SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, December 29, 2012

மோகம் முப்பது நாள்... - புதுசா கல்யாணமானவங்களுக்காக!


இது கண்டிப்பாய் ஆண்களுக்கானது!!!...

புதுசா கல்யாணம் ஆன ஜோடிங்களுக்கு வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணும்போது பலவிதமான சந்தேகங்கள் உண்டாகும். இதுல ஆணும் பொண்ணும் தங்களோட சந்தேகங்களை யார்கிட்டப்போயி கேட்டு க்ளியர் பண்ணிக்கிறதுன்னு தெரியாம அல்லாடுவாங்க பாருங்க... அய்யோ பாவம்! எதாவது புத்தகத்தை படிச்சி தெரிஞ்சிக்கலாம்னா, உருப்படியா என்ன புத்தகம் இருக்கு?... ஒரு மண்ணும் இல்லை. சரி, டாக்டர் மாத்ருபூதம்?... அவரும் பாவம், போய் சேர்ந்திட்டார்... வேற டாக்டருங்க?... அய்யோ!!! டி.வி.யை ஆன் பண்ணாலே ‘’வாங்கடா, வாங்க உங்க அப்பன் நான் இருக்கேன்டா, வாங்கடா’’ என்று லேகிய டாக்டர்கள் மிரட்டுவதுதான் மிச்சம்!.. சரி என்னதான் பண்ணலாம்?...

ஹலோ... ஹலோ... ஸ்டாப், ஸ்டாப்... நீங்க நினைக்கிற மாதிரி டாப்பிக் வேண்டாம் இங்கே! டிராக் மாறிக்கலாம் பாஸ்!!!

‘’ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... ஆக மொத்தம் தொண்ணூறு நாள்!’’... இதுதான் பொதுவா புதுசா கல்யாணம் ஆனவங்களுக்காக சொல்ற டயலாக். வாழ்க்கைய கொஞ்சம் அனுபவிச்சு கிராஸ் பண்ணவங்களுக்குத்தான் தெரியும் இந்த டயலாக்கோட வொர்த் என்னான்றது?...

கல்யாணத்தை பத்தி வேடிக்கையா ஒன்னு சொல்லுவாங்க... கல்யாணம்ன்றது ஒரு ஆழ்கிணறு. ஏற்கனவே விழுந்தவங்க வெளியேற வழியில்லாம தத்தளிச்சிட்டு இருப்பாங்க. வெளியே இருக்கிறவங்களோ, அந்தக்கிணத்துல என்னமோ இருக்குன்னு, எப்படா குதிப்போம்னு நாளை எதிர்பார்த்திட்டு இருப்பாங்களாம்!!! கொஞ்சம் வேடிக்கையா இருந்தாலும் உண்மைதான்றது காலம் காலமா அனுபவிச்சபிறகுதான் புரியுது நம்மாளுங்களுக்கு.

பொதுவாவே நம்மாளுங்க கல்யாணம் ஆன புதுசுல மோகம் கண்ணை மறைக்க, எதிர்காலத்துல வரப்போற பிரச்சினைக்கு தானே விதை போடறது தெரியாம புதுப்பொண்டாட்டிய கொஞ்சம் ஓவராவே தாங்கிப்புடுவானுங்க. அதுக்கப்புறம் மேலே சொன்ன தொண்ணூறு நாள் முடிஞ்சதும் கொஞ்ச கொஞ்சமா ஆப்பு ஸ்டார்ட் ஆகும் நம்மாளுக்கு. கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷம் முடிஞ்சதும் டெய்லி ஆப்பு மட்டும்தான் அவன் ரெகுலர் வாழ்க்கையாகியிருக்கும். எதுக்கு இப்படி சொந்தக்காசுலேயே சூனியம் வைச்சுக்கனும்?...

அதுனால புதுசா கல்யாணம் செஞ்சுகிட்ட மற்றும் செஞ்சிக்கப்போற தம்பிமார்களே... உங்களுக்கான உஷார் டிப்ஸ்தான் இங்கே வரப்போவுது! பஜார்ல உஜாரா இல்லேன்னாக்க நிஜாரை அவத்துருவாங்கன்றத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா, கண்டிப்பா இந்த உஷார் டிப்ஸ்சை ஃபாலோ பண்ணுவீங்க மக்காஸ்!!!

1.   கல்யாணமான புதுசுல காரியம் நடக்கனும்கிறதுக்காக பொண்டாட்டியப்பாத்து சும்மா சும்மா ஒரு நாளைக்கு நூறுவாட்டியாவது ‘’ஐ லவ் யூ’’ சொல்றது... ரொம்ப தப்பு இது. ஏன்னா எதிர்காலத்துல ஒரு நாளைக்கு ஒரு தடவை சொல்றதுகூட நின்னு போகும்போது இந்த ஃப்ளாஸ் பேக்தான் உங்களுக்கு எமன்.

2.   கல்யாணமான புதுசுல ஒரு நாளைக்கு இருபது தடவைக்கு மேல பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுறது... மாட்டீக்காதீங்க மக்காஸ்! கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் ஒரு நாளைக்கு ஒரு தடவை போன் பண்ணவே உங்களால நேரம் ஒதுக்கமுடியாம போகும்போது நிச்சயம் பாதிக்கப்படுவீங்க !

