SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, June 17, 2013

காங்கிரசுக்கு ‘’கை’’ கொடுக்கும் அத்வானி?...


இந்த அரசியல் / விமர்சனக்கட்டுரையை நீங்கள் படிக்கும்முன்னர் ஏற்கனவே நான் எழுதிய 


என்ற இந்தக்கட்டுரையை கொஞ்சம் வாசித்துவிட்டு வாருங்கள்.
ஊழலில் நாட்டையே கூறுபோடத்துடிக்கும் காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் அதிகாரத்தில் வராமலிருக்க ஒரே வழி... தேசிய அளவில் காங்கிரசுக்கு பிரதான போட்டியாக விளங்கும் பா... ஜெயிப்பது மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை. (இது நான் பா.. ஊழலே இல்லாத ஆட்சி தரும் என்றோ... இல்லை... பா...வுக்கு ஆதரவாகவோ... எழுதும், விவாதிக்கும் கட்டுரை அல்ல. தேர்தலில் வாக்களிக்கும் முன்னர் ‘’இருக்கிற திருடனில் எந்தத்திருடன் பரவாயில்லை ரகம்’’ என்பதை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் நிலையில் நாம் இருப்பதை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே இதை எழுதுகிறேன். இன்னொருமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இன்னும் கொஞ்சம் கூட கூச்சமோ... மக்கள் மீது பயமோ இன்றி பல உலகமகா ஊழல்களை நாட்டுக்கு அவர்கள் அர்ப்பணிக்கக்கூடும் என்ற பயத்தாலும், காங்கிரஸ் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தாலுமே... பா...தான் அடுத்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற எனது எண்ண அடிப்படையில் எழுதும் கட்டுரை மட்டுமே இது. மற்றபடி பா..கவை பற்றியோ, மோடியைப்பற்றியோ தனிப்பட்ட விமர்சனங்களையும், விவாதங்களையும் இங்கே தவிர்க்கிறேன்.) 

மூன்றாவது அணி, நான்காவது அணி, ஐந்தாவது அணி என எத்தனை அணிகள் உருவானாலும் சரி... இல்லை... ஜெயலலிதா, மம்தா, முலாயம்சிங், சரத்யாதவ், நிதிஷ்குமார் என்று எத்தனைபேர் பிரதமக்கனவு கண்டாலும் சரி... அவையனைத்தும் சாத்தியக்கூறுகளற்ற பகல் கனவுகளாக மட்டுமே முடியும் என்பதும், இவர்களெல்லாம் ஆட்சி அமைக்கப்போகும் கட்சியுடன் கை கோர்த்து சில அமைச்சர் பதவிகளை வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் தேர்தல் முடிவுகளுக்குப்பின்னர் உணரப்போகும் சேதி என்பதால் அதைப்பற்றி விவாதிக்க பெரிதாய் ஒன்றுமில்லை.

சரி... இதைத்தவிர மீதமிருப்பது... காங்கிரசுக்கு டஃப் கொடுக்க தேசிய அளவிலான ஒரே கட்சி பா.. மட்டுமே. இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே பல வித்தியாசமான கொள்கைகளையும், ஊழல்களையும் அரங்கேற்றி நாட்டை முன்னேற்றபாதையில்( ! ) அழைத்துச்சென்றதில் காங்கிரசின் பங்கு என்ன என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னைப்போன்ற மத்திய வயதினர்க்கு தெரிந்தது... நமக்கு தெரிந்தவரையிலான ஆட்சியில் ‘’அடல்ஜி’’ என்று அன்போடு அழைக்கப்பட்ட வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான பா...வின் ஆட்சி காலம்தான் இந்தியாவில் பலவித முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட காலம் என்று கூறலாம். ஆட்சிக்கு வரும்போது பெரிதாக மக்களுக்கு அறிமுகமில்லாத, அதுவும் குறிப்பாக தென்னக மக்களுக்கு அறிமுகமில்லாத அடல்ஜி, தனது ஆட்சி முடியும் வேளையில் கிராம மக்கள் வரை ‘’அடல் பிகாரி வாஜ்பாய்’’ என்று ரீச் ஆகியிருந்தார். இந்திராகாந்திக்கு பிறகு ஓரளவு திடமான முடிவுகளை எடுத்த அரசு என்பதில் வாஜ்பாய் அரசுக்கு கண்டிப்பாய் இடமுண்டு. தங்க நாற்கரச்சாலைகளும், செல்போனின் அசுர வளர்ச்சியும், பாகிஸ்தானுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளும் என்றென்றும் மக்கள் மனதில் வாஜ்பாயின் நினைவுகளை பதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 காங்கிரசின் நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை... அப்போதே பிரதமர் கனவில் மிதந்த அத்வானியால் பா.. அடுத்தமுறை வெற்றி பெறாமல் காங்கிரசை அரியணையில் அமர்த்தியது.

