SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, December 22, 2012

ப்ளீஸ் கொஞ்சம் திருந்துங்கள் டாக்டர் பெருமக்களே...


திடீரென நேற்று இரவு எனது நான்கு வயது மகனுக்கு நல்ல ஜீரம். இரவு முழுவதும் உடம்பு நெருப்பாய் கொதித்தது. காலையில் எழுந்ததுமே உடனே ஹாஸ்பிடலுக்கு போகவேண்டும் என மனைவி அவசரப்படுத்தினாள். சரியென்று வழக்கமாக நாங்கள் செல்லும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச்சென்றோம். (அரசாங்க மருத்துவமனைக்கு ஏன் செல்லவில்லை?... தனியார் மருத்துவமனை சிறந்ததா? இல்லை அரசு மருத்துவமனை சிறந்ததா? என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவது இந்தக்கட்டுரையின் நோக்கமில்லை).

ஏற்கனவே அந்தத்தனியார் மருத்துவமனையின் ரூல்ஸ்கள் மிக வித்தியாசமானது. சாதாரணமாக ஒரு அவுட் பேஷன்ட் உடம்பு சரியில்லை என்று சென்றால் முதலில் ரிசப்ஷனில் அட்மிஷன் போட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் தரும் கார்டை எடுத்துக்கொண்டு தனியாக வேறொரு இடத்திலிருக்கும் கேஷ் கவுண்டரில் பணத்தை செலுத்திவிட்டு டாக்டரைப் பார்க்கச்செல்லவேண்டும். டாக்டர் உங்களுக்கு எழுதித்தரும் மருந்தை வாங்க முதலில் மெடிக்கல்சில் சென்று வரிசையில் நின்று மருந்தை வாங்க வேண்டும். பின்னர் அவர்கள் தரும் பில்லை எடுத்துக்கொண்டு கேஷ் கவுண்டருக்குச்சென்று பணத்தைக்கட்டிவிட்டு மீண்டும் மெடிக்கல்சில் வரிசையில் நின்று பணம் கட்டிய ரசீதைக்காட்டிவிட்டு மருந்தை வாங்கிக்கொள்ளவேண்டும். (என்ன சிஸ்டம்டா இது?...சே!).

இந்த இலட்சணத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு டெஸ்டுக்கு டாக்டர் எழுதிக்கொடுத்துவிட்டால் இன்னும் கொடுமை... முதலில் லேபரட்டரிக்கு டாக்டர் எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். அங்கே அவர்கள் ஒரு சீட்டு எழுதித்தருவார்கள். அதை எடுத்துக்கொண்டு மற்றொரு பில் கவுண்டருக்குச்செல்லவேண்டும். அங்கே பில் போட்டுக்கொடுப்பார்கள். அந்தப்பில்லை எடுத்துப்போய் கேஷ் கவுண்ட்டரில் பணத்தை கட்டிவிட்டு அந்த ரசீதை வாங்கி வந்து லேப்பில் கொடுத்தால் உங்களுக்கான டெஸ்ட் புரோசீடு ஆகும். எல்லாவற்றைவிட சிறப்பு...எல்லாம் முடிந்து மருத்துவமனையை விட்டு நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கையில் எந்தவித பிரிஸ்கிரிப்ஷனோ, டெஸ்ட் ரிசல்ட்டோ இருக்காது. மெடிக்கல்சில் மருந்து வாங்கின பில் மட்டும் இருக்கும். அப்படி ஒரு கை தேர்ந்த சிஸ்டம் கொண்ட மருத்துவமனை அது. அப்படிப்பட்ட மருத்துவமனைக்கு இவன் ஏன் போனான்? என்று நீங்கள் நினைக்கலாம். என்ன பண்றதுங்க?... நம்ம பையனுக்கு அங்கிருக்கும் ஒரு டாக்டரிடம் காட்டினால்தான் ஓரளவுக்காவது நோய் கட்டுப்படும். கிட்டத்தட்ட ஏழு வருட பழக்கம் அந்த டாக்டர். எல்லாரிடமும் மரியாதையாக பேசுவார். குழந்தைகளை பொறுமையாக சோதித்துப்பார்த்து தக்க மருந்துகளை எழுதிக்கொடுப்பார். சிறந்த முறையில் எளிமையான வார்த்தைகளில் எல்லாவற்றையும் விளக்கிப்புரியவைப்பார். அவருக்காகவே எனது மகளோ அல்லது மகனோ... இருவரில் யாருக்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் அந்த மருத்துவமனைக்கு போகவேண்டியாதாயிருக்கிறது.

