SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, March 11, 2013

எழவெடுத்த ஈழமும், எதிர்வரும் தேர்தலும்...ஈழத்தைப்பற்றி எழுதி எழுதி நொந்துபோவதைத்தவிர வேறெந்த பிரயோஜனமும் இல்லையென்பதால் அதைப்பற்றி இனி எழுதவேக்கூடாது என்றிருந்தேன். கூடவே ‘’தமிழினத்தலைவர்’’ கலைஞர் பற்றியுந்தான்.
ஆனால் மீண்டும் நடக்கும் கூத்துக்கள் மறுபடியும் ஈழம் பற்றி எழுதவேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

ஊடகங்களுக்கும், தமிழ் இணைய உலகுக்கும் அவ்வப்போது பரபரப்பு செய்திகள் ஏதாவதொன்று ஒவ்வொரு காலகட்டத்துக்கும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். தேர்தல், நித்யானந்தா, டெல்லி கற்பழிப்பு, விஸ்வரூபம் என்று பெரிய லிஸ்ட் அது... இப்போது அந்த வரிசையில் மீண்டும் ஈழம்!!!...

பிரபாகரன் மீண்டும் வருவார்... நிச்சயம் ஈழத்தமிழர்களுக்கு (அவரால் மட்டுமே) விடிவு கிடைக்கும் என்று நம்பிய பல தமிழுணர்வாளர்களில் நானும் ஒருவன்.


ஈழம் என்றார்,
இன உணர்வென்றார்;
மொழி என்றார்,
எம்மக்களென்றார்;
இருக்கிறார் என்றார்,
தலைவனில்லையென்றார்;
நாதிகளற்ற மக்களென்றார்,
நாடு கடந்த நாடென்றார்;
போர்க்குற்றம் என்றார்,
போர் நிவாரண உதவிகளென்றார்;
மனித உரிமை என்றார்,
மறுவாழ்வு முகாமென்றார்;
என்ன சொல்லி என்ன செய்ய…?
நடக்கப்போவதொன்றுமில்லை!
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட-எங்கள்
வாழ்வுக்கொரு வழியுமில்லை;
கொத்துகொத்தாய் மடிந்தபோதும்
கேட்க ஒரு நாதியில்லை-இன்று
கொஞ்சகொஞ்சமாய் அழிந்தபோதும்
கொள்ளி வைக்க சொந்தமில்லை;
சொந்தநாட்டில் தஞ்சமடைய
தாய்க்குகூட உரிமையில்லை;
அந்நியநாட்டு உறவுகள் கூட
செய்வதற்கென்று ஏதுமில்லை;
மக்களெல்லாம் மாக்கள் ஆகியும்
மடிந்தழிய மனமுமில்லை;
கற்புகளிழந்து இனக்கலப்புகள் ஆகியும் 
கனவுகள் மட்டும் தொலைவதுமில்லை;
கதிரவன் உதித்தாலும், இலைகள் துளிர்த்தாலும்
எங்களை மீட்கப்போவது எவருமில்லை;
இறைவன் இருக்கிறான் என்றால்-இனி
நாங்கள் நம்ப ஒரு வழியுமில்லை;
தலைவன் வருவானென்றதை மட்டும்
கனவில் கூட மறப்பதுமில்லை;
ஈழத்து மக்கள் நாங்கள்
ஈசல் மாந்தர்களாய் ஆகிப்போகியும்,
உறுப்புகள் சிதைக்கப்பட்டு
ஊனங்களாய் ஆகிப்போகியும்,
உரிமைகள் மறுக்கப்பட்டு
அடிமைகளாய் ஆகிப்போகியும்
உயிர் பிடித்து காத்திருக்கிறோம்
ஒற்றைச்சொல் நம்பிக்கையோடு…
‘’ தலைவன் வருவான்-நிச்சயம்
தமிழ் தேசம் தருவான்………’