அளப்பரிய பல சாதனை ஊழல்களை காங்கிரஸ் தொடர்ந்து செய்திருந்த போதிலும் அடுத்த தேர்தலிலும் காங்கிரசுக்கு எதிராக பா...வில் தேசிய அளவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்று எவருமில்லாமல் மீண்டும் அத்வானியின் பிரதமர் கனவிலேயே காங்கிரசை மறுபடியும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினர். காங்கிரசின் வரலாற்று சாதனை ஊழல்களின் பட்டியலும், தமிழர்கள் மீதான பாராமுகமும்தான் நாளுக்குநாள் நீண்டதேயொழிய உருப்படியாய் நடந்ததென்று ஏதேனுமுண்டா என்பது எனக்குத்தெரிந்தவரை ஒன்றுமில்லை. தொடர்ந்து நம்மை கிள்ளுக்கீரையாய் மதித்து எல்லைகளை ஆக்கிரமிக்கும் சீனாவிடமும், தலையைக்கொய்தனுப்பும் பாகிஸ்தானிடமும், தம்மாத்தூண்டு இலங்கையிடமும் ராஜதந்திரம் என்ற பெயரில் ‘’பில்டிங் ஸ்ட்ராங்கூ... பேஸ்மட்டம் வீக்கு’’ என்று ஆடி அடங்கிக்கிடப்பது என்னவகை என்பதும் புரியவில்லை.

மூச்சுத்திணற...திணற... போதும்டா சாமீ... எனுமளவுக்கு காங்கிரஸ் பத்தாண்டுகள் சாதனைகளை நிறைவேற்றிய வேளையில் (அதைப்பட்டியலிட தனிப்பதிவுகூட பத்தாது!!!) இப்போது அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்கான தேர்தல்களம் சூடுபிடித்திருக்கிறது. வாஜ்பாய்க்கு பிறகு மக்கள் செல்வாக்கு மிகுந்த (இல்லை) பப்ளிசிட்டி மிகுந்த தலைவர் பா...வில் இல்லை என்ற வெற்றிடம் இப்போது மோடியால் நிரப்பப்பட்டிருப்பது பா...வுக்கு தானே கனிந்த வாய்ப்பு. காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வோட்டு வங்கிக்கான கவர்ச்சி அறிவிப்பாய் ராகுலைத்தான் கண்டிப்பாய் முன்னிறுத்தும். ஏற்கனவே காங்கிரஸ்காரர்கள் இந்தியமக்களின் மறதி மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து தங்கள் ஊழல் சாதனைகளெல்லாம் தேர்தலில் எதிரொலிக்காது என்று முழங்குகின்றனர்.

நமது மக்களின் வோட்டு போட முடிவெடுக்கும் திறனும் கடந்தகால தேர்தல் முடிவுகளையும் காணும்போது அது ஓரளவு உண்மைநிலையும்கூட எனலாம். காங்கிரஸ் நினைத்தால் ராகும் காந்தியை ராஜீவ் காந்தியை நினைவுபடுத்தும் விதத்தில் உலவவிட்டு வோட்டுவங்கியை நிரப்பலாம். பிரியங்கா காந்தியை இந்திரா காந்தி உருவத்தில் உலவ விட்டு வோட்டு வங்கியை நிரப்பலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய அளவிலான தேர்தலில் கை சின்னமும் வெகுவாய் கை கொடுக்கும்.இந்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்காமலிருக்க மற்றொரு தேசியக்கட்சியான பா...வால் மட்டுமே டஃப் கொடுக்கமுடியும் என்பதுதான் நிதர்சனம். அதற்கு பா...வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான் மிக மிக முக்கியம். மீண்டும் பா.. அத்வானியையோ, சுஷ்மா சுவராஜையோ இல்லை இன்னும் X, Y, Z என்று எவரையோ பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதும் அவர்களே காங்கிரசுக்கு மீண்டும் பட்டாபிஷேகம் செய்து வைப்பதும் ஒன்றுதான்.

ஆனால் பா...வில் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு கூட்டம், தனிப்பட்ட விரோதங்களை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் மீண்டும் ஜெயித்தாலும் பரவாயில்லை... ஆனால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பா... தேர்தலை சந்திக்கவேண்டும் என்று முனகிக்கொண்டிருக்கிறது. தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையை சொறிந்து கொள்வதில்தான் பா.. தலைவர்களுக்கு என்னே குஷி?...!!! எல்லாவற்றையும் மீறி பா.. முடிவெடுத்து தேர்தல் பிரச்சாரக்குழுத்தலைவராக மோடியை அறிவித்து சரியான பாதையில் பயணிக்கத்தொடங்கியதுதான் தாமதம். அத்வானி ஒரு பக்கம் பிய்த்துகொண்டு பறக்கப்பார்க்கிறார். சிண்டு முடிகிறார். பிரதமர் கனவில் இருக்கும் நிதிஷ்குமார் எகிறுகிறார். கூட்டணி உடைகிறது.


