SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, June 26, 2013

ஆ... போலீஸ்... போலீஸ்... போலீஸ்...


சமூகத்தில் சில நாட்களாக அரங்கேறும் கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் இதையெல்லாம் பார்க்கும்போது காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்று எழும் விமர்சனங்கள் ஏராளம். சாதாரண பொதுஜனம்கூட சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு குற்றங்களுக்குப்பின்னாலும் காவல்துறையை கையாலாகாததாய் டீக்கடை பெஞ்சுகளில் கடைவிரிப்பார்கள். இதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்தியாவையே உலுக்கி உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவை தலைகுனியச்செய்த டெல்லி பேருந்து கற்பழிப்பு சம்பவம் டெல்லி காவல்துறையின் மீது தீராத களங்கமாய் படிந்தது. அப்போதே டெல்லி காவல்துறை தலைவர் திரு.நீரஜ் குமார் மீது பதவி விலகக்கோரி கடும் விமர்சனம் எழுந்தது. அதற்கு பின்னரும் டெல்லி போலீசில் திருந்தாத ஒரு கும்பல் ஐந்து வயது குழந்தை ஒன்று கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்று சமாதானம் பேசியதாய் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விஷயத்திலும் பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகே குற்றவாளிகளை கைது செய்ய முனைப்பு காட்டியது டெல்லி காவல்துறை. அதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கல்லூரி மாணவியை மீடியாக்களின் முன்னாலேயே கன்னத்தில் ஓங்கி அறைந்து தனது புஜபலபராக்கிரமத்தை வெளிப்படுத்தியது டெல்லி போலீஸ். இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னர் பொதுமக்கள் போராடியபிறகுதான் குற்றவாளியை கைது செய்ய முனைப்பு காட்டுவோம் என்றால் காவல்துறையின் மீதான மதிப்பும், மரியாதையும் பொதுமக்களிடம் எந்தளவுக்கு இருக்கும் என்பதைச்சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இவ்வளவு குற்றங்களுக்குப்பின்னாலும் மீடியாக்களுக்கு முன்னால் டெல்லி காவல்துறை தலைவர் திரு.நீரஜ் குமார் நான் ஏன் பதவி விலக வேண்டும்?... நான் பதவி விலகி விட்டால் டெல்லியில் கற்பழிப்பு குற்றங்கள் நின்று விடுமா?... அப்படி நின்று விடுமென்று கூறினால் நான் ஆயிரம் முறை பதவி விலகத்தயார் என்று கர்ஜித்தார். எவ்வளவு அறுமையான ஸ்டேட்மெண்ட்?... டெல்லி தனது வரலாற்றில் இந்த ஸ்டேட்மெண்ட்டை நிச்சயம் பொன்னேட்டில் பொறித்து வைத்துக்கொள்ள வேண்டும்!.

ஒரு துறையில் குற்றம் நடக்கும்போது தனக்கு கீழ் உள்ளவர்களை சரியான வழியில் பணிசெய்ய கண்காணிக்காததால்தான் அந்தக்குற்றம் நிகழ்ந்ததாய்க்கருதி அந்தத்துறையின் தலைவர் பதவி விலகுவார். ஆனால் நான் எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் மீது சரியான முறையில் ஸ்ட்ரிக்ட் கண்காணிப்போ, ஆக்சனோ எடுக்கமாட்டேன். ஆனால் நடக்கும் குற்றங்களுக்கும் நான் பொறுப்பேற்கமாட்டேன் என்பது எவ்வளவு அருமையான வாதம்?...

அதுசரி... நாடு முழுவதுமுள்ள சட்டசபையிலும், பாராளுமன்றத்திலுமே கற்பழிப்பு குற்றவாளிகள் மக்களிடம் ஓட்டு வாங்கி நுழையும்போது, படித்து வேலைக்கு வந்த நீரஜ்குமார் மட்டும் ஏன் பதவி விலகவேண்டும்?...

