SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, March 19, 2013

நெசமாவே திருந்திட்டாரா கலைஞரய்யா?...ஒருவழியா கண்கெட்டபொறவு சூரியநமஸ்காரம் மாதிரி ஐ.மு.கூ விலிருந்து கலைஞரய்யா வெலகிட்டாராமே?... இது நெசந்தானா சாமீ?... இன்னும் கொஞ்சபேரு இதக்கூட அரசியல் சாணக்கியரின் நாடகந்தான்னு சந்தேகப்படுறாகளே... ஒருவேளை அப்பிடியும் இருக்குமா என்ன?...

ஏன் சாமீ?... இந்த ஐ.மு.கூ... ஐ.மு.கூ ன்னு சொல்றாகளே, அப்பிடீன்னா என்ன சாமீ?... ஐக்கிய முட்டாள்கள் கூட்டணியா சாமீ?...ன்னு வெவரமில்லாம படிச்ச அண்ணாச்சி ஒருத்தர்கிட்ட கேட்டுப்புட்டேன்ங்க... அவரு விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே அப்படிகூட சொல்லலாம்ப்பா... தப்பேயில்லைன்னு சொன்னாருங்க!!!

கலைஞரய்யா தமிழினத்துக்கே ஏதோ துரோகம் பண்ணிட்டாருன்னு நாலைஞ்சு வருஷமா ரொம்பப்பேரு பேசிக்கிறாக... அவரு மட்டும் 2008 இல்லை... 2009லேயே இந்த ஐ.மு.கூவிலிருந்து வெலகியிருந்தா தமிழர்கள் அவரை தலமேல தூக்கிவெச்சு கொண்டாடி அப்பவே மறுபடியும் 40சீட்டையும் அவருக்கே வாங்கிக்கொடுத்திருப்பாக... ஆனா அப்பல்லாம் கண்டும்காணாம நாக்காலிய கெட்டியா புடிச்சிக்கிட்டு கெடந்திட்டு அவரோட தமிழினத்தலைவர் வரலாற்றுல சாணிய பூசிட்டாராம்!!!

சரி, போனது போகட்டும் சாமீ... இப்போதான் டெசோவ தூசுதட்டி மீண்டும் தமிழினத்தலைவர் முகமூடிய மாட்டிட்டாருல்ல?... அப்புறம் என்ன, தமீழீழம் வாங்கிக்குடுத்துட்டு தன்னோட வரலாற்றுல பதிஞ்ச கறைய கழுவிட்டுத்தான் தலைவர் போய்ச்சேருவார்னு சொன்னாக்க பல பயலுவ நம்பாம சிரிச்சானுவ... தலைவரும்தான் சலிக்காம எத்தனை நாடகம் போட்டாரு?... ஆனாலும் பயபுள்ளக நம்புனாகளா?... கலைஞர் உண்மையிலேயே செய்ஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்ய நெனச்சாக்க மத்திய அரசிலேயிருந்து வெலகவேண்டியதுதானேன்னு ஏட்டிக்கு போட்டி கொக்கி கேள்வி கேட்டாவுனுக...

 அவரும் எவ்வளவு நாள்தான் வலிக்காதமாதிரியே நடிப்பாரு?... இப்போ அவருக்கு என்ன தோணுச்சோ... இல்ல என்ன வேணுமோ தெரியல?... ஒருவழியா பொங்கியெழுந்து மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கி கூட்டணியிலிருந்து வெலகிப்புட்டாரு. ஆனாலும் எசமான் ப.சிதம்பரம் இதனால மத்தியஅரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை... மத்தியஅரசு பெரும்பான்மை பலத்துடனே உள்ளதுன்னு உடனடியா பேட்டி கொடுத்துருக்காரு. ஒருவேளை இதத்தான் நேத்தக்கி கூடிப்பேசிட்டு இன்னக்கி கூவுறாவளோன்னு கொஞ்சபேருக்கு டவுட்டுங்களாம். எல்லாத்தையும் சந்தேகப்பட்டா எப்பூடி?...

தலைவருக்குத்தான் எவ்வளவு சோதனைங்க?...

ஏட்டிக்கு போட்டி எழுதுற பத்திரிக்கைங்க மற்றும் சமூக வலைத்தள இளைஞருங்க...

ஸ்டாலினா? அழகிரியா?ன்னு அதுவேற ஒருபக்கம்...

குஷ்பூவுக்கும் தலைவருக்கும்னு கழகக்கண்மணிங்க கண்ணக்கசக்குற அளவுக்கு கசிஞ்ச செய்திங்க ஒரு பக்கம்...

எல்லாத்தையும் தாண்டி தலைவர் ஒரு முடிவு எடுத்துருக்காருன்னா சும்மாவா?...

 கலைஞரை நம்புங்க சாமீங்களா!!!... அவுகதான் மத்திய அரசுக்கு 21ம் தேதிவரை டைம் இருக்குதுன்னு சொல்லியிருக்காகல்லே?... அதுக்குள்ள அவரோட திரைக்கதைல வேற எதாவது திருப்பம் வராலாம்லே?...