இப்போது அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டது. இனி பிரபாகரன் நிச்சயம் உயிரோடு வரப்போவதில்லை. அப்படியே ஒருவேளை வந்தாலும் இதற்கு மேல் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இனி அவர் இருந்தாலும், இறந்திருந்தாலும் எல்லாமே ஒன்றுதான்!.
சரி... ஏதோ நாடு கடந்த தமிழீழ அரசு என்று கொஞ்ச நாட்கள் குட்டையை குழப்பினார்கள். அந்தக் கலங்கிய குட்டையும் வற்றிப்போய்விட்டது என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தில் விதவிதமாக கேட்கும் ஈழ ஆதரவுக்குரல்களில் ஒன்றிரண்டாவது உண்மையாக இருக்காதா என்று ஏங்கினேன். அது எல்லாமே அரசியல் புஷ்வானம்தான் என்பது இப்போது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

திருமாவளவன், ராமதாஸ் எல்லாம் என்னைப்பொறுத்தவரை எப்போதோ கோமாளிகள் வரிசையில் சேர்ந்தாகிவிட்டது. ஆனால் வை.கோ.வும், சீமானும்கூட இந்த வரிசையில் சேருவார்கள் என்பது விளங்க பாவம் எனக்குத்தான் கொஞ்ச காலமாகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். ‘’ஈழம் எமக்கு அரசியல் அல்ல’’ என்று முழங்கிக்கிழிக்கும் சீமானின் உண்மையான உணர்வு ஈழஆதரவு அல்ல... அது கருணாநிதி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு மட்டுமே என்பதை கடந்த காலங்கள் வெளிச்சம் போட்டுவிட்டன. சீமான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. முடிந்தால் அவர் சிவசேனாவிடமும், வாட்டாள் நாகராஜ் போன்றோரிடமும் டியூசன் சென்று வரலாம். இல்லையென்றால் இனியும் அவர் பருப்பு வேகுவது கஷ்டமே!!!.

வை.கோ. நிலமை அதைவிட மோசம். சொந்த கட்சிக்குள்ளேயே முக்கிய நிர்வாகிகள் கழன்றுகொண்டேயிருக்கிறார்கள். ம.தி.மு.க. என்ற கட்சியை மக்கள் மறந்து வெகுகாலமாயிற்று. இன்னமும் மக்கள் நினைவில் இருப்பது வை.கோ. என்ற தனிமனிதர் மட்டும்தான். அந்த தனிமனித இமேஜை மட்டும் வைத்துக்கொண்டு வை.கோ. சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்பது அவருக்குத்தெரியுமா என்று யாராவது அவரிடமே கேட்டுச்சொன்னால் தேவலை. ஆந்திராவின் மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வழியில் வை.கோ. நடத்தும் நடைபயணங்கள் அவரது உடம்புக்கு வேண்டுமானால் உதவலாமேயொழிய நிச்சயமாக வேறெந்த துரும்புக்கும் உபயோகமில்லை என்பது நிதர்சனம்.

ஆனாலும் இன்னமும் வீதிக்கு வீதி, மேடைக்கு மேடை வை.கோ. கர்ஜித்துக்கொண்டேயிருக்கிறார். அவரது தொண்டையும் காய்ந்து எஞ்சியிருக்கும் அவரது தொண்டர்களின் மண்டையும் காய்வதுதான் மிச்சம்!. என்னைக்கேட்டால் வை.கோ. அவர்கள் இனியும் ஈழம், கீழம், தமிழினம் என்று அரற்றிக்கொண்டிருக்காமல் அவரது தொண்டைக்கு இதமாக எதாவது மருந்தெடுத்துக்கொண்டால் வறண்டுபோன நாக்குக்கு இதமாக இருக்கலாம். ஆல் தி பெஸ்ட் வை.கோ.சார்!!!

விஜயகாந்தைப்பற்றி ஈழவிஷயத்தில் பேசுமளவுக்கு அவரிடம் தன்மையில்லை.(நீ இன்னும் வளரனும் தம்பீ...!)