 வெளிநாட்டில் நடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் பாதுகாப்பு குறித்த மாநாட்டுக்கு, தனது கட்சியைச்சேர்ந்த கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கியஸ்தரையே பிரதிநிதியாக அனுப்பிவைக்கும் ஆளுங்கட்சி இருக்கும்போது, நீரஜ்குமார் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும்?...

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான கற்பழிப்புக்கான தண்டனையை கொடூர தண்டனையாக, விரைந்து பெறும் நீதியாக, எதிர்கால குற்றவாளிகளுக்கு பயத்தை கொடுக்கும் தண்டனையாக சட்டமியற்றாமல், தொடர்ந்து கற்பழிப்புகள் நடக்க வழி வகுத்துக்கொண்டிருக்கும் ஆளுவோர் இருக்கும்போது, நீரஜ்குமார் மட்டும் ஏன் பதவி விலகவேண்டும்?...

கற்பழிப்பு, போராட்டங்கள், விவாதங்கள் என சூடாயிருக்கும் அந்தந்த காலகட்டத்தில் மட்டும் பரபரப்பு செய்திகளை கவர் செய்துவிட்டு அதற்கு பின்னர் அது என்ன ஆனால் நமக்கென்ன என்று அடுத்த சூடான செய்திக்கு தாவும் மீடியாக்களும், மக்களும் இருக்கும்போது நீரஜ்குமார் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும்?...

தமிழகத்தில்கூட ஒரு சப்-இன்ஸ்பெக்டரையே பட்டப்பகலில் கொல்லுமளவுக்கு துணிந்தது ஒரு ரவுடிக்கும்பல். அதுக்கு பின்னால் விழித்தெழுந்த காவல்துறை என்கவுன்ட்டர் வேட்டைகளை நடத்தினாலும், போன போலீஸ்காரரின் உயிருக்கு என்ன பதில்?... அந்தளவுக்கு அந்த ரவுடிகளுக்கு தைரியம் வளர யார் காரணம்?... நிச்சயமாய் சொல்லலாம், ஒவ்வொரு ரவுடியின் வளர்ச்சிக்குப்பின்னாலும் எந்தளவுக்கு அரசியல் தாங்கி நிற்குமோ... அதே அளவு காவல்துறையின் பங்குமிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

எத்தனையோ பேர் இன்னமும் போலீஸ் வேலையை தங்களது உயிருக்கும் மேலாக மதித்து கடமையிலேயே உயிர் துறந்து கொண்டிருக்கிறார்கள்.

சிக்னலுக்கு சிக்னல் லாரிக்காரர்களிடம் வசூல் செய்து கொண்டிருக்கும் போலீஸ்காரர்களுக்கு மத்தியில் காலையில் ஆறு மணிக்கே சிக்னலுக்கு வரும் கடமையுணர்ச்சி மிகுந்த போலீஸ் கான்ஸ்டபிள்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இரவு பத்து மணிவரையும், சில இடங்களில் தனது பணிநேரம் முடிந்த பின்னும், போக்குவரத்து குறையாமலிருந்தால் எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரமோ... இரண்டு மணி நேரமோ டூட்டி பார்த்துவிட்டு வீட்டுக்கு லேட்டாய்ப்போகும் போலீஸ் கான்ஸ்டபிள்களை எத்தனையோ சிக்னல்களில் பார்த்திருக்கிறேன். இவர்களது கடமை உணர்ச்சியையெல்லாம் வெறெந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதென்பது மனிதசமூக நாகரீகத்துக்கு ஒவ்வாதது.

சினிமாவில் வரும் ஹீரோ போலீஸ் போல பத்து பதினைந்து ரவுடிகளை ஒருசேர ரவுண்டு கட்டி அடித்தால்தான் நல்ல போலீஸ் என்று அடையாளமல்ல. தனக்கு வழங்கப்படும் எந்தவொரு டூட்டியையும், கடமை தவறாமல் முழு ஈடுபாட்டோடு, நேர்மையாக செய்யும் ஒவ்வொரு போலீஸ்காரனும்தான் நிஜ ஹீரோக்கள் என்பது விவரமறிந்தவர்களுக்குத்தான் புரியும்.