தலைவர் வெலகுறதா சொன்னதுதான் தாமதம்... உடனே தி.மு.க தொண்டருங்கல்லாம் அங்கங்கே பட்டாசு வெடிச்சு கொண்டாடுறானுவ... இருக்காதே பின்னே?... எத்தன நாளக்கித்தான் அவுகளும் இலங்கை வெவகாரத்தில கேள்வி கேக்குறவன்கிட்டயெல்லாம் தலைய குனிஞ்சு நிப்பாய்ங்க?... அதான் இப்போ அம்புட்டு சந்தோஷம் அவகளுக்கெல்லாம்...

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இப்போ தமிழ்நாடு முழுக்க மாணவர் சக்தி களமிறங்கியிருக்கிறது ஆரோக்கியமான வெசயமுங்க... இனத்துக்கான பாசம் அடுத்த தலைமுறைகிட்ட இருக்கிறதுன்றது மக்கள் மட்டுமில்லே... அரசியல்வாதிகளும் மனசில நிறுத்திக்கவேண்டிய விசயம் இது!... அதே மாதிரி இப்போ மாணவசக்திய அடக்கி ஒடுக்காம அழகா கையாளுற ஆளும்கட்சியையும் கண்டிப்பா பாராட்டனுமுங்க... ஏன்னா முத்துக்குமரன் செத்தப்போ திரண்ட மாணவர்சக்திய எப்படி அடக்குனாங்கன்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியுமுங்க...

சோனியா அம்மையார் நம்ம நாட்டையே இத்தாலிக்கு அடகு வைச்சிட்டு இருக்காராமே?... நம்ம மீனவனுங்க எத்தனைபேரு செத்தாலும் கவலையேபடாத அவருக்கும், அவரோட காங்கிரஸ் அரசுக்கும் வரப்போற தேர்தல்ல சாவுமணி அடிக்கிற வேலைய ஒவ்வொரு தமிழனும் மறக்காம மனசில வைச்சிக்கனும்ன்றதுதான் ஒரு பாமரனா என்னோட கவலையெல்லாம்...

மத்தபடி கலைஞரய்யா நெசமாவே திருந்திட்டாரா?... தமிழினத்துமேல அவருகாட்டும் பாசம் இப்போவாவது நெசந்தானா?ன்றதெல்லாம் நமக்கு தெரியாதுங்க.

ஆனா நெசமா இருக்கனும்னு வேண்டிப்போமுங்க... அவரோட கடைசிகாலத்துலயாவது அரசியல் நாடகம் நடத்தாம நெசமாவே தமிழினத்துக்காக ஏதாவது செய்ஞ்சிட்டு போனாக்க நம்ம இனத்துக்கும் அவரு பேருக்கும் புண்ணியமாப்போவுங்க... ஏன்னா அவருமேல ஆயிரம் பழி இருந்தாலும் தமிழினத்துக்காக பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கிறது அவரால மட்டும்தான் முடியும்ன்றது பல பேருக்கு புரிஞ்சிக்க மறுக்கிற நெசம்... இப்போ அவரு ஆதரவ வாபஸ் வாங்கினதால ஒரு மண்ணும் நடக்கப்போறதில்ல... மத்திய அரசு அது இஷ்டப்படிதான் நடக்கும்னு நெனக்கிறவக இருக்கலாம். அதுதான் நெசம்னுகூட சொல்லலாம். ஆனாலும் அவரு ஆதரவை இப்பவாவது வாபஸ் வாங்குனாரேன்னு நாம சந்தோஷப்பட்டுக்கலாம். தப்பேயில்லேய்ங்க!!!...

ஏற்கனவே நம்ம ஐயாவுக்கு நான் எழுதுன கடுதாசி இதுதாங்க...


வவுறெரிஞ்சி கெடக்குற தமிழினத்தோட வவுத்துல தலைவர் கலைஞர் நெசமாவே பால் வார்ப்பாரா?... இல்லே வழக்கம்போல ஏதோவொரு நாடகம் போட்டு மறுபடியும் ஒருமுறை தமிழினத்துக்கு பால் ஊத்துவாரா?ன்னு... பொறுத்திருந்துதான் பாக்கனுமாமே... ஆமாங்களா?...


Saturday, March 16, 2013

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!பல டிவி சேனல்களில் இப்போதெல்லாம் அடிக்கடி தென்படும் விளம்பரங்கள் இவை...

இருபதே அடியில் சுவையான குடிநீர்...

காற்றோட்டமான மனைப்பிரிவு... (அதுசரி... அக்கம்பக்கத்தில எதுவுமேயில்லாத காட்டுக்குள் காற்றோட்டத்துக்கு என்ன குறைச்சல்?!!!)