இந்தமுறை எங்கள் கெட்ட நேரம்... அந்த டாக்டர் விடுப்பில் சென்றிருந்ததால் வெறொரு லேடி டாக்டரிடம் அனுப்பினார்கள். வழக்கம்போல பணத்தைக்கட்டி டாக்டரின் அறை வாசலில் காத்திருந்தோம். பார்வை நேரம் காலை 8.30 முதல் மதியம் 1 மணிவரை என்று போர்டிலிருந்தது. எங்களுக்கு முன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். அதில் நாங்கள் காத்திருந்த நேரத்தில் சில மெடிக்கல் ரெப்புகளும் வந்து அமர்ந்தனர். சரி, டாக்டர் பேஷன்ட்டுகளை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கு பிறகு மெடிக்கல் ரெப்புகளை பார்ப்பார்போல என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே எங்களுக்குப்பிறகு வந்த மெடிக்கல் ரெப்புகளை உடனடியாக உள்ளே அழைத்தார் அந்த லேடி டாக்டர். சரி, ஹாஸ்பிடலில் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது என்று முதல் ரெப்பு வெளியில் வரும்வரை காத்திருந்தேன். அதற்கே அரைமணி நேரத்துக்கு மேலாகியது. அந்த டாக்டர் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் காத்திருந்த பேஷன்ட்டுகள் எல்லாமே ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான். முதல் ரெப்பு வெளியே வந்தவுடன் அடுத்து பேஷண்ட்டுகளை கூப்பிடுவார்கள் என்று நினைத்தால் அடுத்தும் ஒரு மெடிக்கல் ரெப்பையே உள்ளே அழைத்தார்கள். கடுப்பாகிப்போன நான் அந்த டாக்டரின் உதவியாளரிடம் கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

ஏங்க இங்க எல்லாரும் உடம்பு சரியில்லாத குழந்தைங்களை வச்சிட்டு காத்திட்டிருக்கோம். இங்க என்னடான்னா நீங்க பாட்டுக்கு வரிசையா மெடிக்கல் ரெப்புகளை உள்ளே அனுப்பிச்சிட்டு இருக்கீங்க?... இதான் நீங்க பேஷண்ட்டுகளுக்கு குடுக்குற முக்கியத்துவமா?...

‘’ஹலோ சார், சும்மா ஓவரா பேசாதீங்க. அவங்கெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்காங்க...’’ என்று என்னிடம் கோபமாகக்கத்தினாள் அந்த உதவியாளர்ப்பெண்.

நானும் விடவில்லை. ‘’ஏம்மா உங்க டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் குடுக்கிறதா இருந்தா பேஷன்ட்டுகளை பாக்கிற நேரம் இல்லாம மத்த நேரத்தில குடுக்கனும்மா... இப்படி பேஷன்ட்டை பாக்கிற நேரத்தில நீங்க பாட்டுக்கு மெடிக்கல் ரெப்பை பாத்திட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?...’’ என்றேன். 

அங்கிருந்த மெடிக்கல் ரெப்புகளை பாத்து ‘’ஏன் சார், நீங்கள்லாம் படிச்சவங்க... உங்களுக்குத்தெரிய வேண்டாம்?... இப்படி சின்னக்குழந்தைகளை வைச்சிட்டு எல்லாரும் காத்திட்டிருக்கிற நேரத்தில நீங்க பாட்டுக்கு வந்து நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?...’’ என்றேன். எனது கோபத்தையும், அங்கிருந்த இன்னும் சிலர் எனது வார்த்தைகளுக்கு சப்போர்ட் பண்ணியதையும் பார்த்த மெடிக்கல் ரெப்புகள் என்னிடம் எதுவும் எதிர்பேச்சு பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டனர்.

