SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, November 15, 2012

குழந்தையும் தெய்வமும்...!


தீபாவளி தினம்... காலைப்பொழுது... எனது மனைவி பூஜையறையில் விளக்கேற்றிக்கொண்டிருந்தாள்... நான் சமையலறையில் எனது நான்கு வயது மகனுக்கு ஊட்டுவதற்காக தோசை தயார் செய்து கொண்டிருந்தேன். பூஜையறையில் எனது மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்த எனது ஏழு வயது மகள் திடீரென்று கையில் வண்ண வண்ண மலர்களோடு என்னிடம் ஓடி வந்தாள்.

டாடி... நான்  சாமி ரூம்ல ஃபோட்டோவுக்கெல்லாம் பூ வச்சிட்டு இருக்கேன். சுப்பையா தாத்தா ஃபோட்டாவுக்கு பூ வைக்கனும்(சுப்பையா தாத்தா என்பது எனது தந்தை). சுப்பையா தாத்தாவுக்கு என்ன கலர் புடிக்கும் டாடி?... ஒரு கணம் யோசித்து நான் ‘’தெரியலையேம்மா’’ என்றேன்.

என்ன டாடி... இவ்வளவு பெரிய ஆளா வளந்திருக்கீங்க... உங்க டாடிக்கு என்ன கலர் புடிக்கும்னு உங்களுக்குத்தெரியாதா?... உங்களுக்கு என்ன கலர் புடிக்கும்னு நான் சொல்லட்டா?... உங்களுக்கு ஸ்கை புளூ கலர் புடிக்கும். மம்மிக்கு மெரூன் கலர் புடிக்கும். அம்மா ஆயாவுக்கு கிரீன் கலர் புடிக்கும்... என்று அடிக்கிக்கொண்டே பூஜை ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

எனது மகளின் கேள்வி என்னில் எழுப்பிய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளைத் தேடுவதென்பது முடியாத காரியம். ஏழே வயதான எனது மகளுக்கு எனக்கு என்ன கலர் பிடிக்குமென்பது தெரிந்திருக்கிறது. ஆனால் முப்பத்தி நான்கு வருடங்கள் என்னோடு வாழ்ந்து மறைந்த எனது தந்தைக்கு என்ன கலர் பிடிக்குமென்பது தெரியாமலேயே நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது வித்தியாசமான உணர்வுகள் நெஞ்சைப்பிசைந்தது.

தலைமுறை இடைவெளியென்பது இதுதானா?... எனது தந்தையுடன் நான் வாழ்ந்த காலங்களில் அதிகமாய் அவரிடம் பேசியதுகூட இல்லை. இவ்வளவுக்கும் சிறுவயதில் என்னை அவரது தோளிலும் மார்பிலும் தாங்கி கதைகள் கூறி வளர்த்தவர். ஏனோ எனது வயது வளர வளர அவருக்கும் எனக்குமான இடைவெளியும் வளர்ந்து போனது. நான் மட்டுமல்ல. எனது பள்ளிப்பருவ நண்பர்கள் அனைவரின் நிலையும் கூட இதுதான். எங்கள் எவருக்கும் தந்தையுடனான நெருக்கம் என்பது இல்லாமல் போனதை புரியாமலேயே வளர்ந்து வெவ்வேறு ஊர்களில் வேறூன்றிப்போனோம்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அளவிடமுடியாதது. அது தேவதைகள் வாழும் உலகம். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்கம் என்றால் மிகையாகாது. இன்று பல தாம்பத்ய உறவுகள் அனுசரித்து வாழப்பழகிக்கொண்டதன் பின்னனியில் அவர்கள் குழந்தைகளுக்கான வாழ்க்கைப்பாதை வடிவமைக்கப்பட்டிருப்பது பலபேர் அறியாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை!  நாமும் குழந்தைகளாயிருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனாலும் குழந்தைத்தனம் தொலைத்து வாழ்க்கைப்புரிதல்கள் கற்றுக்கொண்டு வளரத்தொடங்கிய பொழுதுகளில் பலவித வாழ்க்கைப்பாடங்களை கற்றுக்கொள்ளாமலேயே வாழப்பழகியிருக்கிறோம் என்பது நிதர்சனம்!