உடனே புக் செய்பவர்களுக்கு பத்திரப்பதிவு, பட்டா, EC முற்றிலும் இலவசம்...

மனைக்கு அருகிலேயே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, கோவில், மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள்...

முழுவதும் கம்பிவேலி அமைக்கப்பட்டது...

நேஷனல் ஹைவேஸிலிருந்து மிக அருகில்...

சென்னை கோயம்பேடுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வசதி...

உடனே வீடு கட்டி குடியேறலாம்...

இன்றைய சிறு முதலீட்டில் நீங்கள் நாளைய கோடீஸ்வரர்...

பலநேரங்களில் இந்த விளம்பரங்களைப்பார்த்து நான்கூட யோசித்திருக்கிறேன் அங்கெல்லாம் சில மனைகள் வாங்கிப்போடலாம் என்று...

தவறில்லை... ஆனால் இதில் நூறு சதவீதம் நம்புவதற்குமில்லை... இது போன்ற பிஸினெசில் ஏமாற்றுக்காரர்களும் கலந்திருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. அதிலும் மிகவும் குறைந்தவிலையில் எங்கோ ஆள்நடமாட்டமில்லாத காட்டுக்குள் விற்கப்படும் மனைகளுக்கு பெரும்பாலும் ஏழைகளும், பாமர மக்களும்தான் பலிகடா என்பதால் ஏஜெண்டுகளுக்கு கொண்டாட்டம்தான்.

சரி, மனைவாங்கும்போது கவனிக்கவேண்டியவைகளும், எதிர்கொள்ளவிருக்கும் ரிஸ்க்குகளும் என்னென்ன?...

* சில மனைப்பிரிவுகளில் ஒரே இடம் நாலைந்துபேருக்கு பதிவுசெய்யப்படுவது ஒருவழியான ஏமாற்றுவேலை. பெரும்பாலான மனைப்பிரிவுகள் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் இருப்பதால் வாங்கியவர்கள் அதில் வீடு கட்ட பலஆண்டுகள் ஆகும் என்பதால் இந்தவிதமான பிரச்சினைகள் வெளியில்வர பல ஆண்டுகள் ஆகும். ஆதலால் கூடியமட்டும் உடனடியாக வீடுகட்டி குடியேறும் வகையில் உள்ள மனைப்பிரிவுகளிலேயே இடம் வாங்குவது நல்லது.

* மனைப்பிரிவை கண்டிப்பாக பார்வையிட்டு சுற்றியிருக்கும் நிலஅமைப்புகளை கவனித்து அதன்பின்னர் மனைவாங்குவது குறித்து முடிவெடுங்கள். ஏனென்றால் பெரும்பாலான மனைப்பிரிவுகள் விவசாயநிலங்கள் என்பதால் தாழ்வான மற்றும் நீர்தேங்கும் வகையிலான நிலப்பகுதியாக இருக்கலாம். மனைகளை வாங்கும்போது மழைக்காலமாக இருந்தால் அதன் நீர்தேங்கும் நிலை குறித்து நமக்கே தெரிந்துவிடும். ஆனால் நல்ல வெயில் காலத்தில் மனைகளை பார்வையிட்டு வாங்கும்போது அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து அறிந்துகொள்வது நல்லது.

* சிலமனைப்பிரிவுகள் விவசாயநிலம் என்ற நிலையிலிருந்து கன்வெர்ஷன் செய்யப்படாமல் இருக்கலாம். பலபேருக்கு இந்த கன்வெர்ஷன் என்ற விஷயம் தெரியாது. ஆகவே நிலம் வாங்கும் முன் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ அல்லது லோக்கல் பஞ்சாயத்து அலுவலகத்திலோ நீங்கள் வாங்க இருக்கும் மனைப்பிரிவு குறித்து விவசாயநிலமா?, வீடு கட்ட முடியுமா?, பஞ்சாயத்து / ஊராட்சி மற்றும் இன்னபிற அலுவலகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவா என்பதையும் விசாரித்துக்கொள்வது நல்லது. ஏற்கனவே ஏஜெண்டுகளால் சரிகட்டப்பட்டிருப்பார்கள் என்றாலும்கூட ஒருமுறை லோக்கல் வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர்களிடம் விசாரிப்பதும் நல்லதுதான்.