ஒருவழியாய் கிட்டத்தட்ட இரண்டு மணிநேர காத்திருப்புக்கு பிறகு டாக்டரைப்பார்க்கும் வரம் கிட்டியது. உள்ளே நுழைந்ததும் என்ன பிரச்சினை என்று கேட்டார். கிட்டத்தட்ட ஐம்பது வயதுக்கு மேற்பட்ட லேடி டாக்டர் அது. நாங்கள் எங்கள் பையனுக்கு நேற்று இரவிலிருந்து நல்ல ஜீரம் டாக்டர்... இப்போ ஹாஸ்பிடல் வந்தப்புறம் ஒருவாட்டி வாமிட்கூட பண்ணிட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த டாக்டர் அறைக்கதவை திறந்து ஒரு குழந்தையுடன் எட்டிப்பார்த்த ஒரு பெண்மணியை அடடே... உள்ள வாம்மா என்று அழைத்து அவருக்கு எதிரிலிருந்த மற்றொரு இருக்கையில் அவர்களை அமரச்செய்தார். அந்தப்பெண்மணியின் குழந்தைக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே அந்தப்பெண்மணியின் குடும்பத்திலுள்ளவர்களைப்பற்றி நலமும் விசாரித்துக்கொண்டிருந்தார். இதில் நடுவில் எங்களிடம் வேறு திரும்பி நைட்டெல்லாம் பையன் ஒன்னுக்கு போனானா?... என்று விசாரித்தார்.

நான்தான் அவரிடம் ‘’டாக்டர், நீங்க முதல்ல அவங்களைப்பாத்துட்டு அனுப்புங்க. அப்புறமா எங்க பையனப்பாக்கலாம்’’ என்றேன்.

ஒரு வழியாய் அந்தப்பெண்மணியின் குடும்பஷேமம் மற்றும் அவரின் குழந்தையின் பிரச்சினை இரண்டையும் மாற்றி மாற்றி விசாரித்து ஏதோவொரு மருந்துச்சீட்டையும் எழுதி நீட்டி அந்தப்பெண்மணியை வழியனுப்பி வைத்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினார்.

எங்களிடம் விசாரித்துக்கொண்டே தனது உதவியாளரிடம் வந்துபோன பெண்மணியைப்பற்றி கதையளந்து கொண்டிருந்தார். அந்தக்கதை முடிந்ததும் தான் அடுத்தவாரம் லீவு எடுப்பதைப்பற்றி உதவியாளரிடம் விவரித்துக்கொண்டிருந்தார். மொத்தத்தில் அவரது அரைகுறைக்கவனம் மட்டுமே பேஷண்ட்டுகளிடமிருந்தது. என்ன செய்வதென்று கோவத்தை அடக்கிக்கொண்டு மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தோம். எனது மனைவியைத்தான் திட்ட முடிந்தது என்னால்.

‘’ஒழுங்கா நம்ம ஏரியாவுலேயே ஏதாவதொரு டாக்டரைப்போயி பாத்திருக்கலாம். இதெல்லாம் ஒரு டாக்டர், இது ஒரு ஆஸ்பிட்டல்னு இங்கே கூட்டிட்டு வந்தேப்பாரு... உன்னச்சொல்லனும்டி...’’

‘’நானே குழந்தைக்கு ஜீரம் காயுதேன்னு கவலையில இருக்கேன், உங்கள கூட்டிட்டு வந்ததே தப்பாப்போச்சு, எங்க வந்தாலும் யார்கூடவாவது சண்டைதானா?... பேசாம வாய மூடிட்டு வாங்க’’ என்றாள்.