இடதுசாரி, வலதுசாரி என்று தங்களது உண்மையான உயரிய கோட்பாடுகளை மறந்து கிடக்கும் சாரார்களைப்பற்றி பேச ஒன்றுமில்லை. ஈழமா?... அப்பிடின்னா என்ன?... என்று அவர்கள் சந்தேகம் கேட்டு நம்மை தலைசுற்ற வைத்தாலும் ஆச்சர்யமில்லை!!!.

கலைஞரைப்பற்றி காரிமொழிந்து கடைவிரிக்க இன்னமும் இருக்கிறதா என்ன?... சாகப்போகும்போது சங்கரா, சங்கரா என்பவரைக்கூட சிவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சாவடித்து சாம்பலாக்கியபின் ஈழம், ஈழம் என்றால் எந்தத்தமிழினம் அவரை மன்னிக்கப்போகிறதோ தெரியவில்லை...

அவரது இனத்துரோகமும், சந்தர்ப்பவாத அரசியலும் அவருக்குப்பின்வரும் ஸ்டாலின் காலத்திலாவது சரிகட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவரைப்போன்ற அரசியல்வாதத்தை ஸ்டாலினுக்கும் கற்றுத்தராமல் நல்லவிதமாக போய்ச்சேர்ந்தால் நிம்மதி என்பது என் கணிப்பு. பெரும்பாலானோரின் எண்ணமும்கூட இதுவாக இருக்கலாம்... தெரியவில்லை.

அவரது டெசோ நாடகத்தை நாம் உதறித்தள்ளலாம். ஆட்சியிலிருக்கும்போது திரைப்படத்துக்கு கதைவசனம் எழுதி தமிழ்த்தொண்டாற்றிய கலைஞர், இப்போது ஆறுமுகனேரி முருகேசன்களும், பொன்னர் சங்கர் எடுத்த தியாகராஜன்களும் அண்டர்கிரவுண்டில் பதுங்கிக்கொண்டதால் தனது திரைக்கதை, வசன, நாடக தாகத்தைத்தணித்துக்கொள்ள டெசோவை தூசி தட்டிக்கொண்டார். தனக்கும் பொழுது போகும். அடுத்த தேர்தலுக்கு ஏதாவது ஓட்டு வங்கியும் அகப்படும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா கணக்காக இருக்கலாம். ஆதலால் அதைப்பற்றி எழுதி, பேசி நமது டைமை வீணடிக்கத்தேவையில்லை. ஆனாலும் இன்னமும் சில ஒட்டுண்ணிகள் கலைஞரை சுற்றிக்கிடந்து தட்டும் ஜால்ராக்களின் சத்தம்தான் காதைக்கிழித்து எரிச்சலை உண்டுபண்ணுகிறது.

கி.வீரமணிக்கு போட்டியாக இப்போது சுப.வீரபாண்டியார் களமிறங்கியிருக்கிறார் போல. அய்யா சுப.வீரபாண்டியாரே... நடனமாஸ்டர் கலா வேண்டுமானால் தனக்கு விதவிதமாக மேக்கப் போட்டுக்கொள்ள ‘’மானாட மயிலாட’’ மேடையை தனக்கு வழங்கிய கலைஞருக்கு காலைக்கழுவக்கூட தயாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு பேராசிரியர் அய்யா. ‘’ஒன்றே சொல், நன்றே சொல்’’ என்று உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக இப்படியா விசுவாசம் காட்டுவது. கலைஞரிடம் காட்டும் உங்கள் விசுவாசத்தில் நூறில் ஒரு பங்காவது உங்கள் தாய்த்தமிழ் மக்களுக்கும் காட்டலாமே அய்யா?...