* அதுபோலவே இருபதே அடியில் சுவையான குடிநீர், நாற்பதே அடியில் சுவையான குடிநீர் என்பதெல்லாம் பெரும்பாலும் டூபாக்கூர்தான். ஒருமுறை எனது புராஜெக்ட் ஒன்றில் போர்வெல் பாயிண்ட் மார்க்கிங்க்குகாக வாட்டர் டிவைனர் ஒருவரை அழைத்திருந்தேன். அவர் கூறிய சில செய்திகள் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியளித்த ரகம். அவரது ரிலேஷன் ஒருவர் ரியல் எஸ்டேட் பிஸினெசில் இருக்கிறாராம். அவரது மனைப்பிரிவில் கிணறுபோல பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்தில் பள்ளம் அமைத்துக்கொள்வாராம். பெரும்பாலான மனைப்பிரிவு விசிட்டுகள் ஏஜெண்டுகளாலேயே இலவசவிசிட் என்று குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே நடத்தப்படுவதால் அந்த விசிட்டுகளுக்கு முந்தைய நாட்கள் அல்லது அந்த நாளின் காலையில் லாரியில் மினரல் வாட்டர் கொண்டுவந்து போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகளை நிரப்பிவிடுவார்களாம். மனைப்பிரிவை பார்வையிட வருவோர்கள் இந்தத்தண்ணீரை குடித்துப்பார்த்துவிட்டு அசந்துபோவது நடக்குமாம். ஆகவே அவர்கள் விசிட்களில் முதல்முறை செல்லும்போதே மனையின் வழிகளை மனதில் நிறுத்திக்கொண்டு மற்றுமொரு சாதாநாளில் நாமே தனியே சென்று மனைப்பிரிவை பார்வையிடுவது கண்டிப்பாக செய்யவேண்டிய ஒன்று என்பதை மனதில் கொள்ளுங்கள். அவ்வாறு நாம் தனியே சென்று ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் மனைப்பிரிவை பார்வையிடுவது பல்வேறு ரகசியங்களை வெளிக்கொண்டுவந்து நம்மை உஷார்படுத்தலாம்.

* மனைவாங்கும்முன் அதன் டாக்குமெண்ட் நகல்கள் அனைத்தையும் கேட்டுவாங்கி ஒருமுறையாவது உங்களுக்குத்தெரிந்த ஏதாவதொரு வக்கீலிடம் காண்பித்து லீகல் ஒப்பீனியன் எனப்படும் டாக்குமெண்ட் சரிபார்த்தலை செய்வது மிக அவசியம். டாக்குமெண்ட்டுகள் வாசிக்கும்போது நமது பார்வை வேறு, லாயர்களின் பார்வை வேறு என்பதால் இதன்மூலம் பல எதிர்கால வில்லகங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

* செங்கல்பட்டும் சென்னைதான்... அரக்கோணமும் சென்னைதான்... என்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி எங்கோ வெகுதூரத்தில் மனைவாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடனே வீடு கட்ட முடியாதவர்கள் மனை வாங்கும்போது முடிந்தளவு அடிக்கடி சென்று பார்த்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமளவுக்கு உள்ள இடத்திலேயே மனை வாங்குவது நல்லது. அதேப்போல கண்ட கழுதைகள் எல்லாம் டி.வி.யில் தோன்றி விளம்பரப்படுத்துவதை மட்டும் நம்பாமல் நமது சுயபரிசோதனையில் மனையை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுத்து வாங்குவதே சிறந்தது.

* தனிப்பட்ட மனைகளை வாங்கும்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த மனை பற்றியும் அந்த ஏரியா பற்றியும் விசாரித்து வாங்குவது நல்லது. ஏனெனில் நீங்கள் வாங்கப்போகும் மனையில் டாக்குமெண்ட்டிற்கு அப்பாற்பட்டு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதும், அந்தப்பகுதியில் எதிர்கால அரசாங்கத்திட்டங்கள் எதாவது வரவிருக்கிறதா என்பதும் இதுபோன்ற அக்கம்பக்கத்து விசாரணையின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

* இது எல்லாவற்றுக்கும் மேலாக சிட்டியில் மனை வாங்குபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கம். ஒரு மனைக்கு நீங்கள் EC போட்டுப்பார்க்கும்போது அதில் ஒரு விஷயம் இருக்கும். இந்த EC அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்கள் எதற்கும் கட்டுப்படாதது என்று. இது சாதாரண விஷயமல்ல. மனை வாங்குபவர்கள் மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமிது. நில உச்சவரம்பு சட்டம் என்று ஒன்றிருப்பது நம்மில் பலபேருக்குத்தெரியாது. Land Ceiling Act என்ற அந்த சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருந்த பலரது நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால் நாம் போட்டுப்பார்க்கும் EC யில் இந்த விஷயங்கள் வராது. அதேப்போல் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் சீலிங் லேண்டு என்பதற்கான எந்தத்தகவலும் லின்க் செய்யப்படாததால் அவர்களும் அந்த நிலத்தை உங்கள் பெயரில் பதிவு செய்துகொடுப்பார்கள். உங்களிடம் பேரண்ட் டாக்குமெண்டிலிருந்து நீங்கள் உங்கள் பெயரில் பதிவு செய்தது வரையிலான அனைத்து டாக்குமெண்ட்டுகளும் இருந்தும் அந்த நிலத்திற்கு ஓனர் நீங்களல்ல. அது அரசு நிலம் என்பது எவ்வளவு கொடுமை?... நீங்கள் உச்சநீதிமன்றம்வரை சென்றாலும் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது. எப்போது நினைத்தாலும் அரசு நிலத்தை நீங்கள் ஆக்கிரமித்ததாகக்கூறி உங்கள் இடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலம், எல்லா டாக்குமெண்ட்டுகளும் உங்கள் பெயரில் இருந்தும் உங்களுக்குச்சொந்தமில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது பெரும்பாலான வக்கீல்கள்கூட மாட்டியிருக்கும் விஷயம் என்பது இதற்கான மனுகொடுக்கும் அலுவலகத்தில் குவிந்திருக்கும் மனுக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது. சரி… இதில் ஏமாறாமல் இருப்பது எப்படி?... நிலம் வாங்கும் முன் EC, லீகல் ஒப்பீனியன், லொட்டு லொசுக்கு இப்படி எல்லாவற்றையும் பார்க்கும் நாம் கையோடு சம்பந்தப்பட்ட நிலத்தின் சர்வே எண், தனிப்பட்டா  ஆகியவற்றை அந்த ஏரியா வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர் ஆகியோரிடம் உறுதி செய்து அந்த இடம் சீலிங் இல்லை என்பதையும், எதிர்கால அரசாங்க புராஜெக்ட்டுகள் எதுவும் அந்த இடத்தில் வரவில்லை என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.

எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஏமாற்றுக்காரர்களும் அல்ல. எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் நம்பி வாங்குமளவுக்கு நல்லவர்களும் அல்ல. அதேப்போல வீடு கட்டுவதற்கென்று சிறுக சிறுக சேமித்து நிலம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கத்தான் இந்த முன்னெச்சரிக்கை பதிவே தவிர மற்றபடி எல்லோரும் கெட்டவர்கள், எல்லோரையும் சந்தேகப்படுங்கள் என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதேப்போல மேற்கூறிய விஷயங்கள் மட்டுமின்றி இதில் சொல்ல விட்டுப்போன இன்னும் பல விஷயங்கள்கூட இருக்கலாம்.

கவர்ச்சியான விளம்பரங்களையும், எதிர்காலத்திற்கான முதலீடு என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டும் தீர ஆராயாமல் உங்கள் சேமிப்பை கண்ட மனைகளின் மீது கொட்டாமல்... மனை வாங்கும்போது நன்றாக ஆராய்ந்து, யோசித்து உங்கள் முதலீட்டை சரியான வகையில் நிர்வகித்து பயன்பெறுங்கள் மக்களே.

ஆல் தி பெஸ்ட்...!


Monday, March 11, 2013

எழவெடுத்த ஈழமும், எதிர்வரும் தேர்தலும்...ஈழத்தைப்பற்றி எழுதி எழுதி நொந்துபோவதைத்தவிர வேறெந்த பிரயோஜனமும் இல்லையென்பதால் அதைப்பற்றி இனி எழுதவேக்கூடாது என்றிருந்தேன். கூடவே ‘’தமிழினத்தலைவர்’’ கலைஞர் பற்றியுந்தான்.
ஆனால் மீண்டும் நடக்கும் கூத்துக்கள் மறுபடியும் ஈழம் பற்றி எழுதவேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

ஊடகங்களுக்கும், தமிழ் இணைய உலகுக்கும் அவ்வப்போது பரபரப்பு செய்திகள் ஏதாவதொன்று ஒவ்வொரு காலகட்டத்துக்கும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். தேர்தல், நித்யானந்தா, டெல்லி கற்பழிப்பு, விஸ்வரூபம் என்று பெரிய லிஸ்ட் அது... இப்போது அந்த வரிசையில் மீண்டும் ஈழம்!!!...

பிரபாகரன் மீண்டும் வருவார்... நிச்சயம் ஈழத்தமிழர்களுக்கு (அவரால் மட்டுமே) விடிவு கிடைக்கும் என்று நம்பிய பல தமிழுணர்வாளர்களில் நானும் ஒருவன்.