ஒருவழியாய் பல வரிசைகளில் நின்று யூரின் டெஸ்ட், மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கியது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீட்டுக்குத்திரும்பினோம்.

நான் இதை எழுதியதற்கு காரணம்... ஒட்டுமொத்த மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் குறை சொல்வதற்காக அல்ல. பணியிலிருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாத ஒருசில டாக்டர்களுக்காகவே இதை எழுதும்படி ஆயிற்று.

நாம் எப்போதும் காத்திருந்தே ஆகவேண்டிய கட்டாயத்துடன் வாழ்க்கையில் சில இடங்கள் உண்டு. மத்தியதர வர்க்கத்துக்கு அதில் விதிவிலக்கே இல்லை. ஒருசில உதாரணங்கள்- அரசாங்க அலுவலகங்களில் ஏதாவதொரு வேலை நிமித்தமாக, டாக்டரை சந்திப்பதற்கு ஆஸ்பத்திரியில், கோவில்களில் சாமியை தரிசிப்பதற்கு, வேலைக்காக செல்லும் இண்டர்வியூக்களில், மாத ஆரம்பத்தில் சம்பளத்தை எடுப்பதற்கு ஏ.டி.எம் சென்டரின் கியூவில், இன்றைக்கும் கூட்டம் குறையாத பொதுத்துறை வங்கிகளின் வரிசையில், சில நேரங்களில் அவசரமாக அலுவலகம் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்குகளில்... இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களில் காத்திருப்பதை தவிர்க்க இயலாததுதான் நமது வாழ்க்கைமுறை என்பதை நன்கு உணர்ந்தவன்தான் நான்.

அதேப்போல டாக்டர் தொழிலின் புனிதத்தையும், மதிப்பையும், மரியாதையையும்கூட நன்கு உணர்ந்தவன்தான் நான். பல மருத்துவர்கள் இன்றளவும்கூட சொந்த வாழ்க்கைக்கான நேரத்தைக் குறைத்து மருத்துவத்திற்கான நேரத்தை அதிகப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவர்கள் இன்றளவும் நோயாளியின் உயிரைக்காப்பது மட்டுமே இவ்வுலகில் தங்களின் தலையாய கடமை என்ற எண்ணத்துடன் தன்னலமற்ற பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவர்கள் நோயாளிகளிடம் மலர்ந்த புன்னகையுடன் பேசி, பொறுமையின் இலக்கணமாகத்திகழ்ந்து, அவர்களது வார்த்தைகளை செவிமடுத்துக்கேட்டு அவர்களுக்கு மருந்துகளுடன், ஆறுதலும் கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். டாக்டர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு பணிபுரிந்தாலும்கூட அதிலும் ஒரு சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்கள் ஏராளமிங்கே. பணம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், எப்படிப்பட்ட டாக்டரானாலும் சரி... நோயாளியையும் அவரது குடும்பத்தையும் பொறுத்தவரை டாக்டர் என்பவர் கடவுளுக்குச்சமமானவர். அவ்வளவுதான் நமக்கெல்லாம் தெரிந்தது. 

அதேபோல மெடிக்கல் ரெப்புகளை குறை கூறுவதும் இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. மெடிக்கல் ரெப்பு வேலையைப்போன்றதொரு கஷ்டமான பொழப்பு வேறெதுவும் இருக்காது. ஒவ்வொரு டாக்டரின் ரூமுக்கு முன்னாலும் மணிக்கணக்கில் காத்திருந்து அவர்களைச் சந்தித்து தங்களது புராடெக்ட் பற்றி விளக்கிக்கூறி, டாக்டர்களுக்கு கிஃப்ட் பேக் குடுத்து, மாச டார்கெட்டை அச்சீவ் பண்ணி சம்பளம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் பொழப்பு அது.

