SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, June 28, 2013

இ-மெயிலில் வந்த கள்ளக்காதல்...!


நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு இமெயில்... கள்ளக்காதல் என்பதன் மற்றுமொரு பரிமாணத்தைப்பற்றியது.

வெறுமனே உடல்ரீதியானதாக, கள்ளக்காதலானது தவறான செய்கையாக, சமூக குற்றமாக விமர்சனப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில், கள்ளக்காதலையே ‘’ இரண்டாவது காதல் ‘’ என்று விமர்சித்து ஆதரிக்கும் தொனியிலான கட்டுரை அது.

இதைப்படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கட்டுரையிலிருக்கும் மற்றுமொரு கோணமும், இதன் நியாமும் நிச்சயம் சில மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல காரணங்களால்தான் இன்றும் பல (கள்ளக்)காதல்கள் வெளிப்படுத்தப்படாமல் சமூகத்துக்குள் புதைந்து கிடக்கின்றன என்று ஆணித்தரமாய் நம்பலாம்.

மற்றபடி நண்பர் அனுப்பிய இமெயிலை அப்படியே கீழே தருகிறேன். இது என்னுடைய படைப்பு அல்ல... இதை அனுப்பிய நண்பருக்கும், இந்த கட்டுரையின் ஒரிஜினல் ஆதருக்கும் எனது நன்றிகள்.

இதைப்படிக்கும் உங்களில் யாருக்காவது இந்த கட்டுரையாளரின் வலைப்பூ முகவரி தெரிந்தால் எனக்கு வழங்கவும். (எனக்கு இமெயில் அனுப்பிய நண்பருக்கு வலைப்பூ முகவரி தெரியவில்லை!)

Subject: இன்னொரு காதல்! - இன்னொருவனின் கனவு - புதிய தொடர் 

அதிகம் நிரப்பப்பட்ட எதற்கும் ஒரு அபாயம் இருக்கிறது. அது பறக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ததும்பி வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,’’ மனைவியுடனான செல்பேசி அழைப்பின் முடிவில் சிரித்தபடி சொன்னான் நண்பன்.

நடு இரவில் சென்னை-பெங்களூரு நாற்கரச்சாலையில் பயணித்தபடி இருந்தோம். தூக்கம் தவிர்க்கவென பொலிரோவின் கண்ணாடிகளை இறக்கி விட்டதும் குளிர்பனி உள்ளே நிரம்பியது.

‘’ உண்மையில் எதுவும் முழுமையாக நிரப்பப்படுவதில்லை... எதுவும் நிரம்பவுமில்லை’’ என்றேன்.

‘’இடமிருந்தாலும் மற்றொன்று நிரம்ப சமூக அனுமதியும் இல்லை. இதுவும் நிஜம்தானே?’’ என்றான் நண்பன்.

உண்மையில் தனிமனித தேடலுக்கும், சமூக எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான பெரிய இடைவெளி அது.

கனவு காணும் சுதந்திரம் நிரம்பிய சினிமாவிலும் இன்னும் இந்த இடைவெளி தொடப்படாமல்தான் இருக்கிறது... இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில திரைப்படங்கள் ஞாபகம் வருகின்றன... முழுதும் சொல்லப்படாமல் நிறைய திரைப்படங்களில் கடக்கவும் பட்டிருக்கின்றன.

   மிக இயல்பாக நிகழ்கிற, மனத் தடையற்ற ஒரு சமூகத்தில் மிக எளிதாக வெளிப்பட்டிருக்கும் சாத்தியம் கொண்ட, இந்த இன்னொரு காதல், வெவ்வேறு சூழல்களுடன் தமிழின் முக்கிய இயக்குனர்களின் கனவாக நம்முன் விரிந்திருக்கின்றன. வெவ்வேறு காலகட்டங்களில் கே.பாலச்சந்தரின் சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், பாரதிராஜாவின் முதல் மரியாதை, பாலு மகேந்திராவின் மறுபடியும், ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, சேரனின் ஆட்டோகிராப், இவை எல்லாமே ஆண்களின் பார்வையில் இன்னொரு காதலை, அதன் குழப்பங்களை, அவஸ்தைகளைச் சொல்லியிருக்கின்றன. அவர்கள், ருத்ராய்யாவின் அவள் அப்படித்தான், இயக்குனர் ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது ஆகியவை இருபது வருடங்களுக்கு முன் இன்றைய சூழலை விவரிக்கின்றன. எனினும், ஒரு பெண்ணிற்கு மறுபடி ஒரு காதல்திரள்வதை, ஏனோ ஒருவித மனத்தாங்கலுடன்தான் இவை எல்லாமே அணுகியிருக்கின்றன.

