டாரும் சேர்ந்து செம உதை உதைத்தும் அந்தப்பெண் தாலி மற்றும் இன்னபிற நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு நான் கட்டிய புடவையோடு செல்கிறேன். இந்தப்பையனோடுதான் வாழ்வேன் என்று வைராக்கியமாக சொன்னதைப்பார்த்து போலீசாருக்கே அதிர்ச்சி. அவள் கணவனும், குழந்தைகளும் காலில் விழுந்து கதறியும் அவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. சொந்த வீடு, கணவன், இரு குழந்தைகள் என அத்தனையையும் உதறிவிட்டு அந்தப்பையனோடே சென்று விட்டாள். எனது உறவினரும் அந்தப்பையனை வீட்டில் சேர்க்காமல் அடித்து விரட்டியதால் அந்தப்பெண்ணும் அந்தப்பையனும் இருவரும் சேர்ந்து வேறு ஏரியாவுக்குச்சென்றுவிட்டனர். இந்த உறவு நிச்சயம் நீண்ட நாட்கள் நீடிக்காது. கட்டாயம் இருவரும் கொஞ்ச காலத்தில் பிரிந்து திரும்பி வந்து விடுவார்கள் என்றுதான் நம்பினோம். ஆனால் எங்கள் அனைவரது கணிப்பும் தவறாகிப்போனது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் அவர்களுக்குள்ளான உறவு முறியாமல் வேறொரு ஏரியாவில் கணவன் மனைவியாய் அன்யோன்யமாய் குடும்பம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்

   இதில் எது நல்லக்காதல்?... எது கள்ளக்காதல்?... என்று வெளிப்படையாய் வரையறுப்பது வேண்டுமானால் சுலபமாய் இருக்கலாம். ஆனால் ஆணிவேர் வரை சென்று அலசி வரையறுத்தால் சமூக இலக்கணங்கள்கூட தவறாகலாம்.


 சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள், சமூகக்கட்டுப்பாடுகள், ஆன்மீகம் என்று ஊறிக்கிடக்கும் குடும்பவாழ்க்கை முறையிருக்கும் நமது நாட்டிலேயே கள்ளக்காதல்கள் சர்வசாதாரணமாய் தலையெடுக்கத்தொடங்கியிருப்பதும், கள்ளக்காதலில் மனைவியே தனது கணவனை கொல்லுமளவுக்குத்துணிவதும், கணவன் தனது மனைவியை கொன்றொழிப்பதும் தொடரத்தொடங்கியிருப்பதன் ஆணிவேர்தான் என்ன?... 

காதல்ல என்னய்யா கள்ளக்காதல்... நல்லக்காதல்... எல்லாமே காதல்தான்யா என்று கூறும் ஒரு சாரரும் வளர்ந்திருக்கும் சமுதாயம்தான் இப்போதிருப்பது. பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ தன்னுடைய துணைமீது உண்மையான, மனதளவிலான நாட்டமில்லாமல் போய், கல்யாணத்துக்குப்பிறகு ஏதோவொரு சூழலில் தான் சந்திக்கும் வோறொருவர் மீது ஈர்க்கப்படும்போது அவர்களைப்பொறுத்தவரை அதுதான் உண்மையான காதல். ஆனால் சமுதாயத்தின் பார்வையில் அதுதான் கள்ளக்காதல் என்று வரையறுக்கப்படும் என்ற கவலை சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுவதேயில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் எல்லா கள்ளக்காதல்களுக்குப்பின்னாலும் வெறும் மனதளவிலான ஈர்ப்பும், உண்மையான காதல் உணர்வும் மட்டுமே இருக்கிறது என்றும் வரையறுத்து சொல்வதற்கில்லை. பெரும்பாலான கள்ளக்காதலுக்கு காரணம் காம உணர்வுதான் என்பதையும் நிச்சயம் மறுப்பதற்கில்லை.

நீண்ட நாட்களுக்கு முன்னால் நான் வாசித்து எனது மனதில் பதிந்த ஒரு செய்தியிது. ஒரு வெளிநாட்டு நிறுவனத்தால் ஒருவனுக்கு ஒருத்தி என்று இந்தியாவிலிருக்கும் கலாச்சாரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவு அது. அதில் தெளிவாக குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் இதுதான்...

