SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, January 1, 2013

திருந்தவே மாட்டாரா சூப்பர் ஸ்டார்?...

இது சிவாஜி ராவ் என்ற தனிமனிதனை பற்றிய விமர்சனக்கட்டுரையில்லை. "சூப்பர் ஸ்டார்" என்ற இமேஜ் ஏற்றிருக்கும் ரஜினிகாந்த் என்ற பொதுவாழ்க்கை பிரபலத்தைப்பற்றியது மட்டுமே.

பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த சிவாஜிராவ், வாழ்க்கை தனக்கு வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு எவருடைய தயவுமின்றி (அதாவது அவருடைய அப்பா இயக்குனரோ தயாரிப்பாளரோ இல்லை!!!) தனது சொந்த உழைப்பால் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு சூப்பர் ஸ்டார் என்ற இமேஜோடு, தலைவனைக் கடவுளாய்ப்பார்க்கும் அடித்தட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல், மெத்தப்படித்த மேதாவிகள்கூட ஒருவேளை ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தால் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் ஏதேனும் அதிசயம் நிகழுமோ என்று எண்ணுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் நிச்சயம் தலைவணங்கவேண்டிய விஷயமே என்பதில் மாற்றுக்கருத்துக்களேயில்லை. ஆனால்...

மக்கள் சக்தியை கட்டுக்குள் வழிநடத்துமளவுக்கு பொதுவாழ்க்கை பிரபலமாக மாறியபின் அவருடைய முடிவுகள், பேச்சுகள் சரியான பாதையில் சென்றிருக்கிறதா?... கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் அலசும்போது பெரும்பாலும் அவருடைய முடிவுகளும், பேச்சுகளும் அவரை ஒரு சாமான்யனைவிட கீழ்மட்ட நிலையில் அடையாளப்படுத்துவதாய்தான் அமைந்திருக்கிறது. நீண்டகாலமாகவே தனது அரசியல் பிரவேசம் பற்றிய குழப்பமான கருத்துக்களையே வெளியிட்டதிலும் சரி... இப்போதும் வெளியிட்டுக்கொண்டிருப்பதிலும் சரி... சூப்பர் ஸ்டாரை மிஞ்ச ஆளேயில்லை என்பது அவரது ரசிகர் கூட்டங்களே கடுப்பான விஷயமாகும். (‘’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்ட்டா வருவேன்’’னு அவரு குழப்புனதுக்குகூட விசிலடிச்சி ஆர்ப்பரித்தவர்கள் தமிழர்கள்!)

அவருடைய அரசியல் பிரவேசத்திற்கான காலம் கனிந்தபோது அதை உபயோகிக்க மறுத்து மூப்பனாரின் .மா. கட்சியை .சிதம்பரத்துக்காக ஆதரித்தார். (.மா..வை சூப்பர் ஸ்டார் ஆதரித்தது மூப்பனாருக்காகத்தான் என்று பலபேர் எண்ணிக்கொண்டிருப்பது தவறு. அப்போதும் .சிதம்பரத்தின் தூதுதான் சூப்பர் ஸ்டாரை மூப்பனாரையும் அவருடன் கூட்டணியில் இருந்த தி.மு..வையும் ஆதரிக்கவைத்தது.)

.மா..வின் சைக்கிள் சின்னம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் குறுகியகாலத்தில் பெருவளர்ச்சியடைந்தது சூப்பர் ஸ்டாரின் வாய்சாலும் அவருடைய ரசிகர் படையின் உழைப்பாலும் மட்டுமே. என்ன பிரயோஜனம்?... தான் அமரவேண்டிய ஆட்சிக்கட்டிலில் .மா.. கூட்டணியை அமரவைத்த சூப்பர் ஸ்டாருக்கு நிஜமாகவே தெரியாதா இங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி மறுமலர்ச்சியும் வரப்போவதில்லையென்பது?...

காலம் தனக்கு வழங்கிய மிகப்பெரிய வாய்ப்பை சரியான முடிவெடுக்காமல் தவறவிட்டார் சூப்பர் ஸ்டார் என்ற வரிகள் சரித்திரத்தில் இடம்பிடித்ததுதான் மிச்சமாயிற்று. .தி.மு..வை ஆட்சியிலிருந்து அகற்றி, .மா.. கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய சூப்பர்ஸ்டாரின் முடிவால் பலனடைந்தது அரசியல் கட்சிகளும், பரபரப்பு செய்திகள் கிடைத்த பத்திரிக்கைகளும் மட்டுமே. மக்களுக்கும், ஓடி ஓடி உழைத்த அவருடைய ரசிகர் படைக்கும் மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டும்தான். இருந்தாலும் ரஜினியின் சக்தியை இந்தியாவுக்கு உணர்த்தியது அந்தத்தேர்தல் நாடகம்.