இன்னொரு காதலில், ஆணின் இன்னொரு காதல், பெண்ணின் இன்னொரு காதல் என்பதாக பிரித்து பொருளும், தீர்வும் சொல்லும் மிக ஆபத்தான, அபத்தமான கடமையையும் தமிழ் சினிமா வலிந்து தானே ஆற்றியிருக்கிறது. தமிழ்சினிமாவின் மூத்த தலைமுறை இயக்குனர் கே.பாக்யராஜின் முக்கியமான படமாகக் கருதப்படும் 'அந்த ஏழு நாட்களில்' இடம்பெற்ற கிளைமாக்ஸ் வசனம் 'என் காதலி உனக்கு மனைவி ஆகலாம் சாரே, ஆனால் உன் மனைவி என்காதலி ஆகமுடியாது' என்பது அந்தக்கட்டுச்சோற்றின் ஒற்றைப்பருக்கை.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி என்று பெண்ணுக்கு நிகழும் இன்னொரு உறவைப் பற்றி தமிழ் சினிமா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தபோது, அதே கால கட்டத்தில், எண்ணற்ற காதல்களுடன் வாழும், ஒரு பெண்ணைச்சொல்லியிருந்த தி.ஜானகிராமனின் 'மரப் பசு' இலக்கிய உலகில் பெற்ற மதிப்பையும், அங்கீகாரத்தையும், கவனித்தும் கூட ஏன், கனவின் மொழியில் அது முயற்சி செய்யப்படவில்லை என்பது இன்றும் பதில் யூகிக்க முடிகிறகேள்விதான். இலக்கியத்திற்கான சுதந்திரம், சினிமாவினால் இன்னும் தொடப்படாமலேயே இருப்பது, சமூகத்தின் மொத்தப்பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

தனிமனித உணர்வுகள் சார்ந்து இயங்கும் மேற்கத்திய உலகிலும் கூட, இன்னொரு காதலுக்கு அடைப்புக்குறி இட்ட விதி சொல்லப்படுகிறது..."உனக்கும் எனக்கும் இதற்கு முன், எவ்வளவு காதல்கள் வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும், நாம் சேர்ந்து வாழ்கிற கடைசி நாள் வரைக்கும் நமக்கு மற்றொரு உறவு இருக்கக்கூடாது".

இன்னொரு காதலில், அப்படி என்னென்ன பிரச்னைகள் அவிழக்கூடும்? 'ஸ்லம் டாக் மில்லியனர்' மூலம் பரவலாக நமக்கு அறிமுகமான டேன்னி போயில் இன் இன்னொரு படமான திபீச்(௨௦௦௦), எழுத்தாளர் அலெக்ஸ் கர்லண்டின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். லியானர்டோ டி கார்பியோ நடித்தது. ஓர் அமெரிக்க இளைஞன் கோடைகால விடுமுறை ஒன்றில், வித்தியாசமாக எதையாவது அனுபவிக்கும் திட்டத்தில், தாய்லாந்து வருகிறான். அங்கே டேபி என்னும், அதீத மனநிலையுடன் கூடிய நபரைச்சந்திக்கிறான். டேபி அங்கே ரகசியத் தீவொன்று இருப்பதாகவும், அதில் ரகசிய மக்கள் சமூகம் வாழ்வதாகவும், அது ஒரு பூலோக சொர்க்கம் என்றும் சொல்கிறான்.. தற்கொலை செய்து கொள்ளும் டேபி, டி காப்ரியோவுக்கு மேப் ஒன்றை விட்டுச்செல்கிறான். டி காப்ரியோ ஒரு பிரெஞ்சு இளம் ஜோடியியுடன் அறிமுகமாகிறான். அவர்களை தன்னுடன், அந்த ரகசிய தீவுக்கு பயணிக்க சம்மதிக்க வைக்கிறான்... அவர்களின் பயணம், அந்த அற்புதத்தீவு(கோ பி பி), அந்த ரகசிய சமூகம், அவர்களது அனுபவம்தான் படம். முக்கியமான திருப்பமாக அந்தப்படத்தில் நிகழ்வது, டி காப்ரியோவுக்கும், அந்த பிரெஞ்சு ஜோடியிலுள்ள பெண்ணிற்கும் ஏற்படும் காதல்தான். அந்தப்பெண், டி காப்ரியோவிடம் தன் காதலை சொல்கிறாள். கடற்கரையிலேயே செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். தங்களது காதலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். எனினும், அது மெல்ல மெல்ல அந்த ரகசிய சமூகத்திற்கு தெரிய ஆரம்பிக்கிறது. கிசுகிசுக்கள் உலா வருகின்றன. பிரெஞ்சு பெண்ணின் காதலன் அளவற்ற கோபத்துடன், டி காப்ரியோவிடம் வாக்குவாதம், செய்துவிட்டு சொல்கிறான், 'அவள் உன்னிடம் சந்தோசத்தைக்காணுகிறாள்' என்கிற ஒரு விசயத்தைத்தாண்டி, இந்தக்காதலை நான் ஒத்துக்கொள்ள எந்த நேர்மையும் கிடையாது’’ அப்புறம் டி காப்ரியோவும், அந்த பிரெஞ்சு காதலியும் வெளிப்படையாகவே சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.. அந்த ரகசிய சமூகம் அவர்களை அங்கீகரிக்கிறது. அதற்கப்புறம் நிறைய குழப்பங்களுடன் பயணிக்கும் தி பீச் இல் 'இன்னொரு காதல்' பற்றிய சுவாரஸ்யமான தகவல், நமக்கு உதவக்கூடியது.