·         # இந்தியாவில் திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட 97சதவிகிதம் பெண்கள் தனது கணவனிடம் தாம்பத்திய உறவில் முழு திருப்தியையும், உச்ச நிலையையும் அடைவதில்லை. ஆனாலும் அவர்களது கலாச்சாரம், அவர்கள் வளர்ந்த சமூக மற்றும் குடும்ப முறை ஆகியவற்றின் மீதான மதிப்பு, தனது கணவன் மற்றும் குழந்தைகள் மீதான அன்பு, தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் மீதான ஈடுபாடு ஆகியவையே அவர்களது கட்டுப்பாடான வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது.

·        #  தாம்பத்திய உறவில் தனது கணவனிடம் முழு திருப்தியைப்பெறாத இந்திய மனைவிகள், தனது கணவன் தன்மீது மிகுந்த அன்பையும், பாசத்தையும், பரிவினையும் பொழியும் பட்சத்தில் தாம்பத்திய உறவில் கிடைக்காத திருப்தி ஒரு பொருட்டேயல்ல. கணவன் காட்டும் அன்பில் கிடைக்கும் திருப்தி, காமத்தில் கிடைக்கும் திருப்தியைவிட மேலானது என்று இந்திய மனைவிகள் தெரிவிப்பதாயிருந்தது அந்த ஆய்வறிக்கை.

இது உண்மையிலேயே கவனிக்கப்படவேண்டிய விஷயம். கள்ளக்காதலின் ஆணிவேரை ஆராய முயன்றால் இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சத்தின் தாக்கம் நிச்சயமிருக்கும் என்பது அக்மார்க் உண்மை.

சாதாரணமாகவே பெண்கள் திருமணத்துக்கு முன்னால் ஒரு ஆண் தன்மீது அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் காட்டுவதாய், எப்போதும் தன்னைப்பற்றியே சிந்திப்பவனாய் உணரும்போது அவன் மீது காதல் கொண்டு அந்தக்காதலின் எல்லையில் தன்னை பெற்று, பாலூட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையே உதறித்தள்ள முடிவெடுக்கும் அளவுக்கு போகிறாள். அதற்கு முக்கிய காரணம் அவன் தன்னை தனக்கானவளாய் சிந்திக்கிறான் என்ற அவளது எண்ணமே. இதேதான் கள்ளக்காதலுக்கான காரணப்பட்டியலிலும் நிச்சயம் முதலிடத்திலிருக்க முடியும் என்பது எனது கருத்து.

திருமணத்துக்குப்பின் ஆரம்ப காலத்தில் கணவனிடம் அதீத அன்பையும், பாசத்தையும் பெறும் பெண்கள் கால ஓட்டத்தில் கணவனின் வேலை, குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றின் நிமித்தமாக பெரும்பாலான தனது நேரத்தை தனிமையில் கழிக்கத்தொடங்கும்போது இதுதான் வாழ்க்கை... இதுதான் தனது பொறுப்பு... என்று எடுத்துக்கொள்ளாமல், தனது கணவனுக்கு தன் மீது பாசமேயில்லை என்று ஏங்குவதும், தன்மீது அக்கறைப்பட யாருமேயில்லை என்று நினைப்பதும் அவர்களை தவறான வழிக்கு வெகுவிரைவில் இழுத்துச்செல்வதற்கான ஆரம்பக்காரணிகள். இதுபோன்ற மனநிலையிலிருக்கும் திருமணமான பெண்கள் தன்மீது அக்கறை கொண்டிருப்பதுபோல பேசும் வேறு ஆண்களின் வலையில் எளிதில் வீழ்ந்து எல்லை கடப்பார்கள்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது படித்த ஒரு ஆங்கில வார்த்தை எனக்கு நினைவுக்கு வருகிறது.

" Man gives love to get sex, 
Woman gives sex to get love "...

உண்மையிலேயே கள்ளக்காதலில் விழும் பெண்களுக்கு காம உறவில் தனது கணவனிடம் கிடைக்கும் அதே அளவு திருப்திதான் ஏறக்குறைய தனது கள்ளக்காதலனிடமும் உடல் ரீதியாக கிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆனால் உறவு முறை, Break the rules எனும் திரில், மனதளவிலான வேறொரு திருப்தி என்பதெல்லாம் கணவனிடம் கொள்ளும் உறவுக்கும், கள்ளக்காதலில் கொள்ளும் உறவுக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்தும் காரணிகள்.

அதேபோல ஒரு ஆண் கள்ளக்காதலியை தேர்ந்தெடுப்பதன் நோக்கம் 99.99 சதவிகிதம் காம அடிப்படையில் மட்டுமே. திருட்டு மாங்காய்தான் இனிக்கும் என்று வளர்ந்தவர்கள் நாம். கோடி பணமிருந்தாலும் ஒரு மாங்காயை திருடித்தின்னும் வாய்ப்பும், ஒரு இளநீரை திருடிக்குடிக்கும் வாய்ப்பும் கிட்டினால் ஜென்மசாபல்யம் அடையும் மனநிலை மாறாத சமூகத்திலிருப்பவர்கள் நாம். அதே ஈர்ப்புதான் ஒரு ஆணுக்கு கள்ளக்காதல் மீதானது.

ஒரு பெண்ணை தனக்கானவளாய் மாற்றுவதில் காலம் காலமாகவே ஆணுக்கு அதீத ஈடுபாடுதான். அதிலும் மற்றொருவனுக்கு சொந்தமான ஒரு பெண்ணை தனக்கானவளாய் மாற்றுவது ஏதோவொரு சாதனை நிகழ்த்தியது போன்ற மனதிருப்தியை ஆணுக்கு அளிக்கலாம். பணம் கொடுத்து விபச்சாரியிடம் போவதைவிட கள்ளக்காதலில் ஆண் அதீத ஈடுபாடு காட்டுவதும் இதற்காகத்தான். அதனால்தான் பெரும்பாலும் தனது மனைவி வெகு அழகானவளாய் இருந்தாலும் கூட காமத்தில் அவளிடம் காட்டாத ஈடுபாட்டை பிற பெண்களிடம் காட்டும் குணம் பெரும்பாலும் ஆண்களுக்கு வாய்த்திருக்கிறது.

இங்கே நான் ஏற்கனவே எனது 
  கதம்ப மாலை...: பாலியல் தொழில் யார் குற்றம்?... படங்களுடன் ஓர் பார்வை!                  
 என்ற கட்டுரையில் சொன்ன அதே வாசகத்தை மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.

‘’ ஆம்பிளைங்கள்ல யோக்கியன்னு எவனுமே கிடையாது. இரண்டே ரகம்தான். ஒன்னு தப்பு பண்றவன்... இன்னொன்னு தப்பு பண்ண சான்ஸ் கிடைக்காதவன் ’’...

இன்றைய உலகின் வேகமான வளர்ச்சியில் செல்போன்களின் பங்கு என்னவோ, அதேதான் கள்ளக்காதலின் வேகமான வளர்ச்சியிலும் அதன் பங்கு என்பதும் ஒரு மறுக்கமுடியாத காரணியே.

அதேபோல கள்ளக்காதலுக்கான முக்கிய காரணிகளின் வரிசையில் இடம் பிடிக்கும் மற்றுமொரு விஷயம்... வேலை மற்றும் குடும்பச்சூழல் காரணமாக கணவன் மனைவிக்கிடையே உண்டாகும் நீண்டகால பிரிவு மற்றும் புரிதலின்மை ஆகிய இரண்டும்...

மற்றபடி வெறுமனே காம திருப்திக்காகவே கள்ளக்காதலில் விழும் ரகத்தினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை இந்தக்கட்டுரையில் தொட எனக்கு விருப்பமில்லை.

இந்த கள்ளக்காதலுக்கு படித்தவர், பணக்காரர், நாகரீகமானவர் என்றெல்லாம் எந்தப்பாகுபாடும் தெரிவதில்லை. கள்ளக்காதலில் விழும் ஒரு ஆணும் பெண்ணும், மனித குலத்திற்கே உரித்தான ஆறாம் அறிவை கழற்றி வைத்துவிட்டு, இடம் பொருள் ஏவல் பார்க்காமல் காமஉறவில் லயிப்பதன் மர்மம் மட்டும் எனக்கு புரிபடவேயில்லை. அந்தளவுக்கா கள்ளக்காதல் ஒருவரை ஆக்கிரமிக்கும்?...

என்ன எளவோ?... என்னவோ?... அவர்களுக்குத்தான் வெளிச்சம்!

