SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, January 25, 2013

வில்லங்க ரூபம்... – நாட்டு நடப்பில்தான்!!!


ரொம்ப நாள் ஆச்சு பதிவெழுதி... காங்கிரஸ் நடத்திய ராஜஸ்தான் கோமாளி மாநாட்டைப்பத்தியே எழுதனும்னு நெனச்சேன்... சரியான நேரம் அமையாததால மிஸ் ஆகிப்போச்சு... இப்போ எழுதியே ஆகவேண்டிய விஷயங்கள் அதிகமாயிட்டதால இந்தக்கட்டாயம்...

முதலில் காங்கிரஸ் கட்சி நடத்திய ராஜஸ்தான் மாநாடு...

என்னே பில்டப்?!!!... கட்சிக்காரர்கள் அனைவரும் ராகுலுக்கு முக்கிய இடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியதும், ராகுலை கட்சியின் துணைத்தலைவராக அறிவித்ததும் அன்னை சோனியா நாட்டுக்காக தன்மகனை அர்ப்பணித்ததாக காங்கிரசார் உருகியதும்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா, கண்ணை கட்டிடுச்சுடா சாமீ...! இத்தோடு நில்லாமல் அன்னை சோனியாவும், மன்மோகனும் இந்திய வரலாற்றில் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட நாட்கள் மட்டும்தான் ஊழல் குறைந்த நாட்கள் என்றும், வலுவான லோக்பால் மசோதாவை காங்கிரஸ் கொண்டு வந்தே தீரும் என்றும் சூளுரைத்து கிச்சு கிச்சு மூட்டியது தனிக்கதை!...(இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியிறீய்ங்க?... என்ற வடிவேலு டயலாக்தான் நியாபகத்துக்கு வந்தது!)

இந்த இலட்சணத்தில் காங்கிரசின் அடிப்பொடிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபிறகுதான் அவரின் பலம் நாட்டுக்குத்தெரியும் என்று ஏகத்துக்கும் ஜால்ரா வேறு!. ஏற்கனவே பிரதமர் நாற்காலி இனி தனக்கு பாக்கியமில்லை என்று உணர்ந்த காங்கிரசின் ஒரு முதியோர் கூட்டமும் தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ராகுலைத்தான் நிச்சயமாக அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று கருத்துரை பரப்பல் வேறு! பிரதமர் நாற்காலியில் அமருவதற்கு ராகுலுக்கு ராஜீவ்-சோனியாவின் மகன் என்பதைத்தவிர வேறென்ன தகுதியிருக்கிறது?... வேறென்ன திறமையிருக்கிறது?... வேறென்ன அனுபவமிருக்கிறது என்பதையெல்லாம் எந்த காங்கிரஸ்காரனாவது எனக்கு விளக்கிச்சொன்னால் பரவாயில்லை!!!. நம்பமுடியாதுடா சாமீ நம் மக்களை... ஒருவேளை ராகுலையும் பிரதமர் நாற்காலியில் அமர்த்தினாலும் அமர்த்திவிடுவார்கள்!!! (ராகுல்தான் காங்கிரசின் உண்மையான எதிர்காலம். ஆனால் அது இப்போது இல்லை. ராகுல் அதற்காக பயணிக்கவேண்டிய தூரம் ஏராளமிருக்கிறது).

ஷின்டேவின் காவித்தீவிரவாதம் பற்றிய பேச்சும், அதற்கு பா.ஜ.க.வின் எதிர்வினையும் நல்ல நாடகமாகத்தான் தெரிகிறது. அது மினி சீரியலா? இல்லை மெகா சீரியலா என்பது வரும் நாட்களில்தான் தெரியும். பா.ஜ.க.வில் கட்காரியின் இடத்தில் ராஜ்நாத்... இதனால் நாட்டுக்கும், பா.ஜ.க.வுக்கும் இரண்டுக்குமே எந்த பிரயோஜனமும் இல்லை. மத்தியில் அடுத்த ஆட்சி பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி... காங்கிரசாக இருந்தாலும் சரி... ஒன்று மட்டும் நிச்சயம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி ஊழலின் அளவுகோல் மட்டும் குறையப்போவதேயில்லை. நெத்தியில் மட்டுமில்லாமல் முகமெல்லாம் நாமம் போட்டுக்கொள்ள தயாராகிக்கொள்ளுங்கள் மக்களே!!!