திரைப்படத்திற்கும் அதன் மூலமான நாவலுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது. அலெக்ஸ் கர்லண்டின் நாவலில்(அதுவும் தி பீச் தான்), கதாநாயகன் பிரிட்டிஷ்., அமெரிக்கன் அல்ல. அடுத்து, அந்த பிரெஞ்சு பெண்ணிடம் மெல்லிய காதல் உணர்வுகள் எழுந்தாலும், அவர்கள் பழகினாலும், அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை. 'தன் நண்பனைக் காயப்படுத்தும் செயல்' என கதாநாயகன் கருதுகிறான். டேன்னி போயில் இன் ஹாலிவுட் திரைப்படமாக அது உருமாறும்போது, நிகழ விரும்பாத இன்னொரு காதலின் பிரிட்டிஷ் கனவு, அமெரிக்கர்களின் காதல் பற்றிய எளிய பார்வையில் நிஜமாகி தடதடக்கிறது.

உடலுறவில் ஏற்படக்கூடிய உளரீதியான மனத்தடங்கல், சமூகத்தின் முணுமுணுப்புகளுக்கு அஞ்சும் தன்மை, ஏமாற்றப்பட்டோம் என்கிற உணர்வு, துணையை அன்னியமாக உணரும் சூழல் இதெல்லாம் இன்னொரு காதலுக்குள் விழுகிற பெண்ணால் அவளது கணவன், அல்லது இன்றைய காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகளாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்தக்காதலை, மதித்து வெளியேறுவதுதான் அங்கே இருக்கக்கூடிய ஒரே முடிவு.

தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அமெரிக்கர்களுக்கு, அந்த முடிவு ஒருவன் அல்லது ஒருவளுடன் முடிந்துவிடுகிறது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட குடும்ப மதிப்பீடுகளுடன் இயங்கும் பிரிட்டிஷ், மற்றும் இந்தியர்களுக்கு அந்த முடிவு எண்ணற்ற கசப்புகளை, அந்த இரண்டு பேரைத் தாண்டி, அவர்கள் சார்ந்த எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துகிறது. இந்த முன்னுதாரணங்களை காட்டியபடி, கண்காணித்தபடியே இருக்கும் நம் சமூகம், ஊடகம், ஆகியவை இன்னொரு காதல் நிகழ்வதற்கான ஆரம்பகட்ட எதிரிகளாக இன்றும் இயங்குகின்றன....

ஒரு பக்கம், தூய பைங்கிளி காதல் கதைகளை எழுதிக்குவிக்கும் ஒரு பெண் எழுத்தாளரின், நாவல்கள் சென்னையைத்தாண்டிய தமிழகத்தில் அதிகம் விற்கின்றன. இன்னொரு பக்கம், சென்னையின் கால்சென்டர், பிபிஒ, சாப்ட்வேர் கலாச்சாரம் அநியாயத்துக்கு சுதந்திரத்தின் உச்சத்தை அனுபவித்து தீர்க்கிறது. ஒரு புள்ளியில், இந்த இரண்டு உலகங்களும் சந்திக்கின்றன என்பதை, ஊடகமும், வியாபார சினிமாவும் அறிந்திருக்கின்றனவா என்பதுதான் முக்கிய கேள்வி.