3.   கல்யாணமான புதுசுல பொண்டாட்டிய கன்னாபின்னான்னு வெளியே கூட்டிட்டு போறது... புதுசு புதுசா துணி, நகைகள்னு பர்சேஸ் பண்ணிக்குடுக்கிறது, அப்பப்போ காஸ்ட்லி கிஃப்ட் குடுக்கிறது, பொண்டாட்டிக்கு புடிச்ச ஹீரோவோட புதுப்படத்துக்கு ஆயிரமாயிரம் செலவு பண்ணி ரிலீஸ் அன்னிக்கே சினிமாவுக்கு கூட்டிட்டு போறது, கணக்கு பாக்காம பர்சை தண்ணியா காலி பன்றது... இதெல்லாமே உங்களுக்கு நீங்களே வச்சிக்கிற சூனியம்தான்... ஃபியூச்சர்ல ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க பாஸ், அப்புறம் உங்க இஷ்டம்!!!

4.   கல்யாணமான புதுசுல பொண்டாட்டி சமைக்கிற சமையல் வாய்லேயே வைக்க முடியாம இருக்கும்போதுகூட, ‘’சூப்பர் டார்லிங்... இது மாதிரி ஒரு சமையலை நான் சாப்பிட்டதேயில்லை, எக்சலென்ட்’’ அப்பிடீன்லாம் சும்மானாச்சுக்கும் காரியத்துக்காக புகழ்றது உங்க நாக்குக்கு நீங்களே அடிச்சிக்கிற சாவு மணி... அம்புட்டுதேன் சொல்லமுடியும்!.

5.   கல்யாணமான புதுசுல சாயந்திரம் ஆறு மணிக்குள்ளார ஆபிசிலேயிருந்து எஸ்கேப் ஆகி பொண்டாட்டிகிட்ட அட்டெண்டென்ஸ் போடுறது மாதிரி முட்டாள்தனம் வேற ஒன்னுமேயில்லை பாஸ்!... எதிர்காலத்துல நீங்க கண்டிப்பா வூட்டுக்கு லேட்டா வரப்போற ஒவ்வொரு சாயந்திரமும் உங்களுக்கு நரகம்தான்!!!

6.   கல்யாணத்துக்கு அப்புறம் முதல் மாச சம்பளத்தை பெரிய பருப்பு மாதிரி பொண்டாட்டி கையில எடுத்துக்கொடுக்கிறதுக்கு முன்னாடி ஒரேயொரு நிமிஷம், ‘’வாழ்க்கை முழுவதும் பொண்டாட்டிகிட்ட சம்பளத்தைக்குடுத்துட்டு செலவுக்கு கையேந்தி நிக்கிறதுக்கு ரெடியான்னு’’ யோசிச்சிக்கோங்க பிரதர்!!!

7.   புதுப்பொண்டாட்டிகிட்ட சும்மா சும்மா, அவன் குடிப்பான், இவன் குடிப்பான்... நான் ரொம்ப யோக்கியமாக்கும்... சீச்சீய் இந்த குடிக்கிற ஆளுங்க பக்கத்துல வந்தாலே எனக்கு கொமட்டிக்கிட்டு வரும்... அப்பிடி இப்பிடீன்னு சீன் போடுறதுக்கு முன்னாடி, எதிர்காலத்துல நாம எப்பவுமே எந்த பார்ட்டியையும் அட்டெண்டு பண்ணாம வூட்டுக்கு வருவோமான்றத ஒரு வாட்டி கன்ஃபார்ம் பண்ணிக்கிறது உத்தமமுங்க!!!

8.   கல்யாணமான மூனாவது மாசம் பொண்டாட்டி மாசமா இருக்கான்னு தெரிஞ்சதும், விழுந்து விழுந்து சீன் போட்டு, வூட்டுல துணி துவைக்கிறது, சமைக்கிறது, தண்ணி புடிக்கிறதுன்னு எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செஞ்சீங்கன்னா... சாரி பாஸ்... எதிர்காலத்துல உங்களை கடவுள்கூட காப்பாத்த முடியாது!!!
                            ஸ்பைடர் மேனுக்கே இந்த நிலைமையா?!!!...

மொத்தத்துல சிம்பிளா சொல்லனும்னா... கல்யாணமான புதுசுல சும்மா ஓவர் சீன் போட்டு அள்ளி விடாம, எப்பவுமே நீங்க நீங்களாவே அளவா, இயல்பா, உண்மையா இருக்க பழகிக்கிட்டீங்கன்னா எதிர்காலத்துல உங்க மனைவியும் உங்கமேல கல்யாணமான புதுசுல அப்படி இருந்தீங்க... இப்படி இருந்தீங்கன்னு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம வாழப்பழகிப்பாங்க. உங்க வாழ்க்கையும் டென்ஷன் இல்லாம நிம்மதியா ஓடும். அதுக்காக மனைவி மேல ஓவர் அன்பு வைக்கக்கூடாதுன்னு அர்த்தமில்லை. கல்யாணமான புதுசுல உங்க மனைவிமேல நீங்க ஓவர் அன்பு வைச்சு அதை அவங்களுக்கும் புரியிறமாதிரி வெளிக்காட்டலாம். ஆனா காலம் போக போக உங்களுக்கு உங்க மனைவி மேல அதே அளவு அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டுற அளவுக்கு சூழ்நிலைகள் அமையாமல் போகும். அப்போது உங்கள் மனைவி அதைப்புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்காவிட்டால் தினம் தினம் உங்கள் வாழ்க்கையில் நரகம்தான்.

அதனால்தான் சொல்றேன் மக்காஸ்... கல்யாணம்ன்றது சாதாரண விஷயமில்லை... உஷார் பிரதர்ஸ்!!!