அடுத்து தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கான அறிவிப்பும், அதன் எதிர்வினைகளும்...

ஒருவழியாக பெரியவர் பதவியில் இருந்து விலகாவிட்டாலும் அடுத்த தலைமை ஸ்டாலின்தான் என்று சூசகமாக அறிவித்து எல்லாருடைய பொறுமைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அழகிரி தரப்புக்கு மட்டும்தான் இது கசப்பேயொழிய நிதர்சனத்தை ஆராய்ந்தால் தி.மு.க.வுக்கான எதிர்காலத்திற்கு இது சரியான முடிவுதான் என்றே தோன்றுகிறது. ஒருவேளை கடைசிவரை கருணாநிதி தனக்குப்பிறகான தலைமையைப்பற்றி அறிவிக்காமல் திடீரென மறையும் சூழல் உருவானால் அதன் பிறகு தி.மு.க பிளவுபட்டு சிதறிப்போவதை யாராலும் தடுக்கமுடியாத சூழல் உண்டாகியிருக்கும். அம்மாவின் எதிர்பார்ப்பும், நினைப்பும் கூட அதுதான். ஆனால் இப்போது அது காப்பாற்றப்பட்டிருக்கிறது. கருணாநிதிக்கு பின்னாலான காலத்தில் கட்சி ஸ்டாலினால் வழிநடத்தப்படும். அழகிரியின் எதிர்வினைகள் நிச்சயம் பெரிதான பாதிப்பு எதையும் ஏற்படுத்தப்போவதில்லை.

இப்போதே அழகிரியின் பெரும்பாலான கைத்தடிகள் ஸ்டாலினுக்கு குடைபிடிக்க ரெடியாகிவிட்டது. ஒருசிலர் மட்டும்தான் இன்னமும்கூட அண்ணன் இல்லையென்றால் தி.மு.க என்றொரு கட்சியே இருக்காது என்று பில்டப் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு.

ஸ்டாலின் திடீரென ஏதோவொரு மாவட்டத்தில் சாம்ராஜ்யம் செய்து கட்சியில் வளர்ந்துவிடவில்லை. அவரது வளர்ச்சி படிப்படியானது. பல்வேறு அரசியல் அனுபவங்களும் நிறைந்தது. தன்னை முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே அறிமுகப்படுத்திக்கொண்டவர் அவர். அவருக்கும் சில மைனஸ்கள் இருக்கலாம். ஆனால் தி.மு.க.வின் அடுத்த தலைமை ஸ்டாலின் Vs அழகிரி என்றொரு பட்டியலிட முயன்றால் ஸ்டாலினின் இடத்தை அழகிரியால் ஏணி வைத்தும் எட்டிப்பிடிக்க இயலாது என்பது நிதர்சனம்.

நான் தி.மு.க.வை வெறுப்பவன் என்ற போதிலும் எனது வாய்ஸ் ஸ்டாலினுக்குத்தான்!. எவ்வளவு சீக்கிரம் பெரியவர் ரிட்டைர்டு ஆகி, ஸ்டாலின் கைகளில் பொறுப்பை ஒப்படைக்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை அவரும், தி.மு.க.காரர்களும் புரிந்துகொண்டால் சரி. ஆல் தி பெஸ்ட் ஸ்டாலின் அவர்களே! உங்களிடம் அடுத்த தலைமுறைக்கான ஆட்சியை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன். காலம்தான் பதில் சொல்லவேண்டும். பார்க்கலாம்.
 
