SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, June 29, 2013

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா?...!!!
இன்று சனிக்கிழமை... சனிக்கிழமை சாயந்திர நேரத்தை நினைத்தாலே வாரம் முழுவதும் உழைக்கும் கூட்டத்துக்கு  ஒரு எனெர்ஜி ''டானிக்''தான். இன்று சாயந்திரம் முழுவதும் டாஸ்மாக்... டாஸ்மாக்... டாஸ்மாக்தான்....!!!

தமிழர்களின் எதிர்காலத்துக்கான மிகப்பெரிய சவாலாக, அச்சுறுத்தலாக நடுநிலையாளர்களால் இன்று விமர்சிக்கப்படுவது தமிழக அரசின் மது விற்பனைக்கொள்கை. அரசே மதுப்பழக்கத்துக்கு எதிரான விளம்பரங்களுக்காகவும், விழிப்புணர்ச்சிக்காகவும் மது விற்ற காசிலிருந்தே நிதி ஒதுக்குவது செம காமெடி!!!

குடி குடியை கெடுக்கிறதோ, இல்லையோ?... ஆனால் அது இன்று அரசாங்கத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது!!!

சரி... தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படவேண்டும் என்று ஆங்காங்கே வலியுறுத்தப்பட்டும், அரசு தரப்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராய பிரச்சினை அதிகரிக்கும் என்று சப்பைகட்டு கட்டப்படுவது நியாயம்தானா?...

பூரண மதுவிலக்கு நிஜமாகவே சாத்தியமானதுதானா?... இல்லையா?...

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுவோர் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டும் பட்ஜெட்டில் உதிரி வருமானத்தை காட்டும் பிற மாநிலங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒருபக்கம் இலவசங்களை வழங்குவதுபோல வழங்கிவிட்டு மறுபுறம் அன்றாடம் காய்ச்சிகளின் கோவணத்தைகூட விட்டுவைக்காத அளவுக்கு உலைவைக்கும் டாஸ்மாக்தான் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.

அரசே மதுபானக்கடைகளை ஏற்று நடத்தும் முன்னர் இருந்த மக்களின் குடிப்பழக்க சதவிகிதத்திற்கும், டாஸ்மாக் ராஜ்யத்திற்கு பின்னர் நிலவும் குடிப்பழக்க சதவிகிதத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம் உருவானதன் உண்மை பின்னனி என்ன?...

காலஓட்டத்தில் மாறிவரும் நாகரீக பழக்கவழக்கம்தான் காரணமா?...

இல்லை ஒருகாலத்தில் தனியாரால் அதிகபட்சம் ஓரிரு கடைகளே ஒரு ஏரியாவுக்கு என்று இருந்த நிலைமையை இன்று அரசாங்கம் தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடைகள் எனுமளவுக்கு அதிகரித்திருக்கும் விகிதாச்சாரம்தான் காரணமா?...

ஒருகாலத்தில் மதுக்கடைகள் முன்பு சென்று நிற்க, குடிப்பவருக்கே ஏற்படும் கூச்சம், இன்று எவரிடமும் துளிகூட இல்லாமல் போன சமூக மாற்றம் ஏற்பட்டது எப்படி?...

குடிப்பழக்கம் மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்பட்ட சமூகத்தில் இன்று தொட்டதற்கெல்லாம் பார்ட்டி எனும் கலாச்சாரம் மூலம் குடிப்பழக்கம் நாகரீக அடையாளமாக மாற்றப்பட்டது எப்படி?...

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே குடித்த காலங்கள் கடக்கப்பட்டு, இன்று குடிக்கும் பெண்களின் சதவிகிதமும் அதிகரித்து வருவதன் காரணிகள் என்ன?...


ஒருகாலத்தில் பாண்டிச்சேரியும், கோவாவும் குடிப்பவர்களின் சொர்க்கபுரியாக இருந்த நிலைமை மாறி, இன்று தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களுமே பாண்டிச்சேரி, கோவாவாக மாறியதெப்படி?...

இன்று குடிப்பழக்கமென்பது கெட்டபழக்கம் என்ற நிலையிலிருந்து அதுவும் ஒரு பழக்கம் என்ற மட்டில் மாறியதெப்படி?...

இந்த மாற்றம் காலஓட்டத்தால் உருவானதா?...

இல்லை அரசின் டாஸ்மாக் விற்பனையால் உருவாக்கப்பட்டதா?...