சமீபத்தில் புதியதலைமுறை செய்தி சேனலின் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலைஞருக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியார் கொடுத்த வக்காலத்தெல்லாம் வடிவேலு, விவேக், சந்தானத்தின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும், எங்கே இவர் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்து தங்கள் வாய்ப்பையெல்லாம் தட்டிப்பறித்துவிடுவாரோ என்று…!!! அதிலும் ‘’தி.மு.க. வேறு. டெசோ வேறு’’ என்று சுப.வீரபாண்டியார் முழங்கிய முழக்கமிருக்கிறதே... யப்பாடியோவ்... விஸ்வரூப விவகார செய்தியாளர் சந்திப்பில் முதல்வரம்மா ‘’ஜெயா டி.வி என்பது ஒரு அ.தி.மு.க ஆதரவுத்தொலைக்காட்சிதானேயொழிய எனக்கும் ஜெயா டி.விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’’ என்று அடித்த காமெடிதான் ஏனோ நினைவுக்கு வந்தது. கலைஞர் செய்தது தப்பேயில்லை... கலைஞர்தான் இன்னமும் தமிழினக்காவலர் என்ற ரேஞ்சுக்கு சுப.வீரபாண்டியார் கொடுத்த ஜால்ரா பில்டப்பெல்லாம் அவரது வயதுக்கும், பதவிக்கும் அழகா என்பதை அவர்தான் தனிமையில் சிந்தித்துக்கொள்ளவேண்டும். மற்றபடி அவரைப்போன்றோர்களுக்கெல்லாம் நாம் கூறவிரும்புவது ஒன்றுதான்... ’’நல்லா வருவீங்கடா...டேய்... நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா...!!!.

இவர்கள் எல்லாரையும் போலவே... நமது முதல்வரம்மாவின் பங்களிப்பும்... ஒருவேளை அவரை நீங்கள் பிரதமராக்கினால் ஈழத்தை பெற்றுத்தருவேன் என்று முழங்கலாம். என்ன செய்ய?... நமது தலையெழுத்து... காமராஜரும், கக்கன்ஜியும், எம்ஜிஆரும் இனி வரப்போவதில்லை. எல்லா கூத்துக்களையும் கூச்சப்படாமல் நாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தனது படைத்தளத்தை எப்படியாவது இலங்கையில் நிறுவி சீனாவுக்கு செக் வைக்க முயலும் முயற்சிதான் இன்றைய அமெரிக்காவின் நாடகமெல்லாம். மற்றபடி மனசாட்சிபடி பார்த்தால் ராஜபக்சேவுக்கு முன்னால் முதலில் தண்டிக்கப்படவேண்டியது அமெரிக்காதான். அத்தனை போர்க்குற்ற சாதனைகள் அமெரிக்கா புரிந்துள்ளது என்பது வரலாறு தெரிந்தவர்களுக்குப் புரியும். அதே போலத்தான்... சீனாவும், இந்தியாவும். இலங்கையில் கால்பதித்து எப்படியாவது இந்தியாவை மிரட்டி வைக்க சீனா முயலுவதும், இலங்கைக்கு குறிப்பாக ராஜபக்சேவுக்கு ஜால்ரா தட்டியும் அவர் இந்தியாவை மதிக்காமல் சீனாவுடன் காட்டும் நெருக்கத்தைக்கண்டு கையைப்பிசைந்து கொண்டு இந்தியாவும் படும் பாடிருக்கிறதே. சூப்பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்புபூ...

இலங்கையில் கால்பதிக்க நடைபெறும் பனிப்போரும், எதிர்வரும் இந்திய பாராளுமன்றத்தேர்தலுக்கான ஓட்டு சேகரிப்பும் மட்டுமே இன்றைய நிகழ்வுகளேயொழிய உண்மையிலேயே தமிழினம் குறித்து வருத்தப்பட இங்கே ஏதும் செய்ய இயலாத சாமான்யனைத்தவிர எவருமில்லை என்பதே உண்மை.