ஈழம் என்றார்,
இன உணர்வென்றார்;
மொழி என்றார்,
எம்மக்களென்றார்;
இருக்கிறார் என்றார்,
தலைவனில்லையென்றார்;
நாதிகளற்ற மக்களென்றார்,
நாடு கடந்த நாடென்றார்;
போர்க்குற்றம் என்றார்,
போர் நிவாரண உதவிகளென்றார்;
மனித உரிமை என்றார்,
மறுவாழ்வு முகாமென்றார்;
என்ன சொல்லி என்ன செய்ய…?
நடக்கப்போவதொன்றுமில்லை!
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட-எங்கள்
வாழ்வுக்கொரு வழியுமில்லை;
கொத்துகொத்தாய் மடிந்தபோதும்
கேட்க ஒரு நாதியில்லை-இன்று
கொஞ்சகொஞ்சமாய் அழிந்தபோதும்
கொள்ளி வைக்க சொந்தமில்லை;
சொந்தநாட்டில் தஞ்சமடைய
தாய்க்குகூட உரிமையில்லை;
அந்நியநாட்டு உறவுகள் கூட
செய்வதற்கென்று ஏதுமில்லை;
மக்களெல்லாம் மாக்கள் ஆகியும்
மடிந்தழிய மனமுமில்லை;
கற்புகளிழந்து இனக்கலப்புகள் ஆகியும் 
கனவுகள் மட்டும் தொலைவதுமில்லை;
கதிரவன் உதித்தாலும், இலைகள் துளிர்த்தாலும்
எங்களை மீட்கப்போவது எவருமில்லை;
இறைவன் இருக்கிறான் என்றால்-இனி
நாங்கள் நம்ப ஒரு வழியுமில்லை;
தலைவன் வருவானென்றதை மட்டும்
கனவில் கூட மறப்பதுமில்லை;
ஈழத்து மக்கள் நாங்கள்
ஈசல் மாந்தர்களாய் ஆகிப்போகியும்,
உறுப்புகள் சிதைக்கப்பட்டு
ஊனங்களாய் ஆகிப்போகியும்,
உரிமைகள் மறுக்கப்பட்டு
அடிமைகளாய் ஆகிப்போகியும்
உயிர் பிடித்து காத்திருக்கிறோம்
ஒற்றைச்சொல் நம்பிக்கையோடு…
‘’ தலைவன் வருவான்-நிச்சயம்
தமிழ் தேசம் தருவான்………’

இப்போது அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டது. இனி பிரபாகரன் நிச்சயம் உயிரோடு வரப்போவதில்லை. அப்படியே ஒருவேளை வந்தாலும் இதற்கு மேல் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இனி அவர் இருந்தாலும், இறந்திருந்தாலும் எல்லாமே ஒன்றுதான்!.
சரி... ஏதோ நாடு கடந்த தமிழீழ அரசு என்று கொஞ்ச நாட்கள் குட்டையை குழப்பினார்கள். அந்தக் கலங்கிய குட்டையும் வற்றிப்போய்விட்டது என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தில் விதவிதமாக கேட்கும் ஈழ ஆதரவுக்குரல்களில் ஒன்றிரண்டாவது உண்மையாக இருக்காதா என்று ஏங்கினேன். அது எல்லாமே அரசியல் புஷ்வானம்தான் என்பது இப்போது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

திருமாவளவன், ராமதாஸ் எல்லாம் என்னைப்பொறுத்தவரை எப்போதோ கோமாளிகள் வரிசையில் சேர்ந்தாகிவிட்டது. ஆனால் வை.கோ.வும், சீமானும்கூட இந்த வரிசையில் சேருவார்கள் என்பது விளங்க பாவம் எனக்குத்தான் கொஞ்ச காலமாகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். ‘’ஈழம் எமக்கு அரசியல் அல்ல’’ என்று முழங்கிக்கிழிக்கும் சீமானின் உண்மையான உணர்வு ஈழஆதரவு அல்ல... அது கருணாநிதி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு மட்டுமே என்பதை கடந்த காலங்கள் வெளிச்சம் போட்டுவிட்டன. சீமான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. முடிந்தால் அவர் சிவசேனாவிடமும், வாட்டாள் நாகராஜ் போன்றோரிடமும் டியூசன் சென்று வரலாம். இல்லையென்றால் இனியும் அவர் பருப்பு வேகுவது கஷ்டமே!!!.

வை.கோ. நிலமை அதைவிட மோசம். சொந்த கட்சிக்குள்ளேயே முக்கிய நிர்வாகிகள் கழன்றுகொண்டேயிருக்கிறார்கள். ம.தி.மு.க. என்ற கட்சியை மக்கள் மறந்து வெகுகாலமாயிற்று. இன்னமும் மக்கள் நினைவில் இருப்பது வை.கோ. என்ற தனிமனிதர் மட்டும்தான். அந்த தனிமனித இமேஜை மட்டும் வைத்துக்கொண்டு வை.கோ. சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்பது அவருக்குத்தெரியுமா என்று யாராவது அவரிடமே கேட்டுச்சொன்னால் தேவலை. ஆந்திராவின் மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வழியில் வை.கோ. நடத்தும் நடைபயணங்கள் அவரது உடம்புக்கு வேண்டுமானால் உதவலாமேயொழிய நிச்சயமாக வேறெந்த துரும்புக்கும் உபயோகமில்லை என்பது நிதர்சனம்.

ஆனாலும் இன்னமும் வீதிக்கு வீதி, மேடைக்கு மேடை வை.கோ. கர்ஜித்துக்கொண்டேயிருக்கிறார். அவரது தொண்டையும் காய்ந்து எஞ்சியிருக்கும் அவரது தொண்டர்களின் மண்டையும் காய்வதுதான் மிச்சம்!. என்னைக்கேட்டால் வை.கோ. அவர்கள் இனியும் ஈழம், கீழம், தமிழினம் என்று அரற்றிக்கொண்டிருக்காமல் அவரது தொண்டைக்கு இதமாக எதாவது மருந்தெடுத்துக்கொண்டால் வறண்டுபோன நாக்குக்கு இதமாக இருக்கலாம். ஆல் தி பெஸ்ட் வை.கோ.சார்!!!