காலச்சுழற்சியில் மூப்பனாரின் மறைவுக்குப்பின், ரஜினி நீரூற்றி வளர்த்த .மா.. கலைக்கப்பட்டு காங்கிரசின் காலடியில் புதைக்கப்பட்டது. அதிலும் திருவாளர் .சிதம்பரத்தின் முக்கிய கைங்கர்யமிருந்தது சூப்பர் ஸ்டாருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அடுத்து வந்த காலக்கட்டங்களில் தனது முடிவெடுக்கும் சக்தியின்மையையும், தனது குழப்ப மனநிலையையும் தனது நடவடிக்கைகளாலேயே உலகுக்கு உணர்த்தி பலதரப்பட்ட மக்களையும் முகம் சுழிக்கவைத்து தனது அரசியல் இமேஜை சரித்துக்கொண்டதில் சூப்பர் ஸ்டாரின் பங்கு அலாதியானது.

முதன் முதலில் அமெரிக்காவில் அவர் போட்டுக்கொண்டு வந்த மொட்டையில் ஆரம்பமாயிற்று சிறுபிள்ளைத்தன விளையாட்டு. தான் அமெரிக்காவில் முடிவெட்டச்சென்ற இடத்தில் தூங்கிவிட்டதாகவும், முழித்துப்பார்த்தால் மொட்டையானதாகவும் அவர் அளித்த ஸ்டேட்மெண்ட் ரஜினியை மெண்ட்டல் என்ற எல்லைவரை விமர்சனத்துக்குள்ளாக்கியது.
 
காவிரிப்பிரச்சினையில் பல ஆண்டுகளாக தமிழர்களின் மனதில் வளர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை ஒரே வாரத்துக்குள் குழிதோண்டி புதைத்துக்கொண்டார் ரஜினிகாந்த். காவிரிப்பிரச்சினை இரு மாநிலங்களிலும் பற்றி எரிந்து கொண்டிருந்த காலத்தில் ‘’தமிழகத்தில் இருக்கிற கன்னடர்களை தாக்கும்போது கர்நாடகாவில் தமிழர்கள் இருப்பதை மறக்கவேண்டாம்’’ என்ற ரீதியில் ரஜினி அளித்த ஸ்டேட்மெண்ட் மொத்த தமிழகத்தையும் முகம் சுழிக்கவைத்து சூப்பர் ஸ்டார் என்ற இமேஜீக்கு சரிவுப்பாதையை ஆரம்பித்து வைத்தது
 
  தமிழ்த்திரையுலமே காவிரி நீருக்காக நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது இவர் மட்டும் வீராப்பாய் ‘’நீ நெய்வேலியில போய் ஆர்ப்பாட்டம் நடத்துனா கர்நாடகத்துக்கு கரண்ட் குடுக்கிறத நிறுத்திடுவாங்களா?... இல்லை காவிரியிலதான் தண்ணிய திறந்து விட்டுருவாங்களா?...’’ என்று வாயைத்திறந்து தனது அனுபவமின்மையை தமிழர்களுக்கு விளக்கினார். அத்தோடு இல்லாமல் ‘’என் வழி தனி வழி’’ என்ற ரீதியில் மொத்த திரையுலகமும் ஒரு அணியில் திரண்டு நிற்கும்போது தான் மட்டும் ஒருநாள் உண்ணாவிரதத்தை அறிவித்தார். தலையெழுத்தே என்று பல திரையுலக பிரபலங்களும் அந்த உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டனர். தேசிய நதிநீர் இணைப்பை முன்னிறுத்திப்பேசி தனது பங்குக்கு அத்திட்டத்துக்கு தான் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்து சரித்திரசாதனை படைத்ததும் சூப்பர் ஸ்டார்தான்.

 தனது சரிந்துபோன இமேஜை காப்பாற்றிக்கொள்ள ஒரு கட்டத்தில் ‘’யார் இந்த வாட்டாள் நாகராஜ்?... தண்ணி தரமாட்டேன்னு சொல்றவனை உதைக்கவேண்டாமா?...’’ என்றும் தெளிவில்லாமல் பேசினார். சரி... பேசியது பேசியாயிற்று. அதன்பின் பேசிய வார்த்தையிலாவது ஸ்டெடியாக நின்றாரா என்றால் அதுவுமில்லை. கர்நாடகாவில் அவருக்கு கிளம்பிய எதிர்வினைகளை கண்டு அங்குள்ள சில சக்திகளின் மூலமாக தான் அவ்வாறு பேசியது தவறு என்று ரகசிய சமரசம் செய்துகொண்டார். என்ன செய்வது தனது சொத்துக்களின் பெரும்பங்கு கர்நாடகாவில் இருக்கிறதே என்ற கவலையோ என்னவோ தெரியவில்லை?...!!!
 
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாத்தமுடியாது என்று சொன்ன அதே வாயால் ஜெயலலிதாவை சினிமா உலகத்தினர் நடத்திய பாராட்டுவிழாவில் ‘’தைரியலெட்சுமி’’ என்று புகழாரம் சூட்டி எல்லாரையும் மலைக்கவைத்தார். அடுத்து வந்த ஒரு தேர்தலில் தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ‘’நீங்க யாருக்கு வேணா ஓட்டு போடுங்க. இன்னாருக்குத்தான் போடனும்னு நான் சொல்லமாட்டேன். ஆனா நான் இன்னாருக்குத்தான் போடுவேன்’’ என்று  சொல்லி தானும் குழம்பி தனது ரசிகர்களையும், மக்களையும் குழப்பினார்.

தமிழக மக்களில் சாமான்யர்கள் முதல், அரசியல் நடுநிலையாளர்கள் வரை ஒரு கட்டத்தில் ரஜினியின் அரசியல் செல்வாக்கு சரிந்து போனதை உரக்கச் சொல்லத்தொடங்கி இனி அவர் வெறும் ‘’சினிமா சூப்பர் ஸ்டார்’’ மட்டுமே என்ற நிஜத்தை ஏற்றுக்கொண்டனர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தனது அரசியல் இமேஜ் சரிந்து போனதை உணர்ந்துகொண்டு சில ஆண்டுகளாக அரசியல் காய்நகர்த்தல்களிலிருந்து விலகிக்கொண்டு தன்னை முழுநேர சினிமாவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டார். சூப்பர் ஸ்டாரின் பல ரசிகர் படைகள் ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார் என்று அடுத்து வந்த சில சின்னப்பசங்களின் ரசிகர் மன்றங்களுக்கு கொடிபிடிக்க செல்லத்தொடங்கினர்.  பல பத்திரிக்கைகள் ரஜினி பல காலமாய் பிரதிபலன் ஏதுமின்றி தனக்காக இருக்கும் தனது ரசிகர் மன்றங்களுக்காக ஒரு படம் பண்ணி அதில் வரும் லாபத்தை முழுக்க முழுக்க தனது ரசிகர் மன்றங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்கப்போகிறார் என்றெல்லாம்கூட செய்திகள் வெளியிட்டன. (உண்மையிலேயே ரஜினிக்கு அந்த அளவுக்கு பெருந்தன்மையும், தனது ரசிகர் மன்றங்களின் மீது கரிசனமும் இருக்கிறதா என்பது நமக்குத்தேவையில்லாத கேள்வி!!!) உடல்நிலை, வதந்திகள், ரசிகர்களின் நிராசைகள் என எல்லாவற்றையும் மீறி ரஜினியின் மௌனமும், அவரது அயராத சினிமா உழைப்பும் இப்போது மெல்ல மெல்ல அவரது இழந்த செல்வாக்கை முழுவதுமாய் இல்லாவிட்டாலும்கூட ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

சரி, இப்போது என்ன ஆயிற்று சூப்பர் ஸ்டாருக்கு?... விஜயகாந்தின் அரசியல் எண்ட்ரியையும், ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அரசியல் எண்ட்ரியையும் மௌனச்சாமியாராய் உற்றுநோக்கிக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வருடம் 12.12.2012 என்ற வரலாற்று சிறப்புமிக்க நாளில் வந்த தனது பிறந்தநாளை ரசிகர்களோடு கொண்டாடினார். அதில் மீண்டும் பழைய அரசியல் குழப்பங்களை அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறார். பழைய காலங்கள் போலவே தான் அரசியலுக்கு வருவேனா?... மாட்டேனா?... என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பதில் சொல்லாமல் வழக்கம்போலவே குழப்பிச்சென்றார். ஆனாலும்கூட வழக்கமாக பிறந்தநாளை ரசிகர்களோடு கொண்டாடாத ரஜினி இந்த வருடம் திடீரென்று ரசிகர்களோடு கொண்டாட முடிவெடுத்ததும், அதுவும் மிகப்பெரிய மைதானத்தில் ஆர்ப்பரித்ததும் அரசியல் நோக்கர்களால் ஒருவித அடித்தளமாகவே உற்று நோக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறந்த நாள் கொண்டாட்ட முனுமுனுப்புகள் அடங்குவதற்குள்ளாகவே இப்போது இன்னொரு குழப்பத்தையும் பற்ற வைத்திருக்கிறார் ரஜினி. ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த ‘’.சிதம்பரம் ஒரு பார்வை’’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி சிதம்பரத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
 
பெரிய பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் 3 வட்டத்துக்குள் இருப்பார்கள். அதில் முதல் வட்டம் தங்களுக்கான தங்கள் பிரைவெசி... 2வது வட்டம் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் ரத்த பந்தங்கள்... 3வது வட்டம் நல்ல நண்பர்கள் மற்றும் நன்னெறியாளர்கள்... இதில் 2வது வட்டத்தில் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக்கூட 3வது வட்டத்தில் பகிர்ந்து தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். .சிதம்பரம் பிரதமரின் மூன்றாவது வட்டத்தில் முக்கிய நபர் என்றும், .சிதம்பரத்துக்கு ‘’ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குவதும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளவும், பணக்காரர்களாகிய ஏழைகள் மீண்டும் ஏழைகளாகாமல் பார்த்துக்கொள்ளவும், நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் நன்கு தெரியும்’’ என்றும் அநியாயத்துக்கு புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அத்தோடு நிறுத்தாமல் மேலும் குழப்பியிருப்பதுதான் ஹைலைட்...

‘’.சிதம்பரத்துக்கு தெரியாமல் டெல்லியில் எதுவும் நடந்துவிடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும். இவருக்கு எப்போது குரல் கொடுப்பது என்பது நன்கு தெரியும். இவர் முழிக்காவிட்டால் ஆபத்து என்பது நன்கு தெரியும். இவர் விழித்துக்கொள்ளாவிட்டால் நாட்டில் புரட்சி நடந்துவிடும் என்பதும் இவருக்கு நன்கு தெரியும். எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. அதனால்தான் அரசியலுக்கு வரக்கூடாது என்றிருக்கிறேன். ஆனால் யாருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்பது சிதம்பரத்துக்கு தெரியும். அரசியலுக்கு நீங்கள் ஏன் வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்பார். ஒருவேளை அப்படி நான் அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாகத்தான் இருக்கும். அந்த வழி சிதம்பரத்துக்கு நன்கு தெரியும்’’ இதுதான் சூப்பர் ஸ்டாரின் ஹைலைட் உரை.

.சிதம்பரம் இதுவரை நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்காக என்ன சாதித்திருக்கிறார் என்று சூப்பர் ஸ்டார் கொஞ்சம் விளக்கிக்கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!!!... இவ்வளவுதான் ரஜினியின் சார்பின்மையா?... என்னதான் சொல்லவருகிறார் நம் சூப்பர் ஸ்டார்?...  தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா?... இல்லை ஏற்கனவே கிசுகிசுக்கப்படுவதுபோல் சிதம்பரம் மூலமாக காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறாரா?... உண்மையிலேயே அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா?... ஆட்சியைப்பிடித்து தன்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய ஆசைப்படுகிறாரா?... இல்லை சராசரி அரசியல்வாதியாகி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் மட்டும் ஏதாவது முளைத்திருக்கிறதா?...

தலைவா... உங்களுக்கு நாங்கள் சொல்லவிரும்புவது ஒன்றே ஒன்றுதான். இங்கே கடவுளே வந்து கட்சி ஆரம்பித்தாலும் அவர் இஷ்டப்படி ஆட்சி செய்துவிட முடியாது. அதே நிலைமைதான் உங்களுக்கும்... கட்சி ஆரம்பித்ததும் அதைத்தொடர்ந்து நடத்த பணம் வேண்டும். முழுக்க முழக்க கட்சியில் நல்லவர்களாய் சேர்த்துக்கொண்டு நீங்கள் நடித்து சம்பாதித்த உங்கள் சொந்தப்பணத்தை மட்டும் வைத்து எல்லா செலவுகளையும் செய்து ஆட்சியைப்பிடித்து அதற்குப்பிறகும் போட்டமுதலை திரும்ப எடுக்க முயலாமல் நல்லாட்சி நடத்த இயலும் என்று நம்புகிறீர்களா?... காசு கொடுப்பவர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும்தான் கட்சியில் சீட் என்றில்லாமல், நல்லவர்கள், நேர்மையானவர்கள், படித்தவர்கள், திறமையானவர்கள் என்று பார்த்து பார்த்து சீட் கொடுத்து உங்களால் கட்சி நடத்தமுடியுமா?... நீங்கள் ஒருவேளை உண்மையிலேயே தமிழக மக்களுக்கு நல்லாட்சி தரவிரும்பினாலும் அது உங்கள் ஒருவரால் மட்டுமே நடக்கக்கூடிய விஷயமில்லை தலைவா... உங்களை சுற்றியிருக்கப்போகும் MLAக்கள், அமைச்சர்கள், கட்சித்தலைகள் என்று அத்தனைபேருமே நேர்மையானவர்களாக, தன்னலமற்ற சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தால் மட்டும்தான் இங்கே நல்லாட்சி வழங்க இயலும். அது இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமென்று எண்ணுகிறீர்களா?...

அட... இது எல்லாம்கூட கிடக்கட்டும் விடுங்கள்... நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா?... கட்சி ஆரம்பிக்கப்போகிறீர்களா?... இல்லை சினிமா மட்டும்தான் உங்கள் வாழ்க்கையா?... என்னதான் உங்கள் எதிர்காலத்திட்டம் என்று பட்டென்று உடைத்துச்சொல்லுங்கள்... அதைவிட்டுவிட்டு நான் வரனும்னு நினைச்சா வருவேன்... ஆனா வரமாட்டேன்... ஒளிஞ்சிருந்து பார்ப்பேன்... ஓரமா நின்னு கேட்பேன்னு இன்னமும் எங்களை குழப்பி ‘’திருந்தவே மாட்டாரா நம்ம சூப்பர் ஸ்டார்?...’’ என்று கேட்கும் நிலைக்கு எங்களைத்தள்ளாதீர்கள் ப்ளீஸ்...
 
 
 

11 comments:

 1. அரசியல் ஆசை மனசுக்குள்ள இருக்கு!!!. ஆனால் அரசியல்ல குதிக்க பயம்....

  இவன் ஒரு தொடை நடுங்கி பய!!!

  ReplyDelete
 2. If you people expect HIM to do something solid, it is YOUR fault, not his. On what basis is he expected to do well in admin?. He couldn't even judge a stroy line!!!

  ReplyDelete
 3. மொத்த பதிவையும் காய்ச்சி விட்டு தலைவான்னு சத்தம் போடறது ஒரு மாதிரியா இருக்குதே!

  முந்தைய மூப்பனார் காலகட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு தவிர்க்க முடியாத சூழல்.ஆனால் சிதம்பரம் அடித்தாரே மாணவர் பேரவையிலிருந்து காங்கிரஸ்க்கும் பின் தொடர் பதவிகளுக்கும்.ஒரு சந்தர்ப்ப வாத அரசியல்வாதியை தனது நட்புக்காக உறவாடுவது ரஜனியின் சுதந்திரம்.ஆனால் பொதுமேடையில் ரஜனி சிதம்பரத்தை செவ்வாய் கிரகத்துக்கே பிரதமராகும் தகுதியானவர்ன்னு கூவறது சரியா என ரஜனி மல்லாந்து யோசிச்சாலே புரியும்.

  ReplyDelete
 4. அவர் அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்று ஒவ்வொருமுறை சொல்வதும் அவர் படம் வரப்போகும் நேரத்தில் தான்! அவர் ஒரு நல்ல வியாபாரி. அவ்வளவுதான். நாமாக அவர் வந்தால் நல்லது என்று நினைத்துக்கொண்டு, வராவிட்டால் வருத்தப்படுவது வேஸ்ட் !

  ReplyDelete

 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 6. don't take serious about this person

  ReplyDelete
 7. தமிழக மக்களின் கண்மூடித்தனமான அன்பை காசக்கக்கற்றுக்கொண்ட ஒரு சராசரி மனிதன்தான் ரஜினி.
  தமிழக மக்களை இறைவன்தான் காக்கவேண்டும்
  --
  kamal rawtar

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள்..........

  ReplyDelete
 9. yes, kamalrathore is right

  ReplyDelete