இல்லை... குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்பதை நன்கு உணர்ந்தும் நாளுக்குநாள் படித்தவர், பாமரர் என்ற பாகுபாடின்றி டாஸ்மாக் விற்பனையை உயர்த்திக்கொண்டிருக்கும் பொதுமக்களால் உருவாக்கப்பட்டதா?...


காலங்கள் மாற மாற... செல்போன் பயன்பாடின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி, மாதாந்திர சம்பள / வருமான விகிதாச்சார வளர்ச்சி என வளர்ந்த பல்வேறு காரணிகள் போலவே குடிப்பழக்கமும் ஒரு சமூக வளர்ச்சியாய் வளர்ந்திருக்கிறது.

செடியாய் இருக்கும்போதே வெட்டியெறியாமல் இருந்துவிட்டு, இன்று விழுதுவிட்டு ஆலமரமான பின் குய்யோ முறையோ என்று பொங்குவதால் மட்டும் பூரண மதுவிலக்கு சாத்தியப்படுமா?...

அரசாங்கம் நினைத்தால் முடியாதது என்று எதுவுமில்லைதான்... ஆனால் டாஸ்மாக்கிற்கான சப்ளை முழுவதும் கட்சி பாகுபாடின்றி அரசியல்வாதிகள் நடத்தும் மது தொழிற்சாலைகளிலிருந்துதான் வாங்கப்படுகிறது என்பதால் எந்த அரசு வந்தாலும் பூரண மதுவிலக்கு பற்றி சிந்திக்குமா?... என்பது கேள்விக்குறிதான்.


மற்றபடி டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராய பிரச்சினை அதிகரிக்கும் என்று கூறுவது அரசின் மீதிருக்கும் மரியாதையைத்தான் கெடுக்கும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தி ஒழிக்க அரசாங்கத்தின் சிறப்புத்துறைகள் இருக்கும்போது அதை திறம்படச்செயல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புதான்.

தமிழகத்தில் மட்டுமே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அண்டை மாநிலங்களில் அமல்படுத்தாத நிலையில், குடிப்பவர்கள் அங்கே சென்று குடிப்பார்கள் என்பதும் வீண்வாதம்தான்.

தினமும் வேலையிலிருந்து வரும்போது பத்தடிக்கு ஒன்றென கண்ணில் படும் கடையில் வாங்கிக்குடிப்பதற்கும், வெளிமாநிலத்திற்கு வேலை மெனக்கெட்டு பயணித்து சென்று குடிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது?...

பூரண மதுவிலக்கை அரசாங்கமே அமல்படுத்தும் நிலையில் அதன் கஜானாவை நிரப்பும் மாற்று வழிகள் என்னென்ன?... அதற்கும் வரி, வட்டி, கிஸ்தி என ஆயிரம் வழிகளிருக்கத்தான் செய்யும்...

அதெல்லாம் சரிதான்... ஆனால் இன்றைய சமூக சூழலில் அரசே பூரண மதுவிலக்கை அமல்படுத்தினாலும் அதை ஏற்க இன்றைய மக்கள் தயாரா என்பது மிகப்பெரிய கேள்விதான்...

ஏனெனில் குடி இன்று சமூகத்தில் வெறும் பழக்கம் என்ற எல்லையையும் தாண்டி, சந்தோஷக் கொண்டாட்டத்திற்கான, நட்பிற்கான மற்றும் ரிலாக்சேஷனுக்கான அடையாளமாய் மாறி ஊறிக்கிடக்கிறது. குடியில்லாத வாரயிறுதியை இன்று எத்தனை பேரால் நினைத்துப்பார்க்க முடியும் என்பதும் கேள்விக்குறியே... (பூரண மதுவிலக்கை மேடைகளில் முழங்கும் அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில்கூட குடி மொத்தமாய் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டம் கூட்டப்பட்டு தள்ளாடுவது அரசியல் வேடிக்கைதான் !!!)

 இன்றைய சனிக்கிழமைகளின் சாயந்திரவேளையில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளின் வாசலில் அலைமோதும் கூட்டத்தைப்பார்த்தால் கிர்றடிக்கிறது. சில நேரங்களில் கூட்டத்தைக்கட்டுப்படுத்த போலீஸ்காவல், வரிசை வேறு!!!...