அடுத்து கமலோட விஸ்வரூபம் திரைப்படம்...

எங்கே சென்று கொண்டிருக்கிறது கருத்துச்சுதந்திரம்?... எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே நான் பார்த்த பெரும்பாலான தீவிரவாதம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் இஸ்லாமியர்களைத்தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே நிஜத்திலும் உலக அளவில் பிரபலமான பல தீவிரவாதத்தாக்குதல்கள் புனிதப்போர் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாகவே தகவல்கள் நிறைந்திருப்பதாய் தோன்றுகிறது. உண்மையிலேயே தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பது விவரம் அறிந்தவர்களுக்குப்புரியும்.

உதாரணமாக பல தமிழுணர்வாளர்கள் தீவிரமாக ஆதரிக்கும் விடுதலைப்புலிகள் சிங்களவர்களைப் பொறுத்தமட்டில் தீவிரவாதிகள்.

அதேப்போல மக்கள் பிரச்சினைகளுக்காக போராட நினைக்கும் மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல்கள் நமது அரசாங்கம் மற்றும் சட்டத்தின் பார்வையில் தீவிரவாதிகள்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களிடம் கேட்டீர்களேயானால் ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொருவர் தீவிரவாதிகளாக விளைபடுவது உங்களுக்குப்புரியலாம்.

சேகுவாராவும், பிடல் காஸ்ட்ரோவும் பல மக்களுக்கு கடவுளர்கள்.ஆனால் அவர்களும் ஒரு சில நாட்டினர்க்கு தீவிரவாதிகள்தான்.

துப்பாக்கி திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தபோதே இது தவறான சூழல்... எதிர்காலத்தில் கருத்துச்சுதந்திரத்தின் கழுத்து நசுக்கப்படுவதற்கான ஆரம்ப அடித்தளம் இது என்றுதான் எனக்குத்தோன்றியது. அது இப்போது கொஞ்ச கொஞ்சமாக விஸ்வரூபம் விஷயம் மூலம் வேறூன்ற ஆரம்பித்திருக்கிறது. நான் கிருத்துவர்களும், இந்துக்களும் உலகமகா யோக்கியர்கள்... இஸ்லாமியர்கள் மட்டுமே தீவிரவாதிகள் என்ற கூட்டத்தை சேர்ந்தவனல்ல. தீவிரவாதம் என்பது எந்தவிதமான போர்வையில் யாரால் செய்யப்பட்டாலும் அது மனிதகுலத்திற்கு எதிரானது என்பது மட்டுமே எனது நிலைப்பாடு.

இன்று இஸ்லாமியர்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்குள்ளும் மூக்கை நுழைக்க ஆரம்பித்திருப்பது இனி எதிர்காலத்தில் சென்சார் கமிட்டிக்கு பதில் ஒவ்வொரு மதத்தைச்சேர்ந்தவர்களையும், ஒவ்வொரு ஜாதியைச்சேர்ந்தவர்களையும் வைத்து ஒரு கமிட்டி அமைத்து அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்ற நிலையை உண்டாக்கினாலும் உண்டாக்கலாம்.

எனது கணிப்பு சரியாக இருந்தால் அடுத்து காதலை மையமாக வைத்து வரும் திரைப்படங்களை, இப்போது காதல் திருமணங்களை எதிர்த்து கருத்திட்டுக்கொண்டிருக்கும் பா.ம.க. கட்சி கடுமையாக எதிர்க்கலாம்!!!.

அதேபோல இனிவரும் காலங்களில் அரசியல்வாதியை ஊழல்வாதியாக, வில்லனாக சித்தரிக்கும் திரைப்படங்களை சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தீவிர அமளியில் ஈடுபட்டு அரசியல்வாதிகளே எதிர்க்கலாம்!!!

இந்தியன் தாத்தா போன்ற திரைப்படங்களை ஒட்டுமொத்த அரசு ஊழியர் சங்கங்களும் சேர்ந்து எதிர்க்கலாம்!!!.