விஷ் யூ எ ஹேப்பி மேரிடு லைஃப்... என்ஜாய்!!!
(பின் குறிப்பு;- பின்னூட்டத்தில பாஸ் இதெல்லாம் உங்க சொந்த அனுபவம்தானே?... அப்பிடி இப்பிடின்னு சும்மா கலாய்க்காதீங்க ப்ளீஸ்... ஏன்னா இது என்னோட அனுபவம் மட்டும் இல்லை... கல்யாணமான ஒவ்வொருத்தனோட அனுபவமும்தான்!!! வரலாறு முக்கியம் அமைச்சரே!!!)


 

 

Monday, December 24, 2012

கற்பழிப்பும்... உடனடி நீதியும்?...


சமீப காலமாய் மக்களிடம் வலுத்து வரும் மனநிலை...’’இன்ஸ்டண்ட் ஜஸ்டிஸ்’’ எனப்படும் ‘’உடனடி நீதி’’. என்ன காரணம்?... அது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நமது நாட்டின் சட்டமுறைகள். நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள். வாய்தா, ஜாமீன், அப்பீல் என நீண்டு கொண்டிருக்கும் விசாரணைகள். இவைகள்தான் கொஞ்ச கொஞ்சமாக சாமன்ய மக்களிடம் சட்டத்தின் மீதான நம்பிக்கையைத்தகர்த்து அவர்களின் மனநிலையை இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் எனப்படும் உடனடி நீதியை நோக்கி நகர்த்தியிருக்கிறது இப்போது.

கோவையில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பள்ளிக்குழந்தைகளான சிறுவன் ரித்திக் மற்றும் சிறுமி முஸ்கான் கடத்திப்படுகொலை செய்யப்பட்டனர். இதில் அந்தச்சிறுமியை பாலியல் பலாத்காரம் வேறு செய்திருந்தினர் இரு மிருகங்கள். சட்டத்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் மக்களிடம் மிகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. மக்களின் மனநிலையை உணர்ந்துகொண்ட அரசு, காவல்துறையை துரிதகதியில் முடுக்கி குற்றவாளிகள் இருவரைக்கைது செய்தது. இது போன்ற மிருகங்களை விசாரணை, வாய்தா என நீட்டிக்கொண்டிருக்காமல் நடுரோட்டில் தூக்கிலிடவேண்டும் என்றும், என்கவுண்ட்டரில் நாயைச்சுடுவதுபோல சுட்டுத்தள்ளவேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது மக்களிடம் வலுத்த வெறுப்பும், எதிர்ப்பும் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டியது.

ரிசல்ட்?... வழக்கமான நாடகம் ஜோடிக்கப்பட்டு இருவரில் ஒரு குற்றவாளி காவல்துறையால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டான். வழக்கமாக என்கவுண்ட்டர் என்றாலே சில எதிர்வினைகளும் எழும். ஆனால் இந்த மிருகத்தின் என்கவுண்ட்டருக்கு மக்கள் இனிப்புகள் வழங்கி கோவை நகரம் முழுவதும் கொண்டாடினர். மற்றொரு குற்றவாளிக்கு விசாரணை நடத்தி சிலநாட்களுக்கு முன்னர்தான் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. அது இன்னும் அப்பீல், அது, இது என்று இழுக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஏதோ ஒருத்தனையாவது என்கவுண்ட்டரில் போட்டார்களே என மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விடும்படி ஆயிற்று.

இதேப்போல தமிழகத்தில் மற்றுமொரு நிகழ்வு... சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. ஆல்வின் சுதனை ரவுடிக்கும்பல் காவல்துறையின் கண்ணெதிரேயே கொலைசெய்தது.
 
ஒட்டுமொத்த காவல்துறையையும், ஆட்சியாளர்களையும், அரசியல் கட்சிகளையும் அதிரச்செய்த நிகழ்வு இது. பெரும்பாலும் ரவுடிகளின் வளர்ச்சியில் இவர்களின் பங்குதான் அதிகமிருக்கும் என்பது நாம் அறியாதது அல்ல. ஆனாலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரையே இவர்கள் கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்தது யாருமே எதிர்பாராதது. காவல்துறையின் நேர்மையான கூட்டத்திடமும், பொதுமக்களிடமும் ஆல்வின் சுதனை கொன்ற ரவுடிகளை சுட்டுத்தள்ளவேண்டும் என்ற மனநிலையும், ஆத்திரமும், ஆற்றாமையும் எழுந்தது அப்போது.

குற்றவாளிகளில் சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். சிலர் சரணடைந்தனர். ஊடகங்கள், பொதுமக்கள், நீதிமன்றங்கள் என எல்லாருக்குமே தெரியும் இந்தக்குற்றவாளிகள் காவல்துறையால் வேட்டையாடப்படுவார்கள் என்பது. இவ்வளவு ஏன்?... பால் குடிக்கும் பச்சைக்குழந்தைகூட சொல்லிவிடும் அளவுக்கு அனைவரும் எதிர்பார்த்ததுதான் அந்த என்கவுண்ட்டர். இப்படி எல்லாருக்கும் தெரிந்திருந்தும் முக்கிய குற்றவாளிகளான பிரபு மற்றும் பாரதி ஆகிய இருவரையும் காவல்துறை கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி அவர்களுடன் அனுப்பி வைத்தது.
 