தமிழத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதித்தமிழர்களின் வாழ்வை குறித்து வருந்தாத தமிழர்கள் நாம், சொந்த மீனவனே நாள்தோறும் சிதைந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்து துடைத்துப்போட்டுவிட்டு பயணித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் நாம், எங்கோ இலங்கையில் வேரறுக்கப்படும் தமிழினம் குறித்தா வருந்த வேண்டும்?... நமக்கு சேட்டிங், டேட்டிங்,வீக்கெண்டு என்று முக்கிய வேலைகள் ஆயிரமிருக்கிறது.

அரசியல்வாதிகள் வேண்டுமானால் ‘’சே… இந்த எழவெடுத்த ஈழ விஷயம் ஓயவே ஓயாதா?...’’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் ஆதரவும், கருத்துக்களும் தெரிவித்து கஷ்டப்பட்டு நாடகங்கள் நடத்தி அடுத்த தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம். நமக்கு அந்தக்கவலையெல்லாமில்லை…

கவலை வேண்டாம் மக்களே… இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்… நமக்குத்தான் ஐ.பி.எல். ஆரம்பிக்கப்போகிறதே… அப்புறமென்ன?... என்ஜாய்தான்!!!...
(இதைப்படித்த யாருக்காவது இதை எழுதிய இவன் மட்டும் ஈழத்துக்காக என்ன கிழித்தான் என்று எண்ணலாம். தவறேயில்லை. நானும் வெறுமனே எனது உணர்வுகளை எழுத்தில் மட்டுமே காட்டத்தெரிந்த ஒரு கையாலாகாத கோழை சாமான்யத்தமிழன்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்.)
8 comments:

 1. அதென்ன எழவெடுத்த ஈழம்??
  கண்டனங்கள்.
  ஒரு இனமே அழிந்துள்ளது. சும்மா வேடிக்கை பார்க்க முடியாது சார். இனத்துக்காக இனம்தான் போராட முடியும்.

  அது பற்றி பேச பிடிக்கலன்னா என்ன இதுக்கு பதிவு போடுறீங்க???
  ஒட்டு அரசியலையும் இனப்படுகொலையையும் சேர்த்து வைத்து நல்லா குழப்புகிறீர்.
  போராடுபவனை வாழ்த்துங்கள். இல்லைனா ஒதுங்கி நில்லுங்கள்.
  உண்மையாக போராடுபவர்களை சாட வேண்டாம்.
  ஒருநாள் போராட்ட களத்திற்கு வந்து பாருங்கள்.
  அப்போது தெரியும் அங்கு போராடுபவனின் வலியும் வேதனையும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா திரு.குருநாதன்... உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எழவெடுத்த ஈழம் என்பது எனது பார்வையில் அல்ல... அரசியல்வாதிகளின் பார்வையில் தெரியும் வார்த்தையாய் பதிந்திருக்கிறேன்... மற்றபடி கட்டுரையின் சாராம்சத்தை படித்து புரிந்து கருத்திடுங்கள்... ஏற்கனவே உங்களுடைய முஸ்லீம்கள் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார்கள் என்ற ஒரு கட்டுரையை நான் படித்திருக்கிறேன்... Gud Luck brother.. மற்றபடி உங்களது கோபமிக்க உணர்ச்சிகளை காட்டவேண்டியது என்னிடமல்ல... காட்டவேண்டிய இடத்தில் காட்டவேண்டிய நேரத்தில் ஒரு தமிழுணர்வாளனாய் காட்டுங்கள்... சந்தோஷப்படுவேன்...

   Delete
  2. ஒட்டு அரசியல், இனப்படுகொலை, புலிகள் இப்படி எல்லாவற்றையும் போட்டு குழப்பாதீர்கள். நன்றி

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. //சீமானின் உண்மையான உணர்வு ஈழஆதரவு அல்ல... அது கருணாநிதி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு மட்டுமே என்பதை கடந்த காலங்கள் வெளிச்சம் போட்டுவிட்டன.//