பெண்களை கூடுதல் கவர்ச்சியில் காட்டும் திரைப்படங்களை தடைசெய்யக்கோரி பெண்கள் வீதிக்கு வரலாம்!!!.

எல்லாவற்றுக்கும் மேலாக குப்பத்திலும், புறநகரிலும் ரவுடிகளும்,அடியாட்களும் இருப்பதுபோல காட்டப்படும் திரைப்படங்களை இனி ஒரிஜினல் ரவுடிகளேகூட எதிர்க்கலாம்!!!.

உண்மையிலேயே இஸ்லாம் என்ற மதத்தைப்பற்றி தவறான கருத்துக்களை யார் திரைப்படமிட்டாலும் அது தடைசெய்யக்கூடிய ஒன்றே என்பதில் மாற்றுக்கருத்துக்களில்லை.ஆனால் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதால் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்பது சரியான முடிவல்ல. திரைப்படம் என்பது பெரும்பாலும் உலக நிகழ்வுகளை ஒத்ததாகவே அமைவது இயற்கை. நான் பார்த்த பெரும்பாலான ஒரிஜினல் வீடியோக்களில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் பத்து பதினைந்து பேர் யாராவது ஒரு பயணக்கைதியை பிடித்து அவர் கைகளை பின்னால் கட்டி முட்டிபோட வைத்து இரண்டுபேர் அவரை அழுத்திப்பிடித்துக்கொள்ள ஒருவன் மட்டும் ‘’அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்...’’ என்று முழக்கமிட்டுக்கொண்டே ஆட்டை அறுப்பதுபோல ஒரு பெரிய கத்தியால் மனிதனில் தலையை அறுப்பதை பார்த்திருக்கிறேன். (இந்த வீடியோக்கள் ஏ.ஆர்.முருகதாஸோ, கமல்ஹாசனோ இயக்கியது இல்லை!!!) உலகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம். அதிலெல்லாம் பரவாத மனப்பான்மையா மக்களிடம் துப்பாக்கி படம் பார்ப்பதாலோ... இல்லை விஸ்வரூபம் படம் பார்ப்பதாலோ மட்டும் வந்துவிடப்போகிறது.

இஸ்லாமியச்சகோதரர்களே உலகம் வெகு வேகமான வளர்ச்சியில் பயணித்துக்கொண்டிருக்கிறது.வெறுமனே துப்பாக்கி படத்தாலும், விஸ்வரூபம் படத்தாலும் மட்டுமே இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று மக்கள் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. அதேபோல இந்தப்படங்களையெல்லாம் தொடர்ந்து தடைசெய்துவிட்டாலும்கூட இஸ்லாமியர்கள் யாரும் தீவிரவாதிகளே அல்ல என்றும் மக்கள் நினைத்துவிடப்போவதில்லை. உலகளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதுதான் மக்களிடம் வேகமான கம்யூனிகேஷன் வளர்ச்சியில் உடனடியாக மீண்டும் மீண்டும் வந்தடையும். இதை நாமோ,கமல்ஹாசனோ, இல்லை எவருமோ மாற்றிவிடமுடியாது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது இது போன்ற பிரச்சினைகளை ஓட்டு வங்கிக்காக கண்டும் காணாமல் விடும் அரசியலும், இதை தனிப்பட்ட ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளரின் பிரச்சினையாக பார்த்து ஒதுங்கி நிற்கும் திரையுலகமும் எதிர்காலத்தில் இதற்கு கொடுக்கப்போகும் விலை மிக அதிகம் என்பது யதார்த்தம்... மற்றபடி விஸ்வரூபம் ரிலீஸ் ஆனாலும் சரி, இல்லை நிர்ந்தர தடை விதிக்கப்பட்டாலும் சரி... அது அவரவர் தலைவிதியேயொழிய என்னை பாதிக்க அதில் ஒன்றுமில்லை!!!