சென்னையில் கால்சென்டர், பிபிஒ, சாப்ட்வேர் பணியில் அதிகம் நிறைந்திருக்கும் பெண்களும், ஆண்களும், சென்னையைத் தாண்டிய தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். பைங்கிளிக்கதை படித்து விட்டு வந்தவர்கள்தான். எண்ணற்ற நண்பர்கள், எண்ணற்ற காதல்கள், எண்ணற்ற ஓரிரவு பழக்கங்கள், இவர்களால்தான் நிகழ்கின்றன., எண்ணற்ற கொலைகள், தற்கொலைகள், மற்றும் விவாகரத்துகளும் கூட...

சமீபத்தில், தான் காதலித்து மணந்த பெண்ணை கொலை செய்து விட்டுத்தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞனை ஊடகத்தில் படித்திருப்பீர்கள். தமிழ் சமுதாயத்திற்கு அவன் விட்டுச்சென்ற கடிதம் ஒன்று, மற்றொரு காதலின் சிக்கலை, ஊடகமும், சினிமாவும், சரியாக சொல்ல முற்படாததின் அவலத்தை, அவமானத்தை, பொறுப்பற்ற தன்மையை பறைசாற்றுகிறது. 'தனது காதல் மனைவிக்கு, எத்தனை காதல்கள், காதலர்கள் இருந்தனர், என்பதையும், அது தன்னை எப்படிச்சிதைத்தது என்பதையும் அந்த தற்கொலை சாசனத்தில் சொல்லியிருந்தான்.

அப்படி ஒரு பிரச்னை நேர்ந்தால் எப்படி அதை புரிந்துகொள்வது, எப்படி அணுகுவது என்பதைச்சொல்ல அவனுடன் மிக நெருக்கமாக உரையாடும் வலிமை பெற்ற சினிமாவில், அந்த அத்தியாயமே இல்லை.

சமூகத்தின் பிரதிபலிப்பு எனப்படும் சினிமா ஏன் இந்த 'இன்னொரு அல்லது இரண்டாவது காதல்' விசயத்தில் பைங்கிளி மாதிரி கண்டும் காணாமலும் இருக்கிறது? நிறைய காரணங்களைச் சொல்லலாம், எனினும் மிக முக்கியமானவற்றை பட்டியலிட முயல்வோம்.

நெ ஒன்று: பார்வையாளர்கள் முக்கியமாக பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற சந்தேகம், அச்சம்.

நெ இரண்டு : கலாச்சார அதிர்வை பதிவு பண்ணுகையில், ஊடகம் எப்படி விமர்சனத்தில் எதிர் கொள்ளுமோ, என்கிற சந்தேகம், அச்சம். 

நெ மூன்று: மிக முக்கியமானது, மனைவியின் காதலனை எந்த ஆணும் ரசிக்கவில்லை. கனவு காணும் வாய்ப்புள்ள இயக்குனனும். தவிர, கணவனின் காதலியை எந்தப்பெண்ணும் அனுமதிப்பதில்லை இயல்பாகவே.

நெ நான்கு: ஊறி, வேரூன்றி, ஆக்கிரமித்திருக்கும் சமூக முன் மதிப்பீடுகள்.

நெ ஐந்து: படுக்கையறையை பகிர்ந்து கொள்ள இயலாத மனத்தடங்கல் அல்லது இன்னொரு காதல் ஏற்படுத்தும் உடலுறவு என்கிற சாத்தியத்தைக்கடக்க இயலா மனோபாவம்.

அதிர்ச்சி ஊட்டும் உண்மை என்னவெனில், இவை அத்தனையையும் தாண்டி, இன்னுமொரு காதல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது, எங்கில்லா விடினும், தமிழ் கூறும் நல்லுலகில். ஏன் அப்புறம் இந்த இடைவெளி? கனவு காணும் சினிமாக்காரன் எவனும் என்ன செய்யலாம் இதை நிரப்ப?

- குமரகுருபரன்

நன்றி;- மேற்கூறிய எழுத்தின் ஒரிஜினல் படைப்பாளர் யாரோ அவருக்கு.


No comments:

Post a Comment