ஏற்கனவே இதற்கு முன்னர் நான் குடியிருந்த ஆந்திராவிலும் இப்படித்தான். ஒரு குழந்தை நல மருத்துவர் அங்கும் தனது கிளினிக்கில் பேஷன்ட்டுக்கள் கூட்டத்தை காக்கவைத்துவிட்டு மெடிக்கல் ரெப்புகளை அட்டெண்ட்டு பண்ணிக்கொண்டிருப்பார். அநேகமாக இது பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் விஷயம் என்பதை இப்போதுதான் உணரமுடிந்தது.

டாக்டர் பெருமக்களே... நீங்கள் இருக்குமிடம் மிகவும் உயர்ந்ததொரு ஸ்தானம். எங்களைப்பொருத்தவரை நீங்களெல்லாம் கடவுள் போல. உங்களைப்பொருத்தவரை நீங்கள் சாதாரணமனிதராய் இருக்கலாம். உங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, கமிட்மெண்ட்டுகள் இருக்கலாம். அது தவறில்லை. ஆனால் பேஷண்ட்டுகளை பார்க்கும் நேரத்தில் அவைகளை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள் ப்ளீஸ்.

எங்கள் குழந்தைகளுக்கோ, இல்லை எங்களுக்கோ உடம்பு சரியில்லை என்று நாங்கள் உங்களைத்தேடி வரும்போது இருக்கும் கூட்டத்தில் காத்திருந்து உங்களைச்சந்தித்துவிட்டு மருந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு எப்போதடா வீடு திரும்புவோம் என்று நோயின் அசதியுடன் நொந்து கிடப்போம். எங்களுக்குத்தேவை உங்களின் கவனத்துடன், கனிவுடன் கூடிய மருத்துவக்கவனிப்பு. அதைவிடுத்து நீங்கள் அரைகுறை கவனத்துடன் தரும் மருந்துகளை வாங்கிக்கொண்டு டாக்டர் நமக்கு சரியான மருந்தைத்தான் கொடுத்திருப்பாரா?... எனும் சந்தேகத்துடன் வீடு திரும்ப வைக்காதீர்கள் எங்களை.

பேஷண்ட்டுகளை பார்க்கும் நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டே ட்ரீட்மெண்ட் பார்ப்பது, ஒரே நேரத்தில் இரண்டு பேஷண்ட்டுகளை அட்டெண்டு பண்ணுவது, அரைகுறைக்கவனத்துடன் பேஷண்ட்டுகளின் பிரச்சினைகளை விசாரிப்பது, பேஷண்ட்டுகளிடமும், கூடவந்திருப்பவர்களிடமும் எரிந்து விழுந்து சிடு சிடுப்பது, பேஷண்ட்டுகள் காத்திருக்கும் நேரத்தில் மணிக்கணக்காய் மெடிக்கல் ரெப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்குங்கள் ப்ளீஸ்...

இது சில தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு மட்டுமல்ல... பல அரசாங்க மருத்துவமனை டாக்டர்களுக்கும் மற்றும் நர்ஸ்களுக்கும்கூட பொருந்தும்...

ப்ளீஸ்... கொஞ்சம் திருந்துங்கள் மருத்துவப்பெருமக்களே...

 

9 comments:

 1. பணியிலிருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாத ஒருசில டாக்டர்களுக்காகவேஎழுதிய ஆதங்கப் பகிர்வு ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மேடம்... உண்மைதான். என்ன செய்வது?... எழுதுவதை எழுதுவோம். திருந்துவதும் திருந்தாததும் அவர்கள் கையில்!!!

   Delete
 2. நியாயமான ஆதங்கம். நானும் கவனித்த வரையில் பல டாக்டர்கள் பேச்சில் கனிவு இருந்தாலும், நடைமுறையில் வியாபாரியாக இருப்பார்கள்.

  இங்கே இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நாம் நடந்து கொண்ட முறை தவறு என்று முகத்துக்கு நேரே யாரும் சொல்லாதவரை யாரும் தங்களை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. நீங்கள் சத்தம் போட்டது ரிஷப்சனில். இது டாக்டரின் கவனுத்துக்கு போகாமலும் இருக்கலாம்.