அதற்குப்பிறகு என்ன?... வழக்கம்போல தப்பிக்க முயற்சி, நாட்டு வெடிகுண்டு, காவல்துறையை தாக்கியது என நாடகம் அரங்கேற்றப்பட்டு இரு முக்கிய குற்றவாளிகளும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். ஆனால் இதிலும் பொதுமக்களிடையே மட்டுமின்றி, ஊடகங்களிடம்கூட நரகாசுரனை வேட்டையாடிய ஒரு திருப்தியான மனநிலைதான் எழுந்தது என்பது மாறிவரும் சூழ்நிலை அதிர்ச்சி... (எனினும் இதுபோன்ற ரவுடிகளை ஆரம்பத்திலேயே களையெடுக்காமல் வளரவிட்ட ஒருசில காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது இன்னமும்கூட தீராத ஒரு அதிருப்திதான்.)

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஒரு சிறிய திருப்தி, அவ்வளவுதானே ஒழிய நாட்டில் இன்னமும் கற்பழிப்பு மற்றும் கொடூர கொலைகளைச்செய்துவிட்டு சட்டத்திலிருக்கும் ஓட்டைகளின் வழியாக சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகக்கூட்டங்கள் ஏராளம்.

இப்போது நாட்டையே அதிரவைத்திருப்பது தலைநகர் டெல்லியிலேயே நடந்த ஒரு கேங் ரேப். கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் அவரது நண்பர் முன்னிலையிலேயே மாறி மாறிக்கற்பழித்திருக்கிறது. இறுதியாய் ஓடும் பஸ்சிலிருந்து அந்தப்பெண்ணையும், அவரது நண்பரையும் தள்ளிவிட்டுச்சென்றிருக்கிறது அந்தக்கும்பல். (நல்லவேளையாய் அவர்களைக்கொலை செய்யாமல் உயிருடன் விட்டுச்சென்றிருக்கிறது அந்தக்கும்பல். இல்லையென்றால் குற்றவாளிகள் யாரென்றும், என்ன நடந்தது என்றும் வெளிஉலகுக்குத் தெரியாமலேயே மறைந்திருக்கும்...) நாட்டில் எவ்வளவோ கற்பழிப்புகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் கடுமையான தண்டனை பயமின்றி சர்வசாதாரணமாய் உலவிக்கொண்டிருக்கும் நாடு நம் புண்ணிய பூமி!. அப்படியிருக்கையில் இந்த ஒரு கற்பழிப்புக்கு மட்டும் ஏன் மக்களிடம் திடீரென இவ்வளவு எதிர்வினை?...

காரணமிருக்கிறது. பொதுவாகவே குற்றங்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களிடம் ஆழ்மனதில் ஒரு வெறியும், இதுபோன்ற குற்றவாளிகளை நமது சட்டம்தான் தண்டிப்பதில்லை... நம்மில் யாராவது ஒருவர் தண்டிக்கமாட்டாரா என்றொரு ஆதங்கமும் நிச்சயமாய் இருக்கும். எப்போதுமே மக்களின் மனநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட மிருகம், கட்டுப்படுத்தப்படாத மிருகம் என்று இருசாரர் இருக்கும். இதில் முதல் சாரரால்தான் இரண்டாம் சாரர்கள் குற்றத்திற்கு மேல் குற்றம் புரிந்து எவ்வித பயமுமின்றி சுதந்திரமாய் உலவிக்கொண்டிருப்பது. கட்டுப்படுத்தபட்ட மிருகத்தை சுதந்திரமாய் விட்டு ஒவ்வொருவரும் குற்றம் புரிவோரின் மீதான தங்களது வெறியை வெளிக்காண்பிக்கத்துவங்கினால் இங்கே பல குற்றவாளிகளும், ரவுடிகளும், ஊழல்வாதிகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகக்கூடும். ஆனால் அவ்வாறான சூழ்நிலைக்கு மக்களின் மனநிலையைத்தள்ளாமல் இருப்பது நீதிமன்றங்களின் கைகளில்தான் இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற இந்தக்கற்பழிப்பு நிகழ்விலும் பெரும்பான்மை மக்களின் அடிமனதில் குற்றவாளிகள் மீதான அதிகபட்ச வெறுப்புதான் வளர்ந்து நிற்கிறது. அது இப்படியொரு போராட்டமாக வெளிப்பட்டதற்கு காரணம்... எதிர்க்கட்சிகளும், மீடியாக்களும் இந்தக்கற்பழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக்களைப்பரப்பியதுதான். எதிர்க்கட்சிகளும், பெரும்பான்மை பிரபலங்களும், சமூக வலைத்தளங்களும், பொதுமக்களும் இந்தக்கற்பழிப்பை நிகழ்த்திய மிருகங்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்று கொடிபிடிக்கின்றனர் இப்போது. இதில் ஒரு சாரர் அந்தக்குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடவேண்டும் என்றும் கருத்து வைக்கின்றனர். ஒருவிதத்தில் பார்த்தால் இதுதான் நாட்டுக்குத்தேவையான இன்றைய நீதி என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனென்றால் இதுபோன்ற தண்டனைகளால் எதிர்வரும் காலங்களில் குற்றம்புரிய எண்ணுவோரிடம் தண்டனை மீதான ஒரு மனபயம் இருக்கும். அதுவே அவர்களை குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பலாம். இதே எண்ணத்தில்தான் இன்று மக்களும் ஒன்றுகூடிப்போராடுவது.

டெல்லியின் இந்த எழுச்சி இன்று நாட்டின் ஏதோவொரு மூலையிலிருக்கும் கிராமம் வரை பரவியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் சென்ற ஒரு 12 வயது மாணவியை சிலமிருகங்கள் கொடுமையான முறையில் கற்பழித்து கொலைசெய்து புதருக்குள் வீசிச்சென்றிருக்கின்றன.
 