அடுத்து லேட்டஸ்ட் நியூஸ்... கருணாநிதி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிய அம்மாவின் நடவடிக்கைக்கு ஆதரவான கோர்ட் தீர்ப்பு. மக்கள் பணத்தில் மாறி மாறி கும்மியடிக்கிறார்கள். நடக்கட்டும் பரவாயில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை அம்மா நம் பணத்தை செலவழித்து அந்தக்கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியபிறகு எதிர்காலத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரும் காலகட்டங்களில் மறுபடியும் நம் பணத்தை செலவழித்து அதை மீண்டும் தலைமைச்செயலகமாக மாற்றாமலிருந்தால் சரி! பார்க்கலாம். காலம்தானே எல்லாவற்றுக்கும் பதில் கூற முடியும்...

 

Saturday, January 5, 2013

அம்மா ஆட்சியென்ன சும்மாதானா?...


2011, மே-13... தமிழக மக்கள் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்திற்கும் அட்டூழியங்களுக்கும் முடிவு கட்டுவதற்காகவே சரியான மாற்று சக்தியில்லாத காரணத்தால் அம்மாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்கள். மக்களுக்குத்தெரியாமலில்லை... இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது!...

ஆனாலும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் அம்மாவின் அணுகுமுறை வேறுமாதிரியானதாகவே இருந்தது. அவ்வளவு இலவசங்களையும், நலத்திட்டங்களையும் அள்ளிக்கொடுத்தும்கூட தனது அரசியல் எதிரியை மக்கள் மண்ணைக்கவ்வ வைத்துவிட்டார்களென்றால்... நல்லாட்சி கொடுக்காது போனால் தனக்கும் அடுத்த தேர்தலில் இதுதான் கதி என்பதை உணர்ந்தவர்போல ஆரம்பத்தில் கொஞ்சம் நேர்மையானதொரு நிர்வாகத்தை தரும் முயற்சியை முன்னெடுத்தார்.

வீண் புகழ்ச்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்தார். அமைச்சர்களை பணிகளை நோக்கி முடுக்கிவிட்டார். தன்னைச்சுற்றியிருந்த ஆதிக்க சக்திகளான தனது உயிர்த்தோழியையும் அவரைச்சார்ந்தவர்களையும் ஒதுக்கித்தள்ளினார். ஒருபக்கம் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவும் முயற்சிகள் எடுத்தார். தமிழர்களுக்காக சட்டமன்றத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றினார். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மக்களின் போராட்டத்திற்கு எதிராக பெரிதான அடக்குமுறைகளை ஏவாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். தி.மு.. மீது பாயச்செய்த வழக்குகளைக்கூட மக்கள் மாறாதிருந்த வெறுப்பால் சந்தோஷமாகவே பார்த்தனர். தலைமைச்செயலகம், நூலகம் மற்றும் சமச்சீர் கல்வி விஷயங்களில் அம்மா சிறிது அடம்பிடித்தபோதுகூட முந்தைய ஆட்சியாளர்களின் மேலிருந்த வெறுப்பால் மக்கள் மனதைத்தேற்றிக்கொண்டனர்.  

