SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, December 24, 2012

கற்பழிப்பும்... உடனடி நீதியும்?...


சமீப காலமாய் மக்களிடம் வலுத்து வரும் மனநிலை...’’இன்ஸ்டண்ட் ஜஸ்டிஸ்’’ எனப்படும் ‘’உடனடி நீதி’’. என்ன காரணம்?... அது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நமது நாட்டின் சட்டமுறைகள். நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள். வாய்தா, ஜாமீன், அப்பீல் என நீண்டு கொண்டிருக்கும் விசாரணைகள். இவைகள்தான் கொஞ்ச கொஞ்சமாக சாமன்ய மக்களிடம் சட்டத்தின் மீதான நம்பிக்கையைத்தகர்த்து அவர்களின் மனநிலையை இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் எனப்படும் உடனடி நீதியை நோக்கி நகர்த்தியிருக்கிறது இப்போது.

கோவையில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பள்ளிக்குழந்தைகளான சிறுவன் ரித்திக் மற்றும் சிறுமி முஸ்கான் கடத்திப்படுகொலை செய்யப்பட்டனர். இதில் அந்தச்சிறுமியை பாலியல் பலாத்காரம் வேறு செய்திருந்தினர் இரு மிருகங்கள். சட்டத்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் மக்களிடம் மிகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. மக்களின் மனநிலையை உணர்ந்துகொண்ட அரசு, காவல்துறையை துரிதகதியில் முடுக்கி குற்றவாளிகள் இருவரைக்கைது செய்தது. இது போன்ற மிருகங்களை விசாரணை, வாய்தா என நீட்டிக்கொண்டிருக்காமல் நடுரோட்டில் தூக்கிலிடவேண்டும் என்றும், என்கவுண்ட்டரில் நாயைச்சுடுவதுபோல சுட்டுத்தள்ளவேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது மக்களிடம் வலுத்த வெறுப்பும், எதிர்ப்பும் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டியது.

ரிசல்ட்?... வழக்கமான நாடகம் ஜோடிக்கப்பட்டு இருவரில் ஒரு குற்றவாளி காவல்துறையால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டான். வழக்கமாக என்கவுண்ட்டர் என்றாலே சில எதிர்வினைகளும் எழும். ஆனால் இந்த மிருகத்தின் என்கவுண்ட்டருக்கு மக்கள் இனிப்புகள் வழங்கி கோவை நகரம் முழுவதும் கொண்டாடினர். மற்றொரு குற்றவாளிக்கு விசாரணை நடத்தி சிலநாட்களுக்கு முன்னர்தான் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. அது இன்னும் அப்பீல், அது, இது என்று இழுக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஏதோ ஒருத்தனையாவது என்கவுண்ட்டரில் போட்டார்களே என மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விடும்படி ஆயிற்று.

இதேப்போல தமிழகத்தில் மற்றுமொரு நிகழ்வு... சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. ஆல்வின் சுதனை ரவுடிக்கும்பல் காவல்துறையின் கண்ணெதிரேயே கொலைசெய்தது.
 
ஒட்டுமொத்த காவல்துறையையும், ஆட்சியாளர்களையும், அரசியல் கட்சிகளையும் அதிரச்செய்த நிகழ்வு இது. பெரும்பாலும் ரவுடிகளின் வளர்ச்சியில் இவர்களின் பங்குதான் அதிகமிருக்கும் என்பது நாம் அறியாதது அல்ல. ஆனாலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரையே இவர்கள் கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்தது யாருமே எதிர்பாராதது. காவல்துறையின் நேர்மையான கூட்டத்திடமும், பொதுமக்களிடமும் ஆல்வின் சுதனை கொன்ற ரவுடிகளை சுட்டுத்தள்ளவேண்டும் என்ற மனநிலையும், ஆத்திரமும், ஆற்றாமையும் எழுந்தது அப்போது.

குற்றவாளிகளில் சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். சிலர் சரணடைந்தனர். ஊடகங்கள், பொதுமக்கள், நீதிமன்றங்கள் என எல்லாருக்குமே தெரியும் இந்தக்குற்றவாளிகள் காவல்துறையால் வேட்டையாடப்படுவார்கள் என்பது. இவ்வளவு ஏன்?... பால் குடிக்கும் பச்சைக்குழந்தைகூட சொல்லிவிடும் அளவுக்கு அனைவரும் எதிர்பார்த்ததுதான் அந்த என்கவுண்ட்டர். இப்படி எல்லாருக்கும் தெரிந்திருந்தும் முக்கிய குற்றவாளிகளான பிரபு மற்றும் பாரதி ஆகிய இருவரையும் காவல்துறை கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி அவர்களுடன் அனுப்பி வைத்தது.
 