  எவ்வ‌ளவு முட்டாள்த‌னமான‌ க‌ருத்து இது, எழுதிய‌பின்பு ப‌டித்துப்பார்க்கும் வ‌ழ‌க்க‌ம் உங்க‌ளுக்குக் கிடையாது போலிருக்கிற‌து. சீமானுக்கு க‌ருணாநிதியுட‌னும், காங்கிர‌சுட‌னும் த‌னிப்ப‌ட்ட‌ ப‌ங்காளிப் பிர‌ச்ச‌னை இருக்கிற‌தா என்ன‌? க‌ருணாநிதியும் காங்கிர‌சும் ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தின் முதுகில் குத்திய‌வ‌ர்க‌ள் என‌ முழுத் தமிழ்நாடு ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌ம் முழுவ‌திலுள்ள தமிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ருதுகிறார்க‌ள். சீமான் க‌ருணாநிதியையும், காங்கிர‌சையும் எதிர்ப்ப‌த‌ற்கும் அது தான் கார‌ண‌‌ம். தமிழ்நாட்டில் ஒரு உண்மையான‌ தமிழ‌ன் அர‌சிய‌லில் வ‌ள‌ர‌ த‌மிழ‌ர்க‌ளே விட‌மாட்டார்க‌ள் போலிருக்கிற‌து.

  ReplyDelete
  Replies
  1. என்ன திரு.வியாசன்... நீங்கள் சீமான் ஆதரவாளர்தானே?... மற்றவர்களைப்பற்றி எழுதியது குறித்து உங்களுக்கு எந்த கோபமும் இல்லை... விடுங்கள்... அவரவர்க்கு அவரவர் தலைவர் பெரியவர்தான்... யாரையும் குறை சொல்லவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமல்ல... உண்மையாகவே தமிழினத்திற்காக போராட... போராடுபவர்களை வழிநடத்த இங்கே யாருமில்லையே என்பதுதான் எனது வருத்தம்... ஈழத்திற்கும், ஈழத்தமிழர்களுக்குமான விடிவு என்பது விடுதலைப்புலிகளால் மட்டுமே செய்யமுடிந்தது. இப்போது அவர்கள் இல்லை என்றாகிவிட்டது. எனக்குத்தெரிந்து அவர்கள் இடத்தை நிரப்ப யாருமில்லை... மற்றபடி தமிழகத்தில் இப்போது ஆரம்பித்திருக்கும் மாணவர் போராட்டமும் மட்டுப்படுத்தப்படாமல், மட்டுப்பட்டுப்போகாமல் தொடர்ந்தால் அதில் ஈழத்தமிழர்களின் நலனில் நல்லதொரு விளைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக நம்பலாம்... மற்றபடி கண்மூடித்தனமாக எந்த அரசியல்வாதியையும், சந்தர்ப்பவாதியையும் ஈழவிஷயத்தில் ஆதரிக்க நான் சிறு குழந்தையும் அல்ல... எனது தமிழினத்தின் மேல் பாசமில்லாதவனுமல்ல.... நீங்கள் கூறியது போல எழுதியதை நான் எப்போதும் படித்துப்பார்ப்பதில்லை... ஏனென்றால் எழுதும்போதே எனது எண்ணத்தில் உறுதியாய் இருக்கும் கருத்துக்களை மட்டும்தான் நான் எழுதுவேன்... மற்றபடி யார் மீதும் எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமில்லை... நன்றி.

   Delete
 4. உங்கள் கட்டுரைபடித்தபோது சிலஇடத்தில் நகைச்சுவையை ததந்தாலும் உண்மையில் சிந்திக்க வவைத்தது உங்களால் உணர்வுகளை எழுதவாவது முடிகிறதுஎன்னைப்போன்றோரால் படிக்கமட்டுமே முடிகிறது

  ReplyDelete
 5. உங்கள் கட்டுரைபடித்தபோது சிலஇடத்தில் நகைச்சுவையை ததந்தாலும் உண்மையில் சிந்திக்க வவைத்தது உங்களால் உணர்வுகளை எழுதவாவது முடிகிறதுஎன்னைப்போன்றோரால் படிக்கமட்டுமே முடிகிறது

  ReplyDelete