அதே மாதிரி போலீஸ் வேலையின் உண்மை முகமும், நமது சினிமா உலகத்தின் மாயையினால் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதேயில்லை. போலீஸ் வேலையின் உண்மை முகம் அஞ்சாதே படத்தின் சில காட்சிகளில் மட்டும் புதிதாய் வேலைக்கு வரும் போலீஸ்காரர்களுக்கு டிபார்ட்மெண்ட்டில் என்ன மரியாதை கிடைக்கும் எனுமளவுக்கு மட்டும் தொட்டுக்காட்டப்பட்டிருந்தது. மற்றபடி அந்தப்படத்தின் மற்ற காட்சிகள்கூட போலீசை சினிமாவுக்கே உரித்தான ஹீரோத்தனத்துடனே காட்டியிருந்தன.

உண்மையில் காவல்துறை என்பது சுதந்திரமான அமைப்பல்ல. அது அதிகாரம் மற்றும் பணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு முழி பிதுங்கும் ஒரு அமைப்பு. நீங்கள் உங்கள் ஏரியா லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒரே ஒரு நாளை மட்டும் கழித்தீர்களேயானால் தெரியும்... ஸ்டேஷனுக்கு வரும் ஒவ்வொரு பிரச்சினைக்குப்பின்னாலும் கூடவே பின்னாலேயே கவுன்சிலர் தொடங்கி வக்கீல்கள் வரை எத்தனை கரைவேட்டிகள் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதை பார்த்தால் மலைத்துப்போவீர்கள். போலீசாரின் நிலை உண்மையிலேயே அந்தோ பரிதாபம்தான்...

இலட்சிய வெறியோடு நேர்மையாய் பணியாற்ற வரும் எத்தனையோ காவல்துறை வீரர்கள், கை கட்டுப்பட்டு, கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது அந்த டிபார்ட்மெண்ட்வாசிகளுக்கு நன்றாகவே தெரியும். அரசியல் பிரஷர், உயரதிகாரிகளின் பிரஷர் என்று எத்தனையோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் இங்கே இலட்சியத்தை தொலைத்தவர்கள்தான் அதிகமிருக்கக்கூடும்இத்தனைக்கும் நடுவில் இன்னமும் நேர்மையாய் பணியாற்றுவோரின் எண்ணிக்கைதான் காவல்துறையில் மெஜாரிட்டி என்பது ஆறுதலளிக்கும் செய்தி.

இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஒரு சில தறுதலைகள் பண்ணும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறையையே தவறு சொல்ல எந்த முகாந்திரமுமில்லை என்பது நிதர்சனம். என்னவொன்று... கடமை தவறி தவறிழைக்கும் போலீசார் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகளை டிஸ்மிஸ் வரை முடுக்கிவிட்டால் எதிர்கால காவல்துறை மக்களால் மனதிலிருந்து சல்யூட் அடிக்கப்படுமளவுக்கு வளரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


மற்றபடி காவல்துறை '' நாங்கள் உங்கள் நண்பன் '' என்று மக்களிடம் முழங்குவதை நிலைநிறுத்துவது அவர்களது கைகளில்தான் உள்ளது. எல்லையில் பணியாற்றி நாட்டுக்காக உயிரையும் கொடுக்கும் ராணுவத்துக்கு, நேரம் காலம் பார்க்காமல் கடமையாற்றும் காவல்துறை எந்தவிதத்திலும் சளைத்ததல்ல என்பது நிஜம்கடமை தவறும் போலீஸ்காரர்கள் சிலர் இருந்தாலும் கடமை தவறாத காக்கிச்சட்டைகளுக்கு என்றென்றும் சல்யூட் அடித்து சப்போர்ட் பண்ணுவது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட...
1 comment: