SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, January 5, 2013

அம்மா ஆட்சியென்ன சும்மாதானா?...


2011, மே-13... தமிழக மக்கள் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்திற்கும் அட்டூழியங்களுக்கும் முடிவு கட்டுவதற்காகவே சரியான மாற்று சக்தியில்லாத காரணத்தால் அம்மாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்கள். மக்களுக்குத்தெரியாமலில்லை... இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது!...

ஆனாலும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் அம்மாவின் அணுகுமுறை வேறுமாதிரியானதாகவே இருந்தது. அவ்வளவு இலவசங்களையும், நலத்திட்டங்களையும் அள்ளிக்கொடுத்தும்கூட தனது அரசியல் எதிரியை மக்கள் மண்ணைக்கவ்வ வைத்துவிட்டார்களென்றால்... நல்லாட்சி கொடுக்காது போனால் தனக்கும் அடுத்த தேர்தலில் இதுதான் கதி என்பதை உணர்ந்தவர்போல ஆரம்பத்தில் கொஞ்சம் நேர்மையானதொரு நிர்வாகத்தை தரும் முயற்சியை முன்னெடுத்தார்.

வீண் புகழ்ச்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்தார். அமைச்சர்களை பணிகளை நோக்கி முடுக்கிவிட்டார். தன்னைச்சுற்றியிருந்த ஆதிக்க சக்திகளான தனது உயிர்த்தோழியையும் அவரைச்சார்ந்தவர்களையும் ஒதுக்கித்தள்ளினார். ஒருபக்கம் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவும் முயற்சிகள் எடுத்தார். தமிழர்களுக்காக சட்டமன்றத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றினார். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மக்களின் போராட்டத்திற்கு எதிராக பெரிதான அடக்குமுறைகளை ஏவாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். தி.மு.. மீது பாயச்செய்த வழக்குகளைக்கூட மக்கள் மாறாதிருந்த வெறுப்பால் சந்தோஷமாகவே பார்த்தனர். தலைமைச்செயலகம், நூலகம் மற்றும் சமச்சீர் கல்வி விஷயங்களில் அம்மா சிறிது அடம்பிடித்தபோதுகூட முந்தைய ஆட்சியாளர்களின் மேலிருந்த வெறுப்பால் மக்கள் மனதைத்தேற்றிக்கொண்டனர்.  

ஆனால் அம்மாவின் வழக்கமான ரத்த குணத்தை அவ்வளவு எளிதாக அவரால் மாற்றிக்கொள்ள முடியுமா?... எல்லாம் கொஞ்சகாலம்தான். சசிகலா வந்து திரும்ப ஒட்டிக்கொண்டார். புகழ்மாலை, துதிபாடல்களில் அம்மா மீண்டும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். பேருந்து கட்டணம், பால் கட்டணம் எல்லாம் ஏழைகளின் வயிற்றலடிக்கும் வகையில் ஏற்றப்பட்டது. இலவசங்களை வாரி வழங்குவதற்காக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சுயமரியாதையை வழக்கம்போல காலில் போட்டு நசுக்கினார். உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு முடியும்வரை கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல இருந்துவிட்டு, வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரத்திற்குள் அன்று மாலையிலேயே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டார். கடைசிவரையிலும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுயலாமல் அடக்குமுறையை மட்டுமே நம்பும் பழைய குணத்தையே காட்டினார். இலங்கை விஷயத்திலும், தமிழக மீனவர்கள் விஷயத்திலும் காங்கிரசும், தி.மு..வும் விளையாண்ட விளையாட்டால்தான் அவர்களுக்குத்தேர்தல் பாடம் புகட்டப்பட்டது என்பதை நன்கு தெரிந்திருந்தும்கூட இடையில் கொஞ்சநாட்கள் தி.மு..வை எப்படியாவது காங்கிரசை விட்டுப்பிரித்துவிட்டு தான் காங்கிரசுடன் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்து தோற்றுப்போனார்.

வழக்கம்போல மின்வெட்டுப்பிரச்சினையும் வந்து மக்களை வாட்டத்தொடங்கியும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்று எதுவும் எடுத்ததாய் தெரியாமல் பழைய ஆட்சியாளர்கள் மீதும், மத்திய அரசின்மீதும் குறை கூறியே காலம் தள்ளப்பழகும் நிலையாகிவிட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் பழைய காலம் போலவே நிலையில்லாமல் பந்தாடப்பட்டனர். கொஞ்ச கொஞ்சமாய் அரசு நிர்வாகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடத்தொடங்கியிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப்பற்றி பெரிதாய் எடுத்தெழுதிதான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.

ஆனாலும் இன்றும் அம்மாவுக்கும் அவருடைய கட்சிக்கும் இருக்கும் ஒரே பலம், மக்கள் மனதில் தி.மு.. மீதான வெறுப்பு இன்னமும் மாறாமலிருப்பதுதான். ஆனால் அதை மட்டுமே வைத்து நீண்ட நாளைக்கு குளிர்காய முடியாது. அம்மாவுக்கும் இன்னபிற அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். மறதி என்பது நமது தேசிய நோய். அது குணப்படுத்தப்படாதவரையில்தான் அவர்களுடைய அரசியல் காய்நகர்த்தல்கள். நம் மக்கள் மறதி என்ற நோயிலிருந்து மீள்வதும், தன்னலமற்ற சேவை மனப்பான்மை கொண்ட நடுநிலையாளர்களை ஆட்சியில் அமர்த்துவதும் நடக்காதவரை இங்கே ஊழல் அரசியல் சுத்திகரிக்கப்படப்போவதில்லை. (மறதி எனும் தேசிய நோயின் சமீபத்திய உதாரணம்-2ஜி ஊழல்... அடுத்து இணையப்போகும் உதாரணம்-டெல்லி கற்பழிப்பு...!!!)

ஒரேயடியாக அம்மா ஆட்சியை முழுக்க முழுக்க குறைகூறிவிட முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்பொழுதுதான் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு பளபளக்கின்றன. கிரானைட் ஊழலில் ஓரளவாவது சட்டம் தன் கடமையைச்செய்வதில் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்போருக்கு ஆட்சி அதிகாரங்கள் மாறும்போது வழக்குகளில் சிக்கி அலைகழிக்கப்படலாம் என்ற பயமாவது மனதில் இருக்கும் என்று நம்பலாம். அதேபோல அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் தி.மு.. அளவுக்கு ஆட்டம் போடுவதில்லை.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். தி.மு.. ஆட்சிக்கும், .தி.மு.. ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதிலிருந்தது.

தி.மு.. ஆட்சியில் அமைச்சர்கள், MLAக்கள், கட்சிக்காரர்கள் சம்பாதிப்பார்கள். .தி.மு.. ஆட்சியில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் சம்பாதிக்கிறார்கள்...!!!

பழைய தகர டப்பா பேருந்துகள் ஓரங்கட்டப்பட்டு நிறைய புதிய பேருந்துகள் ஓடத்துவங்கியிருக்கிறது. ஒரு சில என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு மக்களின் மனநிலைக்கு ஏற்ப உடனடி நீதி வழங்கப்பட்டது சந்தோஷமான சமாச்சாரமே. இப்படி ஓரளவு நல்லாட்சி வழங்க நினைத்தாலும் அவ்வப்போது அம்மாவிடம் அவரின் பழைய குணங்கள் மாறாது எட்டிப்பார்த்து அவரை பல தவறான முடிவுகளை நோக்கி இழுத்துச்சென்று நம்மை எரிச்சலடையத்தான் வைக்கின்றன.

இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் தற்கொலையும், தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் பாலியல் வன்கொடுமை குற்றங்களும் ஆட்சிபீடத்திற்கு புதிய தலைவலியாய் உருவெடுத்திருக்கிறது. இதில் பல பழைய பெருச்சாளிகளெல்லாம் என்னவோ தங்கள் காலத்தில் எதுவுமே நடவாமல் சிறந்த ஆட்சியை கொடுத்ததுபோல போராட்டங்கள் நடத்தி குளிர்காய்வது இன்னும் கொடுமை. அதற்கேற்றாற்போல காவல்துறையும் சிலஇடங்களில் நடைபெற்ற கற்பழிப்புகளை மூடிமறைத்து எதுவுமே நடக்காத சின்ன தகராறாக சித்தரிக்க முயல்வது அதைவிடக்கொடுமை. அதேபோலவே நீரின்றி விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்டிருக்கும் மாநிலத்தில் ஆளும் கட்சி விசுவாசிகள், பல விவசாய அமைப்புகளின் பேரில் அம்மாவை பாராட்டி அவர்களே விளம்பரப்பலகைகள் வைத்து எதுவுமே நடவாதது போல மூடி மறைக்க முயல்வதாய் வரும் செய்திகளும் கவலைப்படவேண்டிய விஷயமே.

உண்மையிலேயே சிறந்த ஆட்சி நிர்வாகம் நடத்த ஆசைப்பட்டால் பாலியல் வன்கொடுமைகள் நடவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப்பற்றி சிந்தித்தல் வேண்டும். அதுபோல நடந்த குற்றங்களில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வாங்கிக்கொடுத்து ஒரு சமூக விழிப்புணர்வை உண்டாக்க முயலவேண்டும். இது எதுவுமே இல்லாமல் நடந்த குற்றத்தை எதிர்க்கட்சிகளுக்கு பயந்து எதுவுமே நடவாததுபோல் மறைத்துவிட்டால் போதுமானது என்று எண்ணினால் அது நிச்சயம் சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியாது என்பது என் தாழ்மையான கருத்து.  

ஆட்சி பீடத்தில் அமர்ந்த புதிதில் காங்கிரசுடன் உறவாட நினைத்து முடியாமல் போனதும் சீச்சீய், இந்தப்பழம் புளிக்கும் என்பது போல இப்போது காலநிலைக்கேற்ற அரசியல் காய்நகர்த்தலாய் மத்திய அரசை முடிந்த அளவு சாடுவதும், வெளிநடப்பு செய்வதுமாய் அதிரடி கிளப்பிக்கொண்டிருக்கிறார் அம்மா. மத்திய அரசிடமிருந்து அம்மாவின் ஆட்சிக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை என்பதும் உண்மைதான். பல விஷயங்களில் மத்திய அரசு தமிழகத்தையும், தமிழர்களையும் மதிக்காமல் எடுத்தெறியும்போது மாநில முதலமைச்சரால் மட்டும் மத்திய அரசை மீறி பெரிதாய் என்ன சாதித்துவிட முடியும்?... முடிந்த அளவு கடிதம் எழுதுகிறார். பேட்டிகளில் மத்திய அரசை சாடுகிறார். சில விஷயங்களில் தைரியமாய் மத்திய அரசுக்கு எதிராக நமது மாநில உரிமைக்காக உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அம்மாவின் எதிரணியோடு ஒப்பிடும்போது அம்மாவின் இந்த நடவடிக்கை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும்.

மத்திய அரசு தன்னை செல்லாக்காசாய் பார்ப்பதால் இப்போது அம்மாவின் முழுக்கவனமும் அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் மீதும், நாற்பது தொகுதியையும் கைப்பற்றும் எண்ணத்தின் மீதும் படிந்திருக்கிறது. அம்மாவின் கைத்தடிகளும் ஆங்காங்கே அம்மாவை அடுத்த பாரதப்பிரதமர் என்று ஜால்ரா தட்டி அம்மாவுக்கு பூரிப்பை வழங்குகின்றனர். ஆனால் அம்மா தன்னைத்தானே ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொண்டால் கனவுலகத்தில் மிதந்து கவிழ்ந்து போகாமல், ஓரளவுக்காவது நினைத்ததை சாதிக்கலாம்.

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாமல் போனாலும், மதுக்கடைகளை மேலும் மேலும் திறவாமல் அதன் எண்ணிக்கைகளையாவது குறைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை குறைக்கலாம்.

இலவசங்களுக்குச்செலவு செய்யும் பணத்தில் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தலாம்.

காவிரி நீருக்காக போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆங்காங்கே தடுப்பணைகள், சின்னச்சின்ன ஏரிகள், குளங்கள் அமைத்து மழைக்காலங்களில் வீணாகும் வெள்ளநீரை உருப்படியாய் பயன்படுத்தும் வகையில் தமிழக நீர் மேலாண்மை சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தலாம்.

மின்சாரத்தை எதிர்பார்த்து மத்திய அரசிடம் கையேந்துவது ஒருபக்கமிருந்தாலும், தமிழகத்தை மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கும் வகையில் நீண்டகாலத்திட்டங்களை செயல்படுத்தலாம்.

காவல்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தாமல், முழுவீச்சில் முடுக்கிவிட்டு, எந்தவித அரசியல் குறுக்கீடுமில்லாமல் அவர்களை செயல்படச்செய்து சட்டம் ஒழுங்கை இன்னும் சிறப்பாய் பராமரிக்கலாம்.

இப்படி மாநிலத்திலேயே அம்மா செய்யவேண்டிய பணிகள் ஏராளமிருக்கும்போது அதற்குள்ளாக பிரதமர் நாற்காலியை நோக்கி பயணிப்பது நடைமுறைச்சிக்கல்கள் நிறைந்தது என்பதை அம்மா உணருவாரா என்பது தெரியவில்லை. தனது நண்பரான மோடி பிரதமர் வேட்பாளராய் நாட்டு மக்கள் எதிர்பார்க்குமளவுக்கு உயர்ந்திருப்பதையும், அவரது திட்டங்களையும், தன்னிறைவு பெற்ற அவரது மாநிலத்தையும் பார்த்தாவது அம்மா தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய காலகட்டமிது. இன்றைய நிலையில் இந்தியாவின் திறமையான நிர்வாகத்திறனுள்ள அரசியல்வாதிகள் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயம் அதில் அம்மாவுக்கும் ஒரு இடமிருக்கும். ஆனால் அவர் மாற்றிக்கொள்ள வேண்டியது தனது பிடிவாதத்தையும், தன்னைச்சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டத்தையும்தான்.

நடைமுறை யதார்த்தங்களையும், மக்களின் மனநிலையையும் புரிந்துகொண்டு சிறந்ததொரு ஆட்சியும், நேர்மையான நிர்வாகமும் தந்து தமிழகத்தையும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்க தன்னாலானதை செய்யாது போனால் கனவுகள் எல்லாம் கானல் நீராகி அம்மாவின் ஆட்சியும் சும்மா போன கதையாகிவிடும் என்பதுதான் இன்றைய நிதர்சனம்!!!...

 

4 comments:

 1. ச ரி யா ன பதிவு . நேர்மையான விமரிசனங்கள் .

  ReplyDelete
 2. \\சசிகலா வந்து திரும்ப ஒட்டிக்கொண்டார்.\\ புரியாத புதிர்.........

  \\இப்போது அம்மாவின் முழுக்கவனமும் அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் மீதும், நாற்பது தொகுதியையும் கைப்பற்றும் எண்ணத்தின் மீதும் படிந்திருக்கிறது.\\ கேவலமான ஆட்சி, விஜயகாந்தை தலையில் இருந்து விழுந்த ...........-ஆக கருதி கலட்டி விட்டது+ அதனால் ஏற்படப் போகும் 9 % வாக்குகளின் இழப்பு [இதே அவர் எதிரணியில் சேர்ந்தால் 18% வாக்கு வித்தியாசம்], மையத்தில் தேசிய கட்சிகளை ஆதரிக்கும் தமிழ் வாக்காளர்களின் மனப் போக்கு- எல்லாம் சேர்த்தால் அம்மா........... ஐயோ பாவம், தப்பு கணக்கு போட்டுக்கிட்டு இருக்காங்க, அவ்வளவுதான்.


  அருமையான கட்டுரை..........

  ReplyDelete
 3. ///தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், MLAக்கள், கட்சிக்காரர்கள் சம்பாதிப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் சம்பாதிக்கிறார்கள்///இது ஒரு தவறான கணிப்பாகவே தெரிகிறது.உண்மை நடப்பு வேறு.

  ReplyDelete
 4. http://rebacca-vethathiri.blogspot.in/

  எனது வலைப்பூ நேரம் கிடைக்கும்போது படியுங்கள் நன்றி..

  ReplyDelete