மொத்தத்தில் முறைதவறிய உறவுக்கு வழி வகுக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூக எதிர்காலம் மற்றும் தன்னைச்சார்ந்தவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு நிமிடமாவது சிந்தித்து தெளியலாம். தன்மீது தனது கணவனுக்கு அக்கறையில்லை, அரவணைப்பில்லை என்று நினைக்கும் பெண்கள், தனது கணவன் ஓய்வின்றி உழைப்பதெல்லாம் தனக்கும் தனது குடும்பத்திற்குமான சிறந்த எதிர்காலத்திற்காகவே என்பதை ஒரு நிமிடமாவது மனதில் நிறுத்தவேண்டும்.

அதேபோல கள்ளக்காதலில் லயிக்கும் ஒவ்வொரு ஆணும் தனது மனைவி அதேபோல வெறொருவனுடன் கள்ளக்காதல் கொண்டால் தனது நிலை என்ன என்பதை ஒரு நிமிடம் சிந்திக்கலாம்.

மற்றபடி " தீதும் நன்றும் பிறர்தர வாரா " என்ற வரிகளோடு இந்தக்கட்டுரையை முடிக்கிறேன்...


10 comments:

 1. நல்ல அலசல்//. தவறு செய்துவிட்டு அதுக்கொரு நியாயத்தை நாமே கற்பிச்சுக்குற மாதிரிதான்.., கணவன் கவனிக்கலை, அன்பில்லைன்னு கணவகிட்ட அன்பில்லைன்னா குழந்தைகளிடம் அதை பெறலாமே!?

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாய் சொன்னீர்கள்... நமது நாட்டின் நடக்காத பல விவாகரத்துக்குப்பின்னால் இருந்து காத்துக்கொண்டிருப்பது குழந்தைகள் எனும் பந்தம்தான்...

   Delete
 2. நல்ல அலசல் கட்டுரை...

  தீதும் நன்றும் பிறர்தர வாரா - இது கணியன் பூங்குன்றன் சொன்ன புறநாநூறு பாட்டு....

  ReplyDelete
  Replies
  1. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி... திருத்திவிட்டேன்... தவறுக்கு மன்னிக்கவும்

   Delete
 3. நிறைய கருத்துக்களை குறிப்பிட்டுள்ளீர்கள். அப்புறம் உங்கள் உறவு பையனின் கதை. அவர்களை முதன் முதலில் இணைத்தது, இன்று வரை இணத்திருப்பது எது?. அவர்கள் மற்றொருவரின் மீது காட்டிய அன்பாய் தானே இருக்க முடியும்.நிச்சயம் முதல் நாளே கட்டிலுக்கு சென்றிருக்க மாட்டார்கள்.ஆனால் அதனால் பாதிக்கப் பட்டதென்னவோ அவளின் இரு குழந்தைகள்.அந்த பையனால் முடிந்தது,கணவனால் முடியாமல் (செக்ஸ் இல்லை)போனது எதனால்?.எவருமே ஏளனமாய் தான் பார்ப்பார்கள் என தெரிந்தும் கட்டிய புடவையோடு அந்த பையனை நம்பி அவளை செல்ல வைத்தது எது?. இது போன்ற நிறைய "எது" க்கள் என்னுள் கேள்வியாய் நிற்கிறது.இன்றைய நிலையில் அந்த பையனுக்கு "அவள்" நல்ல மனைவி. முன்னாள் கணவருக்கு "அவள்" நடத்தை கெட்டவள். (மனைவி) அமைந்ததை அவனுக்கு வரமாகவும்,அவருக்கு சாபமாகவும் மாற்றிய இறைவன் நல்லவரா? கெட்டவனா?.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சேக்காளி... இதன் மாறுபட்ட கோணம் குறித்த ஒருவரின் எழுத்துக்கள் எனக்கு இமெயிலில் வந்தது. அதை நாளை பதிவாக எழுதுகிறேன்... படியுங்கள்,,, என் மனதைத்தொட்டது அது... நிச்சயம் உங்கள் மனதையும் தொடும்.

   Delete
 4. நல்ல அலசல்..

  ReplyDelete
 5. ஒவ்வொருவர் மனநிலையிலும் நின்று நன்கு அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.நன்றி.

  ReplyDelete