விஜயகாந்தைப்பற்றி ஈழவிஷயத்தில் பேசுமளவுக்கு அவரிடம் தன்மையில்லை.(நீ இன்னும் வளரனும் தம்பீ...!)

இடதுசாரி, வலதுசாரி என்று தங்களது உண்மையான உயரிய கோட்பாடுகளை மறந்து கிடக்கும் சாரார்களைப்பற்றி பேச ஒன்றுமில்லை. ஈழமா?... அப்பிடின்னா என்ன?... என்று அவர்கள் சந்தேகம் கேட்டு நம்மை தலைசுற்ற வைத்தாலும் ஆச்சர்யமில்லை!!!.

கலைஞரைப்பற்றி காரிமொழிந்து கடைவிரிக்க இன்னமும் இருக்கிறதா என்ன?... சாகப்போகும்போது சங்கரா, சங்கரா என்பவரைக்கூட சிவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சாவடித்து சாம்பலாக்கியபின் ஈழம், ஈழம் என்றால் எந்தத்தமிழினம் அவரை மன்னிக்கப்போகிறதோ தெரியவில்லை...

அவரது இனத்துரோகமும், சந்தர்ப்பவாத அரசியலும் அவருக்குப்பின்வரும் ஸ்டாலின் காலத்திலாவது சரிகட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவரைப்போன்ற அரசியல்வாதத்தை ஸ்டாலினுக்கும் கற்றுத்தராமல் நல்லவிதமாக போய்ச்சேர்ந்தால் நிம்மதி என்பது என் கணிப்பு. பெரும்பாலானோரின் எண்ணமும்கூட இதுவாக இருக்கலாம்... தெரியவில்லை.

அவரது டெசோ நாடகத்தை நாம் உதறித்தள்ளலாம். ஆட்சியிலிருக்கும்போது திரைப்படத்துக்கு கதைவசனம் எழுதி தமிழ்த்தொண்டாற்றிய கலைஞர், இப்போது ஆறுமுகனேரி முருகேசன்களும், பொன்னர் சங்கர் எடுத்த தியாகராஜன்களும் அண்டர்கிரவுண்டில் பதுங்கிக்கொண்டதால் தனது திரைக்கதை, வசன, நாடக தாகத்தைத்தணித்துக்கொள்ள டெசோவை தூசி தட்டிக்கொண்டார். தனக்கும் பொழுது போகும். அடுத்த தேர்தலுக்கு ஏதாவது ஓட்டு வங்கியும் அகப்படும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா கணக்காக இருக்கலாம். ஆதலால் அதைப்பற்றி எழுதி, பேசி நமது டைமை வீணடிக்கத்தேவையில்லை. ஆனாலும் இன்னமும் சில ஒட்டுண்ணிகள் கலைஞரை சுற்றிக்கிடந்து தட்டும் ஜால்ராக்களின் சத்தம்தான் காதைக்கிழித்து எரிச்சலை உண்டுபண்ணுகிறது.

கி.வீரமணிக்கு போட்டியாக இப்போது சுப.வீரபாண்டியார் களமிறங்கியிருக்கிறார் போல. அய்யா சுப.வீரபாண்டியாரே... நடனமாஸ்டர் கலா வேண்டுமானால் தனக்கு விதவிதமாக மேக்கப் போட்டுக்கொள்ள ‘’மானாட மயிலாட’’ மேடையை தனக்கு வழங்கிய கலைஞருக்கு காலைக்கழுவக்கூட தயாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு பேராசிரியர் அய்யா. ‘’ஒன்றே சொல், நன்றே சொல்’’ என்று உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக இப்படியா விசுவாசம் காட்டுவது. கலைஞரிடம் காட்டும் உங்கள் விசுவாசத்தில் நூறில் ஒரு பங்காவது உங்கள் தாய்த்தமிழ் மக்களுக்கும் காட்டலாமே அய்யா?...