இந்தச்சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே ஒரு கோபத்தை உண்டுபண்ணி, பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்து ‘’உடனடியாக தூக்கிலிட’’வேண்டும் என்று சாலைமறியல் செய்திருக்கின்றனர். இதுவரை நடந்த இதுபோன்ற எத்தனையோ மக்கள் போராட்டங்களில் குற்றவாளிகளை உடனடியாகக்கைது செய்யவேண்டும் என்றுதான் வற்புறுத்தப்படும். ஆனால் இன்று உடனடியாகத்தூக்கிலிடவேண்டும் என்ற எண்ணம் சாமான்ய மக்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது.

நம் நாட்டில் இன்றைய பெரும்பான்மை மனநிலை... சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை மறைமுகமாக உணர்த்திக்கொண்டிருக்கிறது. எப்படியும் குற்றவாளிகள் அப்பீல், ஜாமீன், வாய்தா என்று தப்பித்து கால தாமதத்தில் எவ்வித தண்டனையுமின்றி வெளிவந்து விடுவார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகள் மட்டும் இனி நடக்கக்கூடாது. குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை நிச்சயம் என்ற பயம் வரவேண்டும். அதற்கு ஆரம்பமாக இதுபோன்ற குற்றவாளிகளை உடனடியாகத்தூக்கிலிடவேண்டும் என்று விதையாய் ஆழ்மனதில் அமுங்கிக்கிடந்த எண்ணம் இப்போதுதான் முளைவிட்டிருக்கிறது.

தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா?... என்று விவாதம் நடந்துகொண்டிருந்த நாட்டில் இன்று உடனடித்தூக்கு பெரும்பான்மை ஆதரவைப்பெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளால் இந்த உடனடி நீதிக்கான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா?... நிச்சயம் நடக்காது. அவர்களுக்குத்தெரியும்... இன்று கற்பழிப்பு குற்றவாளிக்கான உடனடி தூக்குதண்டனையென்பது நாளை எப்போது வேண்டுமானாலும் ஊழலுக்கு எதிரான உடனடித்தூக்குதண்டனையாக மாறும் என்பது. அதனால் சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க, இங்கே எவரும் தயாராகப்போவதில்லை என்பது நிதர்சனம்.

ஆனால் நீதிமன்றங்கள் அப்படியில்லை. அவர்கள் மனது வைத்தால் இதுபோன்ற குற்றங்களை விரைந்து விசாரணை நடத்தி மக்களின் மனநிலையை நிறைவேற்றும் வகையில் குற்றம் நடந்த ஒரு சில நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம். தேங்கிக்கிடக்கும் வழக்குகள் அத்தனைக்கும் விரைவு விசாரனை என்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற ஒரு சில குற்றங்களில் உடனடி நீதி வழங்கினால் அது மீண்டும் நீதிமன்றங்களில் குவியப்போகும் எதிர்காலக்குற்றங்களின் அளவை நிச்சயமாய் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உடனடி நீதியையும், குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க கடுமையான தண்டனையையும் எதிர்பார்த்து மாறியிருக்கும் மக்களின் மனது, சட்டத்தின் மீதான நம்பிக்கையை முழுவதுமாய் இழப்பதற்குள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

விடிவுகாலம் பிறக்குமா இந்த நாட்டில்?... பொறுத்திருந்து பார்க்கலாம்...

 

Saturday, December 22, 2012

ப்ளீஸ் கொஞ்சம் திருந்துங்கள் டாக்டர் பெருமக்களே...


திடீரென நேற்று இரவு எனது நான்கு வயது மகனுக்கு நல்ல ஜீரம். இரவு முழுவதும் உடம்பு நெருப்பாய் கொதித்தது. காலையில் எழுந்ததுமே உடனே ஹாஸ்பிடலுக்கு போகவேண்டும் என மனைவி அவசரப்படுத்தினாள். சரியென்று வழக்கமாக நாங்கள் செல்லும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச்சென்றோம். (அரசாங்க மருத்துவமனைக்கு ஏன் செல்லவில்லை?... தனியார் மருத்துவமனை சிறந்ததா? இல்லை அரசு மருத்துவமனை சிறந்ததா? என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவது இந்தக்கட்டுரையின் நோக்கமில்லை).

ஏற்கனவே அந்தத்தனியார் மருத்துவமனையின் ரூல்ஸ்கள் மிக வித்தியாசமானது. சாதாரணமாக ஒரு அவுட் பேஷன்ட் உடம்பு சரியில்லை என்று சென்றால் முதலில் ரிசப்ஷனில் அட்மிஷன் போட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் தரும் கார்டை எடுத்துக்கொண்டு தனியாக வேறொரு இடத்திலிருக்கும் கேஷ் கவுண்டரில் பணத்தை செலுத்திவிட்டு டாக்டரைப் பார்க்கச்செல்லவேண்டும். டாக்டர் உங்களுக்கு எழுதித்தரும் மருந்தை வாங்க முதலில் மெடிக்கல்சில் சென்று வரிசையில் நின்று மருந்தை வாங்க வேண்டும். பின்னர் அவர்கள் தரும் பில்லை எடுத்துக்கொண்டு கேஷ் கவுண்டருக்குச்சென்று பணத்தைக்கட்டிவிட்டு மீண்டும் மெடிக்கல்சில் வரிசையில் நின்று பணம் கட்டிய ரசீதைக்காட்டிவிட்டு மருந்தை வாங்கிக்கொள்ளவேண்டும். (என்ன சிஸ்டம்டா இது?...சே!).