ஆனால் அம்மாவின் வழக்கமான ரத்த குணத்தை அவ்வளவு எளிதாக அவரால் மாற்றிக்கொள்ள முடியுமா?... எல்லாம் கொஞ்சகாலம்தான். சசிகலா வந்து திரும்ப ஒட்டிக்கொண்டார். புகழ்மாலை, துதிபாடல்களில் அம்மா மீண்டும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். பேருந்து கட்டணம், பால் கட்டணம் எல்லாம் ஏழைகளின் வயிற்றலடிக்கும் வகையில் ஏற்றப்பட்டது. இலவசங்களை வாரி வழங்குவதற்காக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சுயமரியாதையை வழக்கம்போல காலில் போட்டு நசுக்கினார். உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு முடியும்வரை கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல இருந்துவிட்டு, வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரத்திற்குள் அன்று மாலையிலேயே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டார். கடைசிவரையிலும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுயலாமல் அடக்குமுறையை மட்டுமே நம்பும் பழைய குணத்தையே காட்டினார். இலங்கை விஷயத்திலும், தமிழக மீனவர்கள் விஷயத்திலும் காங்கிரசும், தி.மு..வும் விளையாண்ட விளையாட்டால்தான் அவர்களுக்குத்தேர்தல் பாடம் புகட்டப்பட்டது என்பதை நன்கு தெரிந்திருந்தும்கூட இடையில் கொஞ்சநாட்கள் தி.மு..வை எப்படியாவது காங்கிரசை விட்டுப்பிரித்துவிட்டு தான் காங்கிரசுடன் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்து தோற்றுப்போனார்.

வழக்கம்போல மின்வெட்டுப்பிரச்சினையும் வந்து மக்களை வாட்டத்தொடங்கியும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்று எதுவும் எடுத்ததாய் தெரியாமல் பழைய ஆட்சியாளர்கள் மீதும், மத்திய அரசின்மீதும் குறை கூறியே காலம் தள்ளப்பழகும் நிலையாகிவிட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் பழைய காலம் போலவே நிலையில்லாமல் பந்தாடப்பட்டனர். கொஞ்ச கொஞ்சமாய் அரசு நிர்வாகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடத்தொடங்கியிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப்பற்றி பெரிதாய் எடுத்தெழுதிதான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.

ஆனாலும் இன்றும் அம்மாவுக்கும் அவருடைய கட்சிக்கும் இருக்கும் ஒரே பலம், மக்கள் மனதில் தி.மு.. மீதான வெறுப்பு இன்னமும் மாறாமலிருப்பதுதான். ஆனால் அதை மட்டுமே வைத்து நீண்ட நாளைக்கு குளிர்காய முடியாது. அம்மாவுக்கும் இன்னபிற அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். மறதி என்பது நமது தேசிய நோய். அது குணப்படுத்தப்படாதவரையில்தான் அவர்களுடைய அரசியல் காய்நகர்த்தல்கள். நம் மக்கள் மறதி என்ற நோயிலிருந்து மீள்வதும், தன்னலமற்ற சேவை மனப்பான்மை கொண்ட நடுநிலையாளர்களை ஆட்சியில் அமர்த்துவதும் நடக்காதவரை இங்கே ஊழல் அரசியல் சுத்திகரிக்கப்படப்போவதில்லை. (மறதி எனும் தேசிய நோயின் சமீபத்திய உதாரணம்-2ஜி ஊழல்... அடுத்து இணையப்போகும் உதாரணம்-டெல்லி கற்பழிப்பு...!!!)

ஒரேயடியாக அம்மா ஆட்சியை முழுக்க முழுக்க குறைகூறிவிட முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்பொழுதுதான் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு பளபளக்கின்றன. கிரானைட் ஊழலில் ஓரளவாவது சட்டம் தன் கடமையைச்செய்வதில் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்போருக்கு ஆட்சி அதிகாரங்கள் மாறும்போது வழக்குகளில் சிக்கி அலைகழிக்கப்படலாம் என்ற பயமாவது மனதில் இருக்கும் என்று நம்பலாம். அதேபோல அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் தி.மு.. அளவுக்கு ஆட்டம் போடுவதில்லை.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். தி.மு.. ஆட்சிக்கும், .தி.மு.. ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதிலிருந்தது.

தி.மு.. ஆட்சியில் அமைச்சர்கள், MLAக்கள், கட்சிக்காரர்கள் சம்பாதிப்பார்கள். .தி.மு.. ஆட்சியில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் சம்பாதிக்கிறார்கள்...!!!