சமீபத்தில் புதியதலைமுறை செய்தி சேனலின் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலைஞருக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியார் கொடுத்த வக்காலத்தெல்லாம் வடிவேலு, விவேக், சந்தானத்தின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும், எங்கே இவர் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்து தங்கள் வாய்ப்பையெல்லாம் தட்டிப்பறித்துவிடுவாரோ என்று…!!! அதிலும் ‘’தி.மு.க. வேறு. டெசோ வேறு’’ என்று சுப.வீரபாண்டியார் முழங்கிய முழக்கமிருக்கிறதே... யப்பாடியோவ்... விஸ்வரூப விவகார செய்தியாளர் சந்திப்பில் முதல்வரம்மா ‘’ஜெயா டி.வி என்பது ஒரு அ.தி.மு.க ஆதரவுத்தொலைக்காட்சிதானேயொழிய எனக்கும் ஜெயா டி.விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’’ என்று அடித்த காமெடிதான் ஏனோ நினைவுக்கு வந்தது. கலைஞர் செய்தது தப்பேயில்லை... கலைஞர்தான் இன்னமும் தமிழினக்காவலர் என்ற ரேஞ்சுக்கு சுப.வீரபாண்டியார் கொடுத்த ஜால்ரா பில்டப்பெல்லாம் அவரது வயதுக்கும், பதவிக்கும் அழகா என்பதை அவர்தான் தனிமையில் சிந்தித்துக்கொள்ளவேண்டும். மற்றபடி அவரைப்போன்றோர்களுக்கெல்லாம் நாம் கூறவிரும்புவது ஒன்றுதான்... ’’நல்லா வருவீங்கடா...டேய்... நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா...!!!.

இவர்கள் எல்லாரையும் போலவே... நமது முதல்வரம்மாவின் பங்களிப்பும்... ஒருவேளை அவரை நீங்கள் பிரதமராக்கினால் ஈழத்தை பெற்றுத்தருவேன் என்று முழங்கலாம். என்ன செய்ய?... நமது தலையெழுத்து... காமராஜரும், கக்கன்ஜியும், எம்ஜிஆரும் இனி வரப்போவதில்லை. எல்லா கூத்துக்களையும் கூச்சப்படாமல் நாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தனது படைத்தளத்தை எப்படியாவது இலங்கையில் நிறுவி சீனாவுக்கு செக் வைக்க முயலும் முயற்சிதான் இன்றைய அமெரிக்காவின் நாடகமெல்லாம். மற்றபடி மனசாட்சிபடி பார்த்தால் ராஜபக்சேவுக்கு முன்னால் முதலில் தண்டிக்கப்படவேண்டியது அமெரிக்காதான். அத்தனை போர்க்குற்ற சாதனைகள் அமெரிக்கா புரிந்துள்ளது என்பது வரலாறு தெரிந்தவர்களுக்குப் புரியும். அதே போலத்தான்... சீனாவும், இந்தியாவும். இலங்கையில் கால்பதித்து எப்படியாவது இந்தியாவை மிரட்டி வைக்க சீனா முயலுவதும், இலங்கைக்கு குறிப்பாக ராஜபக்சேவுக்கு ஜால்ரா தட்டியும் அவர் இந்தியாவை மதிக்காமல் சீனாவுடன் காட்டும் நெருக்கத்தைக்கண்டு கையைப்பிசைந்து கொண்டு இந்தியாவும் படும் பாடிருக்கிறதே. சூப்பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்புபூ...

இலங்கையில் கால்பதிக்க நடைபெறும் பனிப்போரும், எதிர்வரும் இந்திய பாராளுமன்றத்தேர்தலுக்கான ஓட்டு சேகரிப்பும் மட்டுமே இன்றைய நிகழ்வுகளேயொழிய உண்மையிலேயே தமிழினம் குறித்து வருத்தப்பட இங்கே ஏதும் செய்ய இயலாத சாமான்யனைத்தவிர எவருமில்லை என்பதே உண்மை.

தமிழத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதித்தமிழர்களின் வாழ்வை குறித்து வருந்தாத தமிழர்கள் நாம், சொந்த மீனவனே நாள்தோறும் சிதைந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்து துடைத்துப்போட்டுவிட்டு பயணித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் நாம், எங்கோ இலங்கையில் வேரறுக்கப்படும் தமிழினம் குறித்தா வருந்த வேண்டும்?... நமக்கு சேட்டிங், டேட்டிங்,வீக்கெண்டு என்று முக்கிய வேலைகள் ஆயிரமிருக்கிறது.

அரசியல்வாதிகள் வேண்டுமானால் ‘’சே… இந்த எழவெடுத்த ஈழ விஷயம் ஓயவே ஓயாதா?...’’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் ஆதரவும், கருத்துக்களும் தெரிவித்து கஷ்டப்பட்டு நாடகங்கள் நடத்தி அடுத்த தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம். நமக்கு அந்தக்கவலையெல்லாமில்லை…

கவலை வேண்டாம் மக்களே… இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்… நமக்குத்தான் ஐ.பி.எல். ஆரம்பிக்கப்போகிறதே… அப்புறமென்ன?... என்ஜாய்தான்!!!...
(இதைப்படித்த யாருக்காவது இதை எழுதிய இவன் மட்டும் ஈழத்துக்காக என்ன கிழித்தான் என்று எண்ணலாம். தவறேயில்லை. நானும் வெறுமனே எனது உணர்வுகளை எழுத்தில் மட்டுமே காட்டத்தெரிந்த ஒரு கையாலாகாத கோழை சாமான்யத்தமிழன்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்.)