அதற்குப்பிறகு என்ன?... வழக்கம்போல தப்பிக்க முயற்சி, நாட்டு வெடிகுண்டு, காவல்துறையை தாக்கியது என நாடகம் அரங்கேற்றப்பட்டு இரு முக்கிய குற்றவாளிகளும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். ஆனால் இதிலும் பொதுமக்களிடையே மட்டுமின்றி, ஊடகங்களிடம்கூட நரகாசுரனை வேட்டையாடிய ஒரு திருப்தியான மனநிலைதான் எழுந்தது என்பது மாறிவரும் சூழ்நிலை அதிர்ச்சி... (எனினும் இதுபோன்ற ரவுடிகளை ஆரம்பத்திலேயே களையெடுக்காமல் வளரவிட்ட ஒருசில காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது இன்னமும்கூட தீராத ஒரு அதிருப்திதான்.)

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஒரு சிறிய திருப்தி, அவ்வளவுதானே ஒழிய நாட்டில் இன்னமும் கற்பழிப்பு மற்றும் கொடூர கொலைகளைச்செய்துவிட்டு சட்டத்திலிருக்கும் ஓட்டைகளின் வழியாக சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகக்கூட்டங்கள் ஏராளம்.

இப்போது நாட்டையே அதிரவைத்திருப்பது தலைநகர் டெல்லியிலேயே நடந்த ஒரு கேங் ரேப். கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் அவரது நண்பர் முன்னிலையிலேயே மாறி மாறிக்கற்பழித்திருக்கிறது. இறுதியாய் ஓடும் பஸ்சிலிருந்து அந்தப்பெண்ணையும், அவரது நண்பரையும் தள்ளிவிட்டுச்சென்றிருக்கிறது அந்தக்கும்பல். (நல்லவேளையாய் அவர்களைக்கொலை செய்யாமல் உயிருடன் விட்டுச்சென்றிருக்கிறது அந்தக்கும்பல். இல்லையென்றால் குற்றவாளிகள் யாரென்றும், என்ன நடந்தது என்றும் வெளிஉலகுக்குத் தெரியாமலேயே மறைந்திருக்கும்...) நாட்டில் எவ்வளவோ கற்பழிப்புகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் கடுமையான தண்டனை பயமின்றி சர்வசாதாரணமாய் உலவிக்கொண்டிருக்கும் நாடு நம் புண்ணிய பூமி!. அப்படியிருக்கையில் இந்த ஒரு கற்பழிப்புக்கு மட்டும் ஏன் மக்களிடம் திடீரென இவ்வளவு எதிர்வினை?...

காரணமிருக்கிறது. பொதுவாகவே குற்றங்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களிடம் ஆழ்மனதில் ஒரு வெறியும், இதுபோன்ற குற்றவாளிகளை நமது சட்டம்தான் தண்டிப்பதில்லை... நம்மில் யாராவது ஒருவர் தண்டிக்கமாட்டாரா என்றொரு ஆதங்கமும் நிச்சயமாய் இருக்கும். எப்போதுமே மக்களின் மனநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட மிருகம், கட்டுப்படுத்தப்படாத மிருகம் என்று இருசாரர் இருக்கும். இதில் முதல் சாரரால்தான் இரண்டாம் சாரர்கள் குற்றத்திற்கு மேல் குற்றம் புரிந்து எவ்வித பயமுமின்றி சுதந்திரமாய் உலவிக்கொண்டிருப்பது. கட்டுப்படுத்தபட்ட மிருகத்தை சுதந்திரமாய் விட்டு ஒவ்வொருவரும் குற்றம் புரிவோரின் மீதான தங்களது வெறியை வெளிக்காண்பிக்கத்துவங்கினால் இங்கே பல குற்றவாளிகளும், ரவுடிகளும், ஊழல்வாதிகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகக்கூடும். ஆனால் அவ்வாறான சூழ்நிலைக்கு மக்களின் மனநிலையைத்தள்ளாமல் இருப்பது நீதிமன்றங்களின் கைகளில்தான் இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற இந்தக்கற்பழிப்பு நிகழ்விலும் பெரும்பான்மை மக்களின் அடிமனதில் குற்றவாளிகள் மீதான அதிகபட்ச வெறுப்புதான் வளர்ந்து நிற்கிறது. அது இப்படியொரு போராட்டமாக வெளிப்பட்டதற்கு காரணம்... எதிர்க்கட்சிகளும், மீடியாக்களும் இந்தக்கற்பழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக்களைப்பரப்பியதுதான். எதிர்க்கட்சிகளும், பெரும்பான்மை பிரபலங்களும், சமூக வலைத்தளங்களும், பொதுமக்களும் இந்தக்கற்பழிப்பை நிகழ்த்திய மிருகங்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்று கொடிபிடிக்கின்றனர் இப்போது. இதில் ஒரு சாரர் அந்தக்குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடவேண்டும் என்றும் கருத்து வைக்கின்றனர். ஒருவிதத்தில் பார்த்தால் இதுதான் நாட்டுக்குத்தேவையான இன்றைய நீதி என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனென்றால் இதுபோன்ற தண்டனைகளால் எதிர்வரும் காலங்களில் குற்றம்புரிய எண்ணுவோரிடம் தண்டனை மீதான ஒரு மனபயம் இருக்கும். அதுவே அவர்களை குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பலாம். இதே எண்ணத்தில்தான் இன்று மக்களும் ஒன்றுகூடிப்போராடுவது.