அதேபோல பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் பட்சத்தில் அது நட்சத்திர ஓட்டல்களின் பார்களுக்கும், பெரியவர்கள் சிலரின் வீட்டிலேயே இருக்கும் மினிபார்களுக்கும் மற்றும் வீட்டிலேயே குடிக்கும் பழக்கம் கொண்ட ஒரு சிலருக்கும்கூட பொருந்துமா?...

அதாவது மாநிலத்தில் மது விற்பது மட்டும் நிறுத்தப்படுமா?... இல்லை குடிப்பதே குற்றம் என்று நிலைப்படுத்தப்படுமா?... என்பதும் பூரண மதுவிலக்கு எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய கேள்விதான்.

இதனால் பூரண மதுவிலக்கு கூடாது என்பதல்ல வாதம்... அதை ஏற்றுக்கொள்ள இந்த சமூகம் தயாரா என்பது மட்டும்தான் கேள்வி...

மற்றபடி அரசாங்கமும், சமூகத்தின் தலையாய அங்கமாகிய ‘’ குடிமக்கள் ‘’ நாமும் ( I mean Citizens !!!) சேர்ந்து மனது வைத்தால் பூரண மதுவிலக்கு என்பது ஆரம்பத்தில் கொஞ்சகாலம் கசப்பான மருந்தாக தெரிந்தாலும், எதிர்கால சமூகத்துக்கு நிச்சயம் அது சிறப்பானதொரு தொடக்கம்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்களில்லை...

‘’குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’’ என்பதுபோல இல்லாமல் உண்மையிலேயே பூரண மதுவிலக்கு வருமா?...பார்க்கலாம் வாய்ப்பிருக்கிறதா என்று?...

நன்றி :- படங்கள் - Google

14 comments:

 1. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் பூரண மது விலக்கை கொண்டு வர முடியும். இப்படி மதுவுக்கு அடிமையாகி போன காரணம், ஊடகங்கள், அரசியல், தனி மனித ஒழுக்கமில்லாமை, கடவுள் மீதான பயமில்லாமை போன்றவைதான்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ராஜி... எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியமான விஷயம்தான்...

   Delete
 2. Saturday - 'Water'day...!

  தானாக திருந்தினால் தான் உண்டு...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சரிதான்... தானாக திருந்துவதும் மிகப்பெரிய மாற்றமே!

   Delete
 3. பூரண மதுவிலக்கு கொண்டுவந்தா இந்த படுபாவிங்க காய்ச்சி குடிக்க ஆரம்பிச்சிடுறானுங்க...


  நாட்டில் நல்லதொரு கொள்கை வேண்டும்
  நம் பொருளாதார வீச்சிக்கு இதுவும் ஒரு காரணம்...

  ஆனால் இதில் தான் அதில லாபம் கிடைக்கிறது என்று அரசு ஏமாற்றிவருகிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சௌந்தர்... ஆனாலும் அரசை மட்டுமே குறை சொல்லிக்கொண்டிருக்காமல் திண்டுக்கல் தனபாலனும், ராஜியும் மேலே சொன்னதுபோல் பொதுஜனமும் கொஞ்சம் திருந்தலாம் இல்லையா?...

   Delete
 4. புலி வாலைப்பிடிச்சிக்கிட்டு இருக்காங்க.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு அமல்படுத்த மாட்டாங்க சார்.

  ReplyDelete
  Replies
  1. புலிவால் பிடிச்சிட்டு இருக்கிறது... மிகச்சரியான உதாரணம்தான் சுஜி!!! Well done.

   Delete
 5. தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது யாது எனில்: "மது மயங்கு பூங் கோதை மாணிழாய்.." (அதாவது தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூல்) தமிழ் கலாச்சாரத்துக்கு மது ஒன்றும் புதிது அல்ல!!!! நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்!!!!

  ReplyDelete
  Replies
  1. சரிதான்... நான் மதுப்பழக்கம் எப்போதிலிருந்து தமிழகத்தில் இருக்கிறது என்று கேட்கவில்லையே... பழந்தமிழகத்திலிருந்தே இருப்பதால் அந்தப்பழக்கம் சரியென ஆகிவிடுமா?... இதே தமிழ்கூறும் நல்லுலகம்தான் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்று கூறியிருக்கிறது. குடிக்கும் படித்தவர்களையும், பணக்காரர்களையும் மட்டுமே பார்த்தவர்போல நீங்கள்... குடிப்பழக்கம் எப்படியெல்லாம் ஒரு குடும்பத்தை சீரழிக்கும் என்பதை உணர்த்த இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட லட்சோப லட்சம் குடும்பத்தலைவிகள் இருப்பது உங்களுக்குத்தெரியுமா?... நானும் குழம்பவில்லை... யாரையும் குழப்பவுமில்லை... ஒருவேளை நீங்கள் குழம்பியிருந்தால் உங்கள் குழப்பம் என்னவெனக்கூறுங்கள்... முடிந்தால் விளக்குகிறேன்... கருத்துக்கு நன்றி!

   Delete
  2. விருந்தோம்பல்,முக்கிய நிகழ்வுகள் மற்றும் வாரக்கடைசியில் ஒரு நாளே, மாதத்துக்கு இரு நாளே குடிப்பது ஒன்றும் தவறில்லை, வெக்கபட வேன்டிய அவசியமும் அல்ல. நீங்கள் குறிப்பிடுவது குடிப்பழக்கம் (Alcoholism) அதாவது கட்டுப்பாடற்ற மதுப்பழக்கத்தைப் பற்றியது. இது ஒரு நோய். தகுந்த சிகிச்சை தெவை! திடீர் என நிறுத்திநாள் Alcohol withdrawal syndrome, delirium tremens போன்ற நோய்களால் இறக்ககூட நேரிடலாம். ஒரு புள்ளிவிபரத்தின் படி 90% நபர்கள் மது அருந்துவதாகவும் அதில் 10% கட்டுப்பாடற்ற/பிரச்சனையான மதுப்பழக்கத்தை கொண்டுள்ளனர் (இதற்கு பல காரனங்கள் உண்டு) எனவும், உலகில் நீர், தேனீர்ருக்கு அடுத்து பியர் மூன்றாவதாக அதிகம் அருந்தும் பாணமாக உள்ளதாகவும் கூறுகின்றது! பூரண மதுவிலக்கு கூடாது அப்படி வரவும் கூடாது!

   Delete
  3. //விருந்தோம்பல்,முக்கிய நிகழ்வுகள் மற்றும் வாரக்கடைசியில் ஒரு நாளே, மாதத்துக்கு இரு நாளே குடிப்பது ஒன்றும் தவறில்லை, வெக்கபட வேன்டிய அவசியமும் அல்ல.// அய்யா இப்படிதான் என் நண்பர்கள் பலர் குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் பின்னால் மாதமாய் இருந்தது வாரமானது பின் வாரமிரு முறை ஆகி பின்பு நாள்தோறும் ஆகி விட்டது இது மட்டுமல்லாமல் விபத்து உடல்ஊனம் மற்றும் நோய்கள் என நடைபிணமாகி போனார்கள் பள்ளி கல்லூரி நாட்களில் விளையாட்டு மற்றும் கலைகளில்என்னைவிட முன்னணியில் இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கும் நிலையை பார்க்கும் போது மனது கனத்து விடுகிறது

   Delete
 6. மதுவை பற்றி உங்கள் மனதில் உள்ளதை கொட்டியுள்ளீர்கள்................ உங்களை போல் அன்றாடம் மது குடியர்களை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருபவர்களில் நானும் ஒருவன் ............குடிபதற்கான சமூக பொருளாதார காரணங்களை நீக்க வேலை செய்வதே இதற்க்கு ஒரே தீர்வு !

  ReplyDelete
 7. கவிதை வீதி... // சௌந்தர் //June 29, 2013 at 2:21 PM
  //பூரண மதுவிலக்கு கொண்டுவந்தா இந்த படுபாவிங்க காய்ச்சி குடிக்க ஆரம்பிச்சிடுறானுங்க...................// இன்றும் எங்கள் கோவில்களில் மது பொங்க வைத்தல் என்ற சடங்குடனே திருவிழா ஆரம்பிகின்றது அது 7 ஆம்நாள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க படுகிறதுஅது அன்றுடன் சரிஅதற்காக வருடம் பூராவும் எல்லோரும் குடித்து விட்டு அலையவில்லை ! மேலும் கள்ளசாராயம் காய்ச்சிய போது குடிபாளர்களின் எண்ணிக்கை என்ன தற்போது உள்ள நிலை என்ன ? .............அரசாங்கமே மது விற்கும் போதுமது குடிப்பவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் தானே

  ReplyDelete