அத்வானி தனது தீவிர விசுவாசி எவரையாவது பிரதமராக்கலாம் என்று கனவு காண்கிறாரா?... இல்லை... தானே மீண்டும் பிரதமராகலாம் எனும் எண்ணம் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. காய்க்காத தோட்டத்துக்கு பந்தல் அமைப்பது வீண் என்று இத்தனை வயதாகியும் அத்வானிக்குத்தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். அதேபோலத்தான் நிதிஷ்குமாரும்... எனது ‘’பாரதப்பிரதமர் அடுத்த தகுதி யாருக்கு?’’ என்ற கட்டுரையில் நான்கூட நிதிஷ்குமாருக்குத்தான் முதலிடம் கொடுத்திருந்தேன். தகுதி என்பது வேறு... மக்களின் மனநிலை மற்றும் ஆதரவலை என்பது வேறு.

மோடி தகுதியானவரா?... சிறுபான்மையினருக்கு எதிரானவரா?... திறமையானவரா?... இல்லையா?... என்பது போன்ற விவாதங்களுக்கு அப்பால் நாம் உணரக்கூடிய ஒரு முக்கிய செய்தி பெரும்பான்மை மக்களிடம் தேசிய அளவில் ரீச் ஆன தலைவர் என்று காங்கிரசுக்கு எதிராக இப்போதிருப்பது மோடி மட்டுமே என்பதுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக மோடியை எதிர்க்கும் எண்ணமுடையவர்கள் மோடி இல்லாமல் போனால் காங்கிரஸ்தான் கண்டிப்பாய் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பதையும், காங்கிரசின் 2ஜி சாதனை, காமன் வெல்த் சாதனை, நிலக்கரி சுரங்க சாதனை, தமிழக மீனவர்கள் மீதான பாராமுக சாதனை, ஹெலிகாப்டர் கொள்முதல் சாதனை, கற்பழிப்புக்கு எதிராக இன்னும் வலுவான சட்டத்தை இயற்றிக்கொண்டேயிருக்கம் சாதனை, கருப்புப்பணத்துக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்து கொண்டேயிருக்கும் சாதனை, சி.பி..யை சுதந்திரமாக செயல்படுத்தும்( ! ) சாதனை, பாகிஸ்தான் நமது ராணுவ வீரரின் தலையைக்கொய்தாலும்... சீனா டெல்லி வரை ஆக்கிரமிப்பு செய்தாலும்... எதுவுமே நடக்காதது போன்று அலட்டிக்கொள்ளாத சாதனை, இத்தாலிக்கே பல கொள்முதல்களில் முன்னுரிமை அளிக்கும் சாதனை, டீசல் மற்றும் பெட்ரோல் விலை சாதனை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயலும் சாதனை என பட்டியலிட முடியாத அளவுக்கு நீண்டு கிடக்கும் காங்கிரசின் கடந்தகால சாதனைகள் அனைத்தையும் கொஞ்சம் மனதுக்குள் நினைத்துப்பார்த்தால் தேவலை...!

அத்வானி விலகினாலும் சரி... கூட்டணியை உடைத்துக்கொண்டு சந்தர்ப்பவாதிகள் வெளியேறினாலும் சரி... பா... உறுதியாய் இருந்து மோடியையே பிரதமர் வேட்பாளராய் அறிவிக்கும் பட்சத்தில் காங்கிரசின் ஊழல்களுக்கு ஒரு இடைக்கால ஓய்வளிக்கலாம் என்பதும், மோடி பிரதமரானால் அவர்மீது உருவாகியிருக்கும் சாதனை நாயகன் பிம்பத்தை ஒருவேளை அவர் தேசிய அளவிலும் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாய் நம்பும் கோடான கோடி படித்த இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதும்தான் இக்கட்டுரையின் அடிப்படை சாராம்சம்... மற்றபடி நான் எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் சாராத, தீவிர தமிழுணர்வு கொண்ட ஒரு சாதாரணத்தமிழன் அவ்வளவுதான்.

ஒருவேளை எல்லாவற்றையும் மீறி மீண்டும் காங்கிரசே அரியணையில் ஏறினால்?... இருக்கவே இருக்கிறது... பி.எஸ்.வீரப்பாவின் ஃபேமஸான வசனம்!!!


‘’இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’’!!!...
No comments:

Post a Comment