இந்த இலட்சணத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு டெஸ்டுக்கு டாக்டர் எழுதிக்கொடுத்துவிட்டால் இன்னும் கொடுமை... முதலில் லேபரட்டரிக்கு டாக்டர் எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். அங்கே அவர்கள் ஒரு சீட்டு எழுதித்தருவார்கள். அதை எடுத்துக்கொண்டு மற்றொரு பில் கவுண்டருக்குச்செல்லவேண்டும். அங்கே பில் போட்டுக்கொடுப்பார்கள். அந்தப்பில்லை எடுத்துப்போய் கேஷ் கவுண்ட்டரில் பணத்தை கட்டிவிட்டு அந்த ரசீதை வாங்கி வந்து லேப்பில் கொடுத்தால் உங்களுக்கான டெஸ்ட் புரோசீடு ஆகும். எல்லாவற்றைவிட சிறப்பு...எல்லாம் முடிந்து மருத்துவமனையை விட்டு நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கையில் எந்தவித பிரிஸ்கிரிப்ஷனோ, டெஸ்ட் ரிசல்ட்டோ இருக்காது. மெடிக்கல்சில் மருந்து வாங்கின பில் மட்டும் இருக்கும். அப்படி ஒரு கை தேர்ந்த சிஸ்டம் கொண்ட மருத்துவமனை அது. அப்படிப்பட்ட மருத்துவமனைக்கு இவன் ஏன் போனான்? என்று நீங்கள் நினைக்கலாம். என்ன பண்றதுங்க?... நம்ம பையனுக்கு அங்கிருக்கும் ஒரு டாக்டரிடம் காட்டினால்தான் ஓரளவுக்காவது நோய் கட்டுப்படும். கிட்டத்தட்ட ஏழு வருட பழக்கம் அந்த டாக்டர். எல்லாரிடமும் மரியாதையாக பேசுவார். குழந்தைகளை பொறுமையாக சோதித்துப்பார்த்து தக்க மருந்துகளை எழுதிக்கொடுப்பார். சிறந்த முறையில் எளிமையான வார்த்தைகளில் எல்லாவற்றையும் விளக்கிப்புரியவைப்பார். அவருக்காகவே எனது மகளோ அல்லது மகனோ... இருவரில் யாருக்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் அந்த மருத்துவமனைக்கு போகவேண்டியாதாயிருக்கிறது.

இந்தமுறை எங்கள் கெட்ட நேரம்... அந்த டாக்டர் விடுப்பில் சென்றிருந்ததால் வெறொரு லேடி டாக்டரிடம் அனுப்பினார்கள். வழக்கம்போல பணத்தைக்கட்டி டாக்டரின் அறை வாசலில் காத்திருந்தோம். பார்வை நேரம் காலை 8.30 முதல் மதியம் 1 மணிவரை என்று போர்டிலிருந்தது. எங்களுக்கு முன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். அதில் நாங்கள் காத்திருந்த நேரத்தில் சில மெடிக்கல் ரெப்புகளும் வந்து அமர்ந்தனர். சரி, டாக்டர் பேஷன்ட்டுகளை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கு பிறகு மெடிக்கல் ரெப்புகளை பார்ப்பார்போல என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே எங்களுக்குப்பிறகு வந்த மெடிக்கல் ரெப்புகளை உடனடியாக உள்ளே அழைத்தார் அந்த லேடி டாக்டர். சரி, ஹாஸ்பிடலில் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது என்று முதல் ரெப்பு வெளியில் வரும்வரை காத்திருந்தேன். அதற்கே அரைமணி நேரத்துக்கு மேலாகியது. அந்த டாக்டர் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் காத்திருந்த பேஷன்ட்டுகள் எல்லாமே ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான். முதல் ரெப்பு வெளியே வந்தவுடன் அடுத்து பேஷண்ட்டுகளை கூப்பிடுவார்கள் என்று நினைத்தால் அடுத்தும் ஒரு மெடிக்கல் ரெப்பையே உள்ளே அழைத்தார்கள். கடுப்பாகிப்போன நான் அந்த டாக்டரின் உதவியாளரிடம் கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

ஏங்க இங்க எல்லாரும் உடம்பு சரியில்லாத குழந்தைங்களை வச்சிட்டு காத்திட்டிருக்கோம். இங்க என்னடான்னா நீங்க பாட்டுக்கு வரிசையா மெடிக்கல் ரெப்புகளை உள்ளே அனுப்பிச்சிட்டு இருக்கீங்க?... இதான் நீங்க பேஷண்ட்டுகளுக்கு குடுக்குற முக்கியத்துவமா?...

‘’ஹலோ சார், சும்மா ஓவரா பேசாதீங்க. அவங்கெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்காங்க...’’ என்று என்னிடம் கோபமாகக்கத்தினாள் அந்த உதவியாளர்ப்பெண்.

நானும் விடவில்லை. ‘’ஏம்மா உங்க டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் குடுக்கிறதா இருந்தா பேஷன்ட்டுகளை பாக்கிற நேரம் இல்லாம மத்த நேரத்தில குடுக்கனும்மா... இப்படி பேஷன்ட்டை பாக்கிற நேரத்தில நீங்க பாட்டுக்கு மெடிக்கல் ரெப்பை பாத்திட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?...’’ என்றேன். 