  எனவே இது போன்ற டாக்டர்களை நேரடியாக விமர்சித்துவிட்டு வேறு டாக்டரை பார்பதுதான் வழி.

  ReplyDelete
  Replies
  1. சரிதான் சிவா... நாம் வேறு டாக்டர்களை நாடிச்செல்வது மட்டுமே இதற்கு தீர்வாகலாம்... ஆனாலும் இதை எழுதுவது நம் கடமை என்று எண்ணியதால்தான் எழுத வேண்டியதாயிற்று...

   Delete
 3. எங்கள் வீட்டருகில் இருக்கும் குழந்தை மருத்துவர் இரவு நேரத்தில் பார்க்கசென்றால் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி ஒரு நிமிடம் ஆகி விட்டாலும் காலையில் வர சொல்லுவார்.குழந்தைகளின் நிலைமையை பொருட்படுத்தாமல்....குழந்தை மருத்துவர்களுக்கு அதீத பொறுப்புணர்வும்,பொறுமையும் அவசியம்.படிப்பின்போது அதை சொல்லி தருகிறார்களா தெரியவில்லை. :(

  ReplyDelete
  Replies
  1. நியாமான கேள்வி தேவா... படிக்கும் போது நிச்சயம் இதைச்சொல்லித்தருவார்கள் என்றுதான் நினைக்கிறேன்... ஆனாலும் என்னதான் படித்தாலும் அவரவருக்கென இருக்கும் இண்டுஜீவாலிட்டி மாறாததுதான் இங்கே பிரச்சினை...

   Delete
 4. Since you have paid consultation fees you will not go away without seeing the Doctor. But that is not the case with Reps.Doctors will lose their freebies (sometimes even foreign trip) if the send away Reps.

  ReplyDelete
  Replies
  1. Might be correct...But the doctors should understand themselves about their responsibilities in this society...

   Delete
 5. சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் மாஸ்டர் ஹெல்த் டெஸ்ட்டின் போது ட்ரட்மில் டெஸ்ட் பண்ண சொன்னார்கள். அப்படியே அப்போதே ஸ்கேனிங்கும் செய்யனும். காத்திருந்து காத்திருந்து அவர்கள் என்னை 4/5 மணி நேரம் கழித்து கூப்பிடும் போது வழக்கமான கையாளாகாத்தனத்தால் வரும் தலைவலியினால் டெஸ்ட் எதுவுமே சரி இல்லை. ஆனால் அதை தொடர்ந்து டாக்டர் பி பீ இருக்கிறது என்று மருந்து சாப்பிட சொல்லிவிட்டார். அதை இன்று வரை நிறுத்த முடியவில்லை ஆனால் அதற்கு பிறகு எப்போது பார்த்தாலும் பி பீ கிடையாது ஆனால் இன்னொரு டாக்டர் ஏதாவது கேட்டால் என்ன முட்டாள்தனமாக பேசுறீங்க இந்த மாத்திரை சாப்பிடுவதால்தான் உங்களுக்கு பி பீ கண்ட்ரோலில் உள்ளது என்கிறார். இந்த மாத்திரை சாப்பிட ஆரம்பிக்கும் முன். ஏன் அதற்க்கு முதல் நாள் கூட எனக்கு பி பீ இல்லை. இப்படிப் பட்ட டாக்டர்கள் தான் இன்று தமிழகத்தில் ஜாஸ்தி. நோயாளியின் மன நிலையை பார்த்தெல்லாம் யாரும் வைத்திய செய்வதில்லை. அவர்கள் எல்லாம் நிறைய படித்தவர்கள். நாம் அந்தப் படிப்பை படிக்கவில்லை ஆகையால் அவர்களும் நம்மை முடிந்த வரை நம்மை முடிந்தவரை ஓட்டுகிறார்கள்.இனி நம்மை கடவுள்தான் காப்பாற்றனும்.

  ReplyDelete