டெல்லியின் இந்த எழுச்சி இன்று நாட்டின் ஏதோவொரு மூலையிலிருக்கும் கிராமம் வரை பரவியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் சென்ற ஒரு 12 வயது மாணவியை சிலமிருகங்கள் கொடுமையான முறையில் கற்பழித்து கொலைசெய்து புதருக்குள் வீசிச்சென்றிருக்கின்றன.
 
இந்தச்சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே ஒரு கோபத்தை உண்டுபண்ணி, பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்து ‘’உடனடியாக தூக்கிலிட’’வேண்டும் என்று சாலைமறியல் செய்திருக்கின்றனர். இதுவரை நடந்த இதுபோன்ற எத்தனையோ மக்கள் போராட்டங்களில் குற்றவாளிகளை உடனடியாகக்கைது செய்யவேண்டும் என்றுதான் வற்புறுத்தப்படும். ஆனால் இன்று உடனடியாகத்தூக்கிலிடவேண்டும் என்ற எண்ணம் சாமான்ய மக்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது.

நம் நாட்டில் இன்றைய பெரும்பான்மை மனநிலை... சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை மறைமுகமாக உணர்த்திக்கொண்டிருக்கிறது. எப்படியும் குற்றவாளிகள் அப்பீல், ஜாமீன், வாய்தா என்று தப்பித்து கால தாமதத்தில் எவ்வித தண்டனையுமின்றி வெளிவந்து விடுவார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகள் மட்டும் இனி நடக்கக்கூடாது. குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை நிச்சயம் என்ற பயம் வரவேண்டும். அதற்கு ஆரம்பமாக இதுபோன்ற குற்றவாளிகளை உடனடியாகத்தூக்கிலிடவேண்டும் என்று விதையாய் ஆழ்மனதில் அமுங்கிக்கிடந்த எண்ணம் இப்போதுதான் முளைவிட்டிருக்கிறது.

தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா?... என்று விவாதம் நடந்துகொண்டிருந்த நாட்டில் இன்று உடனடித்தூக்கு பெரும்பான்மை ஆதரவைப்பெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளால் இந்த உடனடி நீதிக்கான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா?... நிச்சயம் நடக்காது. அவர்களுக்குத்தெரியும்... இன்று கற்பழிப்பு குற்றவாளிக்கான உடனடி தூக்குதண்டனையென்பது நாளை எப்போது வேண்டுமானாலும் ஊழலுக்கு எதிரான உடனடித்தூக்குதண்டனையாக மாறும் என்பது. அதனால் சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க, இங்கே எவரும் தயாராகப்போவதில்லை என்பது நிதர்சனம்.

ஆனால் நீதிமன்றங்கள் அப்படியில்லை. அவர்கள் மனது வைத்தால் இதுபோன்ற குற்றங்களை விரைந்து விசாரணை நடத்தி மக்களின் மனநிலையை நிறைவேற்றும் வகையில் குற்றம் நடந்த ஒரு சில நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம். தேங்கிக்கிடக்கும் வழக்குகள் அத்தனைக்கும் விரைவு விசாரனை என்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற ஒரு சில குற்றங்களில் உடனடி நீதி வழங்கினால் அது மீண்டும் நீதிமன்றங்களில் குவியப்போகும் எதிர்காலக்குற்றங்களின் அளவை நிச்சயமாய் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உடனடி நீதியையும், குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க கடுமையான தண்டனையையும் எதிர்பார்த்து மாறியிருக்கும் மக்களின் மனது, சட்டத்தின் மீதான நம்பிக்கையை முழுவதுமாய் இழப்பதற்குள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

விடிவுகாலம் பிறக்குமா இந்த நாட்டில்?... பொறுத்திருந்து பார்க்கலாம்...

 

2 comments:

  1. இன்று பல M.P மற்றும் M.L.A மீதே கற்பழிப்பு வழக்குகள் உள்ளது . இவர்களாவது சட்டம் ஏற்றுவதாவது ..... அதெல்லாம் கனவுதான் ...

    ReplyDelete