குழந்தைகளின் மழலைக் கேள்விகள் பல நேரங்களில் நமக்கு வாழ்க்கையில் கற்றுக்கொள்ளாத பலவிதமான பாடங்களை கற்றுத்தருவதாய் மாறிப்போவது ஆச்சர்யம்தான்!!! சும்மாவா சொல்லியிருப்பார்கள் ''குழந்தையும் தெய்வமும் ஒன்று'' என்று?.... 
 
 

10 comments:

 1. குழந்தைகள் தேவதைகள் தான்.... நல்ல உணர்வு படைப்பு

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி... நிச்சயம் குழந்தைகள் தேவதைகள்தான்...!

   Delete
 2. தங்களின் இந்த உண்மை படைப்பு அருமை .தங்களின் தங்களின் தந்தையும் அருகில் இல்லையே தவிர .மனதளவில் இருவரும் மிக அருகில் இருந்தீர்கள் .அவருக்கு தெரியும் தன பிள்ளை எப்படி பட்டவர் என்று ,{ எனது தந்தையுடன் நான் வாழ்ந்த காலங்களில் அதிகமாய் அவரிடம் பேசியதுகூட இல்லை. }மனதளவில் என்றாவது அவரை மறந்தா இருந்தீர்கள் ? இவ்வளவுக்கும் சிறுவயதில் என்னை அவரது தோளிலும் மார்பிலும் தாங்கி கதைகள் கூறி வளர்த்தவர்.-அன்றைய நினையுகள் இன்னும் உங்கள் மனதில் பசுமையாக இருப்பதே .பாசப்பிணைப்பை எடுத்து காட்டுகின்றது .

  ReplyDelete
 3. குழந்தையுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கம் .. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை கவலை மறக்க செய்யும்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழா... ஆழ்ந்த அனுபவம் மட்டுமே குழந்தைகளை ரசிக்கச்செய்யும்!!!

   Delete
 4. அம்மாவின் தியாகம் வெளிப்படையானது.அதை கொண்டாட ஆயிரம் சினிமாக்கள் கதைகள் உள்ளன. ஆனால் அப்பாவின் தியாகம் கண்ணுக்கு உடனடியாக புலப்படாதது.அதை புரிந்து கொள்ள மன பக்குவம் வேண்டும்.இதை கொண்டாட வெகு சில வார்த்தைகளே நம்மிடையே இருக்கின்றன. எந்த விதத்திலும் ஒரு அப்பா ஒரு அம்மாவை விட குறைந்தவர் அல்ல. இது நமக்கு அப்பா இருக்கும் வரையில் புரிவது இல்லை.என்ன கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே... அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தைக்காட்டிய சினிமா உலகம்கூட தந்தை என்ற சொல்லுக்கான அர்த்தத்தை இன்னமும் முழுதாய் காட்டவில்லை... அப்பா என்றாலே கண்டிப்பு என்ற ஒரு எண்ணம் மட்டுமே மேலோங்கும் நமது சமூக மாயை, இனிவரும் தலைமுறை மாற்றத்தோடு மாறிப்போகும் என்று நம்புவோம்... கருத்துக்கு நன்றி!

   Delete
 5. ரசித்துப் படித்தேன்...

  இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
  tm3

  ReplyDelete
 6. குழந்தைகளின் மழலைக் கேள்விகள் பல நேரங்களில் நமக்கு வாழ்க்கையில் கற்றுக்கொள்ளாத பலவிதமான பாடங்களை கற்றுத்தருவதாய் மாறிப்போவது ஆச்சர்யம்தான்!!!

  ReplyDelete