பழைய தகர டப்பா பேருந்துகள் ஓரங்கட்டப்பட்டு நிறைய புதிய பேருந்துகள் ஓடத்துவங்கியிருக்கிறது. ஒரு சில என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு மக்களின் மனநிலைக்கு ஏற்ப உடனடி நீதி வழங்கப்பட்டது சந்தோஷமான சமாச்சாரமே. இப்படி ஓரளவு நல்லாட்சி வழங்க நினைத்தாலும் அவ்வப்போது அம்மாவிடம் அவரின் பழைய குணங்கள் மாறாது எட்டிப்பார்த்து அவரை பல தவறான முடிவுகளை நோக்கி இழுத்துச்சென்று நம்மை எரிச்சலடையத்தான் வைக்கின்றன.

இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் தற்கொலையும், தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் பாலியல் வன்கொடுமை குற்றங்களும் ஆட்சிபீடத்திற்கு புதிய தலைவலியாய் உருவெடுத்திருக்கிறது. இதில் பல பழைய பெருச்சாளிகளெல்லாம் என்னவோ தங்கள் காலத்தில் எதுவுமே நடவாமல் சிறந்த ஆட்சியை கொடுத்ததுபோல போராட்டங்கள் நடத்தி குளிர்காய்வது இன்னும் கொடுமை. அதற்கேற்றாற்போல காவல்துறையும் சிலஇடங்களில் நடைபெற்ற கற்பழிப்புகளை மூடிமறைத்து எதுவுமே நடக்காத சின்ன தகராறாக சித்தரிக்க முயல்வது அதைவிடக்கொடுமை. அதேபோலவே நீரின்றி விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்டிருக்கும் மாநிலத்தில் ஆளும் கட்சி விசுவாசிகள், பல விவசாய அமைப்புகளின் பேரில் அம்மாவை பாராட்டி அவர்களே விளம்பரப்பலகைகள் வைத்து எதுவுமே நடவாதது போல மூடி மறைக்க முயல்வதாய் வரும் செய்திகளும் கவலைப்படவேண்டிய விஷயமே.

உண்மையிலேயே சிறந்த ஆட்சி நிர்வாகம் நடத்த ஆசைப்பட்டால் பாலியல் வன்கொடுமைகள் நடவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப்பற்றி சிந்தித்தல் வேண்டும். அதுபோல நடந்த குற்றங்களில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வாங்கிக்கொடுத்து ஒரு சமூக விழிப்புணர்வை உண்டாக்க முயலவேண்டும். இது எதுவுமே இல்லாமல் நடந்த குற்றத்தை எதிர்க்கட்சிகளுக்கு பயந்து எதுவுமே நடவாததுபோல் மறைத்துவிட்டால் போதுமானது என்று எண்ணினால் அது நிச்சயம் சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியாது என்பது என் தாழ்மையான கருத்து.  

ஆட்சி பீடத்தில் அமர்ந்த புதிதில் காங்கிரசுடன் உறவாட நினைத்து முடியாமல் போனதும் சீச்சீய், இந்தப்பழம் புளிக்கும் என்பது போல இப்போது காலநிலைக்கேற்ற அரசியல் காய்நகர்த்தலாய் மத்திய அரசை முடிந்த அளவு சாடுவதும், வெளிநடப்பு செய்வதுமாய் அதிரடி கிளப்பிக்கொண்டிருக்கிறார் அம்மா. மத்திய அரசிடமிருந்து அம்மாவின் ஆட்சிக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை என்பதும் உண்மைதான். பல விஷயங்களில் மத்திய அரசு தமிழகத்தையும், தமிழர்களையும் மதிக்காமல் எடுத்தெறியும்போது மாநில முதலமைச்சரால் மட்டும் மத்திய அரசை மீறி பெரிதாய் என்ன சாதித்துவிட முடியும்?... முடிந்த அளவு கடிதம் எழுதுகிறார். பேட்டிகளில் மத்திய அரசை சாடுகிறார். சில விஷயங்களில் தைரியமாய் மத்திய அரசுக்கு எதிராக நமது மாநில உரிமைக்காக உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அம்மாவின் எதிரணியோடு ஒப்பிடும்போது அம்மாவின் இந்த நடவடிக்கை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும்.