அங்கிருந்த மெடிக்கல் ரெப்புகளை பாத்து ‘’ஏன் சார், நீங்கள்லாம் படிச்சவங்க... உங்களுக்குத்தெரிய வேண்டாம்?... இப்படி சின்னக்குழந்தைகளை வைச்சிட்டு எல்லாரும் காத்திட்டிருக்கிற நேரத்தில நீங்க பாட்டுக்கு வந்து நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?...’’ என்றேன். எனது கோபத்தையும், அங்கிருந்த இன்னும் சிலர் எனது வார்த்தைகளுக்கு சப்போர்ட் பண்ணியதையும் பார்த்த மெடிக்கல் ரெப்புகள் என்னிடம் எதுவும் எதிர்பேச்சு பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டனர்.

ஒருவழியாய் கிட்டத்தட்ட இரண்டு மணிநேர காத்திருப்புக்கு பிறகு டாக்டரைப்பார்க்கும் வரம் கிட்டியது. உள்ளே நுழைந்ததும் என்ன பிரச்சினை என்று கேட்டார். கிட்டத்தட்ட ஐம்பது வயதுக்கு மேற்பட்ட லேடி டாக்டர் அது. நாங்கள் எங்கள் பையனுக்கு நேற்று இரவிலிருந்து நல்ல ஜீரம் டாக்டர்... இப்போ ஹாஸ்பிடல் வந்தப்புறம் ஒருவாட்டி வாமிட்கூட பண்ணிட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த டாக்டர் அறைக்கதவை திறந்து ஒரு குழந்தையுடன் எட்டிப்பார்த்த ஒரு பெண்மணியை அடடே... உள்ள வாம்மா என்று அழைத்து அவருக்கு எதிரிலிருந்த மற்றொரு இருக்கையில் அவர்களை அமரச்செய்தார். அந்தப்பெண்மணியின் குழந்தைக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே அந்தப்பெண்மணியின் குடும்பத்திலுள்ளவர்களைப்பற்றி நலமும் விசாரித்துக்கொண்டிருந்தார். இதில் நடுவில் எங்களிடம் வேறு திரும்பி நைட்டெல்லாம் பையன் ஒன்னுக்கு போனானா?... என்று விசாரித்தார்.

நான்தான் அவரிடம் ‘’டாக்டர், நீங்க முதல்ல அவங்களைப்பாத்துட்டு அனுப்புங்க. அப்புறமா எங்க பையனப்பாக்கலாம்’’ என்றேன்.

ஒரு வழியாய் அந்தப்பெண்மணியின் குடும்பஷேமம் மற்றும் அவரின் குழந்தையின் பிரச்சினை இரண்டையும் மாற்றி மாற்றி விசாரித்து ஏதோவொரு மருந்துச்சீட்டையும் எழுதி நீட்டி அந்தப்பெண்மணியை வழியனுப்பி வைத்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினார்.

எங்களிடம் விசாரித்துக்கொண்டே தனது உதவியாளரிடம் வந்துபோன பெண்மணியைப்பற்றி கதையளந்து கொண்டிருந்தார். அந்தக்கதை முடிந்ததும் தான் அடுத்தவாரம் லீவு எடுப்பதைப்பற்றி உதவியாளரிடம் விவரித்துக்கொண்டிருந்தார். மொத்தத்தில் அவரது அரைகுறைக்கவனம் மட்டுமே பேஷண்ட்டுகளிடமிருந்தது. என்ன செய்வதென்று கோவத்தை அடக்கிக்கொண்டு மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தோம். எனது மனைவியைத்தான் திட்ட முடிந்தது என்னால்.

‘’ஒழுங்கா நம்ம ஏரியாவுலேயே ஏதாவதொரு டாக்டரைப்போயி பாத்திருக்கலாம். இதெல்லாம் ஒரு டாக்டர், இது ஒரு ஆஸ்பிட்டல்னு இங்கே கூட்டிட்டு வந்தேப்பாரு... உன்னச்சொல்லனும்டி...’’

‘’நானே குழந்தைக்கு ஜீரம் காயுதேன்னு கவலையில இருக்கேன், உங்கள கூட்டிட்டு வந்ததே தப்பாப்போச்சு, எங்க வந்தாலும் யார்கூடவாவது சண்டைதானா?... பேசாம வாய மூடிட்டு வாங்க’’ என்றாள்.

ஒருவழியாய் பல வரிசைகளில் நின்று யூரின் டெஸ்ட், மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கியது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீட்டுக்குத்திரும்பினோம்.

நான் இதை எழுதியதற்கு காரணம்... ஒட்டுமொத்த மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் குறை சொல்வதற்காக அல்ல. பணியிலிருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாத ஒருசில டாக்டர்களுக்காகவே இதை எழுதும்படி ஆயிற்று.

நாம் எப்போதும் காத்திருந்தே ஆகவேண்டிய கட்டாயத்துடன் வாழ்க்கையில் சில இடங்கள் உண்டு. மத்தியதர வர்க்கத்துக்கு அதில் விதிவிலக்கே இல்லை. ஒருசில உதாரணங்கள்- அரசாங்க அலுவலகங்களில் ஏதாவதொரு வேலை நிமித்தமாக, டாக்டரை சந்திப்பதற்கு ஆஸ்பத்திரியில், கோவில்களில் சாமியை தரிசிப்பதற்கு, வேலைக்காக செல்லும் இண்டர்வியூக்களில், மாத ஆரம்பத்தில் சம்பளத்தை எடுப்பதற்கு ஏ.டி.எம் சென்டரின் கியூவில், இன்றைக்கும் கூட்டம் குறையாத பொதுத்துறை வங்கிகளின் வரிசையில், சில நேரங்களில் அவசரமாக அலுவலகம் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்குகளில்... இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களில் காத்திருப்பதை தவிர்க்க இயலாததுதான் நமது வாழ்க்கைமுறை என்பதை நன்கு உணர்ந்தவன்தான் நான்.

அதேப்போல டாக்டர் தொழிலின் புனிதத்தையும், மதிப்பையும், மரியாதையையும்கூட நன்கு உணர்ந்தவன்தான் நான். பல மருத்துவர்கள் இன்றளவும்கூட சொந்த வாழ்க்கைக்கான நேரத்தைக் குறைத்து மருத்துவத்திற்கான நேரத்தை அதிகப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவர்கள் இன்றளவும் நோயாளியின் உயிரைக்காப்பது மட்டுமே இவ்வுலகில் தங்களின் தலையாய கடமை என்ற எண்ணத்துடன் தன்னலமற்ற பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவர்கள் நோயாளிகளிடம் மலர்ந்த புன்னகையுடன் பேசி, பொறுமையின் இலக்கணமாகத்திகழ்ந்து, அவர்களது வார்த்தைகளை செவிமடுத்துக்கேட்டு அவர்களுக்கு மருந்துகளுடன், ஆறுதலும் கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். டாக்டர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு பணிபுரிந்தாலும்கூட அதிலும் ஒரு சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்கள் ஏராளமிங்கே. பணம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், எப்படிப்பட்ட டாக்டரானாலும் சரி... நோயாளியையும் அவரது குடும்பத்தையும் பொறுத்தவரை டாக்டர் என்பவர் கடவுளுக்குச்சமமானவர். அவ்வளவுதான் நமக்கெல்லாம் தெரிந்தது. 

அதேபோல மெடிக்கல் ரெப்புகளை குறை கூறுவதும் இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. மெடிக்கல் ரெப்பு வேலையைப்போன்றதொரு கஷ்டமான பொழப்பு வேறெதுவும் இருக்காது. ஒவ்வொரு டாக்டரின் ரூமுக்கு முன்னாலும் மணிக்கணக்கில் காத்திருந்து அவர்களைச் சந்தித்து தங்களது புராடெக்ட் பற்றி விளக்கிக்கூறி, டாக்டர்களுக்கு கிஃப்ட் பேக் குடுத்து, மாச டார்கெட்டை அச்சீவ் பண்ணி சம்பளம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் பொழப்பு அது.

ஏற்கனவே இதற்கு முன்னர் நான் குடியிருந்த ஆந்திராவிலும் இப்படித்தான். ஒரு குழந்தை நல மருத்துவர் அங்கும் தனது கிளினிக்கில் பேஷன்ட்டுக்கள் கூட்டத்தை காக்கவைத்துவிட்டு மெடிக்கல் ரெப்புகளை அட்டெண்ட்டு பண்ணிக்கொண்டிருப்பார். அநேகமாக இது பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் விஷயம் என்பதை இப்போதுதான் உணரமுடிந்தது.

டாக்டர் பெருமக்களே... நீங்கள் இருக்குமிடம் மிகவும் உயர்ந்ததொரு ஸ்தானம். எங்களைப்பொருத்தவரை நீங்களெல்லாம் கடவுள் போல. உங்களைப்பொருத்தவரை நீங்கள் சாதாரணமனிதராய் இருக்கலாம். உங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, கமிட்மெண்ட்டுகள் இருக்கலாம். அது தவறில்லை. ஆனால் பேஷண்ட்டுகளை பார்க்கும் நேரத்தில் அவைகளை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள் ப்ளீஸ்.

எங்கள் குழந்தைகளுக்கோ, இல்லை எங்களுக்கோ உடம்பு சரியில்லை என்று நாங்கள் உங்களைத்தேடி வரும்போது இருக்கும் கூட்டத்தில் காத்திருந்து உங்களைச்சந்தித்துவிட்டு மருந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு எப்போதடா வீடு திரும்புவோம் என்று நோயின் அசதியுடன் நொந்து கிடப்போம். எங்களுக்குத்தேவை உங்களின் கவனத்துடன், கனிவுடன் கூடிய மருத்துவக்கவனிப்பு. அதைவிடுத்து நீங்கள் அரைகுறை கவனத்துடன் தரும் மருந்துகளை வாங்கிக்கொண்டு டாக்டர் நமக்கு சரியான மருந்தைத்தான் கொடுத்திருப்பாரா?... எனும் சந்தேகத்துடன் வீடு திரும்ப வைக்காதீர்கள் எங்களை.

பேஷண்ட்டுகளை பார்க்கும் நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டே ட்ரீட்மெண்ட் பார்ப்பது, ஒரே நேரத்தில் இரண்டு பேஷண்ட்டுகளை அட்டெண்டு பண்ணுவது, அரைகுறைக்கவனத்துடன் பேஷண்ட்டுகளின் பிரச்சினைகளை விசாரிப்பது, பேஷண்ட்டுகளிடமும், கூடவந்திருப்பவர்களிடமும் எரிந்து விழுந்து சிடு சிடுப்பது, பேஷண்ட்டுகள் காத்திருக்கும் நேரத்தில் மணிக்கணக்காய் மெடிக்கல் ரெப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்குங்கள் ப்ளீஸ்...

இது சில தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு மட்டுமல்ல... பல அரசாங்க மருத்துவமனை டாக்டர்களுக்கும் மற்றும் நர்ஸ்களுக்கும்கூட பொருந்தும்...

ப்ளீஸ்... கொஞ்சம் திருந்துங்கள் மருத்துவப்பெருமக்களே...