மத்திய அரசு தன்னை செல்லாக்காசாய் பார்ப்பதால் இப்போது அம்மாவின் முழுக்கவனமும் அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் மீதும், நாற்பது தொகுதியையும் கைப்பற்றும் எண்ணத்தின் மீதும் படிந்திருக்கிறது. அம்மாவின் கைத்தடிகளும் ஆங்காங்கே அம்மாவை அடுத்த பாரதப்பிரதமர் என்று ஜால்ரா தட்டி அம்மாவுக்கு பூரிப்பை வழங்குகின்றனர். ஆனால் அம்மா தன்னைத்தானே ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொண்டால் கனவுலகத்தில் மிதந்து கவிழ்ந்து போகாமல், ஓரளவுக்காவது நினைத்ததை சாதிக்கலாம்.

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாமல் போனாலும், மதுக்கடைகளை மேலும் மேலும் திறவாமல் அதன் எண்ணிக்கைகளையாவது குறைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை குறைக்கலாம்.

இலவசங்களுக்குச்செலவு செய்யும் பணத்தில் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தலாம்.

காவிரி நீருக்காக போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆங்காங்கே தடுப்பணைகள், சின்னச்சின்ன ஏரிகள், குளங்கள் அமைத்து மழைக்காலங்களில் வீணாகும் வெள்ளநீரை உருப்படியாய் பயன்படுத்தும் வகையில் தமிழக நீர் மேலாண்மை சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தலாம்.

மின்சாரத்தை எதிர்பார்த்து மத்திய அரசிடம் கையேந்துவது ஒருபக்கமிருந்தாலும், தமிழகத்தை மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கும் வகையில் நீண்டகாலத்திட்டங்களை செயல்படுத்தலாம்.

காவல்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தாமல், முழுவீச்சில் முடுக்கிவிட்டு, எந்தவித அரசியல் குறுக்கீடுமில்லாமல் அவர்களை செயல்படச்செய்து சட்டம் ஒழுங்கை இன்னும் சிறப்பாய் பராமரிக்கலாம்.

இப்படி மாநிலத்திலேயே அம்மா செய்யவேண்டிய பணிகள் ஏராளமிருக்கும்போது அதற்குள்ளாக பிரதமர் நாற்காலியை நோக்கி பயணிப்பது நடைமுறைச்சிக்கல்கள் நிறைந்தது என்பதை அம்மா உணருவாரா என்பது தெரியவில்லை. தனது நண்பரான மோடி பிரதமர் வேட்பாளராய் நாட்டு மக்கள் எதிர்பார்க்குமளவுக்கு உயர்ந்திருப்பதையும், அவரது திட்டங்களையும், தன்னிறைவு பெற்ற அவரது மாநிலத்தையும் பார்த்தாவது அம்மா தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய காலகட்டமிது. இன்றைய நிலையில் இந்தியாவின் திறமையான நிர்வாகத்திறனுள்ள அரசியல்வாதிகள் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயம் அதில் அம்மாவுக்கும் ஒரு இடமிருக்கும். ஆனால் அவர் மாற்றிக்கொள்ள வேண்டியது தனது பிடிவாதத்தையும், தன்னைச்சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டத்தையும்தான்.

நடைமுறை யதார்த்தங்களையும், மக்களின் மனநிலையையும் புரிந்துகொண்டு சிறந்ததொரு ஆட்சியும், நேர்மையான நிர்வாகமும் தந்து தமிழகத்தையும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்க தன்னாலானதை செய்யாது போனால் கனவுகள் எல்லாம் கானல் நீராகி அம்மாவின் ஆட்சியும் சும்மா போன கதையாகிவிடும் என்பதுதான் இன்றைய நிதர்சனம்!!!...